அன்று சென்னையில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து ஒரு கூட்டம். ஆனால் தலைமை தாங்கியதோ சிவகாசியில் மிகப்பெரிய பட்டாசு தொழிற்சாலையின் அதிபர்! சூர்யாவிற்கு எல்லாம் எரிச்சலையே ஏற்படுத்தியது.
சூர்யா கீழ் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த 27 வயது இளைஞன். அந்த வயதுக்கேயுரிய துடிப்பும்,பொறுப்பும் மிகுந்தவன். தனக்கு கீழ் 2 தங்கைகள், 1 தம்பி திருமணமாகி சிறு வயதிலேயே சகோதரனிடம் அடைக்கலம் புகுந்த அத்தை என அத்தனை பேரின் தேவைகளையும் தந்தையின் ஒரு சம்பளத்தில் சாமர்த்தியமாக சமாளிக்கும் தாய் தந்தையரின் சிரமம் புரிந்து இளங்கலை படிப்பு முடிந்ததும் நல்ல வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல் கிடைத்த வேலையை செய்து தபாலில் முதுகலை படிப்பையும் முடித்தான். தட்டச்சு, சுருக்கெழுத்து என அவனது வசதிக்கேற்ப தகுதியை வளர்த்துக்கொண்டான். ஆனாலும் இன்னும் நல்ல வேலைதான் கிடைத்தபாடில்லை. ஆயிற்று, அடுத்த மாதம் தந்தைக்கு பணி ஓய்வு. தந்தைக்குப்பின் தனயனுக்கு வேலை என்ற காலமெல்லாம் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் போட்டி. தகுதி அடிப்படையில் வேலை கிடைப்பதை விட பணத்துக்கும், சிபாரிசுக்கும்தான் மதிப்பு இருந்தது.
இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலை அதிகப்படி வருமானம் என்ற நிலையில் போதுமானதாக இருந்தது. ஆனால் அதை மட்டுமே நம்பி இருக்க இயலாது. எனவே சூர்யா தனது வேலை வேட்டையை மேலும் மும்முரமாக்கினான். ஆனால் நல்ல வேலை அவனைப்பொருத்த வரை கைக்கெட்டாமலே இருந்தது.
அன்று மாலை வீடு திரும்பியபோது வீட்டில் ஏலமும் முந்திரியும் மணத்தது, அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியும்! “யாரேனும் தங்கையை பெண் பார்க்க வருகிறார்களா?” குழம்பினான்.
அம்மா அடுக்களையிலிருந்து முகத்தில் மலர்ச்சியும், தட்டில் இனிப்பும் ஏந்தி வந்தாள். “வாடாப்பா சூர்யா! கடைசியில நமக்கும் நல்ல காலம் பொறந்துடுத்து. அப்பாவோட சினேகிதர் சுந்தர் மாமா வந்திருந்தார், உனக்கு ஒரு நல்ல சேதியோட!” அம்மா சஸ்பென்ஸ் வைத்து பேசினாள். “அம்மாவுக்கு இப்படியெல்லாம் கூட பேசத்தெரியுமா?” ஆச்சர்யமாயிருந்தது சூர்யாவுக்கு. அம்மாவின் முகத்திலிருந்த மலர்ச்சியை பார்க்கும்போது அன்று முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பு கூட பறந்து விட்டது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதைத் தவிர என்ன நல்ல சேதி இருக்க முடியும் என நினைத்தவாறே “என்னம்மா அது?” என்றான். கேட்கும்போதே அன்னையின் மகிழ்ச்சி தன் முகத்திலும் பிரதிபலித்ததை உணர்ந்தான்.
அம்மா தொடர்ந்தாள். “சுந்தர் மாமாவுக்கும் அப்பா வயசுதானே, அவருக்கும் அடுத்த வாரம் ரிடையர்மென்ட். அவரோட கம்பெனில அவரை இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொல்றா, அவர்தான் வேலை பார்த்தது போதும், வயசான காலத்துல ஊரோட போய் இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டார். அதனால அவரோட கம்பெனில அவரையே வேற ஆள் பார்த்து வெச்சிட்டுப்போங்கோன்னுட்டாளாம்.” அம்மாவுக்கு இப்படித்தான், எதையுமே சுருக்கமாகச் சொல்லத்தெரியாது.
அம்மாவின் ஆவலை தடை செய்ய விரும்பாமல் அவளே சொல்லி முடிக்கட்டும் என மெளனமாகக் காத்திருந்தான். அம்மா தொடர்ந்தாள். “சுந்தர் மாமா உங்க அப்பாவும் ரிடையர் ஆகப்போறதையும், நீயும் இன்னும் நல்ல வேலை தேடிண்டுதான் இருக்கேங்கறதையும் ஞாபகத்துல வெச்சிண்டு உன்னை அந்த வேலைக்கு சிபாரிசு பண்ணி இருக்கார்.” அவனுக்கு நெஞ்சில் திடுக்கென்றது. சுந்தர் மாமா வேலை பார்த்து வந்தது சிவகாசியிலிருக்கும் பட்டாசுக் கம்பெனியில். குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை மனதார எதிர்ப்பவன் அப்படிப்பட்ட இடத்திலேயே வேலை பார்ப்பதா?
அவனது திடுக்கிடலை கவனிக்காமல் அம்மா பேசிக்கொண்டே போனாள். “சூபர்வைசரா சேர்த்துக்கராளாம், எடுத்த எடுப்புலயே 5000 சம்பளமாம். வேலை பெர்மனன்ட் ஆனதும் இன்னும் கூடுமாம், திருப்தியா வேலை செஞ்சா மானேஜரா கூட ஆக்கிடுவாளாம். மாமாவோட சிபாரிசால தொடக்கத்துலயே குவார்டர்ஸ் கூட தராளாம்! அடுத்த மாசம் அப்பா ரிடையர் ஆறாளே, அவரோட பென்சன் பணத்தையும், உன்னோட சொற்ப சம்பளத்தையும் வெச்சிண்டு என்னமா குடும்பத்தை ஒப்பேத்தறது, பொண்கள் வேற கல்யாணத்துக்கு தயாரா இருக்காளே, என்னடாப்பா பண்ணப்போறோம்னு கலங்கிப்போயிட்டேன். எம்பெருமானே கண்ணை திறந்தேடாப்பா! அம்மா முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
சூர்யா மறுத்துப்பேச வகையில்லாமல், குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து மனமேயில்லாமல் வேலையில் சேர சிவகாசிக்குப் பயணமானான். இப்போதைக்கு இந்த வேலையில் சேர்ந்து கொள்வோம், பிறகு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என்ற முடிவோடுதான் சூர்யா சிவகாசிக்குப் பயணமானான், அங்கே அவனுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்ததை அறியாமல்.
அவன் வேலைக்குச் சேர வேண்டிய அலுவலகத்துக்குச் சென்றதும்தான் தெரிந்தது, போன வாரம் குழந்தைத் தொழிலாளர்களை பணியிலமர்த்துவதை எதிர்த்து நடந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பெரிய மனிதரின் தொழிற்சாலைதான் அது என்பது! அந்த கூட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துவதை ஆதரித்து ஏதோ பேசியதாகக்கூட கேள்விப்பட்டு எரிச்சலடைந்திருந்தான். இப்போது அந்த மனிதரின் அலுவலகத்திலேயே பணி புரிய நேர்ந்த்தை எண்ணி தனக்குள் மறுகினான்.
சுந்தர் மாமா அவனை முதலாளியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இன் முகத்தோடு வரவேற்றுப் பேசினார். சுந்தர் மாமாவைப் பற்றியும் அவரது நேர்மை, நாணயம், அயராத உழைப்பு பற்றியும் சிறிது நேரம் புகழ்ந்து பேசினார். அவர் சேர்த்து விட்டதாலேயே சூர்யாவின் திறமை, உழைப்பைப் பற்றி தமக்கு கவலையில்லை என்று சொல்லி சுந்தர் மாமா மேல் தனக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் எவ்வளவு கனிவாய்ப் பேசினாலும் சிறு குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர் என்ற உறுத்தலால் இயல்பாய் இருக்க முடியாமல் திணறினான்.
இன்றோடு சூர்யா வேலையில் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. வந்து சேர்ந்த உடன் தன் செளக்கியத்தைப் பற்றி ஒரு வரி எழுதிப் போட்டதோடு சரி! அதற்குப்பின் அலுவலக நடைமுறைகளைப் பழகவும், வேலையைப் புரிந்து கொள்ளவும் சரியாய் இருந்தது. இன்னமும் தொழிற்சாலையை சுற்றிப் பார்க்க கூட நேரமிருக்கவில்லை, அவனுக்கு அதில் விருப்பமுமில்லை. குடிகாரத் தகப்பனுக்காகவும் அவனிடம் அடிபட்டு மிதிபட்டு குடும்பத்தை காக்க நினைக்கும் தாய், ஒட்டிப் போன வயிறோடும், கண்களில் ஏக்கத்தோடும் திரியும் உடன் பிறந்த சின்னஞ்சிறுசுகளுக்காகவும் தங்கள் விளையாட்டுப் பருவத்தை தொலைத்துவிட்டு கண்களில் கனவுகளைச் சுமந்து கொண்டு வேலை செய்யும் குழந்தைகளைக் காண வேதனைதானே மிஞ்சும்! ஆனால் அன்று முதலாளியே அவனை தொழிற்சாலையை சுற்றி பார்க்க அழைத்தபோது மறுக்க முடியாமல் சென்றான்.
தொழிற்சாலைக்குள் சென்றதும் அவனை முதலில் கவர்ந்தது அங்கிருந்த சுத்தமும், வேலை செய்து கொண்டிருந்த குழந்தைகள் முகத்திலிருந்த மகிழ்ச்சியும்! ஒருவரோடொருவர் பேசாமல் வேலை நடந்த போதும் அக்குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அமைதியும் அவனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சாப்பாட்டு நேரம் வந்ததும் குழந்தைகள் வரிசையாக சாப்பாட்டறைக்குச் சென்றனர். சாப்பாட்டு அறை என ஒன்று இருந்ததே அவனுக்கு அதிசயம், அதை விட அதிசயமாய் அவர்களுக்கு சத்தான உணவு அங்கேயே வழங்கப்பட்டது. ஒரு கீரை, ஒரு காய், சாம்பார், மோர் என எளிமையான ஆனால் சத்தான உணவு. முதலாளியைப் பார்ததும் குழந்தைகள் கூச்சலிட்டு தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். சூர்யா மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு முதலாளியைப் பார்த்தான். “என்ன தம்பி பார்க்கறே! குடும்பத்துக்கு சோறு போட உழைக்கும் இந்தப் பிஞ்சுகள் பாதி நாள் தன் வயித்துக்கே இல்லாம வேலை செய்யறதைப் பார்த்தேன், மொத்த குடும்பத்துக்கும் என்னால சோறு போட முடியாது, ஆனா என்கிட்ட வேலை பார்க்கற குழந்தைகளுக்கு ஒரு வேளை எளிமையா சாப்பாடு போட முடியுமே, அதான் இப்படி ஒரு ஏற்பாடு” பதில் கூற முடியாமல் நெகிழ்ந்து நின்றான்.
தொழிற்சாலை கட்டிடத்தின் பின் பகுதிக்கு வந்ததும் அவனுக்கு மற்றுமோர் ஆச்சர்யம் காத்திருந்தது! அங்கே பரந்த புல் வெளியும், ஒரு புறம் சில கீற்றுக் கொட்டாய்கள் கரும்பலகையுடனும், மறுபுறம் குழந்தைகள் விளையாட சில ஊஞ்சல்களும், சீசாக்களும் இருந்தன. சூர்யா கேட்காமலே அதற்கும் விளக்கம் அளித்தார். “எத்தனையோ பிள்ளைங்க படிக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால வேற வழியில்லாம வேலைக்கு வராங்க. அப்படி படிப்புல ஆர்வம் உள்ள பிள்ளைங்களுக்காக தொழிற்சாலை வேலை நேரம் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் விளையாட விட்டு பிறகு 1 மணி நேரம் படிப்பு சொல்லித் தரோம். ஞாயிற்றுக்கிழமைகள்ல பிள்ளைங்க ஆசைப்பட்டா வந்து விளையாடட்டும்னு இந்த கேட் மட்டும் பூட்டறதே இல்லை தம்பி!” தொடர்ந்தார் முதலாளி “எனக்கும் குழந்தைகளை வெச்சி வேலை வாங்கறது பிடிக்கலதான் தம்பி! ஆனா நான் ஒருத்தன் மட்டும் இதுங்களை வேலைக்கு வெச்சிக்கமாட்டேன்னு சொல்றதால எதுவும் மாறிடல. இன்னும் சில வக்கிரம் பிடிச்ச முதலாளிங்க கிட்ட வேலைக்குப் போய் பல விதமா கஷ்டப்பட்டுதுங்க. ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னா நீயா சோறு போடுவேனு கேட்பாங்க! அதான் பார்த்தென், என்னாலானது, ஓரளவு நல்ல சம்பளம், சாப்பாடு எல்லாம் குடுத்து வேலைக்கு வெச்சிருக்கேன். 10-வது பிரைவேட்டா படிச்சி கூட சில பிள்ளைங்க பாஸாயிருக்குது தம்பி” என்றார் பெருமையுடன். கூடவே ஒரு கவலையும் அவர் முகத்தில் தெரிந்தது!
“சுந்தர் ஐயா இருந்த வரைக்கும் பிள்ளைங்க படிப்பை அவர் பார்த்துகிட்டார், இப்போ அவர் வேலையை விட்டு போறதுமில்லாம ஊரை விட்டே போறார்! அவர் இடத்துல இருந்து பார்த்துக்க நல்ல ஆள் தேடணும்.” வேகத்தோடு குறுக்கிட்டான் சூர்யா, “எதுக்கு ஐயா வேற ஆள் தேடணும்? அந்த பொறுப்பை சந்தோஷமா நான் பார்த்துக்கறேன்”. சந்தோஷம் தம்பி, ரொம்ப சந்தோஷம்! என்னோட கவலை தீர்ந்துது. உன்னை மாதிரியே ஒவ்வொரு இளைஞனும் இருந்துட்டா ஊரே முன்னேறிடும்.”
“இவரை மாதிரியே எல்லா முதலாளிங்களும் இருந்துட்டா நாடே முன்னேறிடும். இந்த முதலாளி குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொண்டதற்கு இப்படி ஒரு கோணம் இருக்குமென்று எனக்கு தோன்றவே இல்லையே!” நினைத்துக் கொண்டான் சூர்யா.
அன்றிரவு வீட்டுக்கும், நண்பர்களுக்கும், நெகிழ்ந்த மனத்தோடு கடிதம் எழுத உட்கார்ந்தான்.
– கல்பகம் [teekay5@rediffmail.com] (ஜூலை 2006)