குப்பமுத்து குதிரை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,115 
 
 

“என்ன மாமா.. காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிட்டியளா.. நானும் எத்தனை தடவைக் கேக்குறேன். ஒரு நாளாவது என்னையும் சந்தைக்கு அழைச்சுகிட்டுப் போங்கன்னு..”

“வயசான பொம்பளை சனங்களைக் கண்டா என் தங்கராசுக்கு ஆகாதுத்தா. ஒரு வாரம் டயம் தர்றேன். கெடுவுக்குள்ள நீ கொமரிப்புள்ளயா மாறி வா.. காட்டுக்குறிச்சி சந்தையில சீனிச்சேவு வாங்கித்தர்றேன்..”

-வாசல் தெளிப்பதற்காக பசுமாட்டுச் சாணியை குண்டானில் கரைத்துக்கொண்டிருந்த ஓந்தாயிக்கும், காலையிலேயே தன் குதிரை வண்டியில் காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிவிட்ட குப்பமுத்துவுக்கும் நடந்த உரையாடல் இது. “இந்த மாமாவுக்கு வயசு ஏறுனாலும் இன்னும் கொழுப்பு கொறையலை..” சிரிப்போடு சொல்லிவிட்டு சாணியை கரைக்க ஆரம்பித்த ஓந்தாயிக்கு, இப்படிப்பட்ட ஒரு பதில்தான் குப்பமுத்துவிடமிருந்து வருமென நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் கேட்கிறாள்.

இவள் மட்டுமில்லை. ஊர் பெண்களுக்கெல்லாம் குப்பமுத்து என்றால் ஒரு இதுதான். எதையாவது நோண்டி, நோண்டி கேட்பார்கள். அவரும் வயது, உடம்பு இன்னபிற தகுதிகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் எளந்தாரியாய் வார்த்தைகளை விசிறியடிப்பார். கூடவே அவரது குதிரை தங்கராசு, ‘ஙஞீஞீங்ங்ஞேஞே..’ என்று ஒரு திணுசாக கணைத்து தன் பங்குக்கு துணைநக்கல் செய்யும். குப்பமுத்துவைக் கூட பொறுத்துக்கொள்ளும் பெண்கள், குதிரையின் கணைப்புக்குதான் கடுப்பாவார்கள்.

‘ஏன் மாமா.. நீங்களே யானை கணக்கா இருந்துகிட்டு எதுக்கு இந்த சனியனை வாங்குனீங்க..?’ என்று பளாரென்று கேட்டாலும் மனிதர் சளைக்கவே மாட்டார். ‘தங்கராசுவை திட்டுனியன்னா, உன் புருஷனுக்கு ராத்திரி ‘மூட்டை’ வாங்கி ஊத்திவிட்டுறுவேன்..’ என்று பீதியைக் கிளப்பிவிடுவார். வீட்டம்மா அம்சு சொல்லியே கேட்காத அவர் ஊர் பெண்கள் சொல்லியாக் கேட்கப்போகிறார்..?

இப்போது இந்த நிமிடம் தங்கராசு காட்டுக்குறிச்சி சந்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். தார் ரோட்டில் லாடம் பட்டு, ‘டடக்… டடக்..’ என லயத்தோடு எதிரொலித்தது. ‘இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. சந்தைக்குப் போகிறோம்..’ என்ற மனுஷப்பய கணக்கெல்லாம் தங்கராசுக்குத் தெரியாது என்றாலும், வாரம் ஒரு நாள் தனக்கு கொள்ளு வாங்கப்போகும் திருநாள் இன்றுதான் என்பதை பழக்க தோஷத்தில் அதன் புலன்கள் கண்டறிந்துவிட்டன. இதனாலேயோ என்னவோ அதன் ஓட்டத்தில் ஒரு உற்சாகம் வெளிப்பட்டது. தங்கராசுவுக்கு உற்சாகம் வந்துவிட்டால் தலையை போட்டு ஆட்டும்.

ஏழு வருஷத்துக்கு முன்பு வெள்ளக்கோயில் சந்தையில் மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிவந்த குதிரை. கீழச்சீமை மண் மாதிரி செக்கச் செவேல் என்றிருந்தது. உடம்பெங்கும் புசுபுசுவென்று முடி. குதிரையின் விலை, சல்லிசானது என்றோ, அதிகம் என்றோ அபிப்ராயம் சொல்ல அங்கு யாருமில்லை. ஏனெனில் தெக்கூர் ஏரியாவுக்கே அதுதான் முதல் குதிரை.

“ஏன்யா.. உனக்கென்ன புத்திக்குள்ள புத்து வச்சிருச்சா..? காசைக் கொட்டி இந்த கருமத்த ஏன் வாங்குன.. தாழடி நடவுக்கு வலப்பக்க மாட்டுக்குப் பதிலா இதைத்தான் பூட்டி ஓட்டப்போறியா..?” என்று குதிரையை வாங்கிவந்து வீட்டில் நிறுத்திய உடனே கேட்டாள் மனைவி அம்சு. அதையெல்லாம் அவர் மதிக்கவேயில்லை.

வாங்கிவந்த அடுத்த ஒரு வாரம் அவருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை. எங்கெங்கோ ஓடி குச்சி கோல்களை வெட்டி முத்து ஆசாரியிடம் கொடுத்து வண்டி செய்துவிட்டார். மேலே மறைப்பு இல்லாமல், இரண்டு ஆள் உட்காரும் அளவுக்கு இடமிருக்கும் வண்டி. அந்த ஒரு வார முடிவில் குதிரைக்குப் பதிலாக குப்பமுத்துவே கணைக்க ஆரம்பித்துவிட்டார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் குதிரையும் ஒரு அங்கமாகிவிட்டது. குப்பமுத்துவையும், தங்கராசுவையும் பிரித்துப் பார்ப்பது அரிதானது.

வீட்டுப் பக்கத்திலேயே வாய்க்கால் ஓடுவது அவருக்கு வசதியாய் போய்விட்டது. தங்கராசுவை பிடித்து வந்து வாய்க்காலில் நிறுத்தி வைத்து, வீட்டில் அம்சம்மா துணி துவைக்க வைத்திருக்கும் சவுக்காரக்கட்டியை எடுத்துவந்து குதிரைக்குப் போட்டு அழுக்குத் தேய்ப்பார். “செத்தப்பொர்றா.. இந்தா முடிஞ்சிடுச்சு..” என்று குதிரையோடு பேசியபடியே, அதன் உடம்பிலிருக்கும் உண்ணிகளை பிடுங்கியெறிவார். யாராவது குதிரையின் மீது கை வைத்துவிட்டால் அவ்வளவுதான். பத்து நாளைக்கு முன்னாடி, நடவு வயலில் நுழைந்து பயிரை துவைத்துவிட்டது என்று குச்சியால் குதிரையை அடித்துவிட்ட முத்துசாமியை கண்டமேனிக்குத் திட்டித்தீர்த்தார் குப்பமுத்து.

எங்கு போவதென்றாலும் குதிரை வண்டியில்தான் பயணம். காலையில் காட்டுக்குறிச்சி சந்தைக்குப் போய் கொள்ளு வாங்கியவர், இப்போது கூட டீ கடையில் வண்டியை நிறுத்திவிட்டு குதிரையை தடவிக்கொடுத்தபடியே கதையளந்துகொண்டிருக்கிறார். ஒரு கையில் டீ கிளாஸை உருட்டியவரின் இன்னொரு கையில் சுருட்டு புகைந்துகொண்டிருந்தது.

“ஏண்டா.. உனக்கு மேலக்கொள்ளையில பத்து மூட்டைதான் கண்டுச்சுன்னு பேசிக்கிட்டானுவொ.. குறுவைக்கு ஆடுதொரைப் போட்டுருக்கக்கூடாதுறா..” என்று அவர் பேசிக்கொண்டே இருக்க, வாயிலிருந்து எச்சில் ஒழுகி, சுருட்டு வழியாக பாய்ந்தோடி, முன்புற நெருப்பை அணைத்தது. மறுபடியும் பற்ற வைத்தார். திரும்பவும் எச்சில் வழிந்து நெருப்பு அணைந்தது. ஒரு சுருட்டுக்கு நாலைந்து தீக்குச்சியைக் காலி செய்துவிட்டார். அந்த நேரம் பார்த்து தங்கராசு கணைக்கவுமே, ”இந்த வந்துட்டண்டா..” என்றபடியே ஒரு உளுந்து வடையை வாங்கி, “எண்ணெய் பலகாரமெல்லாம் அதிகம் திங்கக்கூடாதுடா..” என்று செல்லம் கொஞ்சிவிட்டு குதிரையின் வாயில் திணித்தார்.

“குதிரைக்கு வடை குடுக்குறது இருக்கட்டும். நீ மொதல்ல நல்லத்துணியா எடுத்துப் போட்டியன்னா என்னய்யா..? கருமம்.. உளுந்து சாக்குல டவுசர் தச்சுப்போட்டிருக்க..? அதுவும் மானியத்துல குடுத்த சாக்கு. அதைப்பாரு.. கரெக்ட்டா முன்னாடி பக்கம், ‘அரசு மானியம். விற்பனைக்கல்ல..’ ன்னு எழுதியிருக்குது. நீ வித்தா மட்டும் எல்லாரும் போட்டிப்போட்டுகிட்டா வாங்கப்போறான்..? கருமம் அதை வாங்கி என்ன செய்யிறது..?” என்று கலியமூர்த்தி நக்கலடித்ததிலும் ஒரு நியாயமிருக்கவே செய்தது.

வேலிக்கணக்கில் நிலமிருந்தும், நல்ல துணி, மணி எடுத்துப்போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை அவர். எப்போதும் மேல்சட்டை அணியமாட்டார். அப்படியேதான் காட்டுக்குறிச்சி வரைக்கும் போய்வருவார். ஆனால், தங்கராசுக்கு மட்டும் எந்தக் குரையும் வைப்பதில்லை.

இந்த தங்கராசு பாசமெல்லாம் இப்ப ஏழெட்டு வருஷமாகத்தான். அதற்கு முன்பு இந்த பாசத்தையெல்லாம் அவர் கொட்டி வைத்தது மகன் துரைராசு மேல். ஒரு பெண், ஒரு ஆண் அவருக்கு. ஒரே ஆம்பிளைப்பிள்ளை என்பதால் எப்பவும் துரைராசுவைக் கூடவேக் கூட்டிக்கொண்டு திரிவார். எதிரே யாராவது உறைமுறை வீட்டுப் பெண்களைப் பார்த்தால், ”ஒரு ஒறமொறையான் வர்றான்னு கொஞ்சமாவது மரியாதை இருக்காப்பாரு.. இப்படியெல்லாம் செஞ்சா அப்புறம் பத்து பவுனைக் கூட்டிக்கேப்பேன் பார்த்துக்க..” என்று எகத்தாளம் செய்வார். துரைராசு கோணி நாணி நெளிவான்.

ஆனால், எளந்தாரியாய் ஆனபிறகு அவரோடு ஒட்டுவதில்லை. ஒதுங்கி, ஒதுங்கிப் போனான். ‘சரி கழுத.. பயலுக்கு ஆசை வந்திருச்சுப் போல’ன்னு நினைத்து, அவசர, அவசரமாக முதலில் மகளுக்குப் பெண் பார்த்து மருங்கொளத்தில் ‘தள்ளிவிட்ட’ பின்னர், மகனுக்குப் பெண் பார்த்தார். சல்லடைப்போட்டுத் தேடி சாமிப்பட்டியில் பெரிய கையாகப் பிடித்துவிட்டார். குப்பமுத்துவிற்கு வேலிக்கணக்கில் நிலம் இருக்கிறதென்றால் துரைராசு மாமனார் வீட்டில் அதைவிட அதிகம். ஐம்பது ஏக்கரில் நெல், இரண்டு போர்வெல், பத்து ஏக்கரில் கொய்யாக்கொள்ளை, மெயின் ரோட்டில் எஸ்.டி.டி. பூத், என்று துட்டுக்கொட்டும் ஆள். அந்த பவுசு, துரைராசுக்குப் பிடித்துவிட்டதுபோல.. கல்யாணம் ஆன ஒண்ணரை வருஷத்துக்குள் சாமிப்பட்டிக்கேப் போய்விட்டான்.

குப்பமுத்துவால் தாங்க முடியவில்லை. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தார். அம்சுதான் ஒரே அழுகை. “எதுக்குடி இப்ப ஒப்பாரி வைக்கிற.. எல்லாம் கசந்தப்பின்னாடி வருவான் விடு..” என்று அவரும் ஒரு மாதிரியாக அம்சம்மாவை சமாதானமெல்லாம் செய்துபார்த்தார். ஆனால், துரைராசு வருவதாகத் தெரியவில்லை. வெள்ளக்கோயிலுக்குக் கிளம்பிப்போய் குதிரை வாங்கி வந்ததெல்லாம் அந்தக் கடுப்பில்தான். துரைராசுக்குப் போட்டியாக தங்கராசு என்று பெயர் வைத்து அட்டகாசம் செய்தார்.

குதிரையை வைத்து ஊருக்குள் ஊர்வலம் வந்த நேரம்போக, அவ்வப்போது சொந்த சோகத்திலும் ஆழ்ந்துவிடுவார். இரண்டு வருஷங்களுக்கு முன்பு, சித்திரா பௌர்ணமி சமயம்..சாமி புறப்பாடு முடிந்து எல்லாரும் வீட்டுக்குத் திரும்பிவிட்ட நேரத்தில் இவர் கோயிலுக்குக் கிளம்பினார். அது அய்யனார் கோயில். வாசலில் முரட்டுக் குதிரையை வீரன் ஒருவன் பிடித்துக்கொண்டு நிற்பதுபோல ஒரு சிலை இருக்கிறது(உபயம்: வேல்பாண்டியன், அரசு ஒப்பந்தக்காரர், ஒரத்தநாடு). அதற்குப் பக்கவாட்டில் தன் குதிரையையும் அதேபோல் நிறுத்தி பிடித்துக்கொண்டு சிலை வீரனைப்போலவே குப்பமுத்துவும் கொஞ்ச நேரம் விரைப்பாக நின்றார். அடித்திருந்த ‘மூட்டை’ சரக்கு அவரை ஆட்டுவித்தது. நின்ற நிலையிலேயே எதிரேயிருந்த அய்யனார் சிலையைப் பார்த்துப் பேச ஆரம்பித்துவிட்டார்.

“நீதான் பெரியசாமியா.. என்னா பெரிய மசுறு சாமி.. என்ன மாதிரி பேச முடியுமா உன்னால..? உன் குதிரையால வாலைக்கூட தூக்க முடியாது. என் தங்கராசு, நான் கண்ணடிச்சா உன்னையே எட்டி உதைப்பான். ஆனா என்னை உதைக்க மாட்டான்.. அந்த நாய் மாதிரி என்னை நெஞ்சுல உதைக்கமாட்டான். உன்னை மாதிரிதான் அந்த நாயும். நீ காட்டுக்குள்ள இருந்துகிட்டு வரமாட்டேங்குற.. அந்த நாயி மாமியார் வீட்டுல மயிர் புடுங்குது..”

-உளறல் தொடர்ந்துகொண்டே இருந்த நிலையில் அந்தப்பக்கம் வந்த வேறு சிலர்தான் அழைத்துச் சென்றார்கள்.

குப்பமுத்துவுக்கே எழுபது வயது என்றால் அம்சம்மாவுக்கு எப்படியும் அறுபது, அறுபத்தைந்து வயதிருக்காது..? அந்தம்மாவுக்குப் போனவாரம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மருங்கொளத்திலிருந்து மகள்காரி வந்துவிட்டாள். மகளின் கவனிப்பில் கொஞ்சம் எழுந்து உட்கார ஆரம்பித்தவள் மறுபடியும் படுத்துவிட்டாள். சுயநினைவின்றிபோனது. ‘முந்திக்குவாளோ..’ என்று அச்சப்பட்டார் குப்பமுத்து. உறவுக்காரர்களெல்லாம் வந்துப் பார்த்துப்போனார்கள்.

“பெத்த அம்மாக்காரி சாகக்கெடக்குறா.. ஊர் சனமே வந்துப்பாக்குது. இந்த தொர்ராசுப்பயலுக்கு நெஞ்சுல ரவ ஈரம் இல்லப் பார்த்தியா..” என ஊர்சனம் பேச ஆரம்பித்துவிட்டப்பிறகு துரைராசு வந்தான். அம்மாவுக்கு வாயில் தண்ணி ஊத்தினான். அங்கும், இங்கும் அழைந்தான், குப்பமுத்துவிடம் மட்டும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து குதிரைக்கு உண்ணிப் பிடுங்கிக்கொண்டிருந்தார் குப்பமுத்து. ஏழு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மகனைத் திரும்பிப்பார்க்கக்கூடத் தோன்றவில்லை அவருக்கு.

“ஏண்டா தொர்ராசு.. மாமியார் வீட்டுக்குப் போன சரி.. அங்கயேக் கூட இருந்துக்க. அது உன் விருப்பம். ஆனா, இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கக்கூடாதுன்னு என்னா சட்டமா..? எத்தனை வருஷமாச்சு..” என்று பக்கத்தில் அமர்ந்திருந்தவர் கேட்க, “ஆங்.. போதும்.. போதும். இங்க வந்து குதிரையோட சேர்த்து நானும் கொள்ளு திங்கவா..?” என்று எகத்தாளமாக பதில் வந்தது அவனிடமிருந்து.

“இங்க என்ன சோத்துக்கு வழியில்லாமயா இருக்கேன்.. நாங்கல்லாம் கொள்ளையா திங்குறோம்..? அங்க என்னமோ மந்திரம் வச்சிருக்கானுவொ. மயங்கிக் கெடக்குறான்..அதை ஏன் கேட்டுக்கிட்டு விடுங்கையா..” என்று குப்பமுத்து பதில் சொன்ன விநாடியில் துரைராசு கிளம்பிவிட்டான். சடசடவென அவர் மூஞ்சிக்கு நேராகப்போய் நின்றுகொண்டு, சண்டைப்போட ஆரம்பித்துவிட்டான்.

“ஒழுங்கா அம்மாவுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் குடுத்திருந்தா இப்படி சாகக்கெடக்குமா..? உனக்கு எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு..? சந்தைப் போறதுக்கும், குதிரைக்குக் கொள்ளு வாங்குறதுக்குமே நேரம் பத்தல உனக்கு..”

“எல நாயி.. நான் மருந்து வாங்கித்தந்தனா, மசுரு வாங்கித்தந்தனான்னு நீதான் பாத்தியா..?”

-இப்படியாக நடந்த சண்டையில் திடீரென, குப்பமுத்துவை நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டான் துரைராசு. அவன் லேசாகத்தான் தள்ளினான் என்றாலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. நிறுத்திக்கிடந்த குதிரை வண்டியில் அமர்ந்திருந்ததால், நிலை தடுமாறி பின் பக்கமாக சாய்ந்தார். சலசலப்புடன் கூட்டம் ஓடிவந்தது. பக்கத்தில் நின்றிருந்த தங்கராசு ,’ங்ஞேங்ஙஞீன்ஞே..’ என்று கணைத்தது. ஆட்கள் ஆளும்பேருமாக ஓடிவந்து துரைராசுவை பிடித்து ஒதுக்கினார்கள். கீழே விழுந்து எழுந்த குப்பமுத்து சத்தமே இல்லாமல் எழுந்து, அவர் பாட்டுக்கும் வீட்டுக்குள் போனார். கொஞ்ச நேரத்தில் துரைராசு மருங்கொளத்துக்கே கிளம்பிவிட்டான்.

சாயுங்காலமாக தங்கராசுவை வண்டியில் பூட்டி கிளம்பிய குப்பமுத்து, நாலு ‘மூட்டை’யை ஒன்றாக வாங்கி, கண்ணை மூடிக்கொண்டு கடகடவென அடித்தார். போதைத்தாங்காமல் அவர் உடம்பு குலுங்கியது. அவரைத் தாங்கிக்கொண்டு தங்கராசு பழக்கப்பட்ட பாதையில் விரைந்தது.

இரவு ஒன்பது மணியிருக்கும்.. அம்சம்மாவின் உயிர் பிரிந்ததுவிட்டது. ஒரே கூப்பாடு. குப்பமுத்துவைத் தேடினால் ஆளைக்காணவில்லை. ஆளாளுக்குத் தேடினாலும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கடைசியில், ”அய்யன்கோயில் பக்கம் தங்கராசு தனியா நின்னு கத்திக்கிட்டுருந்துச்சு..” என்று பால்சாமி சொன்னதை வைத்து, ‘சரி போதை அடித்துவிட்டார் போல..’ என்று நினைத்து ஆட்கள் அழைத்து வரப்போனார்கள்.

அய்யன்கோயில் குதிரை சிலைக்கருகே பெருத்த உருவமாகப் படுத்துக்கிடந்தார் குப்பமுத்து. அவரது வாயிலிருந்து நுரை பொங்கி வழிந்தது. ஈக்கள் மொய்த்தன. “ரெட்டைப்பொணம்டா முருகேசா..” என்று பெருங்குரலில் கதறல் சத்தங்கள் கேட்க, அருகில் கிடந்த குதிரை வண்டியில் தூக்கிவைத்து இழுத்துப்போனார்கள். பக்கத்தில் பெரும் கணைப்போடு சுற்றி, சுற்றி ஓடி கொண்டிருந்தது தங்கராசு. நீண்ட நேரமாகியும் கணைப்பு அடங்கவில்லை. மெல்ல,மெல்ல சோர்வாகி அய்யன்குளம் வெளித்திண்ணை அருகே சரிந்து விழுந்தது. மெதுவாய் அடங்கத் தொடங்கிய அதன் கடைசி மூச்சில் வெளிப்பட்ட பால்டாயில் நாற்றம், மெதுவாக காற்றில் பரவத் தொடங்கியது.

– செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *