கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 16,151 
 
 

ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே வந்தது. மனதில் ஓர் அமைதியின்மை தோன்றியது. குழந்தையை அவனிடம் கொடுத்திருக்கக் கூடாதோ? எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ‘‘ஏம்மா, குழந்தையைக் கொடுத்தனுப்பினீங்களே… அவர் உங்களுக்குத் தெரிஞ்சவரா?’’ என்று கேட்டார்.

‘‘இல்லை அங்கிள்…’’ என்று விந்தியா பதிலளிக்க அவர் முகத்தில் ஒரு சிறிய எரிச்சல் தோன்றியது. ‘‘இப்படி அஜாக்கிரதையா இருக்கலாமா? இந்தக் காலத்திலே யாரையும் நம்பிடக் கூடாது…’’ என்று அவர் பேச, அவர் மனைவி, ‘‘சும்மா இருங்க…’’ என்று அவரை அடக்கினாள்.

கலவரக் குழிஇன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் அவள் புகுந்த வீட்டுக்கு வருவதாக இருந்தது. அம்மா கூடச் சொன்னாள். ‘‘புதன்கிழமைதானே போவதாக இருந்தது… நாளைக்கே ஏன் கிளம்பணும்?’’மாமனாரும், மாமியாரும் அன்று தங்கள் இன்னொரு மகனின் வீட்டுக்குக் கிளம்பும் செய்தி அன்றுதான் அவளை எட்டியது. கதிர் வீட்டில் தனியாக இருப்பான். பக்கத்து ஃப்ளாட் சுதா அவனைப் பற்றி குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.

‘‘விந்தியா, உங்க கணவரின் கன்னத்திலே விழும் குழி மிகவும் அழகாக இருக்கிறது…’’ என்றாள். அருகிலிருந்த கதிரும் முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் ‘‘ரொம்ப தாங்க்ஸ்…’’ என்றான். அவ்வளவுதான். அப்போது விந்தியாவின் மனதில் ஏற்பட்டது ஒரு சின்ன நெருடல்தான்.

ஆனால், பிறந்த வீட்டுக்கு வந்தவுடன் விந்தியாவின் மனது விதவிதமான கணக்குகளில் ஆழ்ந்தது. சீக்கிரமே கிளம்பி விடத் தீர்மானித்தாள். கூட வருகிறேன் என்று கூறிய தம்பியையும், ‘‘எதற்கு உனக்கு வீண் அலைச்சல்?’’ என்று கூறி தவிர்த்து விட்டாள்.

ரயிலில் ஏறியவுடன் கம்பார்ட்மெண்டின் அதே பிரிவில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன் குழந்தையைப் பார்த்து நட்புடன் சிரித்தான். பதிலுக்கு குழந்தையும் சிரிக்க அவன் முகத்தில் ஒரு பிரகாசம். அடிக்கடி தனது இடத்திலிருந்தே குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான். இதில் எதுவும் அவளுக்குத் தவறாகத் தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்து குழந்தை அழத் தொடங்கி விட்டான். வீறிட்ட குரல் தொடர்ந்து ஒலித்தது. அவளது சமாதானம் எடுபடவில்லை. அப்போதுதான் ‘‘என் கிட்டே கொடுங்க. கொஞ்ச தூரம் தூக்கிட்டு நடந்தால் சரியாயிடுவான்…’’ என்று அந்த இளைஞன் அவள் புறமாகக் கைகளை நீட்ட, அவளும் குழந்தையைக் கொடுத்து விட்டாள்.

அவன் குழந்தையை எடுத்துக் கொண்டு ரயிலுக்குள் நடக்கத் தொடங்கினான். அது உட்புறம் தொடர்ச்சி கொண்ட வண்டி. அதன் வழியாக அடுத்தடுத்த பெட்டிகளுக்குள் செல்ல முடியும். குழந்தையின் அழுகைக்குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. அழுகையை நிறுத்திவிட்டதா அல்லது அவன் அதிகத் தொலைவுக்குச் செல்கிறானா? குழந்தையை அவன் தூக்கிச் சென்று நான்கு நிமிடங்கள் கடந்து விட்டன.
விந்தியா மனதில் பயம் பரவத் தொடங்கியது.

எதிர் இருக்கைக்காரர் மீண்டும் கருத்து உதிர்த்தார். ‘‘நீங்க குழந்தையை கொடுத்திருக்கக் கூடாது. இப்படித்தான் போன வாரம் லக்னோ எக்ஸ்பிரஸ்
வண்டியில்…’’மீண்டும் அவர் மனைவி அவரை அடக்கினாள். ‘‘வாயை மூடுங்க. அப்படியெல்லாம் ஒன்றும் இப்போ நடந்துடலே…’’ என்றவள் சமாதானப்படுத்தும் விதத்தில் விந்தியாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

மேலும் இரு நிமிடங்கள் கழிந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு அவளுக்கு இடப்புறமிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் ‘‘நான் போய் பார்த்துட்டு வரேன்…’’ என்றபடி அந்த இளைஞன் போன பாதையில் நடக்கத் தொடங்கினார். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவர் வந்தபோது அவர் முகத்தில் லேசான கலவரம். ‘‘அவனையும், குழந்தையையும் எங்கேயும் காணல்லே…’’

விந்தியாவின் உடல் நடுங்கியது. எதிர் இருக்கைக்காரர் வேகமாக எழுந்தார். ‘‘நான் இந்தப் பக்கமா பார்த்துட்டு வரேன்…’’ என்றபடி எதிர்த் திசையில் நடக்கத் தொடங்கினார். அவரது மனைவி விந்தியாவின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு அவள் தோளை ஆதரவுடன் தட்டிக் கொடுத்தாள். ‘‘கவலைப் படாதேம்மா. ஒண்ணும் விபரீதமாக நடந்திருக்காது…’’ என்றாள்.

இதற்குள் ஒருவர் டிக்கெட் பரிசோதகரை கூட்டிக் கொண்டு வந்தார். நடந்ததைக் கேள்விப்பட்டதும் டிடிஇ தன்னிடமுள்ள பயணிகள் அட்டவணையைப் பார்த்தார். அந்த இளைஞனின் பெயரைச் சொன்னார். அவனது லக்கேஜைத் தேட முயற்சித்தார். அதில் ஏதாவது அடையாளம் இருக்குமே.

ஆனால், அங்கிருந்த லக்கேஜ் எல்லாமே பிறருக்குரியதாக இருந்தது. அவன் ஒரே ஒரு பையை முதுகில் சுமந்திருந்ததும், அதைக் கீழே இறக்கி வைக்காததும், குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றபோது கூட அவன் முதுகிலேயே அந்தப் பை இருந்ததும் சிலரால் உறுதி செய்யப்பட்டது.
ஆக, அடையாளங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டனவா?

‘‘உங்க கணவருக்கு தெரியப்படுத்தறீங்களா?’’ என்று ஒருவர் கேட்க, விந்தியாவின் கலவரம் மேலும் அதிகமானது. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வர வேண்டிய அவசியம் என்ன என்று வேறு கேட்பான்.குழந்தையைத் தூக்கிச் சென்றவனின் முகத்தில் தாடி இருந்தது என்ற அடையாளம் இப்போது அவளுக்கு ஓர் உறுத்தலைத் தந்தது.

அவனது பிற அடையாளங்கள் என்னென்ன என்று மனதுக்குள் வரிசைப்படுத்தத் தொடங்கினாள்.
‘லேசாக சாய்ந்து நடந்தான். ஐயோ குழந்தை. இடது முழங்கையில் ஏதோ ஒரு பெயரை பச்சை குத்தியிருந்தானோ? குழந்தைக்கு என்ன ஆனது? சராசரியை விட சற்று அதிக உயரம்…’இதற்குள் வேறு சிலரும் ரயிலின் பிற பெட்டிகளில் குழந்தையைத் தேடத் தொடங்கினார்கள்.

‘‘நடுவிலே எந்த ஸ்டேஷனிலும் ரயில் நிக்கல்லே. குழந்தை ரயிலுக்குள்ளேதான் இருக்கு…’’ என்று ஒருவர் சமாதானப்படுத்த, எதிர் இருக்கைக்காரர் ‘‘ஆனால், நடுவிலே ரயில் ரொம்ப மெதுவாகப் போய் ஸ்டேஷன் இல்லாத ஓரிடத்தில் அரை நிமிடம் நின்றதே…’’ என்றார். விந்தியாவின் கண்களில் கண்ணீர் தொடர்ந்து வழிந்தது. புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டிருந்தாள். உடலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.

டிடிஇ அதற்குள் யாரையோ தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். ‘எமர்ஜென்ஸி’ என்ற வார்த்தை மட்டும் உரத்து ஒலித்தது.
தேடச் சென்றவர்களில் ஒருவன் ‘‘இதோ குழந்தை கிடைச்சுடுச்சு…’’ என்று கூக்குரலிட்டபடியே ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு விந்தியாவை நோக்கி வந்தான்.

அவனுக்குச் சற்றுப் பின்னால் மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு இளைஞன் மூச்சிரைக்க ஓடிவந்து கொண்டிருந்தான்.
‘‘இல்லை. இது என் குழந்தை இல்லை…’’ என்றாள் விந்தியா ஒரு கேவலுடன். துரத்திக் கொண்டு வந்தவன் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டான். ‘‘முட்டாள், இது என் அண்ணன் குழந்தை…’’ என்று கத்தியபடியே குழந்தையுடன் தன் இருக்கைக்குத் திரும்பினான்.

ஆளாளுக்கு விதவிதமாக சமாதானப்படுத்தினார்கள். எந்தச் சமாதானமும் ஒரு கேள்விக்குறியைத்தான் அவளுக்குள் எழுப்பியது. ‘‘வந்துடுவான்மா. இவங்க சரியா தேடியிருக்க மாட்டாங்க…’’ தேடிச் சென்ற மூவருமா? ‘‘அவசரம்னு அவன் ஏதாவது டாய்லட்டுக்குள் நுழைந்திருப்பான்…’’ குழந்தையுடனா?

‘‘அவனைப் பார்த்தால் அப்படியெல்லாம் தப்பாத் தெரியலே. குழந்தையுடன் ஆரம்பத்திலிருந்தே ஸ்நேகமாகத்தான் பழகினான்…’’ அதன் பின்னணி என்னவோ? செயினைப் பிடித்து இழுக்கலாமா? வண்டி நிற்பதால் என்ன நடந்து விடும்? விந்தியாவுக்கு மயக்கம் வருவதுபோல் இருக்க ‘‘அதோ அதோ…’’ என்ற குரல்கள் கேட்கத் தொடங்கின.

அந்த இளைஞன் அங்கு வர, அவன் தோளின்மீது தலையை வைத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. சுற்றியிருந்த அனைவரும் ஆளாளுக்கு அவனை நோக்கி கண்டனக் கேள்விகளை எழுப்ப, ‘‘குழந்தையைத் தோளிலே கொஞ்ச நேரம் தட்டியவுடனேயே தூங்கி விட்டான். மூணு கம்பார்ட்மெண்ட் தள்ளி என் பள்ளி நண்பன் இருப்பதைப் பார்த்தேன். அவன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். சாரி…’’ என்றான்.

காலிங் பெல் ஒலியைக் கேட்டு கதவைத் திறந்த கதிர், விந்தியாவைப் பார்த்து வியப்படைந்தான். ‘‘ரெண்டு நாள் கழிச்சுதானே வருவதாக இருந்தே!’’ என்றான்.அதற்கு பதிலளிக்காமல் ‘‘ரயிலிலே வரும்போது ஒருத்தன் குழந்தையை சமாதானப்படுத்த தூக்கிட்டுப் போனான். பத்து நிமிஷம் கழிச்சுதான் வந்தான். அதுக்குள்ளே குழந்தையைக் காணாமல் நான் பட்டபாடு… அத்தனை பயணிகளுமே பதறிப் போய்ட்டாங்க. என்னவெல்லாம் நினைத்து பயந்தேன் தெரியுமா?’’

‘‘எதுக்கு பயந்தே? அதுதான் குழந்தை கிடைச்சுட்டானே…’’ என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டான். குழந்தையைப் பார்த்துச் சிரித்த அவன் முகத்தில் கன்னக் குழி தோன்றியது. ‘‘எனக்கு ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வா விந்தியா…’’ என்றான். கைப்பெட்டியை வைத்துவிட்டு படு வேகமாக உள்ளே சென்ற விந்தியா ஒரு டம்ளர் நீரைக் கொண்டு வந்தாள். அதை விசையுடன் கணவனின் முகத்தில் கொட்டினாள். அவன் அதிர்ச்சியுடன் பார்க்க, வீசப்பட்ட நீரின் சில துளிகள் குழந்தையின்மீதும் பட, அது சிலிர்த்துப் புன்னகைத்தது.

– 15 Nov 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *