கண்ணாடிக் குருவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 9,786 
 

நாலு சுசியாப்பம், ஒரு சுருள்போளி வாங்கி வந்திருந்தான் நாகராசு. அதை தேவியிடம் கொடுத்து அக்காளிடம் கொடுக்கச் சொல்லியிருந்தான். பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து வந்ததில் கலைந்திருந்த தலைமுடி, ,அரும்பிய வியர்வை, இன்னபிற ஒப்பனைகளை தன் இருகைகளலும் சரிசெய்து கொண்ட தேவி,, நாகராசுவிடமிருந்து வாங்கிய பலகாரப் பொட்டலத்தை, ஸ்டைலாக விரல் நுனியில் கோர்த்துக் கொண்டாள்

” மதனீ .“

வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் முன்பாக குயில்போல ஒரு குரல் விடுத்தாள். தேவி. பின்னால் நாகராசு நின்றான் . சட்டென உள்ளே நுழையமுடியா வண்ணம் நிலைப்படிவரைக்கும் வீட்டுக்குள் ஒருகும்பல் குடியிருந்தது.

உள்ளே கலைஞர் டிவி ஓடிக்கொண்டிருந்தது, முழங்கால்களைக் கட்டிக்கொண்டும், சம்மணமிட்டும், மடிகால் போட்டு உட்கார்ந்து கொண்டும், பள்ளிகொண்ட பரந்தாமனைப் போல படுத்து ஒருகையால் தலையை ஏந்திக்கொண்டும் சிறார்கள் வீடெங்கும் விரவிக் கிடந்தார்கள். ஒருகணம் திகைத்துப்போன தேவி, கண்களை உயர்த்தி வீட்டினுள் மதனியைத் தேடலானாள். மதனிக்கு நாலு பிள்ளைகள் ? உள்ளே ஏழெட்டு தெரிகிறது ! மேகத்தினுள் நகரும் நிலவினைப்போல, மெல்லிசாய் மனசுக்குள் ஒரு கேள்வி பயணித்தது .

வீட்டின் அக்னிமூலையில், அடுப்பையொட்டிய இடத்தில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து இருந்த பழனி, எழுந்து நின்று தங்களை வரவேற்பதை அறிந்த பின்னரே தேவி, இன்னொரு காலையும் வீட்டுக்குள் எடுத்து வைத்தாள். டிவிப்பெட்டிக்கு முன்புறமாய் அமர்ந்திருந்த தெய்வானை நிழருருவம் உணர, திரும்பினாள். இவர்களைக் கண்டதும் புருவம் உயர்த்திச் சிரித்தாள்.

“ வா தேவி, வாடா நாராசு “ அதற்குமேல் என்ன பேசுவதென தீர்மானிக்க முடியாமல் திணறியவள், “ டிவி பாக்கறியா, புதுப்படம் ஓட்றாங்க ” என்றாள்.

தேவிக்கும் உட்காரவேணும் போலத்தான் அசதி இருந்தது. உள்ளே வரமுடியாமல் கதவருகில் நின்றுகொண்டிருந்த நாகராசுவைப் பார்த்தாள்.

நெருக்கடியை உணர்ந்த பழனி, “ டிவிய அமத்தச் சொல்லு தேவான, அவக உள்ள வரட்டும். ஆர்ரா ரிமோட்ட வச்சிருக்கறது ? “ என குரல் உயர்த்த . ..

“ மாதவன் ட்ட இருக்கு பெரிப்பா . .! “ கும்பலில் இருந்து ஒருகுரல் கணீரென ஒலித்தது. உடனடியாய் அங்கிருந்து ஒருகை உயர்ந்தது, சாட்சிக்கூண்டில் நிற்கும் குற்றவாளிபோல ரிமோட் விரைப்பாய் நின்று காட்சி தந்தது.

“ டிவிய அமத்துப்பா, அத்தையும் மாமாவும் உள்ள வரட்டும் “

“ ஓ . ன் . . . ஒன் . !

” ட்டூ .ஊ ஊ . .. .ட்டு . .!

“த்த்ரீ . . . . திரி ! “

பிள்ளைகளின் கோரஸ் ஒலிப் பின்னணியில் டிவியின் ஒளி அணைந்தது.

“ச்சொ ச்சொ “ பிள்ளைகளின் அங்கலாய்ப்பு குருத்தோலையாய்ப் படர்ந்து முகம் தொங்கிப் போனது.

“ படம் சூப்பரா இருந்துச்சுல்ல ? “

“ எப்புடி ? சூரி . !. ‘தாமர தாமர . . வேண்டாந் தாமர, ! “ ஒரு சிறுவன் படத்தின் வசனத்தை பாவனையோடு பேசியும் நடித்தும் காண்பித்தான். “ கடேசில போட்டாம் பாரு ஒரு போடு . .! ஹஹ் ஹஹ் ஹஹ்ஹஹ் “ சொல்லவந்ததைச் சொல்லி முடிக்க இயலாமல் வார்த்தைக்கு வார்த்தை சிரிப்புவந்து மறித்தது.

தேவியின் கையிலிருந்த பலகாரப் பொட்டலம் அனேகமாக அத்தனைபேர் கண்ணிலும் பட்டுவிட்டிருந்தது. அதனை மறைக்கவும் முடியாமல் மதனியிடம் தருவதற்கும் எட்டாமல் ஒரு சின்ன தவிப்பு சுண்டெலியைப்போல விருட்டென மனசுக்குள் ஓடி ஒளிந்தது. அதனை உள்வாங்கிய தெய்வானை , “ கிருத்தியா ! ‘ என ஒரு சிறுமியை எழுப்பினாள். “ தம்பி தங்கச்சிகளக் கூப்புட்டுப்போயி ஒங்க வீட்ல டிவியக் காமி. காமிச்சுட்டு.அப்பறமா வா. அத்த, மாமா வந்திருக்காகள்ல அவக ஒக்காரட்டும் “

கிருத்திகா எழுந்து தனது தம்பி தங்கைகளை இழுத்தாள். “ எந்தீர்ரா . .! . “

“ பெரீம்மா, எங்க வூட்ல டிவி தெரியாது. “ கிருத்திகாவின் கைப்பிடியில் தொங்கிக் கொண்டிருந்த தம்பிப்பயல் ஒருத்தன் பெருங்குரலெடுத்துக் கூவினான்.

“ ஏன் . ? டிவி ரிப்பேரா ? “

“ ரூவா கட்டலேன்னு வயர அத்துட்டுப் போய்ட்டாங்க “

“ சேரி, என்னமாச்சும் கொஞ்சநேரம் வெளாண்ட்டுட்டு வாங்க . “ பழனி மாற்று சொல்ல குறைமனசோடு பிள்ளைகள் நால்வரும் எழுந்து நெட்டி முறித்துக் கிளம்பலாயினர். அப்போது தேவானையின் கடைக்குட்டி “ என்னா வெளாட்டுடா வெளாடப் போறீக ? “ என நிறுத்தி விபரம் கேட்டான்.

“ தெரீலடா “

“ ஜப்பாக்கல் வெளாடலாமா ? எங்கிட்ட ரெண்டு கல்லு இருக்கு. வரியா ! “

“ ம் . “ வேகமாய்த் தலையாட்டினான்.

“ யம்மா நானும் வெள்ளாடப் போறேன் . .! ” சொன்ன வினாடியில் சட்டென ஐந்தாவது நபராகத் துள்ளி எழுந்தான்.

“ யே யே அவனப் பிடிங்கடா . . “ சொல்லிக்கொண்டே தெய்வானை அவனை பிடிக்கப் பாய்ந்தாள். அதற்குள்ளாக அவன் கதவினை எட்டி இருந்தான். கதவருகில் நின்றிருந்த நாகராசு அக்காவின் ஆணைப்படி அவனைப் பிடித்து அலாக்காகத் தூக்கிக் கொண்டான்.

“ அட்ஜேய் மாப்ள , நா, ஒன்னியத்தே பாக்க வந்திருக்கேன். நீ எங்கடி ஓடுறவ ! “ பையன் எடையற்று காற்றாய் இருந்தாலும் மூங்கிலின் வலிமையை அவனது உதறல்கள் நிரூபித்தன.

“ ம் விடு,.! நா வெளாடப் போவணும். “ சிணுங்கியபடி விசும்பினான். அதற்குள் தெய்வானை வந்து அவனை கைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டாள். “ ஒக்காரு ஒரு விசயம் சொல்றேன். “ என ரகசியம் போல அவனது காதில் எதோ சொன்னவள், வாசலில் இறங்கிக் கொண்டிருந்த கிருத்திகாவிடம் மேலும் சொல்லலானாள். “ மறந்துடாம ஒரு மணிக்கெல்லா எல்லாரையும் கூப்புட்டுட்டு வந்திர்ரீ . வாரப்ப மொகங்கழுவி பகுடர் பூசி, தலயச்சீவிக்கிட்டு வரணும் என்னாடீ . ? “

“ சரி பெரிம்மா . ஒரு மணிக்குத்தான . “

“ ஆமா, இப்ப மணி எத்தன ? “

நாகராசு தன் கைபார்த்து “ பைனொன்னு “ என்றான்.

“ ம் பதுனோர் மணியாச்சி. மத்தியானம் அல்லா ஓதுவாங்கள்ல அப்புடியே கெளம்பி வந்துறணும் “

தலையை ஆட்டியபடி பிரியா விடைபெறுவதுபோல நகர்ந்தனர்.

“ கொழுந்தனாரு பிள்ளைக. ! ஆத்தாளும் அப்பனும் கம்பத்துக்கு எதோ ஒரு கேதம்னு போயிருக்காக, பள்ளிக்குடம் லீவு. வேறயா . .? இங்கதே வந்து கெடக்கும்ங்க “ தெய்வானை கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே தேவியிடமிருந்து பலகாரப் பொட்டலத்தை வாங்கிப் பிரித்துவிட்டிருந்தான் பழனி. பிள்ளைகள் நான்கும் அப்பாவை மையமிட்டிருந்தன.

“ தேவான, இந்தா . . ஒந்தம்பி சுசியாப்பம் வாங்கியாந்திருக்கான். எல்லாரும் அம்மா கிட்டக்க வாங்கிக்கங்க ! ‘’ கணவனிடமிருந்து பொட்டலத்தை வாங்கிக்கொண்டவளின் கண்கள் அவன் பக்கமிருக்கும் பண்டத்தை நோக்கின. “ அதென்னாது ? “

“ சுருள் போளி தேவான . ! “ சொல்லிக்கொண்டே ஒரு வெற்றுத்தாள் எடுத்து விரித்து அதில் போளியை வைத்து நொறு நொறுவென நொறுக்கித் தூளாக்கினான்.

தனக்கு மட்டுமென ஒதுக்கிக்கொண்ட கணவனின் செய்கையை மனசுக்குள் குறித்துக் கொண்டு சுசியாப்ப பொட்டலத்தை விரித்தாள். இதை எப்படி பிரிக்க என கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் முழுசாய் ஒரு சுசியாப்பத்தை தூக்கிக்கொண்டு மளிச்சென முயல்குட்டியாய் தாவி ஓடினான் கடைக்குட்டி.

“ அய்யய்ய அய்யய்ய ! முழுசா தூக்கிட்டு ஓட்றான் முழுஸ்சா தூக்கிட்டு ஓட்றான். “ நடுவிலவன் அவனை விரட்டிப் போனான். கண்ணிமைக்கும் பொழுதில் வாசலைத் தாண்டி வீதியில் இறங்கி மறைந்து போனான். அவனைப் பிடிக்க முடியாமல் தொங்கிய முகத்துடன் திரும்பிய நடுவிலவன், தனக்கும் ஒரு முழு சுசியப்பம் வேணுமென்றான். அதற்குள் தெய்வானை இரண்டிரண்டாய் பிய்த்து ஆளுக்கொரு பாகமாகக் கொடுத்து கொண்டிருந்தாள். பிய்க்காத முழு சுசியாப்பம் ஒன்றை மூத்தபெண்ணிடம் தந்து அதனை கிருத்திகாவிடம் கொடுத்துவரச் சொன்னாள். “ அதுகளும் பாத்துருச்சிகள்ல. ஆளுக்குக் கொஞ்சமா எடுத்துக்கறச் சொல்லுடி. “ தன்னுடைய பங்கினை வாங்கிய பிறகே மூத்தவள் போனாள்.

நடுவிலவன் சமாதானப்படவில்லை. தெய்வானைக்கு அவனை சமாதானப்படுத்த முதுகில் ஒன்று போடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. போட்டாள். அழுகை குறையவில்லை. பழனி நொறுக்கிய தனது போளியிலிருந்து கொஞ்சம் அள்ளித் தந்து சமாதானம் செய்தான். மற்ற இரு பிள்ளைகளும் அப்பாவிடம் வந்து கையேந்தி நின்றனர். “ எனக்கு கொஞ்சம் ? “

” ஒங்களுக்கு ? “ நாகராசனையும் தேவியையும் பார்த்துக் கேட்டாள். தேவி தலையை குலுக்கி வேணாமென்றாள். நாகராசு மாமாவுக்குப் பக்கமாய் வந்து உட்கார்ந்தான். நொறுக்கிய சுருளிலிருந்து ஒரு விள்ளல் அள்ளி வாயில் போட்டான். பழனி அவனை முறைப்பது போல ஏறிட்டான்.

“ யேம் மாமா , என்னா தெருவில முக்காவாசிப்பேர் மால போட்ருக்காங்க ? ஆரப்பாத்தாலும் கலர்வேட்டியாக் கட்டீருக்காங்க ! இந்தவர்சம் பக்தி அதிகமோ ? “

“ பொம்பளைகளுமே பாருங்க, நெறைய்யாத்தேந் தெரியறாகாங்க . ! “ தேவியும் கேட்டுவிட்டு தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.

“ எல்லாம் வழக்கமாப் போடுறதுதான். ? ஆம்பளைக அய்யப்பனுக்கும் முருகனுக்கும் போட்டா, பொம்பளைக மருவத்தூருக்குப் போடுவாக .! “ தெய்வானை எஞ்சிய சுசியப்பத்தை எடுத்து வாயில் போட்டு அரைத்தபடி சொன்னாள்..

“ வர்சா வர்சம் கூடுதோ ? “

” சனக்காடு பெருகறப்போ அதும் கூடத்தான செய்யும். ! “

“ ஆனா, மாமா மட்டும் எப்படிக்கா இதுல சிக்காம இருக்கறாரு ? “ நாகராசுவின் அந்தக் கேள்வி பழனிக்கு சட்டென விளங்கவில்லை. மிச்சமிருந்த போளியை கையில் கொட்டி மொத்தமாய் வாயில் போட்டு அதக்கியபடி கேட்டான். “ நீ என்னா சொல்ற ? “

“ ம் . ! சொரக்காய்க்கு உப்பில்லங்கிறான். !. “ இழுவையாகப் பேச்சைத்துவக்கிய தெய்வானை , “ ஊரெல்லா ஆளுக்கொரு தெய்வத்துக்கு மாலயப் போட்டுக்கிட்டு வெரதம் இருக்காங்களே , மாமாக்கு அந்தக் கொடுப்பின இல்லியே . . அது ஏன்னு கேக்கறான். “ தன்னுடைய அங்கலாய்ப்பையும் சேர்த்துப் பதிவு செய்தாள்.

“ அப்பிடியா ? “ ஒற்றைச்சொல்லில் தெய்வானையின் விளக்கத்தைக் கடத்திவிட்ட பழனி, “ நா என்னா பாவம் பண்ணுனே மாப்ள ? பண்ணுன பாவம் ஒண்ணு இருக்குனா அது ங்கொக்காளக் கட்டுனதுதான். “ என அப்பிராணியாய் பதில் சொன்னபோது தேவி பொங்கிவந்த சிரிப்பினை அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.

“ அப்பன்ன கோயிலுக்குப் போறவகளெல்லா பாவஞ்செஞ்சவங்களா ? “ தெய்வானைக்கு சுருக்கென கோவம் வந்தது. ஏற்கனவே பொழப்பு கீழ் புழ்னு இருக்கு. இதுல சாமிய அகமானமாப் பேசி தெய்வகுத்தத்துக்கு வேற ஆளாகணுமா . . ? “

“ சரி, இட்லி தோசைக்கு ஆசப்பட்டுன்னு வச்சிக்கலாமா / மாலபோட்டாத்தே காலையு ராத்திரியும் இட்லிதோச தான சாப்புடுறாக ! “

“ அப்பிடியெல்லாமில்ல சித்தப்பா, “ தேவி பழனியை அப்படித்தான் கூப்பிடுவாள். “ எங்க அப்பாவுக்கெல்லா இட்லி பிடிக்காது. ரவைக்கி சுடுசோறாக்கி கொழம்பு, காய் வச்சு வெரதம் விடணும். “

“ சரி சுடுசோத்துக்கு ஆசப்பட்டு த்தேன்னு வச்சுக்கலாமா ! “ சொன்ன பழனிக்கே சிரிப்பு வந்தது.

: வேணாம் மாமா ரெம்பப் போட்டு தாக்குறீங்க சரியில்ல “ நாகராசன் விரல் நீட்டி எச்சரிப்பதுபோல் பேசினான். அவனுக்கும் இந்த வருசம் மாலைபோடும் எண்ணமிருந்தது. தெய்வானைதான் தடுத்து விட்டாள். “ கலியாணம் முடிச்சு வருசஞ் செல்லல. அதுங்குள்ல என்னாடா அவசரம். மாலபோட்டா கொறஞ்சது ஒரு மாசமாச்சும் சன்னாசியா வெரதமிருக்கணும்.? அதெல்லா ஆடிமுடிஞ்ச கட்டைக செய்யவேண்டிய சோலி. நீ கொஞ்சநாளைக்கி அடங்கு. “ என அடக்கிவைத்தாள்.

“ அட்ஜேய் ஒரு மண்டலம், நாப்பத்தெட்டுநாளு, தண்ணியடிக்கக் குடாது. தப்பித்தவறி பொண்டாட்டியத் தொட்டுறக்குடாது முடியுமா “ உடன் வேலை செய்யும் பலரும் எச்சரித்தனர்.

இதில் தெய்வானைக்கே சில சமயங்களில் மனசு தடுமாறும். தெருவில் முக்கால்வாசிப் பேர் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வீடுகளுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்து கோயிலுக்கு மாலை போட்டுக்கொண்டு கட்டிய தாரத்திலிருந்து கட்டையில் போகிற பெரிசுகள்வரை எல்லோரையும் சாமி சாமி என ஒரு சொல்லில் கூப்பிட்டு புழங்குவதும் . .வீட்டில் இருமுடிகட்டி விபூதித் தட்டேந்தி வீதிவலம் வந்து மலைக்கு வழியனுப்பி வைப்பதும் ஹூம் . அது தெய்வானைக்கு வாய்க்கவில்லை. நிம்மதி னு போ என பலர் சொன்னாலும் கூட அவளுக்கு மனம் ஆறவில்லை.

அந்தநேரம் தெய்வானையின் மூத்தமகள் வீட்டுக்குள் நுழைந்தாள். கூடவே ரெண்டாம் பிள்ளையும். “ யம்மா, கிருத்தியா கிட்டக்க பலாரத்தக் குடுத்துட்டேன் ! “

“ எல்லாருக்கும் பிச்சுக் குடுத்தாளா ? “

“ ம் “

“ இல்ல அவளே முசயும் முழுங்கிட்டாளா ? “

“ நாலு பேருந்தேந் தின்னாக “

“ வீட்ல தான இருக்காளுக .! வெளீல எங்கியும் போகலீல்ல .? “

“ வீட்டுக்குள்ளதே வெளாடிட்டுருக்காக “

“ ஆமாடி. அதுக பாட்டுக்கு காடோ தேசமோன்னு ஊர் சுத்தக் கெளம்பிட்டாளுகன்னா அவக ஆத்த அப்பனுக்கு பதில் சொல்ல முடியாது. “ என்றவள். “ கரெக்டா ஒரு மணிக்குப் போயி கூப்புட்டு வந்திரு. ! என்னா ? “

“ சரிம்மா “ என சொல்லிக்கொண்டே தேவியின் மடியில் சரிந்தாள். தேவியும் அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டாள். சின்னவளும் தேவியின் பின்னால் வந்து நின்று அவளது சடையினை வருடினாள். நாகராசு சின்னவளை தன்னிடம் வருமாறு அழைத்தான். அவள், மாட்டேன் என தலையசைத்துச் சிலுப்ப, “ வாடி கருவாச்சி “ என இழுத்து தன் மடியில் கிடத்தி முத்தமிட்டான்.

“” வருசமெல்லா ஓடியாடித் திரியிறவக. ஒரு ரெண்டுமாசம் டெய்லி காலைல வெள்ளன எந்திரிச்சுக் குளிச்சு, சுத்தபத்தமா இருந்து நேரத்துக்கு சோறுசாப்புட்டு, நீங்க சொன்ன மாதரி சாராயம் தண்ணிகிண்ணி குடிக்காம, தப்புத்தண்டா பண்ணாம ஒடம்ப பத்தரமா பாத்துக்கறாங்கள்ல அது நல்லதுதான சித்தப்பா ? “

பழனி அதற்கு பதிலேதும் சொல்லாமல் தெய்வானையைப் பார்த்தான். தெய்வானையும் பழனியைப் பார்த்தாள். இருவரது பார்வையும் சந்தித்துக் கொண்டபோது இருவருக்கும் சிரிப்பு வந்தது.

“ அது ஒரு லூசுடீ . அதுகிட்டக்கப்போய்ப் பேசிக்கிட்டு. இவரு மால போட்டப்ப மட்டும் இனிச்சுக்கிட்டு இருந்துச்சாக்கும் ? “

“ சித்தப்பா மாலயெல்லாம் போடுவாரா ? “ தேவி கண்கள் விரியக் கேட்டபோது, அவளது முகம் ஆச்சரியத்தில் கனகாம்பரமாய்ச் சிவந்தது. அந்த பூரித்த வதனம் கண்ட நாகராசு . கணப்பொழுதில் மோகவயப்படலானான். இழுத்து நெஞ்சோடு இறுக்கி தேவியின் கண்களில் முத்தமிட ஆசைகொண்டான்.

“ நெனச்சா போடுவேன்மா . . அதுக்காக இவகள மாதரி ஆறுமாசம் ஒருவருசம் கலர்ச்சட்டைய மாட்டிக்கிட்டு அலயவெல்லாம் மாட்டேன். ஒருவாரம் கூடுனா பதனஞ்சு நாள் எல்லா பழக்கத்தையும் விட்டுபுட்டு உணவச்சுருக்கி மனச அலயாம நிறுத்தி யாருக்கும் எந்த தொந்தரவுமில்லாம சன்னதிக்குப்போய் காணிக்கையச் செலுத்தீட்டு வந்திருவேன். “

“ ஒருவாரமா ? அந்த அளவு வெரதமிருந்தா போதுமா ? “ நாகராசு எதையோ தவறவிட்ட பதட்டத்தில் கேட்டான்.

“ யே அவரு சொல்றார்னு . .நிய்யுங் கேக்கற பாரு ! எதையும் செஞ்சா செவக்கச் செய்யணும் . இல்லாட்டிப் பேசாம போத்தீட்டுப் படுக்கணும். ” என்ற தெய்வானை, எழுந்து ஆலாங்கில் தொங்கிக் கொண்டிருந்த துணிப்பையை எடுத்து மூத்தவளிடம் நீட்டினாள். “ சீனியத்த வீட்ல போயி எங்கம்மா அரிசி வாங்கி வரச்சொல்லுச்சுன்னு கேட்டு வாங்கிட்டு வாடி .” என அனுப்பினாள்.

“ எவ்ளோ ? “

“ கேளு . தரும் “

“ ஏந் தேவான வீட்ல அரிசி இல்லியா ? “ உட்கார்ந்த வாக்கில பானையில் தண்ணீரை மொண்டு குடித்தான் பழனி.

சன்னல் வழியே சூரியவெளிச்சம் பளீரென வந்து விழுந்து ஒளியைப் பெருக்கியது. சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி ஒன்று சன்னல் ஆணியில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகம்பார்த்து பட்பட்டென நுனி அலகினால் கண்ணாடியை கொத்தியது. அதனைக் கவனித்த சின்னப்பெண் தேவானையை அழைத்தது “ அம்மா , கண்ணாடிக் குருவி வந்திருச்சு “

“ அதுக்கென்னா வேல. கொத்திக் கொத்தி கண்ணாடிய ஒடைக்காம விடாது போல. அத வெரட்டி விடுடி. “ குருவியை விரட்டாமல் பறந்து பறந்து வந்து அது கொத்தும் அழகை ரசித்தபடி இருந்தாள் சிறுமி.

“ அது எதுக்கு கண்ணாடியப் போய்க் கொத்துது ? “ தேவியும் ஆவலாய்க் கேட்டாள்.

“ நெழல நெசம்னு நெனச்சுக்கிட்டு மல்லுகட்டுதுபோல . “ என்று சொன்ன நாகராசுவுக்கு வயிறு பசித்தது. காலையில் ஆளுக்கொரு வடையை வாங்கி சாப்பிட்டுவிட்டு பேருந்தில் ஏறினார்கள். பெயிண்டர் அடுத்தவாரம்தான் வேலை எனச் சொல்லிவிட்டார். செய்தவேலைக்கே இன்னமும் சம்பளம் வாங்கவில்லை மொத்தமாகக் கிடைக்காது என்கிறார். நூறும் இருநூறுமாக வாங்கி உருப்படி சேராது. கொஞ்சநாளைக்கி அப்படித்தானாம். திடுமென அக்கா ஞாபகம் வர தேவியோடு வண்டி ஏறினான்..

“ எனக்கும் கொஞ்சம் தண்ணி குடு மாமா “ செம்பு நிறைய வாங்கிக் குடித்தான்.

“ ரேசன்ல அரிசி போட்டதும் வாங்கித் தருதாம் “ அம்மாவிடம் பையைக் கொடுத்தாள் மூத்தவள்.

“ இதுக்குத்தே எவளுக்கும் ஈவுஎரக்கம் பாக்கக்கூடாதுங்கறது. இவ என்னைக்கி வாங்கி எனக்கு என்னைக்கித் தர . “” முணங்கியபடி சாக்குப்பையத் துழாவினாள்.

“ வீட்ல அரிசி இல்லியா “ இரண்டாம் முறையாய் பழனி கேட்டான்.

“ நாளைக்கித் தாரேன்னு வாங்கீட்டுப் போனா, இன்னியோட ஏழு நாளாச்சு. சீனியம்மாக்கு இன்னம் விடியல “

“ யே எருமமாடு. வீட்ல அரிசி இல்லியான்னு ஏழுதடவ கேட்டுட்டேன் “

“ இல்ல சாமி இல்ல சாமி ! “

நாகராசுவுக்கும் தேவிக்கும் சங்கட்டமான சூழலில் சிக்கிநிற்பது தெரிந்தது, சோறு வேணாமென சொல்லிவிட எத்தனித்தபோது, வயிறு திறந்து கொண்டது.

“ எப்பவும் காலைல சோறாக்கிருவியே ? “ நாகராசுதான் கேட்டான். பழசு பட்டை இருந்தால்கூடப் போதும். நீச்சதண்ணியை ஊத்திக்குடித்து வயிறு நிரப்பலாம். ஆனால் நெருப்பு பற்றவைத்த சுவடு தெரியவில்லை. அடிபட்ட பூனையின் தலையைப்போல வீங்கிக் கிடந்தது அடுப்பு.

“ ஒருவாரமா ஆரு சோறாக்குனா .? தெருதெருவுக்கு அய்யப்ப சாமிக அன்னதானங் குடுக்கறாக ! காலைல எட்டுமணிக்கு ஆரம்பிச்சா மூணுமணிவரைக்கும் ஓடும். மாமாவும் ஏவாரத்துக்கு போறதில்ல. காலம்பற ஒருக்காப் போயி லைட்டா சாப்ட்டுட்டு வந்திருவம். மத்தியானம் தெருவோட போய் ஒக்காந்து எந்திரிச்சா சோலி முடிஞ்சது. “ தெய்வானை படம்பிடித்ததுபோல விவரித்தாள்.

“ லூசுச்சிறுக்கி நீ போய்த் திங்கிறேங்கறதுக்காக விருந்தாடி வந்தவகளையும் இழுத்துட்டுப் போகலாம்னு பாக்கறியா ? அப்பச்சி கடைல போய் நாஞ்சொன்னேன்னு வெலையரிசி வாங்கிட்டுவா சாயங்காலம் காசு குடுத்தரலாம் “ பழனி பல்லைக்கடித்துக் கொண்டு சத்தம் போட்டான்

இன்று உறுதியாக பணம் வந்துவிடுமென அக்கீம் ராவுத்தர் சொல்லியிருந்தார். பழனிக்கு பழைய இரும்பு ஏவார்ம். ஒருமாசமாய் சடாரென சரிந்துவிட்டது. சரக்கு நிறையக் கிடைக்கிறது. காசுதான் பெயரவில்லை. வீட்டில் நாலைந்து சாக்கில் சரக்குகள் கட்டிவைத்தபடி இடத்தைக் காத்துக் கிடக்கின்றன.

“ வெலையரிசி வாங்கவா போறீக ? கிலோ நாப்பது அமபது சொல்வாகள்ல . . வேணா வேணா. அன்னதானச் சோறு ஆருக்குக் கெடைக்கும் அதும் அய்யப்பசாமி பிரசாதம் சாப்புடக் குடுத்து வச்சிருக்கணுமே . ! “

தேவி முகம் கழுவி, சீவி பவுடர் பூசி தயாரானாள்.

பழனி டிவியை ஓடவிட்டான். “ கறுப்புப்பண நடவடிக்கை வெற்றி பெற்றுவிட்டதாக “ பிரதமர் உரையாற்றிக்கொண்டிருந்தார்.. “.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *