கலைந்த மேகம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 2,142 
 

நகரத்தின் பெரிய ஹாஸ்பிட்டலின் வரண்டாவில் கைகளைப் பிசைந்துகொண்டு அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தான் அன்வர். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் நர்ஸிடம் கை நீட்டி ஏதோ கேட்க முயன்றான். அண்ணா! அங்கே போய் உக்காருங்க. குழந்தை பிறந்தவுடன் நானே வந்து சொல்வேன் என்றாள் நர்ஸ்..ஒரு சேர அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் போய் அமர்ந்தான்.

மனைவி நல்ல விதமாகப் பிள்ளைப் பெற்று வீடு திரும்பினால் உண்டியலில் பணம் போடுகின்றேன் என்று வேணாடி கடவுளைத் துணைக்கு அழைத்தவனாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். கண்களும், உள்ளமும் ஒரு சேரக் கண்ணீரை உமிழ்ந்து கொண்டிருந்தது. உள்ளத்தில் ஏதோ ஒரு பயம் அவனை இடையூர் செய்துக் கொண்டிருந்தது. இதயத்துடிப்பு அதிகமானது. பாய்ந்து வரும் வெள்ளமாய் அவனைப் பயம் சூழ்ந்து கெண்டது. “வழக்கத்திற்கு மாறாக நெஞ்சில் பட, படப்பு கூடி வியர்வைத் துளிகள் அவனை நனைத்தது”.

இந்த மருந்துகளை வாங்கிட்டு வாங்கன்னு ஒரு மருந்து சீட்டை ஆப்ரேஷன் அரையிலிருந்து நர்ஸம்மா நீட்டினாள். பயத்தை வெளிக்காட்டாமல்… “என் மனைவி எப்படி இருக்கா? எப்போ ஆப்ரேஷன்? என்றான்” .”கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறக்கும்! நீங்கச் சீக்கிரமா போய் மருந்தை வாங்கி வாங்க” என்று அவசரம் காட்டினாள்.

இப்போவே வாங்கிட்டு வரேன் என்று மருந்துக் கடைக்குச் சென்று, மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை வாங்கி வந்து நர்ஸம்மா கிட்ட கொடுத்துத்தான். கடவுளை வேண்டி நாற்காலியில் அப்படியே.. சாய்ந்தான். மனதில் ஏதோ,ஏதோ அறிமுகமில்லா எண்ணங்கள் இரத்த ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தன. ஆஸ்பத்திரி ஏசியிலும் வடியும் வியற்வைத் துளிகளை துடைத்துக் கொண்டே ஆப்ரேஷன் தியேட்டரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

குழந்தை அழுகையின் சப்தம் கேட்டது. மழையால் பொட்டல் பூமி புத்துணர்ச்சியடைவது போன்று, இவனின் செவி மடல்களும் புத்துணர்வு பெற்றது. இதுவரை கேட்காத ஒரு கவிதை தன்னை நோக்கி வருவது போன்று, இவனின் செவி மடல்கள் மலர்ந்து கேட்கத் தயாரானது. ஆனந்த பெருக்கில் ஊறித் திளைக்க அவன் உள்ளம் மகிழ்ச்சி தடாகத்தை தேடியது.

ஆண் குழந்தை பிறந்தச் செய்தி அவனுக்கு கூறப்பட்டது .. மகிழ்ச்சியின் மடியில் துள்ளிக் குதிக்களானான். உலகமே தன்வசம் வந்தது போல் உணர்ந்து தன் நெஞ்சை உயர்த்திக் கம்பீரமாய் நின்று தன்னைத் தானே ஒரு முறை பார்த்து கொண்டான்.

மனைவியை நெற்றியில் முத்தமழை பொழிந்தான். இவர்களின் மகிழ்வைப் பயன்படுத்தி ஆனந்தக் கண்ணீர் இருவரின்‌ கண்ணங்களை இருவரின் அனுமதி கேளாமல் கடந்துச் சென்றது.

அன்வர் பணி செய்யும் வங்கி வாட்சப் குழுவும், குடும்ப வாட்சப் குழுவும் தலைப்புச் செய்தியாக குழந்தை பிறந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தன.

உறவினர்களுக்கும், மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும், இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தான். மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் கண்ணில் துயிலுக்கு இடமளிக்காமல் மனைவியையும், மகனையும் கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்தான். குழந்தையை கொசுக்கள் கடிக்காமல் இருக்கக் கொசு வலை, உயர்ரக தொட்டில், என்று விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களால் வீட்டை அலங்கரித்தான்..

குழந்தைக்கு பெரியளவில் பெயர் சூட்ட முடிவு செய்து மனைவியின் காதில் போட்டு வைத்தான். அவளும் அதைச் சந்தோஷமாக ஏற்றாள். அதற்கான என்ன, என்ன வேலை செய்யலாமென்று ஆலோசனை செய்து கொண்டு பெயர் சூட்டு விழாவிற்குத் தயாரானான்.

பத்திரிக்கை அடித்து எல்லோரையும் கூப்பிட பெயர்களின் விஸ்ட்டை ரெடி செய்து வை. நான் பத்திரிக்கை அடிக்க ஆர்டர் கொடுத்து வரேனென்று வெளியே செல்லத் தயாரானான்.

“நம்ம பாஷா மாமாவை கூப்பிடலாமா? என்றுப் பயந்தவளாய் கேட்டாள்”. போனவன் சற்று நின்றான். அவளுக்கோ பயத்தில் வேர்கத் தொடங்கியது.

பாஷா, அன்வருக்கு பங்காளி முறை வேண்டும். சொத்துப் பிரச்சினையில் பாஷா,க்கும், அன்வருக்கும் மத்தியில் தகராறு ஏற்பட்டது. சண்டை வீரியமடைந்தது.. செய்த துரோகத்திற்கு என் முகத்தில் முழிக்காதே என்று கோபமாய் பேசிவிட்டுப் பல வருடங்கள் கடந்து விட்டன.

“எனக்கு மகன் பிறந்து விட்டான். அதைக் கொண்டாட ஊர் முழுக்கத் தோரணம் கட்டி சொந்தம், பந்தம், ஊரில் எல்லோரையும் கூப்பிட வேண்டும். அன்னைக்கு ஊரில் யார் வீட்டிலும் உலை கொதிக்கக் கூடாது என்றான். முதல் பத்திரிக்கையை பாஷா அப்பாவிற்குத் தான் கொடுக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே வெளியேறினான்”.

போன உயிர் திரும்ப வந்தது போல் பெருமூச்சு விட்டாள்…

பத்திரிக்கை அடித்து சொந்தம், பந்தம், ஊர் முழுக்க பத்திரிக்கை வைத்தான். மகன் பிறந்த சந்தோஷத்தில், பல நாள் எதிர்களை கூட நண்பர்களாக்கினான்.

விதைப் போட்டவனுக்கு அறுவடை நாள் திருவிழா போன்று, தன் மகனின் பெயர்ச் கூட்டு விழாவை திருவிழா போன்று கொண்டாட ஆர்வமாக இருந்தான்.

அவன் எதிர்பார்த்த தினமும் வந்தது…தோரணங்ககளும், ஃபிளக்ஸ் போர்டுகளும் ஊரை தனது கட்டுபாடுக்குள் கொண்டுவந்ததால் ஊரே விழாக் கோலம் பூண்டது.

என்னடா ஊரில் யாரும் பெறாதப் பிள்ளை பெற்றுவிட்டானோ! இப்படி ஆடம்பரம் செய்கின்றானென்று காதுப் படப் பேசத் தொடங்கினார்கள். எதையும் காதில் கேளாமல் மகன் பெயர்ச் சூட்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தான்.

“ அன்வர் தான் மகனுக்கு, “ஹபீப் என்றே பெயர் வைத்தான்”.ஊர் மக்கள் வாழ்த்துகளில் குழந்தை ஹபீப் திக்குமுக்காடி போனான்”.

ஹபீப் வளரத் தொடங்கினான். சிறுவர்கள் தெருவில் காத்தாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஹபீபும் விளையாடிக் கொண்டிருந்தான். …

காத்தாடி விட்டு விளையாடும் மகனை பார்த்து ரசித்து கொண்டிருந்தான் அன்வர் ‌.

காத்தாடி போலேவே காலமும் பறந்தது…

ஊரிலேயே பெரிய ஸ்கூலில் அன்பை படிக்க வைத்தான். ஹபீப் விஷயத்தில் உள்ளங்கையை விரித்தே வைத்திருந்தான்.

அன்பு 5 ஆம் வகுப்பைத் தாண்டினான்… தற்காலிக விடுப்பு, சலுகை விடுப்பு என்று அனைத்து விடுப்புகளை எடுத்து, தன் மகனை‌ சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினான்.

அதிகமான நேரங்களை மகன் அன்போடு கழித்தான். தனது வாழ்வின் முகவரியாக பார்த்தான்! மகனுக்காக எதையும் செய்யும் மன நிலையில் இருந்தான்…

ஹபீப் வளரத் தொடங்கினான். மேற்படிப்பு பயில அமெரிக்கா சென்றான். மகனின் பிரிவு ரணங்களாய் வலியைக் கொடுத்தது. மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்துப் பொறுத்துக் கொண்டான்

அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து ஊர் திரும்பிய ஹபீபை ஊர் மக்களிடம் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்து அவனுக்கான அறையில் உறங்கச் சென்றான் அன்வர்.

“எந்திரங்க, எந்திரிங்க… என்று அவன் மனைவி எழுப்பினாள்”…

“நல்ல உறக்கத்தில் இருந்த அன்வர் திடுக்கிட்டு எழுந்து, ஹபீப் எங்கே? சாப்பிட்டானா? குளிச்சானா? பாவம்‌ புள்ள அமெரிக்காவில் படிச்சவன் அவனுக்கு எல்லா வசதிகளும் செய்துக் கொடு என்றான்.

“யார் எந்த ஹபீப்? என்று கேட்டாள். என்ன அமெரிக்கா? அது, இதுன்னு ஏதோ,ஏதோ பேசுறீங்க”! என்றாள்.

ஒன்றும் தெரியாத அவன் மனைவி.

அப்போத்தான் புரிந்தது…தான்….கண்டது கனவு “என்று…அவன் கட்டியது மண் கோட்டை என்றும்.அது, தூள்,தூளாக உடைந்தது போனதை உறுதிப்படுத்திக் கொணடான். கழுத்தோரம் இறங்கிய வேர்வைத் துடைத்துக் கொண்டு மனைவியைப் பார்த்தான்..

திருமணம் முடிந்து 10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை என்ற கவலை மறுபடியும் அட்டைப் பூச்சியாய் அவனை இறுக்கியது. வாய் விட்டுக் கதறி அழத் தோன்றியது.

“கருமேகம் சூழ்ந்து மழை வரும் நேரத்தில், காற்று வந்து கலைந்த மேகமாய் அவன் கனவு மனைவியால் கலைந்து போனது”.

“குளிச்சிட்டு சீக்கிரமா கிளம்புங்க… இன்னைக்கு புதுசா குழந்தை பேறு டாக்டர் வராராம்! அவரை போய் பார்க்கனும்”. இந்த டாக்டர் கொடுக்கும் மாத்திரையில் குழந்தை பிறக்கனும்ன்னு இறைவனிடம் வேண்டிக்கீங்க என்றாள்.

“கனவில் இருக்கும் சந்தோஷம் நிஜ வாழ்வில் இல்லை. கனவு சீரியல் போன்று தொடர்ந்தால் எப்படி இருக்குமென்று யோசித்தான். படுகையை விட்டு நகர மனமில்லாமல், எப்போ மறுபடியும் துயில் கொள்வோம்? என்று மனதுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு எழுந்து, குளித்து, இறைவனிடம் வேண்டியவனாய் படுக்கையை திரும்பிப் பார்த்தவனாய் குழந்தை பேறு டாக்டரை பார்க்க மனைவியுடன் சென்றான்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *