கிளினிக்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 2,108 
 

Dr. குமாரின் ப்ரைவேட் கிளினிக். ப்ரியா கிளினிக். மருந்தகம் உள்ளடக்கியது. இரண்டு டாக்டர்கள். மருந்தகத்தில் உள்ள மருந்தை மட்டுமே சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள்.

வரவேற்பாளர் மொபைல் கூப்பிட்டது. எடுத்தார். அந்தப் பக்கம் நான்.

நான்: ப்ரியா கிளினிக்குங்களா?

வரவேற்பாளர்: ஆமா! உங்களுக்கு எந்த டாக்டரை பார்க்கணும்?

நான்: எனக்கு டாக்டர் வேணாம் மேடம்! நான் உங்க பேஷன்ட். என் பேர் முரளி. உங்க மருந்தக (pharmacy) மருந்தாளர் கூட பேசணும்.

வரவேற்பாளர்:சரி. கொஞ்சம் இருங்க. கொடுக்கறேன்.

கொஞ்ச நேரம் பதிலே இல்லை. அந்த பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது. இளம் பெண்கள். அரட்டை. சிரிப்புக்கு கேட்பானேன்? பேஷன்ட் நான், பேஷண்டாக காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து, மொபைல் துண்டிக்கப் பட்டது.

நான் விடவில்லை. மீண்டும் அலைபேசியில், வரவேற்பாளரை கூப்பிட்டேன். இந்த முறை மருந்தாளரிடம் அலைபேசி கொடுக்கப் பட்டது.

மருந்தாளர்: சொல்லுங்க. என்ன வேணும்?

நான்: மேடம், நான் ஒரு வாரம் முன்னாடி உங்ககிட்ட பாஸ்லாகி மருந்து வாங்கிகிட்டு போனேன். எனக்கு ரத்தக் கொதிப்புன்னு உங்க டாக்டர் எழுதிக் கொடுத்தார். மூணு மாசம் தொண்ணூறு மாத்திரை. ஆனால், மேடம், அதை போட்டால் எனக்கு கால் வீங்கிக்குது. ஒத்துக்கலை. அதனாலே அதை மாத்தி, வேறே மாத்திரை கொடுக்கணும். டாக்டர் கிட்டே பேச முயற்சி பண்ணினேன். முடியலே. நீங்க தான், அவர்கிட்டே சொல்லணும். மருந்தை மாத்திக் கொடுக்கணும்.

மருந்தாளர்: சரி, அப்ப, இந்த நம்பருக்கு, டாக்டர் மருந்து சீட்டு, மருந்து பில் எல்லாம் எனக்கு வாட்சப் பண்ணுங்க,. நான் அவரை கேட்கிறேன்

நான்: சரி மேடம்.. எங்கே வெச்சேனோ தெரியலே. தேடி பிடிச்சி இப்பவே அனுப்பறேன். டாக்டர் சரி சொல்லி, நீங்க சரி சொன்னா, நான் நேரே வந்து மருந்து மாத்தி வாங்கிக்கறேன்.

மொபைல் துண்டிக்கப் பட்டது.

சிறிது நேரம் கழித்து நான் மீண்டும் பேசினேன்.. விடாக் கொண்டன். இல்லை, விடாக் கொண்டேன்.

நான்: மேடம், எல்லாம் வாட்சப் பண்ணினேன். வந்துதா? வந்துதா?

மருந்தாளர்: வந்தது.டாக்டர் பிசி. இன்னும் ஒரு மணி கழித்து பேசுங்க.

மொபைல் துண்டிக்கப் பட்டது.

ஒரு மணி நேரம் கழித்து நான் மீண்டும் பேசினேன்

நான்: மேடம், நான் பேஷன்ட். கொஞ்ச நேரம் முன்னாடி பேசினேனே! பாஸ்லாகி..

மருந்தாளர்: டாக்டர் கிட்டே கேட்டேன். அவர் உங்களை நாளைக்கு காலைலே எட்டு மணிக்கு பேச சொன்னார். அவர் நம்பரை உங்களுக்கு வாட்சப் பண்ணறேன்.

நான்: வேணா, மேடம், நான் இப்பவே வந்து பேசட்டுமா? அவரை இந்த சின்ன விஷயத்துக்கு தொந்திரவு பண்ண வேண்டாமேன்னு பார்த்தேன். நீங்களே மாத்தி கொடுக்கலாமே! பாஸ்லாகிகுக்கு பதிலா, பல்சிடா M 100 கொடுத்திடுங்க.

மருந்தாளர்: இல்லீங்க. நாளைக்கு அவரோட பேசுங்க. அப்புறம் கிளினிக் வாங்க. பாக்கலாம்.

நான்: உங்க பேரு சொல்ல முடியுமா?

மருந்தாளர்: பிந்து

மொபைல் துண்டிக்கப் பட்டது.

அடுத்த நாள் காலை

நான், டாக்டருக்கு போன் பண்ணினேன். டாக்டர், ரொம்ப சாந்தமாக பேசினார்., “இந்த பாஸ்லாகி மருந்து ஒன்னும் பண்ணாது. இது வரை எனக்கு எந்த புகாரும் வரலை அதனாலே என்னங்க, பரவாயில்லை, நீங்க சாயந்திரம் வந்து மாத்திக்குங்க. இல்லேன்னா பணம் திரும்பி வாங்கிக்குங்க.”

நான்: எனக்கு பாஸ்லாகி மருந்துக்கு பதிலா பல்சிடா கொடுத்தா போதும் டாக்டர்.

டாக்டர்: சரி, வாங்கிக்கோங்க. நானும் சொல்லிடறேன்.

நான்: டாக்டர், பல்சிடா 50 க்கு பதிலா 100 எடுத்துக்கட்டுமா? நீங்க முதலிலே 100 தான் கொடுத்தீங்க. எனக்கு சுகர் நல்ல கன்ட்ரோல்ல இருக்கு. நீங்க 50ஆ மாத்தினீங்க. ஆனா, எனக்கு என்னமோ 100 தேவலைன்னு தோணுதுங்க. அன்னிக்கு உங்க கிட்டே 100 ஸ்டாக் இல்லே. 50 தான் இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு நான் 50க்கு மாத்திக்கிரனே? நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?.

டாக்டர்: உங்ககிட்ட க்ளுகோ மீட்டர் இருக்கில்லே?

நான்: இருக்கு டாக்டர். இன்னிக்கு எடுத்தேன். சக்கரை அளவு சாப்பாட்டுக்கு முன்னாலே 120 சாப்பாட்டுக்கு அப்புறம் 140. முன்னாடி, பல்சிடா 100 போட்டுக்கிட்டிருந்த போது 100/120 இருந்தது.

டாக்டர்: அது பரவாயில்லே. சுகர் போஸ்ட் சாப்பாடு 140 இருக்கலாம். இருந்தாலும் சரி, பல்சிடா 100 போட்டுக்கலாம். கொஞ்ச நாள் கழிச்சு 50க்கு மாத்தி பாக்கலாம். அப்படி இல்லேன்னா, சொல்லுங்க, வேறே எழுதி தரேன்.

நான்: ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.

அடுத்த நாள் மாலை

நான் மணி ஐந்தரைக்கு, கிளினிக்குக்கு போனேன்.ஐந்து ஆறு பேஷன்ட் காத்துக் கொண்டிருந்தனர்.. யாரோ ஒரு உதவியாளர், மருந்தகத்திற்கு வெளியே வந்தார். புது முகம். நான் நேரே வரவேற்பாளரிடம் போனேன்.

நான்: இங்கே பிந்து யாருங்க?

வரவேற்பாளர்: நாந்தான் பிந்து

நான்: எனக்கு மருந்தாளரை பார்க்கணுமே!

பிந்து: வருவாங்க! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க:

பிந்து தலையை குனிந்து கொண்டார்.

பின்னே, அப்போ பிந்து யார்? மருந்தாளரா? இல்லே வரவேற்பாளரா? இல்லே ரெண்டுமே பார்ப்பாரா? அப்போ மருந்தக உள்ளேருந்து வெளியே போன பெண் யார்?

சிறிது நேரம் கழித்து, இன்னொரு பெண்மணி மருந்தகத்தில் நுழைந்தார்..நான் அவரிடம் போனேன்.

நான்: மேடம், எனக்கு இந்த பாஸ்லாகி மாத்தி பல்சிடா கொடுக்கணும். நான் டாக்டர் கிட்டே பேசிட்டேன். வந்து வாங்கிக்க சொன்னார்.

பெண்மணி: இருங்க, டாக்டர் கிட்டே கேட்டுட்டு சொல்றேன்.

நான்: ஏற்கெனவே பேசியாச்சு.

நான் ஹால் பக்கம் திரும்பி, “ஹலோ, பிந்து மேடம். நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்”.

பிந்து ஒன்றும் சொல்லவில்லை.

மருந்தாளர்: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

அந்த மருந்தாளர், அரட்டை அடிக்க போய்விட்டார். மருந்தகத்துக்குள்ளே நான்கு உதவியாளர் அமர்ந்து அரட்டை. இந்த பெண்ணும் ஜோதியில் கலந்து விட்டார்.

நான் பொறுமையாக உட்கார்ந்திருந்தேன். கூட்டம் இல்லை, அதனால் ஏசி இல்லை. வாக்கிங் வேறே போக வேண்டும். நேரம் ஆகிக் கொண்டிருந்தது “மேடம். கொஞ்சம் சீக்கிரம் கேட்டா …”

பதினைந்து நிமிடம் கழித்து, டாக்டரிடம் பேசிவிட்டு, மருந்தாளர் திரும்பி வந்தார். “ சரி, என்ன மருந்து வேணும்?

நான்: பல்சிடா M100 கொடுங்க.

மருந்தாளர்: அது ஸ்டாக் இல்லே

நான்: அப்போ, லெவிபில்?

மருந்தாளர்: இல்லே.

நான்: சரி, எரிடேல், லோனசப், லகோசெட், ரேவலால் இப்படி ஏதாவது நான் யூஸ் பண்றது இருக்கா?

மருந்தாளர்: அதெல்லாம் கிடைக்காது.

நான்: இதெல்லாம் எல்லா மருந்து கடையிலேயும் கிடைக்குமே. பின்னே நான் என்ன மாத்திக்கிறது?

மருந்தாளர்:: அதெல்லாம் எங்களை கேக்காதீங்க. டாக்டர் சொல்றதை கொடுப்போம். அவர் மருந்தகத்திலே இருக்கிறதை எழுதிக் கொடுப்பார்.

நான்: போச்சுடா! சரி, வேறே மருந்து எழுதித்தறேன்னு சொன்னார். அவரைக் கேட்டு கொடுங்க

மருந்தாளர்: நாளைக்கு வாங்க. கேட்டு சொல்றேன்.

நான்: இது என்ன அரசு ஆஸ்பத்திரியா? பத்து தடவை வரதுக்கு? இல்லே, என்னை அவர் கிட்டே அனுப்புங்க, நானே கேட்டுகிட்டு வரேன்.

மருந்தாளர்: இல்லே சார், நானே கேட்டு சொல்றேன். அவர் பிசின்னு சொன்னேனே! நீங்க இப்போ போயிட்டு வாங்க.

நான்: என்னாலே திரும்பி திரும்பி வர முடியாது. வெயிட் பண்ண முடியாது எனக்கு 73 வயசு. இருந்து டாக்டரை பார்த்துட்டே போறேன்.

மருந்தாளர்: சரி, அப்போ வெயிட் பண்ணுங்க. இன்னும் மூணு பேஷன்ட் இருக்காங்க. அப்புறம் நீங்க போலாம்.

எனக்கு கோபம் வந்து விட்டது.

நான்: எதுக்கு நான் வெயிட் பண்ணனும்? ஒரு நிமிஷம் உள்ளே அனுப்பக் கூடாதா? நேத்திக்கே கேட்டேன். டாக்டரை கேட்டு சொல்றேன்னு சொன்னீங்க. அப்புறம் டாக்டர் கிட்டே மொபைல்ல பேசுங்கன்னு சொன்னீங்க. இப்போ சுத்தி சுத்தி விடறீங்க. சரி, எனக்கு பணம் வாபஸ் கொடுங்க. நான் வெளிலே வாங்கிக்கறேன்.

மருந்தாளர்: அது முடியாது சார். பணம் திருப்பிக் கொடுக்க முடியாது.

நான்: டாக்டர் சொன்னாரே, பணம் திருப்பி வாங்கிக்கிட்டு போலாம்னு.

மருந்தாளர்: கணக்கு வழக்கெல்லாம் மேடம் தான் ( இன்னொரு லேடி டாக்டர்) பாக்கறாங்க. பணம் திருப்பிக் கொடுக்க கூடாதுன்னு அவங்க சொல்லியிருக்காங்க.

நான்: சரி, இந்த ரசீதுலே முழு விவரம் எழுதிக் கொடுங்க. நாளைக்கு நான் வர முடியாது. என் காசு கொடுத்து வெளிலே வாங்கிக்கறேன். என்னிக்கு முடியுமோ, அன்னிக்கு வந்து இந்த ரசீதை காட்டி மருந்து வாங்கிக்கறேன். இல்லே பல்சிடா M50இருந்தா கொடுங்க. அதையே ரெண்டா போட்டுக்கிறேன். எதுக்கும் நான் டாக்டரை கேட்டுக்கிறேன்.

மருந்தாளர்: பல்சிடா M50 ஸ்டாக் இல்லே. நீங்க எதுக்கும் நாளைக்கு வந்து பாருங்க.

நான் நொந்து விட்டேன். இப்படி அலைக்கழிக்கிறாங்களே! அரசு ஆஸ்பத்திரி கூட தேவலை போல இருக்கே. அங்கே, லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை சாதிச்சுக்கலாம்.

நான்: அப்போ இந்த ரசீதுலே அதை எழுதி கொடுங்க.

மருந்தாளர், அரை மனதாக, அந்த ரசீதை பாஸ்லாகி கீழே அடிக் கோடிட்டு, நிஷா என்று எழுதிக் கொடுத்தார்.. என்ன அர்த்தமோ?

நான்: புரியறா மாதிரி விவரம் எழுதுங்க. உங்க ஸ்டாம்ப் போடுங்க. நாளைக்கு வேறே யாராவது வந்தா, எனக்கு தெரியாதுன்னு சொல்வாங்க.

மருந்தாளர்: ஸ்டாம்ப் எல்லாம் எங்ககிட்டே இல்லே சார்.

நான்: அப்போ, பேசாம இந்த பாஸ்லாகி மருந்தை நீங்களே வச்சுக்கோங்க. திரும்ப திரும்ப என்னாலே ஒவ்வொருத்தர் கிட்டேயும் விளக்கிட்டு இருக்க முடியாது. என்ன பார்மசி இது? மாத்திரை கேட்டா இல்ல!. வேறே மாத்திரை இல்லை!. பணம் திருப்பி கொடுக்க முடியாது, அப்போ, (கோபமாக) மருந்தை நீங்களே வெச்சிக்கோங்க. என்னோட அன்பளிப்பு.

மருந்தாளர்: அதெல்லாம் வேணாம். நீங்க என்ன வோண்ணா பண்ணிக்கோங்க.

நான், மருந்தை அந்த கவுண்டரிலேயே விட்டு விட்டு திரும்பி விட்டேன்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

மனைவி: என்ன ஆச்சுங்க?

நான்: (மனைவியிடம்). இனிமே, அந்த கிளினிக்குக்கு நான் போக மாட்டேன்

மனைவி: நாளைக்கு போய் கேட்டுப் பாருங்க

நான்: நான் கோபமா கத்திட்டு வந்துட்டேன். இனிமே அவங்க கிட்டே போக மாட்டேன். வேறே டாக்டர் கிட்டே போக வேண்டியது தான்.

மனைவி: உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுன்னே தெரியலே!

நான்: டாக்டர் நல்லவர் தான். ஆனால், பார்மசி தான் சரியில்லேன்னு தோணுது. யாரும் வேலை செய்யாம, ஒளிஞ்சிகிட்டு அரட்டை அடிக்கறாங்க. யார் அந்த கிளினிக் தலைமைன்னே தெரியலே! அவரா, இன்னொரு டாக்டரா, இல்லே உதவியாளரா? பெரிய கார்பரேட் ஆஸ்பத்திரிலே ஒரு மாதிரி பிரச்னை. துட்டு புடுங்கறாங்க. சின்ன க்ளினிக்லே இந்த மாதிரி இம்சை.

நம்மளை மாதிரி சாதாரண ஜனங்க எங்கே போறது? மொத்தத்திலே, காசு கொடுத்தா, மெடிக்கல் சீட், காசு கொடுத்தா அரசு உத்தியோகம், காசு கொடுத்தா நல்ல ட்ரீட்மெண்ட்,

கொடுத்த காசை திருப்பி கேட்டா, கேட்டவன், கெட்டவன். ….

மனைவி: கோபப்படாதீங்க. உங்க உடம்பு தான் கெட்டுப் போகும்.

நான்: பின்னே என்ன? டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை, அவங்க மருந்தகத்திலேயே வாங்கறதிலே, நோயாளிக்கு லாபம் இருக்கு. இல்லேன்னு சொல்லலே. அலைய வேணாம். தள்ளுபடி கொடுப்பாங்க. அதெல்லாம் சரி

ஆனால், சில டாக்டர்ங்க அவங்க லாபத்திற்காக தான் இந்த மாதிரி மருந்தகத்தை வெச்சிருக்காங்க. மருந்து தயரிப்பாளர்களுடன் கூட்டு. மருந்தை டாக்டர் கிட்டேதான் வாங்கணும். இந்த மருந்தெல்லாம் வெளிலே கிடைக்கிறது கஷ்டம். இந்த மருந்தை தான் வாங்க வேண்டும்னு மறைமுகமா கட்டாயமிருக்கு.

நமக்கோ வேறே மருந்தை வாங்க பயமாயிருக்கு. டாக்டருங்க, அவங்க மருந்தகத்திலே இருக்கிற, விலையுர்ந்த மருந்தை தான் சிபாரிசு செய்யறாங்க. வெளிலே, விலை குறைச்சு கிடைச்சாலும், வேறே வழியில்லை. தேவையேயில்லாத மருந்தையும், அவங்க மருந்தகத்திலே இருக்கிற மருந்த வாங்கிக்க சொல்லி எழுதி கொடுத்திடறாங்க.

நான் முன்னாடி எரிடேல் வாங்கிட்டுருந்தேன். ஒரு பிரச்னையும் இல்லை. அனால், இந்த டாக்டர் அது வேண்டாம், பாஸ்லாகி வாங்கிக்கோங்கன்னு எழுதிக் கொடுத்தார். இவர் மருந்தகத்திலே பாஸ்லாகி தான் இருக்கு. பழைய டாக்டர், க்லோபிடாப் எழுதிக் கொடுத்தார். இவர் அதை மாத்தி லிபிகோ போட்டுக்கோங்க. இதுதான் பெஸ்ட்ன்னு ஏழுதிட்டார். ஏன்னா, அவர் மருந்தகத்திலே லிபிகோதான் ஸ்டாக் இருக்கு. எது நல்லது, எது கெட்டதுன்னே தெரியலே.

அதனாலே, நான் லிபிகோவும் போட்டுக்கறதில்லே, க்லோபிடாபும் போட்டுக்கறதில்லே. காசு மிச்சம். சொல்லிவிட்டு, நான் சிரித்தேன்.

மனைவியும் சிரித்தாள். “உங்களுக்கு இது ஒரு விளையாட்டாக இருக்கு.

நான்: டாக்டருங்க, அவங்க மருந்தக விற்பனையை அதிகரிக்க, அதன் மூலம் தங்களுக்கு எக்ஸ்ட்ரா லாபம் கிடைக்க வழி செஞ்சுக்கிறாங்க. அது மட்டும் இல்லே, பிராண்டட் செய்யப்பட்ட மருந்துகள், கிளினிக்குகளில் இருந்து நோயாளி பெறும் மருந்துகளை

விக்கும் டாக்டர்களுக்கு, பெரும் லாபம் கிடைக்குது. மருந்து கம்பனி ஏராளமான தள்ளுபடி கொடுக்கிறாங்க. இந்த டாக்டர் அதிலே ஒன்னா?

இத்தனைக்கும் மருந்தகத்திலே ஏராளமான மருந்து இருக்கே. ரொப்பி வெச்சிருக்காங்க. ஆனால், நாம கேக்கிற மருந்து இல்லே. என்ன பார்மசி இது?

நான் சோர்ந்து போய் உட்கார்ந்தேன்.

மனைவி: அதெல்லாம் எல்லா டாக்டரும் பண்ண மாட்டாங்க? சும்மா கற்பனை பண்ணிக்காதீங்க!

நான்: நீ சொல்றது ரொம்ப சரி! இந்த டாக்டர் ரொம்ப நல்லவரா இருக்காரு! மருந்தும் ரொம்ப விலையில்லே! சில மருந்துக்கு இருபது பெர்சென்ட் தள்ளுபடி வேறே தறார். நான் வாங்கின வரைக்கும் இவர் கொடுத்த மருந்து எல்லா மருந்து கடையிலேயும் கிடைக்குது. ஆனா, என்ன சொல்ல, எந்த புத்திலே எந்த பாம்பு இருக்குமோ? இந்த டாக்டர் நல்லவரா? கெட்டவரா?

ஒண்ணுமே புரியலே உலகத்திலே! என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

குமார ராஜா பட பாடல் தான் நினைவுக்கு வந்தது

-முற்றும்-

(உண்மை நிகழ்வு. பெயர் மட்டும் மாற்றப் பட்டிருக்கிறது )

நன்றி: National library of Medicines: Sale of medicines by Registered Medical Practitioners (RMP) at their clinics: Legal and ethical issues

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6482706/

Quote: (தமிழாக்கம் – ஆன்லைன் மூலம் செய்த தமிழாக்கம்).

RMP (பதிவு செய்த டாக்டர்கள்) தங்கள் கிளினிக்குகளில் தங்கள் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதும் விற்பதும் மருத்துவ

நெறிமுறைக் கோட்பாடுகளான சுயாட்சி, நன்மை மற்றும் தீங்கற்ற தன்மை ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க சாத்தியமான முரண்பாட்டைக் குறிக்கலாம், மேலும் இது பல்வேறு நெறிமுறை மற்றும் சட்டரீதியான சவால்களை எழுப்புகிறது.

RMPக்களிடம் இருந்து மருந்துகளை வாங்குவதன் மூலம், மருந்துச் சீட்டு தவறாகப் படிக்கப்படாது என்பதை நோயாளி உறுதியாக நம்பலாம், மேலும் RMP கள் மருந்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தவும், அதிர்வெண், முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்கவிளைவுகள் போன்ற ஆலோசனைகளை வழங்கவும் உதவும். மேலும், RMPs மருந்தகத்தில் மருந்துகளை வாங்குவது நோயாளியின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது.[2]

மறுபுறம், RMP களால் மருந்துகளை வழங்குவது, மருந்துகளை வாங்கும் பல்வேறு அம்சங்களில் நோயாளியின் தேர்வு சுதந்திரத்தை குறைக்கலாம். நோயாளி RMPs மருந்தகத்தால் வழங்கப்படுவதை வாங்க கட்டாயப்படுத்தப்படுவார், மேலும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து விலை உயர்ந்ததாக இருந்தாலும், மாற்று மருந்து மற்றும் பிராண்ட் குறைந்த விலைக்கு வெளியில் கிடைத்தாலும் வேறு வழியில்லை. ஒரு RMP கள் ஒரு நோயாளிக்கு தேவையில்லாத மருந்துகளையும் பரிந்துரைக்கலாம், விற்பனையை அதிகரிக்க, அதன் மூலம் அவர்களின் மருந்தகத்திற்கு லாபம் கிடைக்கும். உண்மையான பிரச்சனை “உரிமை” அல்ல, ஆனால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலை மற்றும் அதன் மூலம் அவற்றை விற்பதில் மருத்துவர் பெற்ற லாபம். மேலும், பிராண்டட் செய்யப்பட்ட மருந்துகள், கிளினிக்குகளில் இருந்து நோயாளி பெறும் RMP களுக்கு (டாக்டர்களுக்கு) பெரும் லாபம் கிடைக்கும், மேலும் இது ஒரு மாற்று வருமான ஆதாரமாக இருந்து வருகிறது.[1,2,4] மேலே உள்ள சந்தேகங்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளன. மருந்துகளை விநியோகிக்கும் மருத்துவர்கள் மற்றும் வழங்காத மருத்துவர்களால் வழங்கப்படும் சுகாதாரத் தரத்தை ஒப்பிடும் ஆய்வு. பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கை, ஒரு நோயாளிக்கு செலவிடப்படும் நேரம், நோயாளியின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சைச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படாத மருத்துவர்களுடன் ஒப்பிடும் போது, வழங்கும் மருத்துவர்களுடன், வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்பின் தரம் குறைவாக இருப்பதாக கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *