கிருஷ்ணன் பொறந்துட்டான்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 12,617 
 

எந்த நேரத்தில் எது நிகழுமோ… என திகில் கலந்த உணர்வுடன் அனைவரும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். சிலிண்டர் ஏற்றிவந்த சைக்கிளை ஓரமாக நிறுத்தி, அவிழ்ந்த லுங்கியை மடித்துக் கட்டியபடி, ”டேய் சுபாஷ§… இந்த வருஷம் கிருஷ்ணர் வேஷத்துல யாரு?” என்றான் அருணகிரி.

வலது கையை வெயில் மறைப்பாக புருவத்தின் மீது வைத்துக்கொண்டு மேலே பார்த்துக்கொண்டிருந்த சுபாஷ், ”வேற யாரு… நம்ம வடக்கு மேடு வேங்கடப்பன்தான்” என்றான்.

”டேய்… இது ரொம்ப அநியாயம்டா. கிருஷ்ணனுக்குப் பதிலா கம்சன் பனை ஏறினா, எப்படிடா ஊருக்குள்ள மழை பெய்யும்?”

கிருஷ்ணன் பொறந்துட்டான்1சாரத்தின் ஒவ்வொரு படியிலும் நின்று, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு இளைப்பாறி, நிதானித்து அடுத்த படியில் ஏறினார் வேங்கடப்பன். வருஷாவருஷம் ஏறும் சாரம்தான். ஆனால், உடலில் கூடிவிட்ட உதிர உப்பும், கொதிப்பும், விரைவீக்க அறுவைசிகிச்சையும் அநாயச ஏறலை, சாகச ஏறல் ஆக்கிவிட்டன. போதாதற்கு ஒரே பிள்ளை ஏற்படுத்திய மானக்கேடு, தன்னை நோயில் தள்ளிவிட்டதாக எண்ணிக்கொண்டார். கீழே நின்ற மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். மக்கள் திரள், அவரை ஓர் அருளாளனைப்போல் பார்த்தது. அந்தப் பார்வை தரும் போதைக்காகத்தான் ஒவ்வொரு வருஷமும் பிடிவாதமாக பனை ஏறிக்கொண்டிருக்கிறார் வேங்கடப்பன்.

ஒரு கையால் சாரத்தைப் பற்றியபடி மற்றொரு கையால் மக்களைப் பார்த்து கை அசைத்தார். இப்படியே அடுத்த அடுத்த படியில் ஏறி நின்றார். அவரின் நிற்றலிலும் நிதானிப்பிலும் சாரத்தின் உறுதியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளும் சமத்காரம் ஒளிந்திருந்தது. சூழ நின்ற மக்களோ அந்த தந்திரத்தை அறிந்திடாமல் இருக்க, வானத்தைப் பார்த்து ஒற்றைக் கையை உயர்த்தி யாசித்து, பின் மக்களை நோக்கி உதறினார். வானத்தின் அந்தர வெளிகளில் அலைகிற அரூப தேவதை களிடம் வேங்கடப்பன் வரங்களை யாசித்து அதைத் தங்கள் மீது பொழிகிறார் எனக் கற்பிதம் செய்துகொண்ட மக்கள் கூட்டம், ஏக காலத்தில் ‘கோவிந்தா… கோவிந்தா’ என பக்திப் பரவசத்தில் அரற்றியது.

திரௌபதி அம்மன் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து பனை ஏறலைப் பார்த்தபடி வாசித்துக்கொண்டிருந்த நாயன கோஷ்டி, மக்கள் எழுப்பிய ‘கோவிந்தா’ கோஷத்தில் தங்கள் வாசிப்பும் கொட்டும் அமுங்கிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் இன்னும் அதிக வீரியத்தோடு வாசித்தனர்.

ஆண்டுக்கு ஒருமுறை ஆனி மாதத்தில் நடக்கும் திருவிழாவுக்கு நாள் குறித்ததும், காட்டுக்குள் போய் சீராக வளர்ந்த ஒற்றைப் பனையை வேரோடு அகழ்ந்து எடுத்துவந்து, கோயில் முகப்பில் நான்கு அடி பள்ளம் வெட்டி, அதை நட்டு பனையின் சிரசைத் தழைத்து அலங்கரித்த மூங்கில் மாடத்தை உச்சியில் கட்டி, அதில் சென்று அமர்ந்து பூஜை செய்ய தோதாக ஏறுவதற்கு சாரம் கட்டி பனையோடு பிணைப்பார்கள்.

ஒரு மண்டலம் விரதம் இருந்தவர் கிருஷ்ணர் வேடம் தரித்து பனையில் ஏறி, மூங்கில் மாடத்தில் அமர்ந்து பூஜித்து, கலசங்களில் நிரப்பப்பட்ட தண்ணீரை புனித நீராக்கி அதை மக்கள் மீது தெளிக்க வேண்டும். பனை மேல் இருந்து பூக்களை வீசி எறிய வேண்டும். உதிரிப்பூக்கள் எவர் மீது விழுகின்றனவோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். குழந்தையில்லா பெண்கள் நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக்கிடப்பார்கள். கிருஷ்ணரின் பூக்கள் அவர்களின் வயிற்றின் மீது விழுந்தால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும். பனை ஏறல் முடிந்த 10-ம் நாள், பூஜித்த பனையை எரிப்பார்கள். கொழுந்துவிட்டு எரியும் பனையை மழை வந்து அணைக்கும் என்பது ஐதீகம்.

இது, குழந்தை அருளும் விழாவா… அல்லது மழை அருளும் விழாவா என்பதில் குழப்பம் இருந்தது. எப்படியோ ஒவ்வொரு வருடமும் வானம் சூல்கொண்டது; பெண்களும்தான்.

”ரெண்டு, மூணு வருஷமா சரியான மழை இல்லியேப்பா… சும்மா பிசிறிட்டுல்ல போகுது” என்று பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவர் சொல்ல, ”ஆனா, குழந்தைங்க மட்டும் பொறக்குதுதானே” என்றான் அருணகிரி.

”அதான் எப்படி?” என்று கேட்டார் சுபாஷ்.

”ஒரு பீடி குடு” என்றான் அருணகிரி.

பீடியின் முனையை பல்லின் முனையில் வைத்துக் கடித்துத் துப்பிவிட்டு, பற்றவைத்து ஆழ இழுத்து, ”மழை இல்லங்கிறதுனால எல்லா பயலும் கழனிகாட்டுக்குப் போகாம வீட்டுக்குள்ளயே அட காக்குறானுங்க. அப்புறம்… குழந்தைங்க பொறக்காம எப்படி?”

”அப்ப பனை ஏறி சடங்குனால குழந்தை பொறக்கலியா மாமா?”

”டேய் சுபாஷ§… உனக்கு ஏன் இந்த ஊர்ல எவனும் பொண்ணு குடுக்க மாட்றான்னு இப்பத்தான்டா தெரியுது.”

சுபாஷின் முகம் சுருங்கியது.

”மாமா, நீ ஒருத்தன்தான் சொல்லிக்காட்டாம இருந்த… இப்ப நீயும் சொல்லிட்ட.”

”கோச்சுக்காதடா மாப்ள…” – அருணகிரி, சுபாஷை அணைத்துக்கொண்டான். அருணகிரியின் வாயில் இருந்து வீசிய சாராய நெடி சுபாஷை முகம் சுளிக்கவைத்தது.

”மாமா, காலையிலயே போட்டுட்டியா?”

”திருவிழான்னா அப்படிதான்டா மாப்ள… கொண்டாட வேணாமா?” – வெயிலின் கூடுதலுக்கு ஏற்ப அருணகிரிக்கு சுதி ஏறியது.

”டேய் சுபாஷ§… பனை ஏறி சடங்குனாலதான் குழந்தை பொறக்குதுனு சொல்றியே… இந்த சடங்கு எப்படி வந்துச்சு தெரியுமா?”

”எனக்கு எப்படித் தெரியும்? நீதான் புரொஃபசர் கணக்கா ஜோரா பேசுவ. நீயே சொல்லு!”

”இதோ இருக்கே திரௌபதி அம்மன் கோயில்… இது அந்தக் காலத்துல ஒரு பெரிய பனைமரக் காடு. அதுக்குள்ளதான் இந்தக் கோயிலே இருந்துச்சு.”

”……….”

”இப்போ நாம நிக்கிற இடமெல்லாம் ஒரே புதருங்க. பகல்லயே நரிக்கூட்டம் கும்பல் சேத்துக்கிட்டு ஊளையிடும். தரை முழுக்க சாரைப் பாம்புங்க புழக்கம் எக்குத்தப்பா இருக்கும். ஒரு குஞ்சு குளுவான்கூட இந்தப் பக்கம் வராது. வருஷத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பனை மர உச்சியைத் தழைச்சு, பூஜை செஞ்சு அப்படியே கொளுத்திப்போடுவோம். இப்படியே வருஷா வருஷம் பண்ணதுல ஒரு பனை மரம்கூட இல்லாமப்போச்சு. இப்ப பனையைத் தேடிப் புடிச்சு, வெட்டிக் கொண்டாந்து, நட்டு கும்பிட்டு, பத்து நாள் கழிச்சுக் கொளுத்துறானுங்க!” – தனது இளமைக் காலக் காட்சிப் படிமம் ஏற்படுத்திய கிறக்கம், அருணகிரியின் கண்களில் வந்து அமர்ந்தது.

”பாவிப்பசங்க, சாமி பேரால எல்லா மரங்களையும் கொளுத்திப்போடுறானுங்க” – சொல்லும்போதே அருணகிரி குரல் உடைந்து அழுதான். ”ஒவ்வொரு ஊர்லயும் சாமி பேரால மரங்களைக் காப்பாத்துறானுங்க. இங்க… த்தூ!” – அருணகிரியின் மூக்கிலும் நெஞ்சிலும் ஏறிய பீடியின் காரத்தினாலோ அல்லது நினைவுகள் நெஞ்சினில் ஏற்றிய கசப்பினாலோ காறி உமிழ்ந்தான்.

பனைமரத்தின் சாரத்தில் அடுத்த படியில் கால்வைக்கும் வேங்கடப்பனை அண்ணாந்து பார்த்தபடி, ”டேய் சுபாஷ§… இந்த கம்சன் பனை ஏறி மழை பேஞ்சுதுன்னா, நான் அடுத்த மாசம் கூழ் ஊத்த மாட்டேன்… இது சத்தியம்” என்றான் அருணகிரி.

”மாமா, அண்ணனைத் திட்டாதீங்க… அவரு இப்ப சாமி.”

”டேய்… வேஷம் கட்டினா சாமி ஆயிடுவானா? மாப்ள, அவன் உடம்புக்கும் மூஞ்சிக்கும் வேஷம் பொருந்தலையேடா!”

”மாமா… கவுச்சி, சாராயம் எதையும் தொடாம நாப்பது நாள் விரதம் இருந்திருக்கார்ல!”

”போடா இவனே… நாப்பதாயிரம் வருஷம் விரதம் இருந்தாக்கூட போகாத கவுச்சியைத் தொட்டுட்டான்டா!”

சுபாஷ§க்குப் புரியவில்லை. ‘அருணகிரி ஏதோ குடிபோதையில் உளறுகிறான்’ என நினைத்தான்.

கிருஷ்ணன் பொறந்துட்டான்2பனையின் சாரத்தின் உச்சிபடிக்கு மூன்று படிகள் கீழே நின்றிருந்தார் வேங்கடப்பன். அவர் கட்டியிருந்த காவி நிறப் பஞ்ச கச்சத்தின் மடியில் இறுக்கியிருந்த அலைபேசி அழைத்தது.

அதை எடுத்து, ”அலோ…” என்றார் வேங்கடப்பன். இணைப்பு துண்டிக்கப்பட்டது அறியாமல் மீண்டும் சத்தமாக ”அலோ…” என்றார்.

ஆத்திரமாகக் கீழே நின்றிருந்த அருணகிரி சத்தமாகச் சிரித்தான். சுபாஷின் முதுகில் ஓங்கி அறைந்து, ”மாப்ள, இந்த நாதாரி சடங்குக்காக பனை ஏறலடா… சிக்னல் கிடைக்கலைனு பனை ஏறிருக்கான்” என்று சொல்லி மறுபடியும் சிரித்தான்.

”பார்ரா… உங்க சாமியோட விரதத்தை. தவம் இருந்து சாமி காரியமா பனை ஏறவன் மடியில எதுக்குடா செல்போன்?”

”மாமா, வேங்கடப்பன் அண்ணன் மேல நீ ஏன் இவ்ளோ கோபமா இருக்க? என்ன இருந்தாலும் அவர் உனக்கு சொந்த அத்தை புள்ளதானே?”

”சூதும் வஞ்சமும் நெறைஞ்சவனை நான் நண்பன்னும் சொல்ல மாட்டேன்; சொந்தம்னும் சொல்ல மாட்டேன்.”

”ஏன் மாமா… அண்ணன் அப்படி என்ன பண்ணிட்டார்?” என்றான் சுபாஷ்.

அருணகிரிக்கு முந்தைய ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் நிகழ்ந்த பனை ஏறிச் சடங்குகள் நினைவுக்கு வந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஆனி மாத மூன்றாம் வார வெள்ளிக்கிழமை அது. அன்று பனை ஏறல் விழாவின் முதல் நாள். இரவு வேங்கடப்பனின் ஒரே மகன் பாலாஜி, அருணகிரியைத் தேடி வந்தான்.

”மாமா, உங்க தோட்டத்துல இருந்துதான பூஜைக்கு பூ போகுது.”

”ஆமாம் மாப்ள…”

”ஒண்ணுமில்ல மாமா, நீங்க பூஜைக்கு அனுப்புற பூக்கூடைகள்ல எனக்கும் கொஞ்சம் வேணும்.”

அருணகிரி, ‘ஏன்… எதற்கு?’ என எதுவுமே கேட்கவில்லை. பாலாஜி எதைச் செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்பது அருணகிரியின் நினைப்பு.

திரௌபதி அம்மன் கோயிலின் தென் கிழக்கு மூலையில், ஊருக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் உயர்நிலைத் தொட்டி இருந்தது. அதன் உச்சியில் போய் பூக்கூடைகளை ஒளித்துவைத்தான் பாலாஜி. பனையின் உச்சியில் அப்பா நின்றுகொண்டு பூக்களை வீசி எறிவதில் பாலாஜிக்குத் திருப்தி இல்லை. குழுமி நிற்கும் எல்லோர் தலைகளிலும் பூக்கள் சரியாக விழுவது இல்லை. பேர் பாதி பூக்கள் மண்ணில்தான் விழுகின்றன. குறிப்பாக, குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை யாசித்து, மல்லாந்துகிடக்கும் இளம்பெண்களின் வயிற்றின் மீது கிருஷ்ணப் பிரசாதம் விழுவது இல்லை. தங்கள் மேல் விழாத, தங்களுக்கு அருளாத பூக்களுக்காக அந்தப் பெண்கள் கோயில் வாசலில் முறைவைத்து அழுதார்கள். அந்தக் காட்சி பாலாஜியின் மனதை அறுத்தது. அந்தப் பெண்களின் மீது பூக்கள் விழ வேண்டுமானால் சரியான எறி மேடைப் பனை அல்ல; தண்ணீர் விநியோகிக்கும் தொட்டிதான் எனக் கணித்து, அங்கு ஒளிந்திருந்து பூக்களை எறிந்தான்.

கூட்டம் முழுக்க பக்திப் பிரவாகத்தில், பனை ஏறலின் வசியத்தில் கட்டுண்டு கிடந்ததால் யாரும் அதைப் பார்க்கவில்லை. பக்தியின் தேடலோ, வரம் அருளலின் யாசிப்போ இல்லாமல் வேடிக்கை மனோபாவத்தில் தன் அண்ணி தெய்வானைக்குத் துணையாக வந்திருந்த பத்மா மட்டும் பாலாஜியைப் பார்த்துவிட்டாள்.

தன் மடி மீது விழுந்த பூவைத் தடவி, அண்ணி அடைந்த புளகாங்கிதம் பத்மாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்தப் பூ மட்டும் இன்று விழாமல் இருந்தால், அம்மாவின் தினசரி அம்புகள் இன்று இன்னமும் கூர்மையாகியிருக்கும். இருவேறு திசைகளில் இருந்து வந்து விழும் பூக்களின் திசையைப் பார்த்து பாலாஜியையும் கண்டுவிட்டாள்.

வியாழக்கிழமை சந்தையில் பாலாஜி எதிர்பட்டபோது அண்ணியோடு வந்த பத்மாவுக்கு நாக்கு படிந்தது. ஆனால், பேச முடியாது. மேட்டுக்குடி இளைஞர்களோடு காலனித் தெரு பெண்கள் பேசக் கூடாது என்ற எழுதப்படாத விதி ஒன்று, சுற்றுவட்டாரக் கிராமங்களில் அமலில் இருந்தது. விதிகள் மீறப்பட்டபோது, குடிசைகள் எரிந்தன. ஆனாலும் பத்மாவுக்கு இருப்புகொள்ளவில்லை. சாடையாகப் பேசினாள்.

”அண்ணி நேத்து உன் வயித்து மேல பூ போட்ட சாமிக்கு தேங்க்ஸ் சொல்லலாமா?”

பாலாஜி, பத்மாவை நேர்கொண்டு பார்த்தான். அந்த ஒரு பார்வையில் தங்கள் பிறப்பின் நோக்கம் என்னவென்ற ஞான அருள் இருவருக்குள்ளும் இறங்கியது.

”தேங்க்ஸ் சொல்லணும்தான் பத்மா. நாளைக்கு வெள்ளிக்கிழமை, சாமிக்கு பொங்கல் வெச்சு சொல்லிடலாம்.”

வெள்ளிக்கிழமை பொங்கல் பானையையும் தன் அசைவுகளையும் பாலாஜி எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை பத்மாவால் உணர முடிந்தது.

தன் அலைபேசியின் முதல் மூன்று எண்களை பொங்கல் பானையில் எழுதினாள் பத்மா. அடுத்த மூன்று எண்களை, பானையையும் மூட்டிய அடுப்பையும் சுற்றிப் போட்ட கோலத்தில் போட்டாள். பொங்கல் வெந்து, படைத்து, சாமி கும்பிட்டு, சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போது பூவரசம் இலை கொழுந்தைக் கசக்கி, கோயில் பிராகாரச் சுவரில் கடைசி நான்கு எண்களை எழுதி முடிக்கும்போதே குறுஞ்செய்தி வந்துவிட்டது. ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். எழுத்து எப்போது?’ என, அன்று இரவு அலைபேசியில் பேசிக்கொண்டார்கள்.

”ஏன் தண்ணி டேங்க் மேல ஒளிஞ்சு நின்னு பொம்பளங்க மேல பூ போட்டீங்க?”

”எதிர்பார்த்து வந்தவங்க ஏமாந்துபோகாம இருக்கணும்னுதான்.”

”அதுல உங்களுக்கு என்ன லாபம்?”

”சக உயிர்களின் சந்தோஷம், எனக்கு லாபம்; சக உயிர்களின் துக்கம், எனக்கு நஷ்டம்.”

”தோழரே, வாழ்க உங்கள் வாழ்க்கைத் தத்துவம்.”

”தோழியர் என்ன பண்றாங்கனு

தெரிஞ்சுக்கலாமா?”

”அக்கறை இருந்தா கண்டுபுடிக்கலாமே!”

”உம்… கண்டுபுடிக்கிறேன்…”

”ஆனா, எனக்கு ஒண்ணு தெரியும்.”

”என்ன?”

”பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்ல இருக்கீங்க. டேராடூன் ரெஜிமென்ட். ஜோஸிமட்ல போஸ்ட்டிங். இப்ப ரெண்டு வாரம் லீவ்ல வந்திருக்கீங்க.”

”ஆஹா… தோழியர் என்ன வேலை பாக்குறாங்கன்னு கண்டுபுடிச்சுட்டேன்!”

”என்ன வேலை?”

”சீனாவின் ஒற்றர் படைப் பிரிவில்…”

பத்மாவின் சிரிப்பு அலைபேசியில் அலை அலையாக அதிர, ‘அய்யோ! இன்னும் இரண்டு நாட்களில் டெல்லிக்கு ரயில் ஏறியாக வேண்டுமே’ என, பாலாஜிக்கான கவுன்ட் டவுணைத் தொடங்கின நொடிகள்.

மறுவருடம் ஆனி மாதத் திருவிழாவுக்கு விடுப்பில் வந்தபோது, பாலாஜியும் பத்மாவும் பனைமரக் காட்டில் சந்தித்தனர்.

அந்தரத்தில் காற்று நதியின் சீறலில் திமிறி புரளும் பனை ஓலைகளின் சத்தம், திசைகள் எங்கும் பயணிக்கும் முற்பகல் வேளை. பனைமரத்தில் சாய்ந்து நின்ற பத்மாவின் கைகளைப் பிடித்தபடி பாலாஜி கேட்டான்.

”பத்து, நம்ம காதல் ஊருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்?”

”முன்னமாதிரி குடிசைகள் எரியாது தோழரே…” அடுத்து பத்மா சொல்ல விழைந்ததை கேட்க விரும்பாத பாலாஜி, அவளின் உதடுகளை மூடினான் தனது உதடுகளால். கண்கள் சிவக்க ஆழ மூச்சு இழுத்துவிட்ட பத்மாவிடம் குறுநகையுடன், ”இந்தப் பனைமரத்து அடியில நின்னு நாம கல்யாணம் பண்ணிப்போம்.”

”ஏன் பனைமரம்?”

”நம்ம ஊருல வேற என்ன மரம் இருக்கு?”

”நம்ம ஊருக்கு வந்து சேர்ற நெடுஞ்சாலை முழுக்க புளியமரம்தான் இருக்கு. அங்ககூட கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன்னா, புளியமரம் திருப்பதி ஏழுமலையானின் ஸ்தல விருட்சம். நமக்கும் பேர் பொருத்தமும் இருக்கு. ஆனா, எந்த மரத்துக்குக் கீழ நின்னாலும் எவன் கண்ணுலயாவது பட்டுடுவோம். இங்கதான்…” சுற்றும் முற்றும் பார்த்தான், ”யாரும் இல்ல. அதுவும் இல்லாம பனைமரம்தான் நம்ம ஊரு கோயிலுக்கு ஸ்தல விருட்சம். அதனால, இங்க நின்னு கல்யாணம் பண்ணிக்குவோம்!”

”அப்படியா! பனைமரம் நம்ம ஊர் கோயிலுக்கு ஸ்தல விருட்சமா?” - ஆச்சர்யமாகக் கேட்ட பத்மாவின் கழுத்தில், தன் தங்கச் சங்கிலியைக் கழற்றிப் போட்டான் பாலாஜி.

பத்மா பனைமரத்தைத் தொட்டு வணங்கினாள்; அடி மரத்தை விழுந்து கும்பிட்டாள். பனை, காற்றின் வேகத்துக்கு அதிர்ந்து அசைந்தது. அந்தப் பனைமரம்தான் வெட்டிக் கொணரப்பட்டு, இப்போது இங்கே நட்டுவைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது பிரபஞ்சத்தின் வெளிப்படாத கோடானுகோடி ரகசியங்களில் ஒன்று.

”டேய் மாப்ள, பனைமரத்துல ஏறி ஊருல இருக்குற பொம்பளப் புள்ளக்கி எல்லாம் புள்ளை வரம் கொடுக்கிற இந்த கம்சன், ஆறு மாசத்துக்கு முன்னாடி என்ன பண்ணான் தெரியுமாடா?” என்ற அருணகிரியை, ‘சொல்லு மாமா’ என்பதுபோல் பார்த்தான் சுபாஷ்.

அருணகிரி சொல்லவில்லை. காட்டுக்குப்பம் வைத்தியர் வீட்டில் தான் உள்ளே இருப்பதை அறியாமல் வேங்கடப்பன் பேசியதை நினைத்து பார்த்தான்.

”வைத்தியரே கர்ப்பம் கலைஞ்சுடுமா?”

”மாசமா இருக்குற பொண்ணுங்களுக்கு ரொம்பப் புடிச்ச விஷயம் மாங்கா ஊறுகா. அதனாலதான் மருந்தை ஊறுகாயில் கலந்து வெச்சிருக்கேன். கேரளாவுல இருந்து வந்த வீரியமான மருந்து, வவுத்த தரிசாக்கிடும் பாத்துக்க!”

”ஆமா கரையணும். என் குலத்துல கீழ் சாதி ரத்தம் கலக்கக் கூடாது. பதிமூணு பாளையத்துக்கு வரி வசூல் பண்ண குடும்பம் என்னோடது… ராஜ வம்சம்!”

வேங்கடப்பன் சாரத்தின் அடுத்த படியில் கால் வைத்தார். இன்னும் இரண்டு படிகளே மிச்சம் இருந்தன. மீண்டும் ஒலித்த அலைபேசியை எடுத்தார். காற்று கொஞ்சம் பலமாக வீசியது. சத்தமாகப் பேசினார் வேங்கடப்பன்.

”அலோ… அப்பா நான் பாலாஜி பேசுறேன்.”

”சொல்லுப்பா!”

”அப்பா, உங்களுக்கு பேரன் பொறந்திருக்கான்” – சுற்றி ஒலித்த செண்டை மேளம், நாயணம், கொம்பு வாத்தியங்களின் ஓசையும், ‘கோவிந்தா’ கோஷமும் சல்லிசாகி, ‘பேரன் பொறந்திருக்கான்’ என்பதே பேரோசையாக வேங்கடப்பன் காதுகளில் ஒலித்தது.

கீழே பார்த்தார். ஒரு பனையின் உயரம் என்பது வானத்தின் உயரமா? பூமி ஏன் இவ்வளவு கீழாகப் போய்விட்டது, மனிதர்கள் ஏன் பாதாளத்தில் தெரிகிறார்கள், கைகள் ஏன் இப்படி வியர்க்கின்றன, இந்தக் காற்று ஏன் இப்படிச் சுழன்று அடித்து பனையை உலுக்குகிறது. சட்டென அடுத்த அடி வைத்து ஊஞ்சல் மாடத்துக்குப் போய்விடும் முனைப்பில் வேங்கடப்பன் காலை உயர்த்தியபோது ஈர்ப்பு அவரைக் கைவிட்டது. கீழே நின்றிருந்த பெருங்கூட்டம் ‘கோவிந்தா’ எனச் சொல்ல மறந்து ‘அய்யோ!’ என அரற்றியது.

மேலே இருந்து சுழன்று பூமி நோக்கி மல்லாந்து விழும் வேங்கடப்பனைப் பார்த்தபடி அருணகிரி, ”சுபாஷ§… அடுத்த மாசம் கூழ் உத்துறேன்டா. எங்கேயோ ஒரு கிருஷ்ணன் பொறந்திருக்கான்” என்றான்.

கூட்டம் பனைமரத்தைப் பார்த்ததை மறந்து கீழே அலங்கோலமாக விழுந்து சிதறிக்கிடக்கும் வேங்கடப்பனைப் பார்க்க, அருணகிரி மட்டும் பனைமரத்தைப் பார்த்து கைகள் உயர்த்தித் தொழுதான்!

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *