கரை ஒதுங்கிய காற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 6,963 
 
 

தாயே! உன்கிட்ட வேண்டியபடியே என் பொண்ணுக்கு நல்ல இடத்திலே சம்பந்தம் கிடைச்சிடுத்து, நான் நினைத்தபடியே உன் அருளாலே உன் கோயில்கிட்டேயே ஒரு கல்யாண மண்டபமும் கட்டி முடிச்சாச்சு, நீதான் கூட இருந்து நல்லபடியா என் பொண்ணோட திருமணத்தை முதல் திருமணமா அந்த மண்டபத்திலேயே நடத்தி கொடுக்கனும் அம்மா!
பத்திரிக்கையை தன் குலதெய்வமான மாரியம்மன் சன்னதியில் வைத்து மனதுருக வேண்டினார், குடும்பத்தாருடன் வந்திருந்த சீனி என்கிற சீனுவாசன்.

சீனிக்கு பூர்வீகம், வேதாரண்யம் அருகே ஒரு அகத்தியாம்பள்ளி கிராமம், அவர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதற்கான சுவடோ உறவினர்களோ இல்லை.

இருந்தாலும், தன் அப்பா,அம்மா வாழ்ந்த கிராமம், தான் பிறந்த கிராமத்திற்கு நாம நல்லா இருக்கும் போதே ஏதாவது செய்யனும், அது பல பேருக்கு பயன்படுகிற மாதிரி இருக்கனும்னு யோசித்துத்தான் இந்த இலவசத் திருமண மண்டபம் கட்டியுள்ளார்.

வாங்கோ!! வரனும்!
கல்யாணமாமே,கேள்விப்பட்டேன்!
சந்தோஷம். என்றார் அங்கே வந்த ஆலய குருக்கள் ராமநாத சிவாச்சாரியார்.

அம்மாள் அணுகிரஹத்தாலே, எல்லாம் நல்லபடியா நடக்கனும்.

நல்லபடியாவே நடக்கும் என்றவாறே ஆலய பூசாரி கருணாநிதி வந்து பிரசாதம் கொடுக்க ,வாங்கிக் கொண்டார்கள்.

எப்போ கல்யாணம்?

ஐப்பசி 29, நவம்பர் 15 என்றார்.

வெள்ளிக்கிழமை.

14ஆம் தேதி கல்யாண மண்டபம் கணபதி ஹோமத்தோட திறந்து அதிலேயே என் மகளின் திருமணம் செய்யறதா ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

சொந்தக்கார எல்லாம் வந்து போக சிரமமா இருக்குமே ?

இரண்டு பேராத்திலேந்தும் மொத்தமே நூறு பேருக்குள்ளேதான் வருவா! பாக்கி பேருக்கெல்லாம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக் கிழமை வச்சுட்டேன்,
என்றார்.

பேஷ், அமர்க்களமா பண்ணிடலாம்!

நான் சென்னைக்குப் போய் பத்திரிக்கை அனுப்பி வைக்கிறேன், அவசியம் நடத்தி வைக்கனும்.என்று சொல்லி புறப்பட்டனர்.

நவம்பர் 10ஆம் தேதி…

ஏண்ணா? 15ஆம் தேதி வாக்கிலே புயல் அடிக்கப் போறதா சொல்றா? நம்மாத்து கல்யாணம் போதா இதெல்லாம் வரணும்,

அது இயற்கையடி! அதுக்கு தெரியுமா, நம்மாத்து கல்யாணம், சீனுவாத்து விசேஷம், அப்படினு பார்த்து வர்றதுக்கு.. எது நடக்கனுமோ அது கண்டிப்பா நடந்தே தீரும்.

பத்திரிக்கை எல்லாம் வச்சாச்சு, வருகிறவர்கள் கண்டிப்பா வந்திடுவா! முடியாதவா, சென்னைக்கு வந்திடுவா!

எனக்கு பையனாத்து மனுஷா ஒன்றும் கஷ்டப்படாம வந்து சேர்ந்தா போதும், நான் சம்பந்திகிட்டே பேசிடுறேன், பாக்கியெல்லாம் அம்பாள் பார்த்துப்பா! என்றார் திடமாக.

சீனு குடும்ப சகிதமாக வந்து ஊரிலே பத்திரிக்கை வைத்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டு இருந்தார்.

சம்பந்தி குடும்ப சகிதம் அனைவரும் வந்து வேதாராண்யத்தில் ரூம் எடுத்து தங்கி இருப்பதாகவும் முதல் நாளே வந்து விடுவதாகவும் தகவல் வந்தது.

சமையற்காரர் ஸ்ரீதர் தன் ஆட்களுடன் மண்டபம் வந்து சேர்ந்து ஆயத்தப் பணிகளில்இருந்தார்.

என்ன, ஸ்ரீதர் ரெடியா இருக்கா? நல்லபடியா இந்த மூன்று நாள் சமைச்சு பையனாத்து மனுக்ஷாள அசத்து.

நம்மாத்து கல்யாணம்னா! இது.

நீங்க சொல்லவே வேணாம்,

இவ்ளோ பெரிய மண்டபம்,இந்த தாலுக்காவிலே இத்தனை வசதிகளோட இல்லை, ஒரு குறையும் இல்லாம பண்ணிடுறேன் என்றார்.

அப்போது புயல் 14ஆம் தேதி நள்ளிரவில் கரையை நாகப்பட்டினம் அருகே கடக்க இருப்பதாக செய்தி வந்து அவரை கவலையில் ஆழ்த்தியது.

மனசு கவலையா இருக்கு !

நான் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் எனச் சொல்லி கிளம்பினார் சீனு.

அங்கே ஏகக் கூட்டம், நெரிசல் .,என்ன என்று விசாரித்தார்.

அனைவரும் கடற்கரைப் பகுதியில் இருந்து புயலுக்காக இங்கே தங்க முகாம் அமைத்துள்ளதாகவும், பாக்கி மக்களை ஊரில் இருந்து வெளியேற்றி வேதாரண்ய முகாமிற்கு அனுப்புவதாகவும் கூறினார்கள்.

மொத்தம் எத்தனை பேர் என்றார்.

இந்த கிராம மக்கள் சுமார் ஆயிரம் பேர் இருப்பார்கள், ஆங்காங்கே பிரிந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். என்றார் அந்த கிராம நாட்டாமை.

பூசாரியை அழைத்தார்,சீனு, அந்த அம்பாள் கிட்டே ஒரு பத்திரிக்கை இருக்கோனோ, அதை எடுத்துன்டு வா! என்றார்.

கிராம வாசிகள்,அகத்தியாம்பள்ளி என எழுதி ஊர் நாட்டாமையிடம் பவ்யமாக கொடுத்தார். நீங்கள் அனைவரும் இங்கே அங்கே தங்க வேண்டாம், அனைவரும் இந்த ஷணமே கிளம்பி வந்து என்னோட மண்டபத்திலே தங்கனும், என வேண்டுகோள் விடுத்தார்.

சாமி! என்ன சொல்றீங்க! நாளைக்குத்தானே உங்க வீட்டு விசேஷம்? நீங்க அதைப் பாருங்க!

ஐயா! நாங்க இரண்டு நாள் தானே இப்படியே கிடந்துட்டு ஊருக்குள்ளே போயிடுவோம். இதெல்லாம் எங்களுக்கு வழக்கமாகிடுச்சு என்றார் நாட்டாமை.

இந்த மண்டபம் நான் கட்டியதே இந்த ஊர் மக்களுக்காகத்தானே! அதனாலே நீங்க தங்கறதுதான் இப்போ முக்கியம், கிரஹப் பிரவேசம் எல்லாம் முக்கிமில்லை. அனைவரும் வந்து தங்கி இருந்து நாளைக்கு நடக்கப் போகிற என் பொண்ணோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி வைக்கனும்னு கேட்டுக்கிறேன் என வேண்டி நின்றார்.

திருமண மண்டபம்!

புயல் முகாமானது.

முதல் மாடி முழுவதும் கிராமவாசிகளால் நிரம்பியது.

ஸ்ரீதரைக் கூப்பிட்ட சீனு, என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது, மூன்று நாளைக்கு மூன்று வேளை ஆயிரம் பேருக்கு சமைக்கிற, என்று உத்தரவிட்டார்.

ஆயிரம் பேருக்குச் சொல்லி கல்யாணம் பண்ணலையேனு வருத்தமாக இருந்தது. இப்போ இல்லை! என் பொண்ணுக்கு இவாளோட வாழ்த்துதான் முக்கியம் என மகிழ்ந்தாள்.

புயல் வலுவிழந்து புதுகையில் கரை கடந்தது…

அகத்தியாம்பள்ளியிலே மனிதம் மையம் கொண்டதால்…

மணமக்களும் சீனு வீட்டாரும் வாழ்த்து மழையால் திக்கு முக்காடிப் போனார்கள்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *