கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 3,556 
 
 

(1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ‘சாளி’யிலே அமர்ந்திருந்த கம்பீரம் அவளின் உள்ளத்தை இதமாக வருடி இன்பக் கிளுகிளுப்பினை ஏற்படுத்தியது.

உண்மையாகவே அவன் அழகன்தான். ‘ட்றிம்’ – பண்ணிய மீசையும் நெளிநெளியாகக் காற்றில் அலைந்த தலை மயிரும் கூரிய நாசியும் குறும்பு தவழும் விழிகளுமாக…

அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாழ்நாள் முழுவதும்!

காற்சட்டைக்குப் பதிலாகப் பற்றிக் சாறமும் சாளி யின் பின் ஆசனத்தை நிரப்பிக்கொண்டு உரப்பைகளும் இல்லாவிட்டால், ஏதோ திரைப்படத்தில் வரும் கதாநாயக னாகவே அவனை நினைக்கத் தோன்றும்.

அந்த அளவிற்கு அவன் அவளுள்ளே நிறைந்து விட்டான்.

“என்ன? ஒரு நாளும் பார்க்காத ஆளைப் பார்க்கிற மாதிரி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாய்? நான் உன்ர மச்சான் மனோகரன்தான்” என்றான். சொல்லிக் கொண்டே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துச் சிரிப்பில் குலுங்கினான்.

அவள் திடுக்குற்றாள். தன்னைச் சமாளித்துக் கொள்ளத் தானும் சிரிக்க முயன்றாள். ஆனால் சிரிப்புக்குப் பதிலாக முகத்தில் அசடுதான் வழிந்தது. அப்படித்தான் அவளுக்குத் தோற்றியது.

அவன் தனது வலக்கை மணிக்கட்டை லாகவ மாகத் திருப்பி நேரம் பார்த்தான். “ஓ!மை கோட்” (கடந்த சில காலமாய் ஒன்றிரண்டு இங்கிலிசுச் சொற்களை அவன் கையாளத் தெரிந்து வைத்திருந்தான்.) “இந்த நேரத்துக்கு நான் ரவுணிலை நிற்க வேணும்” என்றவன் சுற்றுமுற்றும் பார்த்து, ஒருவரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு அவளின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான். “வரேக்கை குஞ்சுக்கு என்ன வாங்கி வாறது?’ என்று கேட்டுக் கண்களால் அவளை விழுங்கினான்.

“நீங்கள் செக்கிங்குகளுக்குத் தப்பிப் பத்திரமாய்த் திரும்பி வந்தால் போதும். நீங்கள் வருமட்டும் நெஞ்சு திக்குத்திக்கெண்டு ஒவ்வொரு கணமும் அடிச்சுக் கொண்டே இருக்கும்” என்றாள். அவன் அட்டகாசமாய்ச் சிரித்தான்.

“நான் என்ன உன்னைப்போலப் பெட்டையே? ஆமிக்காறன் என்னோடை சரசமாடமாட்டான். அதுமட்டும் நிச்சயம்”

அவள் சிணுங்கினாள். ஆனால் ஒவ்வொரு வீதித் தடையையும் கடந்து போகையில் உயிர் போய்த் திரும்புவதை அவனால் அந்த நேரத்தில் நினைக்காதிருக்க முடியவில்லை .

“நீங்கள் என்ன கிழவரே? பெட்டையளிலும் பொடியள் பாடுதான் ஆபத்துக்கூட” என்ற பொழுது அவளின் நெஞ்சு விம்மித் தணிந்தது.

சர்வாங்க பரிசோதனைக்கு உட்பட்டு, அடிக்கடி சாளியிலிருந்து இறங்கி அதை உருட்டிக்கொண்டு நெஞ்சு படபடக்க நடப்பதை, அவனும் நினைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் இவையெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவன் தனது முகத்திலே மலர்ச்சி மாறாமல், மீசையை மெல்லத் தடவியபடி,

“அதெல்லாம் நான் சமாளிப்பன். நீ ஒண்டுக்கும் யோசியாதை. நான் வாறன் ”

சாளியைத் திருப்பினான். அது திரும்புகையில் அவன் சற்றே குனியக் கழுத்துச் சங்கிலியில் மாட்டியி ருந்த பதக்கம், சட்டைக்கு வெளியே தலைகாட்டி அசைந்து அவனுடைய புதுப்பணச் செருக்குக்குக் கட்டியம் கூறத் தவறவில்லை .

சாளி புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந்தது.

அவள் அவன் சென்ற திசையிலே, சாளி மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவன்தான் எவ்வளவு திறமைசாலி! எந்தத் தொழிலும் செய்யாது இலையான் ஓட்டிக்கொண்டிருந்தவன், வலிகாம இடப்பெயர்வுக்குச் சில காலத்துக்கு முன்பு மண்ணெய் வியாபாரத்தில் இறங்கினான்… அவனது சிறிய வீடு மாடமாளிகையாயிற்று. இடப்பெயர்வு காலத்திலும் தன் தொழிலைத் தொடர்ந்து ஊர் திரும்பிய வேளையிலும் மடிநிறையப் பணத்தோடு திரும்பமுடிந்தது.

இடம் பெயர்ந்து அதனோடு நின்றானா? ஊர் திரும்பாதிருந்தவர்களின் வீட்டுப் பொருள்கள் பலவும் அவன் சொந்த உடைமைகள் ஆயின. இப்பொழுது அவன் வீட்டிலே ‘ரீவீக்கள், ‘றேடியோ’க்கள், தளபாடங்கள், ஓடுகள், கதவுகள், யன்னல்கள் என்று எத்தனை எத்தனை!

கிடைத்த விலைக்கு அவற்றை விற்றுக்கொண்டி ருக்கிறான். இதனோடு மண்ணெய் முதலிய அத்தியாவ சியப் பொருள்களைப் பதுக்கல், காங்கேசன்துறைக்கோ பருத்தித்துறைக்கோ கப்பல்கள் வராத காலங்களில் அவனுக்குப் பெரும்வேட்டை! எரிந்த வீட்டில் பிடுங்கியது இலாபந்தானே? இந்த உண்மை ஏன் ஊரிலுள்ள முட்டாள்களுக்குத் தெரிவதில்லை? பணந்திரட்டுவதில் அவன் ஒரு மந்திரவாதிதான் ! சந்தேகமே இல்லை !

அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை. அவனோடு வாழப்போகும் எதிர்காலக் கனவுகளிலே மிதக்கத் தொடங்கினாள்.

“என்னடி? உன்ரை ஆசை அத்தான் புதுப்பணக் காரப் பிரபுவே வந்திட்டுப் போறார்?”

அவளின் கனவுகள் கலைகின்றன. திடுக்குற்றுத் திரும்புகிறாள்.

அப்பு ……

“சனங்களின்ர வயிறை எரிய வைச்சுக் கண்ணைக் கட்டி அடிக்கிற உவன்ரை புதுப் பகட்டிலை நீயும் கொம்மாவும் மயங்கிக் கிடக்கிறியள். ஒரு நாளைக்கு உங்கடை மயக்கம் தெளியத்தான் போகுது. தெரிஞ்சு கொள்ளு” மேலும் ஏதோ முணுமுணுத்தபடியும் கதவை மிகச் சிரமத்துடன் திறந்துகொண்டும் விறகுப் பாரத்தால் தள்ளாடும் சைக்கிளிலே அதன் தள்ளாட்டத்துக்கு ஈடுகொடுத்தபடி ஒழுங்கைக்கு அப்பு வருகிறார். சைக்கி ளில் ஏறிப் பெடலை உதைக்கிறார். சரிந்தும் நெளிந்தும் சைக்கிள் ஆமை வேகத்தில் ஊர்கிறது.

அவளுக்குச் ‘சீ’ என்று ஆகிவிடுகிறது. ‘சரியான பழசுதான் இந்த அப்பு. உலகத்தின்ரை நேச்சர் தெரியாமல் இன்னமும் நீதி நேர்மை எண்டு பேசுறார். எனக்கு இண்டை வரையிலை ஆமான ஒரு சட்டையோ, சீலையோ வாங் கித்தர வக்கில்லை . நியாயம் பிளக்கிறாராம். நியாயம்!’, அவளின் மனத்திலே சிந்தனைகள் கனக்கின்றன.

எப்பொழுதோ ஒரு காலத்தில் கழுவித் துடைத்து எண்ணெய் போட்டு ‘டயர்’ ‘டியூப் மாற்றியதாக நினைவு. இன்று அந்தச் சைக்கிள் அவரைப் போலவே நரை திரை மூப்புடன், ஊடியும் கூடியும் அவரின் தொழிலுக்கு ஈடு கொடுப்பது அதிசயந்தான்.

சைக்கிள் இடைக்கிடை முரண்டு பண்ணுவது போலவே அவரின் உயிர்ப்புக்கு மூலமான நெஞ்சுங்கூட அடிக்கடி நோவு கொடுத்து அவரைப் பயமுறுத்துவது உண்டு. இன்றும் அப்படித்தான். ஊசியால் குத்துவது போல அது நோவைத் தரத்தான் செய்கிறது. கிறவல் சைக்கிளோடு வாழப் பழகிவிட்ட அவருக்கு, நோவெடுக்கும் நெஞ்சோடும் உறவாடிப் பழக்கப்பட்டுவிட்டது. மனோகர னின்-அவரின் மருமகனின்-சாளி போல அதுவும் உயிரெண் ணெய் இல்லாது படபடத்து ஒருநாள் நிற்கும் என்று அவருக்குத் தெரியும். அதற்கு அவர் பயப்படவில்லை . ஆனால்…

கண்ணுக்குப் புலனாகாததும் அதனாலேயே அகம் எனப் பெயர் கொண்டதும் நான் என்ற உணர்வுக்கு நிலைக்களமானதுமான அவருடைய மனம் வேறு இருக்கிறதே! அது சொல்வழி கேட்காத நட்டமுட்டியாய் எப்பொழுதுமே அவரைச் சிந்தனைகளிலே மூழ்கவும் முக்குளிக்கவும் வைப்பதிலிருந்து அவரால் விடுபடக்கூட வில்லையே!

அறுபத்தைந்தாண்டுகளாய்க் கந்தையா என்ற நாமத்தைத் தாங்கிக் கொண்டு நான், நீ, அவன், அவள், அது, அவை என்ற பாகுபாடுகளுக்கிடையே நாள்களை ஓட்டிவரும் அவரைச் சிந்தனைகள் ஆக்கிரமிக்கினறன.

பள்ளத்தில் விழுந்தும் எழுந்தும் மேட்டில் ஏறுவதற்கு முரண்டு பண்ணியும் ஊர்கின்ற சைக்கிளிலும், பலமடங்கு வேகத்துடன் அவரது மனமாகிய ‘ஜெற்’ விமானம் பழைய சிந்தனைகளை நோக்கித் தாவிப் பறக்கிறது.

கந்தையர் ஒரு தனிப்பிறவி. மனோகரனின் தாய் மகேஸ்வரி உட்பட நாலு தங்கைமாருக்கு வாழ்வளிப்ப தாகிய வேள்வியிலே தம்மையே அவிர்ப்பாகமாக்கிக் கொண்டவர் அவர்.

அவரின் தோட்டம், வயல், பனங்காணித்துண்டு பாடுபட்டுத் தேனீ போலச் சேமித்த பணம் போதாததற்குக் கடன் என்று எவ்வளவோ கொடுத்து நாலு மணவாளர் களைத் தமது தங்கைமாருக்குத் தேடிக்கொடுத்தது ஒரு பாரதம். மகேஸ்வரிக்கு நல்ல இடமென்றும் பொருத்தமான மாப்பிள்ளை என்றும் ஒருவார காலத்தில் தெரிவுசெய்தார். மகேஸ்வரியின் வாழ்க்கையைக் கானல் நீராக்கி விட்டு, ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கொரு ஆண் என்று இரண்டு பிள்ளைச் செல்வங்களை அவளுக்கு வழங்கி விட்டு, அதனோடு தனது கடமை முடிந்தது என்ற திருப்தி யுடன் மகேஸ்வரியின் கணவன் ‘சின்னவீடு’ ஒன்றைத் தேடி மெல்லக் கழன்றுவிட்டான்.

முப்பத்தைந்தாவது வயதில் மாப்பிள்ளைத் தலைப் பாகையைச் சூட்டிய சூட்டோடு, மகேஸ்வரியையும் அவளின் வாரிசுகளையும் சுமக்கும் கடமையையும், பாரத்தையும் கந்தையர் தமது தோள்களில் முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டார். மீண்டும் தமது மிடுக்குடனே குத்தகைக் காணிகளிலே பயிரிட்டு மிச்சம் பிடித்து, மகேஸ்வரியின் மகளையும் கரை சேர்த்தார்.

ஒரு வகையாக அவர் தலையை நிமிர்த்திய பொழுது அவரின் வம்ச வித்தாய் உதித்த மகள் கலைச்செல்வியையும் வளர்த்து ஆளாக்கியதோடு மனோகரனையும் மனிதனாக்கி உலாவவிட முயன்ற வேளையில்தான் அவரின் பாச்சா அவனில் பலிக்க வில்லை.

மனோகரன் மாப்பிள்ளை மாடாக வளர்ந்ததோடு சரி. வயது ஏற ஏற அவன் ஒருவருக்கும் அடங்காத குழு மாடாகி மாமனையே எதிர்த்து மல்லுக்கட்டுமளவிற்கு முன்னேறிய பொழுது…

பாவம் கிழவர்! மூத்த பரம்பரையின் குணாம்சத்திற் கேற்ப அவனில் கைவைத்து அடித்து மிரட்டித் திருத்த முற்பட்டதை, அவரின் தங்கை மகேஸ்வரி கூட விரும்பாது, ஒரு நாள் பெரிய சண்டை. வாய்ச் சண்டையில் தொடங்கி மனோகரன் தனது பதினெட்டு வயதின் மிடுக்கோடு அவரை நோக்கித் தன் கையை நீட்டும் நிலைக்கு அது வளர்ந்தது…

“உன்ர மோனும் நீயும் இனிப் பட்டபாடு. எக்கேடு கெட்டாலும் திரும்பியும் பார்க்கமாட்டன். ஓ! உங்கட சங்காத்தமே வேண்டாம்” என்று ஒரேயடியாக அவர் அவர்களைக் கைகழுவிவிட்டார்.

கந்தையர் தந்த சீதன வீட்டில் வாடகைக் கிருந்தவர்களை எழுப்பிவிட்டுத் தாயும் மகனும் அங்குச் சென்று வாழத்தொடங்கிச் சரியாக ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. நேற்றுப்போல இருக்கிறது. இன்று மனோகரன் செல்வச்சீ(?) மான்!

கந்தையரோ….?

விறகுக்கட்டைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒன்றுவிட்டு ஒருநாள் பத்துமைல்களுக்கு அப்பால் சென்று விற்று வரும் அன்றாடம் காய்ச்சி! அந்தப்பிச்சைப் பணத்திலேதான் மகளின் ரியூஷன் கட்டணம், மற்றச் செலவுகளெல்லாம்…

கந்தையர் மானஸ்தர். அவருக்கு மானம் இருந்தது போல அவரின் மனைவி செல்லாச்சிக்கு ஒரு மனமும் இருந்தது. மகள் கலைச்செல்விக்கோ கனவுகள் இருந்தன. அந்தக் கனவுகளிலே, அரியாசனத்தில் அரசச் செம்மலாக மனோகரன் வீற்றிருந்தான்.

மகனுக்காகப் பரிந்து பேசி, சண்டைபோட்டு அவனோடு தனது பழைய வீட்டிற்குக் குடிவந்த பிறகுதான் மகேஸ்வரிக்குத் தான் விட்ட பிழை உறைத்தது. விட்டேற்றியாய் ஏமஞ்சாமங்களில் வீட்டுக்கு வந்து, படிப்புக்கும் முழுக்குப் போட்டுவிட்டுக் கட்டாக்காலியாக அலைந்து கொண்டிருந்த மனோகரன் அவளின் மனத் தைக் கிடைத்த போதெல்லாம் சித்திரவதை செய்வதை அவளால் பொறுக்க முடியவில்லை . இன்று சகல வசதி களோடு வாழ்ந்தாலும்… ‘உண்மையில் இதுவும் ஒரு வாழ்க்கைதானா, என்ற கேள்வி அடிக்கடி அவளின் நெஞ்சைக் கொளுக்கி போட்டு வருத்தியது.

“எங்கள் நாலுபேரையும் வாழவைக்க அண்ணை எவ்வளவு பாடுபட்டவர்? இந்த வயசிலையும் அவர் இப்படி யெல்லாம் பாடுபடவேணுமே? நான் செய்த பிழைக்கு என்ன பிராயச்சித்தம் செய்தாலும் அது போதாது. கடைசி இவனை அவற்றை பெட்டைக்குக் கட்டி வைச்செண்டா லும் கடைசிக் காலத்திலை அவருக்கு ஆறுதல் கொடுக்க வேணும்” என்று மகேஸ்வரி முடிவு செய்வதற்கு அவளின் நல்ல மனம் மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது.

மனோகரன் கலைச்செல்வியிலே காட்டும் ஈடுபாடும், எட்டாம் வகுப்பையே எட்டிப் பிடிக்காத அவனுக்குப் படித்த நெருங்கிய உறவு கொண்ட அவளை மனைவி யாக்கினால் அவன் திருந்தி நடக்கவும் கூடும் என்று ஆவலோடு கூடிய எதிர்பார்ப்பும் அவளை அந்த முடிவுக்கு வர வைத்தன. ஆனால்….

மகேஸ்வரி தன் தமைக்கைமார் மூலம் அனுப்பிய சமாதானத் தூதுகளும் வேண்டுதல்களும் கந்தையர் என்ற பாறை மீது மோதித் துகள் துகளானதுதான் மிச்சம்! “என்னோடை அண்ணன் முறைகொண்டாட விரும்பினால் வாருங்கோ, கதையுங்கோ, சாப்பிடுங்கோ. ஆனால் இவள் மகேஸ்வரி பற்றிக் கதையெடுத்தால் உங்கடை சங்காத் தத்தையும் விட்டிடுவன். ஏதோயோசிச்சு உங்களுக்குச் சரி எண்டு பட்டதைச் செய்யுங்கோ.”

தங்கள் இருவரையும் பொறுத்தவரையில் கந்தை யரின் மனக்கதவுகள் சிக்காராய் இறுக்கிப் பூட்டப்பட்டு விட்டன, என்று தெரிந்த பின்புங் கூட மகேஸ்வரி தன் நம்பிக்கையை முற்றாகக் குடிபோக விடவில்லை. கந்தையரோடு கூடப் படித்தவரும், இன்று ஓய்வுபெற்ற ஆசிரியராய் விளங்குபவரும் கந்தையரின் மதிப்பிற்குரிய வருமான சின்னத்தம்பியரை அவள் கடைசித் துரும்பாகப் பயன்படுத்தினாள்.

சின்னத்தம்பியர் அவளின் வேண்டுகோளை மறுக்க முடியாவராய் ஒரு நாள் பின்னேர வேளையில் கந்தையர் வீடு சென்றார். கந்தையரும் முகமலர்ச்சியோடு தமது நண்பரை வரவேற்றார். சின்னத்தம்பியர் உடனே தமது தூதின் நோக்கத்தை மிகவும் பவ்வியமாய் எடுத்து ரைத்தார்.

“இஞ்சைபார். கந்தையா, நீர் அடிச்சு நீர் விலகுமே? அவள் தங்கச்சியும் கைம்பெண். அவள் தான் செய்ததுக் கெல்லாம் வருத்தப்பட்டு உன்ர காலிலை விழவும் தயாரா யிருக்கிறாள். பாவம்! நீயும் நொந்து போயிட்டாய். பொடியனோ உன்ரை மேளைத்தான் கட்டப்போறேன் எண்டு ஒற்றைக்காலில் நிக்கிறான். அவனும் முன்னைப் போல இல்லை. இந்தக் கலியாணத்தை உன்ர மோளுக்குச் செய்து வைத்தால் உன்ர தங்கச்சிக்கும் மருமோனுக்கும் மட்டுமில்லை, உனக்கும் நன்மைதான். யோசிச்சுச் சரியெண்டு சொல்லப்பா”

சின்னத்தம்பியார் பேசும்வரை நிலத்தைப் பார்த்தபடி , கற்சிலை போல இருந்த கந்தையர் கடகட வென்று சிரித்தார். “ வாத்தியார், நாங்கள் படிச்ச காலத்திலைதான் இரண்டாவது மகாயுத்தம் நடந்தது. உங்களுக்கு நினைவிருக்கே?’ என்று அவர் கேட்ட கேள்வி மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலத்தான் சின்னத்தம்பியருக்குத் தோன்றியது. அவர் திகைப்போடு கந்தையரைப் பார்த்தார். கந்தையர் தொடர்ந்தார்.

“அந்தக் காலத்திலை பிரித்தானிய பிரதம மந்திரி யாய் இருந்தவர் சேர்ச்சில், அவருக்கும் மனோகரன் மாதிரி மருமகன். இரண்டு பேருக்கும் பேச்சுப் பறைச்ச லில்லை. எப்பிடியாவது சேர்ச்சிலோடை சமாதானம் பண்ணிக் கொள்ள மருமோன் விரும்பினான். ஒருநாள் அவரிடம் வலியப்போய் அவரைத் திறுத்திப்படுத்த “உலகத்திலேயே சிறந்த இராசதந்திரி ஆர்?” எண்டு கேட்டான். அவன், “நான்தான்” எண்டு சேர்ச்சில் சொல்லு வாரெண்டு எதிர்பார்த்திருக்கவேணும். ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமே?.”

“தெரியாது, சொல்லு” என்றார் சின்னத் தம்பியார்.

சேர்ச்சில் “இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி” எண்டார். மருமோன் வியப்போடை கேட்டான் “எப்படி?’ எண்டு. “அவர் தன்ரை மருமோனைச் சுட்டுக் கொண்டு போட்டார்” எண்டு சேர்ச்சில் பதில் சொன்னார்.

ஆறாம் வகுப்புடன் பள்ளிப்படிப்புக்குப் பிரியாவிடை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், அந்தக் காலத்தில் வாசகசாலைகளைத் தேடிச் சென்று விழுந்து விழுந்து வாசித்துத் தமது பொது அறிவை விருத்தி செய்து கொண்டவர் கந்தையர் என்பது சின்னத்தம்பியருக்குத் தெரியாததல்ல. அதனோடு அவரின் பிடிவாதமும் தெரிந்து தான் இருந்தது.

“அப்ப…?’ சின்னத்தம்பியர் இழுத்தார்.

கந்தையர் மீண்டும் சிரித்தபடி தாம் நான்காம் வகுப்பில் படித்து மனனம் செய்திருந்த வாக்குண்டாம் பாடலைத் தமக்கேயுரிய இராக ஆலாபனையோடு பாடத் தொடங்கினார்:

உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கற்றூண் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கில் தளர்ந்து வளையுமோ தான்.

‘பற்றலர்’ என்றால் பகைவர் என்றும், ‘கற்றூண்’ என்றால் கல்+தூண் என்றும், ‘இறுவது’ என்றால் பிளப்பது என்றும் விளக்கம் கொடுக்கக் கந்தையரின் வீடு, தாம் முன்பு படிப்பித்த வகுப்பறையல்ல என்று உணர்ந்து கொண்ட சின்னத்தம்பியர் மௌனமாக வெளியேறினார்.

வேறுவழி…?

விறகு வியாபாரம் முடிந்து நெஞ்சுநோவும் களைப்பும் இளைப்புமாகத் தமது பஞ்சகல்யாணியில் – சைக்கிளில்-ஊர்ந்து கொண்டிருந்த அந்த வேளையிலும், இந்த நினைவானது மனத்திரையிலே படம் விரிக்கத் தம்மை அறியாமல் சிரித்தபடி ஒழுங்கையால் கந்தையர் வந்துகொண்டிருந்தார்.

கந்தையர் வழக்கமாக இருட்டிய பிறகுதான் வருபவர். அன்று மாலை ஐந்து மணிக்கே வருவார் என்று தாயும் மகளும் எதிர்பார்க்கவில்லை.

சற்று முன்புதான் மனோகரன் கொடுத்துவிட்டுப் போன சேலையின் நிறத்திலும் அதில் பதித்திருந்த பூக் களின் அழகிலும் சொக்கியவர்களாய் விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கையுங் களவுமாக அகப்பட்டுத் திருதிருவென்று விழித்தார்கள்.

அவர்களின் கைகளிலிருந்து அந்தச் சேலை வழுவித் தரையில் அநாதையாய் விழுந்துகிடந்தது.

கந்தையர் ஒரு கணத்தில் நிலைமையை விளங்கிக் கொண்டவராய், “ஸ்ரீகிருஷ்ணர் திரௌபதிக்கு வஸ்திரம் அருளியிருந்க்கிறார் போல இருக்கு! ஆர் பிள்ளை உன்ர வஸ்திரத்தைக் களைஞ்சவை?’ என்று மிகவும் அமைதி யாகக் கேட்கையில்…

தாய்க்கும் மகளுக்கும் ஐந்துங் கெட்டு அறிவும் கெட்டநிலை.

என்றாலும் செல்லாச்சி தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஒரு தகப்பன் பிள்ளையோடை பேசிற பேச்சா இது?” என்றாள், கந்தையர் தொடர்ந்து அமைதியாகவே சொன்னார்.

“தகப்பன், மகள்! ஆர் ஆருக்கு?, உன்ர மகள் திரௌபதி இல்லாமல் இருக்கலாம். வேணுமெண்டால் அவள் பெண்ணாயில்லாமல் பரதனாய் இருந்துபோகட்டும். என்னைப் பொறுத்தவரை நான் தசரதனாயிட்டன். “ஓ” என்று ஒவ்வொரு சொல்லையும் அளந்து கூறிவிட்டு, வீட்டினுள்ளே போனார். தமது பாயை விரித்து நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டார்.

பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் அதிலும் கொடிதானதொரு பேரழிவை அவரின் வார்த்தை கள் ஏற்படுத்தியதை உணர்ந்துகொள்ள நேரம் ஆக வில்லை.

செல்லாச்சி கைகேயியா? கலைச்செல்வி அவளின் மகனான பரதனா?

அப்படியானால் …?

தசரதன் கைகேயியைத் தனது மனைவி இல்லை என்றும் பரதன் தன் மகன் இல்லை என்றும் துறந்ததுபோல…

அப்புவை எவ்வளவுதான் வெறுத்தாலும் கலைச் செல்வியின் இதய அடி ஆழத்தில், அவர்மீது பாசம் ஊற்றுப் பெருக்காய்ச் சுரந்து கொண்டுதான் இருந்தது. கணவனின் அழுங்குப் பிடியால் விரக்தியடைந்திருந்தாலும் செல்லாச்சி இன்னும் கட்டுப்பெட்டியான வாழ்க்கைத்துணை யாகவே இருந்து வருகிறாள்; என்றும் இருப்பாள்! கலைச்செல்வி எப்பொழுதோ கணித ஆசிரியரிடம் தான் படித்த சமாந்தரக்கோடு பற்றி நினைத்துப் – பார்த்தாள்.

“ஒன்றுக்கொன்று சமாந்தரமாகச் சென்றுகொண்டி ருக்கும் இருகோடுகள் முடிவிலியிலே சந்திக்கும். அதாவது அவை என்றுமே ஒன்றையொன்று சந்திக்கவோ, ஒன்றையொன்று தொடவோ மாட்டா.”

அப்படியானால் அவளும் அப்பாவும் இரு சமாந்தரக் கோடுகள்தாமா?

தமிழாசிரியர் “கோடு என்பதற்கு வளைவு என்றும் பொருள் உண்டு” என்று சொன்னதும், அவளின் நினைவுக்கு ஓடி வருகின்றது.

சமாந்தரக் கோடுகளில் ஒன்றாவது வளைந்து மற்றக் கோட்டை நோக்கி வந்தால் இரண்டும் சந்திக்க வாய்ப்புண்டு.

‘அப்பு’ என்ற கோடு என்றைக்கும் வளையப் போவதில்லை .

அவ்வாறானால்…

கலைச்செல்வி அப்பு படுத்திருந்த இடத்துக்குப் போகிறாள்.

“அப்பு! என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ, நாளைக்குச் சீலையை அவரிட்டைத் திருப்பிக் கொடுக் கிறன், அதுக்குப் பிறகு அவரோட எந்தத் தொடர்பும் வைச்சுக் கொள்ளமாட்டன்”

விம்மலும் பெருமலுமாய். அவள் சொன்னதை ஆமோதிப்பவள் போல, அடுக்களையினுள் இருந்த செல்லாச்சி, “கிணற்றடி அடுப்பிலை சுடுதண்ணி கொதிச்சுக் கொண்டிருக்கு, கலக்கிறன். குளிச்சிட்டுச் சாப்பிட வாங்கோ ” என்கிறாள்.

– ஞாயிறு தினக்குரல் (12.10.1997), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

சொக்கன் (க.சொக்கலிங்கம்) நமது நாட்டின் தமிழ் இலக்கிய உலகிலே மூதறிஞர் என்று போற்றப்படும் "சொக்கன்” (கலாநிதி கந்தசாமிச்செட்டி சொக்கலிங்கம். பிறப்பு 02-06-1930) 1944ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் “தியாகம்" என்ற வீரகேசரி சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கல்வி உலகிலே வித்துவான், M.A. பட்டங்கள் பெற்றவர். யாழ். பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ P.h.D பட்டம் அளித்தது. தமிழ் ஆசிரியராகவும் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *