ரயில் சென்னை சென்ட்ரலில் வந்து நின்றதும் , லதாவுக்கு தலை கால் புரியவில்லை. உடம்பே லேசாக நடுங்கியது. ஒரு வழியாக வந்து விட்டோம்.
யார் என்ன சொல்லியும் பொறுமை கை குடுத்தது. அதற்க்கு முன் அந்த ஈச்சனாரி தெய்வத்தையும் நினைத்தே ஆகவேண்டும். விடாப் பிடியாக அந்தக் கோவிலைச் சுற்றியதோ என்னவோ இன்று சென்னைப் பட்டினம் வந்தாச்சு.
ஸ்டேஷனுக்கு வந்துடரேன்னு சொன்ன இளங்கோவைத்தான் இன்னும் காணோம். சனிக்கிழமை கொஞ்சம் வேலை ஜாஸ்த்திதான் என்றாலும், கண்டிப்பாக கம்பெனி புல்லட்டில் வந்து விடுவதாகத் தான் சொன்னார்.
சென்னையில் அப்பொழுதுதான் மழை அடித்தது போலிருக்கு, காத்து வேற எக்கச்சக்கமாக இருந்தது. போன் பண்ணிப் பாக்கலாம் என்று போனை எடுத்தவள் அப்படியே வைத்து விட்டாள் – “வேண்டாம் , வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார். என்னவானாலும் எடுக்க மாட்டார். ஹெல்மெட் போட்டுக் கொண்டு செல் போனைத் தொடவே மாட்டார். அவ்வளவு ஒழுக்கம்”.
இந்த பெர்ஃபெக்க்ஷன் தான் அவளை மூன்று வருடங்களுக்கு முன் அவனிடையே ஈர்த்து கட்டியும் போட்டது.
கோவை கணபதியில் , அவள் அப்பொழுது பீ.எஸ்.ஸி இரண்டாம் வருஷம். – மறுநாள் பரீட்சைக்காக அஸ்ட்ரானமி படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த இயற்க்கையின் மேல் அவ்வளவு பிடித்தம். ஊர்ந்து படித்துக் கொண்டிருந்தவள் வாசல் மணி கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தால் ஒல்லியாக, சிவந்த ஒரு பையன், மூன்று நாள் தாடி, ஆனால் நன்கு வெட்டப் பட்டது – இப்பத்தான் வெச்சிருக்கான் போலிருக்கு- கையில் ஹெல்மெட்டுடன் – “என் பேர் இளங்கோ. தாமோதரன் ஸார் வரச் சொல்லி இருந்தார். இருக்காரா?”
“அப்பா இன்னும் வரல்லை. ஏதோ திடீர் மீட்டிங்காம். போன் பண்ணினார். சனிக்கிழமை வர முடியுமான்னா கேட்டார்”.
ஏமாற்றத்தை சாமர்த்திய்மாக மறைத்த படி “சரி” என்று சொல்லி நகர்ந்தவனை, ஏனோ வலுக் கட்டாயமாக நிறுத்தினாள். “தண்ணி சாப்டறேளா”.
மரியாதையாக ஷூவைக் கழட்டி உள்ளே வர முயன்றவனை “பரவாயில்லை” என்றாள்.
சிரித்துக் கொண்டே “நான் வீடு கட்டுபவன். அதன் மதிப்புத் தெரியும். நானே மதிக்கலேன்னா தப்பில்லையா” என்றவனை மறுபடியும் ஏற இறங்கப் பார்த்து முடிப்பதற்க்குள், அவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி நகர்ந்து கொண்டிருந்தான்.
அன்றிலுருந்து அவள் மனதில் அஸ்ட்ரானமிக்கு முன்பாக வேறு ஏதோ ஒன்று இடம் பிடிக்க ஆரம்பித்தது. தண்ணீர் தொட்டியை இளங்கோவின் ஆட்கள் கொத்திப் பூசியபோது மொட்டை மாடிக்கு அடிக்கடி போனாள்.
“என்னடி ஆச்சு உனக்கு. அஸ்ட்ரானமில மார்க்கு குறஞ்சுருக்கு” ன்னு தங்கை கேட்ட போது “ஹூம். க்ரஹம் சரியில்லை” ன்னு நக்கலாச் சொன்னா.
புன்னகைல ஆரம்பிச்சது அவளுக்கே தெரியாமல் எஸ்எம்எஸ் பரிமாற்றங்கள் தாண்டும் பொழுது வெகு தூரம் போயிருந்தார்கள். இளங்கோ வீட்டுல புரிஞ்சுண்டாலும், இவ அப்பாதான் ஒத்துக்கவே மாட்டேனுட்டார்.
“அவன் வெறும் எல், எம் ஈ தான். ஒரு ஸிவில் இஞ்சினீயர்னா கூட பரவாயில்ல. நாளைக்கு ரொம்பக் கஷ்டப் படுவே”.
“திடீர்ன்னு அவன் உன்னை விட்டுட்டா” என்று அப்பா தன் மனக் குமுறலை க்ரோதமாக வெளியிட்ட போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ” என்ன நடந்தாலும், உங்க கிட்ட வந்து மட்டும் நிக்க மாட்டேம்ப்பா”ன்னு வீராப்பு பேசிட்டுக் கிளம்பியவள் தான். கல்யாணத்துக் கூட கோவிலுக்கு அம்மாதான் தங்கையுடன் வந்திருந்தாள்.
“அப்படி என்னம்மா தப்பு பண்ணிட்டேன்னு” மனம் தாங்காமல் கேட்டவளை அம்மாதான் சமாதனப் படுத்தினாள் ” கொஞ்ச நாள் ஆனால் கோபம் தணியும். அதுவரை பொறுமையாய் இரு”.
லதாவைக் கையைப் பிடித்த நேரம், இளங்கோவிற்கு மள மளவென ஆர்டர்கள் குவிந்தது. ஒரே வருடத்தில் கோவையில் ஒரு நம்பிக்கையானவனாய்ப் போனான். அப்புறம் தான் அடித்தது யோகம்.
என்றுமில்லாமல் அன்று சீக்கிரமே வீடு திரும்பியவன், லதாவின் கையைப் பிடித்து “சென்னையிலுள்ள ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனினியிலுருந்து ஆர்டர் வந்திருக்கு. இன்னமே நம்ப ஆர்டர் தேடி அலய வேண்டாம். மாசா மாசா சம்பளம் தானா வரும்” என்று சொன்னவனை, விக்கித்துப் பார்த்தாள்.
“கவலைப் படாதே. குடுக்குற தெய்வம் கூரையப் பிச்சுண்டு கொடுக்கும்: என்றவன் சென்னை வந்து வீடு பார்த்து அவளை வா என்று சொன்ன போது ஆறு மாதம் ஓடிப் போயிருந்த்து.
சடசடவென்று இடித்த பலமான இடியும் கண்ணைப் பறிக்கும் மின்னலும் , லதாவின் கனவைக் கலைத்து நிகழ் காலத்துக்குக் கூட்டி வந்தது. கிட்டத் தட்ட வண்டி வந்து ஒரு மணி நேரம் ஆகியும் இளங்கோ வராததால், செல் போன் போட்ட போது, மௌனமே பதிலாக வந்தது. மழை போல் என்று நினைத்துக் கொண்டாள்
இனியும் காத்திருந்து ப்ரயோஜனமில்லை, சம்பள நாள் வேற, மேஸ்த்ரி, சித்தாள்களுக்கெல்லாம் பட்டுவாடால பிசி போல என்று நினைத்து, ஆட்டோவைக் கூப்பிட்டாள்.
“எங்கேம்மா” என்ற ட்ரைவரிடம் ” போருர் பக்கத்தில் மௌலிவாக்கம் ” என்றாள் !
தூரத்து இடியைக் கேட்டு இளங்கோவின் வார்த்தையை நினைத்துப் புன்னகைத்தாள் ” கூரையை பிச்சுண்டு கொடுக்கும்”
கபாலியின் எழுத்தில் நாளுக்கு நாள் சிறுகதையின் நுட்பங்கள் கை வரப் பெற்று மெருகு கூடிக் கொண்டே போகிறது. கதையை முடித்த விதம் அருமை. வாழ்த்துக்கள். – ரேவதி பாலு
Nice way of linking the story to a recent incident. But why this saddism? Expecting many more sir.
சிறப்பான கதை. சொள்ளலப்பட்ட விதம் அருமை. மனதை தொட்டது