கொடிது, கொடிது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 4,159 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“ஏய், விளையாட்டில் ஜெயிக்கிறவன் மற்ற எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கணும். ஆமா” என்று கத்தினான் ஆத்ம கிருஷ்ணன்.

ஆமா, ஆமோ ஆமா’ என்று கூப்பாடு போர்ட்டார்கள் மற்றவர்கள் முருகையா குதிக்கவுமில்லை; கூப்பாடு போடவுமில்லை. எனினும் அவனும் விளையாட்டில் கலந்து கொண்டான்.

ஓட்டப் பந்தயம் மும்முரமாக நடந்தது. முருகையா தான் முதலில் வருவான் என்று அநேகர் எண்ணினார்கள். ஏமாந்தார்கள். எல்லோரையும் ஏமாற்றிவிட்டான் அவன். இரண்டாவதாகத்தான் அவன் வந்தான்.

“கொஞ்சம் மூச்சுப்பிடித்து ஓடியிருந்தால் நீ முதல்லே வந்திருக்கலாம் முருகையா!” என்று அவனுடைய நண்பன் சுந்தரம் சொன்னான்.

“நான் சுலபமாக முதலில் வந்திருக்க முடியும். மூச்சைப் பிடிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை” என்று அவன் உள்ளம் சொல்லியது. அவனுடைய உதடுகள் இறுக மூடிக் கிடந்தன. அவற்றிடையே அசட்டுச் சிரிப்பு கூட மின்கோடிட்டு மறையவில்லை.

“முதல்லே வந்தால் எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கணுமே என்று பயந்து விட்டான் அவன். அதனால்தான் அவன் பின் தங்கிவிட்டான்” என்று குறும்பாக மொழிந்தான் பாலு.

அதில் உள்ள உண்மை முருகையாவின் இதயத்தைத் திருகியது. அவன் முகம் கறுத்தது. கூரிய கருமணிகள் நீந்தும் அவன் கண்கள் பனித்தன. அவனுக்கு அழுகை வரும் போல் தானிருந்தது. ஆயினும் அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.

“சீ போடா!” என்று பாலுவைச் சீறினான் ஆத்ம கிருஷ்ணன். “நான் சும்மா சொன்னேன்” என்று பாலு இழுத்தான்.

விளையாட்டில் வெற்றிபெற்ற தாமோதரன் மிட்டாய் வாங்கி வந்தான். எல்லோருக்கும் கொடுத்தான். முருகையாவின் மனம் ஆசைப்பட்டது. அவன் கை முன்னே நீளத் தயங்கியது. “ஊம். சும்மா வாங்கிக்கொள், முருகா. பாலு சொன்னானே என்பதற்காக வருத்தப்படுகிறாயா?” என்றான் தாமு.

“ஊகுங். எனக்கு வேண்டாம்” என்று தயங்கித்தயங்கிச் சொன்னான் முருகையா.

முடிவில் அவனும் வாங்கிக் கொண்டான். ஆசை அடங்கி ஒடுங்கிவிட இசைந்தாலும், மற்றப் பையன்கள் அவனை சும்மா விட்டுவிடுவார்களா?

அன்று முதல் அது வழக்கமாக வளரலாயிற்று. விளையாட்டில் வெற்றி பெறுகிறவன் எல்லோருக்கும் தின்பண்டம் “சப்ளை” செய்ய வேண்டும் என்று ஒரு விதி செய்தார்கள். அதை ஒவ்வொரு நாளும் காப்பாற்றினார்கள்.

சுந்தரம் பாண்டி விளையாட்டில் ஜெயித்தபோது “பெப்பர் மிண்ட்” வாங்கிக் கொடுத்தான். பெரிய வீட்டுப் பையனான பாலு அனைவருக்கும் சாக்லெட் சப்ளை பண்ணினான். ஒருவன் வேர்க் கடலை வாங்கித் தந்தான். இப்படி நாள்தோறும் எல்லோருக்கும் ஏதாவது தின்பண்டம் கிடைத்து வந்தது.

முருகையாவும் சின்னப் பையன்தானே! விதம் விதமான பண்டங்களைத் தின்ன வேண்டும் என்கிற ஆசை அவனுக்கும் இருந்தது. வீட்டில் கேட்டால் காசு கிடைக்காது. விளையாட்டிலோ ஆடிக்களிக்கும் இன்பமும் கிட்டியது; தின்பண்டமும் கிடைத்தது ஆகவே அவனுக்கு மகிழ்ச்சிதான்.

“ஏ ஏய்! ஒரு விஷயம் கவனித்தாயா? முருகையா தினம் தோற்றுக் கொண்டே இருக்கிறான். ஜெயிக்காமல் இருப்பதற்கு அவன் பாடுபடுவதாகவே தோன்றுகிறது” என்று ஒருநாள் ஆத்மகிருஷ்ணன் குறிப்பிட்டான்.

“நான் தான் அன்றைக்கே சொன்னேனே! அவன் ஜெயித்து விட்டால் எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக் கொடுத்தாகணுமே. அந்தப் பயம் தான் காரணம்” என்று பாலு சொன்னான். தனது கட்சி சரி என்பதில் அவனுக்கு எவ்வளவோ பெருமை!

அவன் சொல்வது உண்மை என்று அவனுடைய சிநேகிதர்கள் ஆமோதித்தார்கள்.

“பாவம், ஏழைப் பையன்” என்று சுந்தரம் சொன்னான்.

“அதுக்காக நம்மை அவன் ஏமாற்றலாமோ? முன்பெல்லாம் ஓட்டப் பந்தயத்தில் அடிக்கடி அவன் தான் முதலில் வருவான். இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும்படி கவனித்துக் கொள்கிறானே!”.

“சடுகுடு விளையாட்டில் அவன் தான் கடைசிவரை பிடிபடாமல் இருப்பான். இப்ப என்னடான்னா சீக்கிரமே அகப்பட்டுக் கொள்கிறான்.”

இப்படி ஆளுக்கு ஒன்று சொன்னார்கள். “நாம் கொடுப்பதை மட்டும் வாங்கி மொக்கி விடுகிறான்!” என்று குறை கூறினான் பாலு. அவன் பெரிய வீட்டுப் பையன் தான். ஆயினும் அவனுக்கு “சின்னப்புத்தி” அதிகம்.

முருகையா இல்லாத போது தான் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவன் செயலைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு திட்டமும் வகுத்தார்கள்.

“இன்றைக்கு வெறும் விளையாட்டு தான். யாரும் யாருக்கும் எதுவும் சப்ளை செய்ய வேண்டியதில்லை” என்று தன்னைத் தானே “தளபதி”யாக நியமித்துக் கொண்ட ஒருவன் அறிவித்துவிட்டான்.

அன்று முருகையா உற்சாகமாக விளையாடினான். வழக்கமான தீவிரத்துடன் கலந்து சில விளையாட்டுகளில் முதன்மை பெற்றான். அவன் திறமைசாலிதான். அதில் யாருக்குமே சந்தேகம் கிடையாது.

“ஏது முருகையா, இன்று நீ தோற்கவே இல்லையே” என்று பாலு கேட்டான்.

முருகையா பதில் பேசவில்லை.

“அவன் தோற்க வேண்டுமா? ஜெயித்தவன மிட்டாய வாங்கித் தரணும் என்று சொல்லுங்கள் அப்ப ஐயாப்பிள்ளை லாஸ்டிலே பஸ்டு ஆகிவிடுவாரு. அதுக்கு வேண்டிய முயற்சிகளை செய்வாரு” என்று கேலி பேசினான் பாலுவின் தோழன்.

இவ்விதம் பேசிப் பேசி வம்புச் சண்டை வளர்த்து விட்டார்கள் அவர்கள்.

“ஏ எச்சிப் பொறுக்கி!” என்றான் பாலு.

“ஒட்டுப் பொறுக்கி! நட்டுவாக்காலி!” என்று பள்ளிக்கூடத்து வாய்ப்பாட்டு ராகத்திலே நீட்டி இழுத்தான் அவன் தோழன்.

முருகையாவும் என்னவோ சொல்ல, சிலர் அவன் முதுகைப் “பதம் பார்த்து” அனுப்பி வைத்தார்கள். அவன் அழுது கொண்டே போனான்.

அவன்பட்ட அடிகள் அவனுடைய உள்ளத்தைச் சுடவில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டின் உண்மைதான் அவன் மனசை வாட்டியது. அவன் குடும்ப நிலைமை அவனது உள்ளத்தைத் தகித்தது.

முருகையாவின் தந்தை பலவேசம்பிள்ளைக்குப் பணம் என்கிற விஷயம் எப்பொழுதும் “தூரத்துப் பச்சையாகவே இருந்தது. அவரும் ஏதேதோ தொழில்கள் செய்து பார்த்தார். ஓடி ஆடி முயற்சி செய்தார். வஞ்சனை இல்லாமல் உழைத்து வந்தார். கிடைக்கிற காசு சாப்பாட்டுச் செலவுக்குக்கூடப் பற்றாமல் தானிருந்தது. சில தினங்களில் அவர்கள் வீட்டு அடுப்பு புகையாமலே இருந்து விடுவதும் உண்டு அன்றைக்கு வெறும் பொரி கடலையைத் தின்று தண்ணீரையும் குடித்து வயிற்றை ரொப்பிக் கொள்வார்கள்” அவர்கள். பல நாட்களில், “சோறு கண்ட மூளி யார், சொல்” என்று கோயில் சிலையைப் பார்த்துக் கேட்ட கவிராயனுக்குப் பக்க பாட்டுப் பாடக் கூடிய அந்தஸ்து பெற்றவர்களாகத்தான் இருந்தனர் அக் குடும்பத்தினர்.

“கொடிது கொடிது வறுமை கொடிது” என்கிற ஏட்டுப் படிப்பின் உண்மையை நாள்தோறும் நன்கு உணர்ந்து வந்தான் முருகையா அறியாத வயசில் அவன் அழுது அடம்பிடித்துத் தன் ஆசைகளை நிறைவேற்ற முயன்றான். ஆசாபங்கத்துடன் அறைகளும்தான் அவன் பெற்ற பலன்களாகும். நாளாக ஆக அவனும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை நிலையை உணர்ந்து கொண்டான். அதற்கேற்ப நடந்துகொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு இருந்தது. இயல்பாகவே அவன் நல்ல புத்திசாலிதான்.

படிப்பிலும் கெட்டிக்காரன் அவன். விளையாட்டில் தோல்வியுற முயற்சித்து அடிகள் வாங்கிக்கொண்ட பிறகு அவன் மற்றவர்களோடு சேர்ந்து விளையாடப் போவதை விட்டு விட்டான். தெருப் பையன்களோடு கோலியும், சடு குடும் பிறவும் விளையாடி மகிழ்ந்தான். அல்லது படிப்பில் ஈடுபட்டான்.

முருகையா பரீட்சையில் தேறிவிட்டான். “மேல் வகுப்புக்குப் போகிற” உற்சாகம் அவனை ஆட்கொண்டது. அந்த சந்தோஷ சமாச்சாரத்தை அம்மா அப்பாவிடம் சொல்வதற்காக ஓடோடி வந்தான் அவன்.

பலவேசம் பிள்ளைக்கு அன்று “மூடு” சரியில்லாத நிலைமை. காரணம் என்னவாக இருக்கும், தெரியாதா? கையில் காசு இல்லை. வீட்டில் அரிசி இல்லை; விறகு இல்லை; எதுவுமே இல்லை. அடுப்பிலே புகையவேண்டிய நெருப்பு அவர் வயிற்றில் திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தது; நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. அவருடைய மனைவி குறை கூறி ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு, ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டாள். ஒரு பீடிக்குக்கூட வக்கு இல்லாத நிலையை எண்ணிக் குமைந்து புழுங்கிக் கொண்டிருந்தார் பிள்ளை.

“அப்பா, நான் பாஸ்! பாஸாகிவிட்டேன் என்று உவகைக் கூச்சலோடு துள்ளி வந்தான் முருகையா. தந்தை சும்மா இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்த அவன் மீண்டும் கத்தினான். “நான் பாஸ் அப்பா. எட்டாம் கிளாசுக்குப் போய்விட்டேன்” என்று குதித்தான்.

பலவேசம்பிள்ளை திடீரென்று எழுந்தார், தரையிலிருந்து பொங்கி எழும் சூறைக்காற்று போல. அவனை முரட்டுத்தனமாகப் பற்றினார். “நீ ஏண்டா பாசானே? அதுக்கு ஏமிலே இந்தக் குதிப்பு? உனக்கு ஏன்லேய் படிப்பு? நீ படிச்சு என்னத்தை வெட்டி முறிக்கப் போகிறே? சோத்துக்குச் சம்பாதிக்கத் துப்பு உண்டாலே உன்படிப்பினாலே?” என்று கூச்சலிட்டுக்கொண்டே அவனை அறைந்தார்.

“பையன் படிச்சுப் பாஸ் பண்ணி எல்லோருக்கும் சோத்துக்கு வழி செய்துவிடப்போகிற மாதிரித்தான்! குதிப்பும் கூப்பாடுமாக வீட்டுக்கு வந்துவிட்டான்” என்று உறுமிக்கொண்டு மேலும் இரண்டு அறை வைத்தார் தந்தை.

இத்தகைய வரவேற்பை முருகையா எப்படி எதிர்பார்த்திருக்க முடீயும்? அடியின் வலியும், உள்ளத்து வேதனையும் சேர்ந்து அவனை விக்கிவிக்கி அழச் செய்தன.
உள்ளே இருந்து வெளியே எட்டிப் பார்த்த தாய், பலவேசம் பிள்ளையின் ஆங்காரம் ஒருவாறு ஒடுங்கியதும் பேச்சு கொடுக்கத் துணிந்தாள். “பாவம், அவனை ஏன் இந்த அறை அறையணும்? படிப்பிலே தேறினது ஒரு குத்தமா?” என்று கேட்டாள்.

அவர் அவளை முறைத்துப் பார்த்தார். “தினசரி சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்குது வீட்டிலே. இன்னையப் பொழுது எப்படிடா கழியுமின்னு மனுசனுக்குப் பெரிய கவலையாக இருக்கையிலே, அந்தப் பயல் துள்ளிக் குதிச்சுக்கிட்டு வாறானே! மேல் கிளாசுக்குப் போயாச்சு, புதுப் பொஸ்தகம் வாங்கணும். நோட்டுகள் வாங்கியாகணும். பேனா பென்சில், லொட்டு லொசுக்குயின்னு ஏகப்பட்டது வாங்கணும், பணம் கொண்டு வா என்பானே. பையனுக்கு நல்ல சட்டை இல்லை ; வேட்டி இல்லை. மேல் கிளாசுக்குப் போய்விட்ட உடனேயாவது அதற்கெல்லாம் ஏற்பாடு பண்ணணுமா, வேண்டாமா? பணத்துக்கு நான் எங்கே போவேன்? இதை எல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்க அவன் குதியாட்டம் போடுகிறானே!” என்று புலம்பினார் அவர் வறுமைத் தீயில் வதங்கிக் கொண்டிருந்த அந்தத் தாயினால் சோகப் பெருமூச்சுதான் உயிர்க்க முடிந்தது.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது.

பலவேசம் பிள்ளையின் உள்ளத்தில் புகுந்து அவரைப் பேயாக மாற்றியிருந்த ஆத்திரமும் கோபமும் ஒடுங்கிப் போயின. அவருள் குடிகொண்டிருந்த இயல்பான நல்லதனம் அவரைக் கஷ்டப்படுத்த ஆரம்பித்தது. சுவர் ஓரத்தில் கிடந்து விம்மிக் கொண்டிருந்த பையனைக் காணக்காண அவர் மனசில் ஏதோ ஒன்று என்னவோ பண்ணியது. அவனை – அவன் செய்யாத குற்றத்துக்காக – “பழியாக அறைந்தது” பிசகு என்ற உணர்வு குறுகுறுத்தது. அவர் அவன் அருகே போய் உட்கார்ந்து பரிவுடன் அவனுடைய முதுகை வருடினார். “கொடுமை, கொடுமை” நாம் இப்படி வாழ நேர்ந்து விட்டதே பெரிய கொடுமைதான்” என்று அவர் முணுமுணுத்தார். அவர் கண்களில் கூட நீர் மல்கியது. தனது பலவீனத்தை மற்றவர்கள் கண்டு கொள்ளக்கூடாதே என்ற பரபரப்போடு எழுந்து வெளியே போய்விட்டார் பிள்ளை.

முருகையா அழுதுகொண்டே இருந்தான். விளையாட்டில் தோல்வியுற்று அடிபட நேர்ந்ததும், படிப்பில் வெற்றி பெற்றும் அடி தின்ன” நேர்ந்ததும் வாழ்வின் வேடிக்கைகளாகப் படவில்லை அவனுக்கு. வேதனைகளாகத் தான் உறைத்தன. தந்தை அடித்தது அவன் பிஞ்சு உள்ளத்தில் வடு உண்டாக்கியது. அவர் அன்புடன் தடவிக் கொடுத்ததும், துயரத்தோடு முனங்கியதும் அவனுடைய இளம் உள்ளத்தில் இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு வேதனையையே புகுத்தின. எனவே அவன் அழுது கொண்டே கிடந்தான்.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *