கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 3,530 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ கண்ணன் சொன்னானாம்! தேவர்களுக்கு ஆறு மாதம் பகற்காலம், ஆறுமாதம் இராக்காலமாம்!- தேவர்களுக்கென்ன, துருவ வாசிகளுக்கும் அப்படித்தான்! வெள்ளிக்கோளில் இவர் போய் வசித்தால், இவருக்கும் நூற்றுப்பன்னிரண்டு நாள் இரவும், நூற்றுப்பன்னிரண்டு நாள் பகலுமாய் இருக்கும். இதென்ன பெரிய அதிசயமே? – அந்த ஆறுமாத இரவு முடிந்து விடியும் காலம் மார்கழியாம்! அதனால் அது சிறப்பான மாதமாம்!

கண்ணனுக்கு மனச்சந்தோஷமாக இருக்கட்டும்! இவருக்கு இந்த மாதம் முழுதுமே ‘ரென்சனாக’ இருந்தது! உயரமும் அமைதியான கண்களுமாய் அவர், அவரைச் சுற்றி ஒரு நெருக்கமும் புழுக்கமும் எப்போதும் இருந்தன. அவருக்குள் இருந்து இடையிடை கானமிசைத்த ஒருசில பறவைகளும் பறந்து விட்டது போல!

எத்தனையோ முறை திருப்பித் திருப்பிச் செய்ததில் இரண்டு குவிவுவில்லை கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொலைகாட்டி, இம்முறைதான் சரியாக வந்திருக்கிறது. மார்கழி மாதத்தின் அதிசயங்களில் ஒன்றாய் இன்று வானம் மிகத் தெளிவாயும் இருக்கிறது. முற்றத்தில் நிறுத்தப்பட்ட தாங்கியில் தொலை காட்டி யைப் பொருத்தினார் மாஸ்டர்.

மேற்கு வானில் மிகத் தெளிவாய் தெரியும் வியாழன்… தொலைகாட்டியூடாகப் பார்த்தபோது, பல்வேறு நிறங்களை வெளிவிட்டு மிக அழகாய் ஜொலித்த அந்த விநாடி அற்புதமாய் இருந்தது. தொலைகாட்டியூடாக வெள்ளொளி நிறப்பிரிகை அடையும் அழகு: (Chromatic Aberration) அவர் சந்தோஷிக்கிற ஒரு கணம்!

பிரதான வீதிக்கும் மாஸ்டரின் வீட்டு மதிலுக்கும் இடையில் ஒரு அடி தூரமிருக்கும்….. வீதியை மருவியபடி வீடு! பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் வீட்டு வாயிலில் நுழையலாம் என்று அப்போது நினைத்து மனைவியின் ரீதனப் பணத்தில் ஆசையுடன் வாங்கிய வீடு! இப்போது….?

சற்று முன்னர் தான் பெரும் ஒலி எழுப்பியபடி கனரக வாகனங்கள் அந்த வீதியால் நீண்டு சென்றன. அவை சென்றதன் அடையாளமாய் இரண்டொரு வேட்டொலிகள். பின் வெறிச்சோடிப் போன தெரு! சோர்ந்து வழிகின்ற வீதியோரத் தென்னைகள்!

மிக அருமையாயும் அதிசயமாயும் ஒரு பத்து நிமிடம் அவரது செவிப்பறை மென்சவ்வை எந்த ஒலி அலையும் தாக்கவில்லை! அந்த அமைதியைப் பயன்படுத்தியே அவர் இந்தத் தொலைகாட்டியை அமைத்து முடித்தார்.

மீண்டும் தொலைகாட்டியைக் கிழக்கு நோக்கித் திருப்பி, ஒருகூட்டமாகத் தெரிந்த ‘கார்த்திகை’ நட்சத்திரங்களைப் பார்த்தார். அதற்கு அருகில் மாடம் போலத்தெரிந்த ரோகிணி அதற்கும் கீழே பிரபலமான அந்த ஒரியன் (Orion) எட்டாம் வகுப்பு விஞ்ஞான பாடத்தில் வானியல் அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான ஆசிரியர் பாசறைக்கும் சென்று வந்த பின்னர்தான் இந்த நட்சத்திரங்களைத் தேடிப் பார்ப்பதில் மாஸ்டருக்கு ஒரு பிரியம் ஏற்பட்டிருந்தது.

“அப்பா….. உதுக்குள்ளே என்ன தெரிது ….?”

நீர் காலுக்கடியில் குளிர்ந்து பெருகுவது போல, அவரது காலுக்குள் ஓடிவந்தான் அவரது மழலை மகன்.

“இதுக்குள்ளையோ கண்ணா…. இதுக்குள்ளை தெரியிறது ஒரியன் எண்ட வேட்டைக்காரன் நட்சத்திரம்….. அங்கை… அதிலை ஒரே நேருக்கு மூண்டு பிரகாசமாத் தெரிது. அதுதான் வேட்டைக்காரன்ரை பெல்ற்…. மற்றப் பக்கமா மூண்டு … அதுதான் அவன்ரை வாள் … அந்தப் பக்கம் தனிய ஒரு நட்சத்திரம்…. அதுதான் …. அவன்ரை தலை….. இனி உவனுக்குப் பின்னாலை கிழக்குப் பக்கத்திலையிருந்து இரண்டு நாய் வரும்…”

மாஸ்டர் மகனை அணைத்தபடி, விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் கேட்டது. பஸ் கண்ணாடிகள் நொருங்கிய பின்பும் அப்படியே சிலசமயம் நிற்பது போல, மகனது முகம் ஆயிரம் நடுங்கலுடன் நொருங்கி நின்றது. வீட்டு யன்னல்கள் உண்மையாகவே அதிர்ந்து – நொருங்காமல் ஓய்ந்தன. மாஸ்டரின் இதயம் ஒரு முறை நின்று விட்டுப் பின் துடிக்க ஆரம்பித்தது போல ஒரு உணர்வு! வழக்கம் போல… மனம் விறைப்படைந்து அமைதியிழந்தது. உலகம் வண்ணமிழந்து போனது போல் …..!

வான் கொண்ட நட்சத்திரங்களைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை! சந்திரன் சோகை பிடித்தாற் போல், மேற்றிசையில் சாம்பல் பூசி வெளிறித் தெரிந்தான்.

“என்னப்பா… பெரிய வெடியாயிருக்குது …. ? உங்களுக்கு …… என்ன செய்யுது …..? படுங்கோ இப்பிடி…!”

உள்ளேயிருந்து ஓடி வந்தாள் மனைவி.

இப்போது சில காலமாய் … பெரிய ஒலிகளைக் கேட்டவுடன் அவர் சமநிலை இழந்து, அந்தரப்படுவது அவளைப் பதற வைத்தது.

“எனக்கு ஒண்டும் செய்யேலை. நீ பதகளிப்படாதை. இப்பதானே உதாலை போனவங்கள்….. எங்கை வெடிச்சுதோ தெரியேல்லை …. கண்ணிவெடி போலைதான் இருக்கு ….”

மனைவியைப் போலியாய் சமாதானம் செய்தவர் சாய்கதிரையில் மெதுவாக அமர்ந்து விட்டார்.

நேற்று முழுதும் பாடசாலையில் தன்னைப் பூச்சாண்டி காட்டிய அந்த மின் சுற்றுக் கணக்கை ‘ இப்போதாவது செய்து பார்த்து விடலாம் என்றால்…?

வடக்குப் புறத்தில் இவரது வீட்டு மதிலை எல்லையாகக் கொண்ட டியூற்றறி யிலிருந்து மெதுவாகக் கசமுச வென்று வந்து கொண்டிருந்த ஒலி இப்போது இந்தக் குண்டுச் சத்தத்தைத் தொடர்ந்து பெரும் இரைச்சலாகக் கேட்க ஆரம்பித்தது! அவர்கள் குண்டு வெடிப்புப் பற்றி அலசுகிறார்கள்! அவர்களிலும் பிழை இல்லைத்தான் இனி, அவர்களின் ‘டியூசன் மாஸ்டர்’ வரும் வரையில் சில சமயம் வந்த பின்னரும் இந்த இரைச்சல் தொடரும்!

சென்ற வாரத்தில் ஒரு நாள் இப்படித்தான் இவர்கள் இரைந்து கொண்டிருந்த போது,

மனைவி மதிலுக்கு மேலே எட்டிப் பார்த்து “ஸ்” என்றதும், அவர்கள் “பயித்தங்காய் தலையை நீட்டுது, இஞ்சை பாரடி பயித்தங்காய் கதைக்குது…” என்று மனைவியின் பட்டத்தை ‘ ச் சொல்லி எள்ளி நகையாடி, மேலும் பலமாய்ச் சிரித்துக் கதைத்ததும், இன்றைக்கும் இந்த மதிலில் ஞாபகமாய்க் கிடக்கிறது!

“சரி, இனி ஒரு வேலையும் செய்ய ஏலாது சாப்பிடுவம், சாப்பாட்டைப் போடு…”

மாஸ்டர் சாப்பிடப் போன போது, முன் கடையில் இருந்து ‘ஐ ஆம் எ டிஸ்கோ டான்ஸர்….’ பாடல் ஒலிக்கத்தொடங்கியது.

“கொஞ்ச நேரத்துக்கு முந்தி அவங்கள் போன உடனை கடையை இழுத்துப் பூட்டினவங்கள், இப்ப அதுக்கிடையிலை திறந்து வைச்சுக் கொண்டு ‘ரேப்பும் போடத் தொடங்கிட்டாங்கள்.”

எரிச்சலுடன் புறுபுறுத்தாள் மனைவி

அது ‘றெகோடிங் பார்’ அல்ல! ஒரு சிறிய சிற்றுண்டிச் சாலைதான்!

ஒரு மாதத்திற்கு முன் ஒரு மழை நாள் இரவில், இந்தக் கடைக்காரனுடன் கதைக்கப் போனதும் அவமானப்பட்டுத் திரும்பி வந்ததும் இவர் மனக் குகையில் மிக ஆழமான ஓவியமாய் வரையப்பட்டிருந்தது.

மெலிதான குளிர்காற்று ‘சலக் சலக்’ என்று மரத்தின் இலைகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தது. வீட்டில், பஸ்ஸில், தெருவில், பாடசாலையில், கடையில் …. என்று எல்லா இடத்திலும் உலகம் ஒலியால் ஆக்கப்பட்டிருந்த எரிச்சலில், குடையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் விசிறிக் கொண்டு வேகமாய்ப் போன இவர்,

“தம்பி, இஞ்சை என்ன கலியாண வீடோ நடத்திறியள் ஒவ்வொரு நாளும் … ?” என்றார்.

இவரை ஒரு பயித்தியம் போல் நிமிர்ந்து பார்த்தான் கடைக்காரப் பெடியன்.

“நீங்கள் கடையிலை உந்தப் பாட்டுக்களை உவ்வளவு சத்தமாவிடப்பிடாது ….”

“விட்டா… உமக்கென்ன செய்யுது…?”

தண்ணீர் தெறித்தது போல் அந்தப் பதில்! ‘உங்களுக்கு’ என்ற மரியாதை உமக்கு’ என்று குறுகிவிட்டதிலும் இவர் ஆவேசமடைந்தார்.

“எனக்கு இடைஞ்சலாய் இருக்குது. ஒண்டும் சிந்திக்க முடிதில்லை” உரப்பாகச் சொன்னார்.

“சத்தம் போடுறதாலை தான் எங்களுக்கு யாபாரம் நடக்குது. ஆனபடியால் அது எங்கட உரிமை. நீர் அதைத் தடுக்கேலாது….”

அதை விட உரப்பாகினான் அவன்.

“வழக்குப் போடுவன்” வெருட்டிப் பார்த்தார்.

“இப்ப பொலிசு எங்கையிருக்கு? கோடு எங்கையிருக்கு? வழக்குப் போட… போட்டுப் பாருமன் ….”

அவன் சவால் விட்டான்.

“நெடுக இரைச்சலுக்கை வாழ்றவையின்ரை காது கெதியிலை மெல்லிய ஒலிகளைக் கேட்கிற தன்மையை இழந்திடுதாம். பிறகு காதுக்குச் சாணை பிடிக்கேலாது…..”

அவர் கொஞ்சம் இறங்கி வந்து நிலைமையை விஞ்ஞான ரீதியாக விளக்க முற்பட்டார்.

“நான் அதைப் பற்றிக் கவலைப்படேல்லை …..”

“இனி மேல் இந்த மனிசனோடை கதைக்கிறதிலை பிரயோசனமில்லை,” என்பது போல எழுந்து தன் வியாபாரத்தைக் கவனிக்க உள்ளே போய் விட்டான் பெடியன்.

அவர் தோல்வியுடன் மௌனமாய் வீடு திரும்பினார். அந்த மௌனத்தில் புயலின் கனம் இருந்தது. நிழல் விழுத்தும் பெரு மரங்கள் வீதியில் பயங்கரமாய்த் தோன்றின.

“நீங்களேன் கதைக்கப் போனீங்கள்?” என்று மனைவியும் கேட்டபோது,

“சூழல் மாசடையிறதைப் பற்றி உனக்கு என்ன இழவு தெரியும்? சும்மா கத்தாமல் வாயைப் பொத்திக் கொண்டு கிட….”

கடைக்காரப் பெடியன் மேலிருந்த ஆத்திரத்தையும் மனைவிமேல் கொட்டித் தீர்த்தார். இந்த ஓவியம்…. எப்படி அழியும்?

“ஒரு ஐஞ்சாறு மாசத்துக்கு முந்தி, கனரக வாகனங்கள் போனால் இரண்டு மூண்டு நாளைக்குச் சுற்றாடல் அமைதியா இருக்கும். இப்ப அதுகும் இல்லை. அதுக்கள் போய் ஐஞ்சு நிமிசத்திலை எல்லாம் நோர்மல்’. இனிமேல் யாழ்ப்பாணத்துச் சனத்தை ஒருத்தராலும் பயப்படுத்த ஏலாது போலை கிடக்கு….”

சாப்பிட்டு முடிந்த பின்னும் மாஸ்டரின் சிந்தனைகள் அத் திசையிலிருந்து ஓயவில்லை. வெளியே ஒலிகளும் ஓயவில்லை.

இப்பொழுது தெருவில் வாகனங்களும் மெதுவாக ஓடத்தொடங்கி விட்டிருந்தன. ஒரு மோட்டார் சைக்கிள், சிறிது நேரத்தின் பின் பலமாக ஹோர்ன்’ அடித்தபடி ஒரு கார். தொடர்ந்து ஒரு லொறி…!

எந்த ஒலியும் வீட்டினுள் நுழையாமல் தடுக்கும் முயற்சி போல யன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் அடித்துச் சாத்தினார். “சீ…. நான் படுக்கப் போறான் …. நாளைக்கு விடிய எழும்பி ஏதும் அலுவல் பாப்பம்.”

என்று அலுத்துக் கொண்டபடி படுக்கச் சென்றார்.

மேற்குப்புற வீட்டிலிருந்து ஆணி அடிப்பது போல ஒரு சத்தம் இடையிட்டு … இடையிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தது … அந்த வீட்டின் பத்து வயது வாண்டுப் பையன் ஏதோ உடைக்கிறான்.

தன் உலகம் பாடசாலை, வீடு , சத்தம் என்று சுருங்கி விட்டதில் பெரிதும் மன வெறுமை அடைந்திருந்தார் மாஸ்டர்.

நித்திரை வர மறுத்தது!

எல்லாவற்றையும் தலையைத் திருப்பி நோட்டம் விடுகிற மின் விசிறி சுழன்று கொண்டிருந்தும், புழுக்கம் அசைய மறுத்து அழுத்தமாய் மண்டிக்கிடந்தது. இந்த மார்கழியில் அந்தப் புழுக்கம் அதிசயமாய் இருந்தது இவருக்கு !

பத்து மணிக்குப் பிறகு எழுந்து சென்று இரண்டு மில்லி கிராம் (2mg) ‘வலியம்’ (Valium) மாத்திரையில் ஒன்றை விழுங்கிவிட்டு வந்து படுத்தார்.

“என்னப்பா நித்திரை வரேல்லையா?”

மகனை நித்திரையாக்கிவிட்டு வந்த மனைவியின் குரலில் கவலை மிதந்தது.

“இண்டைக்கு நித்திரை வராது போலைதான் கிடக்கு….” நித்திரை வராது என்ற எண்ணம் மனதில் கடுமையான பரபரப்பும் அந்தரமும் கொண்ட ஒரு நிலையைத் தோற்றுவித்திருந்தது.

முன் கடையின் டிஸ்கோ’ பாட்டுக்கள் இன்னும் கேட்டுக் கொண்டேயிருந்தன. வழக்கமாய்ப் பத்து மணியுடன் முடிந்து போகின்ற பாடல்கள் ? இன்று…?

பின்புற வீட்டிலிருந்து ஒரு மூடியின், கீழ் விழுந்த உருளல்.. கண்ணாடிப் பாத்திரங்களின் முணு முணுப்பு ஒலி எழுப்பும் சூழல் முழுவதையும் அறைந்து. சாகடிக்க வேண்டும் போல இவருக்குள் ஒரு வேகம்! ஆனால் செய்ய முடியாதே!

படுக்கையில் அமைதியற்றுப் புரண்டார்.

மனதில் மெல்லிழையாக ஊர்ந்திருந்த ஒரு வேதனை ஊதிப்பெருகி ஊடுருவ ஆரம்பித்தது.

இரைச்சல் இருதய நோய் உயர்குருதி அமுக்கம் ஆகியவற்றைக் கொண்டு வருகிறது என்றும், அதுவே சூழலை மாசுபடுத்துவதில் முதலிடம் வகிக்கிறது என்றும் அண்மையில் எங்கோ வாசித்த நினைவு…!

தனக்கும் இருதய நோய்தான் ஏற்பட்டு விட்டதோ?

எங்கோ , என்ன எங்கோ ? தமிழ் நாடு சுகாதார அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே தான் இவ்வாறு பேசியிருந்தார். அவருக்குப் புரிகிறது!

‘யாழ்ப்பாணத்திலை இருக்கிற சனம் ஒண்டுக்கும் இது விளங்குதில்லையே?’

சின்ன வயதிலேயே இதை நன்றாகப் புரிய வைக்க வேண்டுமென்று எட்டாம் வகுப்பிலேயே சூழல் மாசடைதலைப் பற்றி…!

அந்த அலகை வகுப்பில் கற்பித்தபோது, காண்டீபன் கேட்டான்.

“கிருமி நாசினியள், செயற்கைப் பசளையள் தண்ணியோடை சேந்தாத் தண்ணி மாசடையுது எண்டு சொல்றம். ஏனெண்டால் அதுகள் நஞ்சுகள். ஆனால் ஒலி காத்திலை கலந்தா… வளி எப்பிடி மாசடையும்? ஒலி நஞ்சுப்பொருளே …. இல்லையே…..?”

“எந்த ஒரு பொருளும் அளவுக்கு அதிகமான செறிவிலை ஒரு இடத்திலையிருந்து, அதன் மூலம் மனித இனத்துக்குத் தீமை செய்யிற போது அது மாசாகும்… நீரும் கூடச் சில சந்தர்ப்பங்களில் மாசுப் பொருளாகும்… வெப்பமும் சில சந்தர்ப்பங்களிலை மாசாகும்….”

இவற்றைக் காண்டீபனுக்குப் புரிய வைப்பதில் மாஸ்டர் நீண்ட நேரம் செலவிடவேண்டி இருந்தது.

‘முன்கடைப் பெடியனுக்கு எவ்வளவு நேரம் செலவழித்தும் புரிய வைக்க முடியவில்லை ! –

ஏதேதோ சிந்தனைகளுடன் உறங்கிப்போனார் மாஸ்டர். அதுவும் ஆழமான நித்திரையல்ல! கனவுகள் நிறைந்த, அமைதியற்ற , அடிக்கடி விழிப்பு ஏற்படுகிற நித்திரை!

தான் ஒரு பயங்கர மனநோயாளியாய் அங்கொடை ஆஸ்பத்திரியில், இரும்புவலைக் கட்டிலுக்குள்ளே படுத்துக் கிடந்து – மனைவியைப் பார்த்துப் பேய்ச் சிரிப்புச் சிரிப்பதாய் ..

கனவுகளும் வாழ்க்கையும் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன என்று மாஸ்டருக்குத் தெரியவில்லை.

அந்தக்கனவு முடிவதற்கிடையில் ஒரு பயங்கர ஓசை! நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் நள்ளிரவில் அந்த ஓசை… மிக அண்மையில் கேட்டது.

கெட்டித்துப்போன முகத்துடன் எழுந்து படுக்கையில் அமர்ந்தார். மெதுவாக எழுந்து கதவுக்கருகில் சென்றார். திறந்து வெளியே பார்ப்போம் என்று நினைத்தார்.

“ஐயோ, ஐயோ, கதவைத் திறக்காதையுங்கோ ! இந்தக் காலத்திலை என்ன அவசரம் எண்டாலும் இரவிலை கதவைத் திறந்து வெளியிலை போகப்பிடாது ….”

கதறியபடி ஓடி வந்த மனைவி அவர் கையைப்பிடித்துத் தடுத்தாள். முப்பதாயிரம் வருட முதுமையும் பயமும் அந்தக் கணத்தில் அவள் முகத்தில் குடியேறியிருந்தன.

வாழ்வில் எப்போதுமே மனைவி சொல்லைத் தட்டி அறியா தவர் போலப் பணிந்து திரும்பி வந்து படுத்தார் இவர்.

அற்ப ஜீவிகள் – மனிதனோடு ஒப்பிடும் போது ஒரு ‘இத்துனியாயித்’ தெரிகிற வைரசுக்கள், பற்றீரியங்கள், பூச்சிகள், ‘புரத்தோசோவன்’கள் சில சமங்களில் மனிதனை எப்படி ஆட்டிப்படைத்து விடுகின்றன என்பது பற்றி எமது வைத்தியர்களைக் கேட்டால் சொல்லுவார்கள் கதை கதையாய்! பூச்சிகள் சில… ஒரு மனிதனைப்படுத்திய பாட்டைப் பற்றிச் சிறுகதை எழுதிய ஒரு எழுத்தாளனுக்கு இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் இலக்கியச் சிந்தனைப் பரிசு’ கிடைத்திருக்கிறது!

‘இந்த ஒலி, உயிர்கூட இல்லாத இந்த ஒலி மனிதனைச் செய்யும் வதை… இதைப்பற்றி ஏன் நான் ஒரு கதை எழுதக்கூடாது? எழுதினால் என்ன கிடைக்கும் எனக்கு? இந்த நாட்டில் தமிழனுக்கு என்ன கிடைக்கும்…? சூடுதான் கிடைக்கும்!

ஒன்றும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. காலையில் எழுந்து அந்த மின் சுற்றுக் கணக்கைச் செய்து விட்டு இதை எழுதத்தான் வேண்டும்…’

நினைத்தபடியே கொஞ்சம் உறங்கிப்போனவர் மீண்டும் கண்விழித்த போது, “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்ற பாடல் உச்ச உரப்பில் வானில் மிதந்து வந்து கொண்டிருந்தது. இது திருவெம்பாவைக்காலம் என்பது இவருக்கு நினைவுக்கு வந்தது.

அமைதியான காலைப் பொழுதை விழுங்கிக்கொண்டிருந்த அந்தப் பாடல், அருகில் இருந்த வைரவர் கோயிலில் இருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது!

இரவு முழுவதும் வதைபட்டதில் கண் எரிந்தது. தலை சுற்றவது போலிருந்தது. மனதில் தொடர்ந்து அந்த ‘ரென்சன் உணர்வு.

பல பலா விடியலுற்ற போது, தமி துமி என மழை துமித்துக் கொண்டிருக்க,

“இஞ்சரப்பா! என்னாலை தலை நிமித்த முடியேல்லை. கொஞ்சப் பிளேன்’ கொணந்து தாரும் பாப்பம்…” என்று மனைவியை எழுப்பினார்.

அவள் எழுந்து குசினிக்குள் போய் ஐந்து நிமிடம் கூட இருக்காது! திடீர் என்று எங்கிருந்தோ தோன்றிய ஐந்து ‘ஹெலிகொப்டர்கள் தாங்க முடியாத இரைச்சலுடன் அந்த ஊரின் மேல் வட்டமிட்டுப் பறக்கத் தொடங்கின.

அறிகுறி இல்லாத ஆக்கிரமிப்பு! ஆகாயத்திலிருந்தும், தரையிலிருந்தும் இடைவிடாது கேட்ட சூட்டுச் சத்தங்கள் ஊசி இழைகளாய் உயிர் நரம்பையே ஊடுருவின.

கோவிலில் திருவெம்பாவைக்குக் கூடிநின்ற சிலர் குழறியபடி தெருவில் ஓடுவது கேட்டது. காலையில் எழுந்து வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்ற நினைவு முற்றாக விடைபெற்றுவிட்டது.

மனதின் ‘ரென்சன்’ ‘அங்சைற்றி’ ஆகியவை அதிஉச்ச நிலையை அடைய … படுத்த கட்டிலின் கீழ் பதுங்கிக் கொண்டார் மாஸ்ரர்.

“நீ வெளிலை போகாதை ….” என்று மனைவிக்குப் பணித்த வார்த்தைகள் பிசினைப் போல் தொண்டையில் ஒட்டிக் கொண்டு, மிகக் கடினப்பட்டு வெளியில் வந்தன.

சோகமே மௌனமாய் உருக்கொண்டு சிலையாய்ச் சமைந்தது போல் சுவர் மூலையில் நின்றாள் மனைவி அவளை ஒட்டிக்கொண்டு அவளின் சேலையைப் பிடித்தபடி அழுதுகொண்டு மகன், மனைவியின் கண்களிலும் ஈரம், கண்ணீருக்குத் தேவையான உரம், பயத்திலிருந்தும் கிடைக்கிறதா?

அதிகாலையில் தாங்கள் துலாவில் ஏறி, பட்டை மூலம் நீர் பாய்ச்சுகையில், பறவைகளின் உதயத்திசை தமக்குத் தேனிக்கும் என்று மாஸ்டரின் தந்தையார் முன்னர் ஒரு முறை கூறியது இப்போது அவர் மனதில் படமாய் மட்டும் விரிந்தது…….!

– அமிர்தகங்கை – புரட்டாதி ’86

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *