அபிராவுக்கு நாய் என்றால் உயிர்.
அவள் தாத்தாவீட்டில் ஒரு நாட்டு நாய் இருக்கிறது. அதற்கு கருப்பி என்று தாத்தா பெயர் வைத்திருந்தார். வளையாத காதுகள் . குள்ளமும் இல்லாத உயரமும் இல்லாத நடுத்தரமான சாதாரண தோற்றம் என்றாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. யாழ்ப்பாணத்தில் கள்ளர் பயம் அதிகரித்தபோது தாத்தாவால் வாங்கி வளர்க்கப்பட்டு வரும் நாய்தான். தன் எஜமானர் குடும்பமில்லாத ஏனையவர்களைக் கண்டால் ஆக்கிரோசமாகக் குரைத்தபடி கடிப்பதற்குப் பாய்ந்துவரும். அதனால் நாய் கடிக்கும் கவனம் என்ற பேர்ப் பலகை கேற்றில் தொங்கவிடப்பட்டிருந்தது.
விடுமுறைக்கு தாத்தாவீட்டுக்கு சென்ற போதெல்லாம் அந்த நாயோடு தான் அவளது பெரும்பாலான பொழுதுகள் கழியும்.
அவள் தாத்தாவீட்டு வாசலுக்கு போகுமுன்னமே அவளது வருகையை அறிந்துகொண்டு வாசலுக்கு ஓடிவந்துவிடும்.. வாலையாட்டி தனது சினேகிதத்தை உணர்த்திய வண்ணம் தனது இருகால்களை உயர்த்தி வணக்கம் வைக்கும்.அவளும் பயணப்பையை வைத்துவிட்டு அதனைத் தடவிக்கொடுப்பாள். செல்லமாய் குரைத்தபடி அவளது பயணப்பையை முகர்ந்து பார்க்கும். அவள் பையில் அதற்காக வாங்கிவந்த பிஸ்கட்டுகளை எடுத்துக் கொடுப்பாள். மீண்டும் வாலையாட்டியவண்ணம் அவளது கால்களை உரசி தனது நன்றியை தெரிவிக்கும்.
தாத்தா கிணற்றடியில் வழுக்கி விழுந்துவிட்டார். அவரது இடுப்பு எலும்பு வெடித்ததால் அவரால் எழுந்து நடக்கமுடியவில்லை. நாட்டு வைத்தியர் மட்டைவைத்து புக்கை கட்டிவிட்டிருந்தார். அம்மம்மாவால் தனித்து அவரைப் பராமரிக்க முடியவில்லை. அதனால் கீர்த்திமாமா ஊருக்குப் புறப்பட்டார். ஒ லெவல் பரீட்சை எழுதியிருந்த அபிராவும் அவருடன் தாத்தாவீட்டுக்கு வந்துவிட்டாள்.
அவள் ஊருக்கு வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் கருப்பி மூன்று குட்டிகள் போட்டிருந்தது. அவற்றில் இரண்டு குட்டிகளை தாத்தா தமது கூட்டாளிகளின் பேரப்பிள்ளைகள் விரும்பிக் கேட்டதால் கொடுத்துவிட்டார். அபிரா தாத்தா வீட்டுக்கு வந்தபோது கருப்பியின் நிறத்தில் ஒரு குட்டிமட்டுமே இருந்தது. முன்று குட்டிகளையும் ஒருசேரப் பார்க்காதது அபிராவுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் அதை விரைவிலேயே மறந்து கருப்பியுடனும் அதன் குட்டியோடும் அவள் ஒன்றிவிட்டாள்.அந்தக் குட்டிக்கு பப்பி என்று பெயர் வைத்தாள். பப்பியும் கருப்பி போலவே அவளோடு ஒட்டிக்கொண்டது.
மைம்மல் பொழுது ..சூரியன் மேற்கில் விழுந்துகொண்டிருந்தது. அபிரா தாத்தா வீட்டுக்கு அப்பால் விரிந்திருந்த வயல் வரம்பில் மிக வேகமாக நடந்துகொண்டிருந்தாள், தாத்தாவீட்டிலிருந்து வயல் வெளியைத்தாண்டி சற்று ஒதுக்குப் புறமாக இருந்தது கிழவிவளவு. அதில் அவர்களது குலதெய்வமான வைரவர் வீற்றிருக்கிறார்,அவருக்கு விளக்கு வைக்கும் தாத்தாவின் பொறுப்பை அபிரா தானே முன்வந்து ஏற்றுக்கொண்டதனால் தான் இந்த நடைப் பயணம். வழமையாக ஐந்து மணிக்கே புறப்பட்டுவிடும் அவளால் இன்று ஆறுமணிக்கே புறப்பட முடிந்தது.
அம்மம்மாவுக்கு அவளைத் தனியாக அனுப்ப விருப்பமில்லை. மாமா வந்தவுடன் போகலாம் என மறுத்துப் பார்த்தா.மாமாவர ஒன்பது மணி செல்லும் என்பதைக் காரணம் காட்டி அவள் புறப்பட்டு விட்டாள்.அவளை கருப்பி நிழலாய்ப் பின் தொடர்ந்தது.
அவள் படலையத் திறந்து கொண்டு வளவுக்குள் புகுந்ததை அவன் பார்த்துவிட்டான். மூன்றுநாட்களுக்கு முன்புதான் எதேச்சையாக அவளை அவன் பார்த்தான். அன்றுமுதல் அபிரா அறியாமலே அவன் அவளைப் பின் தொடர்கிறான். இன்று இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவளது
வருகைக்காக் காந்திருந்திருக்ந்திருக்கிறான்.அவளைக் கண்டவுடன் அவன் மனதில் குரூரமான திருப்தி ஏற்படுகிறது
அவன் யாழ்ப்பணத்தில் புதிதாகப் புகுந்திருக்கும் போதைக் கலாசாரத்தின் பிரதிநிதி என்பதை அவனது கண்கள் பறைசாற்றின. ஒருவித மயக்க நிலையில் கட்டற்று அவனது மனம் சுற்றிக்க்கொண்டிருந்தது. அபிராவின் இளமையான அங்க எழுச்சிகள் அவனது காம உணர்ச்சியத் தூண்டி வெறிஏற்றின. அவன் சத்தம் செய்யாது சைக்கிளை படலையின் பின் சாய்த்துவிட்டு அவளை பின் தொடர்ந்தான்.
வளவுக்குள் நிறைந்திருந்த அடர்ந்த மரங்கள் சற்று இருந்த சூரிய ஒளியைக் கூட மறைத்து இருளைப் பரப்பியிருந்தமை வேறு அவனுக்கு வாய்ப்பாகப் போயிற்று.
அபிரா மிகவும் தைரியசாலிதான் எல்லாத்துக்கும் மேலாக வைரவர் தன்னைக் காப்பார் என்ற அசையாத நம்பிக்கையால்தான் அம்மம்மாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது அவள் விளக்குவைக்க வந்திருந்தாள்.
ஆனால் சற்றும் எதிர்பாராத ஒருகணத்தில் அருவருக்கத்தக்க புழுவின் ஊருதலாய் ..கிழட்டுக் கோட்டானின் மலக்கழிவாய் அவனது உடல் அபிரா மேல் படர முற்பட்டபோது …..அவள் திகைத்தவளாய் அருவருப்பால் சுருங்கியவளாய்…. தன்பலம் முழுவதையும் ஒருங்கிணைத்து உந்தித் தள்ளினாள்.
ஆனால் புழுவோ தன் ஆசை வெறிக்கு கிடைத்த விருந்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடத் தயாராகவில்லை.அதுவும் தன்பலத்தைப் பிரயோகிக்கத் தொடங்கிய அந்தத் தருணத்தில் தான்
…. கருப்பியின் ஆக்கிரோசமன பாய்ச்சலில் புழுவின் உடல் பிராண்டப்பட்டு இரத்தப் பெருக்கில் புழு துடித்திருக்கையில் அபிரா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு கருப்பியை தூக்கியபடி வெளியே ஓடிவந்தாள்.
அபிராவால் இந்த சம்பவம் தந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட பல நாட்கள் தேவைப்பட்டது..ஆனாலும்
புழுக்கள்மீதான அருவருப்பும் கோபமும் நிரந்தரமாய் அடிமனத்தில் ஒளிந்துகொண்டது.
அபிரா கருப்பியை வருடுகிறாள் கருப்பி நாக்கை தொங்விட்டபடியும் வாலை ஆட்டியபடியும்அவளைச் சுற்றி சுற்றி வருகிறது.
தன்னை அன்று காத்து நின்ற கருப்பி அவள் கண்களுக்கு தாத்தாவின் வளவில் காவல் காத்து நிற்கும் வைரவர் காலின் நிற்கும் நாயாகவே தெரிந்தது.
அவள் கருப்பியை வாஞ்சையுடன் தூக்கி அணைத்துக்கொண்டாள். கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கருப்பியின் உடலில் பட்டு தெறிக்கிறது.