கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 20,237 
 

காப்பிக் கடையில் சரியான கூட்டம். ஆள் இருக்க இடமில்லை. நீள வாட்டத்தில் போட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பெஞ்சின் ஓரங்களில் இருந்தவர்களுக்கு ஒரு கை முட்டியை ஊன்றுவதற்கு மட்டுமே இடம் இருந்தது. கை கழுவிவிட்டு வந்தவர்கள் தேயிலை குடிக்க வரும் முன் காயான இடத்தில் வேறு ஆட்கள் அமர்ந்தாயிற்று. தேயிலையை நின்று கொண்டே குடிக்கும்படி. ஆயிற்று. மூன்று பேர் நான்கு பேராக வந்தவர்களுக்கு எல்லோருக்கும் ஒரே பெஞ்சில் இடம் கிடைக்கவில்லை. வெவ்வேறு பெஞ்சுகளில் அமர்ந்தவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறதா என்று எட்டிப்பார்க்கவும் கவனிக்கவும் வேண்டி இருந்தது.

சாம்பார் வாளியும் சட்னி வாளியும் கொண்டு நடந்தவன் “வழி. வழி” என்று கத்தியும் அங்கும் இங்கும் ஒதுங்க இடமில்லை. வாளிகளின் விளிம்புக் கறைகள் ஒதுங்குவதான பாவனையில் முதுகை வளைத்தவரின் சட்டையில் உராய்ந்தது. சாப்பிட்ட இலையை எடுத்óதுத் தானே போடுவது அந்தப் பக்க நாகரீகம். துண்டு வாழை இலைகளை எச்சில் கையில் சுருட்டிப் பிடித்து எடுத்துக்கொண்டு இலைத் தொட்டியை நோக்கி நடந்தவர்கள் எச்சில்சொட்டு விழாமல் கவனமாகப் பிடித்துக் குனிந்து நடந்தனர். ஆனாலும் தரையிலும் வேட்டிகளிலும் சாம்பார் சட்டினி கலவைச் சொட்டுகள் சிதறின.

தோசை, இட்லி வடை, பஜ்ஜி என்று கேட்ட சத்தங்கள், இட்லி ஆறிப்போயிருக்கும் என்று தோசைக்காக இலை முன்னால் காத்திருந்தவர்கள், ரசவடை வரட்டும் என்றும் இலையில் கிடந்த
தோசையை விள்ளாமல் இருந்தவர்கள். முதல் எடுப்பு தின்று விட்டு இரண்டாவது எடுப்புக்காகக் கை காய உட்கார்ந்தவர்கள். கையோடு டீயையும் குடித்துவிட்டு எழலாம் என இருந்தவர்கள். விளிம்பு இருக்கைக்காரன் சாப்பிட்டு முடிக்கட்டும் என்று பொறுமையோடு இருந்தவர்கள். “ஏ! வெள்ளம் கொண்டாப்பா…” என்று குரல் கொடுத்தவர்கள். பாதித்துண்டு தோசையை இலை மீது மீதம் வைத்துக் கொண்டு இன்னொரு டோஸ் சட்னி சாம்பாருக்காக எதிர்பார்த்திருந்தவர்கள். “ஏ! கணக்கு என்னப்பா?” என்று கேட்டு நின்றவர்கள்……

அண்டர்வேருக்கு மேல் அழுக்குத் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு. தட்டில் இட்தோசை எடுத்துக் கொண்டு நடந்த சர்வர்கள். கையைத் துண்டில் துடைத்துவிட்டு. தண்ணீர் தம்ளருக்குள் விரல்விட்டு எடுத்து வந்து கொடுதóதார்கள். சட்னி வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஓடிப்போய் கல்லா முன் கணக்குச் சொன்னார்கள். சமையல் அறையினுள் நின்றவர்களைச் சத்தம் போட்டு விரட்டினார்கள்.

தினமும் அந்தக் கடையில் இந்தக் கதியில் நள்ளிரவிலும் வியாபாரம் நடக்குமென்றால் காப்பிக் கடைக்காரன் கோடீசுவரன் ஆகி இருப்பான். இது பத்து நாள் பாடு. அதுவும் கொடி ஏறிய முதல் மூன்று நாட்களிலும் விசேடமாகக் கூட்டம் இருக்காது. நாலாம் திருவிழாதொட்டு மாலை ஆறு மணிக்குக் கடை திறந்தால் விடிய விடிய இந்தக் கதைதான். தேரோட்டம் அன்று இராப்பகலாகக் கடை. ஓய்வே கிடையாது.

மேலத் தெரு மகராஜன் இந்த ஏழு நாட்களிலும் ஒரு அள்ளு அள்ளி விடுவார். இதில் போலீஸ்காரர்களுக்கு. தேவஸ்வம் போர்டு அதிகாரிகளுக்கு. கடை ஏலம் விடும் மகமைக்காரர்களுக்கு. உள்ளூர் சட்டம்பிகளுக்கு ஓசிப்படி அளந்தாலும் அது கண்டு சாவி போலத்தான். பெரிதாகப் பாதிப்பு ஏதும் வந்து விடாது.

கொடி ஏறிய அன்றேதனது அறுத்தடிப்புக் களத்தின் மண்சுவரை மூணு பாக நீளம் இடித்துத் தள்ளி வாசல் உண்டாக்கி. அம்மாசி அண்ணனைக் கூப்பிட்டு ஓலைக் காமணம் போட்டு. சாப்பிடும் இடம் சமையல் அறைஎன்று பிரித்து, சுற்றிலும் இடுப்பளவுக்கு ஓலையால் நிறைத்து, பத்துப் பெஞ்சுகளும் மேஜைகளும் போட்டு – “பகவதி விலாஸ் காப்பி கிளப்ஃ தயார்.

ஒன்றுக்கு இரண்டு விலை. சாதாரண நாட்களில் பத்து பைசா என்று விற்கும் இட்லி தோசை. வடை எல்லாம் இருபது பைசா. அளவும் தரமும் கூட்டத்தைப் பார்த்துக் குறையும். பாந்தண்ணியாய்த் தேங்காய் புண்ணாக்கில் அரைத்த சட்டினி. பூசணிக்காய் வெட்டிப் போட்டு கடலை மாவு கலக்கிய சாம்பார். ஆனால் எல்லாம் கொதிக்கக் கொதிக்க எப்போதும் இருக்கும்.

உள்ளூர் ஆட்கள் யாரும் திருவிழாக் காலங்களில் காப்பிக் கடைக்கு வரமாட்டார்கள். எல்லாம் கச்சேரி கேட்கவும் வாகன எடுப்புப் பார்க்கவும் வரும் சுற்றுப் புறக் கூட்டம் தான். விடிய விடிய நாகர்கோவில் இருந்து சுசீந்திரத்து “திருவிழா ஸ்பெஷல்’ பஸ் உண்டு. எனவே பத்துப் பதினைந்து மைல் கற்றளவில் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் கூட்டம் சாயும்.

என்றும் இரண்டு கச்சேரிகள். மாலையில் சூலமங்கலம் சகோதரிகள். கே.பி. சுந்தராம்பாள். சீர்காழி. பாலமுரளி கிருஷ்ணா என்று ஆறு முதல் ஒன்பது வரைக்கும். பிறகு நாமகிரிப்பேட்டை. ஏ.கே.சி. சிட்டிபாபு. ரமணி என்று இரவு மூன்று மணி ஆகும். எத்தனையோ ஆண்டுகளாய்க் கேட்டுக் கேட்டுக் சுற்றுப்புறக் கிராமங்களுக்கு ஓரளவு சங்கீத ஞானம் ஏற்பட்டிருந்தது. கச்சேரி எதிர்பார்த்தபடி அமையாவிட்டால் சங்கீத அறிவு தற்காகமாகப் பின் வாங்கி, கல்லையும் மண்ணையும் வாரி எறிந்து ஊளை இட்டு வித்வானை
விரட்டியதும் உண்டு.

திருவிழாக் கூட்டம் ஆண்டுதோறும் குறையாமல் இருக்கும்போது காப்பிக் கடைக் கூட்டமும் குறைவதில்லை.இத்தனைக்கும் திருவிழாக்கால ஸ்பெஷல் காப்பிக் கடைகள் அங்கு எத்தனையோ உண்டு.

மாணிக்கத்துக்குச் சங்கீதத்தில் அவ்வளவு பெரிய ஈடுபாடு ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பாட்டுக் கிறுக்கு உண்டு. சினிமாப்பாட்டை அதே போல் திரும்பவும் பாடுவான். பள்ளிக் கூடத்தில் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பாரதியார் பாட்டுப் பாடுவதும். குடியரசு தின விழாவில் – சுதந்திர தின விழாவில் இறைவணக்கம் பாடுவதும் உண்டு. இப்போது ஒன்பதாவது வகுப்புக்கு வந்த பிறகு தமிழாசிரியர் சில தேவாரம் திருவாசகப் பாடல்களை ராகம் போட்டுப் படிக்கச் சொல்க்
கொடுத்தார். ஆனாலும் அது சினிமாப் பாட்டுப் போல வருவதில்லை.

மாணிக்கத்தின் தகப்பனாருக்கும் தோடி. பைரவி. கரகரப்பிரியா
என்றவேறுபாடு புரிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் கச்சேரிக்குப் போவார். எல்லோரும் போகிறார்கள் என்பதாலும் இருக்கலாம். கச்சேரி முடிவில் பாடும் துக்கடாக்களுக்காக. சினிமாப் பாட்டுக்களுக்காக இருக்கலாம். அல்லது ஆள் கூட்டம். இரைச்சல். வெளிச்சங்கள். பீடி விளம்பரக்காரர்களின் ஓரியண்டல் நடனம். மச்சக்கன்னி. மரணக் கிணறு கவர்ச்சிகளுக்காகவும் இருக்கலாம். எதுவும் நிச்சயமாய்ச் சொல் விடமுடியாது.

கொடி ஏறி. திருவிழா புரோக்ராம் நோட்டீசு பார்த்த அன்றிருந்தே
மாணிக்கம் தகப்பனாரைப் பஞ்சரிக்க ஆரம்பித்தான்.

“யப்பா! ஏளாந்திருநாளுக்கு நானும் உன் கூட வரட்டா?”

“நீ அவ்வளவு தூரம் நடந்துக்கிட மாட்டலே…..”

“நடப்பேம்பா…….”

“பொறவு காலு வக்கு கையி வக்குன்னு சொல்லப்பிடாது….போக வர பத்து மைலாக்கும்…..”

“போன வருசம் தேரோட்டம் பாக்க நடத்தித்தான் கூட்டிக்கிட்டுப் போனே?”

“அது பகலு…. இது ராத்திரில்லா? உறங்காம இருக்கணும்…..திருநாக் கடையிலே அது வாங்கித்தா இது வாங்கித்தாண்ணு நச்சரிக்கப்பிடாது…..”

அப்பா போட்ட நிபந்தனைகளுக்கொல்லாம் ஒத்துக் கொண்டுதான் மாணிக்கம் திருவிழாவுக்குப் புறப்பட்டான்.

ஐந்து மணிக்குள் அப்பாவும் மகனும் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டாயிற்று. திருவிழா பார்த்துத் திரும்பி வர அதிகாலை ஆகும் என்பதால். வயிறு பசிக்காமல் இருப்பதற்காக, புல்லாக, சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தாயிற்று. நடக்கும்போது இரண்டு மூன்று முறைகையை மணத்திப் பார்த்துக் கொண்டான் மாணிக்கம். கருவாட்டுக் குழம்பின் வாசனை “கம்ஃ மென்று சுகமாக இருந்தது.

தேரேகால்புதூர். புதுக்கிராமம். தேரூர் வழியாக சுசீந்திரம் அடைய ஏழுமணி தாண்டிவிட்டது.

“எப்பா! சீர்காழி சினிமாப் பாட்டு பாட ஆரம்பிச்சிருப்பானா?”

“அதுக்கு எட்டு மணி ஆகும்லே….. இப்பம் ராகந்தான்
பாடீட்டிருப்பான்….”

பழையாற்றின் குறுக்கே இறங்கி. மெயின்ரோட்டைத் தாண்டி. கரும்புக் கடை. பால்பாண்டியன் மிட்டாய்க் கடை வேல்விலாஸ் மிட்டாய்க்கடை எல்லாம் கடந்து தெப்பக் குளக்கரைக்கு வரும்போது கூட்டம் கரை கடந்து கிடந்தது. எங்கும் இரும்புச் சட்டி ரிசர்வ் பட்டாளம். கையில் தடியோடு பார்க்கவே பயமாக இருந்தது.

“நிக்காதே….. போ. நேரா போயிட்டே இரு…..”

முகப்பு முன் இருக்க இடம் இல்லை. கூட்டத்தைச் சுவராகப் பிளந்திருந்த பாதையில் சுற்றி வந்தாகிவிட்டது. எங்கும் இருக்கத்
தோதுப்படவில்லை. ஊர் பூராவும் ஒபெருக்கி கட்டப்பட்டிருந்ததால் ஆங்காங்கே கும்பல் கும்பலாக உட்கார்ந்து கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“பா……. பா….. பா…….” என்று இன்னும் எவ்வளவு நேரத்துக்குத்தான் இழுப்பான் என்று தோன்றியது மாணிக்கத்துக்கு. ஒரு சுற்று சுற்றி வந்து. பாடகர் கண்ணில்படும் விதத்தில் முகப்புக்குப் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தின் மீது இருந்த மனிதர்களோடு ஏறி உட்கார்ந்தார்கள் மாணிக்கமும் தகப்பனாரும்.

சினிமாப்பாட்டு போடும் நேரம் வந்துவிட்டது போலிருக்கிறது. கூட்டத்தின் நடுவில் இருந்து “சினிமாப்பாட்டு. சினிமாப்பாட்டு” என்று கைகள் உயர்ந்தன. ஒரு நீண்ட நெடு மௌனம்.

“கந்தனை கந்தக் கடம்பனை…….” என்று பெரிய எடுப்பாய்ச் சீர்காழியின் குரல் ஊதுபத்திக் கட்டின் புகையாய்ச் சுருண்டு பிரிந்து பரவியது.

கச்சேரி முடிய ஒன்பதரை மணி ஆயிற்று. ஒரு கூட்டம் புறப்பட்டுப் போயிற்று. ஷேக் சின்ன மௌலானா நாதசுரம். வலயப்பட்டி. வலங்கைமான் ஸ்பெஷல் தவில் கேட்க மறு கூட்டம் வந்து கொண்டிருந்தது. கச்சேரிக்கு ஒரு மணி நேரம் இடைவேளை உண்டு. இந்த இடைவேளையில் தான் சர்க்கசும், ரெக்கார்ட் டான்சும் மும்முரமாய் நடக்கும். கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு பால் பாண்டியன் மிட்டாய்க் கடை. பீடி விளம்பரக்காரர்கள் போட்டுக் கொளுத்தினார்கள். ஒலிபெருக்கி ஒன்று நாகர் கோயில்
கடைகளுக்கு வாய் ஓயாமல் விளம்பரம் சொல்லிக் கொண்டிருந்தது.

மணி ஒன்றிருக்கும். குளிர்ந்த காற்று மெதுவாக வீசியது. கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்து இருப்பதற்குக் கதகதப்பாக இருந்தது மாணிக்கத்துக்கு. கூட்டத்தின் நடுவில் பிரிந்த பாதையோரம் உட்கார்ந்து கொண்டிருந்தால் மேடையில் நாகசுரமும் தவிலும் நன்றாகத் தெரிந்தன. ஒரு கைவிரல்களில் தொப்பிகள் போட்டு மறுகையில் குட்டையாய்க் கம்பு வைத்துக் கொண்டு – “திடும் திடும் திடும்” தவில்கள் ஆங்காரமாய் அதிர்ந்தன.

மாணிக்கத்துக்கு உறக்கம் வரும் போருந்தது. உறங்கினால் அப்பா ஏசுவார் என்று பயமும் இருந்தது. கச்சேரி முடிய இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும் போலிருக்கிறது. அதுவரை உறக்கத்தை இழுத்துப் பிடித்து நிறுத்துவது கடினம். பரக்கப் பரக்கப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் மாணிக்கம்.

தனி ஆவர்த்தனம் முடிந்து-பத்துப் புளிய மரங்களில் புளியம்பழம் ஒரே நேரத்தில் உலுக்கியது போல் – சடசடசடவெனக் கை தட்டல் தெப்பக் குளத்து மூலைப் பாறையில் மோதி எதிரொத்தது. கும்பல் கும்பலாக ஆட்கள் எழுந்தனர். காலி விழுந்த இடத்தில் வேறு வேறு ஆட்கள் வந்து
அமர்ந்தனர்.

கூட்டத்தோடு எழுந்த தகப்பனாரோடு மாணிக்கம் நடந்தான். நன்றாக வயிறு பசித்தது. ஐந்து மணிக்குத் தின்றசோறு போன இடம் புரியவில்லை. கரகரவென உமிழ் நீர் சுரந்தது. ஏதாவது தின்றால் கொள்ளாம். அப்பாவிடம் கேட்கலமா வேண்டாமா என்று தோன்றியது.

கொஞ்ச நேரம் திருவிழாக் கடைகளை வேடிக்கை பார்த்து சுற்றி அலைந்து விட்டு “பகவதி விலாஸ்’ கடைப்பக்கம் வந்தனர். சூடான கடலை எண்ணெயில் பஜ்ஜி முறுகும் வாசனை. அப்பா மாணிக்கத்திடம் கேட்டார், “வயிறு பசிக்கலே?”.

“ஆம்” எனும் அர்த்தத்தில் தலையசைத்தான்.

வெளியே வருபவர்களை இடித்துக்கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டி இருந்தது. பணம் வாங்கிப் போடும் மேஜையைச் சுற்றி ஒரே கூட்டம்.

இரண்டு பேரும் இடம்பிடித்து உட்கார்ந்தார்கள்.

ஆளுக்கு நாலு தோசை. இரண்டு ரசவடை. தேயிலை. சாக்குக் கட்டியால் எழுதிய விலைப்பட்டியலைப் பார்த்து மனத்துக்குள் கூட்டிக் கொண்டான் மாணிக்கம். எல்லாமாக இரண்டு ரூபாய்தொண்ணூறு பைசா ஆகியது. இலையை எடுத்து போட்டுவிட்டு வாய் கொப்பளித்து. துண்டில் அப்பாவும் சட்டைத் தும்பில் மாணிக்கமும் துடைத்துக் கொண்டு பணம் கொடுக்கும் இடத்துக்கு வந்தனர்.

“கண்ணாடி போட்ட அண்ணாச்சி நாலு நுப்பது.”

“அடுத்தாப்லே ஒரு ஒண்ணு இருவது.”

“பாட்டா ஒண்ணு அஞ்சு” என்று தாறுமாறாகக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. வாங்கிப் போடுபவருக்கு முகம் ஏறிட்டுப் பார்க்கவும். காசை எண்ணி வாங்கவும். பாக்கி கொடுக்கவும் பெரும்பாடாக இருந்தது.

ஒன்றும் அறியாதவர் போல் முன்னால் நடந்த மாணிக்கத்தின் அப்பா நிதானமாக நின்று மடியை அவிழ்த்து ஒரு எட்டணாத் துட்டை எடுத்து மேஜை மேல் வைத்தார். ஏறிட்டுப் பார்த்த கடைக்காரரிடம் “ரெண்டு தேயிலை” என்று கணக்குச் சொல்விட்டு மாணிக்கத்தின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

கொஞ்ச தூரம் போனதும் மாணிக்கம் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அப்பாவின் முகத்தைக் கள்ளக் கண் போட்டுப் பார்த்தான். ஒரு வேளை இதற்காகத்தான் அப்பா ஒரு திருவிழா விடாமல் கச்சேரி கேட்க வருகிறாரோ என்று தோன்றியது. இனி இவரோடு வரக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *