கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,065 
 

கை தவறியதோ என்னவோ தெரியவில்லை… மற்ற இசைத்தட்டுகள் அப்படியே இருக்க, பித்தனின் இசைத்தட்டு மட்டும் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. பதறிவிட்டது மணவாளனுக்கு. காக்கையின் இரு சிறகுகள் போல் இருந்த அந்த இசைத்தட்டுத்துண்டுகளைக் கையில் எடுத்தான். பித்தனுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்என்கிற கிலி அவனைப் பற்றிக்கொண்டது. வெளியே வந்தான்.

சிற்றுண்டியும் தேநீரும் பரிமாறப்படும் அந்த நீண்ட கூடத்தில்,மணவாளனின் அப்பாவின் மேற்பார்வையில் ஆயத்த வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. நகரத்தின் பிரதான வீதியிலிருந்து விலகி, அடுத்த கட்டடங்களின் தொடர்பே இல்லாமல், ஒரு பெரிய வெளியில், மூங்கில், பனையோலை கொண்டு எழுப்பப்பட்ட சிறிய சிற்றுண்டி விடுதி அது. ‘இசைத்தட்டுத் தேநீர் கடை’ எனப் பிரசித்திபெற்ற விடுதி.

ஒரு கோப்பைத் தேநீரின் விலையைவிட அதிகமாக ஒரு ரூபாய் கொடுத்தால், விருப்பமான இசைத்தட்டின் பாடல் ஒன்றைக் கேட்டு மகிழலாம். குறுந்தகட்டில் உலகம் சுருங்கத் தொடங்கிவிட்டாலும், பழைய இசைத்தட்டுப் பிரியர்கள் இன்னமும் இருப்பதன் அடையாளமாக, மாலை வேளைகளில் அந்தச் சிற்றுண்டிச் சாலையில் கூட்டம் அலைமோதும். வயது வித்தியாசமின்றி, எல்லாத் தரப்பு மக்களும் வருவார்கள். மொழி பேதம் இன்றி மன்னாடேயிலிருந்து பால சரஸ்வதி வரை, விதவிதமான குரல்களின் சுழற்சியில் கண்கள் கிறங்க உலகம் மறந்தவர்கள் ஏராளம். ஓரொரு முறை, கால வெள்ளத்தில் அடித்து மூழ்கிக் கரை ஒதுங்கிய பாடகர்கள், தாங்கள் பாடிய பழைய பாடல்களை இசைத்தட்டு வடிவில் கேட்க வரும்போது, மணவாளனுக்கு மெய் விதிர்க்கும். அந்தக் கூட்டத்தில் முற்றிலும் வேறானவன் பித்தன்.

அவன் உண்மைப் பெயர் எவருக்கும் தெரியாது. கலங்கிப்போன கண்களும், நினைவுகளை மட்டுமே பார்வையாகக் கொண்ட விழிகளும், குடிமயக்கம்ஏது மின்றித் தடுமாறும் நடையும், அழுக்கேறிய உடையும், எண்ணெய் காணாதுபழுப் பேறிய சிகையும், அவனை ஒருபித்தனாகவே அந்த விடுதியில் உள்ளபணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தின. அதுவே, அவனை விளிக்கும் பெயரும் ஆனது.

அவன் அறிமுகமான தினத்தை மறக்கவே முடியாது.

‘‘புதிய பறவை திரைப்படத்தின் ‘பார்த்த ஞாபகம்…’ பாட்டின் இசைத்தட்டுஇருக்கா?’’ என்று கேட்டபடிதான் உள்ளே நுழைந்தான்.

‘‘மகிழ்ச்சிப் பாட்டா, சோகப் பாட்டா?’’ என்ற மணவாளனின் கேள்விக்கு, அவன் நெகிழ்ந்திருக்க வேண்டும்.

‘‘சரியாக் கேட்டீங்க. அதே படத்தில் ஆர்ப்பாட்டமா சுசீலாம்மா பாடும் இன்னொரு பாடலும் இருக்கு. ஆனா, அதுல ஏகப்பட்ட இன்ஸ்ட்ருமென்ட்ஸ்… ஆர்கெஸ்ட்ரா மிரட்டல்! இது எல்லாம் இல்லாம, அதே பாட்டை ஒற்றைக் குரலா, தனியா பாடுவாங்க. இதில் உள்ள ஈரம் வேறு எந்தப் பாடலுக்கும் கிடையாது!’’

இவ்வளவுதான் அவன் பேசி, அவர்கள் கேட்டது. அதன் பிறகு, அவன் தினமும் சரியாக மாலை மூன்று மணிக்கு உள்ளே நுழைவான். கூட்டம் சற்று அடங்கிய அந்த வேளையில், இசைத்தட்டு அறையில் அமர்வான். மணவாளன்தான் இந்த இரண்டு மாதமும் அவனுக்கான இசைத் தட்டைச் சுழலவிடுகிறான். எவ்வித அலங்காரமும் இன்றி, உயிரின் உள்ளே புகுந்து ஒலிக்கும் அந்தப் பாடல்.

அந்த நீல நதிக்கரையோரம் – நீ
நின்றிருந்தாய் அந்தி நேரம் – நான்
பாடி வந்தேன் ஒரு ராகம் – நாம்
பழகி வந்தோம் சில காலம்.

அவனைப் பற்றி ஒரு குறிப்பும் தெரியாது. அவன் அந்த வளாகத்தில் செலவிடும் நேரம் அதிகபட்சம் பதினைந்து நிமிடங்களைத் தாண்டாது. அவன் வரும் நேரம், தினமும் கேட்கும் ஒரே பாடல், அவனது லயிப்பு, அவனது மௌனம் எல்லாமாகச் சேர்ந்து, அவனைக் குறித்த அவர்களின் சுயகணிப்பின் மதிப்பை வளர்த்துக்கொண்டே போயின. அவனை யாரும் வெளியில் வேறு ஓர் இடத்தில் பார்த்ததில்லை. அவன் ஓர் அமானுஷ்ய மனிதனாக விளங்கினான். பாடல் முடிந்ததும், அஞ்சலி போல் இரண்டு நிமிட நேரம் கண்களை மூடிக்கிடப்பான். அவனது அந்த மௌனம், பாடலுக்கு அதீத கனத்தை ஏற்படுத்தும்.

அந்த நிலவைக் கேளது சொல்லும்
அந்த இரவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்

– என்ற வரிகளை மணவாளன் வேறு எங்கேனும் கேட்க நேரிட்டால், சட்டென ஒரு விதிர்ப்பு ஏற்படும். பித்தனின் முகம் நினைவில் எழும்.

பித்தன் சரியாக மூன்று மணிக்கு வந்து, அந்த இசைத்தட்டைச் சுழலவிடச் சொன் னால் என்ன செய்வது என்ற எண்ணம் மணவாளனுக்கு அதிகமானது. குறிப்பிட்ட பாடல்கொண்ட ஒலிநாடாவைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து இசைக்கச் செய்யலாம்தான். ஆனால், இசைத்தட்டு சுழன்று ஒலிப்பதற்கும், ஒலிநாடாவோ, குறுந்தகடோ ஒலிப்பதற்கும் விளக்க முடியா வேறுபாடு உள்ளது. வாடிக்கையாளரின் மனத் திருப்தி என்பது, சில நேரங்களில் ஈடு செய்யமுடியாத உறவாகிவிடுகிறது. நுகர் தன்மையும் மீறி வேறு சில குணங்கள், வியாபாரி – வாடிக்கையாளர் இடையில் மலர்ந்து விடுகின்றன.மணவாளன் தனது வாடிக்கையாளர்களாக விளங்கும், திரைப்படத் துறையைச் சார்ந்த இரண்டு, மூன்று நண்பர்களிடம் ‘புதிய பறவை’ இசைத்தட்டு குறித்துக் கேட்டான். இசைத்தட்டின் இடத்தை ஒலிநாடா கைப்பற்றி முற்றிலுமாகத் தக்கவைத்துக்கொண்ட பின்பு, இசைத்தட்டு அருங்காட்சியகப் பொருளாகிவிட்டதில், பித்தனின் விருப்பப் பாடல் கொண்ட இசைத்தட்டு மாரீச மானாக இங்கே, அங்கே என மணவாளனை இழுத்துக்கொண்டே போய், நங்கநல்லூரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தியது.

‘‘எண்பத்தாறு வயசு வரையிலும் அப்பா உசுரோட இருந்தார். போன வருஷம்தான் தவறிப்போனார். புஸ்தகம், போட்டோ ஆல்பம், ஷீல்டு, சர்டிஃபிகேட், இசைத் தட்டுன்னு ஒரு ரூம் பூரா அவர் சமாச்சாரம்தான். அதன் அருமை தெரிஞ்சு உபயோகப் படுத்திக்கிறவா கேட்டா கொடுக்கலாம்னு இருந்தோம். வேணுன்னா வந்து வாங்கிக்குங்கோ!’’ எனத் தொலைபேசியில் அழைப்பு விடுத்தவரின் வீட்டுக்கு, மணவாளன் மோட்டார் பைக்கில் போய் இறங்கினான்.

புத்தம் புது உறையில் கன்னங்கரேல் என மின்னிக்கொண்டு இசைத்தட்டைப் பார்த்ததும், மணவாள னின் முகம் மலர்ந்தது. பைசா கொடுக்க முயற்சித்தவனை அந்த மனிதர் தடுத்து, ‘‘இன்னும் இதுபோல நெறைய எல்.பி. ரிக்கார்ட் இருக்கு.ஒங்களோட எல்.பி. கஃபே பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். ஒரு பைசா வேணாம். இன்னொரு நாள் நிதானமா வந்து, அத்தனையையும் எடுத்துண்டு போங்கோ’’ என்றார்.

கிளம்பிய வேகத்தில் திரும்பி வந்த மணவாளன், முதல் காரியமாக அந்த இசைத்தட்டைச் சுழலவிட்டுக் கேட்டான்.

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ…

அந்தப் பாடலின் வரிகளும், ராகமும், குரலும் மனதைப் பிசைவதாக உணர்ந்தான் மணவாளன். பித்தன் நல்ல ரசனைக்காரன்தான். அவனுக்காக தான் இசைத்தட்டு தேடி அலைந்ததைச் சொல்லி, அவனிடம் தோன்றும் எதிர்விளைவுகளை அவதானிக்க வேண்டும் என மணவாளன் நினைத்துக்கொண்டான்.

மணி சரியாக மூன்று. பித்தன் வந்து விட்டான். அதே கலங்கிய கண்கள். அதே பழுப்பேறிய சிகை.

‘‘வாங்க’’ என்ற மணவாளன், ‘‘உங்களுக்காகத்தான் காத்துட்டிருக்கேன்’’ என்றான் கூடுதலாக.

மணவாளனும் பித்தனும் இசைத்தட்டு அறைக்குள் சென்றனர். இருவர் அமரக்கூடிய இருக்கையும், இசைத் தட்டு ஒலிப்பதற்குத் தனியாக ஒரு மேசையும் இருந்தது. சமையல் கூடத்திலிருந்து உள்ளே வருவதற்கு ஒரு வழி.

பித்தன் அவனுக்குரிய இடத்தில் அமர்ந்தான். ஆவி பறக்கும் தேநீரை, மணவாளனின் தந்தை பித்தன் முன் கொண்டு வைத்தார். மணவாளன் இசைத்தட்டைச் சுழல விட்டான். புதிய இசைத் தட்டிலிருந்து சுசீலாவின் அற்புதக் குரலில், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’ பாடல் காலங்களையும், நினைவுகளையும், உருவங்களையும், அருவங்களையும் கடந்து சுழலத் தொடங்கியது.

அன்று சென்றதும்
மறந்தாய் உறவை
இன்று வந்ததே
புதிய பறவை

‘‘நோ..!’’ எனப் பெரிதாக அலறினான் பித்தன். மணவாளன் நடந்த தப்பு என்ன என்று கணிப்பதற்குள், தேநீர்க் கோப்பை எதிர்ச் சுவரில் பட்டுச் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

‘‘பழைய எல்.பி. இல்லையா இது?’’ எனப் பித்தன் அலறினான்.

பழைய இசைத் தட்டில், ‘இன்று வந்ததே புதிய…’ என்ற இடத்தில், சிறு கீறல் இருக்கும். ‘இன்று வந்ததே புதிய… புதிய…’ என இசைத்தட்டு கொஞ்சம் திக்கிவிட்டு, மீண்டும் சீராக ஒலிக்கும். இசைத் தட்டுகளுக்கே உண்டான இனிய தடுமாற்றங்களில் அதுவும் ஒன்று.

‘‘அது… அது ஒடஞ்சுபோச்சு! இது புதுசு. நான் கஷ்டப்பட்டு…’’ & மணவாளன், தான் சொல்லவந்ததை முழுமையாகச் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

பித்தன் அவன் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் இல்லை. தேநீருக்குண்டான பணத்தை மேசை மேல் படாரென வைத்து விட்டு, விறுவிறுவென வெளியேறிப் போய் விட்டான். அதன் பிறகு, அவன் வரவே இல்லை.

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ இசைத் தட்டு மட்டும் கேட்பார் இன்றி, பத்திரமாக மணவாளனிடம் இன்னமும் இருக்கிறது.

வெளியான தேதி: 20 ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *