தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,281 
 
 

காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க வைத்த எண்ணெய். இரண்டிலும், கவனம் இருந்தாலும், மனம் மட்டும், பத்திரிக்கையில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
“உங்கள் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்ற தலைப்பில், அதில் இருந்த விஷயங்கள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாகயிருந்தன. சிறுமிகளுக்கு ஆபாசப் படங்களை, “டிவி’யில் போட்டுக் காட்டி, பின், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியர், ரெட்டை சடை போடாமல் பள்ளிக்குச் சென்ற மாணவியின் தலைமுடியை வெட்டிவிட்ட உடற்கல்வி ஆசிரியை, தன்வீட்டில் வேலை பார்த்த பதினைந்து வயது சிறுமியை, தொடர் வல்லுறவு செய்து, கர்ப்பப்பை சிதைந்த அந்த சிறுமியை, மரணம் வரை துரத்திய எம்.எல்.ஏ., என்று, அந்த கட்டுரை, என் ரத்தக் கொதிப்பை எகிற வைத்திருந்தது.
ஏன் உலகம் இப்படி சைத்தான்களால் நிரம்பியிருக்கிறது? தனிமனித ஒழுக்கத்தை, இயற்கையில் இருந்து கற்றுக் கொண்ட பாரத நாடு, எப்போதி லிருந்து பாதை மாறிப் போனது?
கமலியின் கதை!“”அம்மா… உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்… அப்பா போன் பண்ணினார்மா… செவ்வாய் கிழமை வராறாம். ஆங்க்ரி பேர்ட் பொம்மை வாங்கிட்டு வராறாம்” என்று கூறியபடி ஓடி வந்தாள் அம்மு.
“”ஸ்கூல் விட்டு நேரா வீட்டுக்கு தான் வரணும் கண்ணு… ஆட்டோக்காரர் கூப்பிட்டார்ன்னு எங்கேயும் போய்டக் கூடாது…” என்றேன் அள்ளித்தூக்கி.
விழித்து, “”என்னம்மா சொல்றே?” என்றாள்.
“”மூணாம் வகுப்பிலிருந்து, நாலாவது போய்ட்டே… பெரிய பொண்ணு. அதனால, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் கண்ணு!”
“”சரிம்மா…” என்று, என்னை வியப்புடன் பார்த்தாள்.
அலுவலக வேலை முடிந்து, அன்று சற்று முன்னதாகவே ரயில் பிடித்து இறங்கி விட்டேன். ராக்கம்மாவிடம் பசலைக்கீரை வாங்கும்போது, “”ராகினி…” என்று மென்மையாக ஒரு குரல் அழைத்தது.
திரும்பியபோது, கமலி நின்றிருந்தாள்.
“”கமலி நீயா…” என்று அவள் கையை பற்றினேன்.
உருமாறிப் போயிருந்தாள். மூன்றே மாதங்களில் மூன்று வருட மூப்பு அவளைப் பற்றியிருந்தது. முகத்தின் சதைகள் வற்றி, கண்கள் சுருங்கி, உடல் மெலிந்து, பரிதாபத் தோற்றத்துடன் நின்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.
“”என்ன கமலி… சாப்பிடறதையே விட்டுட்டியா… இப்படி அநியாயமா பாதிக்கு பாதி ஆளாயிட்டியே… என்னம்மா?” என்றபோது, என் தொண்டை வறண்டது.
“”வாழ்க்கை ராகினி…” என்றாள் விரக்தியாக.
“”முப்பது வயசுல நிர்க்கதியா விட்டுட்டுப் போய்ட்டார் ராகினி… மூணு குழந்தைகள், வயசான பெற்றோர், வாடகை வீடு, கடன்… தெருவுக்கு வந்துட்டோம் ராகினி…”
“”கமலி… தெரியாதா எனக்கு? விலைவாசி எப்படியிருக்கு… உன் தோள்கள்ல எவ்வளவு சுமைகள்? சாரிம்மா… எனக்கு தெரிஞ்ச ரெண்டு கம்பெனிகள்ல வேலைக்கு சொல்லியிருந்தேன்… பாலோ பண்றேன்… கவலைப்படாதே கமலி… ஏதாவது கதவு திறக்கும்மா.”
“”நானும், பழகின எல்லார்கிட்டயும் சொல்லி வைக்கிறேன். பாக்கிற எல்லார்கிட்டயும் பிச்சை எடுக்காத குறையா கேட்டு வைக்கிறேன் ராகினி… எதுவும் நடக்கல… நிலைமை இப்படியே போனா, என்னவாகும்ன்னு நினைச்சே பாக்க முடியலே…”
“”இல்லம்மா… ரெண்டொரு நாள்ல நல்ல செய்தியோட வர்றேன்… வீட்டுக்கு வாயேன்; சாப்பிட்டுட்டுப் போலாம்…”
“”நன்றி ராகினி… இப்பக்கூட டீச்சர் வீட்டுக்கு அப்ளிகேஷன் கொடுக்கத்தான் போறேன்… இன்னொரு நாள் கட்டாயம் வர்றேன்… அம்மு எப்படி இருக்கா?”
“”ரொம்ப பயம், ரொம்ப விளையாட்டுன்னு ஏதோ வளர்றா… எட்டு மணிக்குப் சென்று, ஏழு மணிக்கு வீடு திரும்பறேன்… அவரோ பாதி மாசம் டூர்… வயசான அம்மாவால, கால் வலியோட போராடவே நேரம் போறலே… அம்மு, ஏதோ காட்டுச்செடி போல வளர்ந்துகிட்டு இருக்கா…”
“”கவலைப்படாதே ராகினி… வளர வளர தானா சரியாகும். வர்றேன்…” என்று, எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, உயிரற்ற புன்னகையுடன் அவள் விடை பெற்றாள்.
உலகம் எவ்வளவு பொய்மையானது, எவ்வளவு கயமையானது என்பதை, அடுத்து வந்த தினங்கள் எனக்கு உணர்த்தின.
பிளஸ் டூவில் ஆயிரத்து நூறு வாங்கிய கமலிக்கு, ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலையைத் தர, இந்தச் சமூகம் தயாராக இல்லை. எக்ஸ்போர்ட் கம்பெனி, முப்பது வயதா என்று கையை விரித்தது. கைம்பெண்ணா என்று பாதி மூடநம்பிக்கை கம்பெனிகள் முகம் திருப்பின. “ராத்திரி பத்து மணி வரை கூட ஆகும், கடையை மூட… அதுவரை இருப்பாங்களா?’ என்று நோட்டம் விட்டன சில கழுகுக் கண்கள்.
சே… 40 ஆண்டுகளாக நிலவில் அமெரிக்கக் கொடிகள் பறக்கிறதாம். ஆனால், தமிழ் படித்த ஒருத்திக்கு, அந்த நிலவின் கீழ் நின்று கஞ்சி குடிக்கக் கூட வழியில்லை. சட்டத்திலும், சமூக அமைப்பிலும், ஆயிரம் ஓட்டைகள். பொதுப் பார்வை, பொதுப்புத்தி என்று, பல முட்டாள் தனங்கள்.
“”அம்மா ஒரு நிமிடம்…”
திரும்பினேன். அம்மு நின்றாள். ஒயிலாக, தெளிவாக ஒரு புன்னகை அவளிடம். ஒரு வேளை பிரமையா?
“”என்னடா அம்மு?”
“”லீவுதானே உனக்கு, இன்னிக்கு?”
“”ஆமாண்டா கண்ணு…”
“”மார்க்கெட் போலாமா?”
“”போலாமே… ஹேர் பேண்ட் வாங்கணுமா?”
“”தோட்டத்துல வைக்க சின்ன கூண்டு தயாரிக்கப் போறேன்… பறவைகளுக்கு தண்ணி, கடலை, பொரி இப்படி உணவு வைக்கப் போறேன். அதுக்கு சில பொருட்கள் வாங்கணும்மா…”
“”அட… வெரி குட். 4.00 மணிக்கு போலாமா?”
“”நன்றிம்மா…” என்று துள்ளிக் குதித்து ஓடியவளிடம், ஏதோ புதிய அழகு தெரிந்த மாதிரி தோன்றியது.
“”கவனிச்சியா ராகினி?” என்றபடி, கீரைக் கட்டுடன் வந்தாள் அம்மா.
“”என்னம்மா?”
“”வாசல்ல வந்த கீரையை அம்முதான் வாங்கினாள்… அதுவும், ஒரு கட்டு பத்து ரூபாய் கொடுத்து… எட்டு ரூபாய்க்கு கேக்க வேண்டியதுதானே, அதுவும், “நீ சாப்பிடாத கீரைக்கு, எதுக்கு பத்து ரூபாய்’ன்னு கேட்டேன்… என்ன சொன்னா தெரியுமா?”
“”என்னம்மா சொன்னா?” என்றேன் ஆர்வத்துடன்.
“”கீரைல இரும்பு, வைட்டமின்னு எல்லா சத்தும் இருக்காம். பெண் குழந்தைகள் கட்டாயம் சாப்பிடணுமாம்… அடுத்ததா ஒண்ணு சொன்னா பாரு, அதுதான் என்னை மலைச்சுப் போக வெச்சிட்டது…”
“”சொல்லும்மா…”
“”பிச்சைபோடறதை விட, உதவுறதுதான் சிறந்த பண்பாம். நம்மைச் சுற்றியிருக்கிற காய்கறிக்காரர், இஸ்திரிக்காரர், பால்காரர், பழக்காரர்ன்னு உழைச்சி சாப்பிடற நல்லவங்களுக்கு பெருந்தன்மையா உதவணுமாம்… குகன் மாதிரி படகுக்காரர்கிட்ட, ராமர் நடந்துகிட்ட மாதிரியாம்!”
“”அம்முவா இப்படியெல்லாம் பேசறா?” என்றேன். திகைப்பும், பரவசமும் ஆட்கொண்டன.
“”பேசறது மட்டுமில்லயே, நடந்துக்கறாளே…” என்றாள் அம்மாவும் புன்னகையுடன்.
“”அம்மா… அந்த பூனையை பாத்தா, தெனாலி ராமன் கதையில் வர்ற பூனை மாதிரியே இருக்குல்ல?’ என்று, சிரித்தபடியே என் கை பற்றி நடந்தாள் அம்மு.
என்ன அழகிய மாற்றம் இது? அம்முவிற்குள்ளிருந்து புதிதாக வெளிப்பட்டிருக்கும் இந்த பொறுப்பான, ரம்மியமான, அக்கறையான, நேயமிக்க குணங்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? பாறையை செதுக்கி, அதன் உள்ளிருந்து மயிலையும், மானையும் உருவாக்குவது போல, என் பெண்ணிலிருந்து ஒரு வேலுநாச்சியாரையும், நைட்டிங்கேலையும் மீட்டெடுத்தது யார்?
பறவைக் கூண்டிற்கான பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும்போது, “”கண்ணு… உன் ஸ்கூல்ல புது டீச்சர் யாராவது வந்திருக்காங்களா?” என்றேன்.
“”இல்லையேம்மா…”
“”புது தோழி?”
“”இல்லை… இல்லை…”
“”லைப்ரரில புக் எடுத்து படிக்கிறீயா?”
“”இல்லம்மா… ஏம்மா கேட்கிற?”
பதில் சொல்வதற்குள், அவள் திடீரென்று நினைவு வந்தவள் போல, “”அம்மா ப்ளீஸ்… அத்தை வீட்டுக்குப் போலாம்மா. துருவன் கதை சொல்றதா சொல்லியிருக்காங்க அத்தை. அதோ அந்த வீடுதாம்மா…” என்று, பரபரப்புடன் கைகாட்டினாள்.
அது கமலியின் வீடு!
என்ன சொல்கிறாள்? அத்தை என்கிறாள், கதை என்கிறாள். அதிலும், துருவன் என்கிற நெகிழ்ச்சியான நட்சத்திரக் கதை!
கமலியிடம் அன்று பெரிதாகச் சொன்னேனே தவிர, என்னால் ஒரு துரும்பைக் கூட அவளுக்காக அசைக்க முடியவில்லை. சங்கடமும், வேதனையுமாக, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், இதென்ன, கமலியின் வீடு மாறியிருக்கிறதே! முன்பக்கம் புதராக இருந்த இடத்தில், கச்சிதமாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை. சின்ன சின்ன நாற்காலிகள், கரும்பலகை, வாசலில் வர்ணப்பறவைகள் போல, சிறுமிகளின் சைக்கிள்கள். டியூஷனா எடுக்கிறாள்? வாய்ப்பில்லையே, பிளஸ் டூவுடன் படிப்பை நிறுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டவள் ஆயிற்றே!
“”வா ராகினி… வா…” என்று மலர்ச்சியும், மகிழ்ச்சியுமாக ஓடி வந்து கைகளைப் பற்றிய கமலியை, வியப்புடன் பார்த்தேன்.
தெளிவான முகம், சீரான கூந்தல், மெல்லிய பொட்டு, முறுவல் இதழ், நயமாக உடுத்தப்பட்ட பச்சை நிற பருத்திப் புடவை என்று, பாந்தமான தோற்றத்தில் அழகாக நின்றாள் கமலி.
“”நாந்தான் ராகினி…” என்று நிமிர்ந்து பார்த்தாள்.
“”எல்லாமே அழகா மாறியிருக்கு கமலி… என்னம்மா, எப்படி இந்த மாஜிக்?”
“”மாஜிக்…” என்று சிரித்து விட்டு, மென்மையாக கை பற்றினாள்.
“”மானம், மரியாதையை இழக்காம, பெரிய வேலையும் வாங்க தகுதியில்லாம, பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவது எப்படின்னு தெரியாம, தவியா தவிச்சேன் ராகினி… ஒரு நாள் மாடி வீட்டு டாக்டரம்மா குழந்தை அழுதிட்டேருந்தது. தூக்கிட்டு வந்து கதை சொன்னேன்… அழுகை நின்னு, கபகபன்னு பசிச்சு எங்க வீட்டு மோர் சாதத்தை அள்ளி அள்ளி சாப்பிட்டது…
“”தினம் ராத்திரி ஆனா போதும். எங்க வீட்டுக்கு வந்துடும்… கதை கேட்டுட்டுத்தான் போகும்… இப்படியே அக்கம் பக்கம் எல்லாம் தெரிஞ்சு, நிறைய குழந்தைகள் வர ஆரம்பிச்சது. அப்பதான் எனக்கு பொறி தட்டியது. கதை சொல்றதையே முறையா ஆரம்பிச்சா என்னன்னு… வீட்டு கூடத்துலதான் ஆரம்பிச்சேன்… மளமளன்னு குழந்தைகள் சேர்ந்துட்டாங்க…”
அவளையே கவனித்தேன்.
“”உலகப் பொருளாதாரம், உலகமயமாக்கல்ன்னு என்னென்னமோ நடந்து, வாழ்க்கை சிக்கலாகி விட்டது. கணவன் – மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போனால் தான், கடனில்லாம வாழ முடியும் என்கிறது தான் நிலைமை…
“”இந்த கால கட்டத்துல, குழந்தைகள் உலகத்துல நுழைந்து, குழந்தையா வாழ, யாருக்கும் நேரமில்ல. அந்த இடத்தை நிரப்பறது மூலமா, இது ஒரு சமுதாயப் பணியாவும் இருக்கும்ன்னு தோணிச்சு… இவ்வளவு பீஸ்ன்னு கறார் பண்ணதில்ல… ஆனா, சத்தியம் என்னை காப்பாத்திட்டது ராகினி…
“”இதிகாச கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கைக் கதைகள், தேசபக்தி கதைகள்ன்னு கேட்கிற குழந்தைகள்கிட்ட கம்பீரமான மாற்றம் தெரியுது… மகிழ்ந்துபோய் பெற்றோர் மனசார சம்பளம் கொடுக்கின்றனர்… உன்னால நம்ப முடியுதா ராகினி?”
கரகரப்புடன் கேட்டவளை அணைத்துக் கொண்டு, “”நம்பறதா… நானே சாட்சி கமலி… அம்மு என்ற, நீ செதுக்கின சிற்பத்தின், அம்மா இல்லையா நான்?” என்றபோது, என் வார்த்தைகளும் கரகரத்திருந்தன.

– வானதி (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *