(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முகம்மது முஸ்தாபாவிலிருந்து அழைப்பு வந்து இரவு பத்து மணிக்கெல்லாம் கிருஷ்ணன் புறப்பட்டுப் போனபின்பு, இராதா தனிமையில் அமர்ந்து எதையோ பறிகொடுத்தவள்போல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
வந்த தொலைபேசிக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“என்ன நடந்துச்சின்னு அப்படி உட்கார்ந்துகிட்டு யோசிக்கிறே?”
“ஒண்ணும் நடக்கலேங்கிறதனாலேதானே என் யோசனையெல்லாம்” என்று தோழிக்குப் பதிலளித்து விட்டுத் தொலைபேசியை வைத்தாள். படுக்கையில் புரண்டாள். தூக்கமா வரும்?
இந்நேரம் கிருஷ்ணன் அருகில் இருந்தால், கட்டிப் பிடித்துப் புரண்டு, கடித்துக் குதறியிருப்பாள். எத்தனை நாள்கள் காத்திருந்தாள்! விளக்கை அணைத்துவிட்டுத் தேக்கி வைத்திருந்த அணையைத் திறக்க வேண்டிய நாளில் திருமணம் ஆன முதல் இரவில், அவனை இரவு வேலைக்கு அழைப்பார்களா?
“முஸ்தாபா நிருவாகம், ஈவிரக்கம் இல்லாத கல்நெஞ்சக்காரர்களா?
குட்டிகளைப் பெற்றுக் கொண்டு வாழலாமா? அவுங்கதான் கூப்பிட்டாங்கண்ணாலும், இவருக்குப் புத்தி எங்கே போய்விட்டது. முதல் இரவு என்கிற புனிதமான நாளில் வேலைக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டு என் மடியிலே கிடக்க வேண்டியது தானே?
சென்ற இரு ஆண்டுகளா நாம இரண்டு பேரும் காதலித்துக்கொண்டு இருந்தபோது ஒரு நாளாவது என்னைப் பார்க்காம, என்னோட பேசாம இருந் திருக்கிறீர்களா? நம்ம காதல் எங்கே ஆரம்பித்தது! அந்த அமைப்பு லைன் பி பிரண்ட்ஸ் கிளப்புக்கு (Lion Be Frienders Club) எத்தனை முறை நன்றி சொல்லியிருப்பீர்கள்! அதன் தொண்டூழியத்தில் ஈடுபடும்போதுதான் நமக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு, அது காதலா மாறியது.
நமது இரண்டு குடும்பங்களிலும் வழக்கம்போல் திரைப்படத்திலே வருவதுபோல் சிறிய அதிருப்தி ஏற்பட்டாலும், சிறிது நாள்களிலேயே சரியாகி விட்டது. உங்கள் குடும்பம் எங்கள் வீட்டுக்கு வருவதும், எங்கள் குடும்பம் உங்கள் வீட்டுக்குப் போவதுமாக இருந்து, திருமணத்திற்கு நாள் குறிப்பிட்டுப் பதிவுத் திருமணம் செய்தவுடனே தனி வீடும் வாங்கிவிட்டோம்.”
நாங்கள் காலித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள், ஓர் ஆதரவற்ற வயதான அம்மையார் வீட்டுக்குத் தொண்டூழியம் செய்ய நாங்கள் இருவரும் பணிக்கப்பட்டோம். அம்மையாரைக் குளிக்க வைப்பது, இல்லத்தைச் சுத்தப்படுத்துவது, துணி மணிகளைச் சலவை இயந்திரத்தில் போட்டுத் துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து, அவருக்கு ஆதரவாகச் சிறிது நேரம் கொண்டிருந்துவிட்டு, வாங்கிப்போன ஆனந்தபவன் உணவையும் கொடுத்துச் சாப்பிடச் செய்துவிட்டு, வரவே சென்றோம். பூட்டப்பட்டிருந்த கதவில், ஒரு துண்டுக் காகிதம் செருகியிருந்தது. எடுத்துப் படித்துப் பார்த்தோம். ‘பக்கத்துச் சீனர் வீட்டிலே சாவி கொடுத்திருக்கிறேன். வாங்கி வேலைகளைச் செய்து கொண்டு இருங்கள். ஆறுமணிக்கு வந்துவிடுவேன்’ என எழுதியிருந்ததைப் படித்தபோது கடிகாரத்தைப் பார்த்தோம் மணி ஐந்து.
சாவியை வாங்கி உள்ளே நுழைந்து, செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். ஒரு மணி நேரத்திற்குத் தனிமை, யாரும் வருவதற்கே வாய்ப்பில்லை. நாங்களோ திருமணம் செய்து கொள்ளப் போகிற காதலர்கள். எங்களுக்குள் அப்போ எது நடந்தாலும் அது தப்பாக அவருக்குத் தோன்றவில்லை. படிப்படியாக என்னைச் சீண்டுவதிலே ஈடுபட்டார்.
இடுப்பிலே தொடுவதும்; என் கண்களை ஆசையோடு பார்ப்பதும்; நான் குனிந்து வீட்டைத் துடைக்கும்போது பின்னே நின்று பார்ப்பதும், முன்னே வந்து தரையில் படுத்துகொண்டு என்முன் அழகை ரசிப்பதும்; ஒரு துரும்பை எடுத்து என் சுடிதார் சட்டைக்குள் போட்டுவிட்டு, “பூச்சி… பூச்சி..” என்று சட்டைக்குள் கையைவிட்டு உணர்ச்சியைத் தூண்டிவிடுவதுமாய் என்னை என்னென்னவோ செய்து விளையாடினார். நான் மட்டும் மரக்கட்டையா என்ன? எனக்கும் உணர்ச்சி வரதா என்ன?
அவருடைய பரிதாபகரமான நிலையைப்ப பார்த்து ஒரு கணத்தில் மெய்மறந்து அவரைக் கட்டிப் பிடித்து முத்தமாரி பொழிந்தேன்.
அடுத்த கணத்தில், கொஞ்சம் அறிவுடையவளாய், தொண்டூழிய விதிமுறைகளுக்கு முரணாக நடந்திடக் கூடாது என்று முடிவெடுத்து, என்னைச் சமாளித்துக் கொண்டு அதற்குமேல் வேலிதாண்ட விடவில்லை.
அப்படி ஆண் மகனுக்கே உரிய வேகத்துடனும் வெறியுடனும் அன்று இருந்த கிருஷ்ணன் இன்று வேலியே இல்லாத முதல் இரவு. நான் இங்கே தனிமையில் அவர் வேலையில்…” நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்டாள். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு எழுந்துவந்து புதிதாக வாங்கிய சோபாவில் படுத்தாள்.
அவனோ…
“முஸ்தாபிலேயே இரவு வேலையைக் கேட்டு வாங்கிக் கொண்டோம். இந்த மாதத்தை கழித்துவிடலாம். அடுத்த மாதம் இராதாவிடம் என்ன சொல்வது? அப்போது வேறு ஏதாவது தோன்றும்.
பாவம் இராதா! எத்தனை கனவுகளும் இருந்திருப்பாள். இன்று இரவு எத்தனை கோட்டைகளை இடித்திருப்பாள். அவளுடைய அழகைப் பார்த்தா காதலித்தேன். அவகிட்டேயிருந்த பொறுமை, புத்திசாலித்தனத்தைப் பார்த்தல்லவா காதலித்தேன். இத்தனை மாதங்களாக எவ்வளவு ஆசைகளைத் தேக்கி வைத்திருப்பாள். பாவம் அவளுக்கு என்ன விளக்கம் சொல்லிச் சமாதானப்படுத்துவேன். திருமணமாகி ஏற்கெனவே பதிநெட்டு நாள்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு ‘நாள்’ சரியில்லை என்று சொல்லி ஒத்திப் போட்டேன். அதன்பிறகு ஆடிமாதம்… வைதீக முறைப்படி ஜோடி பிரிந்திருக்க வேண்டும். என்று, ஒரு பாட்டியை வைத்துச் சொல்ல வைத்தேன்.
அது முடிந்து இன்று நல்ல நாள் பார்த்து சாந்தி முகூர்த்தத்திற்குப் பெரியோர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதைத் தெரிந்துகொண்டு இரவு வேலையை வலியக் கேட்டு வாங்கினேன். இராதா என்னைப் பற்றி என்ன நினைப்பாள்!
என்ன நினைத்தாலும், பரவாயில்லை. நான் என்ன ஆனாலும், அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. அவளுடைய எதிர்காலத்திலேயும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே என் ஆசை என்று எண்ணிக் கொண்டே வேலை செய்தான்.
மறுநாள் காலையில் வீட்டுக்குத் திரும்பினான். இராதா தன் ஏக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் அவனை வரவேற்றுக் குடிப்பதற்குக் குளிப்பதற்கு உடுத்துவதற்கு, என்கிற காலை வேலைகளைச் செய்து கொடுத்தாள். இருந்தாலும் முதல் நாள் இரவு இராதா தூங்காமலிருந்ததன் ரேகைகள் முகத்தில் தெரிந்தன. அதைக் கிருஷ்ணன் கவனித்தாலும் கேட்பதற்கு வாயில்லை. சகஜமாகப் பழகுவதாக நடித்துப் பேசினான்.
“ஏங்க இந்த இரவு வேலையைப் பகல் வேலையா மாத்தக்கூடாதா? நான் வந்து கேட்கவா?”
“அதில்லே… கல்யாணம் ஆயி ஒண்ணரை மாதம் ஆயிட்டல்லவா இப்ப நீ வந்து என்ன சொன்னலும் எடுபடாது.”
“அப்படின்னா பகல் பூரா வீட்டிலேயே இருங்க… உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு…”
“அப்ப உன் “ஜோஸ்கோ டிராவல்ஸ் வேலை என்னாவறது போப் ராஜு கோச்சிக்கமாட்டாரு… அதநால நீ வேலைக்குப் போ… நான் அட்வகேட் உதுமான்கனியைப் பார்த்துட்டு வந்துடுறேன்.”
“அட்வகேட்கிட்டே உங்களுக்கு என்ன வேலை?”
“ஒரு வழக்கு சம்பந்தமா சாட்சி சொல்ல கூப்பிட்டிருந்தார். எனக்குச் காய்ச்சல் அடிக்கடி வருது… நான் வந்து ஒய்வு எடுத்துக்கிறேன்… நீ வேலைக்குப் போய்ட்டுவா…” என்று கிருஷ்ணண், அவள் பதிலுக்குக் காத்திராமலும், அவள் முகத்தைப் பார்க்க முகம் இல்லாமலும் வெளியேறி விட்டான். வேறு வழியின்றி அவளும் பணிக்குப் புறப்பட்டு விட்டாள்.
இரவு வீட்டிற்கு இராதா வரும்போது மணி 9 ஆகி விட்டது. கிருஷ்ணன் நன்கு உறக்கத்திலிருந்தான். அருகில் சென்று அவனது நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, எழுப்பினாள்.
“நல்ல காய்ச்சலிடிக்கிறது. இன்னைக்கு வேலைக்குப் போக வேண்டாம்.”
“ஓ.. மணி ஒன்பதைத் தாண்டிவிட்டதா? எங்க செக்ஷன் மேனேஜர், ஒரு முசுடு ஏதாவது பத்த வச்சிடுவான். நான் போயிட்டு வந்துடுறேன்.” என்று கிருஷ்ணன் சொல்லிவிட்டுக் குளியலறையை நோக்கி ஓடினான். காய்ச்சல் அடிக்கடி வருவதால், அதை பொருட்டாக அவன் நினைப்பதில்லை.
மறுநாள் காலையிலேயும் பணியிலிருந்த வந்த கிருஷ்ணன், குளித்துவிட்டு வந்தான். “நேத்து இராத்திரி வேலை பாக்கறப்போ உடம்பு எப்படியிருந்தது?” அனுசரணையுடன் சோபாவில் உட்கார்ந்திருந்த அவள் கழுத்தில் தன் முகத்தை வைத்து அவன் தலைமுடியை நீவி விட்டுகொண்டே கேட்டாள்.
“பரவாயில்லை.. பேதியும் ஆனது. அவ்வளவு தான்..”
“சிரான்கூன் பிளாசாவுலே ஹோமியோபதி டாக்டர் ரெங்காச்சாரின்னு ஒருத்தர் இருக்காரு. எனக்கு ரொம்ம நாளா தெரிஞ்சவர். வாங்களேன் போயிப் பார்த்துட்டு, அப்படியே நான் வேலைக்கும் போயிடுறேன். நீங்க திரும்பி வந்துடலாம்.”
“நோ… நோ… வழக்கமாக நான் பார்க்கிற டாக்டர் கிட்டே தான் பார்க்கணும். மாத்தக்கூடாது. நான் போயி டாக்டரைப் பார்த்துக்கிறேன். நீ புறப்படு…” என்றான். அவன் இப்படிப் பேசும்போதும், பழகும் போதும், அவள் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்குத் துணிச்சலும் இல்லை; தெம்பும் இல்லை.
இப்படியாகச் சில மாதங்களை அவன் கடத்தி விட்டான். மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரை களுக்கு ஒரு அலமாரியை ஒதுக்கிவிட்டான். வீட்டிலிருக்கும் சிலநாள்களில் கூடக் காய்ச்சல் என்று சொல்வான். அவள் போர்வையை எடுத்துப் போர்த்தி விட்டு அருகிலேயே படுத்து உறங்கிவிடுவாள். அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு வேலையை ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை; தொடர்ந்து உட்கார முடியவில்லை யென்று சொல்லிவிட்டு, இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்வது சக பணியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. புகார் செய் தார்கள். அதன் பயன் ஒரு நாள் பணி நீக்கம் செய்யப் பட்டான்.
படுக்கையிலேயே பெரும்பபாலான பொழுதைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது கிருஷ்ணனுக்குப் பெற்றோர்கள் வந்து அடிக்கடி பார்த்து,
“ஏமா பெரிய டாக்டர் யாரையாவது பார்த்து வைத்தியம் பார்க்கக்கூடாதா” என்று கேட்பார்கள். “இப்பப் பார்க்கும் டாக்டரே நல்லாத்தான் பார்க்கிறார். நமது உடம்புக்கு ஏடாகூடமா ஏதாவது ஆயிட்டா, டாக்டர் என்ன செய்துவிட அதெல்லாம் சும்மாதான்” என்றான்.
இராதாவின் பெற்றோர்களும், உறவினர்களும் வந்து பார்த்துக் குசலம் விசாரித்துப்போவது வாடிக்கையாகி விட்டது. ஒரு நாள் ஒரு பெரியவர்,
“இதுக்குத்தாண்டா… ஜாதகம் பார்க்கிறது, நாள் நட்சத்திரம் பார்க்கிறது, பெரியவர்களா பார்த்துக் கல்யாணம் நடத்தி வைக்கிறது. அதை மீறறப்ப இப்படி தான் படுத்தும்” என்றார்!
“ஆமாம். இந்த நாட்டிலே சீனர்கள் தான் முக்கால்வாசி… அவங்களெல்லாரும் நல்லாயில்லையா? செஞ்சிகிட்டவங்களா? … அதெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் கல்யாணம் பேச்சு.”
கிருஷ்ணன் அவர்களுக்குப் பதில் சொல்லி விடுவான். ஆனால் அவன் மனதில் ஏற்படும் கேள்விகளுக்கு; சந்தேகங்களுக்கு என்ன பதிலை அவன் தரமுடியும்?
ஒருநாள் காய்ச்சல் மிகவும் கடுமையானவுடன் கிருஷ்ணனைப் பபார்க்கும் டாக்டருக்குப் போன் செய்தான் ராதா. டாக்டர் வந்தார்; பார்த்தார்; சோதனை செய்தார். தான் வைத்திருந்த தனியார் மருத்துவமனைக்கு தன் காரிலேயே அழைத்துச் சென்று விட்டார்.
“யாரும் அங்குப் பார்ப்பதற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமானால் மனைவி மட்டும், என்னிடம் போனிலோ, நேரிலோ வந்து நிலைமையைக் கேட்டுப் போகலாம்” என்று போகும்போது டாக்டர் சொல்லிச் சென்றார்.
தினந்தோறும் அவள் பணிக்குப் புறப்படுவதற்கு ஒருமணிநேரம் முன்பாகவே புறப்பட்டு டாக்டரிடம் சென்று பார்த்து விசாரித்து விட்டுதான் செல்வாள். அவள் தோழிகளெல்லாம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனக் கிண்டலும் கேலியும் செய்வார்கள்.
“ஏய் என் வாய்க்கு எட்டணும்னு நான் ஒண்ணும் ஏங்கல எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினைச்சிக்கிடறேன். அவ்வளவுதான். எனக்கு என்னமோ அவர் நல்லபடியா வீடு வந்து சேரணும்கிறதுதான் ஆசை…. அவரை வீட்டிலேயே வச்சி நான் காப்பாத்துறேன்…” என்பாள்.
ஒருநாள் டாக்டரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
“அம்மா ராதா… நீ கடைசியா வந்து உன் கணவன் முகத்தைப் பார்த்துட்டுப் போயிடு…”
பூகம்பமும் சூறாவளியும் எரிமலையும் ஒன்றாகச் சேர்ந்து இவள் மீது படையெடுப்பதுபோல் உணர்ந்தாள் ஓடினாள். டாக்டர் சொன்னது போல் கடைசியாக அவன் முகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினாள். அது உயிருள்ள முகமாக அவளுக்குத் தென்படவில்லை. ஏற்கெனவே இறந்த முகத்தைத்தான் காண்பித்தார்கள்.
சோகமே உருவாக, அலுவலகத்திற்கு ஒருமாதம் விடுமுறை போட்டுவிட்டு, வீட்டிலேயே உட்கார்ந்து விட்டாள்.
இராதாவைப் பார்த்து அனுதாபம் சொல்ல ஆறுதல் சொல்ல பலபேர் வந்த வண்ணம் இருந்தனர். யார் என்ன சொன்னாலும் அவளால் எப்படி ஆறுதலடைய முடியும்.
ஒருநாள் வழக்கறிஞர் உதுமான்கனி வீட்டிற்கு வந்தார்.
“இராதா… கெட்டதிலேயும் ஒரு நல்ல சேதி… கிருஷ்ணன் அந்த ஹாஸ்பிட்டல் மீது ஒரு வழக்குத் தொடுக்கச் சொன்னார். இரத்ததான முகாம்லே கல்யாணத்துக்கு முன்பு கலந்துகொண்டு இரத்தம் கொடுத்தப்ப ஹெச்.ஐ.வி.நோய் தொத்திகிட்டு. அதற்கு நஷ்ட ஈடா பத்துமில்லிய டாலருக்கு வழக்கு தொடர்ந்தோம். நேத்துதான் தீர்ப்பு வந்தது. மில்லியன் டாலர் உங்களுக்குக் கொடுக்கும்படி தீர்ப்பு. அதற்கான விவரங்கள் இதிலே இருக்கு” என்று சொல்லி வழங்கறிஞர், இராதாவிடம் பத்திரங்களைக் கொடுத்தார்.
அவள் வாங்கவில்லை. அவள் மனத்தில், நினைவுகள் பின்னோக்கி ஓடின.
“இரவு வேலை, ஆடிமாதம், காய்ச்சல் இப்படியாக… தாம் இறக்கப் போகிறோம்… தன் காதல் மனைவிக்கு எந்த நோயும் தொற்றிவிடக்கூடாதே என்றுதான் முதல் இரவை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்துள்ளார். எதிப்புகளுக்கிடையே என்னைக் கல்யாணம் செய்து கொண்டார். என் எதிர்கால வாழ்வுக்கு ஒரு காவல் வேணும் என்றுதான் இந்த நஷ்ட ஈட்டையும் கேட்டிருக்கிறார்” என்றெல்லாம் தெரிந்துகொண்டு தலையில் அடித்து மோதிக் கொண்டாள்.
“சார் இந்த நஷ்ட ஈடு வந்து எனக்கு என்ன மகிழ்ச்சியைக் கொடுக்க போவுது. இப்படியொரு நோய் இருக்குன்னு முன்பே தெரிஞ்சிருந்தா அவரோட உறவாடி, நானும் அந்த எய்ட்சுக்கு ஆளாகி அவரோடவே ஒரு நிரந்தர மகிழ்ச்சியோட காதலுக்கு உள்ள மரியாதையோட போயிருப்பேன். அதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்புப் போய்விட்டதே என்று தான் வருத்தப்படுகிறேன்” என்றாள் இராதா.
– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.