ஒரு அடி; ஒரு படி

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,195 
 
 

“”இந்த பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு…” என்றார் பாலகுரு.
எதிரில் இருந்த மகளையும், மருமகனையும் பார்த்தபடி.

“”சொல்லுங்க மாமா…” என்றான் ஜெயவேல்.

“என்ன சொல்லப் போறீங்க?’ என்பது போல், அப்பாவைப் பார்த்தாள் திலகா.

“”நீங்கள் ரெண்டு பேரும், ஒருமுறை சங்கரை நேரில் பார்த்து பேசுங்க,” என்றார்.

சீறினாள் திலகா.

ஒரு அடி; ஒரு படி

“”இதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா? விட்டால் அவங்க கால்ல விழுந்து கும்பிடச் சொல்வீங்க போலிருக்கே. மானங்கெட்ட காரியத்தைப் பண்ணி தான், நாங்க வீட்டைக் கட்டணும்ன்னு இல்லை.”

“”திலகா… கொஞ்சம் பொறுமையாயிரு… அப்பா பேசிகிட்டிருக்காரில்ல…”

“”அவர் பேச்சைதான் சொல்லுங்க… தெருவுல போறவன் வேணும்னே அடிச்சாலும், திருப்பி அடிக்க திராணியில்லாம, “தெரியாம அடிச்சுட் டான்…’னு சமாதானம் பண்ணிக்கிறவர்… நான் இப்படி சொல்றதுக்காக அப்பா கோவிச்சு கிட்டாலும் பரவாயில்லை… எங்களையும் அதுபோல இருக்கச் சொல்லாதீங்க…”

பாலகுரு நகைத்தார்.

“”சின்ன வயசிலருந்தே நீ இப்படிதாம்மா. கோபமும் ஒரு குணம் தான்; ஆனால், எல்லா இடத்திலும் அது செல்லுபடியாகுமா? வீடுங்கறது வாழ்நாள் கனவு. இது இல்லாவிட்டால், இன்னொன்னுன்னு அலட்சியப் படுத்தறதுக்கு நாமொன்னும் வசதியானவங்க இல்லை. மனை வாங்கவே அஞ்சு வருஷம் ஆச்சு. வீட்டை கட்ட துவங்க, இன்னொரு அஞ்சு வருஷம்.

“”ஆக, பத்து வருஷ உழைப்பு பாதியில நின்னுடுச்சு. எப்படியாவது வீட்டை முழுமையா கட்டி குடியேறினால் தான், அடுத்த இருபது வருஷத்துல லோன் அடைச்சு, ரிடையர்மென்ட் காலத்துல சொந்தமா ஒரு வீடுன்னு நிம்மதியா இருக்கலாம். இல்லைன்னா… கடைசி காலம் வரைக்கும், என்னைப் போல வாடகை வீடே கதின்னு ஆயிடும்…”

“”அப்படியெல்லாம் விட்ற மாட்டோம். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திட மாட்டம்…”

“”அப்பாவைக் கொஞ்சம் பேச விடு திலகா…”

“”விவகாரம் கை மீறி போயிடுச்சி. எதிரி கோர்ட்டுக்குப் போய், “ஸ்டே’ வாங்கப் போறார்ன்னு சொல்றீங்க. அப்படி நடந்துட்டால் வழக்கு விசாரணையாகி தீர்ப்பு வர்றதுக்கு வருஷக் கணக்குல ஆகும்.

“”அப்பவும் நமக்கு சாதகமா வரும்ன்னு சொல்ல முடியாது. ஏன்னா தப்பு நம்ம பக்கம் இருக்கு. அவங்க மனையில அஸ்திவாரம் எழுப்பிட்டோம். கண்ணை மூடிகிட்டு, இடிக்கச் சொல்லி தீர்ப்பு எழுதிடுவாங்க…”

“”அவங்களுக்கு மட்டும் தான் கோர்ட்டுக்கு போகத் தெரியுமா… அந்த சங்கரும், அவர் மனைவியும் எங்களைத் தகாத வார்த்தையெல்லாம் பேசி அவமானப் படுத்தியிருக்காங்க. அவங்க தம்பி, எங்களைக் கொன்னுடுவேன்னு மிரட்டியிருக்கான். இந்த தெருவே வேடிக்கை பார்க்க, வீடேறி சண்டை போட்டாங்க. நாங்க போலீஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணி உள்ளே வைக்க எவ்வளவு நேரமாகும்…”

“”விவகாரம் மேலும் மேலும் சிக்கலாக் கிக்கணுமா?”

“”ஆகட்டும். ரெண்டுல ஒண்ணு பார்க்கறோம். வீடு இல்லாவிட்டால் போகுது. உங்களைப் போல, கடைசி வரை வாடகை வீட்ல வாழ்ந்துட்டுப் போறோம். உயிரா போயிடும்…” என்றாள் திலகா விடாப்பிடியாய்.

மாமனாரை வழியனுப்ப வந்த ஜெயவேல்,

“”திலகா அப்படி பேசியிருக்கக் கூடாது தான்; ஆனால், நடந்த விஷயம் அது போல. எனக்கே பொல்லாத கோபம் தான். சங்கருக்காக நான் நிறைய செய்திருக்கேன். வீட்டில் வச்சு சோறு போட்டு ஆதரிச்சிருக்கேன். அவன் கல்யாணத்துக்கு உதவி பண்ணியிருக்கேன்.

“”நான் மனை வாங்கும் போது, அவனுக்கும் பக்கத்து மனை வாங்க, நான் தான் உதவினேன். “ஒரு சகோதரன் கூட இப்படிச் செய்ய மாட்டான்…’னு கணவன் – மனைவி ரெண்டு பேரும், உருகி உருகி பேசுவாங்க. அவங்க இடமாற்றலாகி திண்டிவனம் போயிட்டாலும், மாசம் ஒரு முறையாவது எங்களைப் பார்க்க அவங்க வருவதும்; அவங்ளைப் பார்க்க நாங்கள் போவதுமாகத் தான் இருந்தோம்…” என்றபடி சைக்கிள் உருட்டினான்.

“”எல்லாம் எனக்கும் தெரியும் மாப்ள; நானும் பார்த்திருக்கேன்…”

“”வீடு கட்டுவதற்கு முன், சங்கருக்கு தெரியப்படுத்தினேன்; அவனும் சந்தோஷப் பட்டான். அஸ்திவாரம் போடும் போது, மேஸ்திரி கவனக்குறைவா ஒரு அடி தள்ளி நூல் கட்டிட்டார் போல. வேலை ஆரம்பிச்ச பிறகு தான் விஷயம் தெரிஞ்சுது. சங்கர் மனை தானே… பிரச்னை வராது. அடுத்த முறை பார்க்கும் போது சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்.

“”இதற்கிடையில அவன் மச்சான் சைட்டுக்கு வந்து பார்த்தான். யார் மூலமா அவனுக்கு தகவல் போச்சோ தெரியல… அவன் தனியா வந்திருந்தாலும் பரவாயில்லை… சண்டைக்கு வந்தவன் போல, வேற ரெண்டு பேரை துணைக்கு கூட்டி வந்து, மனையை அளவு போட்டு, “வேலைய ஸ்டாப் பண்ணுங்க. கேட்க ஆளில்லேன்னு ஆக்ரமிப்பு பண்றீங்களா… ஆச்சா போச்சா…’ன்னு சத்தம் போடவே, எனக்கும் கோபம் வந்தது.

“”கூச்சல் போடற வேலை இங்க வச்சிக்காத… வேணுமின்னு செய்யல… தவறுதலா நடந்துட்டுது. உன் மாப்ளகிட்ட நான் சொல்லிக்கறேன். நீ இங்க இருந்து நடையைக் கட்டுன்னு சொன்னேன். அவன் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிக்கவே, “இது நான் வாங்கிக் கொடுத்த இடம். மொத்த இடத்தையும் வளைச்சு கட்டினால் கூட உங்க அக்காவும், மாப்ளையும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க. நீ அனாவசியமா வம்பு பண்ண நினைச்சா, பதிலுக்கு என்ன செய்யணும்ன்னு எனக்கும் தெரியும்!’ன்னு சொன்னேன்.

“”நடந்தது என்னன்னு உடனே சங்கருக்கு போன்ல தெரிவிச்சேன். சங்கரும், “பரவாயில்ல… கட்டிக்கங்க. நான் யாரையும் அனுப்பல. எனக்குத் தெரியாம மச்சான் ரவி, ஏன் அங்கே வந்தான். நான் விசாரிக் கறேன்…’ன்னு சொன்னான்.

“”அப்புறம் என்ன நடந்ததோ… மறுநாளே எனக்கு போன் பண்ணி, “அஸ்திவாரத்தை தள்ளிப் போட்டுக்க ஜெயவேல். என் மனையில கட்டாதே…’ன்னான். “பேஸ்மென்ட் முடிஞ்சு போச்சு. இப்போ மாத்தணும்னா சிரமம். நீ வந்து இடத்தை ஒரு முறை பாரு… ஒரு அடி தான் நகர்த்தி கட்டிட்டேன். இதனால நீ வீடு கட்டும் போது, பிரச்னை வராது…’ன்னு சொன்னேன். “நேர்ல வர முடியாது. எனக்கு நேரமில்லை. நீ மேற்கொண்டு என் மனையில வேலை செய்யாதே…’ன்னான்; தொனியே ஒரு மாதிரி இருந்தது. “வேலையை நிறுத்த முடியாது… வட்டிக்கு பணம் வாங்கி வேலையை ஆரம்பிச்சிருக்கு. வேணும்னா உன் இடத்துக்கு இன்னைய ரேட்டு என்னமோ அதை கணக்கு பண்ணி, பணம் கொடுத்துடறேன்…’னு சொன்னேன்…

“”டொக்குக்னு போனைக் கட் பண்ணிட்டான். நான் பலமுறை முயற்சி பண்ணியும், என்கிட்ட அவன் பேசலை. நேர்ல போய் பார்ப்போம். விளக்கிச் சொல்லி புரிய வைப்போம்ன்னு நினைச்சுகிட்டிருக்கேன், வீட்டு வாசல்ல போலீஸ் வந்து இறங்குது.

“”அடுத்தவங்க மனையை ஆக்ரமிப்பு பண்ணிட்டீங்க. கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்காங்க. ஸ்டேஷனுக்கு வாங்க… விசாரிக்கணும்ன்னு. போனால், அங்கே குடும்பத்தோடு உட்கார்ந்திருக்கான் சங்கர். “என்ன இப்படி பண்ணிட்டீங்க. நேரா வீட்டுக்கு வந்திருந்தால் பிரச்னையை பேசித் தீர்த்திருக்கலாம்… போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைச்சு அசிங்கப் படுத்திட்டீங்களே?’ன்னு கேட்டேன். என் தம்பியை எப்படி நடத்துனீங்கன்னு தெரியும். அவனை மிரட்டியனுப்பி இருக்கீங்க. நேர்ல வந்திருந்தால், எங்களுக்கும் அந்த கதி தான். என்னமோ நிலத்தை எங்களுக்கு இலவசமா வாங்கிக் கொடுத்தவர் மாதிரி பேசியிருக்கீங்க. “மொத்த இடத்தையும் வளைச்சு கட்டினாலும் கேட்க முடியாது…’ன்னு பதில் சொல்லியிருக்கீங்க… என் கணவர் கிட்டயும் அதே பதிலை சொல்லியிருக்கீங்க. உங்க அடாவடி வேலைக்கு பணிஞ்சு போக நாங்கள் ஒண்ணும் இளிச்ச வாய்ங்க இல்லை. வேணும்ன்னு கேட்டிருந்தா நாலடி நிலம் கூட இனாமா கொடுத்திருப்போம். இல்லேன்னு வர்றவங்களுக்கு தாராளமா பிச்சை போடறவங்க நாங்க…’ன்னு சங்கரோட மனைவி அனாவசியமா பேசவும், திலகாவும் ரெண்டு வார்த்தை பேச வேண்டி வந்தது.

“”போலீஸ்காரங்க பரிச்சயமானவங்க. என்னைப் பத்தி தெரியும். அதனால, அவர் ரிப்போர்ட்டை பதிவு பண்ணாம, “ரெண்டு பேரும் பேசி சமாதானமா போங்க…’ன்னு அனுப்பிட்டாங்க. போலீஸ் வரை போயும் ஒண்ணும் பண்ண முடியலையேங்கற ஆத்திரம்… வீடேறி வந்து சண்டை போட்டுட்டு போனாங்க. அப்ப நான் நினைச்சிருந்தால், அதே ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணி அவங்களை உள்ளே வச்சிருக்க முடியும். போகட்டும்… கொஞ்ச நாள்ல சரியாகும்ன்னு இருந்தேன். இப்ப கோர்ட்டுக்கு போறேங்கறாங்க. திலகாவுக்கு மட்டுமில்ல மாமா… எனக்குமே ரொம்ப ஆத்திரம் தான்…” என்று வழி நெடுக சொல்லிக் கொண்டு வந்தான் ஜெயவேல்.

பஸ் நிறுத்தம் நெருங்கியது…

மருமகனைப் பார்த்தார் பாலகுரு.

“”நடந்ததெல்லாம் எனக்கும் நல்லாவே தெரியும். பெரிய அளவுல தவறு நடக்கலை. ஆரம்பத்திலேயே முறையா பேசி, சரி பண்ணியிருக்கலாம். பிறகு பார்த்துக்கலாம்ன்னு கொஞ்சம் இடைவெளி விட்டது பிசகு. மச்சான் மூலமா விஷயம் வேற மாதிரி திரிஞ்சு போச்சு. ஆயிரம் தான் சங்கர் உங்கள் நண்பராயிருந்தாலும், தன் குடும்பம் சொல்றதை தானே அவர் கேட்பார்… அவர்கள் சொல்லுக்குதானே முக்கியத்துவம் தருவார்.

“”இருந்தாலும், அவரும் நிதானமில்லாமல் போலீஸ் வரை போயிருக்கக் கூடாது. அவரே போயிருப்பார்ன்னு சொல்ல முடியாது. மனைவி, மைத்துனனின் நிர்பந்தமாகவும் இருக்கலாம். நடந்தது நடந்து போச்சு. பாதிக்கப்பட்டிருக்கிறது நாம… நஷ்டப்பட்டு கிட்டிருக்கறது நாம.

“”மேலும் நஷ்டப்படாம பார்த்துக்கணும்னா இறங்கிப் போறதுல தப்பில்லை. அதுக்காக மன்றாடணும், அடிபணியணும்ன்னு இல்லை. ரெண்டு பேரும் புதுசு இல்லை. வருஷ கணக்கா பழகி இருக்கீங்க. உங்கள் மனசுல சங்கரைப் பற்றி ஒரு நல் அபிப்ராயம் இருக்கும். சங்கர் மனசுலயும் ஒரு ஓரம்,”இப்படியாயிருச்சே…’ன்னு சங்கடம் இருக்கும்.

“”நேருக்கு நேர் சந்திச்சுகிட்டால், நிதானமா பேசினால், சிக்கல் தீர வாய்ப்பிருக்கும். நாம ஒரு படி இறங்கி வந்தால், எதிரியும் ஒரு படி இறங்கி வராமலா போவான்…”

“”எனக்கும் அப்படியொரு எண்ணம் தான், மாமா. என்ன பேசினாலும்… சங்கர் அப்படியொன்னும் முரடனில்லை… ஒப்புக்குவான்னு தோணுது. ஒரு வேளை அவன் இறங்கி வரலைனா…”

“”திலகா சொன்னது போல இரண்டில் ஒன்று பார்க்கலாம். அதற்கு முன், நான் சொன்னது போல… நீங்கள் மட்டுமாவது அந்த சங்கரிடம் பேசிப் பாருங்க…” என்று பஸ் ஏறினார்.

வீடு திரும்பும் முன், வீடு கட்டும் இடத்துக்கு ஒரு நடை சென்று பார்த்தான், ஜெயவேல்.

கட்டடம் பாதியில் நின்றது… பரிதாபமாக.

வாங்கிப் போட்ட கல், மணல், உள்ளிட்ட கட்டட சாமான்கள் பாழாகிக் கொண்டிருக்கிறது…

“வெறும் மனையா இருந்தாலாவது, நல்ல விலை போகும். இப்படி அரைகுறை கட்டடமா நின்னால் விற்க முடியாது… வாங்குறவன் யோசிப்பான்…’

-வழியாய்ப் போன ஆள், கவலையைத் தூவி விட்டுப் போக, ஜெயவேலு ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

மனைவியிடம், ஆபிசுக்கு போவதாக சொல்லிவிட்டு, திண்டிவனத்துக்கு பஸ் பிடித்தான். சங்கர் வேலை பார்க்கும் ஆபிசுக்கு போனான் ஜெயவேல்.
சங்கர் எதிர்பார்க்கவில்லை. முகம் திருப்பிக் கொண்டான்.

ஜெயவேல் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

“”சாரி சங்கர்…
எல்லாம் என் தவறு தான். நான் ஆரம்பத்தில் கவனமாய் இருந் திருக்கணும். எப்படியோ தவறு நேர்ந்துடுச்சு. அதையாவது உடனே தெரியப்படுத்தி இருக்கணும். பல நாள் பழகிய உரிமையிலும், நீ மறுக்கவா போறேங்கற அசட்டு நம்பிக்கையிலும், சும்மாயிருக்கப் போய், நிறைய சிக்கல். நடக்கக் கூடாதது நடந்து போச்சு.

“”இனியும் நடக்கும் போலிருக்கு… கோர்ட்டு, கேசுன்னு பிரச்னை வளர்ந்து கிட்டு போறதை, நான் விரும்பலை. ரெண்டு பேருக்குமே அது பிரச்னைனாலும், எனக்கு ரொம்ப நஷ்டமும், கஷ்டமும் உண்டாகும். அதான் நேர்ல பார்த்து கடைசியா ஒண்ணு கேட்கலாம்ன்னு வந்தேன்…”
சங்கர் திரும்பினான்.

“”என்ன கேட்கணும்?”

“”எனக்கு அந்த ஒரு அடி நிலத்தை விட்டு கொடுத்து உதவக்கூடாதா?” என்று ஜெயவேல் தயவாய்க் கேட்க, “”சரி, அப்படி தான் ஆகட்டும்…” என்றான் சங்கரும்.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *