கொங்கு கிராமியக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 10,620 
 
 

ஒரு ஊர்ல சின்னச்சாமின்னு ஒரு விவசாயி இருந்தானாம். அவுனுக்கு வெகு நாளா பொண்ணு அமையாம சடுதிக்கி பக்கத்தூர்ல ஒரு பொண்ணு அமைஞ்சு அவளை கட்டிக்கிட்டானாம். கலியாணம் பண்டி ரெண்டு நா மாமியா வூட்டுல இருந்துட்டு மூனா நாளு புதுப்பொண்டாட்டிய கூப்டுட்டு அவன் ஊருக்கு கெளம்பிட்டானாம் கால்நடையா.

வழியில காடு தோட்டம் வரப்புல புதுப்பொண்டாட்டிய பாத்து வரச்சொல்லி கூட்டிட்டு வந்தானாம். ஊருக்கு வர்ற வழியிலே மாமரம் ஒன்னைக் கண்டு அதோட நெழல்ல சித்த க்கோந்துட்டு போலாம் பிள்ளைன்னு சித்த நேரம் க்கோந்திருந்தாங்க! அப்ப புருசங்காரன் சின்னச்சாமி புதுப் பொண்டாட்டிகிட்ட, ‘இது என்னாடி மரம்?’மின்னு கேட்டான். அதுக்கு அவொ சொன்னா, ‘எனக்கா தெரியும் நானே சின்னப்புள்ள!’ அப்பிடின்னா.

இதென்னடா இப்புடிச் சொல்றாளே இவொன்னு ஒரு கொழப்பத்துல சின்னச்சாமியும் மரத்தடியில கெடந்தது போதும்முன்னு அவளை கூட்டீட்டு கெளம்பிட்டான். உச்சி வெயில் மண்டையப் பொழக்குது அப்ப! இருந்தாலும் ஊரு போயிச் சேரணுமில்ல அவிங்க ரெண்டு பேரும் இருட்டு கட்டுறக்குள்ள! வழியில மருத மரத்தப் பாத்து புதுப்பொண்டாட்டி கிட்ட, ‘இது என்னாடி மரம்?’ அப்பிடின்னான். அவொ மறுக்காவும்,’எனக்கா தெரியும் சின்னப்பிள்ளைக்கி’ அப்படினுட்டா!

ஒரு விசயமும் தெரியாத பிள்ளையக் கட்டீட்டு வந்துட்டமோன்னு சின்னச்சாமிக்கு கொஞ்சூண்டு வருத்தமாவும் இருந்துச்சு! கொஞ்சம் தூரம் அவங்க வந்ததும் ஒரு ஊரைத் தாண்டினாங்க! அங்க ஒரு மாதா கோவில் இருந்துச்சு! அதைப் பார்த்துட்டு சின்னச்சாமி மறுக்காவும் இவளுக்கு இதாச்சிம் தெரியுமான்னு பாக்கலாம்னு, ‘ஏம் புள்ள இதூ என்னா?’ னு கேட்டான். அதுக்கும் அவொ,’எனக்கென்ன தெரியு சின்னப்புள்ளைக்கி!’ அப்பிடினுட்டா. வழியில தென்னை மரங்கள் வரிசையா ரோட்டோரத்துல நின்னுட்டு இருந்துச்சு. கம்முன்னு இருக்காமெ சரி இதாச்சிம் தெரியுதா இவளுக்குன்னு பாப்பமேன்னு அதையும் என்னான்னு கேட்டான். மறுக்காவும் அதே பதிலைத்தான் அவொ சொன்னா. ‘எனக்கா தெரியும் சின்னப்புள்ளைக்கி!’ அப்புறம் காட்டுல ஒரு பெரியவரு ஏர் உழுதுட்டு இருக்கிறதைக் காட்டி இது என்னா? அப்படின்னான். ‘எனக்கா தெரியும் சின்னப்பிள்ளைக்கி!’ அப்படின்னுட்டா!

அவனோட ஊருக்கு இன்னும் மூனு மைலு நடக்கோணும். கடேசியா ஒரு ஆத்தங்கரையோரத்துல அவுங்க ரெண்டு பேரும் நடந்துட்டு இருந்தாங்க! அப்ப புதராட்டும் ஊனாங்கொடி படர்ந்து கெடந்துச்சு அங்க! அதைப் பார்த்த சின்னச்சாமி அதுக என்ன பிள்ளை? அப்படின்னு கேட்டான். அந்த மவொ மறுபடியும் அதே மாதிரி சொல்ல இவுனுக்கு கோவம் தலைக்கு ஏறிடுச்சு. ஊனாங்கொடியை இனுங்கி அவ சூத்தாம்பட்டையில நாலு இணுங்கு இணுங்கினான். அந்த மவொ அடிக்காதீங்க மாமா அடிக்காதீங்க மாமான்னு குதியா குதிக்கிறா! அப்படியே பாட்டு ஒன்னு படிக்கிறா!

“மாமரொ மருதமரொ
மாதா கோயில் தென்னமரோ
ஏர் உழுறது வேலாங்கலப்பெ
என்னையடிக்கிறது ஊனாங்கொடி”

அப்படின்னு அழுதுட்டே வரிசையா அமட்டையுஞ் சொல்றா அந்த மவொ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *