கல் நின்றான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 9,522 
 
 

மாடுகளை பத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்த அந்துவன் ஒரு நிமிடம் அந்தக் கல் முன்னால் நின்றான். முக்கால் ஆள் உயரமும், மூன்று ஆள் பருமனுமாக மண்பாதையின் வளைவில் நிமிர்ந்து நின்றிருந்தது கல். மாடுகளுக்கு முன்புறமாக வழியை ஒழுங்கு படுத்திய படி போய்க் கொண்டிருந்த கோதை அங்கிருந்த படியே திரும்பிப் பார்த்தாள். இடுப்புக் கச்சில் செருகி வைத்திருந்த சிறு குச்சியை எடுத்து, கல்லின் பின்புறம் இருந்த காட்டுச் செடிகளை விலக்கிய படி பார்த்தான்.

நின்று கொண்டிருந்த கல்லில் எழுதப்பட்டிருந்த தமிழி எழுத்துகளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்துவன். மாடுகளை அப்படியே நிறுத்தி விட்டு, கல்லின் பக்கம் அவளும் வந்தாள். கருத்த முகத்தின் மீது வந்து விழுத்த மயிர்க்கற்றையை ஒதுக்கிய படியே, அந்துவனை உற்றுப் பார்த்தாள் கோதை.

“என்ன பார்க்கிறாய் அந்துவா. . ?”

அடர்ந்த மரங்களுக்கு நடுவில் இன்னொரு சிறு மரமாய் நின்றிருந்தது அந்தக் கல். கல்லினை தடவிய படியே “இந்தக் கல்லை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லையே. . “ என்றான் அந்துவன். “சென்ற வாரம் நீ கல்பேடு போயிருக்கும் போது வைத்தோம். ஆதன் கல்” என்றாள் கோதை.

காட்டுயிர்களின் இரைச்சல் சத்தத்திற்கும், சற்று தூரத்தில் இரு கரையும் தொட்டு ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் பேரிரைச்சலுக்கும் இடையில் அவர்களின் உரையாடலை ஊடுருவிச் சென்றது காற்று.

“நீ எழுத்து கற்றவள்தானே? என்ன எழுதியிருக்கிறது சொல் பார்ப்போம்” கோதையைப் பார்த்தபடி கேட்டான் அந்துவன்.

“ இது என்ன சிரமம். . ? மண்ணூத்து நீர்கோள் ஆதன் கல். . . “ கோடு கோடாய் இருந்த எழுத்துகளில் விரலை ஓட்டியபடி மெதுவாக வாசித்தாள் கோதை.

”ஓய்வாக இருக்கும் போது எனக்கும் சொல்லிக் கொடு கோதை. . “ என்றான் அந்துவன் எழுத்துகளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே .

“ஆதன் எப்படிச் செத்தான்? “

“குடியில் எல்லாருக்கும் தெரியுமே. . ஆதன் செத்தது. . ??

“எனக்கும் தெரியும் கோதை. . . கல்பேட்டில் சொன்னார்கள். . . ஆற்றுத் தண்ணீர் திருப்பும் போது வந்த சண்டையில் வியாகன் உடன் இருந்தாரே. . ? அப்புறம் எப்படி ஆதன் செத்தான். . ?” புருவம் உயர்த்தியவாறு கோதையைப் பார்த்தான் அந்துவன். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டே அவள் குரலுக்காகக் காத்திருந்தான்.

கல்லைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டே, கீழே அப்படியே அமர்ந்தாள் கோதை. ”மண்ணூத்திற்கு தண்ணீரை திருப்பி விடப் போன போது வந்த வழக்கமான சண்டைதான். இந்த முறை வடகரை ஊர்க்காரர்கள் தண்ணீரைத் திருப்பக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.”

கோபமும், ஆற்றாமையுமான முக பாவங்கள் கோதையின் முகத்தில் வெளிப்பட்டன. ”நிலத்துக்கு காலமுறைப்படி திருப்புவது வழக்கம் தானே என்று வியாகன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அருகில் இருந்தவனை அடித்து விட்டார்களாம். சண்டை முற்றி விட்டது. ஆளுக்கு ஒரு பக்கம் தண்ணீர் மடையை மாற்ற முயலும் போது, ஆதனை தடி கொண்டு தாக்கி விட்டார்கள். இரும்பு கோர்த்த தடி தலையில் பட்டதால் ஆதன் விழுந்து விட்டான். எல்லாம் முடிந்ததும்தான் ஆதன் செத்துப் போயிருப்பது தெரிந்தது.”

”அதற்குப் பின்புதான் குடிக்காரர்கள் போய் வடகரைக்காரர்கள் மாடுகளைக் கொண்டு வந்து விட்டார்கள். . .இன்னும் அங்கிருந்து மீட்க வரவில்லை. ஆதன் செத்த மறுநாள்தான் கல் வைத்தோம்”

“இந்தக் கல்லை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? நம் பகுதியில் இது போல பார்த்ததில்லையே. . .” அந்துவன் கல்லின் அருகில் நின்றபடியே கருமையும் இல்லாத, வெண்மையும் இல்லாத பொது நிறமாக இருந்த மேற்பரப்பைத் தடவிப் பார்த்தான்.

“ நம் பகுதி கற்களில் அழுந்த எழுத முடிவதில்லை என்பதால் அமணச் சாமி மலையில் இருந்து இந்தக் கல்லைத் தூக்கி வந்தோம்.”

திடமாகவும், உயர்ந்தும் நின்ற பாறையின் அருகிலிருந்து கோதையும், அந்துவனும் பேசிய படியே நகர்ந்தார்கள். அவர்களோடு மாடுகளும் மெதுவாக நகர்ந்தன. காற்றின் ஓசையில் அவர்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது.

அந்தக் கல் இப்போது படுக்கை வசமாக வைக்கப்பட்டிருந்தது. பல நூறு ஆண்டுகளின் காற்றும், மழையும் மேற்பரப்பில் நிற மாற்றத்தை உருவாக்கியிருந்தன. மண்ணில் புதைந்து போயிருந்த அந்தக் கல்லினை கல்மேட்டில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். அந்த சிற்பக்கூடம் முழுவதும் சிறிதும், பெரிதுமாக கற்கள் பரவலாகக் கிடந்தன. கூடத்தின் உட்பகுதியிலிருந்து, கற்களை உளி கொண்டு கொத்தும் சத்தம் கேட்டபடி இருந்தது.

ஆழத்தை மறைத்தபடி பரப்பெங்கும் நீர் மூடியிருந்தது நதி. மழைக் காலத்தில் மண்ணின் நிறத்தோடு புதுப்புனலோடு வேகமாய் ஓடும் நதி, மார்கழியில் முதிர்ந்த மனிதனின் நிதானத்தோடு நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

“ சீக்கிரம் ஆகட்டும். . தளபதி வருவதற்குள் தயாராக வேண்டும்” கல்லின் மேற்புரத்தை உளியால் செதுக்கி, சமமாக ஆக்கிக் கொண்டிருந்த மாணவனிடம் கல்கொத்தர் சத்தமாகச் சொன்னார்.

கூடத்தின் உட்புறம் சிதறி விழுந்திருந்த கற்துகள்களை பெருக்கி, ஓரத்தில் தள்ளிக் கொண்டிருந்தார் கொத்தரின் மனைவி. அவ்வப்போது வாயிலில் நிற்கும் கணவரை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே, மூக்கிற்கு வந்த தூசியை சேலைத் தலைப்பை வீசி விரட்டினார்.

வட்டம் வட்டமான தமிழ் எழுத்துகள் கல்லின் மேல் புதிதாகச் செதுக்கப்பட்டிருந்தன. எழுத்துகளைச் சுற்றியிருந்த கருமையை மாணவன் சரி செய்து கொண்டிருந்தான். கல்லில் இருந்த கறுப்பு நிறம் குறையக் குறைய ஆழமாகச் செதுக்கப்பட்ட எழுத்துகள் இன்னும் நன்றாகத் தெரிந்தன.

“கல்லை சுத்தம் செய்வது முதல்பாடம். இதில் தேர்ந்தால்தான் உன் சகோதரன் மாதிரி எழுத்துகளை வடிக்க முடியும். ஒரே விதமான ஆழத்தில், ஒரே அளவில் . . . அருமையாக செதுக்கி இருக்கிறான் பார். . . இன்னும் ஒன்றிரண்டு கல்வெட்டுகளை இதே போல வடித்து விட்டான் என்றால் அவனை அமணமலைக்கு திருஉருவம் செதுக்கவே அனுப்பலாம். . பிடித்துச் செய்தால் படித்து விடலாம். . “

குதிரையின் காலடி ஓசை கேட்டு பதட்டமாய் திரும்பிப் பார்த்த கொத்தர், குதிரையில் இருந்தவனைப் பார்த்ததும் புன்னகைத்தார். “நல்லவேளை. . இன்னும் தளபதி வரவில்லை. . “

குதிரையில் வந்த காவல் படை வீரன் கூடத்தின் முன்புறமாக இறங்கினான். “கொத்தரே. . நலம் தானா. .? பணிகள் எப்படி நடக்கின்றன. . ?” என்று கேட்ட படியே கல்லின் அருகில் வந்தான்.

”பணிகளுக்கு ஒன்றும் குறையில்லை சகோதரா . . . உங்கள் மன்னர் போரிட்டு வெற்றி பெற, வெற்றி பெற புதிய பணிகள் வந்த வண்ணம் உள்ளன. “

செதுக்கப்பட்டிருந்த எழுத்துகளைப் பார்த்தபடியே கொத்தரைப் பார்த்துக் கேட்டான் வீரன் “ இது என்ன கல்வெட்டு. . ?”

“இது கல்லக நாட்டு அரசனை ஆற்றுப் போரில் வெற்றி பெற்றதை பறைசாற்றும் கல்வெட்டு. . “

”தோற்று விடுவோம் என்று தெரிந்தும் எப்படித்தான் கல்லக நாட்டு மன்னர் போரிட முனைந்தாரோ. . ?”

“இது காலம் காலமாக நடக்கும் யுத்தம். . .மண்மேடு ஆற்றின் உரிமைப் போர். . மற்ற போர்களின் வெற்றிகளைப் பற்றி மக்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது. ஆனால், ஆற்று நீர் உரிமைக்கான இந்தப் போரின் வெற்றிச் செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது.” தோளில் இருந்த துண்டினை எடுத்து, முகத்தினை துடைத்தவாறு சொன்னார் கல்கொத்தர்,

“ ஆமாம் கொத்தரே அது உண்மைதான். . நீர் உரிமையை விட்டுக் கொடுப்பதும், நாட்டை விற்று விடுவதும் ஒன்றுதான். நீரில்லாத வெற்று நிலத்தை வைத்து நாம் என்ன செய்வது?”

“ஆமாம் . . .ஆமாம். . காடு மேடாவதும், மேடு நாடாவதும், தலைவன் கோனாவதும் நீரினால் தானே. . ? எந்தக் காலத்திலும் யாரும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்”

ஆற்று நீருக்கான உரிமைப் போரில் வெற்றி பெற்ற மன்னனின் பட்டங்களையும், செய்தியையும் வட்டெழுத்தில் வாங்கிக் கொண்டு கல் நின்றது.

அந்தக் கல் இப்போது சரிந்திருந்தது. அதன் தலைப்பகுதி மட்டும் மண்ணில் இருந்து வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது.

கல்லின் மேல்பகுதியின் அமர்ந்து கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றியிருந்தான் ரமேஷ். தலை வாரப்படாமால் பரட்டையாக இருந்தது. ஒரு கையில் பிரஷை வைத்து பல் துலக்கிக் கொண்டிருந்தான். இன்னொரு கை தரையில் கிடைத்த சிறு கற்களை எடுத்து, தூர எறிந்தவாறு இருந்தது.

பல் துலக்கிக் கொண்டே தூரத்தில் தெரியும் நான்கு வழிச் சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்குச் செல்லும் வேலை இல்லை. இன்னும் சற்று நேரத்தில் நண்பர்கள் வந்து விடுவார்கள். எல்லாரும் சேர்ந்து ஆற்றுக்குப் போவதாய்த் திட்டம்.

முன்பு போல பள்ளி நாட்களில் இப்போது ஆற்றுக்குப் போக முடிவதில்லை என்ற வருத்தம் ரமேஷுக்கும், அவன் நண்பர்களுக்கும் உண்டு. விடுமுறை நாட்களில் போகலாம் என்றால் பெரும்பாலான நேரங்களில் ஆற்றில் தண்ணீர் இருப்பதில்லை. பெரும் புதைகுழிகளாய் மணற் பள்ளங்களால் நிரம்பிய ஆற்றைத்தான் பார்க்க முடியும். அகண்ட நதியின் ஒரு ஓரத்தில் சிற்றோடையாய் போகும் தண்ணீர் நீந்திக்குளிப்பதற்கு உதவுவதில்லை. முன்பு போல இப்போதெல்லாம் ஊரில் இருந்து யாரும் ஆற்றுக்கு குளிக்கப் போவதில்லை. அங்கு போவதே துணி துவைப்பதற்கும், ஈமக் காரியங்களுக்கும் மட்டும்தான் என்று ஆகிப்போனது. ரமேஷ் பள்ளியில் சேர்ந்த புதிதில் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடிய போது சிறுவர்களும், சிறுமிகளும் கரைத் தண்ணீரில் குதியாட்டம் போடுவார்கள். வயதுக்கு வந்த பெண்கள் குளிக்கவும், தோழிகளோடு விளையாடவும் வருவார்கள். இப்போது ஆற்றங்கரையில் எப்போதாவது துணி துவைக்கும் பெண்களைத் தவிர மற்ற பெண்களையோ, சிறுமிகளையோ பார்க்க முடிவதில்லை.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒருத்தனையும் காணவில்லை என்று முனகிக் கொண்டே ஆர்வமில்லாமல் பல் துலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

புழுதியை வாரி இறைத்தபடி தார் சாலையில் இருந்து மண் சாலைக்கு ஒரு லாரி திரும்பியது. ரமேஷ் கூர்ந்து பார்த்தான். லாரி தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ரமேஷுக்கு தோன்றியது.

அருகில் வர வர லாரியின் ஓட்டம் குறைந்து, ரமேஷின் அருகில் நின்று விட்டது. கல்லில் அமர்ந்தபடியே வளைந்து செல்லும் பாதையில் குழப்பத்தோடு நிற்கும் லாரியை பார்த்துக் கொண்டேயிருந்தான் ரமேஷ். லாரி டிரைவர் கதவை லேசாகத் திறந்த படியே எட்டிப் பார்த்தார்.

“என்னண்ணே. . மணல் அள்ள வந்துருக்கீங்களா. . ?அதுக்கு அந்தப் பக்கம்ல போணும் ” ரமேஷ் சத்தமாகக் கேட்டான்.

“இல்ல தம்பி. . . இந்தப் பக்கம் கூல்டிரிங்ஸ் கம்பெனிக்கு வந்தேன். . எங்கிட்டுப் போகணும். . ?” டிரைவரின் கனத்த குரலுக்கு கல்லில் இருந்து இறங்கி வலது பக்கம் கைகாட்டினான் ரமேஷ்.

“ கோலா கம்பெனியா. . ? இங்கிட்டுப் போற ரோடுல போனா. . மண்மங்கலம்ணு போட்டிருப்பாங்கெ. . கொஞ்ச தூரந்தேன் . . “

மீதமிருந்த ஆற்று நீரை உறிஞ்சி, வண்ணமேற்றி பாட்டில்களில் அடைத்து கொண்டிருந்த குளிர்பான நிறுவனத்தை நோக்கிப் பாய்ந்தது லாரி.

லாரி கிளப்பிய புழுதி கல்லில் பொறிக்கப்பட்டிருந்த ஈராயிரமாண்டு எழுத்துகளின் மீது இன்னும் அடர்த்தியாய் அப்பிக் கொண்டது.

கறை நீக்கும் நீருக்காக காலம் கடந்து நின்று கொண்டிருக்கிறது கல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *