கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 2,702 
 
 

(1928ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்)

அத்தியாயம் 7-10 | அத்தியாயம் 11-14 | அத்தியாயம் 15-18

11 – வஞ்சகனால் வஞ்சிக்கப்பட்ட வஞ்சி 

மேற் கூறிய விருந்து நிகழ்தற்கு மூன்று நாட்களுக்கு முன்னே மாயாபுரியைச் சேர்ந்த அழகியதோர் சிறு கிராமத்தில் உள்ள மாளிகையில் நடந்த சில விஷயங்களை ஈண்டு கூறுதல் கதா தொடர்ச்சிக்கு இன்றியமையாததாதலின், அவைகளைப்பற்றி இங்கு கூறுவாம். 

மாலை மணி ஐந்திருக்கும் ஏறத்தாழ 25 வயது மதிக்கத் தகுந்த உருவிற் சிறந்த மெல்லியலாள் ஒருத்தி அம்மாளிகையின் உட்புறத்தே யுள்ள அறை யொன்றில் ஒரு சார்மணைக் கட்டிலில் சாய்த்திருந்த வண்ணம் ஏதோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளது கையில் ஒரு புத்தகம் இருந்த தெனினும் அவள் அதைப் படித்து கொண்டிருக்கவில்லை. அடக்கவியலா ஏதோ துயரத்தினால் அவளது ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த போதிலும், அடிக்கடி அவள் கடியாரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்ததை கவனிக்குமிடத்து. அவள் யாருடைய வரவையோ மிக ஆவலோடு எதிர் பார்ப்பதாய்த் தோன்றியது. இவ்வாறு அப்பெண்மணியின் மனம் பற்பல விஷயங்களைச் சற்றி சுழன்று கொண்டிருந்தபோது, அவ்வறையின் கதவு மெல்லத் திறக்கப்பட்டது. அதை அடுத்து தொங்கிக் கொண்டிருந்த திரையும் சிறிது நீக்கப்பட்டது, இராகலப் பிரபு உள்ளே நுழைந்தார். 

அந்நங்கை சற்று வெறுப்போடு பிரபுவை வர வேற்றாள். “பெருமாட்டி ! என்னை இத்துணை விரைவில் இங்கு அழைத்து காரணம் யாது? நான் ஒரு முக்கிய விஷயம் பற்றி உடனே சொல்ல வேண்டும், சீக்கிரம் என்னையழைத்த காரணத்தை தெரிவிப்பாய்” என்று அப்பெண்ணங்கை நோக்கிக் கூறினார், இராகுலப்பிரபு. 

அந்நங்கை நல்லாள் தன்னுள் எழுந்த சினத்து உள்ளடக்கியவண்ணம் “பிரபுவே, உங்களை நான் எதற்காக இப்போது அழைத்தேனென்பது நான் கூறாமலே உங்கட்கு விளங்கியிருக்கலாம். நாட்கள் கடந்து போகின்றன. இனித் தாமதிக்கவியலாது. நான் இப்போது கர்ப்பவதியாயிருப்பதாய் உணர்கிறேன். இனியும் என்னை ஏமாற்ற நீங்கள் நினைப்பதாயின், நான் கொடிய பழி வாங்குவேனென்பதை மறந்துவிட வேண்டாம். முடிவான விடை கூறிவிட்டுச் செல்லலாம்” என்றாள். 

‘பதுமினி. உன்னை யான் ஏமாற்ற வில்லை. நான் முக்கிய அரசியல் விஷயம்பற்றி அலைந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் உன்னை கட்டாயம் மணந்து கொள்ளுகின்றேன். அது வரையிலும் பொறுத்துக்கொள்” என்று நயந்து வேண்டினார் பிரபு. 

“முடியாது இந்த ஏமாற்றுதல் இனி வேண்டா நியாயமாய் பிரதாபனுக்கே உரித்தான மாயாபுரியின் அரசுரிமையை, நீர் அபகரித்துக்கொள்ள பல வழிகளிலும் முயன்று வருகின்றீர்.உம்மால் அஃது ஒருபோதும் இயலாது. உமது சதியாலோசனையின் மூலமாய், நீர் எண்ணுகின்றவாறு கிரீடம் உமக்கு சொந்தமாய் விடினும், செல்வி விஜயாள் உம்மை மணந்து கொள்ளுவாள் என்று கனவு காணவேண்டாம். அவள் உமது நடத்தைகளை எவ்வாறோ அறிந்து, உம்மை நஞ்சென வெறுக்கின்றாள். நாட்டு மக்கள் அவளையே அரசியாக கண்டு களிக்க விழைவுடன் காத்திருக்கின்றன ரென்பதைப்பற்றி உமக்கு ஞாபக மூட்டுகின்றேன். பிரபு ! வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். இப்போது அரியணையில் வீற்றிருக்கும் இளைஞன் என்று பதுமினி கூறி வரும் பொழுது அவளை இடமறித்து. 

“பதுமினி, என்ன கூறுகின்றாய்! ஏதும் அறியாது உளறுகின்றனை போலும். உனது மன நிலை சிதைந்து நீ இவ்வாறு கூறுகின்றையா.?” என்றார் பிரபு. 

“என் மனம் சரியான நிலைமையிலேயே யிருக்கின்றது. பணச்செருக்கு என்னை பாழாக்கி விட்டது. பிறர் தம் வார்த்தைகளை பொருட்படுத்தினேனல்லை நான் உம்மை யோக்கியரென என் மனப்பூர்வமாய் நம்பி மோசம்போனேன். ஆயின், இப்பொழு தென் செய்வது! உமது நயவஞ்சக வார்த்தையில் மயங்கி, விலை மதிக்கவொண்ணா எனது கற்பை பாழ்படுத்திக்கொண்டே னெனினும், “கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதை யொக்க” பிறகு விழித்துக் கொண்டேன், எனது வாழ்க்கை சாரமற்றுப் போயினும், உம்மால் பிறர்க்கு இன்னல் நேராதிருக்க என்னால் இயன்ற அளவும் முயன்று வருவேன். உமது மர்மங்களை நான் அறிந்து கொள்ளவில்லை யென்றெண்ணி மனப்பால் குடிக்கவேண்டாம். நீர் செய்யும் ஒவ்வொரு காரியமும் எனக்கு தெரியாமலிரா. இனியும் கெட்டுப்போக வேண்டாம். நான் சொல்லுவதை கேட்டு இனியாயினும் ஒழுங்காய் நடக்கக் கற்றுக் கொள்ளும். அநீதியாய், கெடுமதி மிகுந்து உம்மால் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கும்-” என்று அப்பெருமாட்டி கூறி வரும்பொழுது இராகுலன் இடைமறித்து. 

“போதும், உன் பிரசங்கத்தை நிறுத்து. நெறி நின்று ஒழுகாது, ஒழுக்கந் துறந்த உன்னிடம், யான் ஆலோசனை கேட்க இப்போது வரவில்லை, நான் சடுதியிற் செல்லவேண்டும், சீக்கிரம் எனக்கு விடைகொடு” என்று என்று கோபத்தோடு கூறினான். 

“ஏ, துரோகி, நீ கூறுவது ஒரு விதத்தில் நியாயமானதே. பெண்ணினத்தின் வரம்பைக் கடந்து, நீ வீசிய மாயவலையில் முழுதுஞ் சிக்கி,”ஒழுக்கம் விழுப்பந்தரலானொழுக்க முயிரினு மோம்பப்படும்” என்ற ஆன்றோர்வாக்கை முற்றும் மறந்து உன்பால் என் மனத்து ஓட விட்டதற்கு, கூற்றினுங் கொடியனான நின் கடு மொழிக்கூற்று நியாயமானதே, நீ என்பால் முன்னர்க்காட்டிய அன்பும், காதலும், நான் உன்னிடங் கொண்டுள்ள தௌ¢ளிய பேரன்பைப்போன்ற தென்றே எண்ணி ஏமார்ந்து போனேன். பல பெண் மக்களை இங்ஙனமே வஞ்சித்தவனென்பதை பிறகே உணர்ந்தேன். எத்தனையோ பிரபுக்கள் இப்போதும் என்னை மணக்க விரும்பி காத்திருக்கின்றன ரென்பது உனக்குந் தெரியாததல்ல. ஆயினும் அவர்களிடத்தே என் மனஞ் செல்லவில்லை. ஏ பிரபு! முடிவாய்க் கூறுகின்றேன். இனியாயினும். யோக்கியதையாய் நடந்துகொள்ளும். உமது வாக்குறுதியைக் காப்பாற்றும். பேராசை பிடர் பிடித்துத் தள்ள – கெடுமதி மிகுந்து அரசுரிமையையும் விஜயாளையும் விரும்புவீராயின் உமக்கு அழிவு காலத்தை நீரே தேடிக்கொண்டவராவீர்.’ என்று பதுமினி படபடப்பாயும் ஆத்திரத்தோடும் பேசினாள். 

சிறிது நேரம் ஏதுமே பேசாது, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த பிரபு இராகுலன், பதுமினியை நோக்கி என் அரிய பொழுதை உன்னோடு பேசி வீணாக்க எனக்கு இஷ்டமில்லை. உனக்கு எது விருப்பமோ அங்ஙனமே செய்து கொள்ளுவதைப் பற்றி யாதும் தடையில்லை நான் சீக்கிரம் போகவேண்டும்” என்று கூறி எழுந்தார். 

“சரி, போகலாம்” என்று அப் பெருமாட்டி கூறி விட்டு அவ்விடத்தை விட்டும் மற்றோர் அறைக்குச் சரேலெனச் சென்று விட்டாள். 

இப் பெருமாட்டி யாரென்பதை வாசகர்கட்குச் சிறிது அறிவித்துப் பிறகு கதையைத் தொடர்வோம். இப் பதுமினியின் தந்தையார் ஓர் உயர் குலப் பிரபுவே யாயினும், வறுமையின் கொடுமையான், மிகச் செல்வந்தரான-ஆனால், கொஞ்சம் வயதுசென்ற-பிரபு ஒருவர்க்கு இவளை மணஞ் செய்து கொடுத்தனர். அப்பிரபு இவளை பெரிதும் பாராட்டி மிக்க அன்போடு நேசித்து வந்தார். பதுமினியை தெய்வம்போன்று வணங்கி வந்தாரென்று கூறின், மிகையாகாது. ஆனால், பதுமினி அப் பிரபுவை நேசித்தாளா? என்பதே கேள்வி. எத்துணைக் கெத்துணை அப்பிரபு பதுமினியிடத்து அன்பைச் செலுத்தினாரோ, அத்துணைக் கத்துணை இவள் அவரை விடமென வெறுத்தாள். அவரைக் காணின், கொடிய விரோதியைக் கண்டாற் போன்று முகத்தைச் சுளித்துக்கொள்ளுவாள். அப்பிரபு பதுமினி தன்னிடத்துக் கொண்டுள்ள வெறுப்பை உணர்ந்தாராயினும், அதை வெளியில் கூறாது தன் மனத்துள்ளே அடக்கிக்கொண்டு அவளிடத்து அன்புடனேயே நடந்து வந்தார். 

பதுமினி சில நற்குணங்கள் இயல்பிலேயே வாய்க்கப்பட்ட வளாயினும் அவளது பணச் செருக்கு அவளது நற்குணங்கனை மறைத்தன. இளமையிலிருந்து வறுமையில் வளர்க்கப்பட்டவளாதலின், திடீரென பெரும் பணங்கிடைக்கவே செல்வச் செருக்குற்று அவள் விளங்கினாள். அதற்குக் காரணமான அவளது கணவரையும் அவள் மதித்தாளில்லை. 

இயற்கையிலேயே அழகுடையாளான பதுமினி, எப்பொழுதும் செயற்கை அலங்காரங்களோடு மிளிர்வாள். எல்லாரும் அவளை ‘அழகு மிக்க அணங்கு’ என்று புகழ்ந்து கொண்டாட வேண்டுமென்பது அவளது விலக்கொண விருப்பம். அவள் எதிர்பார்த்ததைப் போன்ற பல ஆடவர் அவளை, அறிவினும் அழகினுஞ் சிறந்த அணங்கெனக் கூறி புகழ்ந்தனர். அவளும் பொதுவாய் எல்லா ஆடவரிடத்தும் அன்போடு பேசிக்கொண்டடிருப்பாளாயினும், எல்லாரையும்விட இராகுலப் பிரபுவினிடமே அதிக அன்பு காட்டி வந்தாள். பதுமினி இத்தகைய குணங்களோடு விளங்கியபோதினும் ஒழுக்க நெறியை விட்டும் சிறிதும் பிறழ்ந்துவிடவில்லை. 

இந்நிலைமையில், ஊழ்வினையின் பயனாய் அவளது கணவர் திடீரென மரணமடைந்தார். அவளது தந்தையும் அவள் கணவரைப் பின்பற்றினார். இங்ஙனம் ஒருவர் பின்னொருவராய் இருவரும் இறந்துவிடவே, அதுபற்றி பெரிதும் வருந்திய பதுமினி மிகவுந்துக்கத்தோடு தனியே காலங் கடத்தி வந்தாள். 

தனியே காலங்கடத்தும் தன் தீவினையை நினைத்து மனம் உடைந்தாளாயினும், உடலழகு மாறாதிருந்தமையானும், விண்ணுலகு சென்ற அவள் கணவர் தம் செல்வங்கட்கெல்லாம் அவளே உரித்தானவளாய் விட்டமையானும் பலபிரபுக்கள் அவளை மணந்துகொள்ள பெரிதும் விரும்பினார். ஆனால், அவள் ஒருவர்க்கும் தகுந்த விடையளிக்கவில்லை. 

இந்நிலையில் இராகுலப் பிரபு அடிக்கடி அவள் இல்லத்திற்கு வந்து பேசிச் செல்லுவார். அவள் பொருட்டு பல விருந்துகள் செய்வார். இயற்கையிலேயே சிறந்த அழகும் சாதுர்யமாய்ப் பேசுந்திறமையும், இனிமையும் உடைய இராகுலன் வீசிய வஞ்சக வலையில், கள்ளமற்ற உள்ளத்தினாளான பதுமினி மயங்கியது ஓர் வியப்பல்ல. சுருங்கக் கூறுமிடத்து, அவரது வஞ்சக வாக்குறுதியை நம்பி, விலை மதித்தற்கரிய தனது கற்பை பதுமினி அவர்பால் ஒப்படைத்தாள். 

நாட்கள் கடந்தன. பதுமினி தான் கர்ப்பவதியாய் இருப்பதை உணர்ந்தாள். இராகுலனிடம் பன்முறை அவள் நயந்து வேண்டியும், அவர் தாம் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினாரில்லை. அத்துடன் அவர் சிறுகச்சிறுக அவள் இல்லத்திற்கு வருவதையும் நிறுத்தி விட்டார். பேதை என் செய்வாள்! நெருப்பிடை புழுவெனத் துடித்தாள். தன்னிடத்து உள்ளன்பு மிக்க பணி மகனொருவனை, தந்திரமாய் இராகுலானது கையாளாய் அமர்த்தி, அவனது மர்மங்கள் முற்றையுந்தெரிந்துகொண்டாள். அதற்குப் பிறகே இராகுலனை வரவழைத்து, மேற் கூறியபடி அவன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டாள். அவள் கேட்டுக்கொண்டதும், அதற்கு அவன் அளித்தபதிலும் வாசகர்கள் நன்கறிவார்களாதலின், இங்கு மீண்டும் எழுதவேண்டிய அவசியமில்லை. நிற்க. 

இராகுலனது மறுமொழியைக் கேட்டு மற்றோர் அறைக்குட் சென்ற பதுமினி, ஏதுஞ்செய்ய ஆற்றலின்றி பொத்தென்று படுக்கை யிற்சென்று விழுந்தாள். எண்ணாததும் எண்ணி ஏங்கினாள். அவள் மனம் துடித்தது. இப்போது எங்ஙனமாயினும் அவளது மானம் காப்பாற்றப் பட வேண்டும். ஆழ்ந்து சிந்தித்தாள். ஏதும் வழி புலப்படவில்லை. மானமழிந்தபின் வாழாமை முன்னினிதே’யன்றோ? என்றெண்ணினாள். ஆயினும், தான் தற்கொலை புரிந்துகொள்ளுதற்கு முன், இராகுலனைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும்! என்ற எண்ண மெழுந்தது. 

நாம் இங்கு ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிக்க வேண்டுவது அவசியமாயிருக்கின்றது. பதுமினி நற்குணங்களுடையளேயாயினும். தம் கற்புக் குலைந்ததைப் பற்றி எண்ணி எண்ணி ஏங்கி மனம் வாடினாளில்லை. ஏனெனின், அவள் இயற்கை அப்படிப்பட்டது. தனக்குத் தீங்கிழைத்த இராகுலனைச் சமயம் பார்த்துத் தண்டிக்க வேண்டுமென்ற உறுதி கொண்டாள்! 

அந்நிலையில், பதுமினி படுக்கையிற் படுத்து புரண்டு கொண்டிருந்தபொழுது, பணிமகளொருத்தி கதவை மெதுவாகத் திறந்துகொண்டு உள்நுழைந்து பெருமாட்டி அருகிற் சென்றாள். 

“எங்கு வந்தாய்” என்று வினாவினாள் பதுமினி. 

“நேற்று வந்து தங்களோடு பேசிச்சென்ற பிரபு, தங்களை மீண்டுங் காண்பதற்காக இங்கு வந்திருக்கின்றார். தங்களின் சந்தர்ப்பம் எப்படி யிருக்கிறதென்பதை அறிந்து வரும்படி கூறினார். 

அவள் கூறியதைக் கேட்டதும் ஏதோ சிறிது நேரம் சிந்தித்து, பதில் கூறாதிருந்த பதுமினி, பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள்போல வேலைக்காரியைப் பார்த்து,”சரி அப்பிரபுவை விரைந்து அறைக்கு அழைத்துவா” என்ன, அப்பணிமகள் விரைந்து சென்றாள். அவள் சென்றதும் தன் புடவையை சரியாக உடுத்துக்கொண்டு பக்கத்தறைக்குள் சென்றாள். 

பதுமினி அவ்வறைக்குள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் நெட்டையான, சிறந்த அழகில்லாவிடினும் சாதாரணமான அழகினையுடைய ஒரு மனிதர் அவ்வறையினுள் நுழைந்தார். இவர்க்கு ஏறத்தாழ 33 வயதிருக்கலாம். சற்று கடுத்த முகத்தை யுடையவரேயாயினும், விழுமிய குணங்கள் நிரம்பப்பெற்றவர். பதுமினியை மணக்க விரும்புபவருள் இப்பிரபுவும் ஒருவர். அவளிடத்து உண்மையான அன்பும், மதிப்பும் உடையார். பதுமினி இப்பிரபுவிற்கும் தகுந்த பதில் அளிக்கவில்லையாயினும், அவள்பேரிலுள்ள அன்பு மேலீட்டால், அடிக்கடி வந்து அவளைக்கண்டு பேசிவிட்டுச் செல்வார். 

இப்போது இவரைக் கண்ட பதுமினிக்கு அடக்க வியலா துயரம் உண்டாயிற்று. அவளது அகம்பாவமும் பணத்திமிரும் எங்கோ ஓடி ஒளிந்தன. ‘அப்பொழுதே இப்பிரபுவை மணந்துகொண்டிருப்பின் தனக்கு இம்மாதிரி இழிவு நேர்ந்திராதே’ என்றெண்ணினாள். இப்போது அவட்கு ஆறுதல் அளிப்பதற்கும், யோசனை கூறுதற்கும் ஓர் உற்ற நண்பன் தேவையாயிருந்தது. அதற்கு இப்பிரபுவைத் தவிர வேறோருவர் தகுதியற்றவரென நினைந்தாள். ஆகவே, பிரபுவை மிக்க அன்போடு வரவேற்றாளெனக் கூறத் தேவையில்லை. 

‘பெருமாட்டி ! உமது அழகிய வதனம் வாட்டமுற்றிருப்பதேன்’ என்று பதுமினியை நோக்கி வினாவினார் பிரபு. 

இங்ஙனம் மிக்க அன்போடு தன்னை நோக்கி வினாவிய பிரபுவிற்கு, பதுமினி உடனே மறுமொழி யளித்தாளில்லை. அவள் அடக்கிவைத்திருந்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. அதிகம் விவரிப்பானேன்? பிரபுவிற்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டது. இராகுலன் அவனை வஞ்சித்தது முதல், சற்று முன்பு அவன் பது மினக்கு அளித்த பதில், வரையிலும் எல்லாம் அப்பிரபுவிற்கு விளக்கப்பட்டன. பிறகு பதுமினி பிரபுவை நோக்கி ‘பிரபு! இனி எனக்கு உயிர் வாழ்க்கையால் ஏதும் பயனில்லை. என் சொத்துகள் முற்றும் தங்களின் மேற் பார்வையில் தர்மத்திற்கெனச் செலவழிக்கப்படட்டும். என்னை நம்பும்படி செய்து வசித்து இராகுலனை பழிக்குப்பழி வாங்குவேன். பிறகு யான் தற்கொலை புரிந்து கொள்வதைவிட வேறு சிறந்த வழி யொன்றுமில்லை’ என்று அளப்பரிய துயரத்தோடு கூறினான். 

அவள் கூறியதை அமைதியோடு கேட்டுக்கொண்டிருந்த பிரபு, அவட்காக மிகவும் வருந்தினார். இறுதி நாள் வரையில் அவளது மனமகிழ்வை குலைக்கக் கூடிய விதமாய். அவளது கற்பைக் குலைத்துவிட்ட இராகுலனின் மீதே பிரபுவின் ஆத்திரமுற்றுஞ் சென்றது. சிறிது நேரம் ஒன்றுங் கூறாது சிந்தித்துக் கொண்டிருந்தார். பிறகு அவளைப் பார்த்து. 

“பெருமாட்டி! உமக்காக யான் பெரிதும் வருந்துகின்றென். தீய எண்ணமுடைய அவ்வஞ்சகப் பிரபுவோடு தாம் நெருங்கிப் பழகியதே மிகவுந் தவறு. ‘எண்ணித்துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவமென்பதிழுக்கு’ என்றார்போல, இப்பொழுது வருந்துவதான் என்ன பயன்? தாம் தற்கொலை செய்து கொள்ளுவதாய்க் கூறுகின்றீர்; அங்ஙனம் நீர் செய்து கொள்ளுவீராயின் உமக்கு உண்டாகும் இழிவு மறைக்கப்பட்டு விடாது. அன்றியும், தற்கொலை புரிந்து கொள்ளுவதை எம்மதமும், எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை. பதுமினி! நான் கூறுவதை கவனித்துக் கேளும், மனிதர் ஒவ்வொருவரும் தவறுதல் இயல்பே. ஆயினும். நாம் செய்த குற்றத்திற்காக இப்போது உண்மையில் மனம் வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்கின்றீர். நிட்சயமாக எம்பெருமானிடமிருந்து உமக்கு மன்னிப்பளிக்கப்படும். பெருமாட்டி ! இப்பொழுது உனது மானம் காப்பற்றப்பட வேண்டுமென்றறைகின்றீர்; அஃது உண்மையே. இப்போது இருதயபூர்வமாய் உம்மை நேசிக்கின்றேன். எனது அன்பு, இராகுலன் உம்மீது கொண்டிருந்ததைப் போன்று இழிவானதன்று. இப்போதும் நீர் விரும்பினால் உம்மையான் மணந்து கொள்ள யாதொரு தடையுமில்லை யோசித்து பதில் கூறும்” என்று அன்போடும் அனுதாபத்தோடுங் கூறினார். 

பதுமினி இப்பிரபுவின் பெருந்தன்மையையும், தன்னிடத்து அவர் கொண்டுள்ள உண்மை அன்பையும் எண்ணி வியந்தவாறு ஏதுங்கூற சக்தியற்றாள். பிரவுவின் அருகே சென்று முழந்தாட்படியிட்டு, பிரபுவின் கைகளை எடுத்து அவளது கண்களில் ஒற்றிக்கொண்டாள். அக்கரங்களை அவளது கண்ணீர் நனைத்து. பிரபுவை மிக்க நன்யறிதலோடு நோக்கி, நாத்தழுதழுக்க, இன்குரலில்”பெருமானே, அடியாள் தங்களின் ஒப்பற்ற அன்பிற்கு தகுதியற்றவள்” என்றாள். 

12 – அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ் 

பகலவன் மேற்றிசையில் மறைந்து வெகு நேரமாயிற்று. வானமாகிய நீலவிதானத்தின் கீழ் இளவரசி கொலுவமர வந்தாள். அவளுக்கு வெண் கொற்றக்குடையாக, வெண்ணிலாக்கதிர் வீசி வானத்திடையே சந்திரன் தோன்றினான். அப்பொழுது அரண்மனையைச் சார்ந்த பூஞ்சோலை மிக்க எழிலுடன் விளங்கிற்று. ஆங்குள்ள பசும் புற்றரை யொன்றில் நமது கதாநாயகன் சுரேந்திரனும், கதாநாயகி விஜயசுந்தரியும் உட்கார்ந்து இனிமையாய் பேசிக் கொண்டிருந்தனர். 

“அன்பிற்குரிய விஜயா! இவ்வெண்ணிலா மனத்திற்கு எவ்வளவு மகிழ்மை யளிக்கின்றது. வானத்தை உற்றுப்பார். பிறையைச் சுற்றிலும் உடுக்கள் விளங்குகின்றன. நாம் ஒரிடத்தை செயற்கையான் எத்துணை அழகுபெறச் செய்திருப்பினும், அஃது இயற்கையன்னையின் எழிலுக்கீடாமோ! கைம்மாறு கருதாது மழையைச் சொரியும் கார்முகிலேபோல், மக்களிடத்து ஏதும் எதிர் பாராது, அனைத்தையும் அவ்வுயிர் பொருட்டு அமைத்தருளிய ஆண்டவனுக்கு யாம் செய்யக் கூடிய உதவி யாதேனும் ஒன்றுளதோ? 

“பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் 
தாற்குண்டு பொன்படைத்தான் 
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் 
கேதுண்டத் தன்மையைப் போல் 
உன்னாற் பிரயோசனம் வேணதெல் 
லாமுண்டு உன்றனக்கிங் 
கென்னாற் பிரயோசனம் ஏதுண்டு 
காண்கச்சி ஏகம்பனே” 

என்று பட்டினத்தடிகள் கூறியவாறே, நாம் அப்பெருமானுக்கு இயற்றும் உதவி ஏதும் இல்லையென்றோ?” என்று எம்பெருமானின் அருட்டிறத்தை வியந்தவாறு கூறினான் சுரேந்திரன். 

“ஆயினும், எக்காலத்தும் அவனை வணங்கி வழிபடுவதே நமக்கு இன்றியமையாக் கடமையன்றோ?” 

“உண்மையே அதிருக்கட்டும். விஜயா! ஏன் ஏதோ ஒருவிதமாய் வாட்டமுற்றிருக்கின்றாய்? காரணம் கேட்டால் கூற மறுக்கின்றாய்? என்னிடங் கூறக்கூடாதா? என்று பேச்சை வேறு விஷயத்தில் திருப்பினான் சுரேந்திரன். 

விஜயாள் ஏதும் பதில் அளிக்க வில்லை. மீண்டும் சுரேந்திரன் அவளைப் பார்த்து விஜயா ! என் அருமை விஜயா! உனக்கு மறுமொழியளிக்க விருப்பமில்லையா?” என்று கொஞ்சும் பாவணையாகக் கேட்டான். 

விஜயாள் ஏதோ கூற வாயெடுத்தாள். ஆயினும் அவள் ஏதும் மொழிந்தாளில்லை. தான் கூறக் கருதிய மொழிகளை உரைத்தற்கு மனோபலமற்றவளாய்த் தன் பார்வையாலேயே உட்கருத்தை வெளியிடுவாள் போல சுரேந்திரன் முகத்தை நோக்கினாள். அந்நோக்கின் மென்மையையும், இனிமையையும், கனிவையும் மறைப்பதற்கு விஜயாளின் பேதைமையும் பெண் தன்மையையும் கூடப்போதிய ஆற்றல் இலவாயின, அந்நோக்கம் சுரேந்திரன் மனதில் மின்னல்போற் பாய்ந்தது. உடனே அவன் அவளை நோக்கி, “விஜயா, யான் உன்னை நேசிக்கவில்லையென நினைக்கின்றாய்! ஐயோ, இவ்வுலகின் உன்னை விட அதிகமாய் வேறெப்பெண்ணையும் நேசிக்கவில்லையென்னும் உண்மையை நீ யறியமாட்டாய், ஆயினும்–” 

“ஆயினும் என்ன?” என்று வினாவினாள் இளவரசி. 

“விஜயா, உன்னிடம் நான் எதைக் கூறுவதென்பதே எனக்குத் தெரியவில்லை. என் அன்பான விஜயா! நான் இப்போதிருப்பதைப்போலின்றி, ஏழையாய், எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு இவ்வூரைவிட«¢ட துரத்தப்படினுங்கூட அப்பொழுது என்னை நேசிப்பாயல்லவா?” என்று உருக்கத்தோடு கேட்டான் சுரேந்திரன். 

“என் அரசே! ஏன் இவ்வாறு எவ்வித தொடர்புமின்றி தாங்கள் பேசுகின்றீர்களென்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தாங்கள் உற்சாகமாயும் மகிழ்ச்சியாயும் இருக்கவேண்டிய இந்நேரத்தில், இங்ஙனம் அபசகுனமாக வார்த்தைகளைக் கூறுவது எனக்கு மிகுந்த வறுத்தத்தை தருகின்றது. நான் தங்களை நேசிப்பது தாங்களிருக்கும் உயர்பதவியைக் கண்டல்ல. பணத்திற்காகவும் பதவிக்காகவும் நேசிப்பது உண்மை அன்பாகுமா? தாங்கள் அமரும் ஒரு சிறந்த தேசத்து அரசுகட்டிலும், தாங்கள் முடியில் பிரகாசிக்கும் நவரத்ன மகுடமும், தங்கட்குக் கவுரவிக்கப்பாடும் வெண்கொற்றக் குடையும், தங்கள் செங்கரத்திற்பற்றும் செங்கோலும் எனக்கு தங்களிடத்து இத்தகைய பேரன்பை உண்டாக்கவில்லை. தாங்கள் பரம ஏழையாய், உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி, எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, இத்தேயத்தைவிட்டே துரத்தப்படினும் யான் இப்போதைப்போன்றே தங்களை உள்ளன்போடு நேசிப்பேன். தாங்கள் எங்கு செல்லினும் யானும் தங்களை மனமகிழ்வோடு பின்பற்றுவேனென்பதை உறுதியாய் நம்பலாம்” என்று மிகத்துயரத்தோடு மொழிந்தாள் இளவரசி. அவளது அழகிய கண்களில் நீரரும்பியது. அவளையறியாமல் அவளுக்குத் துக்கம் பொங்கியது. “அன்பிற்குமுண்டோ வடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” என்ற ஆன்றோர் வாக்கு உண்மையன்றோ? 

விஜயாளின் கண்களில் நீரரும்புவதைக் கண்ட சுரேந்திரன்”என் அன்பிற்குரியாய்! கண்ணீர் உகுக்கின்றாயே. நீ என்னிடத்து கொண்டுள்ள அன்பின் அளவை அறிதற்காகவே கூறினேனேயன்றி வேறன்று” என்றான். அவன் மனங் குழம்பியது. தன்னிடத்து அவள் வைத்திருக்கும் மாசற்ற அன்பை எண்ணி எண்ணி உள்ளம் உருகினான். ஏதேதோ எண்ணினான். ஆயினும், அவள் தனக்குரியள் அல்லன் என்பதை நினைந்து தன்னைத் தேற்றிக்கொண்டான். 

“தங்கள் மனத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது. எதைப்பற்றியோ அடிக்கடி எண்ணி உங்கள் மனம் துன்பப்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. தாங்கள் மர்மமாய் வைத்திருக்கும் விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்தல்ல. ஆனால் எந்த விஷயத்திலாவது நான் தங்களின் துன்பத்தை மாற்ற உதவி செய்யக்கூடுமென்றே கேட்கின்றேன். தங்களின் உள்ளத்தைத் துன்புறுத்தும் துயரத்தைத் தாங்கள் எனக்கறிவிப்பின் தங்கள் மனம் சற்று ஆறுதலடையலாமென்றெண்ணுகின்றேன்” என்று அன்போடு கூறி, அவனது முகத்தை நோக்கினாள். 

எழுதுதற்கரிய எழிலுடன் விளங்கிய ஒரு இளவரசி பூஞ்சோலையில் தன்னந்தனியே, தன்னிடத்து அன்புமீதூர பேசிக்கொண்டிருந்ததானது சுரேந்திரனுக்கு எல்லையற்ற ஆனந்தத்தைத் தந்ததெனினும், அவள் பிறர்க்குறியள் என்பதை நினைக்க நினைக்க, அவனது மனம்சொல்லொணா சஞ்சலமடைந்தது. அந்நிலையில் அவள் மீண்டும் சுரேந்திரனை நோக்கி. “அண்ணலே! தாங்கள் என்னை நேசிப்பது உண்மையாயின், தங்களின் இரகசியத்தை என்னிடம் ஏன் ஒளிக்கவேண்டும்? என்னிடங்கூறுதற்கு தங்கட்கு விருப்பமில்லையா?” என்று கனிவோடு மொழிந்தாள். 

அப்பொழுது மணி பன்னிரன்டிருக்கும். பூரண மதியினொளி எங்கும் பரவி யாவரையும் ஆனந்தக் கடலிலாழ்த்தியது. சுரேந்திரன் விஜயாளின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அவள் வதனமும் பூரண மதியைப்போன்றே விளங்கியது. விஜயாளின் கையை ஆர்வத்தோடு பற்றி முத்தமிட்டான். அந்நிலையில் அவன் அனைத்தையும் அடியோடு மறந்தான். அவன் நினைத்திருந்த நினைவுகள் எல்லாம், அவன் உணர்ச்சியெல்லாம் அவள் முகத்தை நோக்கவும் மனத்தேயெழுந்த அன்பென்னும் வெள்ளத்தில் கரைந்துபோயின. அவள் உடலமைப்பின் மென்மையான அழகையும், அவள் பார்வையிலும் அவள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லிலும் தௌ-வாகக் காணப்பட்ட அவளது உள்ளச் செம்மையையும் கவனிக்கக் கவனிக்க, சுரேந்திரனுக்கு எல்லையற்ற ஆனந்தம் பொங்கியது. அவன் தன்னையும் உலகையும் மறந்தான். 

விஜயசுந்தரிக்கு அதுகாறும் தௌ-வுற விளங்காதிருந்த ஒர் பெரிய உண்மை, அஞ்ஞான்று துலக்கமுற விளங்கிற்று. அவ்வுண்மையானது அரசன் (சுரேந்திரன்) தன்னைக் காதலிக்கின்றான் என்பதே. அவ்வுண்மை விளங்கியதும் தனது பெண்மைக் குணத்துக்கு இயல்பாகிய நாணத்தால் சிறிது தலைகவிழ்ந்தாள். 

மந்தமாருதம் இன்பமாய், வீசியது. மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோசா முதலிய அழகிய மலர்களின் நறுமணம் நந்தவனம் முற்றும் பரவ இன்பமளித்தது. இருவரும் தங்களையே மறந்திருக்கும் அந்நேரத்தில் சிறிது தூரத்தே தங்களை நோக்கி கமலாகர் வரக்கண்டனர். 

அவர் முகம் மலர்ந்திருந்தது. அவர் நெருங்கி வந்ததும் இருவர்க்கு தலைவணக்கங்ஞ் செய்தார்.”என் அரசே! வெகுநேரமாய் விட்டது. மெல்லிய தன்மையையுடைய இளவரசி இதற்குமேல் விழித்திருக்கலாகாது. நான் இங்கு வந்து தங்கள் தனிமையிற் குறுக்கிடத் துணியவில்லையாயினும், அவசியங்கருதி வரலானேன்” என்று சுரேந்திரனை நோக்கி பணிவோடு மொழிந்தார். 

13 – எதிர் நோக்கிய அபாயமும், எழில்மிகு வனிதையும் 

மேலதிகாரத்திற் கூறியவை நிகழ்ந்த மூன்றாம் நாளிரவு மணி எட்டிருக்கும். ஓர் போர்வையால் உடம்பு முழுவதையும் மறைத்துக்கொண்டு, நமது கதாநாயகன் சுரேந்திரன், புரவியிலமர்ந்த வண்ணம், மெல்ல மெல்லத் தயங்கித் தயங்கிச் செல்கின்றான். 

ஆம், – அவன்தான் – கருணையும், வீரமும் ஒருங்கே கொண்ட நமது சுரேந்திரன் தான்- இப்போது, ஒன்பதாவது அத்தியாத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ள கடிதத்திற் குறிக்கப்பட்டிருந்த தனி மாளிகையை நோக்கிச் செல்கின்றான். 

சுரேந்திரன் குறிப்பிட்ட தனி மாளிகையை அண்மினான். வாயிற் கதவு மூடி வைக்கப்பட்டிருந்தது அதைத் திறப்பான் வேண்டி, சுரேந்திரன் கதவின் பேரில் கையை வைக்க, அக்கதவும் உடனே திறந்துகொண்டது. அஞ்சாநெஞ்சு படைத்த அந்நம்பியும் விரைந்து உட்சென்றான். எங்குநோக்கினும் அம்மாளிகையினுள் மனிதரிருப்பதின் அடையாளமே சிறிதும் புலப்படவில்லை. ஆனால் மேசையின் பேரில் மங்குதலாய் விளக்கொன்று எரிந்துக்கொண்டிருந்தது. இரண்டொரு அறைகளைத் தாண்டி, மிகக் குறுகுதலாயிருந்த அறையொன்றினுட் புகுந்தான். அவன் அவ்வறையினுள் புகுந்த சிறிகுநேரத்திற்கெல்லாம் சிறந்த அழகுடன் கூடிய நங்கையொருத்தி ஆங்குத்தோன்றினாள்! 

சுரேந்திரன் வியப்படைந்தான். தான் தவறுதலாய் வேறொரு மாளிகைக்குள் வந்துவிட்டோமோ வென்று ஐயுற்றான். அப்பெண்ணை மரியாதையோடு நோக்கி “பெண்மணி! மன்னிக்க வேண்டும். யான் வேறொரு மாளிகைக்குச் செல்லவேண்டியவன் அடையாளந் தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்” என்றுக் கூறி போதற்குத் திரும்பினான். 

அந்நங்கையோ அவனது உள்ள நெகிழ்வை ஒருவாறு உணர்ந்துகொண்டு அவனை நோக்கி,”ஐயா! தாங்கள் கூறுமாறு இம்மாளிகைக்குத் தவறி வந்துவிடவில்லை. சட்டென்று தாங்கள் இவ்விடத்தை விட்டுஞ் செல்ல வேண்டும்; எவ்வளவு சடுதியில் தாங்கள் இங்கிருந்து செல்லுகின்றீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. கடித மெழுதி தங்களை இங்கு வரவழைத்தவள் நானே” என்றனள். 

“பெண்மணி, நீங்கள் யார் என்பதை எனக்கு அறிவிக்கக் கூடுமோ? தாங்கள் எனக்குச் செய்யும் இப்பேருதவிக்கு நான் எத்தகைய நன்றியைச் செலுத்துவதென்பதே எனக்குத் தெரியவில்லை” என்றான் சுரேந்திரன். 

“வீரர் தலைவ ! தாங்கள் கூறுமாறு தங்களிடமிருந்து யான் எத்தகைய நன்றியறிதலையும் எதிர்பார்க்கவில்லை அருட்பெருங்கடலான எம்பெருமானை உண்மை அன்பால் வழிபடுபவர் யாவரும் அவசியம் கைக்கொண்டொழுக வேண்டிய அருளொழுக்கத்தின் வழி நின்று எனது கடமையை நிறைவேற்றுகிறேனேயன்றி வேறன்று. ஆகவே, நான் இன்னாரென்பதைத் தங்கட்கு அறிவிக்க வேண்டுவது அத்துணை அவசியமல்ல. ஆயினும், என்னை தங்கட்கு அறிவிக்க விரும்பினால், “இராகுலனின் ஏமாற்றத்துக்குள்ளாகிய பலபெண்களுள் நானும் ஒருத்தி என்று கூறுவதே போதுமானது” என நவின்றாள் அம்மாதரசி. 

சுரேந்திரன் ஏதோ சிறிது ஆழ்ந்து சிந்தித்தான். அதற்குள் அம்மங்கை மீட்டும் அவனை நோக்கி, “அறிவின் மிக்க வல்லீர்! இங்ஙனம் யாம் பேசிக்கொண்டிருத்தற்கு இவ்விடம் ஏற்றமல்ல. எதன் பொருட்டு யான் தங்களை இங்கு வரவழைத்தேனோ அதை உடனே அறிவிக்கவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அஃதாவது, இம்மாயாபுரிக்கு மேற்கே ஏழுகல் தூரத்தில், அகன்று விரிந்து செல்லும் ஆழமான ஆறொன்றுள்ளது. அவ்வாற்றின் அருகே கருங்கற்களினாற் கட்டப்பட்டு, கருநிற சாயம் பூசப்பெற்ற கருப்பு மாளிகை யொன்றுண்டு, அம்மாளிகையின் அறையொன்றிலே கை, கால்களுக்குத் தளையிடப்பட்டு, எமது அரசர் பிரதாபர் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வறை பண்டு கட்டப்பட்டமையான், மிக்க பலமாய் அமைக்கப்பட்டுள்ளது. முன் பக்கஞ் செல்லும் கதவொன்றை விடுத்து, வேறுவாயில் அவ்வறைக்குக் கிடையாது. ஆனால், அவற்றின் புறமாய்த் கம்பியில்லா பலகணி யொன்றுண்டு. அதன் புறமாய்த் தப்பிப்போவது எவர்க்கும் சாத்தியமானதல்ல வென்னுங் காரணத்தினால், அச்சாளரத்திற்குக் கம்பிவைக்கவில்லைபோலும்-” என்று அப்பெண்மணி கூறிவரும் பொழுது, சுரேந்திரன் அவளை இடைமறித்து. 

“பொறுக்கி யெடுத்தி பல வீரர்களைக் கொண்டு மாளிகையை திடீரெனத் தாக்கி, அம்மாளிகையிலுள்ள வீரர்களை சின்னாபின்னப் படுத்தினால், பிரதாப அரசரை மீட்பது எளிதென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” என்று வினாவினான். 

“இல்லை நான் ஒருபோதும் அங்ஙனம் எண்ணுதற் கியலாது. ஏனெனின், இராகுலன் ஒருகால் இங்ஙனம் நேரிடக்கூடு மென்றெண்ணியே முன் யோசனையோடு. எல்லாக் காரியங்களையும் ஒழுங்குபட அமைத்திருக்கின்றான். அரசர் அருகிலேயே இரண்டு வீரர்களை இடைவிடாமல் காவல் புரியுமாறு நிறுத்தி வைத்திருக்கின்றான். திடீரென இம்மாதிரி குழப்பம் வெளியில் உண்டாயின் அறைவாயிற் காவலன் உள்ளேயிருக்கும் வீரர்கட்கு ஏதோ சைக்கினை செய்யவேண்டும், ஆனால், அங்ஙனம் செல்லுவது உயிர்க்கிறுதி பயக்கக் கூடிய செயலென்பதிற் சிறிதும் ஐயமில்லை. இறைவனது அருளால் உயிர் தப்பி, அப்பலகணியை அண்மினால் ஏதுஞ் சந்தடியின்றி ஏணி வைத்து மேலேற வேண்டும்” என்று அம்மங்கை கூறி வருகையில் சுரேந்திரன் இடை மறித்து. 

“ஏதும் படகின் மூலமாய் அப்பலகணி யண்டையிற் செல்லுதற்கியலாதா?” என்று, மீட்டும் வினாவினான். 

செய்யலாம், ஆனால், அதிலும் ஓர் பெரிய இடைஞ்சல் இருக்கின்றது. இராகுலனின் வேவுகாரர் பலர், இராக் காலங்களில் ஆற்றின் பக்கம் அங்கு மிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனர். எவர் கண்ணிலேனும் அப்படகு தென் படுமாயின், விழிப்படைந்து விடுவர். பிறகு எத்துணை முயன்றும் அரசரைப் காப்பாற்ற இயலாதுபோம்” என்று அம்மங்கையர்க்கரசி கூறிவரும்பொழுது பின்னால் யாரோ பேசும் பேச்சுக்குரல் கேட்டது. 

அப்போது அந்நங்கை அச்சத்தோடு அவனை நோக்கி, சிறப்புடைவீரே ! தாங்கள் எங்காயினும் மறைந்து கொள்ளுங்கள். இராகுலனுடைய ஆட்கள் இதோ வந்து விட்டனர். தங்களைப்போன்ற சீரிய வீரரொருவர், கூற்றினுங் கொடிய இராகுலனின் வீரர்களால் அகால மரணமடையக்கூடாது. நானும், என் கணவரும் எப்பொழுதும், அரசிளஞ்செல்வி விஜயாளிடத்து பேரன்புடையவர்கள், ஆகவே அவ்விளவரசியின் களங்கமற்ற காதலுக்கு உரித்தான தங்களிடத்தும் எங்களன்பு செல்லுதல் இயல்பேயாம் – ஆ! அதோ வந்துவிட்டனர். சட்டென்று ஒடிவிடுங்கள். “சீக்கிரம் சீக்கிரம்”, என்று கூறிக் கொண்டே பின்புறமாய் ஒடி மாயமாய்மறைந்துவிட்டாள். 

சுரேந்திரன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நன்றாய் உடையணிந்து முகமூடியணிந்த அறுவர், சுரேந்திரனை அண்மினர். அதற்குமேல், மறைந்து கொள்ளவோ ஒடிவிடவோ முடிவில்லை. சமயோசிதமாய் அவ்வறைக் கதவை மூடித் தாளிட்டுக்கொண்டான். அதற்கிடையில் அவ்வறுவரும் கிட்ட நெருங்கி வந்துவிட்டனர். 

அங்ஙனம் நெருங்கி வந்துவிட்ட அவ்வீர் அறுவரும் சுரேந்திரன் மூடிக்கொண்டு உள்ளிருந்த அறைக்கதவைத் தட்டினர். அவன் பதில் அளித்தானில்லை “அடே, கதவைத்திற. உன் உயிர் தப்பவேண்டுமாயின், இந்நாட்டை விட்டே ஒடிவிடு. எவ்வளவு சீக்கிரமாய் இத்தேயத்தின் எல்லையைத் தாண்டிச் செல்லுகின்றாயோ, அவ்வளவுக்கு உனக்கு நல்லது” என்றான் ஒருவன். 

“பிச்சைக்காரநாயே, எங்கேயோ கிடந்த உனக்கு இத்துணை கெர்வமா? உன்னை இளவரசியும் மட்டுக்கு மீறி நேசிப்பதான், திமிர் பிடித்துக்கொண்டது போலும். என்னசொல்லுகிறாய்? இம்மாயாபுரியை விட்டு ஒடிவிடுகின்றாய், இல்லையா?” என்றான் மற்றொருவன். 

“மரியாதையாக எங்களின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு, இவ்வூரினின்றும் போய்விடுவாயாயின், உன்னுயிர் காப்பாற்றப்படுவதோடு பெருந்தொகையும் உனக்கு பரிசளிக்கப்படும். என்ன கூறுகின்றாய்?” என்றான் பின்னுமொருவன். 

இங்ஙனம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்ப் பேசி துன்புறுத்த, அவர்கட்கெல்லாம் தகுந்த சமாதானம்சொல்ல இயலாதெனக்கண்ட சுரேந்திரன், அவர்கள் கூறுவனவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டவனைப் போன்று நடித்தான். 

“ஆயின், உடனே கதவைத்திற, யாங்கள் கூறிய நிபந்தனைக்கு நீ கட்டுபட்டா யாதலின், மன்னிக்கப்படுவாய்” என்றான் முதலில் பேசியவன். 

“எங்ஙனம் நீ இம்மாளிகைக்கு வந்தாய்” என்று வினாவினான் இன்னொருவன். 

“அதெல்லாம் வெளியில் வந்தபிறகு கேட்டுக்கொள்ளுவோமே? ஏ, தம்பி! கதவைதிற” என்றான் இரண்டாமவன். 

சுரேந்திரனும் வேறுவழியின்மையான், ஆங்கிருந்த பெரிய நாற்காலியொன்றினை யெடுத்து, தனக்கு நேரே பிடித்துக்கொண்டு கதவினைத்திறந்து விட்டான். உடனே அரக்கரனைய அவ்வீரர்கள் சுரேந்திரன் மீது பாய்ந்தனர். ஏற்கனவே இங்ஙனம் நேரக்கூடுமென யூகித்திருந்த நமது இளவல், அவர்கள்மீது தான் பிடித்துக்கொண்டிருந்த நாற்காலியை விட்டெறிந்தான். அந்நாற்காலி நன்றாய் அவர்களது முகங்களிற் தாக்கியதானும். அவர்கள் அதைச்சிறிதும் எதிர்பார்க்கவில்லை யாதலானும் சற்றுத் தடுமாற்றமடைந்தனர். அதற்குள் சுரேந்திரன், அதி ஆச்சரியமான ஒரு சாமர்த்தியித்தினால் தன்னை வளைந்திருந்தவர்களினூடே மின்னல் போற்பாய்ந்து வெளியே ஓடினான். அவர்கள் துரத்தினர். பின்னும் வேகமாய் ஒடினான். அவர்களெல்லாரும் தன்னை நோக்கிச் சுடக்கண்ட செம்மல் சுரேந்திரன் தானும் அவர்களை நோக்கி திரும்பித் திரும்பித் திரும்பி சுட்டவண்ணம் அதிவேகமாய் ஒடினான். ஆயினும் பயனொன்னுமில்லை. அதோ! அதோ! நெருங்கிவந்துவிட்டனர்.இன்னும் ஒரு நிமிடத்தில் கொடிய அவ்வீரர்களது கையில், அறிவுடை அன்பன் – நட்புணர்ந்த நம்பி- சிறப்புடை செம்மல் அகப்பட்டுக்கொள்ளுவான். சீரிய வீரனாய சுரேந்திரன் தன்னந்தனியே அவ்வறுவர் மத்தியில் அகப்பட்டுக்கொண்டமையான், ஏதுஞ்செய்ய செயலற்றான். ஒருவன் வாளினால் வெட்டினான், திறன் மிக்க அவ்வீரன், அவ்வாளுக் கிரையாகாமல் தப்பிக்கொண்டானாயினும் அவனது வலது கையில் அவ்வெட்டு விழுந்தது. 

“நமது விரோதி தானே வலியவந்து இன்று மாட்டிக்கொண்டான். இப்போது நாம் இவனைக்கொல்வது இவனுக்கேற்ற தண்டனையல்ல. ஆதலால், நாம் இவனை விரைவாக நமது மாளிகைக்கே கொண்டுபோவோம்” என்றான் அவ் வீரர்களின் தலைவன். அத்தலைவனது கொடிய உத்திரவைப்பெற்ற அவ்வீரர்கள், சுரேந்திரனைச் சூழ்ந்து நின்றனர். 

இவ்வாறு கூறி வாய்மூடு முன்னே, விரைந்துவரும் பல்லோர் காலடிச் சத்தங்கேட்டது. மறு நிமிடமே அவ்விடம் பன்னிரு சிறந்த வீரர்கள் நிரம்பியது. சுரேந்திரன் தனக்கு நேர்ந்த ஆபத்தினின்றும் தப்பினான். 

சுரேந்திரன் தன்னுயிரைக் காப்பாற்றிய அவ்வீரர்களை உற்று நோக்கினான். 

அவர்களெல்லாரும் கருப்பாடை அணிந்திருந்தனர். அவ்வீரர்களது தலைவர் செல்வாக்குப்பெற்ற பிரபுக்களில் ஒருவரென உணர்ந்து, அவர்க்கு நன்றி செலுத்தினான். ஆனால், அப்பிரபுவை அடுத்து நின்ற ஒரு பெண்மணியை நோக்க, சுரேந்திரன் வியப்பு மேலீட்டால் அப்படியே தம்பித்துவிட்டான். ஏன்? தனக்கு கடித மெழுதி அவ்வபாயகரமான தனி மாளிகைக்குத் தன்னை வரவழைத்தவளுமான அவ்வழகிய நங்கையே அவளெனக் கண்டான். இராகுனது ஆட்களைக் கண்டதும் மறைந்தோடிவிட்ட அம்மின்னற் கொடியே, தனது அபாய நிலைமையை உணர்ந்து, தகுந்த சமயத்தில் தங்கணவரோடு வந்துதவினாள் என்பதை சுரேந்திரன் தெற்றென உணர்ந்தான். உடனே அப்பெண்மணிக்குத் தனது வந்தனத்தையும், மனமார்ந்த நன்றி யறிதலையும் தெரிவித்துக் கொண்டான். சுரேந்திரனைப் பிடித்துக்கொண்டிருந்த இராகுலனது ஆட்கள் எங்கோ ஓடி ஒளிந்து விட்டனர். அவ்வாட்களை உடனே தேடிக்கண்டு பிடிக்குமாறு தனது வீரர்கட்கு கட்டளையிட்டாள் அப்பெண்மணி. 

அவ்வீரவனிதை யாரென நினைக்கிறீர்கள்? வாசகர்களே! அவள் நமது பதுமினி பெருமாட்டியே! 

14 – பிரிவாற்றாமை 

மறுநாள் பொழுது புலர்ந்தது. முதல் நாளிரவு ஏற்பட்ட அதிர்ச்சியால் நன்றாய் அயர்ந்து தூங்கிவிட்ட சுரேந்திரன், பொழுது விடிந்ததும் உற்சாகத்துடன் நித்திரை நீங்கி படுக்கையிலேயே எழுந்து உட்கார்ந்தான். தான் எழுவதற்கு முன்னமேயே, இளவரசி விஜயம், தனது கையில் ஏதோ காயம்பட்டிருப்பதாய்க் கேள்வியுற்று, தன்னைப் பார்க்கும்பொருட்டு அதிகாலையிலேயே அரண்மனைக்கு வந்திருக்கின்றாள் என்ற செய்தியை கமலாகரர் மூலமாய்ச் சுரேந்திரன் அறிந்தான். 

அவனது கையில் அரண்மனை வைத்தியர் ஏதோ மருந்து வைத்து கட்டியிருந்தார். சுரேந்திரன் எழுந்து விட்டானென்றறிந்த இளவரசி, பதைத்த மனத்தொடு அவன் கிட்ட நெருங்கி, அவன் கையில் எங்ஙனம் காயம் பட்டதென வினாவினாள். ஏதேதோ பொய்க் காரணங்கூறி அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவன் கூறிய காரணங்களை அவள் ஏற்றுக்கொண்டாளில்லை. பூஞ்சோலை சென்று, பூஞ்செடிகளை விளையாட்டாகவெட்டி விட்டு கொண்டிருந்ததாயும், அவ்வெட்டு தவறி கையில் விழுந்துவிட்டதாயும் சுரேந்திரன் பொய்க்காரணம் புகன்றான். சேனைத் தலைவர் அவன் கூறியது உண்மை தான் என்று சான்றுபகர, அவற்றான் சிறிது சமாதான முற்றக் கோமகள், அவளது கையிற் கட்டியுள்ள கட்டை அவிழ்த்துக் காட்டுமாறு வற்புறுத்தினாள். உடனே கமலாகரர், மருந்து போட்டு கட்டியிருப்பதால் இப்போது அவிழ்க்கக் கூடாதென்றும், இன்னும் எட்டு நாட்கள் கடந்த பின்னரே அவிழ்க்கவேண்டுமென்றும் கூறினார். அரசிளஞ் செல்வியும் அக்கூற்றை உண்மையெனவே நம்பினாள். 

நாட்கள் சென்றுகொண்டே யிருந்தன. சேனாதிபதியும், சுரேந்திரனும் கருப்பு மாளிகையினுள் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசர் பிரதாபனை எவ்வாறு மீட்பதென்றே யோசனையிலேயே தம்கவனம் முற்றுஞ் செலுத்தியிருந்தனர். இராகுலப் பிரபுவின்பேரில் குற்றஞ்சாட்டுதற்குரிய வெளிப்படையான காரணமேது மின்மையான், மிகச் செல்வாக்குப் பெற்ற பிரபுவான இராகுலனை. திடீரெனக் கைதியாக்குதற்கும் இயலவில்லை. மிகத் தந்திரமாயும் சாமர்த்தியமாயும் காரியத்தை சாதிக்கவேண்டியிருந்தது. என்ன செய்வதெனத் தோன்றாது பல நாட்கள் மயங்கி பின்பு ஒரு முடிவுக்கு வந்தனர். 

கருப்பு மாளிகைக்குச் சிறிது தூரத்தில் அரசர்க்கு உரித்தான் பெரியதோர் மாளிகையுண்டு. அஃது, மாயாபுரியின் அரசர்கள் வேட்டையாடி வந்து இளைப்பாறும் பொருட்டு, பண்டு அத்தேயத்து அரசரொருவரால் கட்டப்பட்டதாகும். அம்மாளிகைக்குச் சுரேந்திரனும் கமலாகரர் முதலியோரும் வேட்டையாடும் முகாந்தர மொன்றை ஏதுவாக வைத்துக்கொண்டு செல்லுவதெனத் தீர்மானித்தனர். ஆங்கு சென்றால், அரசரை மீட்பதற்குரிய பல வழிகள் தோன்றக்கூடுமென அவர்கள் எண்ணினார். ஆகவே, அங்கு செல்லுதற்கு நல்ல நாளொன்று குறிப்பிட்டனர். 

நிச்சயிக்கப்பட்ட அந்நாளும் வந்தடுத்தது. சுரேந்திரன் அளப்பரிய துயரத்தில் அமிழ்ந்தினான். முதன் மந்திரியிடம் சில விஷயங்களை மர்மமாய் அறிவித்து, அரசியல், விஷயங்களை கவனித்து வரும்படி சேனைத்தலைவர் கேட்டுக் கொண்டார். சுரேந்திரன் எல்லாரையும் அருகழைத்து. தான் வேட்டைக்குச்சென்று திரும்பி வருவது பெரும்பாலும் நிட்சியமில்லையென்றும், அங்ஙனம் தான் திரும்பிவாராமல் போய்விட்டால், உள்நாட்டுக் கலகங்கட்கிடமளிக்காமல் எல்லோரும் ஏகோபித்து இளவரசிக்கே முடிசூட்டி, தன்னிடத்திருந்ததைப் போலவே அவர்களெல்லாரும் அவட்கடங்கி நடக்குமாறும் கேட்டுக்கொண்டான். ஊழ்வினையின் பயனாய், பிரதாபை விடுவிக்கும் முயற்சியில் தானும் மாண்டு, பிரதாபும் கொலை செய்யப்பட்டுவிட்டால் மாயாபுரி மக்கள், வீண் கலகங்கட்கு இடங்கொடாது விஜயாளையே தங்கட்கரசியாகத் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டுமென்பது சுரேந்திரனது விருப்பம். ஆகவே, மேலே கூறியவண்ணம் எல்லாரிடம் வேண்டிக்கொண்டான். ஆனால், அவன் கூறிய மாற்றத்தின் உட்கருத்தை விளங்கிக்கொள்ள முடியாது எல்லாரும் திகைத்து நின்றனர். மந்திரச் சுற்றத்தாரும் தந்திரச் சுற்றத்தாரும் ஏனையோரும், அங்ஙனம் ஏதும் இடையூறு நேருமெனத் தோன்றினால் வேட்டைக்குச் செல்லவேண்டாமெனத் தடுத்தனர். அதற்கு தகுந்த சமாதானங் கூறுவான் விழைந்த சுரேந்திரன், தான் பெரும்பாலும் திரும்பிவர முடியாமல் ஏதும் பெருந்தடை நேரக்கூடுமெனத் தன்னுள்ளளிருந்து ஏதோ ஒன்று கூறுவதையும், அதுபற்றியேதான் இங்ஙனங் கூற நேர்ந்ததென்றும், அதற்காக அஞ்சி வேட்டைக்குப் போகாமலிருப்பது ஆண்மைக் கழகல்லவென்றுங் கூறி அவர்களை சமாதானப்படுத்திவிட்டு, எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு விஜயாளிடம் விடைபெறுவான்வேண்டி அவளிடத்துச் சென்றான். 

அன்று அவள் ஒரு வெண்பட்டாடை யணிந்திருந்தாள். அப்புடவை அவளது உடலுக்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருந்தது. கட்டிலில் படுத்தவண்ணம், தன் தோழியோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவளது பணிப்பெண் வனஜா அவளை நோக்கி, 

“பெருமாட்டி! அரசர் பெருமான் தாங்கள் கூறியதைப்போன்றே தங்களிடத்து பேரன்பு பூண்டிருப்பது உண்மையே. ஆயினும்,இங்ஙனம் ஒருவரை ஒருவர் விரும்பி மனங்குழையும்பொழுது ஏன் சீக்கிரம் மணஞ்செய்துகொள்ளக்கூடாது’ என்று அரண்மனை வேலைக்காரர்முதல் எல்லாரும் ஒருவர்க்கொருவர் இரகசியமாய்ப்பேசிக்கொள்ளுகின்றனர்” என்று சிறிது அச்சத்தோடு மொழிந்தாள். 

“வனஜா, பயப்படாமல் உண்மையைக் கூறு அரசரைப்பற்றி உண்மைக்கு மாறான பல வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருவதாய்ச் சற்றுமுன் கூறினாயே, அஃதென்ன? சற்று தௌ-வாய்க் கூறு” என்று தன் பணிமகளை நோக்கி அன்போடு கூறினாள் இளவரசி. 

“பெருமாட்டி, மன்னிக்கவேண்டும். மன்னர்பெருமான் முடிசூட்டிய பிறகு எல்லாவற்றிலும் மாறுபட்டிருப்பதாகத் தாங்கள்கூட ஒருமுறை தெரிவித்திருக்கின்றீர்களல்லவா? அம்மாதிரியே பலரும் பலவிதமாய்ப் பேசிக்கொள்ளுகின்றனர். முடிசூட்டிய அன்று, ஆகாரம்சித்த மாய்விட்டதும் உடனே சேனைத் தலைவர் எச்சரித்து அரசே, தங்களின் உணவை டாக்டர் பரிசோதிக்கின்றார்; சற்று பொறுக்கவேண்டுகின்றேன்’ என்று கூறிவிட்டு, அரசரது காதில் ஏதோ கூறியதாயும் அரண்மனை வேலைக் காரனொருவன் என்னிடம் மிக்க மர்மமாய் அறிவித்தான்” என்று வனஜா பணிவோடு, தன் எஜமானியின் முகத்தை உற்று நோக்கியவண்ணங் கூறினாள். 

விஜயாள் ஏதும் மறுமொழி யளியாமல் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள். பிறகு வனஜாவை நோக்கி, “சரி. நீ கூறுவது உண்மையாயு மிருக்கலாம். அதிருக்கட்டும், வேறு அரசரைப்பற்றி என்ன பேசிக் கொள்ளுகின்றனர்?” என்றாள். 

வேறு ஏதும் தவறுதலாய்ப் பேசிக்கொள்ளவில்லை மாட்சிமை மிக்க நமது மன்னர் பெருமானை எல்லாரும் போற்றிப் புகழ்கின்றனர். முடி சூட்டுதற்குமுன் அரசரது செய்கைகள் எல்லார்க்கும் அருவருப்பைத் தந்தன என்பது தாங்களும் அறிந்ததே. ஆனால் இப்பொழுதோ சிறந்த குணங்களும் சீரிய ஒழுக்கமுடைய நமது மன்னர் மன்னனை விரும்பாதார் எவருளர்?-” என்று வனஜா கூறிவரும்பொழுது, இளவரசி அவளை இடை மறித்து, 

“வனஜா, நீ என்னிடத்து உள்ளன்புடையள் என்பதை யான் நன்கறிவேன். நான் என்றும் உன்னையோர் பணிப் பெண்ணாக நினைத்ததில்லை. என்னுயிர்க்குயிரான தோழியாகவே நினைத்து நேசித்து வருகின்றேன். நீ மிக்க நுண்ணறிவுடையாள். மனிதர் பிரசன்னமாயிருக்குங்காலை, ஒளிவுடன் விளங்கும் அரசரது முகம் தனிமையில் வாடுதற்கு காரணம் என்ன?” என்றாள். 

வனஜா தன் எஜமானியை ஒரு தெய்வ மாதாய் எண்ணி வணங்கி வந்தாள். தன் எஜமானியின் குறிப்பறிந்தொழுகும் இயல்புடையாள். அத்தகைய இயல்புடைய அப் பெண்மணி, இளவரசி தன்னை நோக்கி வினாவியதற்கு உடனே பதிலளிக்க விரும்பி, அக்கோமகனிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள், அவ்வறைக் கதவு திறக்கப்பட்டது. வசந்தா உள்ளே நுழைந்து தன் எஜமானியை வணங்கினாள் 

“வசந்தா, எங்கு வந்தாய்” என்று வினாவினாள் இளவரசி. 

“அம்மணி, மாட்சிமை தங்கிய மன்னர் பெருமான் தங்களைக் காண்பான்வேண்டி இங்கு வந்திருக்கின்றார்கள்” என்றாள் வசந்தை. 

அம் மாற்றத்தைக் கேட்டதும் இளவரசியின் வதனம் மலர்ந்தது. அதற்கிடையில் சுரேந்திரனும் ஆங்கு தோன்றினான். ஒரு அரசிக்குரிய கம்பீரத் தோற்றத்துடன், விஜயாள் கட்டிலினின்றும் இறங்கி சுரேந்திரனை வரவேற்றாள். 

அவ்விரு பணிப்பெண்களும் அங்கிருந்து அகன்றனர். சுரேந்திரன் முதலிற்சற்றுத் தயங்கி பிறகு தான் வேட்டைக்குச் சென்று வரவேண்டிய அவசியத்தைப்பற்றிப் பீடிகை போட்டு பேச ஆரம்பித்தான். பயிர்களையும் நந்தவனங்களையும் காட்டு மிருகங்கள் அழித்துவிடுவதாய்க் குடிமக்கள் மனு செய்துகொள்ளுவதாயும், தான் உடனே வேட்டையாடச் சென்று, வெகு சீக்கிரம் திரும்பி வந்துவிடுவதாயும் இளவரசி தனக்கு விடையாளிக்க வேண்டுமென்றுங் கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு இளவரசி ஒருப்பட்டாளில்லை. குடிமக்களது குறைகளைக் களைய வேண்டுவது அரசர்தம் கடமையேயாயினும், தான் அவனைவிட்டு பிரிந்திருக்க விரும்பாததினால் தானும் வேட்டையாடுதற்கு வருவதாய் இளவரசி கூறினாள். சுரேந்திரன் பலதேற்றுரை பகர்ந்து, அவளை சமாதானப் படுத்துவது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது. 

வெகுநேரஞ் சென்றுவிட்டது. அதற்குமேல் சுரேந்திரன் வேட்டைக்குச் செல்லுதற்கு சிறிது சம்மதித்தாள் உடனே சுரேந்திரன் நேரமாகிவிட்டதாயும், எல்லாரும் தன் வரவுக்கெதிர்நோக்கி காத்திருப்பதால் விரைவில்தான் செல்லவேண்டுமென்றுங் கூறி, அவளிடம் முடிவாய் விடை கேட்கத் தயங்கி அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான். 

“அரசே! சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் தங்கட்கு உடல் நலத்தையும் நிறைந்த ஆயுளையும் அளிப்பானாக. இனி நான்-” என்று கூறிக்குறை வாக்கியத்தையும் முடித்து போய்வாருங்கள்” என்று கூற விரும்பினாளாயினும், தன் மனத்தெழுந்த அன்பின் துக்கவெள்ளத்தால், அவ் வார்த்தைகளை வாய் விட்டுக் கூறுதற் கியலாதவளாய்த் தயங்கினாள் இளவரசி. அவள் கண்களில் நீர் ததும்பியது. இரண்டொரு துளிகளும் கீழே வீழ்ந்தன. ஆ ! அன்பின் திறத்தை அன்புடையோர் அறிவாரன்றி அயலார் அறிவாரோ? துளிகளாய்த் துளித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகிற்று. அன்பென்னும் வெண்மெழுகாற் செய்யப்பட்ட பாவை ஒன்று உள்ளருகிக் கண்விழி யொழுகினாற்போல, அழகுங்குணமும் ஒருங்கமைந்த விஜயாள் தலைகுணிந்த வண்ணம் பொருமிப் பொருமி அழுது இரு கண்களிலும் நீர்ப்பெருகி நின்றாள். 

அன்பிற்கிளகாத உயிரொன்றுண்டோ? அவள் நிலையை கண்ணாரைக் கண்டு நெஞ்சார உணர்ந்த சுரேந்திரன் மனங்கரைந்து செயலற்று அவளையே அன்புடன் நோக்கி கொண்டிருந்தான். அந்த அன்பின் பிரவாகத்தைத் தடுக்க அவன் அஞ்சினான். “இனி, அவளைப் பார்க்க வியலாமலே போய்விடுமோ? அங்ஙனமாயின், அவள் எங்ஙனம் வருந்துவாளோ?” என்றெண்ண அவன் உள்ளம் நெக்குநெக் குருகியது. சற்றுநேரங் கழித்து அக்கோமகள், ஒருவாறு துயரமடங்கிக் கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள். அப்பால் சுரேந்திரன் அவளை நோக்கி, “என் அருமை விஜயா! உனது நட்பின் மேன்மையை நான் நன்கறிவேன். என்னைவிட்டுப் பிரிவதால் உனக்குள்ள துயரத்தினும், உன்னை விட்டுப் பிரிவதால் எனக்குள்ள துயரம் பன்மடங் கதிகமாகுமேயன்றி குறையாது. ஆகவே, மகிழ்ச்சியோடு விடையளிப்பாய். நீ துயருறக் கண்டால். என்மனம் சொல்லொணா சஞ்சல மடைகின்றது” என்றான். 

“தங்களுக்கு என்பால் அன்பில்லை என்று யான் கூறத்துணியேன். ஆயினும், தாங்கள் ஒரு காரியத்தை மேற் கொண்டு செல்லுகின்றீர்கள். நானே எக்காரியமுமின்றி தங்களை நினைத்து நினைந்து வருந்திக்கொண்டு இங்கேயே இருக்க வேண்டியவளாகின்றேன். ஆனால் நம்மிருவர்க்கும் கூடிய சீக்கிரம் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திப்போமென்னும் ஆறுதலொன்றுள்ளது” என்றாள் இளவரசி. 

சுரேந்திரன் அவள் கையைப்பற்றி முத்தமிட்டு, ‘என் அன்பே ! நீ கூறியவாறே கூடிய சீக்கிரத்தில் நாம் மீண்டும் சந்திப்போம். நான் சென்று கருதிய கருமத்தை முடித்து வருகின்றேன். இனி நான் போக விடைகொடுக்க- என்று கூறி மேற்கூற இயலாது தயங்கி நின்றான். அவன் கண்கள் கண்ணீரை சொரியவிட்டன. 

விஜயாள், அன்பு மிக்கூர, அதன் ஆற்றாக எழுந்தகவல் பெரும் வெள்ளத்தை ஆற்றாளாகித் தன் கையை அவன் கையினின்று பிடுங்கிக்கொண்டு, அவனெதிரே நிற்காது அவ்வறையைவிட்டும் வெளியே சென்றுவிட்டாள்.

– தொடரும்…

– முதற் பதிப்பு: பெப்ரவரி 1928, மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com 

2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *