கல்யாண மாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 6,903 
 
 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வதுண்டு. கணவனை போற்றி பேசுகிற போதும், திட்டி தீர்க்கின்ற போதும் இந்த முதுமொழி அவ்வப்போது புது மொழியாக பேச்சு வழக்கில் இருந்து வருகிறது.

கணவனின் நிலை (?) குறித்து இப்படி சொல்லி நேர்மறையாக சந்தோஷம் கொள்வதும், எதிர்மறையாக சமாதானம் அடைவதும் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த ஒரு விஷயம்.

அதுவே ஒரு மனைவிக்கு, ‘கணவன் வாய்த்ததெல்லாம் இறைவியின் வரம்’, என்று யாரும் சொல்வதில்லை. ‘பிடித்து வைத்தால் பிள்ளையார் வழித்தெறிந்தால் சாணி’ என்பது போல, “பிடித்து இருக்கிறது” என்ற ஒரு வார்த்தையில் காதலும், கல்யாணமும் முடிவாகி காமத்தில் அரங்கேறுகிறது.

இல்லறம் நல்லறமாக இருந்தால் ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற பல்லவியில் சாதகம் பண்ணுவதும், அதுவே துறவறம் ஏற்கும் நிலையில் இருந்தால் ‘அவள் வாங்கி வந்த வரம்’ அப்படி என்று பாதகம் பேசி முகாரியில் முடிப்பதுமான பொல்லாங்கு வார்த்தைகள் ‘வெங்கல கடையில் யானை புகுந்த மாதிரி’ இருக்கும்.

அந்த சலசலப்பு, ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான்’, என்ற பொது மறைக்குள் அடங்கி ஒடுங்கி விடுகிறது. வாழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்கள் என எல்லோரும் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கோயிலில் வைத்து பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்து கொள்வதற்கான ஏற்பாடு அது. ‘தாமதம் தழைத்தால் தடைக்கல்லாகும்’, என்ற பதட்டத்தில் வீட்டை விட்டு அரக்க பறக்க கிளம்பி, ஆட்டோ பிடித்து அந்த கோயிலுக்கு வந்து சேர்வதற்குள் பெரும் பாடாகி விட்டது தேவராஜனுக்கு. ‘நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்’, என்ற சித்தாந்தம் அறிந்தவர். பெண்ணுக்கு அப்பாவாயிற்றே.,

அவர், வேகமான இதய துடிப்புடன் ஓட்டமும் நடையுமாக கோயிலுக்குள் சென்று ஒரு முறை சுற்றி வந்தார். அப்பாடா, இன்னும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டார். குற்றம் குறை ஏதுமில்லாமல் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்கிற பரிதவிப்பு., பெண்ணைப் பெற்றவராயிற்றே “உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை” இருக்கத்தானே செய்யும்.

பெண், பாமதி பட்டு புடவையில் அழகோவியமாக இருந்தாள். வாழையின் வழுவழுப்பான கால்கள், புட்டத்தின் கவர்ச்சியான தோற்றம், வளைந்து நெளிந்து மெலிந்த நூலிடை, மார்பு கச்சைக்குள் ததும்பும் எடுப்பான தனங்கள், துடிப்பான உதடு, புடைத்த நீள மூக்கு, வாளை மீன் கண்கள் இப்படி சாமுத்ரிகா லட்சனங்களையும், அங்கங்களையும் கருத்திலிட்டு கோயில் தூணில் வடித்தெடுத்த சிற்பி, பாமதியை பார்த்திருந்தால் இன்னும் கலை நயத்துடன் சிலை வடித்திருப்பான். ‘கல்லில் சிலை வடிப்பதும் நெஞ்சில் ஓவியம் வரைவதும்’ கலைஞனின் கற்பனை திறம் தானே.

பெண் வீட்டிற்கு வந்து காபி, பலகாரம் எல்லாம் சாப்பிட்டு, பெண் பார்த்து விட்டு சரி என்று சொல்லுகிற போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவே “சாரி” என்ற சொல்லை வெளிப்படுத்துகிற போது ஆணை விட பெண்ணுக்கு தான் சங்கடங்கள் உருவாகின்றன. அது பழக்கத்திற்கு ஒத்து வராதாவர்களாய் இருக்கும் முட்டாள், மடையன், சுயநலக்காரன், சோம்பேறிகள் என்ற நாலு பேரால் வருவது தான்.

இந்த நாலு பேரின் நரம்பில்லா நாக்குக்கு பயந்து கோயில் என்ற புனித இடத்தில் வைத்து பெண் பார்க்க செய்து, செய்ய வேண்டிய சீர் செனத்திகள் பற்றி (பேரம்)பேசி, ஒரு வழியாக திருப்தி (?) அடைந்த நிலையில், மற்றொரு நாள் ஊருக்காக, உறவுக்காக பெண் பார்க்கும் படலம் கோலாகலமாக வீட்டில் நடக்கும் பழக்கம் சமீப காலமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. தேவராஜனும் அதைப் பற்றி கொண்டார்.

பாமதியை பெண் பார்க்க தாய், தந்தை, அண்ணன், அண்ணி, தங்கச்சி, தங்கச்சி வீட்டுக்காரர், அண்ணன் மாமனார், உயிர் தோழன் பாநெஞ்சன் ஆகியோருடன், காரில் வந்து இறங்கினான் தர்மபுத்திரன்.

எதிர்ப் பார்ப்புடன் வாசலில் காத்திருந்த தேவராஜன், வாங்க முதலாளி. . என்று சொல்லலாமா.,? வாங்க பெரியவரே. . என்று கூப்பிடலாமா.,? இல்ல வாங்க மாப்பிள்ளை . . என்று அழைக்கலாமா.,? என்ற குழப்பத்தில் வாங்க . . வாங்க . . என்று அனைவரையும் மகிழ்ச்சி பொங்க பொதுவாக கூப்பிட்டு உள்ளை அழைத்துச் சென்றார்.

தர்மபுத்திரன் ஐந்து புள்ளி ஆறு அங்குல உயரத்தில் சிவப்பாக இருந்தான். காது வரை இறங்கிய கிருதா, சற்று சிடுமூஞ்சியுடன் வலிய புன்னகைக்கும் முகம், கோயிலுக்குள் பாமதியை தேடித் திரியும் கண்கள். தொய்வில்லா நடை, மிடுக்கான தோற்றம், இவைகள் ஒருங்கிணைந்த மாப்பிள்ளையின் தோற்றம் பெண் வீட்டார்களுக்கு பிடித்து விட்டது.

பாமதி முதலில் பாநெஞ்சனைத்தான் பார்த்தாள். தர்மபுத்திரன், பாநெஞ்சன் இருவரும் கல்லூரி காலம் தொட்டு இணை பிரியா நண்பர்கள். எம்.இ. மெக்கானிக்கல் கோர்ஸ் முடித்து வேலைக்காக அலைந்து திரிந்த காலத்தில், விலைக்கு வந்த கம்பெனி ஒன்றை இருவரும் சேர்ந்து வாங்கி திறம்பட உழைத்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கினார்கள். பழைய கம்பெனியில் வேலை பார்த்து வந்த வேலையாட்கள், தொழிலாளிகள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து நீடிக்க, தேவராஜனும் செக்யூரிட்டியாக தொடர்ந்தார்.

அறுபது நாற்பது என்ற விகிதாசாரத்தில் முதலீடு செய்தமையால், அலுவலக, தொழிலக ஊழியர்கள், தர்மபுத்திரனை பெரியவர் என்றும், பாநெஞ்சனை சின்னவர் என்றும் சொல்லி வழங்கப் படுத்தி கொண்டனர்.

கேரளத்தில் தொடங்கி தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என்று விரிந்து பரவிய பைனான்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளை ஒன்றில் பாமதி வேலை பார்க்கிறாள்.

கடந்த ஒரு நாள், தகவல் பரிமாற்றம் குறித்து தேடி வந்த பாமதியிடம், தேவராஜன் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் பெரியவர் காரின் ஹாரன் சத்தம் ஒலித்தது. ஒரு நிமிஷ தாமதத்தில் கேட்டை திறந்து வணக்கம் சொன்னார்.

எரிச்சல் அடைந்த தர்மபுத்திரன் கோப பார்வை வீசி கடுஞ்சொல் பேச இருந்த நேரத்தில், பாமதியை பார்த்தான். ஏனோ வார்த்தைகள் வரவில்லை. அலுவலகம் சென்று விட்டான்.

சரி, பார்த்து பத்திரமா போம்மா என்று பாமதிக்கு விடை கொடுத்த நேரத்தில் இண்டர்காம் ஒலித்தது. காதில் பொருத்தினார்.

என்ன முதலாளியா ஆயிட்டியா, நீ மனசு வைச்சு கேட் திறக்கிற போது தான் நான் உள்ளே வரனுமா? என்று கேட்டு, எவ்வளவு நேரமா வாசலில் காத்துக் கிடப்பது? கொஞ்சமாவது டிசிப்லின் வேண்டாம், கண்டவங்களோடு கதை பேசவா உன்னை உட்கார வச்சிருக்கேன் . . அறிவே இருக்காதா உனக்கு என்று கடுப்புடன் கத்தினான்.

தேவராஜன் எதிர்ப்பார்த்தது தான், என்ன ஒரு மாற்றம் என்றால் நேரிடையாக திட்டித் தீர்க்காமல் கேபினுக்கு போய் திட்டுகிறார்.

மன்னிச்சிடுங்க முதலாளி, என் பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்ததால் கொஞ்சம் கவனக்குறைவா இருந்திட்டேன். இனிமேல் இப்படி நடக்காம எச்சரிக்கையா இருக்கேன் என்றார்.

இரண்டு நாட்கள் கழிந்தன.

வெளியில் கேட்டைத் திறந்து உள்ளே வந்த முதலாளிக்கு வணக்கம் வைத்திருந்தாலும், கேபினுக்குள் வந்ததன் அடையாளமாக மீண்டும் ஒரு வணக்கத்தை சொன்னார் தேவராஜன். மனதில் குழப்பத்துடனான கேள்வி கனைகள். ஏன் கூப்பிட்டார் எதற்காக கூப்பிட்டார் தெரிந்த வரையில் தப்பு ஒன்னும் செய்யலையே என்னவாக இருக்கும்.,?

சிஸ்டத்தையே பார்த்து கொண்டிருந்தான் தர்மபுத்திரன்.

நிமிடத்துளிகள் சிறிது கரைந்தன. பாநெஞ்சன் அந்த கேபினுக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் வணக்கம் சின்னவரே என்றார் தேவராஜன்.

இரண்டு பேரையும் பார்த்த பாநெஞ்சன் என்ன விஷயமாக இவரை கூப்பிட்டிருக்கே . . எனி திங்க் ராங்க்.,? என்று கேட்டான்.

நத்திங்க் ராங்க் . . ஒரு விஷயம் பேசணும் அதான் என்றவன் தேவராஜனை பார்த்தான் பின்பு பாநெஞ்சனை பார்த்தான்.

அவனின் தயக்கத்தை அறிந்த நண்பன் பாநெஞ்சன், ம். . என்று கையை அசைத்து என்ன என்று பார்வையால் கேட்டான்.

தயக்கம் தடுமாற்றத்தில் மூழ்கி தத்தளித்து எழுந்தது. கம்பீரம் குறைந்த பெரியவரை பார்த்த தேவராஜன், தயக்கத்துடன் மெதுவாக முதலாளி . . என்று குரல் கொடுத்தார்.

தடுமாற்றம் நீங்கிய தைரியத்தில் அ . . ஆ . . உங்களுக்கு எத்தனை பசங்க . . ? எத்தனை பொண்ணுங்க .,? இருக்காங்க என்று கேட்டான்.

இதை ஏன் இவர் கேட்கிறார் என்ற யோசனையின் ஊடே மூணு பொண்ணுங்க மட்டும் தான் என்றார்.

இரண்டு நாள் முன்னாடி வந்துச்சே . . அதான் மூத்தப்பொண்ணா . . ?

இல்ல முதலாளி, அது கடைசி பொண்ணு, மத்த ரெண்டத்தையும் கட்டிக் கொடுத்துட்டேன்ங்க

ஏன் மூணாவது பொண்ணுக்கு கல்யாணம் முடிக்கலையா . .?

முடிக்கனும். பார்த்துகிட்டிருக்கேன், சரியா அமையலை.

தர்மபுத்திரன் சிறிது நேரம் தாமதித்தான். பிறகு, சரி நீங்க போங்க. சின்னவர் உங்க கிட்ட பேசுவார் என்றான்.

தேவராஜன் இருவருக்கும் மறுபடியும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினார்.

இச்செய்தியை வீட்டில் மனைவியிடமும் மகளிடமும் சொன்ன போது, இது என்ன கதையா இருக்கு, அவர் ஏன் நம்ம குடும்பத்தைப் பற்றி விசாரிக்கனும் என்று கேட்டாள் மனைவி அழகம்மாள்.

ஒரு வேளை கம்பெனி மூலமா ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க போறாரோ என்னவோ.,? எத்தனை கல்யாணம் அப்பா நூற்றியெட்டா., ஆயிரத்தெட்டா.,?

சும்மா நையாண்டி பண்ணாதே. எப்பவுமே உனக்கு விளையாட்டு தான்.

சரி சொல்லுங்கப்பா., என்ன சொன்னார் உங்க சின்னவர்.,? .,!

உன்னை பெரியவருக்கு பெண் கேட்டார்.

இதைக் கேட்டதும் அம்மா மகள் இரண்டு பேருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. தன் கல்யாணம் விஷயம் என்பதால் பாமதி மௌனமாக இருக்க, என்னங்க சொல்றீங்க.,? என்று கேட்டாள் அழகம்மாள்.

சின்னவர், நம்ம பாமதியை கேட்டதும் நானும் இப்படி தான் அதிர்ச்சியாயிட்டேன். ஒண்ணும் அவசியமில்லை வீட்டுக்கு போய் எல்லார் கிட்டேயும் கலந்து பேசி பிற்பாடு உங்க முடிவை சொல்லுங்கள் என்கிறார்.

அவங்க தகுதி எங்க.,? நம்ம தகுதி எங்க.,? எப்படிங்க ஒத்து வரும்.,?

அதான் எனக்கும் யோசனையா இருக்கு, ஒரு வழியில நினைக்கிற போது எனக்கு சந்தோஷமாக இருக்கு, பெரிய இடமாச்சே இது ஒத்து வருமான்னும் கேள்வியா வேற இருக்கு.

நொடிஞ்சு போன கம்பெனியை வாங்கி, கஷ்டப் பட்டு அதை உருவாக்கி இருக்காரு, நல்ல திறமைசாலின்னு நீங்க அடிக்கடி சொல்லி பெருமை பட்டுக்குவீங்க, அப்பேர்ப்பட்ட பையனுக்கு நாம பொண்ண கொடுக்கிறது தப்பு இல்லைன்னு தான் எனக்கு தோணுது.

அதில்ல, அவரு கம்பெனிக்கு கிரீடமா இருக்காரு, நான் அவரு காலுக்கு செருப்பா கிடக்கிக்கிறேன். கார் கதவை திறந்து விட்டு சல்யூட் அடிக்கிற ஒரு சாதாரண செக்யூரிட்டி, நான் எப்படி. . என் பொண்ணை அவருக்கு கட்டி வைக்க முடியும்.,?

நம்ம பொண்ணு அதிர்ஷ்டக்கார பொண்ணுங்க. ஆண்டவனா பார்த்து ஒரு வழியை காட்டுறார், சரின்னு சொல்லிடுங்க என்றாள்.

உனக்கு என்ன புத்தி கெட்டு போச்சா.,? நடக்கிறதை பேசு,

ஏன் என்ன தப்பு, அந்தஸ்தை தவிர எந்த விதத்தில் எம் பொண்ணு குறைஞ்சு போயிட்டாள், படிப்பில்லையா, அழகில்லையா, கௌரவமா கல்யாணம் பண்ணி வைக்க நமக்கு ஓரளவுக்கு வசதி இருக்கு, வேற என்ன வேண்டும்.?

அந்தஸ்து தான் முட்டுக்கட்டையா இருக்கு.

அதை பற்றி உங்க பெரியவரும் சிந்திச்சு பார்த்து இருப்பாரு. சரின்னு பட்டதாலே தான் பெண் கேட்க சின்னவரிடம் சொல்லி இருப்பாரு. நீங்களா ஏதாவது ஒன்றை நினைத்து கொண்டு வந்த வரனை விட்டுடாதீங்க, அழகம்மாள் இப்படி கறாராக சொல்லவே. .

பாமதி நீ என்னம்மா சொல்றே, உனக்கு இதுல விருப்பம் இருக்கா.,? என்று கேட்டார்.

எனக்கு ஒண்ணுமே புரியலை, நான் என் கல்யாணத்தை பத்தி யோசிக்கவே இல்லை, திடுதிப்பென்னு இப்படி ஒரு செய்தி சொல்லி சம்மதமான்னு கேட்டால் நான் என்ன சொல்வது என்றாள்.

இப்போதெல்லாம், ‘கையில காசு, வாயில தோசைன்னு’ கல்யாணம விஷயத்தை ஒரு ஆணிடமோ அல்லது ஒரு பெண்ணிடமோ கேட்க முடியறதில்லை. அந்தஸ்து, தகுதி, தராதரம், நல்லொழுக்கம் இருந்தும் வரப் போகும் துணையை பார்த்து பிடித்தால் மட்டுமே சம்மதம் வரும். பாமதியும், மாப்பிள்ளையை பார்ப்போம், பிடித்திருந்தால் அதைப் பற்றி பிறகு பேசலாம் என்றாள்.

இப்போது, பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்து கொள்ள உண்டான தருணம் வந்துவிட்டது.

தர்மபுத்திரன், பாநெஞ்சன் பக்கம் திரும்பி மெதுவாக பெண்ணை பற்றி அபிப்பிராயம் கேட்டான்.

உன் செலக்ஷன் சூப்பர். பொண்ண எனக்கு ரொம்பவும் பிடிச்சு இருக்கு. நல்ல குணமுள்ள வளாக தெரிகிறாள் அதிர்ஷ்டசாலிடா நீ . . என்றான்.

என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் இருந்தாலும், தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டாள் பாமதி.

அப்பா சொல்லி இருக்கிறார், சின்னவர் சின்னவர் என்றாலும் பேச்சிலும், பழக்கத்திலும், பெரிய மனுஷனாக நடந்து கொள்வார். நல்ல திறமைசாலி, கம்பெனி விவகாரத்தில் எந்த ஒரு விஷயம் ஆனாலும் இவர் அப்ரூவல் பண்ணிணாத்தான் பெரியவர் சாங்ஷன் பண்ணுவார் . . என்று. ஒரு வேளை சின்னவர் சொன்னால் தான் பெரியவர் தாலி கட்டுவாரோ. . நினைத்த பாமதி தமக்குள் சிரித்துக் கொண்டாள்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு, கோத்திரம் அறிந்து பொண்ண கொடு என்று சொல்வதுண்டு.. நான் பொண்ண கொடுக்கிற இடத்தில் இருந்தாலும் . . தேவராஜன் தம் சூழ்நிலையை சொல்ல ஆரம்பித்தார் அதற்குள். .

அதெல்லாம் அந்த காலம், பரபரப்பாய் போய் கிட்டு இருக்கிற இந்த காலத்துக்கு ஒத்து வராது. என் பையனுக்கு உங்க பொண்ண பிடிச்சிருக்கு அவனோட விருப்பம் தான் எங்களுக்கும் என்று குறுக்கிட்டார் தர்மபுத்திரனின் தந்தை சிகாமணி.

அண்ணி, சின்ன அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் முன் கூட்டியே பையனை பெத்து வச்சிருக்கேன் நீங்க வந்து பெண்ணை பெத்து கொடுக்க வேண்டியது தான் என்றாள் தர்மபுத்திரனின் தங்கை.

இதைக் கேட்ட பாமதி வெட்கத்துடன் மெல்லியதாக சிரித்தாள். அவள் பார்வை பாநெஞ்சன் மீது பதிந்திருந்தது. சின்னவர், பெரியவரை விட நிறம் கொஞ்சம் கம்மி தான். வசீகரிக்கும் புன்னகை, கள்ளமில்லா சிரிப்பு, குறு குறுக்கும் பார்வை, துடிப்பு மிக்க இளமை, கோட் சூட்டை விட பார்மல் டிரெஸ்ஸில் பளிச்சென இருந்தான்.

மாமா, அதான் இவ்வளவு தூரம் சொல்றாங்கல்ல., மேற்கொண்டு ஆக வேண்டியதை பற்றி பேசுங்கள் என்றார் தேவராஜனின் பெரிய மருமகன்.

தர்மபுத்திரன், நண்பனிடம் கிசு கிசுக்க, அவன், பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமின்னு மாப்பிள்ளை சொல்றார் என்றான்.

ஓ . . அதெற்கென்ன பேசட்டும். நான் பாமதியை அந்த பக்கம் அழைத்து வர்றேன் நீங்களும் அங்கே வாங்க என்றாள் பாமதியின் சின்ன அக்காள்.

அக்கா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், நீ சும்மா இரு என்றாள் பாமதி.

பரவாயில்லம்மா கூச்சப்படாதே . . நீ ஏதேனும் மாப்பிள்ளையை பற்றி தெரிந்து கொள்ள வேணுமானாலும் கேட்டு தெரிஞ்சுக்கலாம் என்றார் தர்மபுத்திரனின் அண்ணன் மாமனார்.

மறுத்து பேசறேன் என்று தயவு செய்து தப்பா நினைக்காதீர்கள் என்று ஆரம்பித்த பாமதி, கொஞ்சம் நேரம் பேச வில்லை என்பதற்காக ஒன்றும் குறைந்து விடாது, எனக்கு காதல் அது இதுன்னு எந்த கமிட்மென்டும் கிடையாது. அவருக்கும் அப்படி ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் அவர் இங்கே வந்திருக்க மாட்டார். மற்றபடி பேச வேற எதுவும் இல்லை. அதனால் சொன்னேன் என்றாள்.

தெளிவான சிந்தனை நறுக்கு தெரித்தாற் போன்ற வார்த்தைகள் அவற்றை வெளிப்படுத்திய விதம் அனைவருக்கும் பிடித்தது. தர்மபுத்திரனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

பொண்ணோட விருப்பமும் தெரிந்து விட்டது, இதற்கு அப்புறம் வேற என்ன பேச போறீங்க சின்ன மாப்பிள்ளை என்றார்.

மாப்பிள்ளை இருக்கிற வசதிக்கும் அந்தஸ்த்துக்கும் ஈடா என்னால் சீர் செய்ய முடியாது. அதுக்காக வெறும் கையுடன் அனுப்பி வைக்க மாட்டேன். ஏதோ . . தேவராஜனை பேசவிடாமல் குறுக்கிட்டார் சிகாமணி. .

அதெல்லாம் உங்களை யார் கேட்டது. அதைப் பற்றின பேச்சுக்கு இடமில்லை. என்னைக்கு நிச்சயம் பண்ணிக்கலாம் என்று சொல்லுங்கள் இப்பவே நாள் குறிச்சுடலாம் என்றார் சிகாமணி.

அப்பா, அவசரப் பட வேண்டாம். நாள் நட்சத்திரம் எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்றாள் பாமதி.

இருவீட்டார்களும் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். தர்மபுத்திரன் நெற்றியை சுருக்கி கூர்ந்து பார்த்தான்.

ஏம்மா, அப்படி சொல்றே, அவர்களை சேர்ந்தவர்கள், நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இருக்கும் போதே நாள் குறிச்சுடலாம். வந்திருக்கும் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும், அலைச்சல் இருக்காது

பாமதியின் கண்ணுக்குள் பாநெஞ்சன் வளைய வந்தான். நான் கொஞ்சம் யோசிக்கனும். அதுக்கு எனக்கு டைம் வேணும் என்றாள்.

சின்ன பொண்ணு, கல்யாணம் என்றால் கொஞ்சம் பயமும் தொற்றிக் கொள்ளும். யோசிக்க டைம் வேணுமின்னு கேட்கிறதிலும் ஒண்ணும் தப்பில்லை. யோசிச்சு நல்ல பதிலா சொல்லட்டும். நாம போகலாம் என்று சொல்லி மாப்பிள்ளை வீட்டார்கள் விடை பெற்றனர்.

ஒரு வாரம் கழிந்தன.

உங்க பொண்ணு என்ன முடிவு சொல்லுச்சு.,? அதைப் பற்றி ஏதாவது கேட்டீங்களா.,? என்று சின்னவர் கேட்கிராரம்மா நான் என்ன பதில் சொல்றது என்று கேட்டார் தேவராஜன்.

அர்த்த புஷ்டியுடன், உங்க சின்னவரை வந்து பேச சொல்லுங்கள். நான் நேரடியாக சொல்லி விடுகிறேன் என்றாள் பாமதி.

என்ன சொல்ல போறே, அதை என் கிட்ட சொல்லு, நானே சொல்லிடுறேன் . .

பாமதி தயங்கினாள். .

சொல்லுடீ . . அப்பா கேட்கிறார்ல்ல என்று துரிதப் படுத்தினாள் அழகம்மாள்.

சரின்னு என் மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன், அது தப்புண்ணா விட்டு விடுங்கள். நான் கட்டாயப் படுத்த மாட்டேன்.

சொன்னால் தானே தெரியும் நல்லதா கெட்டதா என்று. தயங்காமல் சொல்லு என்று கேட்டார் தந்தை.

உங்க சின்னவரை எனக்கு பிடித்து இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் என்றால் அவரிடம் பேசுங்கள் என்றாள்.

இதைக் கேட்டதும் பெற்றவர்கள் இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

நீ என்னடி சொல்றே.,? .,!

என் விருப்பத்தை சொல்றேன்.

இது உனக்கே ஞாயமா படுதா.,? பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை விட்டுட்டு தோஷனா இருக்கிவரை பிடித்து இருக்கிறது என்கிறாய்.,? ஏண்டீ . . உனக்கு கிறுக்கு ஏதாவது பிடிச்சிருக்கா.,?

நான் நல்லா தெளிவாத் தான் பேசறேன். உங்களுக்கு புரியலைன்னா நான் என்ன பண்றது.

அதில்லம்மா. அப்பா, அம்மா மாதிரியே நீங்களும் ஏதாவது எக்கு தப்பா பேசிடாதீங்க., பெரியவரை விட சின்னவர் பேர்ல உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அதை நீங்களே பலமுறை சொல்லி இருக்கீங்க.

இருந்தாலும் நான் பெரியவரை புறம் பேசினதில்லையே, குத்தம், குறை இல்லாத அவரை ஏன் பிடிக்க வில்லை என்கிறாய்.

அவரை நான் பிடிக்கவில்லை என்று சொல்லலை. அவர் எனக்கு வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன்.

இப்படி சொன்னால் எப்படி.,? ‘நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும், கெட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும்’ என்று சொல்லுவார்கள். பெரிய இடத்தை பகைச்சுக்க வேணாமின்னு பார்க்கிறேன்.

பெரியவரு உன்னை பார்த்ததும் பிடித்து போய் அந்தஸ்து ஏதும் பார்க்காமல் உன்னை கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்டு இருக்கிறார் அதை உதாசீனப் படுத்தறதா.,? வீணா அடம் பிடித்து உன் வாழ்க்கையை நீயே நாசம் பண்ணிக்காதே என்றாள் அழகம்மாள்.

ஆமாம்மா. . பெரியவர் தான் உன் மீது ஆசைப் பட்டாரே தவிர சின்னவர் ஆசை படலை. நிலைமையை புரிந்து நடந்து கொள். அப்பறம் வேலை பார்க்கிற இடத்தில் எனக்கு மதிப்பிருக்காது.

அதுக்கு தான் சொன்னேன், நான் சின்னவரிடம் பேசிக்கிறேன் என்று. இதை அவர் ஏற்கவில்லை என்றால் விட்டு விடலாம்.

இது உன் கல்யாண விஷயம். ‘அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன கழுதை மேய்ந்தால் என்ன’ என்று சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

அப்பா, உங்களின் தர்ம சங்கடம் எனக்கு புரியுது. நீங்க உங்க சின்னவரை இங்கே வரச் சொல்லுங்கள். பொதுவா கல்யாணம் விஷயம் குறித்து பேசனுமின்னு மட்டும் சொல்லுங்கள். மற்றபடி நான் பேசிக்கிறேன்.

ராட்சசி முண்ட, அதுங்க ரெண்டுகிட்டேயும் இவ்வளவு போராட்டம் இருந்ததில்லை இவ தான் அடங்கா பிடாரியா வந்து பொறந்திருக்கா அழகம்மாள் புலம்பினாள்.

இரண்டு நாள் கழித்து . .

அந்த பொண்ணு பாமதி, கல்யாண விஷயத்தில் ஏதோ முடிவு எடுத்திருக்கிறாற் போல, தேவராஜன் கூப்பிடுகிறார். போய் வரவா என்றான் பாநெஞ்சன்.

ஈஸ் இட், தேங்க் காட், அப்பாடா, இப்போது தான் எனக்கு நிம்மதி வந்துச்சு. எங்கே இது பற்றி பேச்சு வராமல் மேட்டர் ‘டிராப்’, ஆயிடுமோ என்று பயந்து கொண்டு இருந்தேன். போய் பேசிட்டு வா என்றான் தர்மபுத்திரன்.

வீடு தேடி வந்த சின்னவரை வரவேற்று உபசரித்தார் தேவராஜன். என்ன சொல்றாங்க உங்க பொண்ணு, கல்யாணத்துக்கு தேதி குறித்திடலாமா என்று கேட்டான் பாநெஞ்சன்.

கணவனும் மனைவியும் பதில் பேசாமல் பாமதியை பார்த்தார்கள்.

நான் நேரிடையாக விஷயத்துக்கு வர்றேன். என்னை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா.,? என்று கேட்டாள் பாமதி.

எனக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. அதனால் தானே நிச்சயம் செய்ய இருந்தது என்றான்.

நான் உங்க நண்பருக்காக பிடித்து இருக்கிறதா என்று கேட்க வில்லை உங்களுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா., ? என்று கேட்டேன்.

துணிச்சலாக, வெளிப்டையாக பேசக் கூடியவள் என்று அன்று நினைத்தான். அதற்காக இவ்வளவு பகிரங்கமாக பேசுவாள்.,? என்று அவன் நினைக்க வில்லை. பதில் சொல்ல திணறினான். இனம் புரியாத நெருடல் மனதுக்குள் ஊடுருவியது.

அவனின் எண்ணங்களை புரிந்து கொண்டவளாய், உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. இதை சபையில் சொல்லி பெரியவரையும், அவரது குடும்பத்தையும் அவமானப் படுத்தக் கூடாது என்பதற்காக தான் அன்றைக்கு, நாள் குறிக்க அவசரப்பட வேண்டாம் என்று சொன்னேன்.

இதுவும் ஒரு வகையில் அவர்களை அவமானப் படுத்துவது தான். அதற்கு நானும் ஒரு காரணமாயிட்டேன் என்று நினைக்கிற போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

பெரியவர், எங்கேயோ என்னை பார்த்து விட்டு பிடித்து இருக்கிறது என்று பெண் பார்க்க வந்தார். பெண் பார்க்கிறது எதற்காக.? பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தங்களது விருப்பத்தை சொல்றதுக்கு தானே. எனக்கு விருப்பம் இல்லாததை சபை நாகரீகம் கருதி அப்படி சொன்னேன். அதை நீங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு உங்க பொண்ணு என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்று கேட்டு, முற்றுப் புள்ளி வைத்த வாக்கியத்துக்கு கமா போட்டு காத்திருக்கிறீர்கள்.

. . .

உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது.

பாநெஞ்சன்.

பாநெஞ்சன், பாமதி பெயர் கூட பொருத்தமாக இருக்கில்ல.,? .,! பாசிட்டிவ் வா பேசனும் என்பதற்காக சொல்ல வரலை, பிராக்டிக்லா திங்க் பண்ணனும் என்பதற்காக சொல்கிறேன். உங்களுக்கு என்னை பிடித்து இருக்கிறது என்றால் மேற்கொண்டு பேசலாம்.

உங்க முடிவு ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.

பரவாயில்லை. நான் பெரியவரை புறக்கணிப்பதால், அவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்க போவதில்லை. உங்களுக்கு என்னை கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமில்லை என்பதற்காக நான் தனிமரமாக இருக்கப் போவதில்லை. கல்யாணம் காலத்தின் கட்டாயம். வரப் போகும் துணை இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயப் படுவது தப்பில்லை. ஆசைப் படக்கூடாது.

என்ன தேவராஜன், உங்க பொண்ணு இப்படி பேசுறாங்க, நீங்க கொஞ்சம் புரியற மாதிரி, அவங்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

அலோ, அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள். நான் பேசறது உங்களுக்கு புரியுது இல்ல.,? முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதற்காக நான் உங்களின் உடமை ஆயிடறதாக ஒரு போதும் நினைக்காதீர்கள். நீங்க உங்க பிசினஸ் பார்ட்டனருக்காக, உங்க நண்பருக்காக என்னை விட்டு கொடுக்க முடியாது. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இது தொழில் ரீதியாக மட்டுமல்ல நட்பு ரீதியாகவும் பாதிக்கும். பெரியவருக்கு துரோகம் செய்ய என் மனசாட்சி இடம் கொடுக்காது.

நான் பெரியவரின் உடமை இல்லை. நீங்கள் அதனைத் தட்டி பறித்து துரோகம் செய்வதற்கு, நண்பனுக்காக உயிரை கொடுப்பவன் தான் உயிர் தோழன். அதற்காக ஒருத்தரின் வயிற்றுப் பசிக்காக இன்னொருத்தர் சாப்பிட முடியாது. உங்கள் வாழ்க்கை வேறு அவரது வாழ்க்கை வேறு.

சரி நான் போய் இந்த விஷயத்தை பெரியவரிடம் சொல்லி விடுகிறேன் என்று கிளம்பினான்.

ஒரு நிமிஷம். எனக்கு எந்த பதிலையும் சொல்லாமல் கிளம்புறீங்க . .

நான் என்ன சொல்றது.,? .,! அவன் மனசில நீங்க இருக்கிறீங்க, உங்க மனசில நான் இருக்கிறேன். இரண்டு பேருமே என் மனசில இருக்கிறீங்க. இந்த நிலையில் என்ன முடிவு எடுக்கிறது. எப்படி எடுத்தாலும் பாதிப்பு எனக்கு தான்.

‘பணக்காரன் பின்னாலும் பத்து பேர் இருப்பானுங்க, பயித்தியக்காரன் பின்னாலும் பத்து பேர் இருப்பானுங்க’. அதனால மத்தவங்க என்ன நினைப்பாங்க என்று கவலைப் படாமல். உங்களுக்கு எது ஞாயமின்னு படுதோ அதைச் செய்யுங்கள்.

பாநெஞ்சன், தர்மபுத்திரனிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். தர்மபுத்திரன் யோசித்தான். ஏமாற்றம் துக்கமாக மாறி தொண்டையை அடைத்தது.

நீ என்ன நினைக்கிறே நண்பா . .? தர்மபுத்திரன் கேட்டான்.

அழகான ஒரு பெண்ணை பார்க்கிற போது இந்த பெண் மனைவியானாள் நன்றாக இருக்கும் நினைப்பேன். ஒரு தம்பதியை பார்க்கிற போது அவர்களின் அன்னியோன்யம் அறிந்து இப்படி ஒரு மனைவி அமையனும் என்று நினைப்பேன். பாமதியை பார்த்து நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை.

அவள் என் மனசில இருந்தமையால் எந்த எண்ணமும் உனக்குள் ஏற்படவில்லை. இப்போ அவள் இல்லை என்று ஆகிவிட்ட போது உன் உணர்வுகளுக்கு எந்த தடையும் இல்லை.

வாழ் நாள் முழுக்க எனக்கு குற்ற உணர்வு ஏற்படும். அந்த தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொன்று விடும். உனக்கு கிடைக்காதது எனக்கும் இல்லாமல் போகட்டும்.

நோ. .நோ. . சட்டென்று அப்படி முடிவு எடுத்திடாதே, உன் எண்ணங்களுக்கும் எதிர்ப்பார்ப்புக்களுக்கும் பொருத்தமானவள் பாமதி தான். உன்னை விரும்பும் அவளை நீ ஏற்றுக் கொள்வது தான் உனக்கும் சரி, அவளுக்கும் சரி வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இல்லை தர்மா, நாம் அவளைப் பற்றி பேச வேண்டாம்.

நீ பாமதியை பற்றி தப்பா புரிஞ்சிருக்க. அவள் கரெக்ட் தான் பேசி இருக்காள். எதேச்சையான வாழ்வியலுக்கு ஏற்ற எதார்த்தமான பேச்சு திறமை அவளுக்கு இருக்கு. அழகும் மதிநுட்பமும் கொண்ட மனைவி எல்லோருக்கும் அமையாது.

உன் ஆசை நிராசையாகிறதே . . .

இருக்கட்டும், கால் போக்கில் இந்த இழப்பு பெரியதாக தெரியாது. ஒருத்தி ஆசைப் பட்டதை நிறைவேற்றி தர அவளுடைய காதலனுக்கும் கணவனுக்கும் கடமை உண்டு. நான் ஆசைப் பட்டவள் உன்னை ஆசைப் படுகிறாள் என்றால் அவளை நீ ஏற்றுக்கொள். இதில் தயக்கமோ சங்கடமோ எதுவும் உனக்கு வேண்டாம். ‘இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தான் தேவன் அன்று’ என்பதில் அர்த்தமிருக்கிறது. உனக்கு பாமதியை முடித்து வைக்க இறைவன் திட்டமிட்டிருப்பானேயானால் எனக்கு ஒரு நிறைமதியையோ, வெண் மதியையோ எங்கேயாவது ஒரு இடத்தில் பிறக்க வைத்திருப்பான். எந்த விதத்திலும் நீ எனக்கு இடைஞ்சல் இல்லை, அப்படி நான் நினைக்கவும் மாட்டேன். ஆல் த பெஸ்ட்.

‘இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்’ என்ற கதையாக பெரியவர் பார்த்த பாமதியை சின்னவர் கட்டிக்கொண்டு போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *