கலைந்தது கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 289 
 
 

காலை. காங்கேசன்துறை வீதி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் குச்சொழுங்கை வழியாக வந்த கிருஷ்ணவேணி கோவிலை நோக்கிச் சென்றாள். பாதணிகளை வீதியிலே கழற்றிவிட்டு நின்றபடியே கும்பிட்டுக் கொண்டாள். கோபுரத்தின் உச்சிவரை நிமிர்ந்தன அவள் கண்கள். அவளைக் கடந்து போவோர் அவளை ஒருகணம் திருப்பிப் பார்க்கின்றனர். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுதான். மெல்லிய உயர்ந்த தேகம் கொண்ட அவள், இறுக வரிந்த மயில்நீல வர்ணச் சேலையில் தங்க விக்கிரகம் போல ஜொலிக்கின்றாள். நெற்றியில் திருநீற்றின் குறியும் பொட்டும், மல்லிகை மொட்டுகள் பிரிந்து மணம் கமிழ்க்கும் மாலையுமாக – பார்ப்பவர்கள் அவளையும் சேர்த்துக் கும்பிடத் தோன்றும். தினமும் அப்படித்தான் அவள் வேலைக்குப் போய் வருவாள். யாழ்ப்பாண நகரில் தனியார் கொம்பனி ஒன்றில் இலிகிதராக வேலை செய்கின்றாள்.

பின்னர் வீதியை இருமருங்கும் பார்த்துவிட்டு, குறுக்காக வீதியைக் கடந்து எதிரே இருக்கும் பஸ் ஸ்ராண்டை நோக்கிச் சென்றாள். அங்கே அவளது தோழி இந்திரா நின்றுகொண்டிருந்தாள். அனேகமான வேளைகளில் இருவரும் ஒன்றாகத்தான் வேலைக்குப் போய் வருவார்கள். தகரத்திலான பஸ் ஸ்ராண்டிற்குள் காலை இளம் வெய்யில் அட்டகாசம் போட்டது. இருவரும் உள்ளே போய் அமர்ந்து கொண்டார்கள்.

கலகலப்பாகப் பேசும் இந்திரா இன்று அமசடக்காக இருக்கின்றாள். முகம் கூடக் கறுத்துப் போய் இருந்தது. கவலையுடன் கிருஷ்ணவேணியைப் பார்த்தாள். மெதுவாக நகர்ந்து அவள் தோள் மீது தலை சாய்த்தாள். காதிற்குள் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு, தயக்கத்துடன் மொபைல்போனைத் திறந்து சில படங்களைத் தட்டிக் காண்பித்தாள்.

அகிலன் ஒரு பெண்ணுடன் நெருங்கியிருக்கும் சில புகைப்படங்கள்.

அகிலன் தற்போது அவுஸ்திரேலியாவில் அல்லவா இருக்கின்றான்!

நெஞ்சு திக்கென்றது கிருஷ்ணவேணிக்கு. திகைப்பில் படீரென அவளையுமறியாமல் மொபைல்போனைத் தட்டிவிட்டாள். பத்திரகாளியாட்டம் எழுந்தாள். தொங்கல் நடையில் வீதிக்குக் குறுக்காகப் பாய்ந்தாள். வாகனமொன்று கிரீச்சிட்டு அவளை மருவிக்கொண்டு ஓடியது. சத்தம் கேட்டு வீதியில் நின்றவர்கள் தலையில் கையை வைத்தார்கள்.

“ஏய் வேணி…. போகாதை. பஸ் வருகுது.”

கிருஷ்ணவேணி மறந்துவிட்டுப் போன அவளின் ஹாண்ட்பாக்கைத் தூக்கியபடி இந்திரா கத்தினாள். கிருஷ்ணவேணி அவளைப் பொருட்படுத்தவில்லை. கையை விசுக்கி வேகமாக வீடு நோக்கி நடந்தாள்.

“ஏன் என்ன நடந்தது?” இந்திராவை சிலர் விசாரித்தார்கள். அவள் ஒன்றும் கூறாது கிருஷ்ணவேணியைத் துரத்திக் கொண்டு பின்னாலே ஓடினாள்.

நடந்தது இதுதான்.

முதல் நாள் வியாழக்கிழமை மாலை அகிலனைச் சாப்பிட வரும்படி, மாதவி தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள். கடையில் சாப்பிட்டு அலுத்துவிட்ட அகிலனுக்கு, மாதவி தன் கைப்பட ஊர்ச் சாப்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருந்தாள். அகிலனும் மாதவியும் இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுக் கொண்டவர்கள். மெல்பேர்ண் நகர பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா வந்திருந்தார்கள்

இருவரும் அவுஸ்திரேலியா வந்து மூன்று மாதங்களாகிவிட்டன. மாதங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. புதிய இடம், இடையறாத படிப்பு அகிலனுக்கும் மாதவிக்கும் கதைத்துக் கொள்ளவே நேரம் இருக்கவில்லை. வார இறுதிகளில் பகுதி நேர வேலைக்கும் போய் வருவான் அகிலன். மெல்ல எல்லாம் பழக்கத்திற்கு வந்த பின்னர் இருவரும் நெருக்கத்திற்கு வந்தார்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் படித்தபோதும், மாதவியுடன் பழகாமல் இருந்ததை நினைக்க அகிலனுக்கு வியப்பாக இருந்தது. மாதவி என்றுமே அகிலனைக் கவர்ந்ததில்லை. மாதவி என்றல்ல, அகிலன் எந்த ஒரு பெண்ணுடனுமே அங்கு படிக்கும் காலத்தில் பழகியிருக்கவில்லை. அதேபோல மாதவிக்கும் அவன்மேல் எந்தவிதமான ஈடுபாடும் இருந்ததில்லை. படிப்பு ஒன்றுதான் அவளுக்கு முக்கியமானதாக இருந்தது. எண்ணெய் வழிய, முகத்தையும் அழகுபடுத்திக் கொள்ள மாட்டாள். தான் அணியும் ஆடைகளிலும் அக்கறை கொள்வதில்லை. வேறு ஒன்றிலும் அவளுக்கு நாட்டம் இருந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் அகிலன் அப்படியல்ல. அழகும் கம்பீரமும் கொண்ட அவன் நாகரீகமான ஆடைகள் அணிவதில் பிரியமானவன். சினிமா பார்ப்பது, உடற்பயிற்சி செய்வது எனப் பொழுதைப் போக்குவான்.

கூச்ச சுபாவமுடைய அகிலனுக்கு கிருஷ்ணவேணி தான் எல்லாம். கிருஷ்ணவேணியை சிறுவயது முதலே தெரியும். ஊரில் பத்துவீடுகள் தள்ளி இருந்தாள். வயதில் இரண்டு வருடங்கள் அவனைவிடக் குறைந்தவள். பாடசாலைக்கு ஒன்றாகப் போய் வருவார்கள். அவர்களைத் தனித்துக் காண்பது அருமை. சிறுவயதில் நண்பி; உப்புமூட்டை சுமப்பது, கோவில் வீதிகளில் கை கோர்த்துக் கொண்டு மணலிற்குள் குழையக் குழைய நடப்பதுமாக இருப்பார்கள். பின்னர் காதலி; களவாகக் கதைகள் பேசி, காடு கரம்பையெல்லாம் ஊடலில் திளைத்திருப்பார்கள். ஏறக்குறைய `இருபத்தைந்து வயது’ அவர்களின் நட்பிற்கு.

பல்கலைக்கழகத்தில் இருந்த காலங்களில் வாரத்திற்கு ஒரு தடவையாவது கிருஷ்ணவேணியிடமிருந்து கடிதம் வரும். முத்து முத்தான எழுத்துக்களில் குழந்தைத்தனமாக ஊர்ப்புதினங்களை எழுதியிருப்பாள். ஆடு மாடு கோழி கூட பாத்திரங்களாக கடிதத்தில் உயிர்பெறும். அவற்றைப் படிப்பதில் அகிலனுக்கு ஒரு ஆனந்தம். உடல் சோர்வு நீக்கி, புத்துணர்ச்சியுடன் பாடங்களைக் படிக்க வைக்கும் மருந்து அது. எப்போதாவது ரெலிபோனில் கதைப்பார்கள். அது இருவருக்கும் பேரானந்தம். கிருஷ்ணவேணிக்கு, அகிலன் தன் பின்னால் சூக்கும சரீரத்தில் நிழலாகத் தொடர்வதாகவே உணர்வாள்.

அவுஸ்திரேலியாவில் தனிமை அகிலனையும் மாதவியையும் வாட்டி எடுத்தது. வார இறுதிகளில் மாதவிக்கு பொழுது போவது கஸ்டமாக இருக்கும். சிலவேளைகளில் சனிக்கிழமை கூடப் பல்கலைக்கழகம் சென்று வருவாள். ஆரம்பத்தில் படிப்பு தொடர்பாக இருவரும் பழக ஆரம்பித்தார்கள். பின்னர் ஒன்றாக ஷொப்பிங் செல்லவும், உணவருந்தவும் செய்தார்கள். விடுமுறை நாட்களில் ஊர் சுற்றவும் செய்தார்கள்.

பல்கலைக்கழகத்திற்கு சமீபமாக இருக்கும் வீடுகளில் தங்கியிருக்கின்றார்கள். மாதவியுடன் இருக்கும் தாய்லாந்துப்பெண் வியாழக்கிழமையிலிருந்து இரவுநேரங்களில் குதியம்குத்தப் புறப்பட்டுவிடுவாள். வெள்ளைக்காரப்பெண் தனது ஊரான ஜீலோங் நகருக்குச் சென்றுவிடுவாள். ஞாயிறு அல்லது திங்கள் காலை வந்துவிடுவாள். அகிலனுடன் ஒரு ஆப்பிரிக்கா நாட்டவன் இருக்கின்றான். குடியும் கூத்துமாகத் திரிவான். அவனுக்கு வேறு கெட்ட பழக்கங்களும் இருந்தன. இவர்கள் ஐந்து பேரும் ஒன்றாகப் படிக்கின்றார்கள்.

மாதவியின் வீட்டிற்கு வந்தபோது அகிலனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மாதவிக்கு அன்று பிறந்த நாள். தாய்லாந்துப்பெண் ஓடியாடி அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். வெள்ளைக்காரி ஏற்கனவே ஜீலோங் போய்விட்டாள்.

”ஏன் லேற். உங்களை இண்டைக்கு வெள்ளன வரும்படியல்லவா சொல்லியிருந்தேன்! இண்டைக்கு முழுவதும் உங்களோடையே இருக்கவேணும் போல இருந்துச்சு.”

“எனக்கு உம்முடைய பிறந்தநாள் எண்டு தெரியாமல் போச்சே! மன்னித்துக் கொள்ளுங்கள்.”

`இண்டைக்கு முழுவதும் உங்களோடையே இருக்கவேணும் போல இருந்துச்சு’ என்ற மாதவியின் வார்த்தைகள் அகிலனுக்கு வியப்பைக் கொடுத்தது. சில நாட்களாக மாதவி அவனுடன் பழகும் விதம் சற்றே மாறுபாடாக இருப்பதை உணர்ந்தான் அகிலன். இரவு நேரங்களில் கூட நீண்டநேரமாக உரையாடுவாள். கூடுதலாகப் படிப்பு சம்பந்தமாகக் கதைத்தாலும் சிலவேளைகளில் வேறு விடயங்களுக்கும் மனம் தாவிவிடுகின்றது.

கேக் வெட்டி, பிறந்தநாள் வாழ்த்துப் பாடினார்கள். ஒரு துண்டு கேக் எடுத்து மாதவிக்கு ஊட்டும்போது, எதிர்பாராதவிதமாக அகிலனின் நெற்றியில் அவள் முத்தம் பதித்தாள். தாய்லாந்துப்பெண் எல்லாவற்றையும் தன் கமராவிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள். அவளுக்கு இது ஒன்றும் புதியதல்ல. சர்வசாதரணமாக எல்லாவற்றையும் எடுத்துவிட்டுப் போவாள். ஒரு வைன் போத்தலை உடைத்து தனக்கும் எடுத்துக்கொண்டு, இவர்கள் இருவருக்கும் நீட்டினாள் அவள். இரவு உணவை முடித்துக் கொண்டதும், “இன்றைய இரவை இருவரும் மகிழ்ச்சிகரமாக அனுபவித்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு தனது தொழிலுக்குக் கிழம்பிவிட்டாள் அவள்.

தாய்லாந்துப்பெண் போய் சிறிது நேரத்தில் அகிலனும் புறப்படத் தயாரானான். அப்போது எதிர்பாராத விதத்தில் மாதவி அவனைக் கட்டியணைத்தாள். மதியத்திலிருந்தே அகிலனை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதவியின் கண்கள் போதையில் கிறங்கிப் போயிருந்தன.

“எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. அண்ணன் ஒருவன் தான். அவனும் எங்கு என்றே தெரியவில்லை” சிணுங்கினாள்.

மாதவியின் பெற்றோர்கள் குண்டுவீச்சில் இறந்து போனார்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தான் அகிலன். அதே போல அகிலனுக்கு சிறு வயது முதலே ஒரு காதலி இருப்பதுவும் மாதவிக்குத் தெரிந்தே இருந்தது.

மாதவியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான் அகிலன். தான் செய்வது தவறு என்று தெரிந்தும், இதைவிட அவளைச் சமாதானம் செய்துகொள்ள வேறேதும் வழி தெரியாமல் திண்டாடினான்.

“நண்பிகளும் போய்விட்டார்கள். இன்று இரவு இங்கேயே தங்கிவிட்டு விடியற்புறம் செல்லுங்களேன். பேச்சுத்துணையாக இருக்கும்” ஏக்கத்துடன் கேட்டாள் மாதவி. அதைக் கேட்டவுடன் அப்படியே விறைத்துப் போய் நின்றான் அகிலன். அவுஸ்திரேலியா வந்து மூன்றுமாதங்களுக்குள்ளேயே மாறிவிட்டாளா மாதவி?

தனிமை கொடுமையான உணர்வுகளில் ஒன்றுதான். எத்தனையோ நாட்கள் அதன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் அகிலனும் தவித்திருக்கின்றான். அவனது அறை நண்பன் எத்தனையோ தடவைகள் தான் போகும் இடங்களுக்கு அகிலனையும் வரும்படி கூப்பிட்டிருக்கின்றான். ஆனால் இன்று மாதவி தன்னிடம் எதிர்பார்ப்பது என்ன? தன்னைத் திருமணம் செய்யச் சொல்கின்றாளா? அல்லது ஒருநாள் கூத்துக்கு இணங்க வைக்கின்றாளா? பலரின் முன்னிலையில் இந்த உணர்வை வெளிப்படுத்த முடியாததால் தனிமையில் இருக்கும்போது கேட்கின்றாளா? இங்கே இது சகஜமானாலும், எமது சமுதாயம் இன்னமும் இப்படியான வாழ்வை வரவேற்கவில்லைத்தானே!

“வைன் போத்தலை உடைத்தால் குடித்து முடித்துவிட வேண்டும் என்பாள் என் நண்பி.” சொல்லியபடியே எஞ்சியிருந்த வைனை நிரப்பிக்கொண்டு வந்து அகிலனிடம் நீட்டினாள் மாதவி. அகிலன் அவளிடமிருந்து அதை வாங்கி, வேண்டாவெறுப்பாக மடக் மடக் என்று குடித்தான்.

விடியும்போது சகலமும் முடிந்திருந்தன.

இது எப்படி நிகழ்ந்தது? இன்று தங்களைச் சேர்த்து வைத்தது என்ன? காதலா காமமா காலமா? அல்லது மாதவி தனது எதிர்காலத்துக்காக திட்டமிட்டே இதைச் செய்தாளா?

அகிலன் மனம் குழம்பிப் போய்விட்டான்.

வீட்டிற்குப் போனபோது அவனது ஆப்பிரிக்கநண்பன் அவனைப் பார்த்துச் சிரித்தான்.

“நன்பனே! இரவு எங்கிருந்தாய்?” கேட்டபடி, தனது மொபைல்போனைத் திறந்து, மாதவி அகிலனுக்குக் குடுத்த முத்தக் காட்சியைக் காட்டினான். தாய்லாந்துப்பெண் அகிலனின் கண் முன்னே தோன்றிச் சிரித்தாள். இன்னும் எவருக்கேல்லாம் அனுப்பி வைத்தாளோ? பல்கலைக்கழகத்தில் எத்தனையோ தமிழ் நண்பர்கள் இருக்கின்றார்களே!

வேகமாக நடந்தாள் கிருஷ்ணவேணி. அவளைக் கடந்து சென்றவர்கள், அவளின் நடையைப் பார்த்து அதிசயித்து ஒன்றும் கேட்காமல் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள். அவளது வீடு வந்தது. அந்நியமாக அது தோன்ற, அதனைக் கடந்து சென்ற அவள் அகிலனின் வீட்டுப் படலையைத் திறந்தாள்.

“அட மருமகப் பெண்ணே! என்ன வந்ததும் வராததுமாக கோபத்தோடை இருக்கின்றாய்? வேலைக்கு இண்டைக்குப் போகேல்லையா?” முற்றத்தில் நின்று அரிசி பிடைத்துக்கொண்டிருந்த அகிலனின் தாயார், அதை ஒருபுறம் வைத்துவிட்டு இடுப்பில் சேலையைச் சொருகியவாறே கேட்டார்.

பதில் ஒன்றும் சொல்லாது நெஞ்சை நிமிர்த்தி கோபத்துடன் மாமியாரைப் பார்த்தாள் கிருஷ்ணவேணி. அவளின் கண்கள் பொங்கல்பானை போல முட்டி இமைகளில் விளிம்பு கட்டியிருந்தன. நெற்றியில் இருந்த பொட்டைத் தன் புறங்கையால் அழித்தாள். அது மின்னலைப் போல இடைவெட்டி திருநீற்றுக்குறிக்குள் மறைந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப்பூவை அவிழ்த்துக் கீழே தள்ளிவிட, அவர்கள் வீட்டு நாய் அதைக்கொண்டு வளவு முழுக்க ஓடியது. தன் பாதணிகளைக் கழற்றிக் கீழே போட்டுவிட்டு, திண்ணையிலே இருந்த அகிலனின் பாட்டிக்குப் பக்கத்திலே போய் இருந்தாள். பாட்டி கண்ணை இடுக்கி அவளைப் பார்த்துவிட்டு, பாக்குரலை இடித்தவாறு இருமத் தொடங்கினாள்.

`கொல்… கொல்… கொல்…’ இடைவிடாத இருமல் பாட்டிக்குப் பரலோகம் சமீபத்தில் என்று சொல்லியது.

கிருஷ்ணவேணிக்கு பாட்டியின் தொடர் இருமல் `கொல்’ `கொல்’ என்று கேட்டது. கோபம் தலைக்கேற உதடுகள் துடித்தன. “முதலிலை உன்ரை பேரனைப் போய்க் கொல்” என்றாள். பாட்டி கொடுப்பிற்குள் சிரித்தாள்.

படலை வரை வந்த இந்திரா, கிருஷ்ணவேணியின் தலைவிரி தவக்கோலத்தைக் கண்டு அஞ்சினாள். அவளின் ஹாண்ட்பாக்கை அகிலனின் தாயாரிடம் நீட்டியபடி, நடந்தவற்றைச் சொன்னாள். அந்தத் திகைப்பூட்டும் செய்தியை அகிலனின் தாயார் சர்வசாதரணமாக எடுத்துக் கொண்டார். இந்திராவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அகிலனதும் கிருஷ்ணவேணியினதும் களவு ஒழுக்கத்தின் சாட்சியாக சிறுவயது முதல் இருந்த அவளின் மனச்சாட்சி உறுத்தியது.

”அப்ப இண்டைக்கு மருமகப்பிள்ள தன்ரை வீட்டுக்குப் போகமாட்டாள் போல” அகிலனின் தாயார் இந்திராவுக்குச் சொன்னார்.

`அகிலனை அவளின் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தும்வரை அவள் இனி அந்த இடத்தைவிட்டு நகரமாட்டாள்’ என்பதை இந்திரா புரிந்து கொண்டாள். `அகிலனின் புகைப்படங்கள் வந்த வழியாக, இனி சதுரங்கக்காய்களை நகர்த்திப் பார்க்க வேண்டும்’ எண்ணியவாறு தனது வீடு நோக்கி நடந்தாள்.

மதியமும் மாலையும் விரைந்து வந்து போயின. இடையிடையே கிருஷ்ணவேணியின் தாயார் வந்து அவளை வீட்டுக்கு வரும்படியும் உணவருந்தும்படியும் கெஞ்சினார். கிருஷ்ணவேணி தாயாரை முழுசிப் பார்த்துவிட்டு அந்தவிடத்தை விட்டு நகர மறுத்தாள். சாப்பாடும் இல்லை, தண்ணி வெந்நீரும் இல்லை. பாட்டிக்குச் சாப்பாடு குடுக்கும்போது, கிருஷ்ணவேணியையும் உணவருந்தும்படி அகிலனின் தாயார் கேட்டார். அவள் மறுத்துவிட்டாள்.

ஆடாமல் அசையாமல் ஒரு மனிதரால் எவ்வளவு நேரம் இருந்துகொள்ள முடியும்? கிருஷ்ணவேணி ரோஷக்காரி. அவள் மனதில் பலவித குழப்பங்கள் அலை மோதுகின்றன.

தனது இளமைக்காலத்தை நினைத்துப் பார்த்தாள். அகிலன் பல்கலைக்கழகம் செல்லும்வரையும் இருவரும் ஒருநாளும் பிரிந்ததில்லை. அவன் பல்கலைக்கழகம் சென்றபோது அவள் பத்தாம்வகுப்புப் படித்தாள். நான்குவருடங்கள் பிரிவைத் தாங்கமாட்டாமல் துடித்துப் பதைத்தாள். அகிலன் இருக்கும்வரை கிட்டவும் அண்டாதவர்கள், அவன் போனபின்னர் பின்னும் முன்னும் துரத்தினார்கள். அவளின் ஒரு பார்வை எல்லாரையும் ஓட விரட்டியது. அப்புறம் பாடசாலைக்கு ஒரு புதிய ஆசிரியர்—கந்தசாமி மாஸ்டர்—சயன்ஸ் படிப்பிக்கவென வந்தார். கூடவே துருதுருவென்ற இயல்புடைய அவருடைய மகன் இளங்கோவும் வந்து சேர்ந்தான். வகுப்பில் எப்போதும் கிருஷ்ணவேணியையே முழுசிப் பார்த்தபடி இருந்தான். அவள் எதையும் கண்டுகொள்ளாததால் அவள்மீது றொக்கற்றுகள் ஏவினான். படிப்பிலும் கெட்டிக்காரன். அவன் அவளுக்கு எத்தனையோ தொல்லைகளைக் கொடுத்தபோதும், கிருஷ்ணவேணி அவனைக் கணக்கெடுக்கவில்லை, அசரவில்லை. அவளுக்கென்றொரு ஒருவன் இருக்கின்றான் எனத் தெரிந்தும் அடிமேல் அடி அடித்தான் இளங்கோ. அம்மி நகரவில்லை. இம்மியளவும் இடம் குடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் கிருஷ்ணவேணி. ஒரு நல்ல மாணவன், படிப்பில் அக்கறை கொள்ளாமல் வீணாகத் தன் எதிர்காலத்தை வீணடிக்கின்றானே என பாடசாலையில் எல்லாரும் கவலை கொண்டார்கள். கடைசியில்?

மாலைக்கருக்கலாகி விட்டது. அகிலனின் தந்தையார் வேலை முடித்து வீடு வந்து சேர்ந்தார். கிருஷ்ணவேணியின் நிலை கண்டு, நடந்ததைப் புரிந்துகொண்டார். வீட்டுக்குள் சென்றதும், நாலு சுவர்களுக்குள் கிசுகிசுவென்ற பேச்சுக்குரல் எழுந்தது. அதன் பின்பு, வீட்டில் எவருமே கவலையற்று தமது அன்றாட காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

விளக்கு வைக்கும் நேரத்தில் கிருஷ்ணவேணியின் தாயாருடன் தந்தையும் கூட வந்தார். தந்தையார் கெஞ்சி மன்றாடிப் பார்த்தார். அவருடைய குரலும் எடுபடவில்லை. அகிலனின் பெற்றார் அவர்களை உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்கள். உள்ளே நடந்த உரையாடல் ஒரு வட்டமேசை மாநாடு போல பிசுபிசுத்தது. சுருதி பிசகி உரப்பாக மாறியது. ஆவேசம் வந்து வெளியே வந்த கிருஷ்ணவேணியின் தந்தை, சத்தமிட்டபடியே பாய்ந்து பாய்ந்து தன்வீடு நோக்கிச் சென்றார். அவர் குரலில் அம்மணம் தெறித்தது. தாயார் அவரைக் கூப்பிட்டபடியே பின்னாலே இழுபட்டுக்கொண்டு போனார். இந்தத் தடவை தாயார் கிருஷ்ணவேணியைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வாற நேரம் வரட்டும் என்று விட்டுவிட்டார்.

வீட்டு வளவுக்குள் இருந்த வேப்பமரத்தில் ஆந்தை அலற, பாட்டி இருப்பில் இருந்து எழுந்துகொண்டார். தனது வைப்புச்செப்புகளையும் தூக்கிக்கொண்டு படுக்கைக்கு ஆயத்தமானார்.

“எடி பிள்ளை… அப்ப என்ன வீட்டை போகேல்லையோ?”

“இல்லை…”

“அப்ப என்ன செய்யப் போறாய்?”

“இஞ்சையே இருக்கப் போறன்.”

பாட்டி அவளையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வீட்டிற்குள் நடை பயின்றார்.

“ஏய்.. கிழவி! என்னை என்னையே பாத்துப் பாத்து விழப் போறாய். நேரை பாத்துப் போ!”

முற்றத்து மாமரங்களின் சில கொப்புகள், காற்றின் அசைவுக்கேற்ப அவளுக்கு அண்மித்து வந்து கண்ணாமூச்சி காட்டுகின்றன. குளிர் காற்று மெல்ல வீச கிருஷ்ணவேணியின் உடல் நடுங்கத்தொடங்கியது. இருள் எங்கும் வியாபித்து பயம் காட்டியது. பாட்டி போய் சிறிது நேரத்தில் அகிலனின் தாயார் வெளியே வந்தார்.

“மகளே! வா… வீட்டிற்குள்.”

“மகளா? மருமகளா?”

“சரி! வா உள்ளுக்கை.. ”

உள்ளே போய் கதிரையில் அமர்ந்தாள் கிருஷ்ணவேணி. ஒரு கோப்பைக்குள் சோறு கறி பிசைந்து எடுத்து வந்தார் அகிலனின் தாயார். ஏதோ சொல்வதற்காக வாய் எடுத்தார். பின்னர் கிருஷ்ணவேணிக்கு அதை ஊட்டிவிட்டார்,

“ஏன் எனக்கென்ன கை கால் விழங்காமல் இருக்கிறேனோ? தாருங்கோ… நானே சாப்பிடுவன்” தட்டைப் பறித்து விறுவிறெண்டு அடங்காப் பசியுடன் சாப்பிட்டாள். சாப்பிட்டு முடிய தண்ணீர்க்குவளையை நீட்டினார் தாயார். அதை வாங்கி தகம் தீர மடக் மடக்கென்று குடித்தாள்.

“எது அகிலன்ரை அறை?” நீரைப் பருகியவாறே கேட்டாள் கிருஷ்ணவேணி.

தாயார் பாதி நீட்டியும் நீட்டாமலுமாக எதிர்த்திசையில் இருந்த அறையைக் காட்டினார். அறைக்குள் போய் அகிலனின் கட்டிலில் விழுந்த கிருஷ்ணவேணிக்கு அழ வேண்டும் போல் இருந்தது. புதியதொரு உலகத்தில் தனித்துவிடப்பட்டவள் போல் உணர்ந்தாள். சிறிது நேரம் கண்ணை மூடியிருப்பாள், அறைக்கதவை லேசாகத் திறந்துகொண்டு அகிலனின் தாயார் எட்டிப் பார்த்தார். வெளியேயிருந்து வந்த வெளிச்சத்தில், அவர் கையில் ஒரு சீலைப்பை தொங்கிக் கொண்டிருப்பதை கிருஷ்ணவேணி அவதானித்தாள்.

“பிள்ளை… உடுப்புகளை மாத்திப்போட்டுப் படு.”

கிருஷ்ணவேணி நிமிர்ந்து அவரை வியப்புடன் பார்த்தாள்.

“நானும் அவருமா உங்கடை வீட்டை போய் இதுகளை எடுத்து வந்தோம்.”

அவர்கள் வைத்துவிட்டுப் போனபின்னர் கிருஷ்ணவேணி ஆடைகளை மாற்றிக்கொண்டாள். மறுநாள் வேலைக்குப் போவதற்காக அலாரம் வைத்தாள். அப்படியே படுக்கையில் சரிந்துகொண்டாள். தலையணையில் அகிலனின் வாசம் வீசியது. யுகம்யுகமாகக் கை கோர்த்து, அவனுடன் அன்பில் திளைத்து வாழ்ந்த காலங்கள் மறுபடியும் மறுபடியும் வந்து அவளைத் துன்புறுத்தின. இப்படியெல்லாம் வாழ்வின் பாதை தடம் மாறிப் போகுமென அவள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இருவராக உறங்கவேண்டிய மலர்மஞ்சம் நெருஞ்சி முட்களாகக் குத்த விம்மல் வந்தது. கண்கள் ஈரமாகின. அந்தக் காலப்பெருவெளிக்குள் சுழியாக இளங்கோ முகம் காட்டினான். தன்னையே நினைத்து, உருகி உருகி, நிழல்போல் துரத்தி, பின்னர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இளங்கோவை நினைக்க – முதன்முறையாக அவள் கண்களில் கண்ணீர் வந்தது. பின் தாரையாக வடிந்து கன்னத்தை நனைத்தது. வாழ்நாளில் ஒருபோதுமே முக்கியத்துவம் கொடுக்காத, நினைத்துப்பாராத அந்த நிகழ்வு இப்பொழுது வந்து அவளைப் பிரட்டிப் போட்டது.

அலாரம் அடிக்கும்போது தான் அதுவரையும் உறக்கதிற்குப் போகவில்லை என்பதை உணர்ந்துகொண்டாள். வேலைக்குப் போவதற்கான ஆயத்தத்தைத் தொடங்கினாள்.

– ஜனவரி 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *