தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,175 
 
 

முன் மாலைப்பொழுது, பரீட்சை சமயம் ஆதலால் பூங்கா, பிள்ளைகளின் சப்தங்களைப் பறிகொடுத்து, மௌனத்தில் இருந்தது. பூங்காவின் வாயிலருகே இபுருக்கும் சூப்கடையும் கூட, மந்த கதியிலேயே இயங்கியது. ரோஹிணி இரண்டு சூப் கப்களை வாங்கிக் கொண்டு உள்ளே விரைந்தாள்.

நுழைந்ததுமே ரஞ்சனி இருந்த இடம் தெரிந்துவிட்டது. அருகில் கிடந்த சிமெண்ட் பெஞ்சை லட்சியம் செய்யாமல், ஒரு பெருமரத்தின் நிழலில் – அகண்டு பெரிதாய்ப் படர்ந்து கீழிறங்கும் அதன் இரண்டு வேர்களுக்கு மத்தியில் தன்னைப் பொருத்திக்கொண்டு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள் அவள். வந்த நீண்ட நேரம் ஆகிவிட்டது போலும்… அவளைச் சுற்றி உதிர்ந்திருந்த இலைகளின் அடத்தி அப்படித்தான் சொன்னது.
சந்தன நிறத்தில் பச்சைக் கரை போட்ட காட்டன் புடைவை. சுற்றிலும் கிடந்த பழுத்த பிரவுன் நிற இலைகள்… கிளைகளின் ஊடாகக் கீற்றாய் வெளிப்படும் இறங்கு சூரியன்.

எல்லாவற்றையும்விட ரோஹிணி அருகில் வந்த நிற்பதைக்கூட கவனிக்காத அதிதீவிர வாசிப்பு! பெஞ்சில் சூப் கப்களை வைத்துவிட்டு ரஞ்சனியைத் தன் செல்போனில் படம்பிடித்து அதையே அவள் முகத்துக்கு முன் நீட்டி விளையாட்டாய் ஆட்டிக் காட்டினாள்!

சின்ன திடுக்கிடலுடன் நிமிர்ந்த ரஞ்சனி, ஹாய்! என்று மலர்ந்து சிரித்தாள். சாரி, நான் ரொம்ப லேட்! என்று சொல்ல, அவளோடு நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

ஒரே அச்சு!சக பயணியாய்த்தான் அறிமுகமானாள் ரோஹிணி.

தஞ்சாவூரிலிருந்த நீடாமங்கலம் வரை பயணம் செய்கையில் ரயில் பெட்டியில் அடிக்கடி எதிர்ப்படும் ஒரு சகஜ முகம். அலுப்போ அங்கலாய்போ இல்லாமல், மூடிய கண்களுடன், காதில் சொருகிய இயர்ஃபோன்களுடன், தனக்குள் ஆழ்ந்து போகும் அந்த இனிய லாவகம்! கச்சிதமான உடல், உடை… வண்டி எத்தனை பெரிய உலுக்கலுடன் நின்றாலும்கூட, திறக்க மறுக்கும் அந்த பிடிவாதமான கண்களை, ஏனோ ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ரஞ்சனிக்கு ஏற்பட்டது!

வெகு நாள் கழித்தே தான் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏதோ வண்டியொன்று தடம்புரண்டுவிட, அந்த மார்க்கத்தில் அத்தனை ரயில்களும் தாமதப்பட்டு நின்றன. ஒன்றரை மணி நேரம் பழியாய்க் கிடந்தார்கள். அந்த நெடிய பிளாட்ஃபாமில். ஒரு வாக் போகலாமா? – ரஞ்சனி கேட்க, ரோஹிணி மறுப்பேதுமில்லாமல் கூட நடந்தாள்.

எனக்கு உங்களைப் பார்க்கும் போதெல்லாம், ஏன்னே தெரியலை, ஸ்லீப்பிங் பியூட்டி தான் ஞாபகத்துக்கு வரும்! என்றாள் ரஞ்சனி.
ம்? நான் அழகுன்னு சொல்ல வரீங்களா? இல்ல, தூங்குமூஞ்சின்னு திட்றீங்களா? கண்சிமிட்டிச் சிரித்தாள் ரோஹிணி!

ம்… ரெண்டுமேன்னு தான் சொல்றேன் – ரஞ்சனி இப்படிச் சொல்லவும், ரோஹிணி வாய்விட்டுச் சிரித்தாள். நட்பானார்கள்.
எந்த ஆஃபீஸ்ல வொர்க் பண்றீங்க ரோஹிணி..?
ஆஃபீஸ் இல்ல, ஒரு வீடு! ஹோம் நர்சாயிருக்கேன்! – திருவாரூரில் ஒரு பெரிய புள்ளியைச் சொன்னாள். அவங்க அம்மா தான் ஏழு வருஷமா படுத்த படுக்கை! எனக்கு மூணு வருஷமாத்தான் வேலை… பெட் பேன் வைக்கணும், குளிக்க விடணும், நேரத்துக்கு சாப்பாடு, மருந்து கொடுக்கணும், அவ்வளவுதான்!

நர்ஸிங் முடிச்சிருக்கீங்களா?

இல்ல, நான் வெறும் டென்த் தான்!
ரஞ்சனி ஆச்சரியமானாள். கிரேட்! இவ்வளவு சகிச்சு செய்யறது எவ்வளவு பெரிய விஷயம்?

நான் அபபடி நினைக்கலை! என் சூழ்நிலை, என் தேவை… அதனாலதான் நான் இந்த வேலையைச் செய்யிறேன்… நான் ஒண்ணும் இதை சேவையா செய்யலையே!… எந்த முகப்பூச்சும் இல்லாமல் பட்டென்று உண்மையை யதார்த்தமாய் வெளிப்படுத்தும் அந்த மனசும் அதில் தெரிந்த நேர்மையும் ரஞ்சனிக்கு மிகவும் பிடித்து போனது.

ரோஹிணி, வீடு எங்க?

வீடில்ல… ஹாஸ்டல்!

பேரண்ட்ஸ் வெளியூர்ல இருக்காங்களா? சட்டென்று ரோஹிணியின் கண்கள் கலங்கின. ரஞ்சனியைப் பார்ப்பதைத் தவிர்த்து, வேறு திசையில் முகம் திருப்பி குனிந்து கொண்டாள். கண்களையும் அவசரமாய்த் துடைத்துக் கொண்டாள்.
சாரி, நான் கேஷûவலாதான் கேட்டேன்!

கொஞ்சம் தள்ளுங்க! வழிவிடுங்க! இந்த சீட்டுக்கு யாரும் வராங்களா-ன்ற இந்த மூணைத் தவிர எங்கிட்ட யாரும் அதிகம் பேசினதில்லை!

சாரி, நான்…

நோ, நோ, அதுக்கில்லை… நான் இப்படி மூடியா, இறுக்கமா இருக்கிறது யாருக்கும் உறுத்தலாவே இல்லை… உங்களைத் தவிர.. அதுக்கே நான் நன்றி சொல்லணும்! உங்ககிட்ட ஷேர் பண்ணனும்!

நீங்கள்லாம் உங்க வீட்டுக்கு சி.எம். வரார்னு சொன்னா எப்படி தடபுடல் பண்ணுவீங்களோ, அப்படித்தான் எங்க வீட்டுக்கு எங்க அப்பா வர்றது அவ்வளவு முக்கியம் அவ்வளவு அரிது.. வெரி ரேர்.. மிக இகழ்ச்சியாத் தமக்குள் சிரித்துக் கொண்டாள். பச்…அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு! சொல்லப்போன் அதுதான் முறையானதும் கூட!…


சொல்றதுக்கென்ன? எங்கம்மா காசு பணத்தை எதிர்பார்த்துத்தான் எங்கப்பாவோட இருந்தாங்க! கவர்மென்ட்ல, அதுவும் ரெவென்யூ டிபார்ட்மென்ட்ல வேலை… எங்கள மாதிரி சைடு ஃபோமிலிக்கு அவரோட சைடு இன்கம் போதாதா என்ன? மறுபடியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ரஞ்சனி என்ன பேசுவதென்று புரியாமல் அவளையே பார்த்தாள்.

எனக்கு, பத்தாவது படிக்கும்போது எப்படியோ உண்மை தெரிஞ்சுப் போச்சு! சண்டை போட்டேன்! பத்து வீட்ல டாய்லெட் கழுவியாவது நீ என்னைப் படிக்க வையி! இனிமே இவரு காசும் வேணாம், இவரும் வேணாம்னேன்! எங்கம்மா கேட்கலை! எனக்கு நீயும் வேணாம், படிப்பும் வேணாம் போன்னு வந்துட்டேன்! – நாலே வரியில் சொல்லிவிட்டாலும், இந்த வார்த்தைகளின் பின்னாலிருந்த அவள் வாழ்க்கை, ரஞ்சனியைச் சங்கடப்படுத்தியது. மிகச் சாதாரணமாய்த் தன்னைத் தினம் கடந்து போகும் ஒருத்திக்குள் சோகம் ஒரு சுரங்கமாயிருக்கும் என்று அவள் நினைத்திருக்கவில்லை! வெகு நேரம் அமைதியாய்ப் பார்த்திருந்தாள் ரோஹிணியையே… இதோ, இந்த மரத்தடியில், இப்போது பார்ப்பதைப் போலவே…
இன்னைக்கு உங்களைப் பார்க்கலேன்னா, அப்புறம் என்னைக்குமே முடியாம போயிடுமோன்னு ஒரு பயம்! அதான் வரச் சொன்னேன்!

ரோஹிணி சிரித்தாள்.

ஏன் இந்த வேலையை விட்டுட்டீங்களா?

ம்… விட வேண்டிய கட்டாயம்! அந்தம்மா முந்தாநாள் இறந்துட்டாங்க!

அச்சச்சோ!

சந்தோஷப்படுங்க! பாதி நேரம் தூக்கம், மீதி நேரம் மயக்கம்! எறும்பு கடிச்சா கூட இன்னொருத்தர் பார்த்துத்தான் தட்டிவிடணும்! எவ்வளவு கொடுமை தெரியுமா?

ம்… நிஜம்தான்! பெருமூச்சு விட்டாள் ரோஹிணி.

அதான்… ஒரு சின்ன மொமென்டோ… நினைவுப் பரிசு! என்னோட முதல் மற்றும் ஒரே ஃப்ரெண்டுக்காக! பேசிக்கொண்டே, கைப்பையைத் திறந்து எதையோ எடுத்து, ரஞ்சனியின் கையை உரிமையாய்ப் பற்றியிழுத்து, வலது கையில் நடுவிரல் பற்றி ஒரு மோதிரத்தை அணிவித்தாள்!

முதலில் ரஞ்சனியின் கண்கள் அந்த மோதிரத்தை கண்டதும் தெறித்து விழுந்து விடும் அளவுக்கு விரிந்தன…. விரிந்த வேகத்தில் ஏதேதோ சொல்ல வேண்டுமென்ற பரபரப்பில் படபடத்தன… நம்ப முடியாமல் வலது மோதிர விரலையும், இடது மோதிர விரலையும் திரும்பத் திரும்ப நீட்டிப் பார்த்துக் கொண்டன! ஒரே அச்சில் வார்த்த இரட்டை மோதிரங்களை வலதிலும், இடதிலுமாகப் பார்த்ததில், சிரிப்பும் குழப்பமும் தாங்கமுடியாமல் ரோஹிணியை ஏறிட்டபோது – அவள் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன…

பழசு தான்! நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்பா, எம்.ஆர்னு இனிஷியல் போட்டு எனக்க ஒரு தீபாவளிக்க வாங்கித் தந்தது தான்! ஹாஸ்டலுக்கு வரதுக்கு முன்னாடி, ரொம்ப ஆசையாய் போட்டிருப்பேன் இதை! வீட்ல சண்டை வந்ததும் கழட்டி வைச்சிட்டேன்! அப்புறம் ஒரு நாள், உங்ககிட்ட ட்ரெயின்ல பேசிட்டிருக்கும்போது எதேச்சையா கவனிச்சேன்… உங்க விரல்லயும் ஜெராக்ஸ் காப்பி மாதிரி இதே மோதிரம், இதே எழுத்து…

சிரிப்பெல்லாம் மறைந்து, மறந்தே போனவளாய் நின்றாள் ரஞ்சனி. பார்த்தீங்களா? வாட் எ கோயின்சிடென்ஸ்? என்று சொல்லி, ரோஹிணி எப்போதும் போல், கண்சிமிட்டிச் சிரிக்கமாட்டாளா என்று தவிப்பாக நின்றாள் ரஞ்சனி.
ரஞ்சனி நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன்.. ஆனா, ஒருதடவை கூட நான் உங்களை பர்சனலா எதுவுமே கேட்டதேயில்லை! ஏன்னா, சின்ன வயசுலேயே அப்பா பர்ஸ்ல நான் உங்க போட்டோவை எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்! தெரியுமா?

பிரமை பிடித்தவளாய் அந்த மோதிரத்தையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்திருந்தாள் ரஞ்சனி. நிமிர்ந்தபோது ரோஹிணி சென்ற திசையைக் கூட அனுமானிக்க முடியாத அளவுக்கு இருட்டு, பூங்காவை, அவளை, அப்பிக் கிடந்தது!

– ஸ்ரீயா (மார்ச் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *