இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காலையில் அந்த வீதியில் ஒவ்வொரு வீடாக ஏறி கதவு மணியை அந்தச் சிறுமி அடித்தாள். அதே வீதியில் வசிக்கும் அவளுக்கு வயது 12 – 13 தான் இருக்கும். முகம் நிறைய புன்னகை பூத்துக்கொண்டு மீதிப்புன்னகையை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தபடி நின்றாள். கையிலே இருந்த அழைப்பிதழை நீட்டி விழாவுக்கு அழைத்தாள். அது அவளுடைய பூப்புனித நீராட்டு விழா. ‘அம்மா வரவில்லையா?’ என்று சிலர் கேட்டார்கள். அவர் வேறு வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க போய்விட்டதாகச் சொன்னாள். கையிலே இன்னும் நாலைந்து அழைப்பிதழ்கள் இருந்தன. அவற்றினால் முகத்தை விசிறியபடியே ‘சரி அங்கிள், கட்டாயம் வாருங்கோ’ என்று வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அந்தச் சிறுமியின் பெயர் சண்முகப்பிரியா. ‘சண், சண்’ என்று அழைப்பார்கள். அவளுடைய அம்மாவை அந்த வீதியிலிருந்த எல்லோருக்கும் பழக்கம். அவளுடைய அப்பாவை சந்திக்கவே முடியாது. அவர் காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு வெளிக்கிட்டால் இரவு பத்து மணிக்குத்தான் திரும்புவார். எப்பொழுது, எந்தச் சமயத்தில் எவரைப் பார்த்தாலும் அந்தச் சிறுமியின் அம்மா சண்முகப்பிரியா பற்றியே பேசுவார். உலகத்தில் அவருக்கு பேசுவதற்கு வேறு பொருளே இல்லை. மகள் கணக்குப் பாடத்தில் ரொறொன்ரோவிலேயே மிகச் சிறப்பாக செய்திருந்த செய்தியை ஒவ்வொரு வீடாக ஏறி கதவைத் தட்டிச் சொன்னார். அவள் மாகாண அளவில் கணக்குப் பரீட்சைக்கு தயாராகி வருகிறாள் என்பதையும் கூற மறக்கவில்லை. அவள் பூப்பெய்திய பிறகு சந்தித்தவர்களிடம் எல்லாம் ‘இனி என்ன செய்வது? எங்கள் பாரம்பரியம் என ஒன்றிருக்கிறது. குற்றம் கழிக்காமல் அவளை பள்ளிக்கு அனுப்பமுடியாது’ என்றார். ‘என்ன குற்றம்?’ என்று சிலர் அப்பாவியாகக் கேட்டார்கள். ‘பூமாதேவிக்குத்தான்’ என்று சொல்லிவிட்டு நடந்தார்.
சண்முகப்பிரியாவின் தாயார் இந்த நாளை சில வருடங்களாக எதிர்பார்த்திருந்தார். கடந்த 13 ஆண்டுகளில் ரொறொன்ரோவில் நடந்த அத்தனை சாமத்தியச் சடங்குகளுக்கும் அவர் கொடுத்த காசை ஆண்டுவாரியாக அவரால் சொல்லமுடியும். யார் யாருக்கு எவ்வளவு காசு கொடுத்தார் என்ற விவரமும் அவர் மூளையில் பதிந்து கிடந்தது. காசு கொடுத்தவர்களின் விவரத்தை யாராவது கேட்டால் அகரவரிசையில் அந்தப் பெயர்களைத் தருவதற்கும் தயாராக இருந்தார். மகள் பெரிய பிள்ளையாகிவிட்டதால் கொடுத்த காசு எல்லாவற்றையும் கணக்கு பிசகாமல் அறவிடலாம் என்பது அவர் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம்.
பூப்புனித நீராட்டு விழா ஆடம்பரமாக நடந்தது. வெள்ளைக்காரப் பெண்கள் சேலைகட்டி தரையை மிதித்து கும்மி அடித்து வரவேற்றார்கள். எல்லோருமே தொப்புளில் வளையம் மாட்டியிருந்தார்கள். அவர்கள் குனிந்து நிமிரும்போதெல்லாம் அவை தண்ணீரிலே விழுந்த வெள்ளிக்காசுபோல பளபளத்தன. நாலு கூட்டம் மேளம் சிறிது மிகை என்று தோன்றியது. ரொறொன்ரோ நகரத்திலேயே ஒப்பனைக் கலையில் பிரபலமான ஒருவரை அழைத்து மிகத் திறமாக பூப்பெய்திய பெண்ணை அலங்கரித்திருந்தார்கள். அசிரத்தையாக விட்டதுபோல கூந்தலை திட்டமிட்டு குலைத்து சிங்காரம் செய்வதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. மணமேடையில் பெண் புகைக்குள் இருந்து வெளியே வருவது போல ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்படி ஒருவரும் இதற்கு முன்னர் செய்ததில்லை. 12 வகையான ஆலத்தி தட்டுகளை 12 வகையான பெண்கள் 12 வகையான சேலைகளை உடுத்திக்கொண்டு காவினார்கள். காலையிலிருந்து மாலைவரை வீடியோக்காரர் துளித்துளியாக நிகழ்வுகளை படம் பிடித்தார். ஏதாவது ஒரு துளியை தவறவிட்டால் அதை திரும்பவும் நடிக்கச் சொல்லி பதிவு செய்தார். புகைப்படக்காரர் இன்னொரு பக்கத்தில் 10,000 டொலர் பெறுமதியான இலக்கக் காமிராவினால் 1170 படங்கள் எடுத்துக்கொண்டார். சினிமாவில் இடம்பெற்ற ‘வயசுக்கு வந்த’ பாடல்கள் ஒன்றுவிடாமல் ஒலிபெருக்கியில் ஒலித்தன. பெண்ணை ஊஞ்சலிலே வைத்து ஆட்டிய அதே நேரத்தில் தட்டிலே உறை உறையாக காசு விழுந்தது.
வேறு ஒரு சாமத்தியச் சடங்கிலும் நடக்காத சில காட்சிகளும் காணக் கிடைத்தன. பத்து பன்னிரண்டு சிறுமிகள் 13 – 14 வயது மதிக்கலாம், அவளுடைய சிநேகிதிகள், அவளுடன் படிப்பவர்கள் அல்லது உறவினர்களாக இருக்கலாம். எல்லோரும் ஒரே கலரில் சாரி அணிந்து வரிசையாக வந்தார்கள். அவர்கள் முதன்முதலாக அன்றுதான் சாரி உடுத்தியிருந்தார்கள் என்பது அவர்கள் ஐஸ் தரையில் நடப்பதுபோல நடந்துவந்த தோரணையில் தெரிந்தது. எல்லோருக்கும் ஒரேவிதமான உதடுகள், இரண்டு பவளங்களை ஒன்றுக்கு கீழ் ஒன்று ஒட்டிவைத்த மாதிரி. ஒவ்வொருவராக வந்து இடையின்மேல் வளைந்து, இடைக்கு கீழே கால்களை எட்டவாக வைத்து, புனிதநீர் பெண்ணை முத்தமிட்டார்கள். முத்தம் கொடுத்தவரும் அதை வாங்கியவரும் வெட்கப்பட்டுக்கொண்டனர்.
சிறுமியின் தகப்பனார் பக்கத்தில் நின்றாலும் தெரியாது; பேசினாலும் கேட்காது. சாப்பாட்டு நேரம் வந்தபோது அவர்தான் அழைத்தார். அவர் அரைவாசி பேசியபின்னர்தான் அவர் வாய் அசைந்ததைக் கண்டுபிடித்தார்கள். சாமத்தியச் சடங்குகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் அதுதான். ஒருவர் கையில் ஏந்திய பிளேட் அவரை தொடாமலும், அடுத்தவர் உடுப்பை உரசாமலும் இருக்கவேண்டும். முப்பது டொலர் உறையில் போட்டு அன்பளித்துவிட்டு 40 டொலர் சாப்பாட்டை சாப்பிடும்போதுதான் விழாவைப்பற்றி விமர்சிப்பார்கள். பிளேட்டில் உணவை நிறைத்து கையிலே பிடித்துக்கொண்டு நாற்காலியில் உட்காராமல் ஒருவர் குதிரையைப்போல நின்றபடி சாப்பிட்டார். நாற்காலி ஊத்தையாகிவிடும் என்று அமரவில்லையோ அல்லது உடுப்பு அழுக்காகிவிடும் என்று அமரவில்லையோ தெரியாது. இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்ற விவாதத்தை அவர்தான் ஆரம்பித்து வைத்தார். அவர் குரல் உரத்தும் உயரத்தில் இருந்தும் கேட்டது.
‘யூதர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பார்மிற்சா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் தூயநற்கருணை விழா வைக்கிறார்கள். முஸ்லிம்கள் சுன்னத்துக் கல்யாணம் நடத்துகிறார்கள். ஒரு பெண் பெரிய பிள்ளையானதும் குற்றம் கழிக்கவேண்டும். தாயாருக்கு அதன் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள் அபிப்பிராயத்துக்கு பயப்படக்கூடாது.’ இப்படியெல்லாம் வாதங்கள் நடந்தன. சாப்பாடு முடிய விவாதமும் முடிவுக்கு வர நின்றுகொண்டு விவாதத்தை தொடங்கியவர் பொதுவாகச் சிரித்தார். அவர் தன்னை எண்ணிச் சிரித்தாரா, விவாதத்தை மெச்சி சிரித்தாரா அல்லது வறுத்த கோழிக்காலைப் பார்த்து சிரித்தாரா என்பது ஒருவருக்கும் தெரியாது.
சிறுமியின் பெற்றோருக்கு சின்னச் சின்ன குறைகள் இல்லாமலில்லை. முழுக்க முழுக்க மல்லிகை மலர்களினால் அலங்கரித்த நகரும் பூப்பந்தரின் கீழே பெண்ணை மணவறைக்கு அழைத்துவர முடியவில்லை. அதை நினைத்து நினைத்து கவலைப்பட்டார்கள். வழக்கமாக ஹெலிகொப்டரில் பெண்ணை கொண்டுவந்து இறக்குவார்கள். செலவு கூடிவிட்டபடியால் அதையும் தவிர்க்கவேண்டி நேர்ந்தது. காமிராக்காரர் தந்திரமான முறையில் பெண்ணை நயக்கரா நீர்வீழ்ச்சியில் குளிப்பது போல படம் எடுத்து ஆல்பத்தில் சேர்ப்பது சம்பிரதாயம். அதை சடங்குக்கு வரமுடியாத சொந்தபந்தங்களுக்கு எல்லாம் அனுப்பிவைப்பார்கள். அதையும் செய்ய இயலவில்லை. மற்றும்படிக்கு எல்லாம் மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தது.
பதின்மூன்று நாள் கழித்து ‘சண்’ என்று அழைக்கப்படும் சண்முகப்பிரியா பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டாள். தாயார் வாசல் மட்டும் வந்து அவளை வழியனுப்பினார். சண்முகப்பிரியாவின் தேகத்தில், இந்தச் சிறிய கால இடைவெளிக்குள், தோல் உரித்த பாம்பின் உடம்புபோல பளபளப்பு கூடியிருந்தது. ருதுச்சடங்குக்காக பல்கூட்டை கழற்றி வைத்தவள் அதை மறுபடியும் மாட்டியிருந்தாள். புத்தகப்பையை ஒரு தோளில் எறிந்து தொங்கவிட்டுக்கொண்டு தலையை அதே பக்கத்துக்கு கொஞ்சம் சாய்த்தாள். தாயார் ‘பிள்ளை, கவனமாய் பார்த்துப்போ’ என்றார். மகளும் சரி என்று தலையாட்டிவிட்டு நகர்ந்தாள். அவள் மடிக்கணினியில் சேமித்த 1170 படங்களையும் எடுத்துச் சென்றிருந்தாள். அவளுடைய வகுப்பு சிறுமிகள் அனைவரும் ஆவலோடு அவற்றை பார்த்து கேள்விகள் கேட்டார்கள். சண்முகப்பிரியா அவர்களுக்கு ஒவ்வொரு படத்தையும் காட்டி விழாவைப்பற்றி விளக்கிக் கூறினாள். ஆசிரியை அவளை வகுப்பு முடிந்ததும் தன்னை தனியே வந்து பார்க்கச் சொன்னார்.
மிஸ் மொர்ரிஸன் அவளிடம் அன்பு காட்டும் ஆசிரியை. எதற்காக பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்று கேட்டார். குற்றம் கழிப்பதை சண்முகப்பிரியா ஆங்கிலத்தில் absolving sin என்று மொழிபெயர்த்து கூறினாள். ‘மாகாண அளவில் நீ கணக்கு பரீட்சையை தவறவிட்டுவிட்டாயே. அதுபற்றி உனக்கு மனவருத்தமில்லையா?’ என்று கேட்டார். சண்முகப்பிரியா ‘இது எங்கள் கலாச்சாரம். குற்றம் கழிக்கவேண்டும். பூமிக்கு பாவம் சேர்ந்திருக்கிறது. சடங்கு செய்யாவிட்டால் பெரிய அசம்பாவிதம் நேரும் என்று அம்மா சொன்னார். அதுதான் வரமுடியவில்லை.’ மறுபடியும் மிஸ் மொர்ரிஸன் சொன்னார். ‘இதிலே ஒருவித பாவமும் இல்லை. இது பெண்களுக்கு இயற்கையாக நடப்பது. ஒரு சிறுமி பெண்ணாகும் தினம். ஒவ்வொரு பெண்ணும் பெருமைப்பட வேண்டுமே ஒழிய இதில் குற்றம் கழிப்பதற்கு என்ன இருக்கிறது?’
’எங்கள் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டுமா?’
‘இல்லையே. எல்லா கலாச்சாரமும் உயர்வானது. அல்லாவை தொழு, ஒட்டகத்தையும் கட்டிவை என்று ஓர் அராபியப் பழமொழி உண்டு. உன் கலாச்சாரத்துக்கு மரியாதை கொடு. அதே சமயத்தில் உன் மூளையை உபயோகிக்கவும் மறக்காதே.’
சண்முகப்பிரியா சொந்தப் புத்தியை பாவிக்கும் பெண். திரும்பி வீட்டை நோக்கி தனிய நடந்தபோது அவள் இதுபற்றி சிந்தித்தாள். மனதிலே இப்படி எண்ணம் ஓடியது. ‘என் அம்மா கிராமத்து ஆள். அவருக்கு உயிர் நான், என்னை விட்டால் ஒருவரும் இல்லை. இந்த நாட்டைப்பற்றியோ அவர்கள் கலாச்சாரம் பற்றியோ அவர் ஒருபோதும் அறிந்துகொள்ளப் போவதில்லை. இந்தப் பூமியில் என் உடம்பில் ரத்தம் ஓடும் வரைக்கும் நான் என் அம்மாவின் மனது நோகும்படி நடக்கமாட்டேன். அவர் செய்கிற குற்றத்தை கழித்துவிடுவேன். ஆனால் என் எதிர்காலத்தை நானே தீர்மானிப்பேன்.’
வீட்டு வாசலில் அவளுடைய அம்மா காத்துக்கொண்டிருந்தார். மெல்லிய குளிர் அடித்தாலும் ஒரு தூணைப்பிடித்துக்கொண்டு அசையாமல் நின்றார். சண்முகப்பிரியா நேரே வீட்டினுள் நுழைந்து கணினி முன் அமர்ந்தாள். தாயார் பின்னாலே வந்து ‘உனக்கு பயத்தம் பணியாரம் செய்திருக்கிறேன், சாப்பிடு’ என்று தந்தார். சாப்பிட்டாள். பின்னர் சுடக் காய்ச்சிய பாலில் கொக்கோ பவுடரைக் கரைத்து கொண்டுவந்தார். அதையும் சண்முகப்பிரியா குடித்தாள்.
‘பிள்ளை உடுப்பை மாத்து. சப்பாத்தைக் கழட்டு. பிறகு ஆறுதலாய் வேலை செய்யலாம்தானே.’
அவள் அப்படியே செய்துவிட்டு வந்து மறுபடியும் கம்புயூட்டர் முன் அமர்ந்தாள்.
தாயார் அவள் முகத்தை ஒரு வளர்ப்பு நாய்க்குட்டி பார்ப்பதுபோல பார்த்தபடி அவள் முன் உட்கார்ந்தார். கணவன் இரவு பத்து மணிக்குத்தான் வருவார். காலையில் இருந்து அவருடன் ஒரு வார்த்தை பேச ஆள் இல்லை. மகள் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தார்.
‘மகள், உனக்கு முட்டைக்கோப்பி போட்டு வரட்டே?’
‘வேண்டாம் அம்மா.’
சண்முகப்பிரியா கணினியில் வீட்டு பாடத்தை வேகமாக தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.
‘உன்னுடைய சிநேகிதிகளுக்கு படங்கள் காட்டினாயா?’
‘ஓம் அம்மா.’
இன்னும் சிறிது நேரம் தாயார் அங்கே நின்றார். பின் மகள் குடித்து முடித்த கோப்பையை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்கு போய் கழுவி வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு முன் சமையலறை குளிர்பெட்டி நின்றது. இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை அது உயிர் பெற்று சத்தமிட்டது. அது தன்னிடம் ஏதோ பேசியது என்று நினைத்துக்கொண்டபோது ஆறுதலாக உணர்ந்தார். சண்முகப்பிரியா திரும்பி தாயாரைப் பார்த்தபோது அவர் சற்று கூனிப்போய் தன் கால் விரல்களைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்.
மறுபடியும் தாயார் எழுந்து வந்து மகளுக்கு முன்னே நின்றார்.
‘இரவு சாப்பிட என்ன பிள்ளை உனக்கு வேணும்?’
‘என்னவெண்டாலும் சரி அம்மா.’
‘என்ன மகள் கம்புயூட்டரில் செய்யிறாய்?’
சண் என்று அழைக்கப்படும் சண்முகப்பிரியா பென்சிலைக் கடித்துக்கொண்டு யோசித்தாள்.
‘நோபல் பரிசு ஏற்புரை எழுதுகிறேன், அம்மா.’
‘ஆ ஆ, சரி. சரி செய். நல்லது.’
– 2011-02-18
Eagerly waiting for that day to give my best