கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 4,892 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

புல்வெளியில் நான்கு சேர்கள் போடப்பட்டு சுபத்ராவை தவிர்த்து அனைவரும் அமர்ந்திருந்தனர்.

ரேகா கார்ட்லஸ் போனுடன் ஏகாம்பரத்தை நெருங்கினாள்.

“சார்.. கால் பார் யூ!”

ஏகாம்பரம் வாங்கி காதில் வைத்தார்.

“ஹலோ..”

“…”

“ஹலோ.. சம்மந்தி சொல்லுங்க” குரலில் அளவிட முடியாத மகிழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் வெளி வந்தது.

“கடவுள் போட்ட முடிச்சை மாத்த முடியுமா? நம்ம எண்ணப்படியே.. நம்ம பிள்ளைங்க மனசுலேயும் இப்படியொரு எண்ணம் இருக்கிறதுன்னா.. கடவுளோட அனுக்கிரஹம் இல்லாம வேறென்ன இருக்க முடியும்?”

“…”

“ஆமாமா.. முறைப்படி ஏற்பாடு செய்திடலாம். சரிங்க சம்மந்தி..வெச்சிடட்டுமா?” பேசி முடித்து வைத்தார்.

“போன்ல யாருங்க”

“தெரியாத மாதிரி கேப்பியே. என் வாயால் சொல்லணும் அப்படித்தானோ? திருவேங்கடம்தான் பேசினார். அவரும் விஷயம் கேள்விப்பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்.”

“எப்படியோ.. எல்லாமே நல்லவிதமா முடிஞ்சா சரிதான். நம்ம சுபியோட முகத்தைப் பார்த்தீங்களா? ரொம்ப சந்தோஷமாயிருக்கா. பழையபடி காலேஜுக்குப் போய் வர்றா!”

“சுசீலா உயிரோட இருந்திருந்தா அவளும் கல்யாணமாகி கணவன், குழந்தைன்னு நம்மளோட சந்தோஷத்தை பங்கு போட்டுக்கிட்டிருப்பா..ஹும்…அற்பாயுசுல போய்ட்டா எம்பொண்ணு” ஏகாம்பரத்தின் தொண்டை கரகரத்தது.

“ஆமாங்க..நம்ம பொண்ணு சாவுக்கு நாமே காரணமாய்ட்டோம். எந்த தாய் தகப்பனும் செய்யத் துணியாத காரியத்தை நாம செய்துட்டோம். பெத்த பொண்ணை விட வயித்துப் பசிதானே பெருசா தெரிஞ்சது.அம்மாடி.. சுசீலா” அம்பிகா உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.

அந்த அழுகை ரேகாவை சஞ்சலப்படுத்தியது. ஓடிப்போய் அவள் கண்ணீரை துடைக்க வேண்டும் போல் கை பரபரத்தது.

குடும்பம் மொத்தமும் வேதனையின் பிடியில் நெகிழ்ந்திருக்க கனகா எதேச்சையாக நிமிர்ந்தாள். ரேகா அங்கேயே நின்றிருந்தது கண்டு சினந்தவள், “ரேகா இப்படி வா” என்று முன்னே நடக்க பின் சென்றாள் ரேகா.

“என்னடி படிப்பு படிச்சே? நாங்கதான் முக்கியமான விஷயம் பேசிக்கிட்டிருக்கோம்னு தெரியுதில்லே. அந்த இடத்தை விட்டு போகணும்னு தோணாதா? அப்பாம்மா பேர் தெரியாத அனாதைங்களையெல்லாம் வேலைக்கு சேர்த்தா.. இப்படித்தான். போ.. போய் வேற வேலையப் பார்.. போ” முகத்தில் வெறுப்பை தேக்கி விரட்டினாள் கனகா. நெஞ்சம் கனக்க.. தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் ரேகா.

கனகா மறுபடி வந்தமர்ந்து கொண்டாள்.

அம்பிகா விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள். தினேஷ் மனபாரத்துடன் கன்னத்தில் கைதாங்கி இருந்தான். சற்று முன் இருந்த கலகலப்பு அங்கிருந்து மொத்தமும். விடை பெற்றிருந்தது.

ஏகாம்பரம் தழுதழுப்புடன் ஆரம்பித்தார்.

“செல்வத்திற்குப் பின் வறுமை வருவதைக் காட்டிலும் வறுமைக்குப்பின் செல்வம் வருவது மேல். ஆனா ரெண்டு கால கட்டமும் நம்ம குடும்பத்துக்கு வந்ததுதான் என் சுசீலாவுக்கு எமனாயிடுச்சு. ஏழையாயிருந்து செல்வத்தை பார்த்திருந்தா..பசியும், கவுரவமும் ஒரு பொருட்டாயிருந்திருக்காது. ஆனா, பணக்காரனாயிருந்து ஏழையாகும்போது… றுபடி பணக்காரனாகணும்ங்கற வெறி பாசத்தை பின்னுக்குத் தள்ளிடுச்சு. என் மகளை இழக்க முக்கியமான காரணம் என்னோட பணத்தாசைதான். என்னோட பணத்தாசைதான். நான் கொலைகாரன், பேராசைக்காரன். எனக்கு மன்னிப்பே கிடையாது அம்பிகா.” தவையின் மடேர் மடேர் என்று அடித்துக் கொண்டார் ஏகாம்பரம்.

பதறிப்போன அம்பிகாவும், தினேஷும் அவர் கையை பற்றி தடுத்தனர்.

“என்னப்பா இது?”

”மனசை போட்டு அலட்டிக்காதீங்க. தலை விதி. இப்படியொரு காரணத்தை காட்டி சுசீலாவை நம்மகிட்டயிர்ந்து பறிச்சுடுச்சு. நீங்க உங்க சுயநலத்துக்காக அந்த காரியத்தை பண்ணலையே. பிள்ளைங்களோட் பசியை பொறுத்துக்க முடியாமதானே? அந்த கசப்பான நாட்களை நாம மறக்க முயற்சிக்கறதுதான் நல்லது” என்றாள் அம்பிகா.

“முடியலே அம்பிகா. குற்ற உணர்வு நெருஞ்சி முள்ளாய் நெஞ்சிலே உறுத்திக்கிட்டேயிருக்கு. எப்படி மறக்க முடியும் சொல்லு.”

அங்கு கனத்த மவுனம் சூழ்ந்தது. ஒவ்வொருவர் மனத்திரையிலும் கசப்பான அந்த நாட்கள் மறுபடி ஒருமுறை வந்து போனது.


கல்லிடைக்குறிச்சி!

எங்கு திரும்பினாலும் பச்சை பசேர் என்ற பசுமை. அந்த ஊரில் பாதி நிலம் ஏகாம்பரத்துக்கு சொந்தமாயிருந்தது. பணம், ஆள் அம்பு என்று ராஜபோக வாழ்க்கை. விஸ்தாரமாய் காரைக்குடி செட்டியார் வீடுகளைப்போல் முழுக்க தேக்கும் ரோஸ்வுட்டுமாய் இழைத்து கட்டப்பட்ட வீடு. கட்டை விரலில் போட என்னவோப் போலிருந்ததால் மற்ற எட்டு விரல்களிலும் வைர மோதிரங்கள் மின்னும் ஏகாம்பரத்திற்கு.

தினேஷ், சுசீலா, சுபத்ரா என்று அருமையாய் அழகாய் மூன்று குழந்தை செல்வங்கள். நல்ல மனைவியாய் நல்ல தாயாய் நிறைவாய் குடித்தனம் நடத்தினாள் அம்பிகா.

தினேஷிற்கு ஒன்பது வயது சுசீலாவுக்கு மூன்று வயது. சுபத்ராவுக்கு ஒரு வயது. அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருந்தாலும் கொஞ்சம் கூட கர்வமோ, பணத்தாசையோ அம்பிகாவிடம் இருந்ததில்லை.

ஏகாம்பரம் எல்லாரையும் எப்போதும் அதட்டிக் கொண்டே வேலை வாங்கினால்தான் அவருக்கு பொழுதுபோகும். அம்பிகாவிடம் இல்லாத திமிரும், கர்வமும், பண ஆசையும் அவரிடமிருந்தது. கொஞ்சம் அப்படி இப்படி என்றிருந்தார். நண்பர்கள் யாரேனும் வந்து விட்டால் அன்று வெளிநாட்டு சரக்கு தண்ணீராய் ஓடும்.

ஏகாம்பரத்தின் ஏகபோக வாழ்க்கையின் முன் பவ்யமாய் முதுகு வளைத்து நின்றவர்களில் ஒருவர் மட்டும் அவரை நிமிர்ந்து பார்த்தார். அவர் முதுகில் குத்த சரியான சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருந்தார்.

அவர் வேறு யாருமல்ல! ஏழுமலை. ஏகாம்பரத்தின் தம்பி. இருவருக்கும் தந்தை ஒருவரே! தாய்தான் வேறு வேறு. ஏகாம்பரத்தின் தந்தைக்கு சட்டபூர்வமான மனைவியை தவிர, வைப்பாட்டியான கமலத்திற்கும் ஒரு மகள் உண்டு. அது ஏழுமலை. முதல் மனைவி அன்னலட்சுமியின் பூர்வீக சொத்துதான் திருமணத்திற்கு பின் அவள் கணவர் நாகேந்திரனுக்கு வந்தது. அவர் மரணத்திற்கு பிறகு சட்டப்படி அனைத்து சொத்துகளும் ஏகாம்பரத்திற்கு போய் சேர… கமலாவும் ஏழுமலையும் நாகேந்திரன் வாங்கிக் கொடுத்த சிறிய மச்சு வீடும், சொற்ப விளை நிலங்களுமாய் வாயடைத்து நின்றனர். பஞ்சாயத்து மூலமும் கேட்டுப் பார்த்தனர். ஏகாம்பரம் ஒரு பிடி மண் கூட தர மறுத்து விட்டார். அதே கவவையில் போய் சேர்ந்தாள் கமலா.

கமலாவின் இறுதி சடங்கில் கூட கலந்துக் கொள்ளவில்லை ஏகாம்பரம். அவர் மீது மேன்மேலும் வன்மம் கூடியது.

‘உன்னை போண்டியாக்கி நடுத்தெருவில் நிற்க வைக்கவில்லை என்றால்….நான் நாகேந்திரனுக்கே பிறக்கவில்லை’ என்று சபதம் செய்து கொண்டான் ஏழுமலை.

சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான். அமைந்தது. திட்டம் போட்டு காயை நகர்த்திய ஏழுமலை சினிமாவில் வருவதுப்போல் ஆட்களை ஏற்பாடு செய்து நகரின் விருந்தினர் மாளிகைக்கு ஏகாம்பரத்தை வரவழைத்தான். வெளிநாட்டு சரக்கும், சில ஆயிரம் ரூபாய்க்கு வாடகை பேசி வரவழைக்கப்பட்ட சினிமா நடிகையும் போதுமானதாய் இருந்தது ஏகாம்பரத்தை கவிழ்க்க.

தன்னை மறந்திருந்த நிலையில் நடிகை காட்டிய வெற்றுத்தாள்களில் எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார் ஏகாம்பரம். மறுநானே குடும்பத்துடன் நடுத்தெருவில் நின்றார் ஏகாம்பரம்.

நினைத்ததை சாதித்து விட்ட ஏழுமலையை சட்டத்தின் மூலமாகவும் நெருங்க முடியாமல் திணறிப் போனார். பனித்துளியைப் போல் நொடியில் காணாமல் போன செல்வத்தையும் கவுரவத்தையும் எப்படியாவது மீட்டு விட துடித்தார்.

ஆனால், எப்படி?

வழிதெரியாமல் தவித்தார்.

மனைவியும், குழந்தைகளும் பட்டினியால் வாடி போயினர். கையிலிருந்த கொஞ்ச நஞ்ச நகைகளும் கரைந்து போக…. அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாமல் போனது. குழந்தை சுபத்ரா பாலுக்காக அழுதழுது தொண்டை கட்டிக் கொண்டது. தினேஷ் மூலையில் சுருண்டு படுத்தவன் படுத்தவன் தான். சுசீலா சோர்வில் உறங்கிப் போனாள்.

அம்பிகா கதறி அழுதாள். ஏகாம்பரம் வேதனையுடன் மனைவியை ஆறுதல் படுத்தினார்.

“மன்னிச்சிடு அம்பிகா! என்னோட சின்ன புத்திக்காக கேடு கெட்ட ஆசைக்காக கிடைத்த தண்டனை பெரிசும்மா! கேவலமான மனுஷனா இருப்பதை விட ஒரு நல்ல குரங்காயிருக்கலாம். நான் கேவலமான மனுஷனா இருந்தேன். கடவுள் என்னை மட்டும் தண்டித்திருக்கலாம். என் பிள்ளைகளை ஏன் தண்டிக்கணும் அம்பிகா? நாம் வாழணும்.. வாழ்ந்து காட்டணும்! முன்பை விட செல்வாக்காய் எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டணும்” ஏகாம்பரத்தின் கண்களில் உறுதி பளிச்சிட்டது.

“எப்படிங்க முடியும்? குழந்தைங்க பசியிவே மயங்கி கிடக்கறாங்க… அதுங்க பசியை போக்க ஏதாவது வழியிருக்கான்னு பாருங்க…!”

“நான் யாருக்கும் கெடுதல் பண்ணவே! அடுத்தவன் சொத்தை ஏமாத்தி அபகரிச்சுக்கலே. கடவுள் நமக்கு கை கொடுப்பார். நம்பிக்கையோட இரு! நான் கோவில் வரைக்கும் போய் வர்றேன். நைவேத்தியம் பண்ணினதை தர்றேன்னு குருக்கள் சொல்லியிருந்தார். நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்” என்று கூறிவிட்டு வெளியேறிச் சென்ற கணவனை நெஞ்சு வெடிக்க பார்த்தாள் அம்பிகா.

‘வாரி வாரி கொடுத்த எம்புருஷன் இன்னைக்கு… கையேந்தி நிற்கிறாரே என்று!’


கோவிலில் கூட்டம் அதிகமில்லை. கையில் உணவுப் பொட்டலத்துடன் கோவில் தெப்பக்குளத்தை தாண்டிய ஏகாம்பரம்… அந்த அழுகுரல் கேட்டு நின்றார். எட்டிப்பார்த்தார். கணவன், மனைவி போலும். அவருக்கும் இவர் வயசுதான் இருக்கும்.

அழுது கொண்டிருந்த மனைவியை தேற்றிக் கொண்டிருந்தார்.

“புஷ்பா… அழாதே புஷ்பா… ப்ளீஸ்!”

“எப்படிங்க அழாம இருக்க முடியும்? பத்து வருஷமாகியும் குழந்தை பிறக்கலேன்னா… அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்? நம்ம ரெண்டு பேர்கிட்டேயும் எந்த குறையும் இல்லேன்னு டாக்டர்கள் சொல்லிய பிறகும்…உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க என்னை குறை சொல்றாங்க!”

“அவங்களைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே புஷ்பா? நான் உன்னை ஒரு சிறு வார்த்தையாவது சொல்லியிருப்பேனா?”

“அந்த அன்புக்காகத்தாங்க நான் இன்னும் உயிரோட இருக்கிறேன்!”

“புஷ்பா… நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?”

”சொல்லுங்க!”

“நமக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது. அது பிறக்கும் போது பிறக்கட்டும். ஆனா, இப்ப… நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தா என்ன?”

“…”

“என்ன புஷ்பா பதிலேக் காணோம்!”

“இப்படியொரு எண்ணம் கொஞ்ச நாளா என் மனசுக்குள்ளேயும் இருந்ததுன்ன நம்புவீங்களா?” என்றாள் வியந்து.

“நிஜமாவா சொல்றே”

“ஆமாங்க! ஆனா, அதை உங்ககிட்டே சொன்னா சண்டைப் போடுவீங்களோன்னு பயந்தேன்.”

“சேச்சே… தத்து எடுக்கறது மிகப்பெரிய நல்ல காரியமல்லவா? நம்மிடம் ஏகப்பட்ட பணமிருக்கிறது. நம் வசதிக்கு பத்து அனாதை பிள்ளைகளைக் கூட தத்து எடுத்து வளர்க்கலாம்!”

“ஆனால், ஒரு விஷயம்!”

“என்னம்மா?” என்றார் வாஞ்சையாய்.

“நாம் தத்து எடுக்கப் போவது நிச்சயம் ஒரு அனாதைக் குழந்தையாய் இருக்கக்கூடாது!”

“புரியலே…!”

“நாம பாரம்பரியமான கவுரமான குடும்பத்தை சேர்ந்தவங்க. நாம் தத்து எடுக்கப்போகிற குழந்தையும் நல்ல குடும்பத்துல…நல்ல ஏத்தத்துல உருவாகினதா இருக்கணும். அனாதை ஆஸ்ரமத்துல… கண்ட வழியிலே உருவாகின குழந்தைகளை வீசிட்டுப் போறாங்க. அப்படிப்பட்ட குழந்தை நமக்கு வேண்டாம்”.

“நீ சொல்றது சரியானாலும்… பெத்தவங்களிடம் நேரடியாக போய் தத்து எடுப்பது சிரமமான விஷயமில்லையா?”

“பத்திரிகையில் விளம்பரம் தரலாம். நாட்டில் எத்தனையோ பேர் குழந்தைகளை சவசவன்னு பெத்துட்டு வளர்க்க முடியாம. சிரமப்படறாங்க? அவர்களில் ஒருவர் கூடவா நம்மைத் தேடி வரமாட்டாங்க?”

புஷ்பாவின் யோசனைக்கு கோபாலன் தலையை ஆட்டி யோசித்தார்.

இவையத்தனையும் காதில் விழ…ஏகாம்பரத்திற்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.

தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர், அந்த தம்பதிகளை நோக்கி நடந்தார்.

அத்தியாயம்-8

“முடியாது…முடியாது… நீங்கள் சொல்றதுக்கு என்னால ஒத்துக்க முடியாது!” உடல் நடுங்க… குஞ்சுகளை தன் பரந்த சிறகால் மூடும் பெட்டைக் கோழியைப் போல் மூன்று குழந்தைகளையும் சேர்த்தணைத்துக் கொண்டாள் அம்பிகா.

“அம்பிகா… நான் சொல்றதை நிதானமா கேள்!”

“நான் எதையும் கேட்க தயாராய் இல்லை! நீங்கள்லாம் ஒரு மனுஷனா? பெத்த குழந்தையிலே ஒண்ணை வித்துடலாம்னு எப்படி சொல்ல முடிஞ்சுது ஐயா! எந்த தகப்பன் வாயிலேயாவது வருமா இப்படியொரு வார்த்தை? ஆட்டுக்குட்டிகளை விற்பதுப்போல் விற்க துணிந்து விட்டீர்களே! நான் பெற்றது ஆடோ, மாடோ அல்ல சாமி! பிள்ளைகள்! உயிருள்ள… பேசும் குழந்தைகள்!”

“அம்பிகா… நீ என்னை புரிஞ்சுக்காம பேசறே! எனக்கு மட்டும் நம் குழந்தைகள் மீது அன்பில்லை என்றா நினைக்கிறாய்?”

“ஆஹா.. அதான் தெரிந்துக் கொண்டேனே உங்கள் அன்பை!” கசப்புடன் வந்தன வார்த்தைகள்.

“நம் குழந்தைகள் மீது நீ எந்தளவு அன்பை வைத்திருக்கிறாயோ… அதைவிட பன்மடங்கு நானும் வைத்திருக்கிறேன்!!”

“அப்புறம் ஏன் இப்படியொரு முடிவு எடுக்க வேண்டும்?” ஆதங்கத்துடன் கேட்டாள்.

”நம் குழந்தைகளில் ஒன்று எங்கோ ஒரு மூலையில் குபேர வாழ்க்கை வாழப்போகுது அம்பிகா! நீயே யோசித்துப்பார்! எப்படி வாழ்ந்தோம்? ஒரு சிட்டிகைப் போட்டால் பத்து வேலையாட்கள் நின்ற காலம் போய்.., இன்று பசியோடு மூலையில் முடங்கி கிடக்கிறோம். உன் கழுத்தில் தொங்கிச் கொண்டிருந்த தாலி கூட மஞ்சள் துண்டாய் – மாறிவிட்டது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கோவிலில் போய் கையேந்தி வாங்கிக்கொண்டு வருகிறேன்! இந்தளவு கேவலமாக வேண்டுமா நம் நிலைமை?”

“…..”

“இந்த ஊரில் எந்த விதத்திலும் பிழைப்பு நடத்த முடியாதபடி ஏழுமலை எனக்கெதிராய் சதி செய்கிறான். அதனால் உழைத்தும் என்னால் காப்பாற்ற முடியவில்லை, எனக்கு சென்னையில் நம்பிக்கையான நண்பர் ஒருவர் இருக்கிறார். கிரானைட் தொழிவில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு என் கையில் ஒரு லட்சம் இருந்தால் போதும். மாதம் பத்தாயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம். நாம் பழையபடி இழந்தவைகளை மீட்கலாம். அந்த ஏழுமலையைக் கூட என்னால் விலைக்கு வாங்க முடியும்!”

“அதற்காக…என் குழந்தையை விலைக்குத் தரச் சொல்கிறீர்களா? என்னால் குடியாது அதற்கு பதில் என் உயிரை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளுங்கள்.”

“அம்பிகா…நீ சுமந்து பெற்றவள். உன் வேதனை எனக்குப் புரிகிறது. தாய்ங்கற பாசம் மனுஷங்ககிட்டே மட்டுமல்ல.. மிருகத்திடமும், பிராணிகள், பறவைகளிடமும் கூட இருக்கிறது. நாயும், பூனையும் குட்டிப் போட்டா… பக்கத்துல யாரையும் சேர்க்காம காவல் காக்கும். ஆனா, பத்தியத்துக்காக தன் குட்டிகள்ல ஒண்ணை தானே தின்னுடறதே…. அதுக்காக… அதுக்கு குட்டிகள் மேலே பாசமில்லேன்னு ஆகிடுமா?. தாய் நல்லாயிருந்தா தானே குட்டிகளை பாதுகாக்க முடியும்?”

“நாயும், நானும் ஒண்ணாகிட முடியுமா? என்னங்க பேச்சு போறீங்க? நீங்க செய்ய நினைக்கற அநியாயத்துக்கு நியாயம்னு நிறம் பூசி ஏமாத்த நினைக்காதீங்க! என்னிடமிருந்து என் குழந்தைய பிரிக்க நினைச்சிங்கன்னா… அடுத்த நிமிஷமே என் உடம்பிலேர்ந்து உயிர் பிரிஞ்சிடும்”

“அம்பிகா.. என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா?” பரிதாபமாய் கேட்டார்.

”புரிஞ்சுக்கிட்டேங்க! எப்படியாவது பணத்தை சம்பாதித்தே ஆகணும்ங்கற வெறியிலே பாசத்தை காலடியிலே போட்டு கல்லா மாறிப்போய்ட்டீகன்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்”.

“கடைசியா என்னதான் சொல்றே?”

“உங்க எண்ணத்தை மாத்திக்குங்க!”

“என்னை பிச்சைக்காரனாவே கடைசி வரை பார்க்கணும்னு முடிவுப் பண்ணிட்டியா?”

“ஒரு பாட்டில் விஷம் வாங்கிட்டு வாங்க! சாப்பிட்டுட்டு நிம்மதியா போய் சேர்ந்திடலாம்!”

“ஏன் அம்பிகா! செத்தாலும் பரவாயில்லே…மண்ணுக்குத் தந்தாலும் பரவாயில்லே.. குழந்தையில்லா ஒரு பெண்ணுக்கு உன் குழந்தைய தரமாட்டேயில்லே? உன் மனசென்ன கல்லா?”

“இந்த விஷயத்திலே கல்வாயில்லேன்னா…தாயா இருக்க எனக்கென்னங்க தகுதியிருக்கு? ஒரு நல்ல தாய்… புருஷனைக் கூட விட்டுத் தந்தாலும் தருவாளே தவிர.. பெத்த குழந்தைய விட்டுத்தர மாட்டா!”

“புரிஞ்சுக்கிட்டேன் அம்பிகா! உனக்கு என் மேல எள்ளளவும் அக்கறையில்லே! சொந்த பந்தம் நம்ம புருஷனை ஏமாத்தி நடுத்தெருவிலே நிறுத்திடுச்சே… அவங்க முகத்துல கரியை பூசி… என் புருஷனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர்றேன்னா இல்லையாப் பார்னு உனக்கு தான் முதல்ல துடிக்கணும். ஆனா, உனக்கு என் மேல எந்த அக்கறையுமில்லே! இனி இவனால எந்த உபயோகமுமில்லே.. கையாலாகாதவன்ங்கிற எண்ணம் உன் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. அதனால நான் செத்தாக்கூட உனக்கு கவலையில்லே அப்படித்தானே?” –

“நீங்க குழப்பத்திலே இருக்கீங்க. அவசரத்துல எடுக்கிற எந்த முடிவும் சரியானதா இருந்ததில்லே. படுத்து எந்திரிச்சா.. மனசு தெளியும்.”

ஏகாம்பரம் பதிலேதும் கூறாமல் மனைவியை முறைத்து பார்த்துவிட்டு… அறைக்குள் நுழைந்து உள்தாளிட்டு கொண்டார்.

அவர் கோபம், வேகம், கதவை அறைந்து சார்த்திய விதம்… எல்லாமே அசம்பாவிதமா உணர்ந்த அம்பிகாவின் அடிவயிற்றில் தீப்பற்றிக் கொண்டது.

ஓடிச் சென்று கதவை தட்டினாள்.

“என்னங்க… கதவை திறங்க…!”

“…”

“என்னங்க… சொன்னாக் கேளுங்க..கதவைத் திறங்க!”

அவள் பலமாய் தட்டி, கத்தியும் கூட ஒரு பதிலேதும் வராமல் போகவே பயத்தில் அழ ஆரம்பித்தாள் அம்பிகா.

அவள் அழுவதைப் பார்த்து குழந்தைகளும் அழ ஆரம்பித்தன. அம்பிகா வீட்டின் பின்பக்கமாய் ஓடினாள். மூடியிருந்த ஜன்னலை திறந்துப் பார்த்தவள் திக்கென அதிர்ந்தாள்.

அங்கே… ஏகாம்பரம் உத்திரத்தில் சுருக்கு வைத்துக் கொண்டிருந்தார்.

“ஐயய்யோ…என்ன காரியம்…பண்றீங்க?”.

“நான் மானஸ்தன் அம்பிகா! கவுரவமா ஆசைப்படறவன். என்னால் பிச்சையெடுக்க முடியாது. நான் போகிறேன்”

”அவசரப்படாதீங்க…..சொன்னாக் கேளுங்க! முதல்ல கீழே இறங்குங்க”

“என் மேய அக்கறையில்லாத உன் பேச்சை கேட்பேன்னு எதிர்பார்க்காதே!”

“உங்களைவிட வேற யாருங்க முக்கியம் எனக்கு? நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். முதல்ல இறங்கி வெளியே வாங்க!”

”உன் பேச்சை நான் எப்படி நம்பறது?”

“நம்ம குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன். நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படறேன்!” அழுதபடி சத்தியம் செய்தாள்.

அதன் பிறகே, இறங்கி வெளியே வந்தார் ஏகாம்பரம்.


அமுதழுது முகம் வீங்கிப் போயிருந்தது அம்பிகாவுக்கு. அவளைப் பார்க்கவே ஏகாம்பரத்தின் மனசும் பிசையவே செய்தது. தானொரு அரக்கத்தனம் மிக்க, சுயநலக்கார தந்தையாக நடப்பது அவருக்கே புரிந்தது- ஆனால், இதைத்தவிர அவருக்கு வேறுவழி புலப்படவில்லை. இந்த காலத்தில் அவ்வளவு பெரிய தொகையை அவருக்கு கடனாக கொடுத்து உதவ யாருமில்லை. சென்னை நண்பர் கூட பிஸினஸ் வழிமுறைகளை சொல்லி உதவதான் தயாராய் இருந்தாரே தவிர, பணம் தர தயாராய் இல்லை. அதனால் தான் கடவுளாய் காட்டிய வழியாய் இந்த முடிவிற்கு வந்தார்.

தனக்கு மட்டும் இதில் முழு சம்மதமா என்ன? பெற்ற குழந்தையை பணத்துக்காக விற்பது அரக்கத்தனமல்லவா? ஆனால், கோபாலன் பெரும் பணக்காரர். அதனால் தன் குழந்தை வசதியாய், சந்தோஷமாய் தானே வாழப்போகிறது” என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

அம்பிகா கண்ணீருடன் மூன்று குழந்தைகளுக்கும் பாலை ஊற்றிக் கொடுத்தாள்.

இந்த மூன்று பேரில் யார் பிரியப் போகிறார்கள்? இன்னும் சற்று நேரத்தில் முடிவுத் தெரிந்து விடும். துடிதுடித்த இதயம் வாய் வழியே வந்து விடுமோ என்று அஞ்சினாள் அம்பிகா!

முன்தினமே விவரம் சொல்லியிருந்ததால்… சரியான நேரத்திற்கு கோபாலன், புஷ்பா தம்பதியர் வந்து விட்டனர். அம்பிகா வாயேத் திறக்கவில்லை. ஏகாம்பரம்தான் வரவேற்று பேசினார்.

“உங்களைப்பத்தி இந்த ஊரில் கேள்விப்பட்டேன் மிஸ்டர் ஏகாம்பரம்! வாழ்ந்து கெட்ட குடும்பம் உங்களுடையது. ஒரு நல்ல குடும்பத்திலேர்ந்து தத்து எடுக்கப் போகிறோம்னு நினைக்கறப்ப… ரொம்ப சந்தோஷமாயிருக்கு. உங்க குழந்தைகள்…?” என்றார் கோபாலன்.

“இதோ.. இவங்கதான்! இவன் தினேஷ்… ஒன்பது வயசாகுது… நாலாவது படிக்கிறான்!”

தினேஷைப் பார்த்தனர்.

“விவரம் புரியத வயசு! இவன் வேண்டாம். நாங்க தத்து எடுக்கிற குழந்தை முழுக்க எங்களை பெத்தவங்களா நினைச்சி வளரணும். சின்னக் குழந்தையா இருந்தா நல்லது

“இதோ…. இவபேரு சுசீலா, முணுவயசு. இது சுபத்ரா. ஒரு வயசு தான் ஆகுது!”

”பால்குடி மறக்காத குழந்தைன்னா கஷ்டம்! இந்தக் குழந்தைய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க!'” என்ற புஷ்பா… சுசீலாவை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

விவரம் புரியாத சுசீலா அவளைப் பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பில் புஷ்பா மயங்கிப் போனாள்.

– தொடரும்…

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *