கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,198 
 
 

அப்பா உள்ளே நுழைந்தபோது உடைகள் பரப்பிக்கிடந்த கட்டிலும் மூலையில் வாய்பிளந்து கிடந்த பெட்டியும் அறையை நிறைத்திருந்தன. படுக்கையறையை ஒட்டிய குளியலறையில் தண்ணீர் இறைத்துக் கொட்டும் சப்தத்துக்கு மேலே அருணின் பாட்டு சப்தம். வெளியூரில் பொறியியற் கல்லூரியில் படிக்கும், விடுமுறை கிடைத்தால் அம்மாவின் சாப்பாட்டையும், அப்பாவின் அன்பையும், ஊர் நண்பர்கள் நட்பையும் தேடி வருகிற பிள்ளை. ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த பிள்ளை. கனத்த மனசும், கண்ணில் பிரிவும் மிதக்க விடுமுறை முடிந்து திரும்பிப் போகிற ஒரே மகன். வேற்று மாறிலத்திலிருக்கிற அந்தப் பிரசித்திபெற்ற பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியில் அவ்வப்போது ஏற்படப் போகிற பிரிவு பெரியதாகத் தெரியவில்லை.

அன் ஊரிலிருந்து வந்தவுடன் அந்த அறை இப்படித்தான் பாட்டும், நண்பர்கள் வருகையும், சப்தமும் கூச்சலும், இறைந்து கிடக்கிற துணிகளுமாய் ஆரவாரமாயிருக்கும். திரும்பிப் போனவுடன் சுவரில் இருக்கும் அவனின் பெரிய புகைப்படமும், புத்தகங்களும், மடிப்புக் கலையாத படுக்கை விரிப்பும் அவனை ஞாபகப் படுத்தியபடி இருக்கும்.

அப்பா அந்தப் புகைப்படத்தை இன்னொருமுறை பார்த்தார். இரண்டு வருடம் முன்பு எடுத்தது. அவன் தலைமையில் அவன் பள்ளிக்கூட கால்பந்தாட்ட அணி கோப்பையை ஜெயித்தபோது எடுத்த படம். அரும்பு மீசை துளிர்க்கும் மேலுதடு சுற்றி வியர்வை பரவியிருந்த முகம். கால் மடக்கி பந்தை அடிக்க யுத்தனிக்கையில் உறைந்திருந்த அருண். அவனை ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாக்கும் அப்பாவின் கனவை பிரதிபலிக்கும் படம். இந்திய கால்பந்தாட்டக் குழுவில் அவனை ஆட்டக்காரணாக்கும் வரை ஓயப்போவதில்லை அவர்.
அப்பா, இறைந்து கிடக்கிற அவன் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைத்தார். அருணின் பெட்டியில் இருந்தவைகளை எடுத்து அலமாரியில் வைக்கும் போதுதான் கண்ணில்பட்டது. அடியில் இருந்த அந்தக் காகிதப் பொட்டலம். முனையில் உலோகப் பளபளப்பு. முழுவதும் பிரித்ததும் ஜன்னல் வழியே கசிந்த வெளிச்சக் கற்றை பட்டு, முகத்தில் அறைந்தது அந்த தகதகக்கும் கோப்பை. கல்லூரி கால்பந்தாட்டப் போட்டியில் கிடைத்ததாக இருக்கும் என்று சந்தோஷமாக அதைப் புரட்டிப் பார்க்கையில் நெருடியது அதன் அடிப்பாகத்தில் செதுக்கி வைத்த எழுத்துக்கள். அனைத்துக் கல்லூரிப் போட்டியில் சிறந்த கிரிக்கெட் வீரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்றது கோப்பை.
அப்பா சந்தேகமும் அதிர்ச்சியும் சூழ அதை இன்னொரு முறை பார்த்தார். அந்த வீட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் அனுமதி கிடையாது. அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் கிரிக்கெட்டின் பிம்பம் கூட படிந்ததில்லை. கிரிக்கெட் மீது ஏற்பட்ட வெறுப்பில் மகனை கால்பந்தாட்டத்தில் ஈடுபடுத்தியவர் அருணை சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் பக்கம் சேர்க்காமல்தான் வளர்த்தார். ஸ்டம்ப் நட்டு மட்டை பிடித்து வீதியில் ஆடும் சிறுவர்களிடமிருந்த அவனைப் பிரித்து கால்பந்தாட்டப் பயிற்சிக்கு அனுப்பினவர். மற்ற சிறுவர்கள் சச்சினையும், திராவிடையும் ஆராதித்தபோது பிலேவையும், மரடோனாவையும் காட்டி வளர்த்தவர்.

ஒரு பெரிய ஏக்கமும் அது நிறைவேறாத ஏமாற்றமும் அந்த வெறுப்புக்குக் காரணமாக இருந்தது. கிரிக்கெட் ஆட்டத்தின் மேல் பெரும் ஆசை கொண்டவராகத்தான் அவர் வளர்ந்தார். கிரிக்கெட் ஆசை மனது முழுவதும் ஆக்கிரமித்திருக்க, கிரிக்கெட் வீரனாகும் வேட்கையில் இளவயது முழுவதும் கனவு மிதக்கும் கண்களோடு அலைந்தவர்தான் அவர். பள்ளிக் குழு, கல்லூரிக்குழு, மாகாணக் குழு என்று முன்னேறி இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்கிற இலக்கை எட்ட ஒவ்வொரு நிமிடமும் போராடினவர். வேகப் பந்து வீச்சாளனாகவும் சிறந்த ஃபீல்டராகவும் சிறிய வயதில் பரிமளித்தவரின் கிரிக்கெட் கனவு அத்தனையும் ஒரு பெரிய ஏமாற்றத்தில் வந்து முற்றுப்பெற்றது. மாநிலக் குழுத் தேர்வில் அரசியல் புகுந்து, தகுதியில்லாத இன்னொரு ஆட்டக்காரனை குழுவுக்குத் தேர்ந்தெடுத்த திருப்பம்தான் அவரை கிரிக்கெட்டைத் துறக்க வைத்தது. காலம் காலமாகக் காதலித்த கிரிக்கெட்டை மனத்திலிருந்து தூக்கி எறிய வைத்த சம்பவம்.

வேறு யாருடைய கோப்பையையாவது எடுத்து வந்துவிட்டானா? இல்லை. அவன் பெயர்தான் எழுதியிருந்தது. சின்ன வயதிலிருந்து கால்பந்தாட்டம் பழகிய பிள்ளை. கிரிக்கெட் மட்டையைக் கையில் தொடாத அவரால் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படாத பிள்ளை. அவனுக்கு சிறந்த கிரிக்கெட் வீரனுக்கான கோப்பையா? நம்ப முடியாமல் அவர் கோப்பையைத் திரும்ப திரும்ப பார்த்தார்.

குளியலறைக் கதவு திறந்து வெளியே வந்த அருண், அப்பாவின் கையிலிருந்த கோப்பையைப் பார்த்தான். பாட்டு நின்றது. அப்பா கோப்பையை அவன் பக்கமாக நீட்டி வினவினார்.

“நீயா…? கிரிக்கெட் ஆடறியா?’

கணேஷ் தயங்கினான். அவர் கண்களைப் பார்க்காமல் மெல்ல தலையை ஆட்டி ஆமோதித்தான்.
“எப்பலந்து? உனக்கு கிரிக்கெட்டே தெரியாதே… நானும் சொல்லித்தந்ததில்லை… கிரிக்கெட் ஆடக்கூடாதுன்னு நான் சொல்லியிருந்தேனேப்பா… அதுனால தான் உன்னை ஃபுட்பால் ஆடவச்சேன். கிரிக்கெட்ல கப் வாங்கற அளவுக்கு ஆடறியா… எப்படிப்பா? எங்கிட்ட சொல்லவே இல்லையே…’ ஆயிரம் கேள்விகளோடு அப்பா கட்டிலில் அமர்ந்தார்.

அருண் அவர் அருகில் அமர்ந்து அமைதியாக ஆரம்பித்தான்.. “யதேச்சையா நடந்ததுப்பா. ஃபுட்பால் டீம்லதான் ஆடிக்கிட்டிருந்தேன். ஏதோ ஒரு நாள். காலேஜ் கிரிக்கெட் மாட்சுல ஒரு ப்ளேயருக்கு பீல்டில் பண்றப்ப அடிபட்டிருச்சு. மாற்று ஆள் ஒருத்தர் வேண்டியிருந்தது. வேற யாரும் அங்க இருக்கலை. என் நண்பர்கள் எல்லாரும் கூட வேடிக்கை பார்க்க போன என்னை ஃபீல்டிங் பண்ண நிக்கவச்சாங்க. “சும்மா பந்து வந்தா பிடிச்சிப் போடுடா…’ன்னு சொல்லி நிக்கவச்சாங்க. டீப் மிட் ஆப்ல பவுண்டரிலதான் நின்னேன். ஃபுட் பால் ஆடினவனாச்சா… என் திசையில என்ன தாண்டி ஒரு பந்து போக விடாம விழுந்து விழுந்து பந்தை தடுத்தேன். ரெண்டு காட்ச் பிடிச்சேன். அதுல ஒண்ணு முக்கியமான கட்டத்துல. நல்லா ஆடிக்கிட்டிருந்த எதிரணி ஆட்டக்காரனோட விக்கெட்டு. ஒரு முப்பது நாப்பது அடி ஓடிப்போய் டைவ் பண்ணி புடிச்சேன்பா… எங்க டீமே அதுனால ஜெயிச்சிருச்சு எல்லாரும் குஷியாயிட்டாங்க. என்னைத் தூக்கிவச்சிக்கிட்டு கொண்டாடினாங்க. நானும் ஏதோ பிகினர்ஸ் லக்னு அதை மறந்துட்டேன்.’

“அடுத்த நாளும் காலேஜ் கிரிக்கெட் கோச் என்னை வரச்சொன்னாரு. “ஆளு நல்லா வாட்ட சாட்டமா நல்ல பாடி பில்டராட்டமா இருக்க. ஃபீல்டிங் அற்புதமா பண்ற. கொஞ்சம் பந்து வீசிக் காமிபாப்பம்’னாரு. நான் எனக்கு கிரிக்கெட் விளையாடிப் பழக்கமில்லைன்னு சொன்னேன். “சும்மா போடுப்பா பாப்போம்’ அப்பிடின்னு பந்து வீசச் சொல்லித் தந்தாரு. போடச் சொன்னாரு. நானும் ஓடி வந்து போட்டேன்பா. அவரு ஆச்சர்யப்பட்டாரு. “நல்ல ஸ்பீட் இருக்கு அருண்’னு பாராட்டினாரு. தீவிரமா எனக்குச் சொல்லித்தர ஆரம்பிச்சாரு. போடப் போட எனக்கு சூட்சுமம் பிடிபட்டமாதிரி தோணுச்சுப்பா. கையிலந்து விடுபட்டு பாட்ஸ்மேனைத் தாண்டி சீறிப் பாயற அந்த வேகத்துல உற்சாகமா இருந்துச்சுப்பா. சட்டுன்னு பிடிச்சிப் போச்சு. இன்னும் வேக வேகமா பந்து வீசணும்ணு தோணிருச்சு.
தினமும் காலையில் பயிற்சி தந்தாரு. ஆரம்பத்துல வேகம் மட்டும் இருந்தது, ஆனா தாறுமாறா போட்டேன். மெல்ல மெல்ல என் ரன் அப், ஆக்ஷன், ஃபாலோ த்ரூ எல்லாத்தையும் சரி பண்ணாரு. ஆறு மாசத்துல தேர்ச்சியாயிருச்சுப்பா. அப்பப்ப மேட்சலயும் ஆட வைச்சாரு. நான் நல்லாவே ஆட ஆரம்பிச்சேன். அருண் பௌலிங் போறான்னா விக்கெட் நிச்சயம்னு காலேஜ்ல பேரு வந்திருச்சு. பத்து நாளைக்கு முன்னால இன்ஜினீயரில் காலேஜ் போட்டில நான் அதிகபட்ச விக்கெட் எடுத்து வாங்கின கப்புப்பா இது.’

அப்பா அவனை ஆச்சர்யமாகப் பார்த்தார். அந்தப் பாதையில் போக விடாமல் தீவிரமாகக் கண்காணித்துத் தடுத்தாட் கொண்டும் அவனை அந்த திசையில் அழைத்தச்சென்றது எது?
“நீங்க கோச்சுக்குவீங்கன்னுதான் இத்தனை நாளா சொல்லலை. நேர்ல பாக்கும்போது சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். விளையாட்டு போல ஆரம்பிச்சது. எனக்கே என்னை வேடிக்கை பார்க்கற ஆர்வம்தான் இருந்தது முதல்ல. அப்புறம் என்னை ரொம்ப ஈர்த்திருச்சுப்பா. எனக்கே தெரியலை.’

இளவயது முழுக்க இந்த விளையாட்டைத் துரத்தி அடைந்த விரக்தி இவனையும் அடைந்துவிடக்கூடாது என்றுதானே அவனை வேறு பாதையில் திசை திருப்பியது? அந்தப் பாதையே வலிய திரும்பி வந்து அவனை எதிர்கொள்வது எதனால்?
“என் கிரிக்கெட் கோச்சிட்ட சொன்னேன்பா. உங்களுக்கு பிடிக்காது. அனுமதிக்கமாட்டீங்கன்னு. அவர் கைப்பட லெட்டர் எழுதித்தந்திருக்காருப்பா. உங்ககிட்ட குடுக்கச் சொன்னாரு.’
அப்பா அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அருணுக்கு அருமையான திறமை இருக்கிறதென்றும், அவன் இயல்பான பௌலர், ஆயிரத்தில் ஒருவருக்குதான் இப்படி இயல்பான திறமை இருக்கும் என்பதையும், கொஞ்சம் பயிற்சி தந்தால் அவன் கிரிக்கெட்டில் மிகப்பெரிய நிலையை அடைவது உத்தரவாதம் என்றும் அவனை தொடர்ந்து கிரிக்கெட் ஆட வைக்க வேண்டும் என்று மனதார கோரிய பயிற்சியாளரின் கடிதம் அவர் கையில் கனத்தது.

“நாங்க ஜெயிச்ச அந்த மாட்ச்ல நான் போலிங் போடறதை என் ஃபெரெண்ட்ஸ் எடுத்த வீடியோ இருக்குப்பா. பார்க்கறீங்களாப்பா.’ பதிலுக்குக் காத்திராமல் ஆர்வத்துடன் குறுந்தகட்டை எடுத்து ப்ளேயரில் பொருத்தி ரிமோட்டை அழுத்தி அழுத்தி… அவன் ஆட்டத்தைக் காண்பித்த மகனை கண்கொட்டாமல் பார்த்தார் அப்பா.

வெள்ளை உடையில் ஆறடி கம்பீரத்தில் தன் ரன் அப் குறிக்கிற அருண்… சின்னதாக இரண்டடி நடந்து, வேகம் பிடித்துத் தடதடவென்று ஆக்ரோஷமாக ஓடிவருகிற அருண்… ஸ்டம்பைத் தாண்டி எகிறிக் குதித்து முன் காலைப் பதித்து உடலை வளைத்து பந்தை எறிகிற அருண்… பந்து ஸ்டம்பைத் தாக்கி நிலத்தில் இருந்து அது பிய்ந்து சக்கரமாகச் சுழல்வதைப் பார்த்து சந்தோஷத்தில் குதிக்கிற அருண்… சளைக்காமல் ஓடி வந்து உற்சாகமாக மறுபடி மறுபடி பந்து வீசி ஆட்டக்காரர்களைத் திணற அடிக்கிற அருண்…. தொலைக்காட்சித் திரை உற்சாகத்தில் அதிர்ந்தது.

அப்பா திரையில் ஆழ்ந்து போனார். அந்தத் துடிப்பை, உற்சாகத்தை, திறமையை எங்கேயோ பார்த்து உணர்ந்தது போல, அவர் இளவயது பிம்பமே அவர் முன்னால் ஆடுவது போல உணர்ந்தார். முப்பது வருடத்துக்கு முந்தைய நினைவாழத்தில் மறைந்து போன நினைவுத்துளியை மறுபடி சிதறடித்த அந்தக் காட்சியில் முற்றிலுமாக மூழ்கிப் போனார்.
“உங்ககிட்ட சொல்லாம விளையாடினது தப்புதாம்பா… மன்னிச்சிருங்கப்பா… இனிமே வேணாம்னா நான் விளையாடலை,’ அருண் சொல்வது சன்னமாகக் கேட்கிறது.
என் ஏமாற்றத்தின் பின்னணியில் நான் தேர்ந்தெடுத்த முடிவு ஒன்றை என் பிள்ளை மேல் திணிக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவனுக்குள் இயல்பாக ஊற்றெடுக்கும் உணர்ச்சியை நான் ஏன் தடுக்கவேண்டும்? அதை மறைத்து வேறு ஆட்டத்தை ஏன் அவனுக்குக் கற்பிக்க வேண்டும்? என் ரத்தத்துக்குள் உறைந்து போயிருந்த கிரிக்கெட் ஆட்டத்தின் மேலிருந்த வேட்கையும் காதலும் என் பிள்ளைக்குள் பொதிந்து போனதில் வியப்பென்ன?

அருண் மௌனமாக அவரை எதிர் கொண்டான். அப்பா எழுந்து நின்றார்.

“கொஞ்சம் ஓப்பன் ஐடா இருக்கு போலிங் ஆக்ஷன். நல்ல அவுட் ஸ்விங்கர் போனும்னா இன்னும் சைடு ஆன் ஆக்ஷன் வரணும். இன்னும் ஸ்டம்ப்ஸ் கிட்ட வந்து டெலிவரி பண்ணணும். டெலிவரி ஸ்ட்ரைட் அப்ப முதுகை இன்னும் கொஞ்சம் வளைக்கணும் அப்பதான் இன்னும் வேகம் ஜெனரேட் ஆகும். பளபளப்பு கொஞ்சம் போன பந்துல சீம்பொசிஷனை உபயோகிச்சு ஆப் கட்டர்ஸ் போடு. இன்னும் க்ரீஸை நல்ல யூஸ் பண்ணணும்.
எல்லா பந்தையும் ஒரே வேகத்துல போடாத. கொஞ்சம் வேரியேஷன் குடு. பவுன்ஸர்ஸை பேட்ஸ்மேனை மிரட்ட மட்டும் போட்டு வேஸ்ட் பண்ற. அதை ஒரு விக்கெட் எடுக்க வைக்கிற பாலா மாத்தணும். என் ஃப்ரெண்டு ஒருத்தன் சேகர்னு பக்கத்துலதான் இருக்கார். தமிழ் நாட்டுக்கு ரஞ்சில ஆடினவர். அவர் கிட்ட கூட்டிப் போறேன். டிரெயினிங் எடுக்கணும். இண்டியன் கிரிக்கெட் டீம்ல சேரணுன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வச்சிக்க. உழைப்புதான் எல்லாம்.’

கோப்பையைக் கையில் இறுகப் பற்றிக்கொண்டு அப்பா பேசிக்கொண்டே இருந்தார்.

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *