குண்டுப் பையன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,119 
 

முதன்முதலாக என்னை ‘குண்டுப் பையா’ என்று அழைத்தவன் யார் என்று எனக்குத் துல்லியமாய் நினைவிருக்கிறது.

அப்போது நான் மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். சொற்ப ஆசிரியர்களே கொண்ட எங்கள் அரசுப் பள்ளியில் பெரும்பான்மை நேரங்கள் விளையாட்டுக் கல்விக்குதான் என்பது ஒரு எழுதப்படாத விதிமுறை, அதன்படி நாங்கள் ஒருவரையொருவர் ஓடிப் பிடித்துக்கொண்டும், மரமேறிக் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டும் வருடங்களை விரட்டியபடியிருந்தோம்.

நீண்ட வகுப்பறைகளால் நிறைந்த எங்கள் பள்ளியின் தென்மேற்கு மூலையில், ஒரு தனித்த கட்டிடம் உண்டு. அது எங்கள் தலைமை ஆசிரியருக்கானது என்று அதன் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் – ஆனால் நாங்கள் அவரை அங்கே பார்த்த கணங்கள் மிகமிகக் குறைவு – உண்மையில், ‘ஹெச். எம்’ என்ற கம்பீரமான பதவிப் பெயரைத்தவிர்த்து, அவருடைய முகம்கூட எங்கள் மனதில் பதிந்திருக்கவில்லை. அவர் எப்போது பள்ளிக்கு வருகிறார், எப்போது செல்கிறார் என்றே எங்களுக்குத் தெரியாதபடி ஒரு மர்மக் கதாபாத்திரமாகவே அவர் இருந்தார்.

ஆகவே, நாங்கள் அந்த அறைக்குக் கொஞ்சமும் பயப்படவில்லை, அதன் சிறு ஜன்னல்களும், அவற்றைக் காப்பதற்கான சிமென்ட் பலகைகளும், எங்களின் ஆட்டங்களுக்குச் சவுகர்யமாய் இருந்தன – அந்த அறையை ஒட்டினாற்போல் சில மரங்கள் கிளைகளை விரித்திருந்தது இன்னும் வசதியாகிவிட்டது !

அப்போது ஏப்ரல் மாதம் என்று நினைவு – அதிவிரைவில் வந்துவிடப்போகிற மே மாத விடுமுறைகளின் ஞாபகத் திளைப்புடன், நீளமான ஒரு வெள்ளைப் பூவை ஏராளமாய்ச் சேகரித்துக்கொண்டிருந்தோம் நாங்கள்.

ஹெட் மாஸ்டர் அறையை ஒட்டியிருந்த மரங்களில்தான் அந்த வகை மலர்கள் நிறைய பூத்திருந்தன, ஆகவே, அந்தச் சிறு கட்டிடத்தைச் சுற்றிவந்து மலர்கள் பொறுக்கினோம்.

எங்கள் கையிலிருந்த பிளாஸ்டிக் பைகள் கிட்டத்தட்ட நிறைந்துவிட்ட நிலைமையில், மிக உயரமான ஒரு பையன் என்னைத் தடுத்து நிறுத்தினான், ‘என்னடா பண்றீங்க ?’

நான் திகைப்புடன் அவனைப் பார்த்தேன், அவனுடைய மேலுதட்டில் லேசாய்த் துளிர்த்திருந்த வியர்வையினிடையே மெலிதாய் முளைத்திருந்த பூனை மீசை, அவன் என்னைவிடப் பெரியவன் என்று தகவல் தெரிவித்தது – மீசை வைத்தவர்களின்மீதான என் பயம் அந்தக் கணத்தில் துவங்கியது.

‘ஒ – ஒண்ணுமில்லை !’, என்றபடி என் கையிலிருந்த பிளாஸ்டிக் பையை அவனிடம் நீட்டினேன், ‘பூ சேர்க்கிறோம் !’

‘என்னத்துக்கு ?’, இந்தப் பள்ளி வளாகம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பவன்போல் அதி தெனாவெட்டாய்க் கேட்டான் அவன்.

‘எதுக்குமில்லை !’, என்றேன் நான், ‘சும்மாதான், ஒரு விளையாட்டு !’

இதைக் கேட்டதும் அவன் பெரிதாய்ச் சிரித்து, ‘குண்டுப் பையா, இதெல்லாம் ஒரு விளையாட்டா ?’, என்றான், ‘பொட்டப்பிள்ளமாதிரி பூவைப் பொறுக்கிட்டிருக்கே ?’, என்றபடி என் கையிலிருந்த பையைத் தட்டிவிட்டான் அவன் – கிட்டத்தட்ட அரை மணி நேர சேகரிப்பான என் பூக்கள் தரையெங்கும் விழுந்து பரவின.

ஆனால், நான் அவனைக் கோபமாய் முறைத்தது அதற்காக இல்லை – என்னை ‘குண்டுப் பையன்’ என்று அழைத்த குற்றத்துக்காக.

என்னைவிட பலமடங்கு பெரியவனாய்த் தோன்றிய அவன், என் குற்றஞ்சாட்டுதலை அங்கீகரிக்கவில்லை, ‘என்னடா முறைக்கறே ?’, என்று மிரட்டியவன், ‘ஒழுங்கா க்ளாஸ¤க்குப் போய் பாடத்தைப் படி !’ என்றான்.

மெல்லமாய்த் தலையாட்டியபடி திரும்பினேன் நான். என்றாலும், மனதினுள் என் ஆங்காரம் குறைந்திருக்கவில்லை, அதெப்படி அவன் என்னை ‘குண்டு’ என்று அழைக்கப்போச்சு ?

வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாக அம்மாவிடம் கேட்டேன், ‘அம்மா, நான் குண்டுப் பையனா ?’

அம்மாவுக்கு அந்தக் கேள்வியில் அவ்வளவாய் ஆர்வமில்லை, ‘ஒழுங்கா பாடத்தைப் படி !’, என்றாள் சம்பந்தா சம்பந்தமில்லாமல்.

வேலைப்பளுவினால் அம்மா என்மீது காட்டிய அந்த அலட்சியம், எனக்கு வேறுவிதமாய்த் தோன்றியது – நிஜமாகவே நான் குண்டுப் பையன்தான், ஆனால், அந்த மீசைப் பையனைப்போல், அதை என் முகத்துக்கு நேராக சொல்ல மனமில்லாமல்தான், அம்மா இப்படிச் சுற்றி வளைக்கிறாள் !

இந்த எண்ணம் தோன்றியதும், நான் விசும்பி விசும்பி அழுதேன் – எனக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்த யாரிடமும், நான் என் அழுகைக்கான காரணம் சொல்லவில்லை, அவர்கள் என்னைத் தேற்றவும் அனுமதிக்கவில்லை.

அதன்பின் என்ன நடந்தது என்று எனக்குச் சரியாக நினைவில்லை – அப்பா ஒரு ஐஸ் க்ரீம் வாங்கித் தந்து என்னைச் சமாதானப்படுத்தியிருக்கலாம் – உடனே, என் அடிப்படைக் கோபத்தையும், வருத்தத்தையும் மொத்தமாய் மறந்துவிட்டு, நான் அந்த ஐஸ் க்ரீமைச் சாப்பிட்டு, மேலும் குண்டாகிப்போயிருக்கலாம் !

இப்படியாக, பள்ளிக் காலத்தில் என்னை லேசாய்த் தொட்டுப்பார்த்து, விட்டுவிட்ட ‘குண்டு’ப் பிரச்சனை, கல்லூரிக் காலத்தில் மேலும் ஆவேசமாய்த் தாக்கியது !

கல்லூரியில் என்னோடு படித்த பையன்களில் எல்லோரும், ஏதேனும் ஒரு விளையாட்டில் விற்பன்னர்களாய் இருந்தார்கள் – அல்லது, அதற்கான ஆர்வத்துடன் இருந்தார்கள். நான் ஒருவன்தான் எதிலும் கலந்துகொள்ளாமல் நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்தேன் !

செய்வதற்கு ஏதுமற்ற ஒரு சனிக்கிழமை சாயந்திரத்தில், இந்த ஞானோதயம் எனக்குள் தோன்றியபோது, நான் உற்சாகமாய்த் துள்ளியெழுந்து, என் அறை நண்பனிடம் கேட்டேன், ‘சரவணா, நானும் உன்னோட டெய்லி ஜாகிங் வரட்டுமாடா ?’

அவன் என்னை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, ‘அதெல்லாம் உன்னால முடியாதுடா !’, என்றான், ‘பேசாம நீ ஒண்ணு பண்ணு, டெய்லி ஒரு மணி நேரம் சும்மா வாக்கிங் போயிட்டு வா ! ஓரளவு உடம்பு குறைஞ்சப்புறம், ஜாகிங்கைப்பத்தி யோசிக்கலாம் !’

இதைக் கேட்டதும், நான் அவமானத்தில் கூனிக் குறுகியதுபோலாகிவிட்டேன் – என் அறை நண்பன், இந்தக் கல்லூரியிலேயே என்னை மிகவும் நேசிக்கிற சிநேகிதன், நினைத்தபோதெல்லாம் என்னிடம் கடன் கேட்கிற அளவு உரிமை(?)க்காரன், என்னோடு ஒரே தட்டில் எச்சில் சோறு சாப்பிடுமளவு நெருங்கிய சரவணன், அவன் என்னை ‘குண்டு’ என்று மறைமுகமாய்ச் சொல்லிவிட்டான் !

முன்புபோல், இந்த விஷயத்தை உறுதி செய்துகொள்வதற்காக நான் யாரிடமும் போய் நிற்கவில்லை – கல்லூரி மைய மண்டபத்திலிருக்கிற ஆளுயரக் கண்ணாடியில் என் உருவம் அடங்காததைப் பார்த்ததுமே, எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது – ஏழெட்டு வயதில் யாரோ என்னை ‘குண்டுப் பையா’ என்று கூப்பிட்டபோது நான் குண்டாயிருந்தேனோ, என்னவோ, தெரியாது – ஆனால், இப்போது, பார்ப்பவர்கள் பயப்படுகிற அளவு நான் குண்டு இளைஞனாகியிருக்கிறேன் !

ஒற்றை அழுகையில் பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிற குழந்தைப் பருவமும் கழிந்துவிட்டது – இப்போது நான் என்ன செய்வேன் ?

தன்னிரக்கத்தின் கண்ணீருடன் இந்தக் கஷ்டத்தை நான் அசைபோட்டபோது, என்னுடைய பிரச்சனை என்ன என்று புரிந்துவிட்டது – இந்தக் கஷ்டத்தில் துவங்கி, கடலை மிட்டாய், பாம்பே மிக்ஸர், சோளப்பொரி, வாழைப்பழம் என்று எந்நேரமும் ஏகப்பட்ட விஷயங்களை நான் அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன் – உடனடியாக அதைக் குறைத்தாகவேண்டும் – வாயைக் கட்டினால்தான் வயிறு கட்டுப்படும் !

‘ஆஹா, என்னுடைய கஷ்டம் தீர்வதற்கு இப்படியொரு எளிமையான வழியா ?’, என்று வியந்தபடி, என்னுடைய சாப்பாட்டு சமாச்சாரங்களைக் கட்டுக்குள் அடக்கத்துவங்கினேன் நான்.

காலை மெஸ்ஸில் இட்லி என்றால் பரவாயில்லை, ஒருவேளை ‘தோசை’யாகிவிட்டால், சமையல்காரரிடம் சொல்லி, எண்ணை குறைவான தோசைகளைக் கேட்டுப்பெறுவது கட்டாயம் – அதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி வேண்டாம் – தேங்காயினால் உடம்பு குண்டாகிறது – பதிலாக, வெறும் சாம்பார் போதும், அதுவும் இல்லாமல் சாப்பிட முடிந்தால் இன்னும் நல்லது – எதுவும் சாப்பிடாமலே இருந்துவிட்டால் இன்னும் இன்னும் நல்லது !

மதியச் சாப்பாடுக்குமுன் ஏகப்பட்ட தம்ளர்கள் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிவிட்டால், சாதம் குறைவாகச் சாப்பிடலாம் – அரிசி சாப்பிட்டால் உடம்பு ஏறிப்போவதால்தான், எல்லோரும் ‘எந்தக் கடையில் அரிசி வாங்கறே ?’ என்று கிண்டலாய்க் கேட்கிறார்கள் !

மாலை வேளையில் மசாலாக் கடலையோ, தேங்காய்ப் பால் முறுக்குகளோ கொறிப்பது வேண்டாம் – அதற்குபதிலாக கந்தர் சஷ்டி கவசத்தை இருபது முறை வாசித்தபடி, கல்லூரி மைதானத்தைச் சுற்றிச்சுற்றி வந்தால், மூச்சிறைத்து உடம்பு குறையும் !

ராத்திரிச் சாப்பாட்டுக்குபதிலாக, இரண்டு வெள்ளரிக் காய்களைத் துண்டு பண்ணித் தின்றுவிட்டு, அரை தம்ளர் மோரைக் கரைத்து இரண்டு தம்ளராக்கிக் குடித்துவிட்டுப் படுத்துவிடுவது மத்யமம் – அதற்குமுன்னால், ஹாஸ்டலின் நான்கு மாடிகளிலும் இரண்டு தடவை ஏறி, இறங்கிவிட்டுப் படுத்தால் உத்தமம் !

இப்படி ஏகப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை அமுலுக்குக் கொண்டுவந்து, வெற்றிகரமாய் கைப்பிடிக்கத் துவங்கிய பதினெட்டாவது நாள், வயிற்றுக் கோளாறினால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் !

விஷயம் அறிந்து ஓடி வந்த என் அம்மாவும், அப்பாவும், என்னை அறையாத குறையாய்த் திட்டித் தீர்த்தார்கள், ‘உடம்பைக் குறைச்சாகணும்-ன்னு உனக்கு யார்டா சொன்னாங்க ? இப்போ உங்கப்பா இல்லையா ?’, என்று சமயம் பார்த்து ஸேம் ஸைட் கோல் போட்டாள் அம்மா, ‘வெள்ளை மனசு உள்ளவங்களுக்குதான் எது சாப்பிட்டாலும் உடம்பில ஒட்டும் !’

அம்மாவின் இந்த ‘வெள்ளை மனசு’ ·பார்முலா, எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது, சில பேர் எவ்வளவு சாப்பிட்டாலும் மெலிதாகதான் இருக்கிறார்கள் – இன்னும் சில பேர், (என்னைப்போல) பட்டினி கிடந்தாலும் குண்டாகவே தெரிகிறார்கள் – இதற்கெல்லாம் இந்த வெள்ளை மனசுதான் காரணமாய் இருக்கவேண்டும் !

இந்த எண்ணம் தோன்றியபின், உற்சாகத்தில் எனக்கு வானத்தில் பறப்பதுபோலிருந்தது – எனக்கு வெள்ளை மனசு, அதனால்தான் நான் சாப்பிடுவதெல்லாம் உடம்பில் ‘பச்சக்’ என்று ஒட்டுகிறது ! ஆகவேதான் நான் குண்டாயிருக்கிறேன் ! ஆஹா, ஓஹோ, பேஷ், பலே !

மறுநாள் காலை, அம்மாவையும், அப்பாவையும் எதிரே உட்காரவைத்துக்கொண்டு, அன்னபூரணாவில் இரண்டு மசால் தோசைகளும், வறுத்த முந்திரிப் பருப்பும் சாப்பிட்டு, என் விரதங்களை முடித்துக்கொண்டேன். அதன்பின், சாப்பாட்டு விஷயத்தில் சகஜ நிலைமை திரும்பியது.

அன்றுமுதல், கல்லூரியில் படித்த நான்கு ஆண்டுகளும், நான் கல்லூரி மைதானத்தைத் திரும்பியும் பார்க்கவில்லை – கால் பந்து, கூடைப் பந்து, ஹாக்கி, கிரிக்கெட் என்று எந்த ஆட்டத்திலும் கவனத்தைச் செலுத்தாமல், நான் உண்டு, என் ‘வெள்ளை மனசு’ உண்டு என்று இருந்துவிட்டேன் ! பலன் – கல்லூரியைவிட்டு வெளியே வந்தபோது, என்னுடைய இடுப்பளவு நாற்பதைத் தாண்டியிருந்தது – எந்த ரெடிமேட் உடையும் ஒத்துவராமல், எல்லா ஆடைகளையும் தனியாக ஆர்டர் கொடுத்துத் தைக்கவேண்டியிருந்தது !

அதனால் என்ன ? வெள்ளை மனசுக்காரர்களுக்கு இந்தக் கஷ்டமெல்லாம் வாய்க்கிறதுதான் !

இந்தச் சமாதானத்துடன் வேற்றூரில் வேலைக்குச் சேர்ந்தேன் நான் – புதிய இடம், புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலை ! மிகுந்த உற்சாகத்துடன் அதிவேகமாய்க் கழிந்த நாள்கள் அவை !

வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழிந்த சூழ்நிலையில், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு மனோதத்துவ டாக்டர் வந்தார், எங்கள் எல்லோரையும் தனித்தனியே சந்தித்து, மனரீதியிலான எங்கள் பிரச்சனைகளை அறிந்து தீர்வளிப்பதற்காக இந்த வருடாந்திர ஏற்பாடு !

அந்த டாக்டர் எங்களுக்கு ஒரு பெரிய விளையாட்டுப் பொருளாகிவிட்டார் – ‘போச்சுடா, நீ பைத்தியம்-ன்னு இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிடும் ! உன்னை கீழப்பாக்கத்துக்கு அனுப்பிடப்போறாங்க !’, என்று ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டோம் !

நான்கைந்து நாள்களுக்குப்பின், நான் அந்த டாக்டரைச் சந்திக்கச் சென்றேன், சுஜாதா நாடகத்து பூர்ணம் விசுவநாதன்போல் முதிர்ச்சியான முகம், லேசான குறுந்தாடியுடன் என்னை வரவேற்றார் அவர் !

வழக்கமான விசாரிப்புகள், புன்னகைகள் முடிந்தபின், ‘சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை ?’, என்றார் அவர்.

‘ஒரு பிரச்சனையும் இல்லை டாக்டர் !’, என்று தோள்களைக் குலுக்கினேன் நான், ‘இது சும்மா ரொட்டீன் விஷயம்தானே ? உங்களைப் பார்த்து ஒரு “ஹாய்” சொல்லிட்டுப்போலாம்ன்னு வந்தேன் !’

‘அது சரி !’, என்று சிரித்த டாக்டர், சற்றே தயங்கி, ‘உங்களை ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைச்சுக்கமாட்டீங்களே ?’

‘என்ன டாக்டர் ?’

‘உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா ?’

‘இல்லை ! ஏன் கேட்கறீங்க ?’

இப்போது டாக்டர் மீண்டும் பேசத் தயங்கினார், சற்றுப் பொறுத்து, ‘உங்க வெயிட் என்ன ?’ என்றார்.

நான் சட்டென்று மௌனியாகிவிட்டேன். அவருடைய இருவேறு கேள்விகளுக்கும் ஒருவேளை தொடர்பு இருக்குமோ என்று தோன்றியதும், என் வெள்ளை மனசுகூட பேசுவதறியாது திகைத்து உறைந்துவிட்டது.

அன்றிரவு என் அறை நண்பனிடம் இதுபற்றிப் பேசினேன். அவனும் சிறு தயக்கத்துடன் என் சந்தேகத்தை உறுதி செய்தான், ‘நீ கொஞ்சம் எடையைக் குறைக்கணும்பா ! குண்டானவங்களுக்குதான் சட்டுன்னு ஹார்ட் அட்டாக் வருமாம் !’

அவன் பேசப்பேச, குண்டு எஞ்சினியராகிய அவமானத்துடன் தலை குனிந்திருந்த நான், மீண்டும் எனது எடைக் குறைப்பு முயற்சிகளைத் தூசு தட்டி வெளியிலெடுத்தேன் !

இந்தமுறை நான் வயிற்றைக் கெடுத்துக்கொள்ளத் தயாரில்லை ! ஆகவே, ஒரு உணவியல் டயட்டீஷியனை அணுகி, அவருடைய ஆலோசனையைப் பெற்றேன் – பட்டினி கிடப்பதில்லை, ஆனால், ஒரு நாளைக்கு இத்தனை கேலரி என்று கணக்கிட்டு, அருகம்புல் சட்னி, கேரட் சாறு, வேகவைத்த பீன்ஸ், பொடித்த தக்காளி, எண்ணையில்லாத சப்பாத்தி என்று அவர் வகுத்துத் தந்த சிறு பட்டியலுக்குமேலே, ஒரு துரும்பைக்கூட சாப்பிடுவதில்லை !

இதனால், நாள்முழுதும் லேசாய்ப் பசியெடுத்துக்கொண்டேயிருப்பதுபோன்ற உணர்ச்சி என்னை வாட்டியது. எந்நேரமும் வயிற்றில் கடமுடவென்று ஒரு காற்று உருளை சுழன்றுகொண்டிருப்பதான வேதனை – என்றாலும், நான் என் நோக்கத்தில் அதிஉறுதியாய் இருந்ததால், எந்தப் பசியாலும், அசௌகர்யத்தாலும் என்னை அசைக்கமுடியவில்லை ! (‘ரொம்பப் பசித்தால், நூறு மில்லி எலுமிச்சை சாறு குடிக்கலாம் !’, என்று அனுமதித்திருந்தார் என் மருத்துவர், ஆனால், அந்த சலுகையைக்கூட நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை !)

சொன்னால் நம்பமாட்டீர்கள் – இந்தக் கட்டாய உணவுக் குறைப்பால், ஒரு வருடத்தில், 86 கிலோவிலிருந்து, எழுபது கிலோவுக்குக் குறைந்தேன் நான் – வாரந்தோறும் ஒரே மெஷினில் எடை பார்த்து, டைரியின் பின் பக்கத்தில் குறித்துவைத்து, என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன், சபாஷ்டா பையா !

என்னுடைய எடை அறுபத்தொன்பதரை கிலோவாக இருந்தபோது, எனக்குத் திருமணமானது – முதலிரவில், மனைவியிடம் முதல் பேச்சாக, ‘உனக்கு எண்ணையில்லாம தோசை செய்யத் தெரியுமா ?’, என்று கேட்ட ஒரே மாப்பிள்ளை நானாகதான் இருப்பேன் !

எனக்கு வாய்த்த மனைவி, ஒரு அப்பாவி – நன்றாக சமைத்தால்தான், கணவன் தன்னிடம் பிரியமாக இருப்பான் என்று நம்பும் போன தலைமுறைப் பெண்களின் எச்சம் – எண்ணையில்லாமல் தோசையோ, வேறொரு பண்டமோ செய்தால், அதில் சுவையிருக்காது என்று திடமாய் நம்புகிறவள் !

ஆகவே, ஒருபக்கம் என்னுடைய டயட் கோரிக்கைகளுக்கும், கட்டளைகளுக்கும் பெரிதாய்த் தலையாட்டினபடி, மறுபக்கம் சமையலில் எல்லாவிதமான போஷாக்குப் பண்டங்களையும் சேர்த்துக் கலக்கினாள் அவள் – ஐந்தாறு வருடங்களாய் ஹோட்டல் சாப்பாட்டையும், ஒன்றரை வருடமாய் வெறும் பழம், காய்கறிகளையும் தின்று மரத்துப்போயிருந்த என் நாக்கு, இந்தச் சுவையின் மகுடிக்குத் தலையாட்டி வணங்கி, ஒடுங்கிவிட்டது !

ஆறே மாதங்கள் – என் எடை பழையபடி எண்பதுகளுக்குத் திரும்பிவிட்டது ! முன்பு, என் தொடர்ச்சியான எடைக்குறைவை ஆச்சரியத்துடன் பார்த்துப் பாராட்டிய என் அலுவல் நண்பர்கள், இப்போது நான் ஒரு பெரிய பலூன்போல ஊதிக்கொண்டுபோவதை நமுட்டுச் சிரிப்போடு பார்த்து, ‘கல்யாணமாயிட்டாலே அப்படிதான் !’, என்று கிண்டலடித்தார்கள் !

இப்படியாக, நன்றாகச் சாப்பிடுவதும், அது ஜீரணமானபின், அதையெண்ணிக் குற்றவுணர்ச்சியை அனுபவிப்பதும் எனக்கு வழக்கமாகிவிட்டது, ‘கேவலம், இந்தச் சாப்பாட்டின் ருசி வலையிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லையே !’, என்று நினைக்கிறபோது எனக்கு ரொம்ப வெட்கமாயிருக்கிறது – ஆனாலும், அடுத்த வேளை வீட்டில் பொன்னிறமான ஆலூ பரோட்டாவைப் பார்க்கிறபோது, வாய் தானாய்த் திறந்துகொள்கிறது ! நேரடியாக அடுப்பிலிருந்து எடுத்துச் சாப்பிட்டுவிடலாமா என்று தோன்றுமளவு புத்தி தறிகெட்டுப் பறக்கிறது !

ஆச்சு, இந்த கலாட்டாவெல்லாம் நடந்து ஏழெட்டு வருடங்களாகிவிட்டது, இப்போது என் குட்டிப் பையன் என்னை ‘குண்டு அப்பா’ என்கிறான் – அநேகமாய் என் மனைவிதான் அவனுக்கு இதைச் சொல்லித்தந்திருக்கவேண்டும் என யோசித்தபடி, ‘சரிதாண்டா, ஆனா, நீ என்னைப்போல இருக்காதே !’, என்று அக்கறையாய் அறிவுரை சொல்கிறேன் !

கையில் கிரிக்கெட் மட்டையுடன் என் பையன் வெளியே ஓடிப்போனதும், என் மனைவி கொண்டுவந்து வைத்த சூடான புளி அவலை ஸ்பூனில் அள்ளிச் சாப்பிட்டபடி யோசிக்கிறேன் – இதற்குமேல் இந்த ‘குண்டு’ அடைமொழியிலிருந்து நான் தப்புவது மனித சாத்தியமில்லை. ஆகவே, ‘குண்டுப் பையா’வில் துவங்கிய இந்தப் பயணத்தின் நிறைவாக, என்றைக்காவது என்னை ஒருவன் ‘குண்டுக் கிழவா’ என்று கூப்பிடுவதுவரை காத்திருக்கவேண்டியதுதான் !

அப்போதாவது, அவனிடம், ‘நான் ஒண்ணும் குண்டு இல்லை !’, என்று சண்டை போடாமல், அல்லது அவன் சொன்னதை ஒரு அவமானமாய்க் கருதி, குண்டைக் குறைப்பதற்கான அரைகுறை அடிதடிகளில் இறங்காமல், யதார்த்த உண்மையை உள்ளபடி ஏற்றுக்கொள்கிற பக்குவம் வருகிறதா, பார்க்கலாம் !

நன்றி: ‘அமுத சுரபி’ மாத இதழ்

– என். சொக்கன் [nchokkan@gmail.com] (மே 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *