காலமும் நெருப்புத்துண்டங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 7,807 
 

தோளில் தொங்கும் பையுடன் அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான்.

தெருமுனையில் ஆறுமுகத்தின் வாடகை சைக்கிள் கடை. பக்கத்தில் பிள்ளையார் கோயில். அங்கேதான் சதுர்த்திக்கு நாடகம் போடுவார்கள். சிவனுக்கும், நக்கீரனுக்கும் நடக்கும் விவாதம்தான் போன சதுர்த்தியிரவு போட்ட நாடகம். கோயிலைத் தாண்டி சற்றே சாயும் தெருவில் இறங்கினால் அங்கு சாமியின் கடை. வண்ண மிட்டாய்களும் பட்டர் பிஸ்கெட்களும் இருக்கும். அங்குசாமியின் பையன் பெருமாளும், அவனும் முதலாம் கிளாஸில் சேர்ந்து படித்தார்கள். ஆனால் ஸ்கூல் முழுவதுமே முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்று பெருமாளை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார் அங்குசாமி. பெருமாள் ஸெயிண்ட் மேரீஸுக்குப் போய்விட்டான். கான்வெண்ட். அவனுக்குக்கூட அந்தப் பெயர் பிடித்திருந்தது. கான்வெண்ட் பள்ளிகளின் பெயர்கள் எல்லாமே சொல்லுவதற்கே நன்றாக இருந்தது. ஸெயிண்ட் ஜோஸப். ஸெயிண்ட் இக்னேஷியஸ். அப்புறம் அங்குசாமி கடைக்குப் பக்கத்தில் முதலியார் வீடு. அங்கேதானே முதன்முதலாக டி.வி. வாங்கினார்கள். ஒளியும் ஒலியும் பார்க்க நாலணா, ஞாயிறு சாயந்திரம் படம் பார்க்க எட்டணா. அம்மா சில படங்களுக்கு அவனை அனுப்பமாட்டாள். கல்யாணராமன் படம் ரொம்பவும் பிடித்திருந்தது. சில சமயங்களில் அவர்கள் வீட்டில் சாப்பாட்டுக்கடை முடிந்திராவிட்டால் டி.வி. பார்க்கவரும் பையன்களை வெளியிலேயே நிறுத்திவிடுவார்கள். கேட்டுக்குப் பக்கத்தில் நின்று சன்னல்வழி டி.வி.யை பார்க்கவேண்டும். அதற்கு ஒன்றும் காசு கிடையாது. ஆனால் உள்ளே நுழையும்போது காசு கொடுத்துவிட வேண்டும். அதற்கு அப்புறம் ஒரு குட்டையைத் தாண்டிப் போகவேண்டும். வீடு கட்டி குடிவந்த பொழுது அந்தக் குட்டையில் நிறைய தண்ணீர் இருந்தது. அதற்குள்ளே அவன் இறங்கிவிட்டான். தலைக்குமேலே தண்ணீர் போக பயந்து தத்தளித்தான். யாரோ வெளியில் இழுத்துவிட்டார்கள். அம்மா முதுகில் ஓங்கிச் சாத்தினாள். அதற்கப்புறம் அந்தக் குட்டையில் தண்ணீர் நிரம்பியதேயில்லை. மழைக்காலத்தில் குட்டையில் தண்ணீர் கொஞ்சம் தேங்கினால் அவனும் குமாரும் இன்னும் சில பையன்களும் மீன் பிடி விளையாட்டு விளையாடுவார்கள். குமார் வீட்டிலிருந்து ஒரு வேட்டியைக் கொண்டுவருவான். அதைத் தண்ணீரில் முக்கி ஊஞ்சல் போல ஆட்டினால் சில சமயம் தவளைக்குஞ்சுகள் மாட்டும்.

குட்டையைக் கடக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அது வண்டி போகும் தெரு என்றாலும் தரையில் எப்போதும் முட்கள் இருக்கும். எங்கிருந்து அந்த முட்கள் வருகின்றன என்று தெரியவில்லை. வாரத்திற்கொருமுறையாவது காலில் ஒரு முள் குத்திவிடுகிறது. முன்னங்காலை மட்டும் ஊன்றி நடந்து பள்ளிவரை போவது கஷ்டம். ஓடி விளையாட முடியாது. “பார்த்து வரக்கூடாதா? எனக்கிருக்கும் வேலை போறாதுன்னு இதுவுமா?” என்று அவனைப் பார்த்து அம்மா கத்தியிருக்கிறாள். அவளுக்கு வேலை அதிகம். ஆனால் தெருவில் முள்ளை முளைக்க வைத்திருப்பது அவனா. அதுபோலத்தான் பள்ளியில் பெரிய டீச்சர் பீஸ் கேட்கும்போது சங்கடமாய் நிற்கவேண்டி வருவதும், எவ்வளவு சொன்னாலும் புரியவில்லை. அம்மாவையா கேட்கிறாள் பெரிய டீச்சர். அம்மா பள்ளிக்கு வந்தால்தானே. பெரிய டீச்சர் நல்ல உயரம். சின்ன டீச்சர் அதுபோல உயர மில்லையென்றாலும் மிகவும் குள்ளமுமில்லை.

அந்தத் தெருவில்தான் அப்ஸராவின் வீடு இருக்கிறது. விகடன், குமுதத்தில் கதைகளுக்கு அவர் வரைந்த படம் வந்திருக்கிறது. அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாகத்தான் குமுதம் படிக்க வேண்டும். விகடன் படிப்பதில் இந்தப் பிரச்சினை இல்லை. அப்பாவுக்கும் படம் வரைவதில் இஷ்டம்தான். அப்பாதான் ஒருநாள் இந்த வீட்டைக் காட்டினார். அந்தப் பெயரே எத்தனை இஷ்டமாக இருக்கிறது. அப்ஸரா! ஆனால் எப்படி ஒரு பெண் பெயரை வைத்துக்கொள்ள முடியும்..? அம்மாவும்… சொல்கிறாள். சில சமயம், “சுஜாதா நன்றாக எழுதுகிறான்” என்று. அப்போது பெண் பெயரில் பத்திரிகைகளில் எழுதுபவர்களும், படம் வரைபவர்களும் ஆண்கள். ஆண் பெயரில் எழுதுபவர்கள் பெண்களா? இப்படி மாற்றி வைத்துக்கொண்டால் எத்தனை குழப்பம்! அப்ஸராவை ஒருமுறை பார்த்திருக்கிறான். வீட்டு வாசலில் நின்று ரோடு போட வந்த ஆளிடம் ஏதோ சண்டை போட்டுக்கொண்டிருந்தார். பாண்டில் ஜல்லியுடன் நின்ற ஆள் அவரை கொஞ்சம் வேகமாகத்தான் திட்டிக்கொண்டிருந்தான். அவரைப் பார்த்தால் ஓவியர் என்று அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் ஓவியர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதும் தெரியாது.

அடுத்த முனையில் அந்தத் தெரு இரண்டாகப் பிரியும். இடது பக்கம் பள்ளிக்கு வழி நீளும். வலது பக்கம் போனால் மேடு. ஒரு விடுமுறை நாளில் சும்மா அந்த இடத்துக்குப் போய் பார்த்தபோது வேறொரு ஊருக்கு வந்துவிட்டது போல் இருக்கும். ஒரு மாதிரி தித்திப்பான வாசனை வரும். அம்மா சாந்து வைத்துக்கொண்டால் திறந்திருக்கும் சாந்து புட்டியிலிருந்து வருமே அதுபோல. அங்கே நெயில் பாலீஷ் தயாரிக்கிறார்கள் என்று காதர் சொல்லியிருக்கிறான். ஆனால் நெயில்பாலீஷை எல்லாம் அம்மா போட்டுக்கொள்ள மாட்டாள். கல்யாணத்துக்குப் போனால் மருதாணி. அவனும் இட்டுக்கொள்ள வேண்டும். கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும் அம்மாவிடம் முகம் சுளித்துக்கொண்டாலும் இட்டுக்கொண்டு ரகசியமாய் கையைப் பார்த்துக்கொண்டிருப்பான். சீக்கிரம் பத்தவேண்டுமே! ராத்திரி பூராவும் தூக்கம் வராது! அப்புறம் தூங்கிய பிறகு கை காய்ந்து காலையில் நீர் விட்டு அலம்பும்போது கெட்டித்த மருதாணி பிய்ந்துவரும். விரல்களில் சொரசொரப்புக்கு அடியில் இருக்கும் வழுவழுப்பையும் தேய்த்து அலம்பினால் ஒவ்வொரு விரல் நுனியும் பூப்போல மின்னும். அம்மா உள்ளங்கையை இழுத்துப் பார்ப்பாள். நெயில்பாலீஷில் அப்படியெல்லாம் சந்தோஷம் இருக்குமா என்று தெரியவில்லை. அம்மா நெயில்பாலீஷ் போட்டுக்கொள்ள மாட்டாள்.

அதையும் தாண்டிப்போனால் கொஞ்சம் பயமாக இருக்கும். குடிசைகள் இருக்கும். ரிக்ஷா மீது சாய்ந்தும் படுத்துக்கொண்டும் பீடி பிடித்துக்-கொண்டிருப்பார்கள் ஆட்கள். ஆண்கள் கண்கள் சிவந்திருக்கும். தெருவில் சிறுசிறு பையன்கள் ஓட்டை ட்ரவுசருடன் கோலி விளையாடுவார்கள். அப்படியே நடுத்தெருவில் ஒரு கும்பலாய் ஆட்கள் உட்கார்ந்து சீட்டாடுவார்கள். பெண்கள் குழாயடியில் சூழ்ந்துகொண்டு ரப்பர் குடங்களில் தண்ணீர் நிரப்புவார்கள். அங்கே இரு பக்கமும் வீடுகள் கூடிக்கூடி இருக்கும். நட்ட நடுவில் ஒரு கிணறும், மேடையும்கூட. அங்கே சேர்ந்து பெண்கள் துணி துவைப்பார்கள். தரையெல்லாம் தண்ணீர் சிந்தி ஓடும். பெண்கள் மோசமான வார்த்தைகள் எல்லாம் சொல்லி சண்டை போட்டுக்கொள்வார்கள். குடிசை வாசலில் உட்கார்ந்திருந்த ஆட்கள் அதை வேடிக்கை பார்ப்பார்கள். கெட்ட கெட்ட வார்த்தைகள் பெண்கள் வாயிலிருந்து வரும்போது நெஞ்சு திக் திக்கென்று அடித்துக்கொள்ளும். அவனையே அவர்கள் எல்லாரும் பார்ப்பதுபோல கூட இருக்கும்.

ஆனால் பள்ளிக்குப் போகும் வழி இவ்வளவு மோசமாக இருக்காது. முஸ்லிம்கள் வீடுகள் துவங்கிவிடும். இங்கேயிருந்து எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷன் வரை எல்லாம் அவர்கள். தெருப் பெயரெல்லாம்கூட சட்டென மாறிவிடும். வடிவேல் நகர், பழனியப்பன் தெரு, ஆனந்தா காலனி இதெல்லாம் போய் ரஜாக் தெரு, ஹனீப் காலனி, சாதிக் நகர் என்று ஆகிவிடும். பெயர் மட்டும் இல்லை. அங்கே வரும் வாசனைகூட. அவன் வீடு இருக்கும் தெருவில் நிறைய சமயங்களில் விபூதி வாசனை வருவதைக் கவனித்திருக்கிறான். முதலியார் வீடு இருக்கும் இடத்தில் எப்போதும் முறுக்கு வாசனை வரும். முறுக்குச் சாப்பிட அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அம்மா தீபாவளிபோது மட்டும்தான் அதைச் செய்கிறாள். இந்த இடத்தில் வரும் வாசனை அவனுக்கு என்னவென்று தெரியாது. அவனுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அது மாமிச வாசனைதான் என்று நினைக்கிறான். ஆனால் அதைக் கேட்க பயமாக இருக்கிறது. அப்பாவுடன் ஸ்டேஷனுக்குப் போகும்போது இந்த வழியாகத் தான் அழைத்துச் செல்வார். அந்த மேடு ஏறி நெயில் பாலீஷ் வீடுகள் வழியாகக் கூட செல்லலாம். ஆனால் அப்போது அந்தச் சண்டை போடும் பெண்கள் இருக்கும் வீடுகள் வழி போக வேண்டும். இரண்டில் இந்த வழியே தேவலை என்று அவனுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் அந்த வழியில்தான் வேடிக்கை பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. திக் திக்கென்று நெஞ்சு அடித்துக் கொண்டாலும்.

இங்கே வீடுகள் எல்லாம் அழுக்காகத்தான் இருக்கிறது. தெரு ஓரத்தில் பாத்தி கட்டியதுபோல் குப்பைக் கூளம் வரிசையாகக் கிடக்கிறது. மழை பெய்தால் ரோடொன்று இருப்பது போலவே இருக்காது. சைக்கிளில் வருபவர்கள் ஓட்ட முடியாது தள்ளிக்கொண்டு போவார்கள். அப்பாவின் சைக்கிளைத் தள்ளி வந்திருக்கிறான். அப்பா அவனை சைக்கிள் ஓட்ட அனுமதித்ததில்லை. அவனுக்கு குரங்கு பெடல் வரும் என்று அவருக்குத் தெரியாது.

அது ஒன்றும் தெரியாத ஜென்மம் என்று அம்மா அடிக்கடி சொல்கிறாள். அது எப்படி ஒன்றும் தெரியாது அவர் ஆபிஸுக்குப் போக முடியும்? அவனைக் கூட அவர் ஆபிஸுக்குக் கூட்டிப் போயிருக்கிறார். அப்போது அவனுக்கு ஓட்டலில் பூரிக்கிழங்கு வாங்கிக் கொடுத்தார். அம்மா அதுமாதிரி பூரிக்கிழங்கு பண்ணியதேயில்லை. கையில் அந்த வாசனை நாள் முழுக்க இருந்தது.

கவுஸ் வீட்டைத் தாண்டிதான் பள்ளிக்குப் போக முடியும். கவுஸ் வீட்டு வாசல் கதவுக்குப்பின்னால் திரை தொங்கும். கவுஸ் வீட்டில் எல்லா சன்னல்களிலும் திரை தொங்கும். அவனுடைய வீட்டில் திரைகள் கிடையாது. சன்னல்களில் துருப் பிரியும் கம்பிகளும் கதவும்தான். கவுஸ் வீட்டுத் திரைகள் கொஞ்சம் அழுக்காக இருந்தாலும் ஜிகினாவும் பூக்களுமாய் இருக்கும். தெருவில் வண்டி வேகமாகப் போனால் காற்றில் வாசல் திரை உள்வாங்கும். அவன் கவுஸ் வீட்டுக்குப் போனது அம்மாவுக்குத் தெரியாது. அவனுக்கு கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. எதற்கு என்று தெரியாத படபடப்பு. அதேபோல வீட்டுக்குப் போன பிறகு அம்மாவிடம் கவுஸ் வீட்டுக்குப் போனதையும் சொல்லவில்லை. கவுஸ் வீட்டில் ஒரு இனிப்பையும் தின்றிருக்கிறான். அவன் கவுஸ் வீட்டுக்குப் போனதை விடவும் அங்கே அவன் தின்றிருக்கிறான் என்பதை அவளால் ஜீரணிக்க முடியாது. ஆனால் கவுஸைப் போல அல்ல நாசர். மிகவும் பொல்லாதவன்! அவன் வீடு கூட பக்கத்தில்தான் இருக்கிறது. நாசர் மூன்று வருடங்களாக ஒரே வகுப்பில் இருக்கிறான். அவன் படிக்கும் வகுப்புதான். நாசர் பெரியவனாக இருப்பதால் அவனையே க்ளாஸ் மானிட்டராக வைத்துவிட்டார் பெரிய டீச்சர். நாசருக்கு இவனைப் பார்த்தாலே பிடிக்காது. அந்த க்ளாஸில் அவன் மட்டும்தான் முஸ்லிம் அல்லாதவன். அது அவனுடைய தப்பா. நாசர் அவனை எப்போதும் கிள்ளுகிறான். இதையெல்லாம் அவன் யாரிடம் சொல்லுவது? அம்மா மட்டும் அவனை இந்தப் பள்ளியில் சேர்க்காது ஸெயிண்ட் மேரீஸில் சேர்த்திருந்தால் நாசரிடம் அவன் இந்தப்பாடு படத் தேவையில்லை. நாசர் அடிப்பது மட்டுமில்லாமல் இவன்தான் பேசினான் ஓடினான், கத்தினான் என்று டீச்சரிடம் பொய் சொல்லி மாட்டிவிட்டுவிடுகிறான். பிறகு முட்டி போட வேண்டி வந்துவிடுகிறது. ஐந்தாவது படிக்கும் இவன் இதையெல்லாம் எப்படிச் சொல்லி அழ முடியும்? அம்மா தன் பாடே பெரும்பாடாக இருக்கிறது என்கிறாள். அதுதான் அப்பாவை ஒண்ணும் தெரியாத ஜென்மம் என்கிறாள். இவன் அப்படியில்லை என்று காண்பிக்க வேண்டாமா?

நாசரின் தங்கை ஆயிஷா நான்காம் வகுப்பில் இருக்கிறாள். அவளுக்கு இவனை ரொம்பப் பிடிக்கும். அவள் ஒருத்திக்காகத்தான் இவன் சும்மா இருக்கிறான். அவளுடைய முகம்தான் எத்தனை வெளுப்பாக இருக்கிறது. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று முடிவு எடுத்தாயிற்றே. அப்போது நாசர் இவனுக்கு கும்பிடு போட வேண்டியிருக்கும். அப்போது நாசரை எட்டி உதைத்துவிடலாம்.

ஆயிஷா எத்தனை நல்லவள்! இவனுக்கு ஒரு நாள் வீட்டிலிருந்து எடுத்து வந்த முட்டைக் குழம்பு சாதம் கொடுத்தாள். அதற்குத் தொட்டுக்கொள்ளச் சிறிய ப்ளாஸ்டிக் கவரில் ரத்தக் கலரில் ஊறுகாய். மிகவும் ருசியாகத்தான் இருந்தது. ஆனால் நாசர் பார்த்துவிட்டான். அன்று நிறைய கிள்ளு வாங்க வேண்டியிருந்தது. ஆயிஷாவுக்கு இவன் எடுத்துப்போகும் தயிர்சாதத்தைக் கொடுக்க என்னவோ போலிருந்தது. அதுவும் புளித்துப் போன தயிர் – ஊறுகாயும் இல்லாத அவளுக்குக் கொடுக்க ஒரு நாள் பூரி எடுத்துப் போக வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். அம்மா பூரிதானே உன் கன்னத்தில் தருகிறேன் என்றாள்.

ஆயிற்று! இந்த அம்மன் கோயிலைத் தாண்டிவிட்டால் அப்புறம் பள்ளிதான். அம்மன் கோயில் எல்லா முஸ்லிம் வீடுகளுக்கு நடுவில் இருக்கிறது. யார் போவார்கள்? ஆனால் கோயிலில் எப்போதும் கூட்டம்! கோயில் எதிரில் மிகப் பெரிய தீ மிதிக்கும் இடமிருக்கிறது. ஒரே ஒரு முறை அப்பாவின் தோளில் இருந்துகொண்டு தீ மிதியைப் பார்த்திருக்கிறான். அந்த இடம் முழுவதும் குங்குமமும் மஞ்சளும் தேங்காய்ச் சில்லுகளும் சிதறியிருந்தன. குமுட்டி வைத்துக்கொண்டு பொங்கல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஒரே புகை எங்கும். கொஞ்சம் இருட்டிய பிறகு அப்பா அவனைத் தூக்கிக் காண்பித்தார். சன்னதி எதிரே வெளியில் நெருப்புத் துண்டங்கள் நீள்செவ்வக பீடத்தில் தகதகவென ஜ்வலித்தன. லவுட் ஸ்பீக்கரில் அம்மா மாரியம்மா என்று பாட்டு வந்து கொண்டிருந்தது. சன்னதிக்குப் பக்கத்தில் இரண்டு ஆடுகள் கட்டி வைத்திருந்தார்கள். அவை ஈரமாக இருந்தன.

கொஞ்ச நேரத்தில் மேளச்சத்தம் மிக ஜோராக கேட்க ஆரம்பித்தது. வரிசையாக ஈரத்துணி உடுத்திய ஆட்கள் தீக் கங்குகள் மீது ஒவ்வொருவராக ஓடினார்கள். எங்கும் ஆத்தா அம்மா மாரீ என்று கத்தல். அங்கே எழுந்த வெளிச்சம் எல்லார் முகத்தையும் கனலாக மாற்றியது. அப்பாவை இறுக கட்டிக் கொண்டபோது அப்பா, “அம்மனை வேண்டிக் கொண்டு போனால் கால் சுடாது” என்றார். “சுடாது என்றால் ஏன் அப்பா அது மேல் போக வேண்டும்?” என்று கேட்டிருந்தான். அவர் பதில் சொல்லாது வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவனை மீண்டும் தூக்கிக் கொண்டார். பிறகு அவரும் அவனைத் தூக்கிக்கொண்டு தீக்கங்குகள் மீது ஓடினார். சட்டென்று இரண்டு கணத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. வெப்பம் குபீரென்று எழுந்தபோது கண்ணை மூடிக்கொண்டு அப்பா கழுத்தைக் கட்டிக் கொண்டதுதான் ஞாபகத்தில் இருக்கிறது. அப்பா குங்குமத்தை இட்டுவிட்டார். தரையில் நீரூற்றி ஆற்றுமணல் கொட்டியிருந்த இடத்தில் கால் மாற்றி கால் வைத்துக் கொண்டார். கால் சுட்டதா அப்பா என்று கேட்டான். அவர் எதற்காக ஓடினார் என்று தெரியவில்லை. அவர்கள் போவது பெருமாள் கோயிலுக்குத் தானே! அம்மாவிடமும் வீட்டில் அதைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கும் அப்பாவுக்கும் இடையிலுள்ள ரகசியமாய் இருந்தது. அவர் தீ மிதித்ததற்கும் அம்மாவுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று தெரியும்.

அன்று இரவு அவன் கனவில் நெருப்புத் துண்டங்கள் கனன்றது. அப்பா அவனையும் தீ மிதிக்க அழைக்கிறார். அவன் பயத்துடன் ஓரத்திலேயே நிற்கிறான். அம்மனின் கண்கள் உக்கிரமாய் அவனைத் துளைக்கின்றன. ஆடுகள் உடலைச் சிலிர்த்துக் கொள்ளும்போது ஈரத்துளிகள் அவன் மேல் தெளித்தன. சில்லிட்டு விழித்தபோது படுக்கை அறைக்குள் வெளிச்சம் ஒரு கீற்றாக சமையலறையிலிருந்து நீண்டது. பக்கத்தில் ராஜு சுருண்டிருந்தான். அம்மா அப்பா படுத்ததுபோலவே இல்லை படுக்கை. அவன் சமையலறைக்குள் நுழைந்தபோது அம்மா கேவிக்கொண்டிருந்தாள். அப்பா கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தார். அம்மா அவன் நுழைந்ததைக் கவனிக்காதது போல சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். ஒரு மந்திரம் போல அப்பா எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவன் எவ்வளவோ அழைத்த பிறகும் அவனைப் பொருட்படுத்தவில்லை. அம்மா கண்களில் தீ மிதிக் கூடத்தில் பார்த்த கங்குகள்போல ஒரு ஒளி மின்னியது. அந்த நடுஇரவில் கூடத்திலிருந்து நீண்ட இருள் சாய்த்த நிழல் நடுவில் அம்மாவும் அப்பாவும் இருந்த விதம் அவன் அடிவயிற்றைப் பிசைந்தது.

மறுநாள் அம்மா அவனைக் கூட்டிக்கொண்டு பாண்டிச்சேரியில் தாத்தா வீட்டுக்குப் போனாள். அப்பா பல முறை வந்தார். அப்போதெல்லாம் அவனை வீட்டில் இருக்கவிடாமல் தாத்தா வெளியில் கூட்டிக்கொண்டு போய்விடுவார். அப்பா ஒரு நாளும் அங்கே இரவு தங்கியதில்லை. காலையில் வந்து சாயந்திரம் கிளம்பிவிடுவார். ஒருநாள் பொறுக்க முடியாமல் அவன் அழுதான். பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டுமென்று கடைசியில் அவன் தொந்தரவு தாங்க முடியாமல் அம்மாதான் தொடையில் கிள்ளினாள்.

அவன் போய்க்கொண்டிருந்த பாதையில் சட்டென்று நிற்கிறான். ஒரு டாட்டா சுமோ வண்டி அவனை மோதுவதுபோல் அருகில் வந்து ஹாரன் அலறலுடன் விலகிச் செல்கிறது. எங்கோ மாறி வந்துவிட்டிருக்கிறான். பழக்கமான பாதை எப்படி தொலைந்து போனது? இது பள்ளிக் கூடம் இருக்கும் தெருவாக தெரியவில்லையே! நீண்ட வெண் தாடி தொங்கும் முதியவர் செல்ஃபோனில் பேசியபடியே ஏன் அவனையே பார்த்துக்கொண்டு போகிறார்? தெருவோரத்தில் சாணி போட்டுக்-கொண்டிருந்த எருமைமாடு மேலும் கீழும் தலையசைத்து அவனையா கூப்பிடுகிறது? அய்யோ நாலாபுறமும் சப்தம் ஒரு பிரளயம் போல கிளம்புகிறதே. வெயில் மண்டையைத் தாக்குகிறதே!

அந்தத் தெரு மதிய ஒளியில் பாலையாக கொதிக்கிறது. இரு பக்கமும் கடை வாசல்களில் வைத்திருந்த பலகைகளில் வெயில் விழுந்து ஒளிப்புள்ளிகள் மின்னிக் கண்ணைக் கூச வைக்கின்றன. தூரத்தில் திரை போல படலம் தரையிலிருந்து எழுந்து காட்சி நடுங்குகிறது. துளி நிழல் இல்லை. அவன் காலடியில் கூட அட! காலில் செருப்பைக் காணோமே!

அவன் செருப்பை அணிந்துகொண்டு தானே கிளம்பினான். கையில் பையையும் எடுத்துக்கொண்டு. எங்கே விட்டுவிட்டான்? ஒருவேளை கோயிலில் விட்டுவிட்டானோ? கோயிலுக்குப் போனானா? இறுதியாய் அந்தக் கோயிலுக்குப் போனது அப்பாவுடன் தீ மிதித்தபோதுதானே. எனில், அது இப்போதுதான் நடந்ததா? அப்போது அப்பா எங்கே?

என்ன யோசனை மனதிற்கு! கோயிலில் நின்றுவிட்டுக் கிளம்பியபோது செருப்பை அங்கேயே மறந்து விட்டிருக்க வேண்டும். போகும் பாதையை குழப்பும் யோசனை! எல்லா தெளிவுகளையும் குலைக்கும் வழியைச் சரியாகச் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்கிறது. எத்தனை வருடங்கள் பிசகாது பள்ளிக்கு நடந்த பாதை. இப்போது அவன் எந்த இடத்தில் இருக்கிறான்?

பாதங்களின் ஞாபகமும் இப்படி மனம் போல் குழம்புமா? மனதில்பள்ளிக்கூடம் போகும் பாதையை மீண்டும் வடிவமைத்துக் கொண்டான். வீடு பிள்ளையார்கோயில் சைக்கிள் கடை குட்டை அப்சரா ஓவியர் வீடு கவுஸ் வீடு அம்மன் கோயில். அதன்பிறகு… பிறகு… குழம்புகிறதே!

மணிக்கட்டில் கடிகாரத்தின் முகம் காயம்போல காட்சியளிக்கிறது. நெருப்புத் துண்டங்கள் நிரப்பினாற்போல் தரை சுடுகிறது. தரையில் கால் வைக்க முடியவில்லை. ரயில்வே ஸ்டேஷனை நோக்கி விரைகிறான்.

தோளிலிருந்து தொங்கும் பையில் அமெரிக்காவிலிருந்து அவன் கொண்டு வந்திருந்த காமிரா விலாவில் இடித்துக்கொண்டே வருகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *