(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விடிந்ததும் விடியாமலும் – இந்தச் சந்தர்ப்பத்தில் படுக்கையை விட்டு எழுத்ததும் என்று சொல்வது பொருந்தும். காமு தமிழ் ‘டைப்ரைட ரிடம் சென்று உட்கார்ந்துகொண்டு, எதையோ பதினைந்து நிமிஷம் மடமடவென்று அடித்தது நடேசனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவள் அவ்வளவு லாவகத்துடன் அடித்ததைப் பற்றி அவனுக்கு ஆச்சரியம் இல்லை. அதைக் கற்க ஆரம்பித்த மூன்று மாசத்திற்குள், அவள் சர்வ சாதாரணமாக அதைக் கையாளச் சக்தியுள்ள வளாகிவிட்டாள். உணர்வுடனும் ஊக்கத்துடனும் அவள் அதைப் பழகிக் கொண்டது அவனுக்கு உத்ஸாகத்தைக் கொடுத்தது. அன்று அவள் பல்கூடத் தேய்க்காமல் ‘டைப்’ அடிக்க ஆரம்பித்ததுதான் அவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று.
ஆனால் அதைப்பற்றி அப்பொழுது விசாரிக்க அவனுக்குச் சாவகாச மில்லை. காலேஜில் அன்று சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடங் களை முன்பே பார்த்து வைத்துக்கொள்ள வேண்டியிருந்ததுடன், அன்று சற்று முன்பாகவே புறப்படவேண்டியிருந்தது. அதற்குள் சமையற் காரப் பையனால் தயாரிக்க முடிந்த சாப்பாட்டை வேகமாக முடித்துக் கொண்டு, மனைவியிடம் சொல்லிக்கொண்டு போய்விட்டான்.
சாயந்தரம் திரும்பி வத்ததும் முதல் கேள்வியாக, ‘காமு, இன்று காலையில் எதை அவ்வளவு அவசரமாக டைப் அடித்தாய்?’ என்று கேட்டான்.
‘சொல்லுகிறேன்; முதலில் இந்த மாதுளை முத்துக்களைக் கொஞ்சம் ருசி பாருங்கள்.-‘
‘வாயல்லவோ சாப்பிடப் போகிறது. காது கேட்டுக் கொண்டிருக்கலாமே; அதென்ன சமாசாரம்?’
‘ஊகியுங்கள். பார்ப்போம்’.
‘என்னால் முடியாது, சொல்லிவிடு,’
‘அதா? நேற்று இரவு என் மனத்திற்கு வந்த சிறுகதை, மறந்து போருமென்று எழுந்தவுடன் அடித்தேன். வேறொன்றும் இல்லை’.
‘அதை நான் வாசிக்கலாமா?
‘வாசிக்கலாம், ஒரு நிபந்தனையின் பேரில் ஒருவித அபிப்பிராயத்தை யும் வெளியிடக்கூடாது. என்னைக் கேலி செய்யக்கூடாது. அப்படி யானால் வாசிக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டே காகிதத்தை அவனிடம் நீட்டினாள். அவள் கை ஒருவிதப் பதற்றத்துடன் இருப்பதைக் கண்டு அவள் முகத்தைப் பார்த்தான். நாசியும் உதடுகளும் ஜீவுகொண்டு விளங்கின.
படிக்க ஆரம்பித்தான்:
‘மோஹம், பிறவிக்குருடு அல்ல. ஐந்தாவது வயசில் அம்மை போட்டிருந்ததில், உடம்பில் ஒரு தழும்பு கூட இல்லை. கண்களில் மட்டும் பூவிழுந்து பார்வை போய்விட்டது. சர்வாங்க சுத்தரியென்றால், அவளுக்குத்தான் தகும். பிறந்த மேனியே குற்றம் குறைவற்றவள். உருண்டு திரண்ட கை கால்கள்; வாளிப்பான உடல்; யானைத்தந்தம் போன்ற ரங்கு, பெருந்தன்மை பொருந்திய முகம்: கை தேர்ந்த சிற்பி செதுக்கினாற் போன்ற நாசி, தெற்றி, உதடுகள், மோவாய்: காக்கைச் சிறகு போன்ற புருவங்கள், சர்ப்பம் போன்ற பின்னல்: கண்கள் மட்டும் கருவிழிகளற்ற இரண்டு கண்ணீர் ஊற்றுக்கள்!’
‘இந்த வர்ணனையை என் மனத்திலிருந்து எப்படித் திருடினாய்’
‘அதான் அப்பொழுதே சொன்னேனே. கேலி செய்யக் கூடாதென்று?’
சிறு வயசானதால் பார்வை இழந்ததன் துர்ப்பாக்கியம் அவளுக்குத் தெரியவில்லை. பாவம்! நடமாடுவதிலும், சிற்சில காரியங்கள் செய்வதிலும் முதலிலிருந்த தடுமாற்றம் நாளுக்கு நாள் குறைந்து, பழகிப்போன அந்த வீட்டிற்குள் அவன் ஆச்சரியப்படும்படியான நிதானத்துடன் சஞ்சரித்து வந்தாள். காலைக்குருவி போலப் பாடி மகிழ்ந்தாள். கிளிபோலக் குலவி விளையாடினாள். அத்தையும் மாமனும் அவ்வளவு செல்வமாக வளர்த்ததில், தான் திக்கற்றவள் என்பதையும் அறியாமல் இருந்தாள். நாளுக்கு நாள் ஓங்கின அவளது பாழாய்ப்போன வளர்ச்சியும் புத்தியும் வளர்த்தவர்களுடைய மனத்தை மேன்மேலும் புண்படுத்தின.
கண்கள் இல்லாமையால் தானோ என்னவோ, பாக்கி இந்திரியங்கள் அசாதாரணமான கூர்மையுடன் அமைந்திருந்தன. காலடிச் சப்தத்தி லிருந்து இன்னாரென்று அறிவாள். காற்றின் சவனத்திலிருந்தே போவதை யும் வருவதையும் அறிவாள். மனிதவாடையை மோப்பம்போலக் கண்டு கொள்வாள். முகத்தைப் பார்க்க முடியாததாவோ, மனத்தை அறிந்துவிடும் மாயாவியாக இருந்தாள்? முள்ளம் பன்றியின் சிலிர்த்த முட்கள்போல, அவளுடைய புலன்கள் எப்போதும் கண்ணும் கருத்து மாயிருந்தன போலும்! ஒருதரம் எதையாவது கேட்டால் பிறகு மறக்க மாட்டாள். ஒரு தடவை ஒன்றை உணர்ந்து விட்டாலும் பிறகு அதை மறக்கமாட்டாள்.
அத்தையும் மாமாவும் நன்றாய்த் தூங்கிவிட்டார்கள் என்று உணர்ந்து மோஹம் மெள்ளப் பெருமூச்சு விட்டாள். அதுவரையில் தன்னுள் எப்படியோ அடக்கி வைத்திருந்த விம்மல் வெளிக்கிளம்பி விட்டது. பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த ரமணிகூடத் தூங்கவில்லை. போலிருக்கிறது.
‘மோஹம்!’ என்று மெள்ள அவன் முணு முணுத்தான்.
‘அத்தான்!’ என்று அவள் ஆச்சரியத்துடன் பதில் குரல் கொடுத்தாள். நீ இன்னும் தூங்கல்லே?
‘தூக்கம் வரல்லே!’
‘அப்பா அம்மா பேசினதைக் கேட்டுண்டா இருந்தே?’
‘ஆமாம். அவர் கஷ்டப்படறதைக் கேட்டா எனக்கு அழலாம் போலே இருக்கு. என்னாலேதானே எல்லாம்? என்ன செய்வது?’
‘எதுக்கு?’
‘மாமா அத்தை விசாரப்படாமே இருக்கணும்!’
‘அதுக்கு நீ என்ன செய்யப் போறே?’
‘நான் இல்லாவிட்டா அவாளுக்குக் கவலெ இல்லையோன்னோ? தான் செத்துப்பேட்டாத் தேவல்லே’.
‘மோஹம்! உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம்’ – பதில் இல்லை.
‘நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஒன்னை!’
மோஹத்தின் மனத்தில் அப்போது திடீரென்று முளைத்த எண்ணங்களை அவள் வெளிப்படுத்தவில்லை.
‘அப்பாவண்டெ சொல்றேன் மோஹம்! நீ தூங்கு!’
மோஹத்திற்கு வயசு பதினான்கு. ரமணி அவனைக் காட்டிலும் எட்டு மாசம் பெரியவன். குழந்தைகள் தூங்கிவிட்டார்கள் என்று எண்ணி, பெரியவர்கள் ஒரு நாளிரவு மோஹத்திற்கு வயசாகி விட்டதைப் பற்றியும், அவள் பார்வையற்றிருப்பதால் வரன் அகப்படாததைப் பற்றியும், அவ்வருஷம் கல்யாணமென்று செய்து முடிக்காவிட்டால் வரும் மானக்கேட்டைப்பற்றியும் பேசினார்கள். இரண்டு குழந்தை களும் அதைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, பெரியவர்களுடைய மனக்கவலையைத் தீர்க்க முயன்றன.
காலையில் முதல் காரியமாகத் தம் பதினைந்து வயசுப் பையன் தம்மிடம் வந்து, ‘அப்பா, தான் மோஹத்தைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொன்னது, பெரியவர் மனத்தில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது.
‘போடா! மக்கு, போய்ப் படி’ என்று அவனை அனுப்பிவிட்டு, தம் மனைவியுடன் தெய்வாதீனத்தைப் பற்றிப் பேசலானார். ‘எனக்கும் என்னவோ ஆச்சரியமாகத்தானிருக்கு. இத்துனூண்டு பிள்ளைக்கி அப்படிச் சொல்லத் தோணுமோ எங்கேயாவது? தெய்வ சங்கற்பத் தானோ?’ என்றாள் மனைவி.
‘அப்படியே செய்வதாகத் தீர்மானித்துவிட்டேன்.’
‘ஒரு கொழந்தெ-‘
‘கல்யாணத்துக்கப்பறம் கண் போனா? அப்போ என்ன செய்யப் போறோம்?’
‘அத்தான், அவ்வளவு பிடிவாதமாக என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்களே, இப்போது தெரிகிறதா சங்கடம்?’
‘என்ன சங்கடம்?’
‘அதற்கென்ன, என்னைப் புண்படுத்தக் கூடாதென்று இருக்கிறீர்கள், நீங்கள் படுகிற சிரமத்தை நான் கண்ணால் பார்க்காவிட்டாலும் அறியவில்லையா என்ன? நீங்கள் தெய்வந்தான்’ என்று சொல்லி மோஹம் பலபலவென்று கண்ணீர் உதிர்த்தாள்.
‘அசடே! உன்னைக் கல்யாணம் செய்து கொண்டதால் எனக்குச் சில சௌகரியங்கள் அதிகமே தவிர, அசௌகரியமே கிடையாதே?’
‘என்ன சௌகரியம்? ஒன்று, விரலை மடக்குங்கள்?’
‘முதலாவது மற்றப் பெண்களைப் போல இல்லையல்லவா நீ?’
‘இப்படிச் சமாதானம் செய்துகொள்ளாவிட்டால்தான் என்ன செய்கிறது? உங்கள் தலையெழுத்து என்னைக் கட்டிக்கொண்டு அழவேண்டுமென்று!’
‘அடியே! அந்தமாதிரி எல்லாம் எண்ணி அதாவசியமாக மனத்தைப் புண்படுத்திக் கொள்ளாதே, உனக்குக் கண்கள் இல்லாததால் எனக்கு ஒரு குறையும் கிடையாது!’
‘எனக்குக் குறை இருக்கிறது’
‘என்ன குறை?’
‘என்ன குறையா?… அநாதையான என் கையைப் பிடித்து என் அத்தானை இந்தக் கண் குளிரப்பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே?’ என்று சொல்லி அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.
‘உன் மனம் குளிர இப்படியிருந்தால் போதும் போ!’ என்று ரமணி அவள் குருட்டுக் கண்களைத் துடைத்துத் தேற்றினான்.
‘காமு! ரமணி சொல்வது சரி, ‘இவ்வைம் புலன்களின் ஓட்டமில்லாத நிலைதான் ஆனந்தம்’ என்று வேதாந்திகள் சொல்வது சரியானால். அவற்றின் ஒன்றற்ற நிலையும் நல்லதுதானே! சப்தமும் ஒளியும் இரண்டு புலன்கள், அல்லவா? குன்றிய இரவு, பகலைவிட எவ்வளவு அமைதியுள்ளதாக இருக்கிறது! உன் குருட்டு மையல், மூச்சைப்போல் என்னுள் ஓடி உயிர்கொடுக்கிறது. காமு! உலகத்தில் ‘கண் வைக்கிற’ தென்கிறார்களே, அதென்ன? மனிதனின் கண் பட்டதெல்லாம் கரிதான்; சிவபிரானின் மூன்றாவது கண்போல, அந்தக் கண்ணில்லாதது குறை யல்ல – பிறருக்கு. அதிருக்கட்டும். என் மனத்தை எப்படி ஊகித்தாய், சொல்லு? என் மனமே இக்கதையாயிருக்கிதே. நீ ‘மாயாவி’ தான்.
‘அதான் அபிப்பிராயம் சொல்லக்கூடாது என்றேனே!’
‘இல்லை, இல்லை. இங்கே வா. என் முன்னும் இரவின் இருண்ட திரை இறங்கிவிட்டது.’
– மணிக்கொடி, 18.05.1934