தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 8,870 
 

எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத் தாடி, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயதானவர்கள், வசதியானவர்கள், ஆடைகளில் பளபளக்கிறவர்கள், பஞ்சைகள், பராரிகள் என ஏக இந்தியாவின் மிகச் சரியான சித்திரமாய் அந்த இரயில் நிலையத்தின் பெரிய ஹாலில் ஒற்றையாய் – கும்பல் கும்பலாய் – சிதறி சிதறி – ஓட்டமும் நடையுமாய் பயணிகள் பர பரத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஹாலை நிறைத்திருந்த சத்தம் மனித காதுகளுக்கு பழகிப் போன இசையாய்ப் பரிணமித்திருந்தது. இந்த இரைச்சலுக்கு மெருகூட்டும் சுதியைப் போல உள்ளே நடைமேடைகளைக் கடந்து செல்லும் இரயில்களின் “பூம்’ என்கிற ஹார்ன் ஒலி அவ்வப்பொழுது எழுந்து அடங்கியது. இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டின் உத்தரவாதத்திற்கு உறுதியாக இரயில்களின் வருகை-புறப்பாடுகளை கட்டியம் கூறும் அறிவிப்புகள் மும்மொழிகளில் அவ்வப்பொழுது அணி வகுத்து முழங்கின. மாநகரத்தின் ஓர் இயல்பான வார நாளின் சர்வ அலங்காரத்துடன் அந்த இரயில் நிலையம் கல கலத்துக் கொண்டிருந்தது.

கோடுகள்

டிக்கெட் கவுண்டர்களுக்கு முன்பாக வளைந்து நெளிந்து பாம்பின் வால் போல வரிசை. இந்த மாநகரத்தின் இடை விடாத பிரமிப்பான இயக்கத்திற்கு தானும் ஒரு முக்கிய அம்சம் என்கிற பிரேமை நோய்க்கு ஆளாகி இயங்கி இயங்கி இயந்திரமாய் உருமாறி தன் அடையாளம் தொலைத்த எத்தனையோ புறநகர்வாசிகளுள் ஒருவனான ஜெகனும் தன்னை வரிசையில் சேர்த்துக் கொண்டான். வழக்கமாய் ஐந்து அல்லது ஆறு வரிசைகள் அந்த ஹாலை நிறைத்திருக்கும். இன்று மொத்தமே மூன்று வரிசைகள்தான் எனவே வரிசையின் நீளமும் அதிகம்தான். கைக்குட்டையை எடுத்து முகத்தில் அரும்பியிருந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டான். மலையேறப் போகிறவனை போல, பின்னாலிருப்பவர்கள் – அடுத்தவர்கள் பற்றி எவ்விதத்திலும் சட்டை செய்யாத, தன் வசதி மட்டும் முன்னிருத்தும் நாட்களின் அடையாளமாய், நாகரீகமாய் முதுகின் வேர்வையில் ஒட்டியிருந்த அந்த பையின் வார்களை ஒரு முறை இழுத்துவிட்டு பார்வையை முன் செலுத்தினான். காத்திருப்பது ஒரு ரணம். இந்த வரிசைகளில் நிற்கிற சிலருக்கு இப்படி காத்திருப்பது அனிச்சை செயலாகவே மாறியிருக்கும். இது போன்ற தவிர்க்க இயலாத கட்டாய காத்திருப்புகளின் போதுதான் மனித யதார்த்தங்களின் அழகு வெளிப்படும். ஆர்வமில்லாமலும் சோம்பலிலும் தள்ளிப் போட்ட எத்தனையோ வேலைகள் எல்லாம் இப்பொழுதுதான் இங்கு காத்து கிடப்பதற்கு அதை முடிக்கலாமே, இதை முடிக்கலாமே என்று கண் முன் வந்து நிற்கும். முழு மனித வாழ்வுமே ஒரு காத்திருப்புதான் என்பது உரைக்காமல், கனவோடைகளின் கானலாக மனம் பரபரக்கும்.

ஜெகன் இரயில்வேயின் தினசரி வாடிக்கையாளன் அல்ல. இருக்கையில் அமர்ந்து செல்வதற்கும், புறப்படும் பரபரப்புகளின் சிறிய தாமதங்களும் தடையாகாமல் உத்தரவாதமாக்கும் ஒரு வேனில்தான் அவனது தினசரி அலுவலகப் பயணம். எப்பொழுதாகிலும் அலுவலகம் செல்வதற்கு முன் ஏதாகிலும் சொந்த வேலைகள் இருந்தால் மாத்திரமே வேன் பயணம் தடைபடும். அப்படி ஒரு கட்டாயத்தில்தான் இன்றைய இந்தக் காத்திருப்பு. வரிசை நகர்வதாகத் தெரியவில்லை. முன்னும் பின்னும் – இவர்களை யார் கேட்பது? என்ன செய்வது? இன்னொரு கவுண்டர் போட்டுத் தொலையலாம் – என்கிற இது போன்ற தருணங்களில் எழும்புகின்ற முணுமுணுப்புகள் தொடங்க ஆரம்பித்தன.

சற்று தள்ளி கொஞ்சம் முன்னால் இரண்டு மூன்று இளைஞர்கள் அந்த வயதுக்கேயுரிய கேலி கிண்டல்களுடன் – “”மாப்ளே இன்னிக்கு கத பொங்கல்தான் – தலைவர் படத்துக்கே இப்படி காத்துக் கிடந்ததில்ல – அகஸ்துமாத்தா இப்படி மாட்டிகிறோம் – என்னன்னுதான் கேளேன்” – என்று தன் சகாவை உசுப்ப அவன் வரிசையை விட்டு விலகி கவுண்டரை நோக்கி நகர்ந்தான். கவுண்டரின் முன் ஏற்கெனவே எப்பொழுதும்போல் இருபுறமும் இடை செருகும் கூட்டம் அடை போல் அப்பிக் கொண்டிருந்தது. ஒரு மத்திய வயதுக்காரர் வரிசையை விட்டு விலகி முணுமுணுத்துக் கொண்டே முன்னேறினார். கவுண்டரின் முன் சத்தம் கூடியிருந்தது. ஜெகனும் தனது கடமையை ஆற்றியே தீர வேண்டும் என்ற உந்துதலில் முறையிடுபவர்களின் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள கவுண்டரை நோக்கி நகர்ந்தான். ஜெகன் கவுண்டரை நெருங்குவதற்கும் உள்ளே இருந்த அந்த ஊழியர் ஸிஸ்டம் ஃபெயிலியர்

பலகையை வைப்பதற்கும் சரியாக இருந்தது.

முதலில் வந்த இளைஞன் உரத்த சத்தத்துடன், “”இத முதல்லயே வச்ருக்றதுதான? தலயெழுத்தா நாங்க இவ்ளவு நேரம் காத்திருக்க” – என்று முறைக்க, அந்த மத்திய வயதுக்காரரோ “”ஸார் யூ ஷுட் ஹேவ் சம் கன்சிடெரேசன் ஹெü குட் யூ வேஸ்ட் அவர் டைம்?” என “”எங்கள் நேரத்தை நீங்கள் எப்படி விரயம் செய்யலாம்” என ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினார்.

உள்ளே இருந்த அந்த ஊழியர் எத்தனை ஃபெய்லியர்களை பார்த்திருப்பார். தனது முப்பத்தெட்டு வயதில் பத்து வருட இரயில்வே அனுபவத்தில் – அந்த சுழற்சியின் வெகு ஸ்வாரஸ்யமான, ஆனால் நடப்பில் மிகவும் இறுகிப்போன – கவுண்டருக்கு முன்னால் தரிசித்த வித விதமான மனித முக விலாசங்கள், வெளியே அந்த ஹாலின் மனித இரைச்சல், பணத்தாள்கள், சில்லறைகள், இயந்திரம், டிக்கெட்டுகள், அவசரங்கள், கோபங்கள், தாபங்கள் என்று பழகிப் போய் நீர்த்துப் போன நிதானத்தின் ஏக அடையாளமாய் தனது பேன்ட் பையிலிருக்கும் கைக்குட்டையை எடுத்து தன் கண்ணாடியை நிதானமாகத் துடைத்து மறுபடியும் மாட்டிக் கொண்டு, பெரியவரைப் பார்த்து – அந்த இளைஞனை அவர் சட்டை செய்ததாக தெரிய வில்லை –

“”உங்களை காக்க வைப்பது எங்களுடைய ஆசையில்லை என்னிடம் கோபப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை, வேண்டுமென்றால் பின்னால் என் சூப்ரிண்டென்டை பாருங்கள்” என்று பதில் சொல்லிவிட்டு திரும்பியபோது, அந்த ஊழியருடைய அந்த சலனமற்ற எதிர் வினை ஜெகனுக்குள்ளே மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.

“”ஸார் இதைச் சொல்வதற்கு இல்லை நீங்கள் இங்கே இருப்பது } இன்னும் கூட பொறுப்புள்ள பதில் வேண்டும்” என்று அந்த இரண்டாவது ஸ்டேட்மெண்ட்டை ஆங்கிலத்தில் உதிர்த்தான். கோபம் வந்தால் கூடவே ஆங்கிலம் தொற்றிக் கொள்கிற ஜாதி ஜெகன். அதில் நெறி பிறழாத சில வசதிகளும் ஒரு சிறிய அங்கீகாரமும் இருப்பதாலோ என்னவோ சிலரைப் போல ஜெகனுக்கும் இந்த சினத்தின் ஆங்கிலம் அவ்வப்பொழுது கை கொடுக்கும். அந்த ஊழியர் ஒரு சிறிய இள நகையுடன் ஜெகனைப் பார்த்து பதில் சொல்வதைப் போல தான் வைத்த அந்த ஸிஸ்டம் ஃபெய்லியர் பலகையை கையை நீட்டிக் காண்பித்து தன் இருக்கை இருந்த உயர்த்தப் பட்ட தளத்தினின்றும் இறங்கிச் சென்றார்.

“”ஒன்னும் ப்ரயோஜனம் கிடையாது ஸார், இங்கெல்லாம் இவங்க வச்சதுதான் சட்டம்” என்று அந்த இளைஞன் உரக்கக் கத்தினான். பின்னால் இருந்த வேறு சிலரிடமிருந்தும் குரல்கள் கிளம்பின. உள்ளே சூப்ரிண்டெண்டன்ட் முன்னால் நின்று கொண்டிருந்தவர் அந்த கவுண்டர் ஊழியரிடம், “”என்ன ப்ரகாசம்? என்னாச்சு?” என்று கேட்க, அவர் மிகுந்த அலுப்புடன் “”எந்நாளும் உள்ள திருவிழாதான்” என்று சொல்லிவிட்டு சூப்ரிண்டெண்டிடம் தகவலை சொல்லி விட்டு கழிப்பறையை நோக்கி நகர்ந்தார். சூப்ரிண்டெண்டன்ட் முன்னால் நின்று கொண்டிருந்த மற்ற ஊழியர் திரும்பிப் பார்த்தார். கவுண்டர் அருகில் வந்தார். ஜெகனையும் பெரியவரையும் பார்த்து, “”ஸார் எங்களிடம் வருத்தப் பட்டு எந்த பலனும் இல்லை. மெஷின் வேலை செய்தால் டிக்கெட் தரப் போறார், உங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா என்ன? உங்களுக்கு மட்டும் வேலை செய்ய மாட்டேன்?” என்று சொல்ல,

“”எட்டு கவுண்டர் இருந்த ஸ்டேஷனில் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி அஞ்சாக்கியாச்சு. ஒருவர் லீவு. இன்னொருவர் அவசர லீவு. உங்களுக்கு எதுவும் பிரச்னைன்னா தயவுசெய்து உள்ள எழுதிக் கூட கொடுங்க ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு தான் சார்ந்திருக்கும் தொழிற்சங்கத்தின் பெயர் பொறித்து வெளியே எட்டிப் பார்த்து அலங்கரிக்கும் ப்ளாஸ்டிக் பேட்ஜ் இருந்த சட்டை பைக்குள் சிணுங்கிய செல்லினில் வாய் புதைத்தார்.

“”சொல்றதுக்கு எத்தனையோ காரணம் இருக்கும் ஸார், எங்களுக்கு ஆத்திர அவசரத்துல வர்றவங்களுக்கு என்ன செய்றீங்கங்றதுதான் முக்கியம். இப்டியே எல்லாரும் சொன்னா என்ன ஆகும்?” என்று தன் பங்குக்கு ஜெகன் தன் நியாயத்தை வலியுறுத்தினான். தன்னுடைய செல்லை ஒரு நிமிஷம் காதிலிருந்து எடுத்து விட்டு, “”எங்கள் கைகளுக்கு மீறிய விஷயத்தை எங்கள்ட்ட கேட்டா எப்படி? உங்க கஷ்ட்டத்தை உள்ளே வந்து சொல்லுங்கள்” என்று கூறி விட்டு அவரும் இறங்கிப் போய்விட்டார்.

ஜெகன் திரும்பிப் பார்த்தான். பின்னால் வால் போல் நெளிந்து நீண்டிருந்த வரிசை காணாமல் போய் மற்ற இரண்டு வரிசைகளுடன் ஐக்கியமாகியிருந்தது. மற்ற வரிசைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் புத்திசாலிகளா? ஜெகனுக்கு இப்பொழுது எல்லார் மேலும், எல்லாவற்றின் மேலும் கோபம் வந்தது. எவ்விதத்திலும் உணர்வற்று உறுத்தலற்று தன் அடிப்படை இருத்தலை மட்டும் உத்தரவாதப்படுத்திக் கொள்கின்ற சமூகத்தில் மிகச் சிறிய நெருடல்கள் கூட விந்தையாகிப் போவதுதான் வேதனை. இதற்கு மேலும் தியாகம் செய்தால் ஜெகனின் கால விரயம் ஆடம்பரமாகும்.

ஒரு வழியாய் வரிசையில் சற்று முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு வயதான தாயாரை வேண்டி டிக்கெட்டை வாங்கிக் கொண்டு படிகளில் பறந்து நடை மேடையில் சற்று வேகம் கூடிய நகரத்தின் நடையுடன் முன்னால் வந்து ஓர் இருக்கையை தேடி பிடித்து, பையை எடுத்து மேலே கம்பிகளில் போட்டு விட்டு அந்த இருக்கையில் சரியவும் பும் என்ற ஒரு சிறிய ஹார்னுடன் அந்த மின் வண்டி நகரும் போது முகத்தில் வந்து அடித்த காற்று எல்லா பரபரப்புகளையும் உள் வாங்கி ஜெகனை அமைதியாக்கியது. எப்படியானாலும் இன்று தாமதம் ஆனது தாமதம்தான் அக்கவுண்டென்டிடம் எப்படியும் ஒரு கவுரவமான வழிதல் தவிர்க்க முடியாததுதான்.

நாட்களின் ஓட்டத்தில் சில விஷயங்கள் பழகிப் போய் விடுகின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று, எது அவசியமோ அது என்கிறபோது மற்றவர்களிடம் கோபித்து என்ன செய்ய? ரயிலின் ஓட்டம் மன ஒட்டத்தை நிதானிக்கிறதா என்ன?

ஒரு சிறிய பையனும் கண் பார்வையற்ற மூதாட்டியும், இரண்டு கால்களும் இழந்து தரையோடு தரையாய் தேய்த்துக் கொண்டு தன் இயலாமையைத் தன் கைகளில் சேர்ந்திருக்கும் சில்லறைகளின் மூலம் ஒலியெழுப்பி தெரிவித்த வண்ணம் கூட்டத்திடையே ஊர்ந்து, தனக்கு தெரிந்த அத்தனை கடவுளர்களுடைய பாடல்களிலும் சில வரிகளை சுருதியாக்கிக் கொண்டு – இப்படி வித விதமான பசியின் விண்ணப்பங்கள், இரண்டு கைகளிலும் பத்து ரூபாய்க்கு எதை விற்று பிழைக்க முடியுமோ அந்த பட்டியலின் ராகங்களுடன், வாழைப் பழம், ஆரஞ்சு, கொய்யா என்று கூடைகளின் அணிவகுப்பு, மிகத் தீவிரமாய் அன்றைய செய்தித் தாளில் முகம் புதைத்தவர்கள், அரசியலையும் , விலைவாசியையும், அலுவலக அன்றாடங்களையும் மெல்லிய குரலில் அலசுகிறவர்கள் என இந்த இரயிலின் ஓட்டத்தில் எத்தனை வித விதமான மனித வண்ணங்களின் ஓட்டங்கள்

தனியாய், இருவராய், மூன்று நான்கு பேராய் சுடிதார், பேண்ட், டீ ஷர்ட் என வண்ணமாய் விழிகளிலும் வார்த்தைகளிலும் பொங்கி வரும் இளமை துள்ளலின் நதிகளாய் அங்கங்கே சிதறி இளைஞர் பட்டாளம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. முதுகில் தவிர்க்க முடியாத அந்த மலையேறும் பை, நீக்கமற அத்தனை பேருடைய காதுகளிலும் பூத்திருக்கும் ஹெட்செட். பேசிக் கொண்டே கையிலிருக்கும் செல்லையும் தடவித் தடவி, தேகத்தின் சொறியும் இந்த செல்லும் வைத்திருப்பவனை சும்மா இருக்கவே விடுவதில்லை இது இல்லாதவன் இப்பொழுது வாழத் தகுதியற்றவன். “”பேசுங்கள் – பேசுங்கள் – பேசிக் கொண்டே இருங்கள்” என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் விளம்பர கோஷத்தை தாரக மந்திரமாக அநேகர் சிரமேற்கொண்டு நிறைவேற்றுகின்றனர். எல்லாருடைய உரையாடலிலும் மில்லியன் டாலர்களுக்கான ஒரு வணிக பேரத்தை கையாளும் வேகமும் நினைப்பும்தான். கையிலும் பைக்குள்ளும் உலகமும் சர்வமும் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இந்த சிலிகான் அலைகள் மற்றும் வலைகளின் மாயத்திற்குள் புனிதமான அந்தரங்கங்களும் அரங்கத்தில் சந்தையானதுதான் முள்ளாய் உறுத்தும் நெருடல். ஜெகன் சட்டைப் பையிலிருந்து தன் செல்லை எடுத்தான். நேரம் ஆகி விட்டது, அக்கவுண்டன்டை சமாதானம் செய்தாக வேண்டும் மறு முனையில் அவர் இரண்டே இரண்டு “ஹூம்’, ஒரு “ஓகே’ சொல்லி தொடர்பைத் துண்டித்து விட்டார். “பூ ஊம்’ என்கிற நீண்ட ஹார்னுடன், வளைந்து கழிப்பறை, காத்திருக்கும் பயணிகள், வெள்ளைச் சீருடையில் கையில் சுருட்டிய கொடியுடனான ஸ்டேஷன் மாஸ்டர், சிற்றுண்டிச் சாலை, புத்தகக் கடை என எல்லாவற்றையும் வேகமாக பின் தள்ளி, மின்ரயில் நடைமேடைக்குள் கம்பீரமாய் நுழைந்து ஓர் உதறலுடன் நின்றது. ஒரு கூட்டத்தை வாந்தியெடுத்து அதற்கு இருமடங்காய் இன்னொரு மனிதப் பொதிகளை விழுங்கிக் கொள்ளும் ரசவாதத்தை இரண்டொரு நிமிடங்களில் நிறைவேற்றி, மற்றொரு சிறிய ஹார்னுடன் பூம் என்கிற ஆரவாரத்துடன் புறப்பட்டு சென்றது.

மின்ரயிலிலிருந்து இறங்கி நடைமேடையை அடையாய் மொய்த்த வண்ணம் பரபரத்து வெளியேறும் நகரத்தின் அந்த இயக்கத்திற்குள் ஜெகனும் புகுந்து நெளிந்து முன்னேறினான். இன்னுமொரு தட தடக்கும் ஷேர் ஆட்டோ பயணம். ஜெகன் தன்னுடைய வங்கி அலுவலகத்திற்குள் நுழைந்த போது அவனது அந்த பதினைந்து நிமிட தாமதத்தில் காலையின் முதல் வாடிக்கையாளர்களின் பரபரப்பு ஏற்கெனவே தொற்றிக் கொண்டிருந்தது. தவிர்க்க முடியாத அக்கவுண்டென்டை முற்றுகையிட்டிருந்தவர்களைத் தவிர்த்து, அவருடைய பக்கத்திலிருக்கும் நீண்ட கேபினிலிருக்கும் ப்ளாஸ்டிக் டப்பாவிலிருந்து தனது கவுண்டர் சாவியை எடுத்த வண்ணம் அவருக்கு “குட் மார்னிங்’ சொன்னான்.

வாடிக்கையாளரின் மீதிருந்த தனது கவனத்தை திருப்பாமலேயே, “”ஜெகன்… வெங்கட் திடீர் லீவு, பிஎம் (கிளை மேலாளர்) இப்பதான் சொன்னார். எப்படின்னாலும் மத்தியானம் லஞ்சுக்கு அப்புறம் அந்த ஸ்டேட்மென்டை முடிக்கிறீர்கள்” என்று சொல்லி விட்டு வாடிக்கையாளரிடம் விட்ட இடத்திலிருந்து துவங்கினார்.

கவுண்டருக்குள் நுழைந்து ஸிஸ்டத்தை முடுக்கி விட்டு பை சுமையிலிருந்து விடுதலையாகி, ஜெகன் கவுண்டரின் சிறிய அடைப்பைத் திறக்கவும் பக்கத்து கவுண்டரில் காத்திருந்த பாதி பேர் ஒரே தாவில் இவன் முன்னால் வந்து முதலில் சுற்றி மொய்த்து பின்பு ஒரு வரிசையாக ஆக்ரமித்தார்கள். ஏதோ ஓர் அகில இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் பணியாளர் தேர்வு கட்டணம் கட்ட காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் கையிலிருக்கும் செல்லானை தொடையில் வைத்து சலசலத்து அடித்த வண்ணம் தங்கள் பொறுமையின்மையை உடல் மொழியாக்கி சிறிய சிறிய – ஜெகனைப் போன்ற ஊழியருக்கு பழகிப் போன – விமர்சனக் கணைகளுடன் அவர்கள் காத்திருந்தனர். ஸிஸ்டம், பணம் என்ன, பாஸ்புக் அச்சிட என்கிற இயந்திரங்களோடு ஜெகன் என்கிற மனித இயந்திரம் ஈடு கொடுக்க, போட்டி போட, அவ்வப்பொழுது சிணுங்கும் செல், சக பணியாளர்களின் இடையீடு என அந்த நாள் களை கட்டியது.

இரண்டு இரண்டரை மணி நேரம் ஓடியும் கூட எதிரே வரிசை குறைந்தபாடில்லை. பாட்டில் தண்ணீர், கவுண்டருக்கே வந்த டீ என்று கருமமே கண்ணாக இருந்தும் கூட்டமும் குறையவில்லை வாடிக்கையாளர்களின் பொறுமையின்மையும் அதே வேகத்தில் எகிறிக் கொண்டுதானிருந்தது. இவ்வளவு கூட்டத்திற்கு இன்னொரு கவுண்டர் திறக்காததின் கோபம் அவ்வப்பொழுது விமர்சனமும் கேலியுமாக வெளிவந்த வண்ணமாக இருந்தது. சேவைத் தளத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு, அதுவும் வங்கித் துறையில் எதிரே இருக்கிற வாடிக்கையாளரை நிமிர்ந்து பார்க்கக் கூட நேரமில்லாமல் இயங்குகிற நிர்ப்பந்தங்களினால் இந்த கோபங்கள் விமர்சனங்களெல்லாம் பழகிப் போய் மரத்துப்போனதுதான் உண்மை நிலவரம். ஜெகன் மட்டும் விதி விலக்கா என்ன? அப்படியிருந்தும் எல்லாக் காலங்களும் களங்களும் ஒன்றாகாமல் சில எல்லைகள் மீறப்படுகிற பொழுது…

மணி ஒன்றரையை எட்டியவுடன் அக்கவுண்டன்ட் தன்னுடைய ஸீட்டிலிருந்தவாறே கையை உயர்த்தி, “”ஜெகன் இப்ப சாப்ட்டுட்டு ஆரம்பிச்சீங்கன்னத்தான் முடிக்க முடியும் . கிளம்புங்க” என்று சைகை காட்டவும், ஜெகன் சற்று சத்தமாக, “”இவருக்குப் பின்னால் இருப்பவரோடு முடிஞ்சது. பக்கத்தில் இன்னொருவர் வருவார்” என்று சொல்லவும் ஒன்று போல ஆட்சேபங்கள் வெடித்துக் கிளம்பின.

“”எப்படி ஸார் உங்க இஷ்ட்டத்திற்கு முடிக்கிறீங்க? எவ்வளவு நேரம் நிக்குறோம்? வேல வெட்டியில்லாமலா காத்துக் கிடக்கிறோம்? கஸ்டமர முதல்ல கவனிக்கப் பாருங்க”

ஏதோ இதுவரையிலும் அவன் காற்று வாங்கப் போனதைப் போல – கோபம் மற்றும் அதிருப்தியின் ஸ்தாயியும் ராகமும் எத்தனை ரகங்களில் வரக் கூடுமோ அத்தனை ரகங்களிலும் சீறிக் கிளம்ப, ஜெகன் தான் சொல்லியபடியே அடுத்தவருக்கும் வேலையை முடித்து விட்டு தன் கவுண்டரை மூடினான்.

இவன் மூடவும் வரிசையின் முன்பகுதி கலைந்து நான்கைந்து இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

“”ஸார் நாங்க கேட்டுக்கிட்டிருக்கோம், நீங்க சட்டையே பண்ணாம கிளம்புறீங்க – பதில் சொல்லிட்டு கிளம்புங்க” என்று சற்று உரக்ககேட்கவும் ஜெகன் தன் பையிலிருந்து சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, “”என்ன பதில் ஸார் , எனக்கு இன்னொரு வேலை இருக்கு. இன்னொருவர் வந்து உங்களை அட்டெண்ட் பண்ணுவார்னு சொல்லிட்டேன், இன்னும் என்ன பதில்?”

என்று சொல்லவும் அந்த இளைஞன், “”உங்க வேலை உங்க பிரச்னை, அடுத்தவர் வரும் வரை செய்ய வேண்டியதுதானே?” என்று எகிறவும்,

ஜெகன் பாத்திரத்தை கவுண்டரில் வைத்தான்.

அந்த இளைஞனை முகத்துக்கு நேராகப் பார்த்து, “”ஏன்ட்ட கோபப் பட்டு ப்ரயோஜனம் இல்ல. எட்டு பேர் இருந்த இடத்ல நேர் பாதி நாலு பேர்தான் இருக்கோம். அதிலயும் ஒருத்தர் லீவு. செருப்புக்கு காலத் தறிக்கிற வேலதான் நடந்துக்கிட்ருக்கு, உங்களுக்கு எதுவும் ப்ரச்னைன்னா பின்னாடி அதிகாரிகளப் பாருங்க. இவ்வளவு நேரம் வேலதான் பார்த்தோம்” – என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு திரும்பியவன் கண்ணில் யாரோ தென் பட்டது போல உணரவும் சற்று தள்ளி பின்னால் பார்த்த போது – யார் யார் அது } அந்த இளைஞன் – கையில் செல்லானுடனும் கண்களில் சிறிய கேலி, கேள்வி, நெருடல்களின் கலவையான இளநகையுடன் அவனைப் பார்ப்பது போல. ஜெகனுக்கு இப்பொழுது பிடிபட்டது – காலையில் ஸ்டேஷனில் நடந்த வழக்கில் அவனுடன் குரல் கொடுத்தவன்தான். அக்கவுண்டன்ட் இப்பொழுது அவருடைய இருக்கையை விட்டே எழுந்து வந்து, “”ஜெகன் நீங்க கிளம்புங்க” என்று உசுப்பவும் அவன் சாப்பாட்டு அறையை நோக்கி நகர்ந்தான்.

பணத்தின் அழுக்கோ, அழுக்கான பணத் தாள்களின் கறையோ படிந்த கைகளைக் கழுவி, சாப்பாட்டு பாத்திரத்தை திறந்து ஒரு வாய் உள்ளே போகிற பொழுது மறுபடியும் அந்த ஸ்டேஷன் இளைஞனின் புன்னகை ஞாபகம் வந்தது. அந்த இளநகை என்ன சொல்கிறது? காட்சிகளும் களங்களும் மாறியதையா? இல்லை வசதியான மறதியையா? ஸ்டேஷனின் மூத்த ஊழியர் என்ன சொன்னாரோ? அதையேதான் நாமும் கிட்டத்தட்ட அட்சரம் பிசகாமல் அப்படியே சொன்னோம். இப்பொழுது எனக்குச் சரியாகவும் நியாயமாகவும் படுவது காலையில் மட்டும் ஏன் மிகப் பெரிய அநீதியாகத் தெரிந்தது? கோடுகளின் உள்ளும் புறமும்தான் நியாய அநியாயங்களின் வரையறையா? நான் கோட்டின் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்கிற பிண்ணனியை மாத்திரம் சார்ந்து முன் வைக்கப்படும் வாதங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் சுயம், கோடென்கிற நிஜத்தை அசட்டை செய்கின்றது அல்லது வெகு வசதியாக மறக்கச் செய்கின்றது என்பது ஜெகனுக்கு இன்றைக்கு சுரீரென்று உரைத்தது.

காலை ஸ்டேஷனிலும் சரி, இப்பொழுது வங்கியிலும் சரி, இந்த காட்சிகளிலும் களங்களிலும் கோபத்தில் உஷ்ணமான எனக்கோ, அந்த இளைஞனுக்கோ, பெரியவருக்கோ, இரயில் ஊழியர்களுக்கோ இந்த கோடுகளின் மேல் எந்த அதிகாரமும் இல்லை என்கிற உண்மை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மனித வார்த்தைகளிலும் நடக்கைகளிலும் இருக்கிற வெற்றிடத்தை உணர்த்துகிறதா என்ன? அம்பை எய்கிறவன் எங்கோ இருக்கிறான். எல்லோரும் அம்புகளை மாத்திரம் எதிர்கொண்டு பதறுகிறோம் என்பது அனுபவங்களுக்கு பின்தான் உரைக்கிறது.

சாப்பாட்டு அறையின் வாசலில் நிழல் தட்டியது.

“”ஜெகன் நான் ஹெட்டாபிஸில் சொல்லிட்டேன், இன்று அந்த ரிட்டர்னை முடிச்சிருவீங்கள்ள?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்து தன் சாப்பாட்டுப் பையைத் திறந்தார் ஜெகனின் மேலாளர். ஜெகன் கை கழுவ எழுந்தான்.

– வி.வல்லபாய் (ஆகஸ்ட் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *