ஒரு தாளிப்பனையின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 4,976 
 

வசு’ இன்றைக்கு சடுகுடு விளையாடலாம் வரும்போது, கலா டீச்சர் சொன்னதை மறந்திடாதே! அரைப்படி பசுநெய் கொண்டுவர மறந்திடாதே’ பள்ளியிலிருந்து திரும்பும்போதே மணி சொல்லியிருந்தான். ‘வசந்தன்’ என்ற எனது பெயரைச்சுறுக்கி ‘வசு’ என்றழைப்பவன் அவனொருவந்தான். எனக்கு கிராமத்தில் பிடித்தவர்களென்று சொன்னால் கலா டீச்சர், மணி, பிறகு அவர்களிருவர் வீட்டையும் சேர்த்துபிடித்தபடி நிற்கும் தாளிப்பணை.

எங்கள் ஊருக்கு மாற்றலாகிவந்த புதிதில், கலா டீச்சரை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அப்பாவும், இரண்டொரு ஊர் பெரிய மனிதர்களும் சொன்னபடி, பூட்டிக்கிடந்த சுப்பறாயக் கவுண்டர் வீட்டைத் திறந்துகொடுத்து, ஊரையும் தெருக்கோடி பொட்டுக்கண்ணு கடையையும் அறிமுகப்படுத்திக் கொடுத்தது நாங்கள்தான். ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி கருப்பு வெள்ளை படங்களில் டீச்சரா வருகிற நடிகைகளை பார்த்திருக்கீங்களா? அப்படித்தான் கலா டீச்சர் இருந்ததாக ஞாபகம்: பருபோட்ட முகம்; பிச்சிடா போட்ட கொண்டை, கருப்பு பிரேமிட்ட கண்ணாடி; இலேசாகச் சாய்த்துப்பிடித்த குடை, இன்ன நிறமென்று விளங்கிக்கொள்ளவியலாத வெளிர் நிறத்தில் புடவை; செருப்புப்போட்டுகிட்டு, ஒரு நேர்க்கோட்டில் கால்களை வைக்க முயற்சிப்பதுபோல எங்க தெருவுல நடந்துபோன பெண்மணி அவங்க. என்னுடைய தாத்தா, அவங்க நடந்துபோறதைப் பார்த்துட்டு, “என்னடா உங்க வாத்திச்சி நடந்துபோறாளா? கலிகாலம்.. பொட்டைச்சிகளுக்கு வந்த வாழ்வ பார்த்தியாண்ணு”, சொன்னதை இன்றைக்கும் நான் மறக்கவில்லை, டீச்சரோடு, வயதான அவங்க அம்மாவும் இருந்தாங்க. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை டவுனுக்குப் போய்வருவார்கள், நாங்கள் கடைசிபஸ் வரும்வரை ரோட்டில் காத்திருந்து டீச்சரை அழைத்து வருவோம். அவர்கள் குடும்ப வாழ்க்கையைப்பற்றி ஊர் முழுக்க வதந்திகள் மெல்ல மெல்ல பரவி பிறகு ஒருநாள் அடங்கியே போயிற்று. எப்போதேனும் பேச்சுவந்தால் அன்றைக்கு, அவர்கள் வீட்டிற்கு மெலிந்த தேகாவாட்டில், கொக்கு மனித அவதாரம் எடுத்ததுபோல ஓர் வந்திருப்பார், தெருவில் போகிறவர்களை அழைப்பதென்றால் சில நேரங்களில் மனிதர் தலையை மாத்திரம் சன்னல்கம்பிகளுக்கு வெளியே அந்தரத்தில் நிறுத்திக்கொண்டுவிடுவார். எங்களில் அநேகர் குறிப்பாக இரவுக்காலங்களில் கண்டு பயந்திருக்கிறோம். அவரது உண்மையான பெயர் எதுவென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் வந்திருக்கிறபோது கலாடீச்சர் வீட்டிற்கு நாங்கள் போவதில்லை. இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்தாற்போல டீச்சர்வீட்டில் சண்டையும் சச்சரவுமாகயிருக்கும். இளமையைத் தாண்டிய வயதென்றாலும், முகத்தின் மினுப்பும், உடலின் மதர்ப்பும், அந்திவானச் சிவப்பு நிறமும் கலாடீச்சருக்கு கதாநாயகி அந்தஸ்த்தைக் கொடுத்திருந்தது. எந்நேரமும் அவர்கள் வீட்டில் பழியாய்க் கிடந்து, அவர் சொல்வதைச் செய்வதில் எங்களுக்குள் சண்டைவந்து கட்டிப்புரள்வதுண்டு.

வடக்கில் சமுத்திரம்போல விரிந்து கிடக்கிற கழுவெளியில் கோடைக்காலங்களில் கோரைப்புற்களையும், பழுத்த விழல்களையும், நாக்குகொள்ள சுழற்றி, வாயில் வாங்கி கடைவாய் பிதுங்க, எச்சிலொழுக மென்றபடி சோர்ந்து நடக்கும் கால் நடைகளின் காட்சி சித்திரங்களை காலை, நண்பகல், மாலையென மூன்றுவகையாகப் பிரிக்கலாம். காலையில் முடிச்சுமுடிச்சாக தைல ஓவியங்கள் உயிர்பெற்றதுபோல அசையும் மந்தைகளுக்கிடையே அவ்வப்போது எருதுகளிடும் எக்காளமும், தங்கள் பின்புறத்தை காத்துக்கொள்ள தவறிய கிடாரிகளின் கதறலும் மந்தைவெளியில் வேலங்குச்சியை, வாயில் அடக்கிக்கொண்டு வம்புபேசும் மனிதர் காதுகள்வரை வந்து விழுவதுண்டு. நண்பகலில் அம்மந்தைகள் வரிசை உடைந்து நீர்கண்ட இடங்களில் சோர்ந்து அசைபோட்டபடி படுத்துக் கிடக்கிற காட்சி கானல் நீருடன் பார்க்க ஒரு பென்சில் ஓவியம்போல அழகாய் இருக்கும். வானத்தைத் தொடுவதுபோன்ற புழுதி மண்டலத்துடன், குளம்புகளை உரசி சடசடவென்ற ஓசைகள் எழுப்பிக்கொண்டு அந்திவேளை படையெடுப்புபோல கிராமத்துக்குத் திரும்பும் கால்நடைகளை கித்தான் ஓவியமென்று கருதலாம். கிழக்கில், கண்கொள்ள கால் பரப்பி நிற்கும் கறுத்த பணைமரங்களின் முதுகொட்டி விழுது சடைகளுடன் நெடுந்தூரம் தலைவிரித்து கிடக்கும் ஆலமரம். தென்கிழக்கில் குடிசைக்குச் சற்று மேலான சாதியில் சம்புவேய்ந்த இரண்டு தூலக்கட்டு வீடுகள், அதிலொன்றில் கலா டீச்சர் இருந்தாள். மற்றொன்று கோவிற் பண்டாரமான வேலாயுதத் தம்பிரானுக்குச் சொந்தம். வேலாயுதத் தம்பிரான், மணிக்கு தகப்பனார். கொஞ்சம் மெனக்கிட்டு பார்வையை மேலும் தென் கிழக்காக ஓட்டினால் தாளிப்பணை. தாளிப்பணைக்கும், சம்புவேய்ந்த கூரைக்குமிடையில் பகல் முழுக்க, குறிப்பாக சித்திரை வைகாசி மாதங்களில் நீலம்பாரித்த வானம் திரையாக விழுந்திருக்கும். காற்று நன்றாக வீசும்போது தூக்கணாங்குருவிகளின் கூடுகள் நொண்டி விளையாடும் பெண்கள் தொங்கட்டான்போல ஆட்டம் போடுவது பேரழகு.

மணியும் நானும் அதிகாலையில் இலுப்பைத் தோப்பில் ஒதுங்குகிறபோது ஆரம்பித்து, அந்தியில், கிராமத்திற்கு வடக்கே பரவிக்கிடக்கிற கழுவெளி விளிம்பில் மேய்ச்சலுக்குபோன கால்நடைகள் கண்ணிற்படும்வரை, ஒன்றாகத் திரிவதுண்டு. கழுதைக்கெட்டால் குட்டிச்சுவர் என்பதுபோல, என்வயதொத்தப் பயன்களுக்குத் தாளிப்பனை. தாளிப்பனையை ஹீரோவாக்கி மணி அவ்வப்போது சுவாரஸ்யமாக கதை சொல்லுவான். தாளிப்பனையைத் தனது முதுக்குப்புறம் இருத்திக்கொண்டு எங்களைப் பார்த்தபடி பேசுவான். அவனது நோக்கம் தாளிப்பனையைப் பார்த்தபடி நாங்கள் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும். அவன் எதிர்பார்த்ததுபோலவே தாளிப்பனையைப் பற்றிய பேச்சுவருகிறபோதேல்லாம் நிவவொளியில் தலையை அசைத்தபடி நிற்பதைப் போன்ற பிரமையை அது உண்டுபண்ணும்.

‘கேக்குதா, தாளிப்பணைதான் அழுது’ சொல்லிவிட்டு, மணி எங்கள் முகத்தைப் பார்த்தான்.

பாவாடைராயன் குதிரைக்கென்று செய்திருந்த சிமெண்ட் மேடையில் பெரிய மனுஷன் தோரணையில் மணி அமர்ந்திருக்கிறான். சடுகுடுஆடிவிட்டு வழக்கம்போல தாளிப்பனைக்கு எதிரே உட்கார்ந்திருக்கிறோம். எல்லோரிடமும் ஒட்டியிருக்கிற உழமண் வாசம். நிலவொளியில், எங்கள் முகத்தில் சன்னமாய் வெளிப்படுகிற, அச்சத்தை மாத்திரம் தனியே பிரித்தெடுப்பதுபோல கண்கள் விரிய அவன் எங்களை பார்த்தபடி இருக்கிறான். குதிரையிலிருந்த காவல்தெய்வம் இறங்கி அமர்ந்திருப்பதுபோலத்தான் அவனது பார்வையும் தோரணையும் இருக்கிறது. முறுக்கிய மீசையும், தடித்த உதடுகளுமே பாக்கி. எலும்புகளில் ஊடாக காற்று புகுந்து, மீண்டு செல்கிறது. மயிர்கள் சிலிர்க்க, உடல் மெல்ல அதிரத் தொடங்கியிருந்தது. நெருக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்தபடி, அவன் சொல்லப் போவதை, எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

உலகம் அழியப்போவுதுங்கிறதை, தாளிப்பணை எப்படியோ தெரிஞ்சுவச்சிகிட்டு அழுது.

விசுக்கென்று எங்கள் தலைகள் உயருகின்றன. எதிரே சற்று தூரத்தில், தாளிப்பணை பிரமாண்டமாய் நிற்கிறது. அதன் தலையைச் சுற்றிலும் நீளும் மட்டைகள், அரக்கனொருவன் உள்ளங்கையை விரித்ததுபோல பெரிய பெரிய பணையோலைகள், வீசியக் காற்றில் ஓலைகள் அலைய, தூக்கணாங்குருவிக் கூடுகள் இற்று விழுந்திடுமோ என்கிற தேவையற்ற அச்சம்.

எப்படிச்சொல்ற?, என்று கேட்கிறேன். எனது கேள்விக்காக காத்திருந்தவன்போல,

எனக்கு..எனக்குத் தெரியும். எத்தனைமுறை சொல்லியிருக்கேன் தாளிப்பணை எத்தனையோ மாமாங்கமா இங்கே நிக்குதுண்ணு சொல்றாங்க. நீயும் நானும் ஒரு நாளைக்குச் செத்துடுவோம். ஆனா தாளிப்பணை சாகாதாம், இங்கேயே இருக்குமாம். ரொம்பகாலமா நிக்கிறதாலே அதற்கு எல்லாம் தெரியும்ணு சொல்றாங்க: உங்க அப்பாவை, உங்க தாத்தாவை அவங்க தாத்தாவை; இப்படி நெறையபேரை ஏற்கனவே பார்த்திருக்காம், மனிதர்கள் செய்கிற பாவங்களை எவ்வளவுதான் சுமப்பது, அதனாலயே பொறுக்க முடியலை. நமக்குப் புரியாத அல்லது தெரிந்திராத ரகசியமெல்லாங்கூட அதற்குத் தெரியுமுண்ணு சொல்றாங்க.

ம்..

பாரு எப்படி நிக்குது பாரு, பூமியையும் வானத்தையும் சேர்த்து பிடிச்சுகிட்டு. அதனோட தலைதான் ஆகாயமாம், வேர்தான் பூமியாம். நடக்கிற அக்குறும்பை தாளமாட்டாம, ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் இந்த உலகத்தையே தாளிப்பணை அழிச்சுறும்ணு நம்ம டீச்சர் சொல்லியிருக்காங்க.

இப்போ குரல் அடங்கிட்டமாதிரி தோணுதுநான்.

எனக்குக் கேட்குது, தாளிப்பணை இன்னமும் அழுது. நிதானமாக் கேட்கணும். நமக்கென்னமோ குரல் மாத்திரந்தான் கேட்கிறமாதிரி இருக்கிறது. ஆனா கலா டீச்சருக்கு அதன் அர்த்தம் விளங்குமாம். நம்மகிட்டச் சொல்லமாட்டாங்க. உங்க கவனமெல்லாம் என்மீது இருப்பதால, அதன் அழு குரல் கேட்கலைண்ணு நினைக்கிறேன்.

தாளிப்பணைக்குப் பக்கத்திற்போய் பார்க்கலாமா?

வேண்டாம், எங்க அப்பாகூட அங்க போகமாட்டார். வடிவேல் கவுண்டரோட பையன் இப்படித்தான் ஒரு நாளு தாளிப்பணை குரலை பக்கத்திலே போய் கேட்கணுமென்று ஆசைபட்டு, ரத்தங் கக்கி செத்துப் போனானாம்.

தலையை உயர்த்திப்பார்த்தேன். நீண்ட கூந்தலும், கறுத்த உடலுங்கொண்ட காட்டேரிபோல தாளிப்பனை நிற்கிறது. நாக்கு மாத்திரம், எங்கள் கைக்கெட்டும் தூரத்தில் நீண்டுத் தொங்கிக்கொண்டிருந்தது. அச்சத்துடன் தலையைத் திருப்பிக்கொண்டேன். மணிக்கு பயங்கள் இருக்க வாய்ப்பில்லை, அவன் தைரியசாலி. அவனுடைய அப்பா இல்லாத நேரங்களில் அழுக்கேறிய ஈரிழைத் துண்டொன்றை இடுப்பிற் கட்டிக்கொண்டு பெரிய மனுஷன்போல, எண்ணைக் குடுவையும், திரிகட்டுமாக விளக்கு வைக்கும் நேரங்களில் உள்ளூர் கோவில்களைச் சுற்றிவருவான். திருவிழா காலம் தவிர்த்து மற்ற நாட்களில் வெறிச்சோடிக்கிடக்கிற அம்மன்கோவில்களுக்கு விளக்கேற்றும் பொறுப்பு அவனுக்கிருந்தது.

‘என்னடா ஆச்சு உனக்குமணி கேட்கிறான்.

சொல்லத் தெரியலை. ஏன் எதற்காக தாளிப்பனை அழணும்.

எனக்குப் பதில் சொல்ல தெரியலை.

‘நான் கிளம்பறேன் அம்மா திட்டுவாங்க’சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

டேய் நாளைக்குப் பாக்கம் போயிட்டு, ‘கேர்’ சாமான் கொண்டுவரணும் மறந்திடாதே’, அதற்குமேல் அங்கிருக்கப் பயம். வீட்டிற்குத் திரும்புகிறேன். சன்னமாய் பரவியிருந்த நிலவொளி தந்த தைரியத்தில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். சிலுசிலுவென்று அடித்த ஊதக்காற்றில் உடல் நடுங்கியது, கைகளிரண்டையும் குறுக்காகமடித்துத் தோளைப் பொத்திக்கொண்டேன். வீசுகிற காற்றில் கலவையாக பூவரசம்பூக்கள், சாணம், மாட்டுமூத்திரம், புழுதியின் மணம். இருபுறமும் தெரிந்த வீட்டுக்கூரைகளில் மீதும் வானம் இடிந்து விழக் காத்திருப்பதுபோல பிரமை. மணி சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமோ? அவனும் என்னை மாதிரிதான். அதிகமாக சிந்திப்பதெல்லாம் முடியாத காரியம். அநேகமாக அவன் கதையென்று சொல்வதெல்லாம், கலா டீச்சர் சொன்னதாகத்தான் இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த பூவரசு மரங்கள் தலையைச் சிலுப்பிக்கொண்டு, தாளிப்பணையின் கவலைகளேதும் அவைகளுக்கில்லாதுபோல சாதுவாக நின்றிருந்தன. வீதியின் தலைமாட்டில் சித்தேரியும், ராட்சத காளான்களைப்போல, சித்தேரிக் கரையில் அடர்த்தியாக பணைமரங்களும் நின்றிருந்தன. பணைமரங்களுக்கும் அழும் பழக்கமுண்டோ? கரையின் வலப்புறத்தில் அடிவாரத்தில் காய்ப்பற்று நிற்கிற சின்ன புளியமரம் கண்டிப்பாய் அழுவதற்கான சாத்தியமுண்டு. அந்தமரத்தில்தான் ராசுக்கவுண்டர் தூக்கில் தொங்கினார். ஞாபகம் வந்ததும், பயத்தில் உடல் வெடவெடத்தது. காலையில் ஏரிபக்கம் ஒதுங்கிய வெங்கிட்டு, மூச்சிறைக்க ஓடிவந்து அப்பாவிடம் சொன்னதும், விழுப்புரத்திலிருந்து அரை நிஜார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஊரையே மிரட்டி விசாரித்த காட்சியும் அட்சரம் பிசகாமல் காட்சியாய்த் தெரிகின்றன. முக்குட்டை நெருங்கி எங்கள் வீட்டிற்காய்த் திரும்பியபொழுது, அய்யனாரப்பனுக்கு நேர்ந்துகொண்ட அண்ணாமலை வீட்டு ஆட்டுக்கிடா நின்றுகொண்டு பயமுறுத்தியது. ஒருவித முடை நாற்றம். மூக்கைபொத்திக்கொண்டு கடந்தபோது தலையை ஆட்டியது. அப்பாவும், பூசாரி பாவாடைத் தம்பிரானும் தூரத்தில் நடந்துபோவது தெரிந்தது. வீட்டை நெருங்கியபோது, கொஞ்சம் முன்புவரை நிர்மலமாய்த் தெரிந்த கீழ் வானத்தில் மின்னல் வெட்டி ஓய்ந்தது, சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது. அவசரமாய் வீட்டுக்குள் ஓடினேன்.

வாசல் நடையைத் தாண்டிக்கொண்டு கூடத்திற்கு வந்தபோது, சலனமற்ற உடலுடன் அம்மா படுத்துக் கிடந்தாள், நெருங்கி நின்றேன், கால்களில் தட்டுப்பட்ட புடவைத் தலைப்பில் மழைச்சாரலின் ஈரம். திறந்திருந்த வாசலில் இறங்க நினைத்ததைபோல ஒன்றிரண்டு நொடிகள் மின்னல்கள் ஒளிப் பாம்புகளாய் நெளிந்த அவசரத்தில் காணாமற்போயின, தொடர்ந்து வெடிபோட்டதுபோல இடியிறங்கி, வானத்தில் பெருஞ் சத்தமிட்டுக்கொண்டு உருண்டோடுகிறது, ‘அர்ச்சுனா.. அர்ச்சுனா’ அம்மா முணுமுணுக்கிறாள். சட்டென்று அமர்ந்து அம்மாவைக் கட்டிக்கொண்டேன். எழுந்துகொண்டாள். இருள், வாசலில் விழுந்து தெறிக்கும் மழை நீரின் சலசலப்பு, எதிர்பக்கத்தில் கூரைக்குமேலே தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த தென்னை, மழை ஒழுக்கிற்காக வைத்திருந்த குடத்தில் விழும் நீர்த்துளியின் நிதானித்த சத்தம், அம்மாவின் முகத்தை ஒரு சில நொடிகள் பரிசீலிப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல அம்மா அழுதிருக்கவேண்டும், கன்னம் நனைந்திருந்தது. சினிமாக்களில் வரும் பையன்கள் போல அம்மாவுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லணும்போல இருக்கிறது.

அம்மா அழுதியா?

..

எங்கிட்டே சொல்லக்கூடாதா?

உனக்கு வயசுபோதாது.

ஏன் மணியால் புரிஞ்சுக்க முடியும்போது எனக்கு முடியாதா என்ன?

எப்படி?

தாளிப்பணை அழுவுமா?

அம்மா மௌனமாக இருந்தாள். பதில் சொல்லும் எண்ணமேதும் இல்லை என்பதுபோலத்தான் அமர்ந்திருந்தாள். என் கேள்வியைக் காதில் வாங்கினாளா?

அம்மா.. சொல்லும்மா? தாளிப்பணை அழுவுமா?

தாளிப்பணைண்ணு இல்லை எல்லாமே அழக்கூடும். மனிதர்கள் மாத்திரந்தான் அழணுமா என்ன? மரம், செடி, கொடிகூட அழலாம். சந்தோஷத்தில் பூக்கறதும் துளிர்க்கிறதும்போல, அவை வாடுவதையும், உதிர்ப்பதையும் துக்கமா எடுத்துக்கவேண்டியதுதான்.

அதில்லைம்மா? மரங்கள் குரலெடுத்து அழுமா?

அழலாம் நான் கேட்டதில்லை. ஆனால் நம் வீட்டில் பின்புறமிருக்கும் தென்னை மரம் அழக் கேட்டிருக்கிறேன்.

அப்படியான அழுகுரலேதும் கேட்டமாதிரி தெரியலையே.

தாளிப்பணை அழுததை நீ கேட்டியா?

இல்லை. மணி தனக்குக் கேட்குதுங்கிறான். சில நேரங்களிலே கலா டீச்சர் சொல்வதையெல்லாம் தன்னோட அனுபவமா எங்கக்கிட்டே சொல்வான். நம்ம வீட்டுத் தென்னை மரம் அழுவதை நான் கேட்டதில்லையே.

மனிதர்களைப் போலத்தான் மரங்களும், அதனதன் சுபாவப்படி அழுகின்றன. தாளிப்பணை சத்தம்போட்டு அழுதிருக்கும், தென்னை மரம், அடுத்தவர்க்குத் தெரிந்திடக்கூடாதென்று நினைக்குதோ என்னவோ? அதுதான் கமுக்கமாக அழுது.

அப்பா கூடவா கேட்டதில்லை.

மற்றவர் வேதனைகளை உங்கப்பா புரிந்து கொண்டவரில்லை. அவருக்கு அழுகுரலெல்லாம் காதில் விழாது. மேசைமேலே பால் வச்சிருக்கேன். குடிச்சுட்டு நீ போய்ப் படு.

இரண்டு நாட்கள் தொடர்ந்து அடைமழையில் தத்தளித்துக்கொண்டிருந்த கிராமத்திற்கு அன்றைக்குத்தான் விமோசனம் கிடைத்திருந்தது. நிம்மதியாக கிராமத்து சனங்கள் வயல்வெளிக்கும் மற்றவேலைகளையும் கவனிக்கலாமென்று நினைத்தபோதுதான் வழக்கம்போல வெங்கிட்டு வீட்டிற்கு ஓடிவந்தார், ‘தாளிப்பணை அருகே ஈச்சம்புதரொன்றில் பச்சைபிள்ளையொன்று கிடப்பதாகச் சொன்னார். எல்லோரும் ஓடினார்கள். அங்கே போகவேண்டாமென்ற அம்மாவை ஏமாற்றிவிட்டுப் போய்ச் சேர்ந்தபோது, ஊரே திரண்டிருந்தது. இறந்து கிடந்த குழந்தையைவிட எனது பரிதாபத்தைச் சம்பாதித்தது கருகிக்கிடந்த தாளிப்பணை

அன்றைக்குப் நீ போனபிறகு விழுந்த இடியில் தாளிப்பணை எரிஞ்சு போச்சு. மணி

மணி, என்ன கலா டீச்சர் வீடு பூட்டிக்கிடக்கு?

வழக்கம்போல காலமை பால் வாங்கி வரலாமென்று சொம்பைக் கேட்க அவங்க வீட்டுக்குப் போனேன். வெளியிலே பூட்டியிருந்தது. அவங்க இரவோடு இரவா காலி பண்ணிக்கிட்டு ஊரைவிட்டுப் போயிட்டாங்கண்ணு எங்கப்பா சொன்னார்.

என்ன இப்படி திடீரென்று? -நான்

எனக்குத் தெரியாது, ஆனா எங்கப்பாவுக்குக் தெரிஞ்சிருக்கணும், வேணுமானா அந்தி சாந்தசதும் வீட்டுக்கு வா, கோவில்களுக்கு விளக்கேற்றிவிட்டு நானும் வீட்டுக்கு வந்திருப்பேன். கலா டீச்சர் இப்படி சொல்லாமல் கொள்ளாம புறப்பட்டுப்போன காரணத்தை அப்பாவிடம் கேட்டுச் சொல்றேன்.

மணி வாக்கியத்தை முடிக்கவில்லை, நான் ஓட்டமெடுத்தேன்.

வசு நில்லுடா. சயந்திரம் எங்க வீட்டுக்கு வருவியா வரமாட்டியா?

நான் பதில் சொல்லவில்லை ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டைக்கண்ட பிறகுதான் ஓட்டத்தை நிறுத்தினேன். மூச்சிறைத்தது. அம்மாவைக் கிணற்றடியில் கண்டுபிடிச்சேன்.

அம்மா தாளிப்பணை இனி அழாது. விழுந்த இடியிலே எரிஞ்சு போச்சு

அம்மா சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஏதோ யோசிப்பதுபோல தெரிந்தது. முகத்தில் லேசாக கவலை படர்ந்திருப்பதாக உணர்ந்தேன். அதை உறுதிசெய்பவள்போல:

அதிலிருந்த தூக்கணாங் குருவிகளுக்கு என்ன ஆச்சோபாவம். என்று வருந்தினாள் எனக்கு வேறுகவலை, அதை போக்கிக்கொள்வது அவசியம் என்பதுபோல உணர்ந்தேன்.

தென்னை மரம் எப்படி, தொடர்ந்து அழுவுமா? சட்டென்று அம்மாவிடம் கேட்டேன். இம்முறை பதில் சொல்ல அவளுக்குத் தயக்கமில்லை.

இல்லை இனி அழாதுண்ணு நினைக்கிறேன், முந்தானையை கண்களில் ஒற்றி எடுத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *