தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது தெரிய, எழுந்து அவளருகில் வந்தான்.
“”நித்யா… தூங்கலையா, என்ன இப்படி நடுராத்திரியில் எழுந்து நின்னுட்டு இருக்கே.”
“”மனசு சரியில்லைங்க. அம்மா, அப்பா ஞாபகமா இருக்கு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம, அப்பா தனியாக, அம்மாவோடு கஷ்டப்படறத நினைக்கும் போது, மனசு சங்கடமா இருக்குங்க.”
“”நாம என்ன செய்ய முடியும் நித்யா. நீயும்தான் பத்து நாட்கள் போய் இருந்துட்டு வந்தே. என்னோட அம்மா, அப்பா அடுத்த வாரம் வர்றாங்க. அவங்க வந்துட்டு போன பிறகு வேணுமின்னா, திரும்ப போய் ஒரு வாரம் இருந்துட்டு வா.”
பரத் சமாதானமாக பேசினாலும், நித்யாவின் மனசு, பெற்றோரை நினைத்து வேதனைப்பட்டது.
நித்யா அவர்களுக்கு ஒரே மகள். தங்கள் மகளை இருவரும் அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து ஆளாக்கினர். அவள் முகம் வாட விடவில்லை. அவள் நினைத்ததை நிறைவேற்றி, ஒரு பொக்கிஷமாகத்தான் அவளைப் பாதுகாத்தனர். பாங்கில் வேலை பார்க்கும் பரத்திற்கு, சீர்வரிசைகள் செய்து, தங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்கள் கடமையை, நல்ல விதமாக நிறைவேற்றிய திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டது. அதன்பின், பேத்தி நிகிலா பிறக்க, தங்கள் மகளின் சந்தோஷ வாழ்க்கையை பார்த்து பூரித்து போயினர்.
நித்யாவும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை, ஊருக்கு போ#, அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து வருவாள். நல்ல விதமாக ஒருவருக்கொருவர் துணையாக வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தவர்களின் நிலைமை மாறியது. நித்யாவின் அம்மாவுக்கு சுகர் வந்து, பிரஷரும் அதிகமாகி, மருந்து, மாத்திரைகளுடன் காலத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, போன மாதம் குளியலறையில் மயங்கி விழுந்து, உடம்பு மோசமாகி, மருத்துவமனையில் சேர்ந்து, நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பினாள் அம்மா.
அதன்பின் தான், நித்யாவுக்கு பெற்றோரை பற்றிய கவலை ஏற்பட்டது. இவ்வளவு நாட்கள், இரண்டு பேருமாக வாழ்ந்து விட்டனர். வயதான காலத்தில், உடம்பு முடியாமல், இருவரும் சிரமப்படுவதை பார்க்க, அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
“”நித்யா, நீயும் வீட்டுக்கு ஒரே பெண், நானும் என்னை பெத்தவங்களுக்கு ஒரே மகன். சின்ன வயசிலிருந்தே, எனக்காக கஷ்டப்பட்ட என் பெற்றோரை, என் பாதுகாப்பில் கடைசி வரை வச்சுக்கணும்ன்னு நினைக்கிறேன். அப்பா அடுத்த மாதம் வேலையிலிருந்து ரிடையர்ட் ஆகப் போறாரு. அவங்க நம்மோடு வந்து இருக்க முடிவு பண்ணியிருக்காங்க. இந்த விஷயத்தில், உனக்கு எந்த விதத்தில் ஆறுதல் சொல்றதுன்னு புரியலை.”
“”எனக்கும் புரியுதுங்க. அத்தைக்கு, பேத்தி நிகிலா மீது பிரியம் ஜாஸ்தி. “என் பேத்தியோடு இருக்கப் போறேன். என் சந்தோஷமே அவள்தான்’னு சொல்லிட்டு இருக்காங்க. என் அப்பா, அம்மாவை என்னோடு வச்சு பராமரிக்க முடியாது. இருந்தாலும், அவங்க கஷ்டப் படறதைப் பார்க்கும்போது, ஒரே மகளாக பிறந்ததுக்கு, அவங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியலையேன்னு, மனசுக்கு வருத்தமா இருக்குங்க.”
“”கவலைப்படாதே நித்யா. அம்மா, அப்பா இங்கு வந்த பின், நீ ஊருக்குப் போய், ஒரு இரண்டு மாதம் அவங்களோடு இருந்து, பார்த்துட்டு வா. உன்னால முடிஞ்ச உதவியைச் செய். அதுக்கு நான் என்னைக்கும் தடை சொல்ல மாட்டேன்.”
ஊரிலிருந்து வந்த சண்முகம், மருமகள் முகம் சோர்ந்து இருப்பதைக் கவனித்தார்.
“”என்னம்மா நித்யா. அம்மா, எப்படி இருக்காங்க. இப்ப உடம்பு பரவாயில்லையா? வயசானாலே, வந்த வியாதியை எதிர்கொள்ள தானே வேண்டியிருக்கு. கவலைப்படாதேம்மா. சீக்கிரம் பழையபடி நடமாட ஆரம்பிச்சுடுவாங்க.”
மருமகளிடம் ஆறுதலாக பேசினார்.
“”அம்மாவை விட, அப்பாவை பார்க்க தான் கஷ்டமாக இருக்கு மாமா. வேலைக்காரி சமைச்சு வச்சதை, நேரத்துக்கு அம்மாவுக்குக் கொடுத்து, அவங்களுக்குக் கூடவே இருந்து பணிவிடை செஞ்சு, அப்பாதான் ரொம்ப தளர்ந்து போயிட்டாரு.”
“”என்னம்மா செய்யறது. வயசான காலத்தில் ஒருத்தருக் கொருத்தர் தான், அணுசரணையா இருக்க வேண்டியிருக்கு.”
“”அப்பா, வீட்டை காலி பண்ணிட்டு எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க. நான் உதவிக்கு வர்றேன்.”
“”வேண்டாம் பரத். இங்கே ஆள் இருக்கு. எல்லாம் பார்த்துப்பாங்க. நான் வர்ற தேதியை உனக்கு போனில் சொல்றேன்பா.”
“”நித்யா, அப்பா நாளைக்கு வர்றதாக போன் பண்ணியிருக்காரு. கீழே ரூமை ரெடி பண்ணி வெச்சுடு.”
அவர்களை வரவேற்க இருவரும் தயாராயினர்.
கார் வந்து நிற்க, அதிலிருந்து பரத்தின் பெற்றோர் இறங்க, அவர்களை தொடர்ந்து, நித்யாவின் அம்மாவை கைதாங்கலாக பிடித்தபடி, அவளுடைய அப்பா இறங்குவதைப் பார்த்து, அதிர்ந்து போனாள் நித்யா. “அம்மா, அப்பா எங்கே இவர்களுடன் வந்து இறங்குகின்றனர். உடம்பு முடியாமல் இருக்கும் அம்மாவை அழைத்துக் கொண்டு, எதற்காக இவ்வளவு தூரம் பயணம்…’ புரியாமல் அவர்களை நோக்கி வந்தாள்.
“”வாங்க எல்லாரும் வாங்க, அப்பா எதுக்குப்பா, அம்மாவை அலைய விடறீங்க… சரி உள்ளே வாங்க.”
அம்மாவை உள்ளே அழைத்து வந்தாள் நித்யா.
“”நித்யா, நீ அம்மாவை அழைச்சுட்டு போய், படுக்கையில் படுக்க வை. அஞ்சு மணி நேர டிராவல் பண்ணின அசதி இருக்கும். சூடா பால் கலந்து அவங்களுக்கு கொடுத்துட்டு வாம்மா,” என்று சண்முகம் சொல்ல, அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், பரத் அப்பாவை பார்க்க, கண்களாலேயே அவனை அமைதி படுத்தினார்.
“”சம்பந்தி நீங்களும் போய் முகம் அலம்பிட்டு வாங்க. நித்யாவை சூடா காபி போட்டு கொண்டு வரச் சொல்றேன்.”
தனிமையில் விடப்பட்ட பரத், அப்பாவைப் பார்த்து, “”என்னப்பா இது… எதுக்காக முடியாதவங்களை உங்களோடு அழைச்சுட்டு வந்திருக்கீங்க? எனக்கு ஒண்ணும் புரியலை.”
“”பரத், நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. நானும், அம்மாவும் கொஞ்ச நாட்கள், நம்ம கிராமத்தில் போய் தங்கறதுன்னு முடிவு செய்து, அதற்கான ஏற்பாடும் பண்ணிட்டோம்.”
“”என்னப்பா சொல்றீங்க.”
“”ஆமாம்பா. நம்ப கிராமத்து மணியக்காரர், வந்திருந்தாரு.
“”அவர், “படிச்சவங்க எல்லாருமே, பட்டணத்தை தேடி போயிட்டாங்க. நீங்க கல்வி துறையில் அதிகாரியாக இருந்து, ரிடையர்ட் ஆகியிருக்கீங்க. நம்ம கிராமத்து இளைஞர்களுக்கு வழிகாட்ட, படிச்சவங்க யாரும் இல்லை. நீங்க கொஞ்ச காலம் கிராமத்திலிருந்தா நல்லா இருக்கும். யோசனை பண்ணுங்க ஐயா…’ன்னு சொன்னாரு.
“”அதுவுமில்லாம, நானும், அம்மாவும் இன்னும் கொஞ்ச காலம் தனியா வாழக்கூடிய அளவுக்கு, உடல் நலத்தோடு இருக்கோம்பா. இப்ப உதவி தேவைப்படறது நித்யாவை பெத்தவங்களுக்கு தான்.
“”ஆண்களுக்கு தான், அம்மா, அப்பாவை பராமரிக்கிற பொறுப்பு, கடமை இருக்குன்னு நான் நினைக்கலை. ஆண், பெண் இரண்டு பேருமே பெத்தவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவங்க தான். வீட்டுக்கு ஒரே பிள்ளையை வச்சுக்கிட்டு, அதுவும் பெண்ணாக இருந்தா. வயசான காலத்தில், பெத்தவங்க தனிமைப்படுத்தப்படறாங்க. உதவி தேவைப்படற சமயத்தில் கூட, பெண்களுக்கு, தங்களை பெத்தவங்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை வந்துடுது. அது தப்புப்பா. பெத்தவங்களுக்கு உதவ வேண்டிய சமயத்தில், பெண்ணாக பிறந்த காரணத்தால் ஒதுங்கி நிற்கிறது தப்பு. நித்யாவுக்கு அவங்களை பராமரிக்க வேண்டிய கடமை இருக்கு. அதற்கு நாங்க ஒதுங்கி வழிவிடறதுன்னு முடிவு பண்ணிட்டோம்.
“”நீயும் சூழ்நிலையை புரிஞ்சுக்கிட்டு, ஆண் வாரிசு இல்லாத உன் மாமனார், மாமியாருக்கு, ஒரு ஆண்மகனாக இருந்து, அவங்களை நல்லபடியாக பார்த்துக்கப்பா. காலமும், நேரமும் வரும்போது, நாங்க உன்னைத் தேடி வர்றோம்.”
சண்முகம் பேச, அதை கேட்டு கொண்டிருந்த நித்யா, கண்களில் கண்ணீர் வழிய, மாமனாரின் காலில் விழுந்தாள்.
– பார்கவி பாலாஜி (மே 2012)