கட்டுப்பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 4,260 
 
 

உதயா அதிகாலை மைதானத்தை சுற்றி ஓடிக் கொண்டு இருந்தாள்,வேர்த்து கொட்டியது, கழுத்தில் கிடந்த துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டாள் அவள், காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது அவளின் அப்பாவின் தூண்டுதல், சின்னவயதில் இருந்தே அவளின் அப்பா நெடுமாறன் அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி செய்வார் இவளையும், இவளது தம்பி தியாகுவையும் எழுப்பி விடுவார், இவர்களும் தூக்ககலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்து இருப்பார்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, நெடுமாறன் மனைவி கஸ்தூரியையும் யோகா செய்வதற்கு அழைப்பார், எனக்கு வேலை இருக்கு சமைக்கனும், நேரம் இல்லையென்று ஏதாவது காரணம் கூறிவிட்டு சென்றுவிடுவாள் அவள்.

நெடுமாறனுக்கு அது பிடிக்காது, எனக்காக கூறவில்லை, பிற்காலத்தில் நீ தான் கஷ்டப்படுவ, எழுந்து நடக்ககூட யாரையாவது உதவிக்கு தேடனும் என்பார், பிள்ளைகளிடம் உங்கள் அம்மா மாதிரி இருக்ககூடாது, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், நேரம் இல்லை என்பது எல்லாம் பொய், உடற்பயிற்சி செய்ய பயந்து கொண்டு கூறும் வார்த்தைகள் என்று அன்று அப்பா சொன்னதின் உண்மை தற்போது தான் புரிகிறது உதயாவிற்கு,அவளுக்கும் இரண்டு குழந்தைகள், இருவருமே பாடசாலை போகின்றார்கள், அவளுக்கு நேரம் இருக்கின்றது, ஏன் அம்மாவிற்கு மட்டும் நேரம் இல்லை என்பார்கள், அது அவர்களின் சோம்பேறி தனம் என்று மனதில் நினைத்துக் கொள்வாள் உதயா.

வேண்டா வெறுப்பாக எழுந்து உட்கார்ந்திருந்த அவர்கள் இருவரும், அப்பா செய்யும் யோகாவை பார்க்க பார்க்க இவர்களுக்கும் அதில் ஈடுபாடு வந்தது, இவர்களும் அப்பாவுடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள், பிள்ளைகளின் ஆர்வத்தை கவனித்த நெடுமாறன், யோகா பயிற்சி வகுப்பிற்கு இருவரையும் அனுப்பிவைத்தார், நாள் தவறாமல் நெடுமாறனும், பிள்ளைகளும் வீட்டில் யோகா பயிற்சி செய்வதால் இலகுவாகவே இருந்தது, யோகாவை தவிர இரண்டு மூன்று நாட்கள் அப்பாவும் பிள்ளைகளும் சேர்ந்து ஓடுவார்கள், அது ஒரு புது அனுபவம் என்றே சொல்லலாம், அதிகாலையில் வெட்ட வெளியில் ஓடும் போது, பறவைகளின் சத்தம்,சூரியன் உதிக்கும் போது அந்த வானத்தின் நிறங்கள் கண்ணை கவரும், சுத்தமான காத்து மனதிற்கு இதமாக இருக்கும், பிள்ளைகள் களைத்து நிற்கும் போது எல்லாம் அப்பாவின் உற்சாகமான வார்த்தைகள் என்று அந்த அனுபவங்களை அனுபவைத்திருக்கிறார்கள் உதயாவும்,தியாகுவும்.

அதன் பிறகு வந்து குளித்து,சாமி கும்பிட்டு,சாப்பிட்டு பாடசாலைக்குப் போனப் பிறகும் கூட களைப்பு இருக்காது,அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் இருவரும்,நன்றி அப்பா தற்போது நீங்கள் இல்லை,ஆனால் உங்கள் நல்ல பழக்கங்கள் எதையும் நானும்,தம்பியும் மறக்கவும் இல்லை,செய்யாமல் இருப்பதும் இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டே ஓடிமுடித்தாள் உதயா,சற்று நேரம் மூச்சி பயிற்சி செய்து விட்டு,சிறிது ஓய்வு எடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பினாள் உதயா,தன்னிடம் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்தாள்,ஊதுபத்தியின் மணம் வீடு எங்கும் பரவியிருந்தது, கணவன் மையூரன் சாமி விளக்கேற்றி சாமி கும்பிட்டதின் அடையாளம் அது,நாள் தவறாமல் விளக்கேற்றி சாமி கும்பிடாமல் வெளியில் போகமாட்டான் அவன்.

மையூரன் பகல் சாப்பாட்டை கையோடு எடுத்துக் கொண்டு ஆபிஸ் போவதால்,காலையில் சமையல் வேலையை முடித்துவிடுவாள் உதயா,அவனுக்கு காலை டிபன் செய்து மேசையில் வைத்துவிட்டு,பிள்ளைகளை அருகில் இருக்கும் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு,அவள் உடல் பயிற்சி செய்ய ஆரம்பித்தாள் என்றாள் அதன் பிறகு மையூரன் அவளை தொந்தரவுப் பன்ன மாட்டான்,அவன் எழுந்து குளித்து விளக்கேற்றி சாமி கும்பிட்டு காலையில் சாப்பிட்டு கதவை பூட்டிவிட்டு அவன் சென்றுவிடுவான்.உதயா உடற்பயிற்சி செய்து முடித்தப் பிறகு மறுப்படியும் குளித்து விட்டு சாப்பிடுவாள், வீட்டில் இருந்தப்படியே ஆன்லைனில் வேலை செய்யும் உதயா அவள் வசதிக்கேற்ப நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வாள்.

எப்படியும் முழு நேரமும் வேலை செய்ய அவள் விருப்ப படவில்லை,பிள்ளைகளை கவனித்துக் கொள்ளனும்,அவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்,இப்படி பல காரணத்தால் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் வேலை செய்வதற்கு ஒதுக்கி கொண்டாள் உதயா,அதுவும் அவளுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக தேடிக் கொண்ட வேலை,பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது அவர்களுடன் பொழுது போவதே தெரியாது ஆசை ஆசையாக இரண்டு குழந்தைகளையும் வளர்த்தவள்,எவ்வளவு வேலைகள் இருந்தாலும்,பிள்ளைகளுடன் விளையாடி,அவர்கள் கேட்பதை செய்து கொடுத்து, பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வாள் உதயா, தற்போது அவர்கள் வளர்ந்து விட்டதால் அவளுக்கு பொழுது போவதற்காக மட்டும் தேடிய வேலை, எப்போதும் வேலை செய்வதற்கு எரிச்சல் பட்டுக் கொண்டதே இல்லை அவள், யாரையும் எதிர் பார்க்கவும் மாட்டாள்,எப்போதும் வீடு சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும் சமையல் செய்த அறிகுறியே இருக்காது,பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைத்து விடுவாள் உதயா.

எப்போதும் தேவை என்றால் மட்டுமே பொருட்கள் வாங்கும் உதயா,அநாவசியமாக எந்த பொருட்களையும் வாங்கி சேர்ப்பது இல்லை,அதனாலையே வீடு எப்போதும் சுத்தமாக இருக்கும்,தனக்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுத்து வாங்கும் அவள் ஆசைக்கு அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டு பிறகு அது பிடிக்கவில்லை இது பிடிக்கவில்லை என்று ஒதுக்கும் பழக்கமே உதயாவிடம் கிடையாது, நீண்ட நாட்கள் உழைக்க கூடிய, தரமான ஆடைகளை பார்த்து வாங்குவதால் பணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அடிக்கடி வாங்கும் வாய்ப்புகள் குறைவாகவே அமையும் உதயாவிற்கு, கணவன் பிள்ளைகளுக்கும் அதே பழக்கம் எந்த பொருட்கள் என்றாலும் நன்றாக பாவித்து விட்டு தூக்கி போட்டுவிடுவார்கள் அதனால் எப்போதும் தேவையற்ற பொருட்கள் என்று அவர்கள் வீட்டில் எதுவும் இருக்காது.

பிள்ளைகளும் எதை எடுத்தாலும் மறுப்படி இருந்த இடத்தில் திருப்பி வைத்து விடுவார்கள்,அனைவருக்கும் நம் வீடு நாங்கள் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருப்பதால் எப்போதும் உதயாவிற்கு வேலைகள் குறைவாகவே இருக்கும். ஆர்பாட்டம் இல்லாத ஒரு அமைதியான குடும்பம் உதயாவின் குடும்பம்,அவளுக்கு அவளின் அப்பா நெடுமாறன் பழக்கம் அதிகமாக உள்ளது,அவளின் அம்மா கஸ்தூரி கடைக்கு சென்றாள் என்றால் கண்ணில் படும் பொருட்கள் எல்லாவற்றையும் வாங்குவாள், விலை, அதன் தரம் எதையும் ஆராயாமல் ஆசைக்காக வாங்கும் பல பொருட்கள் பாவிக்காமலும், பழுதடைந்தும் தூக்கிப் போட்டிருக்காள்

புடவையும் அப்படிதான் ஆசையாக வாங்கியப் பிறகு இரண்டு மூன்று தரம் கட்டுவாள் ஏதாவது காரணம் கூறி ஒதுக்கி விடும் கஷ்தூரியிடம் நெடுமாறன் கூறுவது எப்போது தேவை என்றால் மட்டும் ஒரு தடவைக்கு இரண்டு தரம் யோசித்து வாங்கு இல்லையென்றால் வாங்காதே என்றால் சண்டைக்கு தான் வருவாள் கஷ்தூரி,உங்கள் மாதிரி எனக்கு இருக்கமுடியாது கட்டுப் பாடுடன், நான் அப்படி வளரவும் இல்லை,எது கேட்டாலும் அப்பா கணக்கு பார்க்காமல் வாங்கிதருவார்,நீங்கள் தான் எதற்கும் கணக்கு பார்த்து பார்த்து எதையும் வாங்கவிடுவது இல்லை என்பாள்.

கஸ்தூரி அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்,வசதியான குடும்பம்,எது கேட்டாலும் உடனுக்குடன் கிடைக்கும், ஆடம்பரமான வாழ்க்கை,பணத்தின் அருமை தெரியாமல் வளர்க்கப்பட்டவள் கஸ்தூரி, நெடுமாறன் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தவர்,அவருக்கு வரும் வருமானத்தில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டிய சூழ்நிலை,அதுவே கஸ்தூரிக்கு பிடிக்கவில்லை,இது என்ன பிச்சைகார வாழ்க்கை மாத கடைசியில் கையில் பணம் இல்லாமல் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டியிருக்கு என்பாள். கணவனின் சம்மபள பணம் கைக்கு கிடைத்ததுமே ஆடம்பரமாக செலவு செய்து பணத்தை இரண்டு,மூன்று வாரத்தில் முடித்துவிட்டு மாதகடைசியில் நெடுமாறனிடம் சண்டை போடுவாள்,நீங்கள் தரும் பணத்தில் குடும்பம் நடத்த முடியாது என்று,இந்த தொல்லைகளுக்குப் பயந்து நெடுமாறன் வீட்டு பொறுப்புகள் அனைத்தயையும் அவர் கையில் எடுத்துக் கொண்டார்.

கஸ்தூரிக்கு அதுவும் பிரச்சினையாக இருந்தது,என் செலவுகளுக்கும் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டியிருக்கு என்பாள்,மாதச்சம்பள காரர்கள் பஜ்ஜட் போட்டு குடும்பம் நடத்தாவிட்டால் கடனாளியாக திரியவேண்டியது தான் என்பார் நெடுமாறன், உங்கள் தலையில் என்னை கட்டிவைத்து விட்டார் அப்பா,என் தலையெழுத்து ஒவ்வொன்றுகும் உங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கு என்று சளிப்படைந்துக் கொள்வாள் கஷ்தூரி,கட்டிய புருஷன் முதல் கொண்டு எதிலும் திருப்தி இல்லை அம்மாவிற்கு,தற்போது மகன் வீட்டில் இருக்கும் அம்மா மருமகளிடமும் இடைக்கிடை சண்டை,பாவம் வாயில்லா பூச்சி ரித்திகா,அமைதியாக போய்விடுவாள்,தியாகு ஏதாவது கூறி அம்மாவின் வாயை அடைத்துவிடுவான், எப்போதும் இடுப்பு வலி, முழங்கால் வலி தைலம் தேய்க்க மட்டும் ரித்திக்காவை பல தடவை கூப்பிடுவாள் கஷ்தூரி, அவளும் எதுவும் மறுப்பு சொல்லாமல் தேய்த்துவிடுவாள்.

நெடுமாறன் ஒரு விபத்தில் தவறிவிட்டார், உதயாவிற்கு இன்னும் அதை மறக்கமுடியவில்லை, ஓடி ஆடி திரிந்தவர் நண்பனுடன் பைக்கில் போய்வரும் போது விபத்து,நண்பர் தப்பி விட்டார் அப்பா பலியாகிவிட்டார், இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது தற்போது அதை நினைத்தாலும் உதயாவிற்கு திக் என்று இருக்கும்.அப்பா நெடுமாறன் நிறைய நல்ல விடயங்களை கற்றுதந்தவர், மற்றவர்களைப் பார்த்து பொறாமை படக்கூடாது அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கடவுள் நமக்கு கொடுத்தவற்றை நினைத்து சந்தோஷப் பட வேண்டும் எப்போதும் எதுவும் இல்லை என்பற்காக வருத்தப் படக்கூடாது,நாங்கள் ஒரு நாளும் சந்தோஷமாக வாழமாட்டோம் உங்கள் அம்மா மாதிரி என்பார் நெடுமாறன்.

அது உண்மை ஆசை படலாம் பொறாமை படக்கூடாது,ஆசை பட்டாள் மட்டும் போதாது,அதற்கு முயற்சியும் செய்ய வேண்டும் யாராவது எதுவும் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்களும் செய்வோம் என்று நினைப்பது தவறு இல்லை,அதை தொடர்ந்து கடைபிடிக்கனும் எதையும் செய்ய தொடங்கி பாதியில் விட்டுவிடக் கூடாது என்பார் நெடுமாறன்,அவர் இருக்கும் மட்டும் பல நல்ல விடயங்களை கூறிக் கொண்டே இருப்பார்,உதயாவும் யாருடனும் போட்டி பொறாமை இல்லை,வாழ்க்கையில் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் இருப்பவள் அதனால் கஷ்தூரி உதயா வீட்டுக்கு வருவதற்கு விருப்ப படமாட்டாள்,அவள் நினைத்த நேரம் சாப்பிட,தூங்க முடியாது நீங்கள் மாத்திரை குடிப்பதால் டைத்துக்கு சாப்பிடுங்கள் என்றால் அது கஷ்தூரிக்கு பிடிக்காது,சாப்பிட்டவுடன் படுக்காதீங்கள் என்றாலும் அதுவும் பிடிக்காது, தம்பி மனைவி இது எதுவும் சொல்வது இல்லை,அதனால் கஷ்தூரி அவர்கள் வீட்டில் இருப்பதையே விரும்புவாள்.

உதயாவும் அம்மாவை வற்புருத்தி கூப்பிட மாட்டாள், அம்மாவின் குணம் அவளுக்கு நன்றாகவே தெரியும், எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர், இப்படி தான் வாழ வேண்டும் என்று கட்டுப் பாடுடன் வாழ்பவர்கள் வேறு சிலர், நமக்கு கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போவோம், என்று நினைத்து வாழ்பவள் உதயா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *