“வாசல்ல எதுக்குடி மசமசன்னு நிக்கற, சந்தியவன வேளையாறது… போய் சாமிக்கு விளக்கேத்துடி. வயசுக்கு வந்த பொண்ணு, காலங்கெட்டுக் கிடக்கறது தெரியாம, இப்படி போறவங்க வர்றவங்களையெல்லாம் பார்த்துக்கிட்டு வாசல்ல நிக்கலாமா?”
மங்களம் பாட்டி, தன் மகன் வயிற்றுப் பேத்தி லலிதாவை விரட்டிக் கொண்டிருந்தாள்.
லலிதாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.
தான் வாசலில் நிற்பதை அனுமதிக்காத பாட்டி, அலுவலகத்திற்குச் சென்று தன்னை சம்பாதிக்க அனுப்புவது மட்டும் எப்படி? மாதா மாதம் சுளையாக வரும் சம்பளத்திற்காகவா என எண்ணிக் கொண்டாள்.
சாமிக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு அன்று வந்த ஒரு பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு கூடத்தில் அமர்ந்து புரட்டலானாள்.
பத்திரிகையில் மனம் செல்லது, ‘காலம் கெட்டுபோச்சு’ என்று தன் பாட்டி சொன்னதை நினைத்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள்.
காலம் நிச்சயமாகக் கெடவில்லை. பெண்கள் கல்லூரிக்குச் சென்று படிப்பதற்கும், அலுவலகம் சென்று சம்பாதிப்பதற்கும் என்று ஆரம்பித்த பிறகு, விமலா-ஜோசப் மாதிரி காதல் கலப்புத் திருமணங்கள் பல நடப்பது இயற்கை. தற்போது நிகழும் காலம் ஆரோக்கியமானதாகத்தான் இருக்கிறது. மாறாக உங்களது பழைய காலங்கள்தான் மிகவும் கெட்டிருந்தது என்று பாட்டியிடம் சென்று கத்த வேண்டும் போலிருந்தது.
அவளது சிந்தனைகள் தொடர்ந்தன…
அக்காலத்தில் தன் தாத்தாவுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள் என்றால் யரும் புருவத்தை உயர்த்தவில்லை. அப்பொதைய சமூகம் அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.
தன் தாத்தாவுக்கு இருந்த மூன்று மனைவிகளில், இந்த மங்களம் பாட்டிதான் இரண்டாவது மனைவி. தற்போது உயிருடன் ‘தங்கி’ இருப்பதும் இவள்தான். தாத்தாவுக்கு முதல் திருமணம் நடந்தபோது வயது பதின்மூன்றோ பதினான்கோதான். பாட்டிக்கு வயது எட்டு.
மீசை முளைத்திராத அந்த வயதில் திருமணம் செய்துகொண்டு, அப்போது அரும்பக்கூடிய காம ஆசைகளுக்கு வடிகாலாக ஒரு மனைவி இருந்தும் – அவள் இருக்கும்போதே – சில வருடங்களுக்குப் பிறகு இரண்டாந்தாரமாக இன்னொருத்தியை திருமணம் செய்துகொண்டு, அதை முதல் மனைவியும் அங்கீகரித்து… இவர்கள் காலமா ஆரோக்கியமானது ?
மாறாக, பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் வயதுக்கு வந்து, கல்வியை நிறுத்திவிடாது தொடர்ந்து படித்து, அக்கல்வி மூலம் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, வீட்டின் பொருளாதாரத் தேவைகளுக்காக உழைத்து சம்பாதிக்கும் இக்காலப் பெண்கள் எவ்வளவு மேலானவர்கள்?
காலையில் சீக்கிரமாக எழுந்து பம்பரமாகச் சுழன்று, வெந்ததும் வேகாததுமாகத் தின்றுவிட்டு, பஸ் ஸ்டாண்டுக்கு ஓடி, பஸ்ஸின் கூட்ட நெரிசலில் ஆண்களின் வாசனையை நுகர்ந்து, கொங்கைகளும் பிருஷடபாகங்களும் இயல்பாக இடிபட்டு, டெர்மினஸில் உதிர்ந்து, விசுக் விசுக்கென அவசர அவசரமாக நடந்து, அலுவலக வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு, தன் இருக்கையில் சென்று அமரும்போது, தன் கழுத்துப் பிடாரியில் வியர்வை பெருகி பிசுபிசுத்து…. அம்மாடி..
அது மட்டுமின்றி, அலுவலகத்தில் ஜாடை மாடையாகப் பேசி அசடு வழியும் சில ஆண்களை, ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிறுத்தி, சாமர்த்தியமாக அவர்களின் மனம் நோகாது பேசியனுப்பி…
மாலை ஐந்து மணிக்கு அதே இயந்திர கதியில் பஸ்ஸைப் பிடித்து கூட்டத்தின் வியர்வையில் ஐக்கியமாகி வீட்டை அடையும்போது களைப்படைந்து முகம் பொலிவிழந்து அப்பாடான்னு தன்னை மாதிரி அலுத்துக் கொள்ளும் பெண்கள் எத்தனை பேர்…
பதின்மூன்று வயது முதல், இருபத்தைந்து வயது வரையில் – ஒரு மாமாங்கம் – உடல் தயாராயிருந்தும், பொருளாதாரம் இடம் தராது, திருமணம் செய்து கொள்ளாமல் தன் வீட்டுக்காக உழைத்து…தற்போதைய சினிமாக்கள், அதில் வரும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள், செக்ஸையே பிரதான மூலதனமாக வைத்து நடத்தும் பத்திரிகைகள், அதில் பிரசுரமாகும் படங்கள்..இவைகளின் தூண்டுதலைத் தவிர்த்து, தினமும் எதிர்படும் பல ஆண்களுடன் உடலளவில் ஆரோக்கியமாகப் பழகி, உள் மனதில் அவர்களைப் பற்றி எழும் காம இச்சைகளை, விரகதாபத்தை, மனதிற்குள்ளேயே அமுக்கி, சூழ்நிலைக்கு இரையாகிவிடாது, பெற்றோர்கள் சொல்லும் பையனை ஒழுங்காக மணந்து கொண்டு, பிறகு புகுந்த வீட்டிற்காக கணவன் வேண்டுகோளுக்கு இணங்க அதே இயந்திர கதியில் அலுவலகம் சென்று சம்பாதிக்கும் இக்காலப் பெண்கள் எவ்வளவு மேலானவர்கள்…?
வாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டதும் தனது சிந்தனைகள் தடைப்பட, வீட்டின் வாசற்புறத்தில் பார்த்தபோது அவளுடைய அண்ணா அனந்தராமன் வருவது தெரிந்தது.
மனதில் உற்சாகம் பொங்க, “அமமா, அண்ணா வந்திருக்கார்” என்று குரல் கொடுத்தபடி வாசலை நோக்கி ஓடி அவனை வரவேற்றாள்.
வேஷ்டியால் தனது மூக்கு கண்ணாடியைத் துடைத்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்த பரசுராமன், அவர்களின் தந்தை, “வா அனந்து, என்னடா கடிதம்கூட போடாமல் திடீர்னு..” என்று வினவிக் கொண்டிருக்கும்போது, மங்களமும், அனந்தராமனின் தாயாரும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
வீடு கலகலப்பானது.
அனந்தராமன் அகமதாபாத்திலிருந்து இரண்டு வார விடுமுறையில் வந்திருந்தான். இரண்டு நாட்கள் சென்றன.
மூன்றாம் நாள், அனந்தராமன் மெதுவாகத் தன் தந்தையிடம், தான் தன்னுடன் அகமதாபாத்தில் வேலை பார்க்கும் ஹர்ஷிதா எனும் குஜராத்திப் பெண்ணை மணக்க விரும்புவதாகவும், அவள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் என்றும், குரலில் பயம் தொனிக்கச் சொன்னபோது, பரசுராமனும் மங்களம் பாட்டியும் அவன் என்னவோ ஹர்ஷிதாவை கல்யாணமே செய்துகொண்டு வந்து விட்டதுபோல், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து கோபத்துடன் கத்தலானார்கள். அவனின் தாய் ஒன்றும் சொல்லத் தோன்றாது மெளனமாக நின்றாள்.
அவன் வரவால் சந்தோஷமடைந்த வீடு, தற்போது களையிழந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் மெளனத்திலும், பரிபாஷையிலும் கடந்தது.
அனந்தராமன் அகமதாபாத் கிளம்புவதற்கு முந்தைய தினம் இரவு அனைவரும் கூடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அனந்தராமன் தன் தந்தையிடம், “இன்பாக்ட் நான் இங்கு வந்ததே ஹர்ஷிதாவைப் பற்றி தங்களிடம் சொல்லி, உங்களுடைய அனுமதியுடன் அவளைத் திருமணம் செய்து கொள்வதற்குத்தான். ஆனால் உங்களுக்கு இஷ்டமில்லாத எந்த ஒரு காரியத்தையும் நான் செய்ய விரும்பலை. அதே சமயத்தில் ஒரு பெண்ணை மனசால தீண்டினப்பறம் இன்னொருத்தியை நினைத்துப் பார்க்கவும் என்னால முடியாது. நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செஞ்சுட்டேன்… நீங்கள் இனிமேல் நம்மாத்து லலிதாவுக்கு வரன் தேடுவதில் முனையலாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் உதவிகளையும் நான் செய்யத் தயாராய் இருக்கேன்.”
லலிதாவுக்கு கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.
பாதிச் சாப்பாட்டில் எழுந்து சென்று முற்றத்தில் தன் கைகளை கழுவலானாள். தன் அண்ணாவின் உயர்ந்த முடிவை, யோக்யதையை நினைத்து அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகியது.
அவனுக்கு ஹர்ஷிதாவுடன் திருமணம் நடக்கும் வரை, தானும் கன்னியாகவே காலம் தள்ளுவது என்ற திடமான முடிவை தன்னுள் ஏற்படுத்திக் கொண்டாள்.
ஹர்ஷிதாவைத் தவிர்த்து பிற பெண்களை மனத்தாலும் தீண்ட மாட்டேன் என்ற தன் அண்ணாவின் நேர்மையை வியந்து, தனக்குள் சொல்லிக் கொண்டாள் ‘காலம் கெடவில்லை’ என்று.
– சாவி 1-2-81 இதழ்