கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 17,639 
 
 

ஒலிக்கலவையின் உஷ்ணத்தை மீறி ஒரு பனித்துளி மௌனம் சாவித்ரியின் நெஞ்சைக் குளிர்வித்தது. அந்த மௌனத்தில் அவளுடன் சத்யன் மட்டுமே இருந்தான். சடங்குகளின் தீவிரம் அவற்றின் அர்த்தத்தையும், அர்த்தமின்மையையும் தாண்டி எங்கோ போய்க் கொண்டிருந்தது. உறவு ஜனம், புரோகிதர், நட்புவட்டம் என்று யார்யாரோ பொறுப்பெடுத்துக் கொண்டு அவற்றை வழி நடத்திக் கொண்டிருந்தனர்.

இப்படியொரு கணம் வாழ்வில் சம்பவிக்கும் என்று நன்கு உணர்ந்து அது பற்றி உரையாடிய நாட்களில் இருவருமே பதறியதில்லை. சாவைப் பற்றி இப்போ ஏன் அமங்கலமாக…” என்று அவள் அவனை அடக்கியதும் இல்லை; அவன் அவளைக் கட்டுப்படுத்தியதுமில்லை.

“நான் முதல்ல போய்ட்டா நீ என்ன பண்ணுவே?” போன்ற அபத்த கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கவும் இல்லை. என்றேனும் ஒரு நாள் நிகழப்போகும் நிச்சயமான பிரிவை, நேருக்கு நேராகச் சந்தித்து ஏற்பதே நல்லதென்றுதான் அவர்களின் உரையாடல் பல்வேறு தினங்களிலும் வந்து முடிந்திருக்கிறது.

“கஷ்டமாத்தான் இருக்கும்! என்ன செய்ய…?” என்பான்.

“ஒண்ணும் செய்ய முடியாது!” என்று அவள் சிரித்தவாறு எழுந்து ஏதேனும் பழம் நறுக்கி வரப் போய் விடுவாள்.

இப்போது மரணம் வந்து மலர்ச்செண்டு நீட்டுகிறது. மிஞ்சியிருக்கும் அவள் தான் அதைப் பெற்றுக் கொண்டாக வேண்டும். பழம் நறுக்கி எடுத்து வர எழுந்து போய் விட முடியாது. சடங்குகள் சத்யனைச் சுற்றி வட்டமிடுகின்றன. தீபக் பொறுமையாகச் செய்து கொண்டிருக்கிறான் அனைத்தையும். பார்கவி இடைவிடாது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாள்.
மாமனாருக்காக இவ்வளவு அழுகிற மருமகப் பொண்ண நான் பார்த்ததில்ல!”

பின்னே! சொந்த மகளாட்டமில்ல கொண்டாடினார்…”மூணும் பிள்ளையா போச்சுல்லே அதான் மருமக மேல அவ்ளோ பாசம்…”

சத்யனுடன் மௌனத்தில் கைகோத்திருந்த சாவித்ரி மிருதுவாக இதழ் விரித்துச் சிரித்தாள். அவளுக்குத் தெரியும் – மூன்று பெண்களும் ஒரு பிள்ளையுமாகப் பிறந்திருந்தால் கூட சத்யன் மருமகளை மகளாகத்தான் பாவித்திருப்பான். அவனால் வேறுவிதமாக இருக்க முடியாது.

இத்தனைக்கும் பெரிய புரட்சிக்காரனல்ல சத்யன். சராசரி எதிர்பார்ப்புகளின் வலிமைக்கு ஆட்பட்டவன். கோப- தாபங்கள் நிறைந்தவன். அவளும் அவனுமாகப் போராடி அந்த முரட்டுக் கலவையை இழைத்து இழைத்து ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர். அதில் சாவித்ரியின் பங்குபெரும் பங்கு என்பதை சத்யன் ஒரு முறை சுட்டிக் காட்டினான். அவள் மறுத்தாள்.

என்னோட இயல்புபடி நான் பொறுமையாய் இருக்கேன். நீங்கதான் உங்க இயல்பை மாத்திக்க ரொம்ப உழைச்சிருக்கீங்க… உங்க முயற்சிதான் அதிகம்…” சொல்வதற்குள் அவளுக்குக் குரல் கம்மி அழுகை வந்துவிட்டது. நீர்தளும்பிய இமைகளை முத்தமிட்டு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவன்.

உழைத்து, உருகி, மேம்பட்டு, ஒன்றி வளர அவகாசம் நிறைந்த மணவாழ்வு. இளம்பருவத்தில் இணைந்து, ஏற்றத் தாழ்வுகளையும் சுகதுக்கங்களையும் பகிர்ந்து முன்னேறிய ஆண்டுகள். அந்தப் பகிர்தலில் விளைந்த நெருக்கத்தில் மனவேறுபாடுகளின் இடைவெளி குறுகி மறைந்தது. இச்சைகளும் ஏக்கமும் மெதுமெதுவே கரைந்து போய் நிறைவு கவிந்து நின்றது. இப்போது… பிரிவின் வேதனையைப் பொறுக்க அந்த நிறைவின் மடியில் தஞ்சம் புக முடிகிறது.

வாசல் பக்கத்தில் திடீரென்று சலசலப்பு அதிகரித்தது. மிகப் பெரிய கேவல் ஒலி ஒன்று மோதிக் கொண்டு வர, அதனுடன் உள்ளே நுழைந்தாள் தேவகி. ஐயோ!” என்ற கதறலுடன் சாவித்ரியை நெருங்கினாள். பேரிழப்பின் மத்தியிலும் சாவித்ரி காத்த அமைதியின் கௌரவம் தேவகிக்குச் சற்றும் புலனாகவில்லை. பின்னோடேயே வந்த பாலு அவளைப் பற்றி சாவித்ரியிடமிருந்து அகற்றினான்.

அவளை விட்டு விடும்படி மெதுவாக சாவித்ரி அவனிடம் ஜாடை காட்டிவிட்டு, அண்ணியை அருகில் சோஃபாவில் அமர்த்திக் கொண்டாள்.

கொஞ்சமாவா செஞ்சடீ! உசிரக் கொடுத்து அவருக்காகவே வாழ்ந்தியே சாவித்ரி… அதுக்காகவேனும் பூவும் பொட்டும் வாய்ச்சிருக்கணும்டீ உனக்கு! இந்தப்பாவி மனுஷன் இப்படி உன்னை அலங்கோலம் பண்ணிட்டுப் போய்ட்டானே…”

வந்திருந்த பெண்கள் மெல்ல நெருங்கி வட்டமிட்டுக் கொண்டனர். திடீரென்று தன் மீது கவனம் குவிந்து போனதை உணர்ந்தாள் சாவித்ரி. கண்ணீரும், பச்சாதாபமும் அச்சமும் ‘அடுத்து என்ன?’ என்ற இலேசானதோர் ஆர்வக் குறுகுறுப்பும் இணைந்த கலவையான வேலியொன்றின் மத்தியில் அவளை இருத்தியிருந்தனர். அப்பெண்களுள் பலர் அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தனர்.

சாவித்ரிக்கும் நெஞ்சு முட்டி அழுகை வெள்ளம் பெருகி வந்தது.
கொஞ்சம் விலகுங்க…!” உறுதியும் தீர்மானமும் தொனிக்க பார்கவி வந்தாள். பெண்கள் வட்டம் இடைவெளி ஏற்படுத்திக் கொடுத்தது.

பார்கவியைக் கண்டதும் மீண்டும் ஒரு கேவலுடன் ஆரம்பித்தாள் தேவகி. பாவி மனுஷன்! வாயும் வயிறுமா இருக்கற மருமவ பெத்துபிழைக்கறதைப் பாக்காத போய்ட்டானே…!”

ஷ்! போதும் அமைதியாயிருங்க” பார்கவி அதட்டியது உறைக்காமல் தொடர்ந்து புலம்பினாள் தேவகி.

மிக அருகே நின்ற மருமகளை ஏறிட்டுப் பார்த்தாள் சாவித்ரி. சட்டென்று அவள் காலருகே உட்கார்ந்து கொண்டாள் பார்கவி. ஆறுதலாகக் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.”அத்தை, இன்னும் கொஞ்சம் நேரம்தான். அப்புறம் கொண்டு போய்டுவாங்க. வேன் வந்துடுச்சு. நீங்க வந்து பார்க்கணும்னா பார்த்துடுங்க.”

சாவித்ரிக்கு நெஞ்சு நொறுங்கிப் போயிற்று. என்ன செய்வதென்று புரியவில்லை. சுற்றிலும் அழுது அரற்றும் கூட்டத்தின் மத்தியில் எழுந்து போய் சத்யனைப் பார்க்கப் பிடிக்கவில்லை. மிகமிக அந்தரங்கமான தனது துக்கத்தைக் காட்சிப் பொருளாக்குவது, சத்யனுக்குதான் இழைக்கும் முதலும் கடைசியுமான துரோகமாகிப் போய்விடாதோ!

நான் வேணா இவங்க எல்லாரையும் கொஞ்சம் நேரம் வெளியே அனுப்பிடறேன்” தனது கையைப் பற்றிய பார்கவியின் கை இலேசாக நடுங்குவதை உணர்ந்தாள் சாவித்ரி. மெல்ல விரல்களை விடுவித்துக் கொண்டு மருமகளின் நெற்றியை வருடிக் கொடுத்தாள். தலையை மட்டும் இடம்வலமாக அசைத்து தமது மறுதலிப்பைச் சொன்னாள்.

வாய்க்கரிசி போடறவங்கள்லாம் வாங்கோ” – துயரின் கனத்தைப் புறங்கையால் ஒதுக்கும் யதார்த்தத்துடன் ஓங்கி ஒலிக்கும் குரல். பெண்களெல்லாம் வாசல் நோக்கிச் செல்ல, நில்லுங்க! ஏங்க, அந்தப் புடைவையைக் கொண்டாங்க இப்படி…” என்று தம் கணவனை நோக்கிச் சைகைகாட்டிச் சொல்கிறாள் தேவகி.

பிரபல ஜவுளி நிறுவனத்தின் கேரிபாக்கை மாறி கைமாறி அவளிடத்தில் வந்து சேர்கிறது.
சங்கராந்தி கார்த்திக்குச்சீர் செஞ்சகையாலே இத்தையும் செய்ய வச்சுட்டானே அந்த ஈசுவரன். தெய்வமே! சாவித்ரி! அடியே நெஞ்சு நோகுதுடீ!” புலம்பியவாறு புடைவையை உறையிலிருந்து எடுக்கிறாள் தேவகி.
வாசல் நோக்கிச் சென்ற பெண்கள் கூட்டம் நின்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொங்கும் விழிகளும் சிந்தியமூக்குமாக ஒரு வண்ணக்கலவை நிற்பது சாவித்ரிக்குத் தெரிகிறது.

“இது என்ன அண்ணி…?”

முதல் முறையாகவாய் திறந்து பேசுகிறாள் சாவித்ரி.
பிறந்த வீட்டுப்புடைவை போடணும். முக்கியமானசடங்கு…” யாரோ பதில் சொல்கிறார்கள்.

தேவகி, அந்தப் புதுச்சேலையை எடுத்துக்கொண்டு அருகே வருகிறாள். அழகான வெள்ளையில் சிவப்புக் கரையிட்ட பருத்திச் சேலை.

“எதுக்கு அண்ணி இதெல்லாம்?”

“மாமி! மாமி! இருங்க…” வாசல் பக்கம் சென்ற பார்கவி பதறிக் கொண்டு ஓடி வருகிறாள். புதுப்புடைவையை தேவகியின் கைகளிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொள்கிறாள்.

“சும்மா இருங்க! அவங்களைக் கொஞ்சம் நிம்மதியா விட மாட்டீங்க!” தேவகியின் முகம் அதிர்ச்சியில் பேயறைந்தாற் போல் மாறுகிறது.

“பார்கவி!” கம்பீரமாக இடைமறிக்கும் குரல் சாவித்ரியினுடையது. அந்தப் புடைவையை மடிச்சுக் கொண்டு போய் என் பீரோலவை.”

“விடுங்க அண்ணி!” தேவகியைச் சமாதானம் செய்ய முற்படுகிறாள்.

“அம்மா! உள்ளேயிருக்கற லேடீஸ்லாம் கொஞ்சம் வர்றீங்களா…?” வெளியேயிருந்து அதட்டலாக மீண்டும் அழைப்பு.

கசமுசவென்று பேசியபடி நகரும் பெண்களில் சிலர் அவ்வப்போது திரும்பி தேவகியையும் சாவித்ரியையும் பார்த்துப் பார்த்துச் செல்கின்றனர்.

திடீரென்று ஆவேசமாகக் குரலெழுப்புகிறாள் தேவகி. “நல்லது கெட்டதுக்கு மதிப்பில்லாம போச்சு இந்த வீட்டுல! மாஞ்சு மாஞ்சு செய்யணும்னு புடைவை வாங்கிட்டு வந்திருக்கோம். இப்படி உதாசீனமா நடத்தறீங்க மாமியாரும் மருமகளும்…”

“ஏ தேவகி! வாயை மூடு!”

மனைவியை நோக்கிப் பாய்ந்து வரும் அண்ணனை சாவித்ரிதான் தடுத்து நிறுத்துகிறாள்.

“நான் அப்பவே சொன்னேன் சாவித்ரிக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு… இந்தப் பிடிவாதக்காரி கேட்டாத்தானே.”

“விடுங்க அண்ணே! சும்மாயிருங்க… இதோ பாருங்க அண்ணி! அவரும் நானுமா இணைஞ்சு நடத்தின வாழ்க்கையிருக்கே… அதுவே ஊடும்பாவுமாய் இருந்து எனக்குப் பாதுகாப்பை, தெம்பை, தைரியத்தைத் தரும்… அது போதும்; கோடி புடைவையெல்லாம் இந்த நேரத்துல வேணாம்…”

பிறந்த வீட்டு ஆதரவுக்கு அடையாளம் டீ அந்தப் புடைவை… புரியாம பேசறே… இது ஆகாது…” தேவகி விடுவதாயில்லை.
அழுதுகிட்டே கொண்டாந்து போடறது ஆதரவுக்கா அண்ணி? இல்லே இன்னியோட உன் அந்தஸ்து மாறிப் போச்சு, நீ சுமங்கலி இல்லேன்னு அடையாளப்படுத்தறதுக்கா…?”

அதிர்ந்து நிற்கும் தேவகியின் கண்களில் மிகுந்த குழப்பம். அதிலே குற்ற உணர்வின் கள்ளத் தனமும் கலந்து கிடப்பது தெரிகிறது. புடைவையை உள்ளே வைத்துவிட்டுத் திரும்பும் பார்கவி, மாமியாரை நெருங்கி நின்று கொள்கிறாள்.

“அப்போ அந்தப் புடைவையை என்ன தான் செய்வீங்க…?”

“ஒரு நல்ல நாளா பார்த்துப் பிரிச்சு உடுத்திக்கறேன். எங்க கல்யாண நாள் வருமில்லே, அப்போ உடுத்திக்கிறேன்.”

வெளியே சத்யனின் உடலை வேனில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். உடலை மட்டும்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *