ஒரு தாயின் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 1,910 
 
 

“என்னங்க பொண்ணு இப்படி சொல்லிவிட்டு போறா எனக்கு பயமா இருக்குங்க”.

ஐந்து வருஷமாப் பயந்தது போதும். இனிமேலும் என்னால் பயப்படமுடியாது. முடிஞ்சா அனுசரிச்சுகிட்டு இருக்கட்டும்; இல்லாட்டி புள்ளைங்களோட வந்துடச் சொல்லு. நான் சோறு போடுறேன்.

“புள்ளைங்களைத் தரமாட்டேன்னு சொல்லிட்டா?”

புடிச்ச பீடை உட்டுதுன்னு கைய வீசிகிட்டு வரச்சொல்லு. ஆயுசுக்கும் சோறும் துணியும் நான் தர்றேன். தெளிவாச் சொல்லிப்புடு உன்பெண்ணுகிட்ட. நான் நாளைக் காலை முதல் பஸ்சுக்குப் புறப்படனும். திருச்சியில் மீட்டிங் வர இரண்டு நாளாகும். நல்லதா ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்து வை விடியற்காலையில் கிளம்பனும் சாப்பாட்டை எடுத்துவை.” அதட்டலாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

பொங்கிக் கொண்டு வந்தது மீனாட்சிக்கு. “என்ன மனுஷன் இவர். ஒரே மகள் அப்படி நொந்து போய் அழுது புலம்பிகிட்டுப் போறா. இவர் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை. இந்த ஆண் பிள்ளைகளே இப்படித்தானா?”

அங்கே மகளைக் கடித்துக் குதறும் மருமகன். இங்கு மௌனமாகக் கழுத்தறுக்கும் இவர். மாசம் ஒரு முறை இவர் மீட்டிங்குன்னு போறது எதுக்காக? கூட வேலை பார்க்கும் லதாவோட கும்மாளம் போடத்தானே? அதையெல்லாம் கண்டும் காணாம இருப்பது நான் பெற்ற மக்களுக்காகத் தானே? ஒற்றைப் பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டு நாய்படாத பாடு. பிள்ளை இஞ்ஜீனியரிங் படிக்கிறான். ஹாஸ்டல் வாசம். அவன் கிளம்பி என்ன பாடுபடுத்தப் போறானோ?

சே என்ன வாழ்க்கை சுயமரியாதையை அடகு வைத்து ஊருக்காக வாழ்ந்து…ஹீம் என்னத்தக் கண்டேன் மௌனமாக ட்ரெஸ்சை அயர்ன் பண்ண ஆரம்பித்தாள்.

அயன் பாக்ஸ் மிதமான உஷ்ணத்துடன் துணியில் உலாவர, அவள் எண்ணங்கள் அதீத உஷ்ணத்துடன் நெஞ்சில் உலாவந்தது.

ஒரே மகளை பார்த்துப் பார்த்து தகுதிக்குமேல் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்து அடுத்த ஆண்டே இரட்டைக் குழந்தை பிறக்க வளைகாப்பு சீமந்தம் ஆஸ்பத்திரி அது இது என்று செலவுகள் கழுத்தை நெறிக்க முழி பிதுங்கி விட்டது.

இதற்குள் தனியாரில் வேலை பார்த்த மருமகன் சொந்த பிசினஸ் பண்றேன்னு போட்ட நகைகளைத் தொலைக்க, வறுமையின் நிறம் சிவப்பு என்பது நிதர்சனமாயிற்று. ஏற்கனவே அம்மாக் கோண்டான மாப்பிள்ளை. இரண்டு தங்கை தம்பி அம்மா அப்பா என வீடு நிறைய கூட்டம்.

ஒரே பெண் தானே அதைச் செஞ்சாஎன்ன இதைச் செஞ்சா என்னன்னு கேட்கிறாங்க என்று கோரிக்கையுடன் வரும் மகள். மகன் வரும் மகிழ்ச்சியை விட அவள் என்ன கேட்கப் போகிறாளோ என்ற திகில் எப்போதும் அடிவயிற்றில். ராசி இல்லாத மகளை எங்க தலையில் கட்டி விட்டாங்க. அதை ஈடு கட்டவே இந்த வசூல் வேட்டை என்ற வியாக்கியானம் வேறு.

யோசித்துப் பார்த்ததில் பொருளாதாரத்தின் பொருள் தான் தாரம் என்று உண்மை உரைக்க ஆரம்பித்தது அரைகுறையாய் விட்ட கம்ப்யூட்டர் படிப்பைத் தொடரச் செய்து வேலையும் கிடைத்து இரண்டு மாதசம்பளமும் வாங்கி விட்டாள் உஷா. இது எதையுமே கண்டு கொள்ளாத கணவன் நடேசன் சிறு சேமிப்பு முகவராக மீனாட்சி பணி புரிந்ததால் கணிசமான வருமானம் அதை வைத்தே உஷாவுக்கு வேண்டியதைச் செய்தாள் மீனாட்சி.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிம்மதியாக உண்டு உறங்க ஆரம்பித்தாள் மீனாட்சி அந்தநிம்மதியில் இடி விழுந்தது இன்று உஷா கொண்டு வந்த செய்தியால். விஷயம் இதுதான்.

உஷாவின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி வேலைக்குத் தேர்வானாள். வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணி. அங்குதான் வில்லங்கம் அரங்கேறி இருக்கிறது.

முறைப்படி தேர்வானவளுக்கு ஐம்பது ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கின்றனர் அங்கு இருந்த பழம் பெருச்சாளிகள். எங்களைக் கலக்காமலே மாப்பிள்ளை கடன் வாங்கி லஞ்சம் தந்து இருக்கிறார். மாதா மாதம் அவள் சம்பளத்தில் இருந்தே வட்டியுடன் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

உஷா வேலை பார்க்கும் அலுவலகம் அருகே ஒரு நகைக் கடை. அதில் நகை சீட்டு சேர வேண்டுமென கடை அதிபர் கோரிக்கை வைக்க அனைவரும் சீட்டில் சேர்ந்தனர். உஷாவையும் வற்புறுத்த மறுத்து இருக்கிறாள்.

அப்போது அவள் நாக்கில் ஏழரைச்சனி. வேலைக்கு கொடுத்த லஞ்சப் பணத்திற்குத் தவணை கட்டவே திணறுகிறேன் எனவே சீட்டில் சேரமுடியாது என்று கூறி இருக்கிறாள்.

இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலைக்கு லஞ்சம் என்று சில உண்மை விளம்பிப் பத்திரிகைகள் உரிக்க நேர்மையான மாவட்ட ஆட்சியருக்கு டென்ஷன் தவிக்கிறார் தன் வரம்புக்கு உட்பட்ட அலுவலகம் அத்தனையிலும் ரகசியமாகத் தகவல் சேகரிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.

அப்புறம் என்ன!

உஷா லஞ்சம் வழங்கியது மாவட்ட ஆட்சியருக்கு தகவல் பறக்கிறது. கூடவே பெருச்சாளிக்கும் தகவல் கசிகிறது. காட்டிக் கொடுக்காவிட்டால் சீட்டைக் கிழிப்பேன் என்று கலெக்டர் விரட்ட, காட்டிக் கொடுத்தால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம். கலெக்டர் மூணுமாசத்தில் கிளம்பிடுவாரு. அப்புறம் எங்ககிட்டதான் குப்பை கொட்டணும், உனக்கு ரெட் மார்க்குடுத்து சஸ்பெண்ட் செய்து விடுவோம்னு பெருச்சாளிகள் மிரட்ட அரண்டு போன உஷா புருஷன்கிட்ட சொல்லியிருக்கிறாள்.

அவரும் லஞ்சம் வாங்கியவரிடம் எகிற உள்ளுர் ரவுடி மூலம் பதில் வந்தது. அவர் கிட்ட எசகு பிசகா நடந்து கிட்டா உங்க பெண்டாட்டி மானத்தை எப்படி வாங்குறதுன்னு எங்களுக்குத் தெரியும் என்று எச்சரிக்க. உடனே மருமகன் அவனைப் போட்டுத் தள்ளுவேன் என்று உதார்விட மறுபடியும் உஷா கண்ணீருடன் காலையில் ஆஜர்.

அதுக்குதான் இந்த மனுஷர் இப்படிப் பேசுறாரு பேரப்புள்ள எடுத்துட்டு பலானடூர் போறார். மகளுக்கு ஆயுசுக்கும் சோறு போடுவாராம் சுகத்தையாரு தர்றதாம். புரிஞ்சுதான் பேசுறாரா; இல்ல புரியாததுபோல நடிக்குறாரா? கண்ணீருடன் வேலை முடித்துப் படுக்கும் போது இரவு மணிபத்து

விடிஞ்சும் விடியாமலும் நடேசன் கிளம்பிவிட்டார். ஜீரம் அளவாய் கொதிக்கப் படுக்கையிலேயே கிடந்தாள். மாலைதான் எழுந்தாள் எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. பிரதோஷம் என்பது நினைவுக்கு வர அவசரம் அவசரமாகக் குளித்து குக்கரில் ஒருகை அரிசி வைத்து கோவிலுக்கு அவசரம் அவசரமாகப் புறப்பட்டாள்

கோவிலுக்குள் நுழையவும் அபிஷேகம் ஆரம்பம் ஆகவும் சரியாக இருந்தது. கண கணவென்று மணி ஒலிக்கப் பால் அபிஷேகம்.”அப்பனே என் வயிற்றிலும் பால் வார்க்கனும், பெற்ற வயிற்றைக் குளிரவைக்கனும்” கண் மூடிப் பிரார்த்தித்துப் பிரசாதம் வாங்கித் திரும்பும் போது மனம் சற்றே லேசானது வழியில் ஆட்டோவில் ஏதோ அறிவிப்பு.

“நாளைக் காலை பத்து மணி அளவில் மாவட்ட ஆட்சியரின் குரை தீர்க்கும் நாள் முகாம். உள்ளுர் பள்ளிக்கூடத்தில். அவரவர்கள் குறைகளை மனுவாக எழுதித் தர வேண்டும். உடன் ஆவன செய்யப்படும் என்ற அறிவுப்பு கூடவே நோட்டீசும் விநியோகம்.

இரவு நெடு நேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. சாப்பிடவும் தோன்றவில்லை. சாதத்தில் தண்ணீர் ஊற்றிவைத்துவிட்டுக் காப்பியும் பிரட்டும் சாப்பிட்டாள். ஒரு முடிவுடன் எழுந்து எழுத ஆரம்பித்தாள்.

வணக்கம்!

மதிப்புற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கட்கு எழுதுவது இது கடிதம் அல்ல. கருணை மனு.

பிரச்சனைக்குரிய வட்டாட்சியர் அலுவலக கம்யூட்டர் ஆப்ரேட்டர் உஷாவின் தாய் நான். மிகுந்த போராட்டகளுக்கிடையே தற்போதுதான் மகள் வாழ்வில் சற்றே வெளிச்சம். அதற்குள் இந்தலஞ்சப் பிரச்சனை.

இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் அவள் நிலை என் எதிரிக்குக் கூட வர்வேண்டாம். ஒரு புறம் உங்களுடைய கண்டிப்பு. மறுபுறம் அவர்களின் மிரட்டல். அவர்களை வெட்டிப் போடுவேன் என்று வெற்றுச் சவடால் அடிக்கும் மருமகன். வேலை போய் விட்டால் அந்த வீட்டில் எனக்கு வேலை இல்லை. எனவே இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை என்று புலம்பும் மகள். விட்டேத்தியான என் கணவர். மகளுக்காகவே வாழும் நான்.

அவளுக்கு எதுவும் ஆகிவிட்டால் என் மரணமும் திண்ணம். எங்கள் நால்வரின் உயிரும் உங்கள் கையில் எங்களுக்கு வாழ்வாசாவா என்பதைத் தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

சட்டப்படி முடிவெடுக்காமல் தர்மப்படி முடிவு எடுக்கும் படி.

மன்றாடும் ஒரு தாயின் தாய் மீனாட்சி.

என்று எழுதிமுடித்துக்கவரில் போட்டு வைத்துப் படுக்கையில் விழுந்தாள். எப்போது உறக்கம் வந்தது என்பது அவளுக்கே தெரியாது.

எழும் போது மணி எட்டு. பரபரவென்று எல்லாவேலையும் முடித்துக் குளித்து ஒருவாய்காபி குடித்து நேற்று தண்ணீர் ஊற்றிய சாதத்தை டப்பாவில் போட்டு மோரும் உப்பும் கூடவே ஒரு நாரத்தங்காய் ஊறுகாய்துண்டையும் போட்டு பாட்டிலில் தண்ணீர் பிரஷர் மாத்திரை சகிதம் புறப்பட்டாள் கடிதத்துடன். பள்ளிக்கூடத்தை அடையவும் சைரன் ஒலிக்க சரேலென கலெக்டரின் வாகனம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

டவாலி முன்னதாக இறங்கிக் கதவைத்திறந்து விட நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாகக் கலெக்டர். சம்பிரதாயமாக விழா துவங்க அவரவர் மனுக்களுடன் வரிசைகட்ட மீனாட்சியும் வரிசையில் இணைந்தாள்.

ஒவ்வொரு மனுவாக வாங்கிப் படித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆவன செய்யும்படி அறிவுறுத்தவரிசை நகர்ந்தது. மீனாட்சியும் கைகள் நடுங்க மனுவைக் கொடுத்து பதைப்புடன் ஏறிட்டாள்.

படித்து முடித்தவரின் கண்கள் அவளைத் தீர்க்கமாக ஊடுருவ கடிதத்தின் மீது பேப்பர் வெயிட்டை வைத்தார். கழுத்து நரம்பு புடைக்க முகம் சிவந்து குப்பென்று துளிர்த்த வியர்வையை கைக்குட்டையால் ஒற்றி ஒருமிடறு தண்ணீர் குடித்தவர் “நெக்ஸ்ட்” என்றார்.

தவிப்புடன் நகர்ந்தவளுக்குத் தலைசுற்றியது கலெக்டரின் பார்வைபடும் இடத்தில் அமர்ந்தாள். அடிக்கடி அவருடைய பார்வை மீனாட்சியின் பார்வையை சந்தித்து சடேரென்று வெட்டித் திரும்ப முள்ளின் மேல் அமர்ந்தது போல் தவித்தாள் மீனாட்சி. இதற்குள் மதிய உணவு இடைவேளை வர கூட்டம் கலைய ஆரம்பித்தது. தானும் கொண்டு வந்த பழைய சாதத்தை சாப்பிட பசி மயக்கமும், பிரஷர் மயக்கமும் கைகோர்க்க வேப்பமர முடிச்சில் சற்றேதலை சாய்த்தவள் “ஜனகணமன” என்று தேசியகீதம் ஒலிக்க வாரி சுருட்டி எழுந்தாள்.

கூட்டம் முடிந்துவிட்டது. தேசியகீதம் முடியும் முன்னே முண்டியடித்துக் கலைந்த கூட்டம். மேடையில் கலெக்டர் பரிவாரமும் உள்ளுர் பிரமுகர்களும் மட்டும். தனித்து நின்ற மீனாட்சி நிராசையுடன் நகர வேகமாக வந்த டவாலி அவளுடை கடிதத்தை அவளுடைய கைகளில் திணித்து விரைந்தார்.

அவளைக் கடந்த கலெக்டரின் பார்வையும் உடல்மொழியும் ஏதோ உணர்த்துவது போல் சட்டென கடிதத்தைப் பிரித்துப் பார்தவளுக்கு அதிர்ச்சி. கருணைமனு என்று முடித்த இடத்திற்குப் பக்கத்தில் பச்சை மசியில் முத்து முத்தாக “ஏற்கப்பட்டது” என்ற ஒற்றை வார்த்தை.

கையெடுத்துக் கும்பிட்டாள் கண்ணீருடன் தலையசைத்து அதைஏற்று சட்டென வண்டியில் ஏறியகலெக்டர் ஆயாசத்துடன் கண்களை மூடினார் வண்டி புறப்பட அவர் நினைவுகள் பதினைந்து ஆண்டுகள் முன்னே சென்றது.

அவர் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் புகுந்த வீட்டாரின் டார்ச்சர் தாங்காது வயிற்றுப் பிள்ளையுடன் தீக் குளித்த அவர் அக்காவின் உருவம் நெஞ்சில் நிழலாடியது.

“அக்கா அன்று உன்னைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இன்று ஒரு தங்கையையும் இரு குழந்தைகளையும் காப்பாற்றி விட்டேன்” என்று உள்ளுக்குள் முனகிக் கொண்டவர் சட்டென சுதாரித்து அடுத்த வியூகம் அமைத்து பெருச்சாளிகளை வேட்டையாட முனைகிறார் கலெக்டர் புருஷோத்தமன்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *