கற்பு யுகத்தின் கானல் சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 14,160 
 
 

இராமபிரானின் மனைவி சீதாபிராட்டியின் கற்பு நிலை மாறாத தெய்வீக சரித்திரம் படித்தே அதில் ஊறிப் போன கனவுகளுடன் வாழும் காலத்தை வரமாகப் பெற வேண்டுமென்ற மன வைராக்கியம் ஒரு காலத்தில் மதுராவுக்கு இருந்ததென்னவோ உண்மை தான் ஓர் ஆணோடு கல்யாணமாகிக் கழுத்தில் மாங்கல்யம் தரித்த சுமங்கலியாக வந்தாலும் பின்னர், அந்தக் களை பறி போன சுவடுகளுடன் அவள் இல்வாழ்க்கை அதளபாதாளத்தில் சரியத் தொடங்கிய நிலையில் தான் அவள் பெற விரும்பிய அந்தக் கற்புக் கிரீடம் பொய்யாகிப் போன வெறும் கனவு போல் மனதில் எதிர் மறையான காயங்களின் விளைவாய் நிழல் தட்டி வெறிச்சோடிக் கிடந்தது

கற்பனைத் தேரில் வரும் ஒரு காவிய புருஷனையே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அவள் கண்களின் ஒளியைப் பறிப்பதற்கென்றே அந்தத் திருமண விலங்கு அவள் கழுத்தில். கண்களில் ஒளி போனாலும் உயிர் பிரகாசமான கற்பு நிலையையே காட்சி தரிசனம் கண்டு வாழ விரும்பிய நிறையொளியாகவே அவள் இருந்த போதிலும் விதியின் விளையாட்டில் அவள் ஒரு குரூரம் வெறித்த நிழற் பொம்மையாகவே மாறி விட்ட கொடுமையை என்னவென்று சொல்லி அழுவது சொல்லி அடங்காத மகத்தான சோக விழுக்காடு அது

அவளாக விரும்பி ஏற்றுக் கொண்ட கல்யாணச் சிறை வாழ்க்கையல்ல அது அவள் பெற்றோரின் விருப்பத் தேர்வின் பிரகாரமே அவளுடைய அந்தக் கல்யாணம் ஒரு சத்திய வேள்வியாக நடந்தேறிய போதிலும் அவள் பெண்மை நலன்களுக்கு எதிர்மறையான பொய்யின் கறை குடித்தே இருண்டு கிடக்கும் அவள் புருஷனையே மையமாக வைத்து வாழ்கிற அவர்களின் வீடு அவளைப் பொறுத்த வரை ஒரு சிறைக் கூடம் போலவே இருந்தது ஆம் அவளின் உயிர் நலன்களைக் காவு கொள்ள வந்த அந்தக் கல்யாணத்தை நரக சிறைக் கூடம் என்று சொல்வதைத் தவிர வேறு நல்ல வார்த்தைகளால் அதைப் புகழ்ந்து தள்ள எதுவுமே மிஞ்சவில்லை என்பதைப் பல தடவைகளில் நினைவு நினைவு கூர்ந்து மனம் சலித்துப் போன நடைப் பிணமே இப்போது அவள்

அந்த உயிர் மனமே இல்லாமற் போன இல்லற துரும்பு பிடித்துக் கறையேறிக் கிடந்த நடைப் பிண நாயகியை மேலும் கூறு போட்டு கண்ணீர் நதி குளிக்க வைக்கவே கல்யாணமென்ற பெயரில் அவளுக்குக் கணவனாக வந்து வாய்த்த நரேந்திரனுடைய ஒவ்வொரு நகர்வுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்க நேர்ந்த அந்தக் கொடிய அனுபவங்களை சவாலாகவே ஏற்றுக் கொண்டு அனுசரித்துப் போகிற மனப் பக்குவம் அறிவு தெளிந்த ஓர் இயல்பு நிலையில் கடவுளாகவே அவளுக்கு கொடுத்த ஒரு தெய்வீக வரம் மாதிரி கற்பு நிலை தவறாத மனதில் ஒளி வைரத்தில் பட்டை தீட்டப் பட்டு ஒரு கலங்கரை விளக்கத் தேவதை போல அவள் இருந்த நிலையிலும் சாத்தான் குறுக்கீடுகள் நிகழத் தான் செய்தது

நரேந்திரனை பொறுத்தவரை வெறும் தசைப் பசிக்குக்குத் தான் அவள். அதையும் தாண்டி அவள் மனதின் உணர்வுகளைக் கண்டறிந்து மேலான மனித நேயம் தலை தூக்க அவன் அவளோடு வாழ்ந்தறியான். இதற்குக் காரணம் தடம் புரண்ட வறுமைத் தீயே பற்றியெரியும் வாழ்க்கைச் சூழல். பெற்ற அப்பனும் ஓர் உயிர் விழுங்கி. சண்டித்தனங்களே தன் பிறவிப் பெருமையாகக் கொண்ட ஓர் ஈனசாதி. அதன் பிரதிபலிப்பே நரேந்தினிடமும் கொடி கட்டிப் பறப்பதைக் கண் கூடாகவே காண நேர்ந்த துர்ப்பாக்கியமே அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் முதல் படி. அதைக் கண்டு கொள்ளாத வரை அவனும் மாறப் போவதில்லை

கல்யாணமாகி முதல் இரவு கழிந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு புதுக் குண்டைத் தூக்கி அவள் மீது போட்டான் அவன். தனக்கும் அவளுக்குமிடையில் ஏற்பட்ட அந்தப் புனித உறவையே நம்பாமல் அவள் மீது வன்மம் சாதிக்கவே விழித்திருந்து காத்திருக்கும் பகை வெறி பிடித்த மனக் கோளாறைக் கொண்டவன்.அவன். அந்தப் பகை உணர்வைத் தூண்டவே அந்தரங்கமாக நேர்ந்த அந்த முதலிரவுச் சங்கதியும் அவன் பகை வளர ஒரு எரிகளமாக மாறி விட்ட நிலையில் அவள் கை தீண்டினாலே மனம் வெறுத்துக் கரை ஒதுங்கிப் போகுமளவுக்கு அவளின் கண்களுக்கு எட்டாத திரைமறைவில் இப்போது அவன்

அப்படி அவன் ஆகுமளவுக்கு அவளிடம் அவன் கண்டறிந்த பெரும் குறைபாடுதான் என்ன? சொல்லவே மனம் கூசுகிறது தான் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு லாயக்கற்ற அவளைத் தன் தலை மீது கட்டி விட்டதாக உறவு ஒன்று கூடி அவர்கள் மத்தியில் அவன் குற்றப் பத்திரிகை வாசிக்கும் போது அதைக் கேட்க நேர்ந்த பாவத்தில் அன்றே அவள் மாண்டொழிந்தாள் பணத்தைக் காட்டி மயக்கித் தன்னை விலைக்கு வாங்கி விட்டதாக அவன் சொன்ன போது அதை ஜீரணிக்க முடியாமல் அவள் இரத்தக் கண்ணீர் வடித்தது கூட அவர்கள் மத்தியில் எடுபடாமல் ஒரு வேடிக்கை நிகழ்வாகவே போனது

இதிலுள்ள உண்மை பொய்யைக் கண்டறியக் கூட முடியாமல் போன மனக் கோளாறு அவனிடம். .இதைச் சரி செய்ய வேண்டிய தார்மீகக் கடமையையே புறம் தள்ளி மறந்து விட்டுப் பற்றிக் கொண்டு விட்ட அந்த நெருப்புக்கு நெய் வார்க்கிற நிலைமையே, அவன் வீட்டில். சதி செய்து அவளைக் கை கழுவி விட அங்கு அவர்கள் மத்தியில் மூர்க்கத்தனம் கொண்டு கொடி கட்டிப் பறக்கிற நிலையில் அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. இதைச் சாட்டாக வைத்து அவளை அம்மா வீட்டில் கொண்டு போய் விட அவன் தயாரான போது நீதி அழுகிற சத்தம் அவளுக்கு மட்டும் தான் கேட்டது. அதைக் கேட்க முடியாமல் போன செவிட்டு மனம் அவனுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தான்

ஒரு டாக்டரிடமே போய் அந்தரங்கமாகத் தீர்க்க வேண்டிய அந்தச் சங்கதி பெரிய அளவில் ஊதப்பட்டுக் காற்றில் பறக்க நேர்ந்த கொடுமையை ஒரு சவாலாகவே ஏற்று மனம் நொந்த காயங்களுடன் அவள் பிறந்தமண்னில் வந்து விழுந்தது ஒரு கெட்ட கனவு மாதிரி அவளுக்கு. அவள் அங்கு வரும் போது அப்பா அம்மா இல்லாமல் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. தங்கை பானு நிலை வாசலில் நின்று அவர்களை எதிர் கொண்டு அழைத்து போனாள் அங்கு கால் தரித்து அமைதியாக அமரக் கூட அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை . தூணருகே நின்றபடி அவன் சொல்வது மட்டும் கேட்டது

“இவள் கொஞ்சநாளைக்கு இஞ்சையே இருக்கட்டும் “

அதைச் சொன்னதும் அவன் போன சுவடு தெரியாத இருட்டில் மறைந்து போனது ஒரு காட்சி மயக்கமாய்க் கண்களைக் குத்தப் பெருகியோடும் கண்ணீர் நதி குளித்தவாறே அவள் நின்ற கோலம் நெஞ்சைப் பிழிந்தது பின்னர் அந்த அழுகையிலிருந்து மீண்டவளாய்த் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவள் கேட்டாள்

“அம்மா அப்பா என்கை போட்டினம்?

இப்ப கந்தசஷ்டி விரதம் நடக்குதல்லே கந்தபுராணம் படிக்க முருகமூர்த்தி கோயிலுக்குப் போனவை” என்றாள் பானு

அவளுக்குத் தெரியும் கோவிலுக்குப் போய்ப் புராணம் படித்துப் பயன் சொவதென்றால் அப்பாவுக்கு உலகமே மறந்து போகும். இல்லற வாழ்வில் தடம் புரண்டு போகும் உள் விழுக்காடோடு தான் வந்து நிற்பதை அறிந்தால் ஒரு வேளை அவர் இந்தப் புராணப் படிப்பை விடக்கூடும் அதுவும் கந்தபுராணப் படிப்பென்றால் அசுரர்களுக்கு எதிரான ஒரு தர்ம யுத்தத்தையே படிப்பபினையாகக் கொண்டு இறுதியில் கந்தன் வென்று அதர்மத்துக்கு எதிரான சத்தியத்தை நிலை நாட்டியது போலவே தனக்கு வந்த இந்தச் சோதனையிலும் தர்மம் வெல்லும் என்று அவள் நம்பினாள்.

தங்கை பானுவோடு இதைப் பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் குழந்தைத்தனமானது என்று படவே எதுவும் சொல்ல விரும்பாமல் வாயடைத்த மெளனத்தோடு அவள் உள்ளே போக முற்படும் போது அவளின் சோக முகம் பார்த்து மனம் பொறுக்காத ஆதங்கத்தோடு அவளைத் தடுத்து நிறுத்தி பானு கேட்டாள்

‘என்னக்கா உனக்கும் அத்தனுக்குமிடையிலை அப்படியென்ன மனக் கசப்பு? அது என்னெண்டு என்னிடம் சொல்லக் கூடாதா?”

“இதைப் பற்றி நான் சொன்னாலும் இந்தப் புதிருக்கு உனக்கு விடை கிடைக்காமலே போகலாம். அந்த அளவுக்கு நீ இன்னும் குழந்தையாகவே இருக்கிறாய். கொஞ்சம் பொறு அவர்கள் வீட்டிலிருந்து கடிதம் வரும் போது இதற்கான பதில் உனக்குக் கிடைக்கும்”

அவள் என்னதான் சமாதானம் சொன்னாலும் பானுவிற்கு மனம் கேட்கவில்லை. அவர்கள் அக்காவைப் பற்றித் தீது சொல்லிக் கடிதமே போடுமளவுக்கு அப்படியென்ன பெரிய பிரச்சனை அக்கா அத்தானுக்கிடையில்? அதுவும் அத்தான் நிலை தடுமாறிப் பேசியபோதே நான் நினைச்சேன் என்னவோ பெரிய மனஸ்தாபம் இல்லாமல் இதெல்லாம் நடந்திருக்குமோ? அக்காவும் வாய் திறக்கிறாளில்லை எதுக்கும் அம்மா வரட்டும்’

நீடித்த இந்த மெளனப் போராட்டம் கலைந்து வெய்யில் உச்சிக்கு ஏறிக் கொண்டிருக்கும் போது வாசலில் புராணம் படித்த களைப்போடு அப்பா வருவது தெரிந்தது .எவ்வளவு போர் மேகம் சூழ்ந்தாலும் இடிந்து போகாத எதிலும் சிரித்துச் சமாளிக்கிற ஆன்மீக ஞானம் அவருக்கு இயல்பானது. பாமர மனம் கொண்ட அம்மாவைப் பொறுத்தவரை மதுராவின் இந்த வருகை புயலைக் கிளப்பவே செய்யும். எப்படியானாலும் அவளுக்கு எப்போதும் கோவில் நினைப்புத் தான் .முருகனை கண்கள் நிறைந்து வழிய மெய் மறந்து அவள் கும்பிடும் போது பார்க்க வேண்டும் ஓடி ஓடிக் கும்பிட்டும் கடைசியில் மகள் மூலமாக நேர இருக்கிற மாபெரும் வாழ்விழப்பைத் தடுக்க அவளால் முடிந்ததா?

அவர்கள் தெய்வ சாந்நித்யம் பெற்றுத் திரும்பி வரும் போது ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்த வரந்தாவில் வானத்தையே அண்ணாந்து பார்த்தபடி சோகம் கவிந்த முகத்தோடு மதுரா நிற்பது களை இழந்த ஒரு காட்சி வெறுமையாய் அவர்களின் கண்களை எரித்தது,

“என்ன நேர்ந்து விட்டது அவளுக்கு? இந்தக் கேள்வியே இருவர் மனதிலும் அலை பாய அதற்குப் பதில் சொல்வது போல் அவர்களைக் கண்டதும் மதுரா தன்னை மறந்து பெருங்குரலெடுத்து வாய் விட்டுக் கதறி அழும் போது வீடே இரண்டுபட்டுப் போன அந்த ரணகளம் வெகு நேரம் வரை நீடித்தது அவளிடமிருந்து இதற்கான பதில் வரவேயில்லை வாய் திறந்து சொல்லக் கூடிய விடயமா அது?

“என்ன நடந்ததென்று பானு நீயாவது சொல்லேன்’ என்றார் அப்பா

“என்னத்தைச் சொல்ல சினத்தோடு அத்தான் இவளைக் கூட்டி வரும் போது எனக்குள்ளே முளைச்ச கேள்விக்கே இன்னும் பதில் கிடைக்கேலை நான் என்ன சொல்லுறது? எல்லாம் முடிஞ்சு போன மாதிரித்தான் அத்தான் சொன்ன விதம் இவளைக் கொஞ்ச நாளைக்கு இஞ்சை இருக்கட்டாம் அவர் சொல்லி விட்டுப் போறார் “

“அப்ப இனி வரமாட்டாரோ அவர் “என்று அம்மா கேட்ட கேள்விக்குப் பானுவே பதில் சொன்னாள் “

“ஆருக்குத் தெரியும் கடவுளுக்கு தான் வெளிச்சம் “ இதைக் கேட்கப் பிடிக்காதவள் போல மதுரா உள்ளே போய் விட்டாள் அவள் அழுவது மட்டும் தொடர்ந்து விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது அது நிற்க வேண்டுமானால் அவன் வந்தால் தான் உண்டு.. அவன் வராதொழிந்த வெறும் கணக்கில் நாட்கள் ஒரு யுகமாக நீண்டு கொண்டே போனது

அவன் வருவதற்குப் பதிலாக மனம் போனபடி கற்பனை செய்தபடி அவனின் அப்பாவிடமிருந்து ஒரு பொய்யான கடிதம் தான் வந்தது. அவளின் மானத்துக்கே பங்கம் விளைவிக்கிற தோரணையில் அந்தக் கடிதம் அவளின் அப்பாவின் நேர் முகம் பார்த்து எழுதப்பட்டிருப்பது போல கர்ச்சிகும் ஒரு குரல் உள் உறுமலாகக் கேட்டது

மதுரா ஒரு முழுமையான பெண்ணில்லையென்பதை அவர் வெளிப்படையாகவே எழுதியிருந்தார். தன் மகனின் உடல் தாகம் தீர்க்க முடியாமல் போன குறை ஒன்று மட்டுமல்ல அவளுக்கு. அதையும் தாண்டி இன்னுமொரு பெருங்குறையாம் அவளுக்கு அவளை இருடி என்று சொல்லுமளவுக்கு அவர்களின் அதீத கண்டு பிடிப்பு ஞானத்திற்கு முன்னால் மதுரா குற்றமற்றவள் என்பதை எப்படி நிரூபிப்பது என்ற மனக் கலக்கத்தில் கடிதம் வாசித்த அதிர்ச்சியில் அவர் அப்படியே உறைந்து போனார்

“என்னவாம் அவன்”ஒருமையில் விழித்துக் கோபக் கனல் பறக்க அம்மா கேட்ட போது வெளிப்படையாக எதுவும் சொல்ல மனம் வராமல் ஏதோ முடி மறைப்பது போல ஒன்றை மட்டும் அவரால் சொல்ல முடிந்தது

“மதுராவிட்டைக் குறை இருந்தால் பணத்தைக் காட்டி மோசம் செய்கிற அளவுக்கு நான் ஒன்றும் தரங்கெட்டவ்னில்லை இதை அவன்களுக்கு ஆர் எடுத்துச் சொல்லுறது?”

மதுராவிட்டை அப்படி என்ன பெருங் குறை சொல்லுங்கோ “என்று மனம் தாங்காமல் குரல் உடைந்து அம்மா கேட்கும் போது அப்பாவால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு இரககசியக் குரலில் அம்மாவுக்கு மட்டும் கேட்கும்படியாக அவர் சொன்னார்

“ கல்யாணம் செய்து கொள்ளுறதுக்கு முக்கியமாய் எது அவசியமோ அது இல்லாமல் போன வரட்டு ஜென்மம் தான் உன்ரை மகளென்று நரேந்திரன் எடுத்த முடிவின்படிதான் இந்தக் கடிதம் எங்கள் மீது பழி போடவும் எங்களையல்ல மதுராவைக் கை கழுவி விடவும் இது ஒரு நல்ல வாய்ப்பு அவன்களுக்கு அதுமட்டுமல்ல இதன் தொடர்ச்சியாய் இன்னொன்றையும் கண்டு பிடிச்சிருக்கினம் மதுரா சாமத்தியப்படவேயில்லையாம்”

“எதுக்கும் ஒரு“டாக்டரை வைச்சுச் சோதித்தால் ஒரு வேளை அவனுக்குப் புத்தி வருமோ?

“அவன் எடுக்கிற முடிவெல்லாம் அவன் அப்பன் கையிலை தான் இருக்கு எங்களை நம்பாதவன் டாக்டர் சொல்லியா கேக்கப் போறான் அதைக் கூடத் கூடத் தட்டிக் கழிக்கிற நிலைமை தான் பாவத்துக்கு அஞ்சாதவன் அந்தப் படுபாவி. இப்படியொரு நிலைமைக்குக் கடவுள் தான் தீர்ப்பு வழங்க வேணும்”

என்று அப்பா சொன்னதைக் கேட்டு மனம் பொறுக்காமல் அம்மா சட்டென்று குரலை உயர்த்திச் சொன்னாள்

“மதுரா! அவன் வராட்டால் போகட்டும் இன்னொருவன் உனக்கு வராமலா போய் விடுவான். இதுக்காக நீ ஒன்றும் அழ வேண்டாம் “

என்று அவள் சொன்னதைக் கேட்டு அதைக் கேட்க நேர்ந்த பாவத்தில் தன் பிறவிப் பெருமையே பறி போய் விட்ட கவலையோடு மனம் தாங்காமல் அறையை விட்டு ஓடி வந்து, தன்னையே மறந்தவளாய் அம்மாவின் காலடியில் வீழ்ந்து மதுரா பெருங்குரலெடுத்துக் கதறியழுத அவலச் சத்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாகக் கேட்டது. அப்படி என்ன பிறவிப் பெருமை அவளுக்கு உயிரை விட மேலான ஒழுக்கம் தவறாத தன் புனிதமான கற்பு நெறி வாழ்க்கையின் மேலான இருப்பு நிலைக்கு முன்னால் தான் கொண்டு வந்த பிறவிப் பெருமையென்று எதையுமே நம்பாதவள் அவள். அப்பேர்ப்பட்ட அவளின் மூச்சோடு கலந்திருக்கும் அந்தப் புனிதமான கற்பையே அது சாட்சி கொண்டு நிரூபிக்கிற மாதிரி அவள் அழுத அந்த அழுகையின் பிரகடன ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது அவர்கள் என்னதான் கறை கொண்டு அவளின் பெருமைகளை மறைக்க நினைத்தாலும் அவள் தன் சத்தியத்தை நிலை நாட்ட இப்படிக் கற்பு நெறியிலேயே விசுபரூபம் கொண்டு எழும் போது வாழ்வு மயக்கமாக அவனையே பொருளாக வைத்து வருகின்ற பொய்யின் கறைகள் காணாமலே போய் விடும் என்ற நம்பிக்கையொளி முகத்தில் களை கொண்டு பிரகாசிக்க அப்பா வேதம் கூறுவது போல அம்மாவிடம் குரல் கனிந்து சொன்னார்

“ இவளை விடு என்னதான் தீங்கு நேர்ந்தாலும் நீயோ நானோ சொல்லி மதுராவை மாற்றுவது கஷ்டம் அது தான் நீயே பார்த்தியே தனக்கு இன்னொரு கல்யாணமே இல்லை என்று சொல்கிற மாதிரி இவள் அழுத விதம் அவர்கள் கண்களைத் திறக்கவல்ல அவன் மனம் திருந்தத் தான். எது நடந்தாலும் கற்பே கொடி கட்டிப் பறக்கிற மாதிரி இவள் எடுத்த இந்த விசுபரூபம் எனக்கும் உனக்கும் மட்டுமல்ல அவனின் கறைகளை எரிக்கவும் தான் “என்று கற்பின் இலக்கணம் பற்றி வேதமாக அவர் விளக்கிச் சொன்ன புதிர்கள் விடுபட முடியாமல் போன மயக்கத்தில் அம்மா மூச்சுத்த் திணற நின்று கொண்டிருந்தாள்.. இந்த மயக்கம் பிடிபடாத வெகு தொலைவில் அப்பா சொன்ன வார்த்தைப் பிரகடனத்தில் வாழ்வு மயக்கமான எல்லாக் கறைகளும் தீர்ந்த புதுப் பொலிவுடன், மதுராவைக் கற்பின் ஒரு காட்சி தரிசன தேவதையாக இனம் கண்ட மகிழ்ச்சியில் அப்பா கைகளைத் தூக்கி வழிபடும் நினைப்பில் மெய் மறந்து நிற்பது ஊன வாழ்க்கையின் இருள் மறந்து போகும் ஒரு தெய்வ வழிபாடு போல் கண்களை நிறைத்தது. ஊனுலக தசை வெறி மறந்து போனால் மட்டுமே அதுவும் கை கூடும்

கல்யாணம் என்ற பெயரில் அவள் கண்டதெல்லாம் உயிர்க் களை பறிக்கும் கானல் சுவடுகள் தாம் அதையும் தாண்டிக் கற்பு யுகத்தின் காட்சி தரிசன தேவதையாக அவள் விசுபரூபம் கொண்டு எழும் போது காலத்தை வென்ற காவிய நாயகியாக உலகம் அவளுக்குத் தலை வணங்க நேர்ந்தாலும் உயிர் வாழ்க்கையைப் பொறுத்த வரை பெண்மை நலன்கள் ஒன்றுமே இல்லாமற் போன வெறும் பூஜ்யம் தான் அவள். பெண் என்பது வெறும் பேச்சளவில் மட்டும் தான்

ஜீவநதி

தை 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *