கருவேப்பிலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 3,232 
 

தமது தோட்டத்தில் கருவேப்பிலை செடி வைத்து விவசாயம் செய்து வந்த கந்தசாமிக்கு வேதனை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடி இடுப்பில் அணிந்திருந்த கந்தையான வேட்டியை நனைத்தது.

“கந்து வட்டிக்கு கடன வாங்கி கருவேப்பிலை நாத்து வாங்கி நட்டு வளர்த்தனே. வானத்துக்கடவுளும் வஞ்சனையில்லாம நல்ல மழையப்பெய்ய வெச்சு செடிய செழிப்பா வளர வெச்சாரு. கைக்கு வந்த வெள்ளாமை இப்ப வாய்க்கு வராம போயிருச்சே. நாலு நாளைக்கு பந்த் இருக்குதுன்னு வேவாரி மொதல்லியே சொல்லியிருந்தா செடிய வெட்டாமயாச்சு இருந்திருப்பனே…. இப்ப வெட்டுன பின்னால வந்து வண்டி வராதுன்னு சொல்லிப்போட்டாரே…. நாலு நால்ல இந்த சித்திரை மாச அக்னி வெய்யில்ல கருவேப்பிலை சுக்கா காஞ்சு போகுமே…” என தன் வீட்டினரிடம் சொல்லி அழுத கந்தசாமியைக்கண்டு அவர் குடும்பத்தினர் அனைவருமே கண்ணீர் சிந்தினர்.

காய்ந்து போன கருவேப்பிலையை யாரும் வாங்க மாட்டார்கள். காட்டிற்குள் போட்டு எரிக்கத்தான் வேண்டும். மாடுகளும் மற்ற தீவனங்களைப்போல் விரும்பி சாப்பிடுவதில்லை. மக்களுக்காக கட்சி நடத்துவதாகச்சொல்லும் அரசியல்வாதிகள் பந்த் நடத்துவதால் கந்தசாமியைப்போல பலபேர் பாதிக்கப்படுவார்கள் என கவலைப்படுவதில்லை. 

வாழையும் இந்தவருடம் காற்றுக்கு விழுந்து லாபமின்றி போய்விட்டது. தென்னை மரங்களில் சருகல் நோய் வந்து காப்பின்றி கவலை கொள்ள வைத்தது. இன்று கருவேப்பிலையும் கை கொடுக்காமல் போனதால் கவலையின் உச்சத்தாலும், விவசாயத்தின் நிலையால் தன் வருங்காலத்தை நினைத்த அச்சத்தாலும் அழ கண்ணீர் கூட மிச்சமில்லாமல் வேதனையால் வெட்டி அடுக்கியிருந்த கருவேப்பிலை குந்தான் அருகிலேயே பசியை மறந்து மண் வாசலிலேயே உறங்கிப்போனார்.

அதிகாலையிலேயே கார் வந்து வாசலில் நின்ற சத்தம் கேட்டு எழுந்தவர் தனது சகோதரியின் மகள் சாந்தியைப்பார்த்ததும் முகம் மலர்ந்தார்.

“வாம்மா மருமகளே… சென்னைல இருந்து கோயமுத்தூருக்கு எப்ப வந்தே. மாமன சுத்தமா மறந்தே போயிட்டே…. ” சாந்தியின் கைகளை பாசத்துடன் பற்றிக்கொண்டார்.

“ஏ மாமா, உங்க முகத்துல சோகம் தெரியுது? எப்பவும் சிரிச்ச முகமா இருப்பீங்களே…?” என கேட்டவுடன் அவரையறியாமல் மனக்குமுறலால் கண்களில் கண்ணீர் பிதுங்கி நின்றது.

வெட்டி அடுக்கியிருந்த கருவேப்பிலையைக்காட்டி “இது தாம்மா என்ற கவலைக்கு காரணம். பத்து டன்னாகும். அம்பதாயிரம் மொத்தமா கெடைக்கும். பந்த்னால எல்லாம் போச்சு” என்றார் வேதனை வெளிப்பட.

“இதுக்கெதுக்கு வேதனைப்படறீங்க? இப்பெல்லாம் கருவேப்பிலையை இலையா பயன்படுத்தறத விட பொடியாத்தான் பயன் படுத்தறாங்க. நானே என்ற சமையலுக்கு பயன்படுத்தறேன். ஒரு கிலோ ஐநூறுக்கு விற்க்கிறாங்க. என்னோட பிரண்டு கூட இந்த பிசினஸ்தான் பண்ணிட்டு இருக்கிறாள். அவ கூட போன வாரம் என்கிட்ட உங்க ஊர்லிருந்து கருவேப்பிலை பொடி வாங்கி அனுப்பிவைக்க முடியுமான்னு கேட்டிருந்தா. சென்னைல கருவேப்பிலை பொடிக்கு இப்ப நல்ல வரவேற்ப்பு இருக்குது. இதப்பூராத்தையும் இன்னைக்கே களத்துல காய வெச்சிடுங்க” என்றவள் தனது செல் போனிலிருந்து தனது நண்பிக்கு ஒரு மெசேஜ் கொடுத்தவுடன் அவளது வங்கிக்கணக்கிற்கு ஐம்பதாயிரம் வந்து விழுந்தது. உடனே தன்னிடமிருந்த ஐம்பதாயிரத்தை தன் மாமா கந்தசாமியிடம் கொடுத்து விட்டு, இதை காயவைத்து பொடித்து  சாக்குப்பைகளில் போட்டு வைக்குமாறும், தான் ஆள் அனுப்பி எடுத்துக்கொள்வதாகவும் சொன்ன போது கந்தசாமி முகத்தில் பழைய சிரிப்பு வெளிப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *