கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2022
பார்வையிட்டோர்: 5,015 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீனவெடி வெடிக்குமுன் காதைப் பொத்திக்கொள்ளும் சிறுவன் போல இவருக்கும் தற்காப்பு எச்சரிக்கை அதிகம். அதிகாலையிலேயே எழுந்து தயாராகிவிட்டார். அவருடைய மகன் வரைந்து கொடுத்த படம் பையிலே இருந்தது. இரண்டு நாள் முன்பாகவே வந்து ஒத்திகை பார்த்துக்கொண்டார். எந்த பஸ் பிடிப்பது, எங்கே இறங்குவது எல்லாம் மனப்பாடம். அதுதான் ஐந்து நிமிடம் முன்பாகவே வந்து காத்துக் கிடந்தார்.

அங்கே இன்னும் பலரும் இருந்தார்கள். வரவேற்புப் பெண் முகத்தில் புன்னகையை ஒட்டி வைத்திருந்தாள், ஸ்டிக்கர் பொட்டு போல. அவள் தோள்கள் முன்னறி வித்தல் இல்லாமல் திடீரென்று கழுத்தின் கீழே ஆரம்பமாகின. இவர் கேட்ட கேள்விக்கு சாட்டிலைட் தொலை பேசி போல சிறிது நேரம் கழித்தே பதில் கூறினாள்.

இரண்டு பேரை இப்போது உள்ளே அழைத்துவிட் டார்கள். இவர் உள்ளங்கைகளை அடிக்கடித் துடைத்தபடி காத்திருந்தார்.

இவருக்குத் தெரியாமல் ஒரு சதி நடந்ததை இவர் அறியவில்லை. இந்தச் சதி நேற்றிரவு நடந்தது. அதில் அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஒரு கை இருந்தது. ஆனால் அவருக்குத் தெரியாது. பொறுமையாகக் காத்திருந்தார்.

காத்திருப்பது என்பது பரம சுகமானது. இவர் நன்றாகக் காத்திருப்பார். அபூர்வமான பொறுமைசாலி. தயிர் கட்டியாகும் வரை காத்திருக்கும் பொறுமைசாலி.

அமெரிக்காவுக்கு முதல் முறை வருகிறவர்கள் பலவித மான உற்பாதங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண் டும். இதில் முக்கியமானது வெற்றி என்று சொல்வார்கள். இவருடைய மகன் சாந்தன் இங்கே வந்து பத்து வருடங் கள் ஆகிவிட்டன. அவனுடைய வாழ்க்கை வெற்றிகர மாக நடைபெற்றாலும் மற்றவர்கள் போல அவன் தலை கால் தெரியாமல் நடக்கவில்லை . மிகவும் அடக்கமாக இருந்தான். எளிய வாழ்க்கை . இவருடைய இருப்பிட வசதிகளிலிருந்து சாப்பாடு வரைக்கும் மிகக் கவனமாகவே இவரை சந்தோசப்படுத்தப் பார்த்தான்.

எவ்வளவுதான் செய்தாலும் இந்த வயதில் அவருக்குப் பெரிய உபத்திரவம் அவருடைய நாவினால் தான் ஏற்பட்டது. இங்கே வரும்போது அவர் அதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நாவடக் கம் என்று பெரியவர்கள் சொன்னது இதுதானோ என்று சந்தேகம் கூட ஏற்பட்டது.

வயோதிகம் வந்ததும் கண் மங்கலாகிறது; காதும் மந்தமாகிறது. உடல் சுகம் தணிந்துவிடுகிறது. மணக்கும் சுவையும் மடிந்துவிடுகிறது. ஆனால் இந்த நாவிருக்கிறதே இதன் ஆசை மட்டும் அணைவதில்லை. பிறந்ததிலிருந்து இந்த நாவானது ருசி தேடிப் பறக்கிறது. வயோதிகம் நெருங்க நெருங்க இதன் வேகமும் அதிகரிக்கிறது.

திருப்பிச் சூடாக்கிய தோசைபோல ருசியெல்லாம் கெட்டுவிட் டது. நாக்கின் சுவை மொட்டுகள் கூராகிவிட்டன. தயிர் பச்சடி கேட்கிறது. ஊறுகாய் தேடி வாய் ஊறுகிறது. கோப்பியின் ருசி கூட இங்கே அவருக்கு மட்டமாகிவிட்டது. இந்த நாவை அடக்குவது எவ்வளவு கஷ்டமான காரியம்.

சாமர்த்தியச் சடங்கும், முட்டைக் கோப்பியும் இப்ப உலக முழுவதும் பிரபலமாகிவிட்டது. இந்த முட்டைக் கோப்பிக்கு இங்கே என்ன பாடுபட வேண்டியிருக்கிறது. அவள் தங்கம்மா இருந்திருந்தால் எப்படியெல்லாம் முட்டைக்கோப்பி போடுவாள். தங்க நிறத்தில் அதிகாலையில் கொண்டு வருவாள். இந்த முப்பது வருடங்களில் எத்தனை ஆயிரம் முட்டைகளை அடித்து அடித்து ஓய்ந்திருப்பாள்.

நேற்றிரவு முழுக்க நித்திரை இல்லை. தங்கம்மாவை மறந்து கொண்டிருப்பதிலேயே நேரம் கழிந்தது. இந்த மறதியும் ஒரு நோய் தான். அந்திமத்தின் இன்னொரு கொடுமை இது. தண்ணீரை எடுப்பார், ஆனால் அதைக் குடித்தது ஞாபகத்தில் இராது. மருந்து சாப்பிட்டாரா இல்லையா என்பது அடிக்கடி மறந்து போகும். அவருடைய மூளையிலேயே ஓரவஞ்சகம் நடக்கிறது. தலைவிரிந்த கோலத்தில், வீதியோரத்தில் கிடத்திவிட்டு வந்த மனைவியின் ஞாபகம் மட்டும் அடிக்கடி வருகிறது. இந்த விசித்திரத்தை என்ன வென்பது! |

இந்த மறதியால் ஒரு முறை மிக மோசமான தவறு வேறு நேர்ந்துவிட்டது.

அவசியமான சில பொருட்கள் வாங்க ஒருநாள் சுப்பர் மார்க்கட் போனார். ஒருவித அவசரமும் காட்டாமல் சாமான்களை ஆராய்ந்து, பொறுக்கி, வண்டியைத் தள்ளிக்கொண்டு கீழும் மேலுமாக உட்பாதைகளில் அலைவது இவருக்குப் பிடிக்கும். அன்று இரண்டு பள்ளி மாணவிகள் இவருக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார் கள். மிஞ்சிப்போனால் பதின்மூன்று பதினாலு வயதுதான் இருக்கும். இறுக்கமான வெள்ளை ரீ சேர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருந்தார்கள். ஒருத்திக்கு சாம்பல் முடி ; மற்றவளுக்கு சிவப்புத் தலை. சுத்தமாக வைரஸ் நீக்கப்பட்ட மென் தகடுபோல தகதகவென்று இருந்தார்கள். இருவரும் பிணைந்தபடி அசைந்தார்கள்.

ஒருத்தி சொன்னாள், ‘நீ அந்தப் பையனை விட்டுவிடு. நான் உனக்கும் ஒரு லொரிக்காரனை சிநேகம் செய்து வைப்பேன். மணமானவன். தொட்டதுக்கெல்லாம் உன்னுடன் சண்டை போட மாட்டான்.’ மற்றவள், மிகவும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு, கொஞ்சம் பொறு , என் அம்மாவைக் கேட்டுச் சொல்கி றேன்’ என்றாள். பிறகு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒருவரை ஒருவர் புஜங்களால் இடித்தார்கள். தள்ளுவண்டி இரண்டு பக்கமும் தள்ளாடியது.

அவர்களுடைய மெய்மறந்த நிலையைக் கெடுப்பது போல இவர் அவர்களைத் தாண்டிப்போனார். இவருடைய தோள்பட்டை சிவப்புத் தலை அழகியின் கூந்தல் கொத்தில் உரசிவிட்டது. அவள் அடங்கிய குரலில் old fool என்றாள். பிறகு மறுபடியும் சிரிப்பு.

கிழவன் என்றது மனதைப் பாதிக்கவில்லை. ஆனால் முட்டாள் கிழவன்’ என்று அவள் கூறியது இவர் மனதில் தைத்தது. நீண்ட வரிசையைத் தேடி நின்றார். பிறகு வழி நெடுக இதே சிந்தனை. வீடு வந்து சேர்ந்தபோதுதான் அவள் கூறியது எவ்வளவு சரியானது என்று அவருக்கு உறைத்தது.

அது தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்பை மறந்து உள்ளே விட்டிருந்தார். மகனுடைய தொலைபேசி எண் ஞாபகத்தில் இல்லை. வேறு யாரை உதவிக்கு அழைக்கலாம் என்ற அறிவும் கிடையாது. வசந்தத்தை முற்றிலும் பிரிய மனமில்லாத குளிர்காற்று. ஆகாயம் சிவந்து கொண்டு வந்தது. சுப்பர் மார்க்கட் சாமான்களை அடைகாத்தபடி வாசல் படியிலே ஆறுமணி நேரம் கிடந்தார். சாந்தன் வரும்போது ஏறக்குறைய விறைப்பு நிலைதான்.

அதன் பிறகு மிக அவசியமென்றால் ஒழிய இவர் வெளியே வரமாட்டார். அப்படி வருவதாயின் ஒன்பது முறை ஒத்திகை பார்த்து, பையிலே திறப்பை நிச்சயப்படுத்தி, தொட்டுப் பார்த்துதான் வெளியே அடி வைப்பார்.

சூரியனே இல்லாத நாட்களில் திசை அறிவது எப்படி? இங்கே இருக்கும் சாலைகள் மிக நேராகவும், நேர்த்தியாகவும் இருக்கும். ஒன்றையொன்று செங்குத்தாகக் குறுக்கறுத்து ஓடும். அதனால் அவை களுடைய நேர்மையின்மை மறைக்கப்பட்டு விடுகிறது. அநேக நாட் களில் இவர் அடைவிடமும், போக விரும்பிய இடமும் வேறு வேறாக இருக்கும்.

வழி தவறி யாரிடமாவது உதவி கேட்டால் வடக்காலே மூன்று கட்டடம் போ, பிறகு கிழக்காலே இரண்டு கட்டடம்’ என்று பாதை விபரம் சொல்கிறார்கள். திசைகள் இல்லாத ஊரில் இது எப்படி சாத்தியம். அடிக்கடி தொலைந்து போகாமல் இருப்பதற்கு வீட்டு நம்பரையும், வீதி விபரங்களையும் சட்டைப் பையிலேயே காவிக்கொண்டு திரிகிறார். வரைபடங்களை மனப்பாடம் செய்வதை இவருடைய மருமகள் புன்னகைப்புடன் பார்க்கிறாள்.

பிரசவ காலத்திற்கு முன்பே ஒரு சின்ன அறையைத் தயார் செய்வதில் மகனும் மருமகளும் முனைப்பாக இருந்தார்கள். இட நெருக்கடி கூடுகிறது. சிறு ஜாடைகளில் இவருடைய மனைவியைப் போலவே இருந்தாள் கிருத்திகா. மலேசியப் பெண். சாந்தனை அவள் மணமுடித்தபோது ஊரில் போர் விளைவுகள் உச்சநிலையில் இருந்தன. இவரால் வரமுடியவில்லை. புகைப்படத்தில் பார்த்தது போலவே இருக்கிறாள். துள்ளும் கண்கள்.

சில வேளைகளில் மூளையில் ஏற்படும் குறுக்குத் தொடர்புகளால் ‘தங்கம்’ என்று அவளை அழைத்துவிடுவார். அவளும் ஒரு தினுசாக கண்களைச் சாய்த்துச் சிரித்துக்கொண்டே என்ன மாமா?’ என்பாள். ஒரு திரவத்தின் இழைவுடன் அவள் அசைவுகள் இருக்கும்.

தங்கமும் அப்படித்தான். அவளைத்தான் வீதி ஓரத்தில் விட்டு விட்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்தார். புதைக்கவும் இல்லை; எரிக்கவும் இல்லை. இன்றுவரை அது சாந்தனுக்குத் தெரியாது.

பெற்று வளர்த்த கடனை அடைப்பதற்கு அவன் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. நிலவறையில் இவருக்கு நிறைய வசதிகள். கோடை யில் குளிர்ச்சியாக இருந்தது. குளிர்காலத்தில் வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால் இரவு நேரங்களில் யாரோ இவரை அடிக்கடி அமுக்குவதுபோல இருக்கும். இது தவிர இன்னுமொன்றும் நடந்து விடுகிறது. சிலவேளைகளில், மிகச்சில வேளைகளில், இவர் அறியாமல் இவருடைய உடுப்பு நனைந்துவிடுகிறது.

கால்களைச் சிறு சங்கிலியால் பிணைத்த மறியல் காரர்போல இவர் கால்களை நகர்த்தி நகர்த்தித் தன் வேலைகளைச் செய்து கொண்டி ருப்பார். அது சனிக்கிழமை காலையாக இருக்கும். கிருத்திகா சலவை வேலைகள் பார்க்க நிலவறைக்கு வருவாள். ‘இதென்ன மாமா மணம்?’ என்று குழந்தைத்தனமாக மூக்கைச் சுருக்குவாள். இவர் படும் கஷ்டத்திலும் பார்க்க அதை மறைக்கும் காரியம் இவருக்குப் பெரிசாக இருந்தது.

மகன் வேலைபார்க்கும் அலுவலகம் வெகு தூரத்தில் இருந்தது. அவன் அதிகாலையிலேயே போய்விடுவான். அடுத்து மருமகள் செல்வாள். அநேகமாக இவர் எழும்பி மேலே வரும்போது கிருத்திகா பூசிய செண்டின் நறுமணம்தான் அறையில் நிறைந்து இருக்கும். அவர்கள் இருக்கமாட்டார்கள். காலை ஆகாரம் தானாகவே செய்து இவர் தனிமையில் உண்பார்.

ஆனால் இவர் ஆவலுடன் எதிர்பார்ப்பது இரவு நேரங்களைத் தான். சாந்தனுடனும் கிருத்திகாவுடனும் சேர்ந்து உண்பது இவருக்குப் பரம சந்தோஷம். சாந்தன் வரும்போதே ‘அப்பா’ என்று அழைத்த படிதான் வருவான். உணவு மேசையில், அன்று அலுவலகத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒவ்வொன்றாக விவரிப்பான். கதைகளை ஜோடனையாகவும், விஸ்தாரமாகவும் வர்ணிப்பதில் அவன் சலிப்பதில்லை . சிரிப்புகளுக்கிடையில் இருவரும் கனிவுடன் பரிமாறுவார்கள். இவர் மிகவும் எதிர்பார்க்கும் பொழுது அது.

ஆனால் அநேகமாக அவர்கள் வரமாட்டார்கள். இரவு ஒன்பது மணி தவறினால் இவரைச் சாப்பிட்டுவிடும்படி மகன் கூறியிருந்தான். இப்படியாக வாரத்தில் பல தடவைகள் இவர் தனிமையில் சாப்பிட்டு விட்டுப் படுக்கச் செல்வார். சில வேளைகளில் இரண்டு மூன்று நாட்கள் கூட அவர்களைக் காணாமலே இவர் கழித்ததுண்டு.

உணவு விஷயங்களில் கிருத்திகா மிகவும் புத்திசாலி. இவருடைய உணவு சிறு பெட்டிகளில் அடைத்து ஆழ்குளிரில் உறைந்து போய் இருக்கும். அதன் மூடிகளில் திங்கள், செவ்வாய் என்று கிழமை நாட்கள் மணிமணியான கையெழுத்தில் இருக்கும். அந்த நாளைக்கு அந்தப் பெட்டியை நுண் அலை அடுப்பில் போட்டால் இவருடைய சாப்பாடு தயார்.

இப்படி விபரமாக எழுதிவைத்த பெட்டிதான் ஒரு முறை பாரதூரமான சம்சயத்தை ஏற்படுத்தியது.

சாந்தனுடைய வீட்டுக்கு அண்மையில் நெடுஞ்சாலையும், சோலை யுமாக மாறிமாறி இருக்கும். காலநிலை அனுமதிக்கும் வேளைகளில் வீட்டுக்கு சமீபத்தில் இருக்கும் சோலைக்குப் போவார். மனிதப் பாதைகள் வளைந்து செல்லும். கிளை இல்லாமல் நேராக வளர்ந்த பிரம்மாண்டமான ஓக் மரங்களையும், புசுபுசுவென்று ரோமம் கொண்ட அணில்களையும் பார்த்துக் கொண்டிருப்பார்.

திருப்பித் தாக்கத் தெரியாத இந்த அணில்கள் மிக வேகமாகச் செயல்படும். ஓடியோடி ஓக் மர விதைகளை அவைகளின் சிற்றறிவுக்குச் தோன்றிய இடங்களில் சாமர்த்தியமாக ஒளித்து வைக்கும். இரண்டா யிரம் விதைகளை மாலை வருவதற்கிடையில் சேகரித்துவிட வேண் டும் என்று அவைகளின் சுப்பர்வைஸர் கட்டளையிட்டது போல அவதியுடன் வேலை செய்யும். குளிர்காலம் வரும்போது இவற்றை மீண்டும் கண்டு பிடித்துவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது.

இங்குதான் ஒருநாள் இவர் ஆறுமுகத்தைச் சந்தித்தார். அவருடன் ஒரு சிறுமி இரும்புக்கூட்டுப் பற்கள் பிரகாசிக்க நின்றுகொண்டிருந் தாள். அறிமுகத்தின் பின் இவருடைய ஊர்க்காரர் என்று தெரிந்தது. இவரைப்போலவே அவரும் மகனுடன் வந்து நாலு வருடங்களாக இருக்கிறார். இவருக்கு இருக்கும் பலவித உபாதைகள் அவருக்கும் இருந்தன. இருவரும் தங்கள் பிரச்சினைகளை ஒருவித உவப்போடு பரிமாறிக்கொண்டனர். அப்போதுதான் இவர் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார்.

பச்சை அட்டையின் மகிமை. அதில் ஓர் அங்கீகாரம் இருந்தது; உதவிப் பணம் கிடைக்கும். முகம் மழிக்கக்கூட மற்றவர் தயவை எதிர்பார்க்கத் தேவையில்லை. மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

ஆறுமுகம் தனியாகக் குடிபோவதற்குத் தீர்மானித்திருந்தார். இவரும் வந்தால் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து கொள்ள லாம் என்றார். முக்கியமாகத் தனிமை இராது. தங்கள் தங்கள் உபாதைகளை சுதந்திரமாக அனுபவிக்கலாம்; சிறுமைகள் இல்லை. அப்படித்தான் இரண்டு விருத்தாப்பியர்கள் கையடித்து சாத்தியப்பிர மாணம் செய்து கொண்டார்கள்.

சொந்த நாட்டிலே இவர் பெரிய அதிகாரியாக இருந்தவர். அங்கே ஆட்களைக் காத்திருக்க வைத்தே பழக்கமானவர் இங்கே யென்றால் காத்திருப்பதற்காக ஆலாய்ப் பறந்தார். எங்கே வந்த காரியம் சீக்கிரம் முடிந்துவிடுமோ என்று பயந்தபடியே இருந்தார். சுப்பர் மார்க்கட் போனால் மிக நீளமான வரிசையைத் தெரிவு செய்து அங்கே போய் நின்று கொள்வார்.

இவருடைய மகன் சொல்கிறான், இவர் அடிக்கடி தனக்குள் கதைத்துக் கொள்கிறாராம். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்று குற்றம் வேறு சாட்டுகிறான். சாப்பிடும் போது கடவாயில் சோற்றுப் பருக்கை ஒட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டு கிறான். இவர் அதைத் தட்டி விடுவதற்குத்தான் இருந்தார். அதற்குள் அவனுக்கு அவசரம்.

இந்தக் கரைச்சலால் தான் ரீவி பார்ப்பதை நிறுத்திவிட்டார். இவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கிருத்திகா வந்து சத்தத்தைக் குறைத்துவிட்டுப் போய்விடுகிறாள். பக்கத்து வீட்டாரிடம் பேச்சு வாங்காமல் இருக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் காரணம். சத்தம் வராத சலனப்படம் இப்போது ஓடும். வாயசைவையும், முகட்டையும் சிறிது நேரம் பார்த்துவிட்டு அணைத்து விடுவார்.

சிறுகச் சிறுக அவர் செயல்பாடுகள் தளர்ந்தன. பாரம் தூக்கு வதற்கு ஆயத்தப்படுத்துவதுபோல மிகச் சாதாரண காரியத்துக்கும் பலத்தைச் சேகரிக்க வேண்டி வந்தது. சட்டையிலே பொத்தான்கள் போடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். சப்பாத்திலே நாடா கட்டுவ தென்றால் நாக்கு வறண்டு விடுகிறது. கையெழுத்து போடுவதற்குச் சரியாக ஐந்து நிமிடம் எடுத்து கொண்டார்.

தேகசாஸ்திர நிபுணர் ஆலோசனைப்படி இவருக்காகச் செய்த பிரத்தியேகக் கட்டில் ஒன்று இருந்தது. மிருதுவான, ஆனால் வளைந்து கொடுக்காமல் உறுதியாக இருக்கும் படுக்கை. தோட்டத்தில் தண்ணீர் விசிறிகள் அந்த நேரத்துக்கு வந்து அந்த நேரத்துக்குத் தணிந்து விடுவதுபோல நிலவறை விளக்குகளும் தாமாகவே ஒளிர்ந்து தாமா கவே அணைந்து போயின. இரவு நேரங்களில் தொலைபேசியின் குரல் ஒலிகள் அமுக்கப்பட்டன. காசு கொடுத்து வாங்கிய சில்லிடாத தண்ணீர் இவருக்காகப் பக்கத்தில் காத்திருந்தது. இப்படி எல்லா சௌகரியங்களையும் மகன் செய்திருந்தான்.

ஆனால் இரவு நேரங்களில் திடீரென்று விழிப்பு ஏற்படும் போது நாலு ஒடுங்கிய சுவர்கள் பதுங்கு குழி சுவர்கள் போல நெருங்கி வந்தன. பேசுவதற்கு ஒரு துணை இல்லை. அப்பொழுதுதான் இவர் தனக்குள் பேச ஆரம்பித்தார். உண்மையிலே இவர் தங்கம்மாவுடன் தான் பேசினார்.

அங்கே சண்டைதான் நிரந்தரம்; இடைக்கிடை சமாதானம் மூளும். இவருடைய வயதுக்காரர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். வீட்டு நாய், மாதாகோவில் மணி, ஒற்றைப் பனைமரம் எல்லாம் தாண்டி இவர் உயிர் வாழ்ந்தார்.

பிளாஸ்டிக் வாளிகள் பாவிப்பதற்குச் சட்டம் அனுமதித்தது. ஆனால் பிடிகள் இரும்பில் இருக்கக்கூடாது. தங்கம்மா கயிற்றினால் பிடி செய்து போட்டிருந்தாள். விமானங்களின் இரைச்சல் மேலே. தண்ணீர் கொண்டுவரும் போதுதான் விழுந்தாள். சிவப்புச் சேலை உடுத்தியிருந்தாள் என்று நினைத்தார். உண்மையில் வெள்ளைச் சேலைதான் இப்படி சிவப்பாக மாறியிருந்தது.

எல்லோரும் ஓடும்போது இவர்களும் ஓடினார்கள். ஒரு மூட்டை கூட கட்ட நேரமில்லை. கால் மைல் தூரம் கூட கடக்கவில்லை . அவளுடைய கால் இழுத்தது. சரிந்துவிட்டாள். நீண்ட தூரம் காவி வந்த மூட்டைகளைச் சிலர் போட்டுவிட்டு ஓடினார்கள். அதைப் பின்னால் வந்த சிலர் தூக்கினார்கள். பிறகு அவர்களும் போட்டுவிட்டு ஓடினார்கள்.

தங்கம்மாவைத் தூக்குவதற்கு ஒருவரும் வரவில்லை. வீதியிலே கிடந்த அவளைத் தாண்டி ஓடிக்கொண்டேயிருந்தார்கள். உடம்பு குளிர்ந்து வெகுநேரமாகியும் செய்வதறியாது கூட இருந்தார். பிறகு இவரும் ஓடினார். திரும்பிப் பார்த்தபோது ஒரு சிறுவன் அவளுடைய செருப்புகளைத் திருடிக்கொண்டிருந்தான்.

இங்கேயும் ஒரு திருட்டு நடந்தது. இந்தப் பச்சை அட்டை விண்ணப் பம் பூர்த்தியாகும் தருணத்தில் இது சம்பவித்தது. இன்னும் சில விநாடிகளில் இவருக்கு அது தெரியவரும்.

இதற்காக இவர் மிகவும் கடுமையாக உழைத்தார். பல பாரங்களை நடுங்க நடுங்க நிரப்பினார். எவ்வளவோ காலம் இவரைக் காத்திருக்க வைத்து கடைசியில் இப்பொழுதுதான் நேர்முகக் கடிதம் வந்தது. இன்றைய செவ்வியில் தேறிவிட்டால் இன்னும் சில வாரங்களில் இவருக்குப் பச்சை அட்டை கிடைத்துவிடும்.

முக்கால் மணி நேரம் கடந்துவிட்டது. இதில் ஏதோ சூது நடந்திருக்கிறது. மெதுவாகப் புன்னகைப் பெண்ணிடம் போனார். அவள் சொன்ன சேதி இவரைத் திடுக்கிடவைத்தது. இத்தனை நேரமும் இவர் கண்ணில் படாத மணிக்கூட்டைச் சுட்டிக்காட்டினாள். அது 11.30 காட்டியது. இவருடையது 10.30 காட்டியது. இவர் வரும் போதே இவருக்குக் குறித்த நேரம் கடந்துவிட்டது. இவர் மிகத் தாமதமாக வந்திருப்பதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினாள். இவரால் நம்பமுடியவில்லை .

அவள் விளக்க முற்பட்டாள். அதை உணரும் சக்தி இவரிடம் இல்லை. தன்மேலேயே கோபம் கோபமாக வந்தது. தன் மகனோ, மருமகளோ இது பற்றி மூச்சுவிடாதது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றுவதாக இவருக்குப் பட்டது. அதற்கு ஓர் அரசாங்கமும் துணை போனதை இவரால் தாங்கமுடியவில்லை.

‘இன்று பார்க்க முடியாதா?’ என்று பணிவுடன் விசாரித்தார். அதற்கு அவள் கையை விரித்துவிட்டாள். அங்கே காத்திருப்போரைச் சுட்டிக்காட்டினாள். இவருடைய பேரை இன்னொரு பதிவில் திரும்பவும் கூப்பிடுவதாக உறுதி கூறினாள்.

‘அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?’

‘விரைவிலேயே கூப்பிடுவோம்; அறு மாதத்திற்குள் கூப்பிடுவோம்’ என்றாள்.

ஆறுமுகம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அமெரிக்காவில் பனிக்காலம் தொடங்கும்போது ஒக்டோபரில் வரும் நாலாவது ஞாயிற்றுக்கிழமை நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்குத் தள்ளி வைத்து விடுவார்கள். மறுபடியும் ஏப்ரல் மாதத்தில் வரும் முதல் ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் முன் னுக்குத் தள்ளிவைத்துவிடுவார்கள். இதுக்கு அது சரியாகிவிடும்.

நண்பர் சொன்னபோது இவர் அவ்வளவு சுவாரஸ்யம் காட்ட வில்லை . இது ஏப்ரல் மாதத்து முதலாவது திங்கள்கிழமை. கடந்த இரவு இவரைக் கேட்காமல் இவரிடமிருந்து ஒரு மணி நேரம் திருடி விட்டார்கள். ஒரு முழு நாடே தனக்கு எதிராகச் சதி செய்து தன்னை ஏமாற்றிவிட்டதாக இவருக்குத் தோன்றியது.

நேற்றிரவு இவர் நித்திரையாக இருந்தபோது அமெரிக்காவில் உள்ள அத்தனை அணுசக்தி மணிக்கூடுகளும் தங்கள் மணிகளைத் தாங்களாகவே ஒரு மணித்தியாலம் முன்னுக்குத் தள்ளி வைத்துக் கொண்டன. லட்சக்கணக்கான கம்புயூட்டர்களில் தகவல்கள் பறந் தன. இன்னும் சில ‘ஒரு மணி முன்னே தள்ளி வைக்கவும்’ என்று செய்திகள் பரப்பின. வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இரவிரவாகத் தொடர்ந்து இதையே செய்தன. ஆனால் இவர் அந்தச் செய்திகளை அறியவில்லை.

அமெரிக்கா பெரிய கடனாளியாகிவிட்டது. இவரிடம் இருந்து எடுத்த ஒரு மணித்தியாலத்தை அது திருப்பிக் கொடுக்கவே இல்லை.

அதற்கு சந்தர்ப்பமும் வரவில்ல. ஏனென்றால் அடுத்த ஒக்டோபர் மாதம் நாலாவது ஞாயிற்றுக்கிழமை வருமுன்னரேயே இவர் காலமாகி விட்டார். ஒரு குளிர் காலம் ஆரம்பமாவதற்கு முன்னரான பொழு தில் நிலவறையில் இவருடைய உடல் விறைத்த நிலையில் காணப் பட்டது. இரண்டு நாள் கழித்து இவர் மகன் அந்த சடலத்தைக் கண்டான். குளிர்பெட்டியில் ‘திங்கள், செவ்வாய்’ என்று குறிய எழுத்துக்களில் எழுதிய சிறு பெட்டிகள் தொடாமல் கிடந்ததுதான் காரணம்.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *