நாக்பூர் இரயில் நிலையம்! காசிக்கு போகும் இரயில் அரை மணி நேரம் ஓய்வெடுக்க நின்றுகொண்டிருந்தது. நிலைத்துக்குள் ஒரே கூச்சலும் குழப்பமாக இருந்தது, இடையிடையே வியாபாரிகளின் சத்தம்.

வெளியே எட்டிப்பார்த்த பாக்கியம்மாள் அந்த கூட்டத்தை கண்டு “ஈஸ்வரா” என்று வேண்டிக்கொண்டாள். இந்த இரைச்சல் எதுவும் கண்டுகொள்ளாமல் அருகில் அவள் தோள்மேல் உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை பார்த்தாள். அவர் வாயில் எச்சில் வடிவது கூட தெரியாமல் மனைவியின் தோளின்மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இவளுக்கு தோள் வலித்தது, அசங்கினால் கணவர் எழுந்து கொள்வார், யோசித்தாள், மெல்ல கையை கொண்டு போய் அவர் தலையை பிடித்து அப்படியே மடியில் சாய்த்தாள். சிணுங்கினார், ஒண்ணுமில்லை, தட்டிக்கொடுத்தாள். அவர் பாக்கியத்தின் மடியில் படுத்தவர் வசதியில்லாததால் மெல்ல அசங்கி எழுந்தார். சே..கணவனின் தூக்கத்தை கெடுத்து விட்டோமோ, கவலையுடன் எண்ணினாள் பாக்கியம்.
எதிரில் இவர்களை போல காசிக்கு போகும் குடும்பமும் இருந்தது, அவர்களும் சென்னையில் இவர்களுடன் ஏறியவர்கள். அவரை வேணா இங்க படுக்க வையுங்களேன், எதிர் சீட்டுக்காரர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து அழைத்தார்.
கணவன் முகத்தை பார்க்க, அவர் சிணுங்கிக்கொண்டே வேண்டாம் என்று தலையசைத்து நிமிர்ந்து உட்கார்ந்தார். எதிர் சீட்டுக்காரர் கவலையுடன் பாக்கியம் அம்மாளை பார்த்து, எப்பத்துலயிருந்து உங்க ஆத்துக்கார்ருக்கு இப்படி ஆச்சு !
பெருமூச்சுடன் மூணு வருசம் ஆச்சு, அதுவரைக்கும், கம்பீரமா வேலைக்கும், ஆத்துக்கும் போய்ட்டு இருந்தாரு. திடீருன்னு ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுத்து, தலையில அடிபட்டுடுச்சு, காயம் எல்லாம் ஆறிடுச்சு. ஆனா அப்ப புத்தி கொஞ்சம் பேதலிச்சிடுச்சு. இதுவரைக்கு சரியாகலே. அந்த ஈஸ்வரனை தரிசிச்சுகிட்டு வந்தா அவருக்கு மனநிலை சரியாகுமான்னு காசிக்கு கூட்டிட்டு போறேன்..இவரை எப்படி அதுவரைக்கும் கூட்டிட்டு போய் திரும்ப வீட்டுக்கு கூப்பிட்டு வருவோமுன்னு நினைக்கும்போது ! கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கவலைப்படாதீங்கோ! நாங்க உங்க கூட இருக்கோம், ஒரே இடத்துல இருந்து வர்றோம், மனுசனுக்கு மனுசன் இது கூட உதவலையின்னா அப்புறம் என்ன மனுசனா பிறந்துட்டு ! அவர்களின் ஆறுதல் வார்த்தை அவள் மனதுக்கு இதமாய் இருந்தது.
தனியா எல்லா வேலையும் செஞ்சிடுவாரா? அவர் வேலை எல்லாம் அவரா பாத்துக்குவாரு, அப்பப்ப குழந்தையாட்டாம் பேசுவாரு, சில நேரம் எங்காவது போயிடுவாரு, அவரை கண்டு பிடிச்சு கூட்டிட்டு வர்றதுக்குள்ள….மீண்டும் எட்டி பார்த்த அழுகை..
உங்களுக்கு குழந்தைங்க? அதுவரை அமைதியாய் உட்கார்ந்திருந்த எதிர்த்த சீட்டுக்காரரின் மனைவி கேட்டாள்.
பகவான் எங்களுக்கு அந்த பாக்கியம் கூட கொடுக்கலை. எனக்கு நீ உனக்கு நானுன்னுதான் வாழ்ந்துகிட்டு இருந்தோம்.. இந்த மூணு வருசத்துலதான் எங்களுக்குன்னு வாரிசு இல்லையேன்னு மனசு அடிச்சுக்குது. இருந்திருந்தா இப்ப எனக்கு ஒத்தாசையாவது இருப்பாங்க இல்லையா.
பேசிக்கொண்டிருக்கும்போதே பாக்கியம்மாளின் அருகில் உட்கார்ந்திருந்தவர் மெல்ல எழுந்து நின்றார். கால்களை உதறிக்கொண்டு நின்றார்.
பாவம் மனுசன் உட்கார்ந்து உட்கார்ந்து களைப்பாயிருக்காரு, கொஞ்ச நேரம் நிக்கட்டும், பரிவாய் பார்த்த பாக்கியம்மாள்..நீங்க காசிக்கு கிளம்பிட்டேளா?
ஆமா! எங்க கடமையெல்லாம் ஒரு வழியா முடிஞ்சுது, இரண்டு பொண்ணை பெத்தோம், அவங்களுக்கு நல்ல இடத்துல கட்டி கொடுத்தாச்சு, அவங்கவங்க குழந்தைகளோட பாம்பே, பெங்களூருன்னு செட்டிலாயிட்டாங்க, நாங்க சென்னையில இருக்கோம், சரி இரண்டு பேருக்கும் தெம்பு இருக்கும்போதே..காசிக்கு போயிட்டு வந்துட்டா நம்ம வாழ்ந்ததுக்கு பிராப்தி கிடைச்சிடுமே..அவரின் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
பாக்கியம்மாள் அப்பொழுதுதான் கவனித்தாள், பக்கத்தில் நின்றிருந்தவரை காணவில்லை
ஈஸ்வரா எங்க போனார்? இங்கதான் நின்னுகிட்டிருந்தார். பயத்துடன் எழுந்து சுற்று முற்றும் பார்த்தவள்..கணவனை உரக்க கூப்பிட்டாள். அந்த கூட்ட நெரிசலுக்குள், பாஷை புரியாமல் அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்த இரைச்சலில் இவள் கூப்பிட்ட சத்தம்..அமுங்கி போனது.
எதிர் சீட்டுக்காரரும் எழுந்து சுற்று முற்றும் பார்த்து அந்த பக்கம் இந்த பக்கம் நடந்து கூப்பிட்டு பார்த்தார்… கிடைக்கவேயில்லை.
பாக்கியம்மாள் பயத்துடன் கடவுளே அவரை இங்க கூட்டிட்டு வந்து தொலைச்சுட்டனே!
ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். கண்களுக்கு எங்கும் தட்டுப்படவில்லை. இரயில் கிளம்ப ஆயத்தமாக தன் ஹாரனை ஒலிக்க ஆரம்பித்தது. இவர் எங்கே போனாரு? கீழே இறங்கி போயிட்டாரா?
அழுகையுடன் எட்டி பார்த்த பாக்கியம்மாள் வேக வேகமாக கதவை நோக்கி வந்தாள். அந்த ஜன சந்தடிக்குள் எங்கும் காணாமல், அவரை கீழே இறங்கி கண்டுபிடித்தே ஆகவேண்டும், எண்ணத்தில் கீழே இறங்கினாள்.
அதற்குள் இரயில் வேகம் எடுக்க ஆரம்பிக்க. அவள் கால் தரையில் படாமல் அப்படியே இழுத்து…..
யாரோ இரயில் அபாய செயினை பிடித்து இழுக்க..இரயில் நின்று அந்த பெட்டியில் இருந்து இறங்கி ஓடி வந்து பார்த்தார்கள் பாக்கியம்மாள் உயிரற்ற சடலமாய் கிடக்க அப்பொழுதுதான் இரயில் பாத்ரூம் கதவை திறந்து வெளியில் வந்த் பாக்கியம்மாள் கணவர் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் பாக்கியத்தை காணாமல் விழித்து நின்றார்.