கிருஷ்ணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 7,558 
 
 

பெங்களூரில் ராமசாமி முதலியார் என்பவர் ஒருவர் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு மாணிக்கம் மரகதவல்லி என்றிரண்டு பெண்பிள்ளைகளும், கிருஷ்ணன் கோவிந்தன் என்றிரண்டு ஆண்பிள்ளைகளும் உண்டு. மரகதவல்லி நால்வரிலும் இளையவள்; நான்கு வயதானவள்.

ஆண்பிள்ளைகள் இருவரும், சென்னையில் தங்கள் அத்தையம்மாளுடைய வீட்டில் இருந்துகொண்டு, ஒரு பாடசாலையில் படித்துவந்தார்கள். ஒருமுறை அவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கிடைத்தது. கிடைக்கவே, பெங்களூரில் தங்கள் தாய் தந்தையரைப் பார்க்கும் பொருட்டுப் புகைவண்டியேறிச் சென்றார்கள்.

அன்னையும் பிதாவும் அவர்களைக் கண்டவளவில், அதிக பரிவுடனே அன்னம் படைத்து, சென்னையில் அத்தையம்மாள் முதலானவர்களுடைய ஸுக யோகக்ஷேமங்களை விசாரித்தறிந்து மிகவும் ஸந்தோஷமடைந்தார்கள். சிறுவர்களும் அண்டையயல் வீட்டுப் பிள்ளைகளுடனே வேடிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஆறுநாள்கள் கழிந்தன.

ஆறாவது நாள் சாயரக்ஷையில் இவர்களைப் பார்த்து, ராமசாமி முதலியார், “கிருஷ்ணா, கோவிந்தா, நாளைப்பகல் பன்னிரண்டு மணி வண்டிக்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். திங்கட்கிழமை நீங்கள் பாடசாலைக்குப் போகவேண்டுமல்லவா? நினைவிருக்கட்டும்” என்று சொன்னார்.

உடனே மூத்தவனாகிய கிருஷ்ணன், “ஆமாம்” என்று சொல்லிக் கதவை ஒஞ்சரித்துக்கொண்டு உள்ளேபோய், “இதென்னடா இழவு” என்றான்.

கோவிந்தன்.- நாளைக்குத் திருவேங்கடம் நாராயணசாமி என்பவர்களோடு பந்தாடலாமென்று நினைத்திருந்தோமே, ஐயோ, பழுத்துப்போச்சே.

கிருஷ்ணன்.- அடெ தம்பி, எல்லாரும் ஸரியாகக் கணக்குப் பார்த்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனப்பிவிடுகிறார்களா? நம்முடைய வீட்டில்தான் பெரிய தொல்லை.

கோவிந்தன். – என்ன அண்ணா? நாளையோடு நமக்கு விடுமுறை ஸரியாய்ப் போகிறதே. நாளைப் பன்னிரண்டு மணி வண்டிக்குப் போகவேண்டுமென்று நாயனா சொல்லிக்கொண்டு தானே இருந்தார். உனக்கு நினைவில்லையா?

கிருஷ்ணன்.- ஆமாம். ஆனாலென்ன? இன்னும் இரண்டு மூன்று நளைக்கு இங்கேதானே இருக்கச்சொன்னால் ஆகாதோ, முழுகிப் போச்சுதோ?

கோவிந்தன்.- இன்னும் இரண்டுநாள் இங்கிருக்கும்படி கேட்பதனால் என்ன பிரயோசனம்? எப்படியானாலும் நாம் போகவேண்டியவர்கள்தானே. சற்று முன்னதாகவே போய் விடலாமே.

கிருஷ்ணன்.- போடாபோ (என்று சொல்லிக்கொண்டே கதவைப் படிய மூடிவிட்டு ரகஸ்யமாய்) அடே நாம் இன்னொருநாள் இங்கே யிருக்க உபாயம் ஒன்று பண்ணப் போகிறேன்.

கோவிந்தன்.- எதோ சொல்லு பார்க்கலாம்.

கிருஷ்ணன்.- பதினொன்றடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கம்மென்று மெதுவாய்ப் போய்க் கடியாரத்தை நிறுத்தி விடுகிறேன். அப்புறம் நேரமாய்விட்டால் “ஐயோ! மணி தெரியாமல்போச்சே” என்று சொன்னால், தகப்பனார் நம்மை என்ன செய்யப்போகிறார்?

கோவிந்தன்.- ஆமாம் அண்ணா, அது மெய்யாகுமா?

கிருஷ்ணன்.- ஏன் ஆகாது? கடியாரம் போகாவிட்டால் பன்னிரண்டு அடிக்கிற வேளை நமக்கு எப்படித் தெரியும்?

கோவிந்தன்.- அதன் பேரென்ன? அதுமாத்திரம் பொய்யாகாதோ? பெருமோசமா யிருக்கிறதே. கடியாரத்தின் சோலிக்குப் போவது ஸரியல்ல.

கிருஷ்ணன்.- போடா முட்டாள். வேறென்ன செய்கிறதாம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா? நிற்கவும் ஆசை; ஒன்றுஞ் செய்யக்கூடாதென்றால், காரியம் எப்படியாகும்? கடியாரத்தில் ஆடுகிற குண்டை அசையாமல் ஒருநாழி இரண்டுநாழி நிறுத்திவைத்தால், ஆருக்கென்ன நஷ்டம்? கடியாரத்துக்குத்தான் என்ன சேதம்? நீ அவ்வளவு யோக்கியனானால் பேசாமல் இரு. செய்யவேண்டியதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். எப்படியும் உனக்கு லாபந்தானே.

கோவிந்தன் தன்னால் கூடியமட்டும் சொல்லியும் கிருஷ்ணன் அவன் சொல்லைக் கேட்கவில்லை. இப்படிப் பேசிக் கொண்டே இருவரும் உறங்கிவிட்டார்கள்.

அன்று அர்த்தராத்திரியில் மரகதவல்லிக்குக் காய்ச்சல் கண்டது. உடனே வைத்யரை வரவழைத்துப் பார்த்தபோது, அவர் “இது பிரமாதமான ஜன்னி. ஆயினும் பெரிதல்ல. இந்த மருந்தை அதிக ஜாக்ரதையாக இரண்டுமணிக் கொரமுறை ஒவ்வொரு சிட்டிகை ப்ரமாணமாகக் கொடுத்து வாருங்கள். ஏதாகிலும் அபாயமான குறிகள் கண்டால் ஓராளை அனுப்புங்கள். நாளைப் பகல் பன்னிரண்டு மணி வரையிலும் வீட்டில் இருப்பேன். ;பயப்படவேண்டாம்” என்று சொல்லிப் பத்ய பரிகாரங்களையும் தெரிவித்துப்போனார்.

காலையில் தூங்கி யெழுந்ததும், வீட்டிலுள்ள யாவரும் துக்கமாக இருக்கக் கண்ட கிருஷ்ணனும் கோவிந்தனும், தங்கள் தங்கை ஜன்னி கண்டு தவிக்கிறாள் என்றறிந்து, அதிக வருத்தப்பட்டார்கள். ஒன்பதுமணிக்கு அவர்களுடைய தாயார் சற்று நிம்மதியாக இருக்கவே, இந்தச் சிறுவர்கள் புழைக்கடைத் தோட்டத்தில் போய் விளையாடிக்கொண்டிருந்தனர். தாயார் குழந்தையின் ;பக்கத்திலிருந்து இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.சற்று நேரம் கழிந்த பிறகு முதலியார் பிள்ளைகளைக் கூவி, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

உடனே கிருஷ்ணன், “இல்லை நாயனா. இன்னும் மணியாகவில்லையே. இப்போதுதான் கடியாரத்தைப் பார்த்தேன்: பதினொன்றேகால் ஆயிற்று” என்று சொன்னான்.

முதலியார், “ஆனால் இன்னும் கொஞ்சநேரம் விளையாடியிருங்கள். பத்ரம், மணியை மறக்கப் போகிறீர்கள்” என்றார். என்று சொல்லிக் கொஞ்சதூரம் போனவுடனே, கிருஷ்ணன், ‘அந்தமட்டில் தப்பித்துக் கொண்டோம்’ என்றான்.

கோவிந்தன்.-எனக்குத் திக்கு திக்கென் றிருக்கிறது. கைகடியாரத்தை எடுத்துப் பார்த்திருந்தால் உண்மை வெளியாயிருக்குமே.

கிருஷ்ணன்.-அடபோடா பயங்கொள்ளி, பனங்காட்டு நரி சலசலப்புக் கஞ்சுமா. கைகடியாரத்தைப் பார்த்தால்தான் என்ன? பெரிய கடிகாரம் நின்றுபோய் விட்டதென்று தானே நினைத்துக்கொள்வார். எப்படியும் இந்நேரம் பன்னிரண்டு மணி ஆகியிருக்கும். இனிமேல் வண்டி வண்டிதான்.

இவர்கள் இப்படியிருக்கையில், மரகதவல்லியின் பக்கத்தில் இருந்த தாயார் மாணிக்கத்தை அங்கே உட்காரவைத்துத் தமது புருஷனிடம் ஓடிவந்து, “குழந்தைக்கு ஸ்வாஸம் குறைந்து வருகிறது. கை, நெருப்புப் பறக்கிறது. உடனே வைத்தியருக்கு ஆளனுப்புங்கள்” என்று சொன்னார். உடனே வீட்டு வேலைக்காரியை வைத்தியரிடம் அனுப்பினார்கள். உடனே கோவிந்தனை அழைத்துக்கொண்டுவந்து, கிருஷ்ணன், “நாயனா, எங்களுக்குப் புறப்பட மணி ஆயிற்றா?” என்று கேட்டான்.

அவர், “இந்நேரம் மணி ஆயிருக்கும்” என்று சொல்லிக் கொண்டே, தமது மடியிலிருந்த கைகடியாரத்தை எடுத்துப் பார்த்து, “அடடா, இந்நேரம் வண்டி போயிருக்கும். பன்னிரண்டரை ஆய்விட்டதே” என்று சொன்னார்.

அப்போது அவர் பெண்டாட்டி “உங்களுடைய கைகடியாரம் சீக்கிரம் போகிறதா? பெரிய கடியாரம் இன்னும் பன்னிரண்டு அடிக்கவில்லையே” என்று சொல்ல, கிருஷ்ணனும் “ஆமாம், இன்னும் பன்னிரண்டு அடிக்கவில்லை” என்று சொன்னான்.
அப்பால் போய்ப் பெரிய கடியாரத்தைப் பார்க்க், அது நின்றிருப்பது தெரியவந்தது. அதுகேட்ட முதலியார், “ஐயையோ! ஒரு முக்யமான வேலையாகப் பன்னிரண்டுமணி வண்டிக்கு ஒருவரைப் போய்க் கண்டுபேச உத்தேசித்திருந்தேன்; என்ன செய்வேன்” என்று வருத்தப்பட்டார்.

தாயானவள் “ஐயையோ! வைத்யர் இந்நேரம் வெளியில் போயிருப்பாரே. அடியம்மா, மரகதவல்லி! குழந்தாய்! என்ன செய்வேன்” என்று கையை முறித்துக்கொண்டு குழந்தையிடம் ஓடினாள்.

அதுகண்ட கிருஷ்ணன், “அம்மா, பயப்படாதே. நான் ஒரே ஓட்டமாக ஓடி வைத்யரை இட்டுக்கொண்டு வருகிறேன்.” என்று ஓடினான். கோவிந்தனும் அவன் பின்னே ஓடினான்.

இருவரும் ஒரே மூச்சாக ஓடி, வைத்யர் வீட்டுக் கதவைத் தட்டி “வைத்யர் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். உள்ளேயிருந்த வைத்யருடைய மனைவி, “பன்னிரண்டேகால் மணிக்குப் புறப்பட்டு வெளியில் வழக்கம்போல் போய்விட்டார்” என்று சொன்னார்.

கிருஷ்ணன், “அவர் யாருடைய வீட்டுக்குப் போயிருக்கிறார் தெரியுமா அம்மா?” என்று கேட்டான்.

அப்போது ஒரு சிறு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த வைத்யருடைய மனைவி, “முதலில் இன்னார் வீட்டுக்குப் போயிருப்பார் என்பது ஸரியாய்த் தெரியாது. இப்படி வந்து சற்றுநேரம் இருப்பாயானால் எனக்குத் தெரிந்தமட்டில் சொல்லுகிறேன்” என்றார்.

இதைக் கேட்டதும் உகிர்ச்சுற்றின்மேல் உலக்கை விழுந்ததுபோல் சிறிது நேரங் காத்திருந்தனர். அப்பொழுது மேலே சொன்ன சிறு பெண்ணானவள் தங்கள் வீட்டின் அண்டையில் வசிக்கும் ஓர் ஏழைக் கைம்பெண்ணின் மகளென்ற அறிந்தனர். அந்தப் பெண், வைத்யர் பெண்டாட்டியைப் பார்த்து, “ஆனால் அந்த வேலை எனக்குக் கிடைக்கும் என்கிற எண்ணம் இல்லையா? அம்மணி!” என்றாள்.

வைத்யர் பெண்டாட்டி, “ஐயோ பாவம், உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என்ன செய்வேன்? நீ சொன்னதுபோல் ஸரியாகப் பன்னிரண்டு மணிக்கு வந்திருந்தால் அந்த வேலை உனக்கே கிடைத்திருக்கும். உனக்காக வெகுதூரம் பரிவாகப் பேசினேன். பன்னிரண்டேகால் வரையிலுங் கூடப்பார்த்தோம். அப்படிக் காத்திருக்கும்போது இன்னொரு பெண் வந்தாள். அவளைப் பேசி அந்த வேலையில் வைத்துவிட்டோம். சொன்னது சொன்னபடியே அந்தந்த வேளைக்கு அந்தந்த வேலையைச் செய்யாதவர்கள் எனக்கு ஸரிப்படுவதில்லை. நீ அந்த வேளைக்கு ஏன் வரவில்லை?” என்றார்.

அந்தப் பெண் ” அம்மா, நான் முன்னதாகவே வந்தேன்.வரும்போது ராமசாமி முதலியார் வீட்டில் மணி என்ன வென்று கேட்டேன். அங்கிருந்த ஆள் கடியாரம் பார்த்து “பதினொன்றேகால் ஆயிற்று” என்று சொன்னான். அதன் மேல், நான் ஸரியான வேளைக்குப் போகலாமென்று, முன்னம் பின்னமாகக் கொஞ்சநேரம் உலாவிக்கொண்டிருந்து வந்தேன். ஐயோ அரைமணி நேரத்துக்குமேல் ஆய்விட்ட தென்றும், கிடைக்கலான வேலை அதனால் கிடைக்காமற்போயிற்றே என்றும், என் மனம் துடிக்கின்றது. ஐயோ! என்னுடைய தாய் இதைக் கேட்டால் கனவருத்தம் அடைவாளே, என்ன செய்வேன்” என்று சோகித்தாள்.

வைத்யர் பெண்டாட்டி, “இது உன்னால் வந்த தப்பிதமும் அல்ல. நல்லது, அந்தப் பிள்ளைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டு வரும்போது, கிருஷ்ணன், “ஐயோ! கோவிந்தா, உன் பேச்சைக் கௌாமற் போனேனே. நான் செய்த சூதினால் எத்தனை துன்பங்கள் உண்டாகின்றன பார். இத்தனை கார்யங்களும் இந்தப் பன்னிரண்டு மணிக்கென்றே ஏற்பட்டிருக்குமா!” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

வைத்யருடைய மனைவி, மூவர் நால்வருடைய பேர்களைச் சொல்லி, அவர்களுடைய வீடுகளுக்குப் போய் வைத்யரைக் கண்டுபிடிக்கும்படி அடையாளக் குறிப்புகளைச் சொல்லியனுப்பினார். ஸகோதரரிருவரும் ஆலஸ்யம் பண்ணாமல் அங்கங்கே அலைந்து திரிந்து வைத்யரைக் கண்டு வண்டியை நிறுத்தி, ஸங்கதியைச் சொல்லி, வைத்யரை இட்டுக்கொண்டு போனார்கள். வைத்யரும் குழந்தையை நாடிபிடித்துப் பார்த்து வெளியில் வந்து, “ஐயோ பாவம்! சிறு குழந்தை, மிஞ்சிப்போய் விட்டது. இனி மனுஷப்ரயத்தனத்தால் ஆவது ஒன்றும் இல்லை. கெட்ட குறிகள் தொடங்கிவிட்டன, நோய்க்கு மருந்து; விதிக்கு மருந்தேது” என்று சொல்லிப் போய்விட்டார்.

அன்றிரவெல்லாம் கிருஷ்ணனுக்கு உறக்கமே இல்லை. அவனுடைய எண்ணம் ஸித்தியாயிற்று. இரண்டொருநாள் பள்ளிக்கூடம் போகத் தடை உண்டாயிற்று. மெய்தான். அதனால் உண்டான நஷ்டம் எவ்வளவு. கடியாரம் டிக் டிக் என்றடிக்கும் பிரதிசப்தமும் அவனுடைய இருதயத்தைத் துடிக்கச் செய்தது. அதைப் பொறுக்கமாட்டாமல் கதவைத் திறந்துகொண்டுபோய், மரகதவல்லி படுத்திருந்த அறையின் வெளியில் ஒரு தூணின்மேல் சார்ந்துகொண்டு, அவ்வறையின் கதவினுடைய த்வாரங்களில் தெரியும் விளக்கொளியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைப் பழிக்கின்றதாய்த் தோன்றும் கடியாரந்தவிர, அந்த வீட்டில் வேறொன்றின் சப்தமும் அவனுக்குக் கேட்கவில்லை. அதன் சப்தமானது, ஸர்வேசுவரன்தவிர வேறெவருடைய கண்ணோக்கமும் செல்லாத ஸமயத்தில், தான் அந்தக் கடியாரத்தின் குண்டை நிறுத்தின செய்தியை அந்தக் கடியாரம் எல்லாரும் அறிய உரக்கச் சொல்வதுபோல் தோன்றிற்று. இப்படித் தன் தகப்பனை மோசம்பண்ணத் தலைப்பட்ட இத்தனைபேர்க்கு இத்தனை இடைஞ்சல்களை உண்டாக்கினான்.

“இந்த அறையில் எல்லாரும் நிசப்தமாயிருக்கிறார்களே. ஒருவேளை குழந்தை தூங்குகிறதோ” என்று பாவில் குழல்போல மனந்தடுமாறி, அந்த அறையின் கதவைப் பார்த்த வண்ணமாக நின்றுகொண்டிரந்தான். மணியும் அடித்து அடங்கிவிட்டது. ஒர சப்தமும் இல்லை; எங்கும் சில்லென்றிருந்தது. கொஞ்சநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு தகப்பனார் வெளியில்வந்தார்.

உடனே கிருஷ்ணன், மெல்லென எதிரில் சென்று, “நாயனா! தங்கைக்கு உடம்பு எப்படி யிருக்கிறது?” என்று கேட்டான். தகப்பனார் “உடம்பு ஸரியாயிருக்கிறது. அவள் இங்கில்லை. ஸரியாய்ப் பன்னிரண்டு மணிக்கப் பரலோக ப்ராப்தியானாள்” என்று சொன்னார்.

கிருஷ்ணன், ஒரு க்ஷணநேரம் நிதானித்தான். “ஐயோ; நாயனா! ஐயோ, நானே அவளுக்குச் சத்ராதியாக இருந்தேன்; நானே அவளைக் கொன்றேன்” என்று விம்மியழுது, நடந்த யாவற்றையும் சொல்லினான்.

அவனுடைய துக்கம் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தங்களாலானமட்டும், பெற்றோர் இருவரும் அவனைத் தேற்றினார்கள். அந்தத் துக்கம் அவனுக்குக் கொஞ்சத்தில் தெளியவில்லை.பன்னிரண்டு அடிக்கிறதைக் கேட்கும்போதெல்லாம் அவனுக்கு பக்கென்று வயிறு பற்றி யெரியும்.

– அபிநவ கதைகள் (1921)

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *