ஒன்றுக்குள் ஒன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,270 
 
 

காரை ரிவர்ஸ் எடுக்கும் போதுதான் கண்ணாடியில் மனோகரைப் பார்த்தேன். எவ்வளவு நாள் ஆச்சு! இல்லை வருடங்கள் ஆச்சு. காலேஜ் கடைசி நாளன்று பார்த்ததுதான். காரை நிறுத்தி, கதவைத் திறந்து இறங்கி “மனோகர்” என்று கூப்பிட்டேன்.

தனது வண்டிக் கதவைத் திறக்க இருந்தவன் திரும்பினான். திரும்பியவன் கண்களில் ஒரு பளிச்.

“டேய் ஆதி? யூ @#@#@ moron! எங்கடா இருந்த இவ்வளவு நாளா?”

இது தான் எங்கள் நட்பு. ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டிக் கொள்ளும் காலேஜ் நட்பு. என்ன திட்டினாலும் கோபமே வராத இனிய நட்பு.

அப்புறம் அந்த மாலையில் இருவரும் எனது வழக்கமான க்ளப் சென்றோம். பியர் அருந்தினோம். ஒரே சிகரெட்டை மாறி மாறி புகைத்தோம். எங்கள் காலேஜ் டைம் பிகர்கள் இன்று எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று நோட்ஸ் எக்ஸ்சேஞ் செய்து கொண்டோம். டின்னர் சாப்பிட்டோம். பேசினோம் பேசினோம். மணி பத்தாயிற்று.

“சரிடா மச்சா, ஒன் நம்பர் குடு. ஒரு மிஸ்ட் கால் தர்றேன். என் நம்பர சேவ் பண்ணிக்க. அப்புறம் பார்க்கலாம்” என்றான் மனோ.

நான் வீடு திரும்புகையில் மணி பதினொன்று. திஷாரி (என் அழகிய இளம் பெங்காலி மனைவி) தூங்காமல் விழித்திருந்தாள்.

“ஏன் இத்தனை லேட்?” என்றாள் ஆங்கிலத்தில். நானும் அவளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவோம். சில நேரம் ஹிந்தியில். அவள் தமிழ் சற்று கொடுமையாக இருக்கும். ஆனால் அவள் மிகவும் செக்சியாக இருந்ததால் அவளை மன்னித்து விட்டிருந்தேன்.

“ என் நண்பனை இன்னைக்குத் தற்செயலாச் சந்தித்தேன். என் காலேஜ் மேட். ரொம்ப க்ளோஸ்.”

“அதுனால ரெண்டு பேரும் தண்ணியடிக்கப் போயிட்டீங்களா” என்று திஷாரி செல்லமாகக் கோபித்தாள். “ப்ளடி, ஒனக்காக நான் இன்னுமும் சாப்பிடாம காத்திட்டுருக்கேன்.”

“ஐ யாம் ஸோ ஸாரி, வா நான் ஒனக்கு ஊட்டிவிடறேன்” என்று சொல்லி அவள் திமிறத் திமிற அவளைத் தூக்கிக் கொண்டு பெட் ரூம் நோக்கிச் சென்றேன்.

“கிச்சன் இஸ் ஓவர் தேர் டார்லிங்” என்றாள் திஷாரி.

“ஹு செட் எனிதிங் அபௌட் ஈட்டிங் டின்னர்” என்று நான் அவள் காதுகளில் கிசுகிசுத்தேன். திஷாரியின் கன்னம் அநியாயத்துக்குச் சிவந்தது.

மறுநாள் காலை வழக்கம் போல விடிந்தது. இல்லை ஓர் சிறிய மாற்றத்துடன். என் மொபைல் எடுத்துப் பார்த்தால் மனோவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது.

“ஹாய் மச்சா! குட் மார்னிங் டா! இது தான் என் நம்பர். அப்புறம் இன்னைக்கு ஈவ்னிங் என்னோட ட்ரீட். வில் மீட் யூ அட் …” என்று ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் பெயர் கொடுத்திருந்தான்.

ஆபீஸ் போகும்போது மெதுவாக என்னவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“மனோ வாண்ட்ஸ் டு கிவ் அ ட்ரீட் டுடே ஈவ்னிங். இஸ் இட் ஓகே இப் ஐ அட்டென்ட்?”

என்னை ஒரு முறை தீர்கமாகப் பார்த்த திஷாரி “ இட்ஸ் ஓகே! பட் ஹேவ் அ செக் ஆன் யுவர் ட்ரிங்க்ஸ்” என்றாள்.

“ஷ்யூர் செல்லா”

அப்புறம் அன்று இரவும் வீடு திரும்பும்போது மணி பதினொன்று. அன்றிரவும் மனைவிக்கு பெட்ரூமில் நான் டின்னர் சர்வ் செய்தேன்.

“இந்த மனோவப் பார்த்ததில் இருந்து ரொம்பவே ரொமாண்டிக் ஆயிட்ட! உண்மையச் சொல்லு. மனோ ஆம்பள தானே? இல்ல உன் கர்ல் பிரெண்டா?” என்று அவள் கிண்டல் செய்தாள்.

இப்படியாக என் வாழ்க்கை ஆபீஸ், மனோ, திஷாரி என்று ஒரு வட்டத்துக்குள் ஓட ஆரம்பித்தது. நல்ல வேலை. நல்ல நண்பன். மிக மிக அழகான மனைவி! வேறு என்ன வேண்டும்? இப்படிப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் தான் திடீரென்று மனோவிடம் இருந்து ஒரு மெசேஜ்! அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஊருக்குப் போகிறானாம். வர ஒரு வாரமாகுமாம். சரி நேரத்துக்கு வீடு திரும்பி மனைவியாய் எங்காவது வெளியில் கூட்டிச் செல்லலாம் என்று அவளுக்குப் போன் செய்தேன்.

“நல்ல வேளை. நானே கூப்பிடலாம்னு இருந்தேன். எனக்கு ஒரு நாலு நாளைக்கு தில்லி போக வேண்டிய வேலை. என் கலீக் அட்டென்ட் பண்ண வேண்டியது. பட் ஷி இஸ் நாட் இன் அ பொசிஷன் டு கோ! ஸோ, ஐயாம் கோயிங். ப்ளீஸ் டேக் கேர். நான் என் ட்ரெஸ் மதியமே வீட்டுக்குச் சென்று எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். இங்கிருந்தே டைரக்ட் ஏயர் போர்ட். பை டார்லிங். டேக் கேர்” என்றாள் திஷாரி.

எனக்கு வெறுத்து விட்டது. சரியென்று வீடு போகும் வழியில் எனது ரெகுலர் வீடியோ லைப்ரரி சென்று புது ஆங்கிலப் படங்கள் எதெல்லாம் வந்திருந்ததோ எல்லாம் வாங்கிக் கொண்டேன்.

நானே டின்னர் சமைக்கப் பிடிக்காலம் பீட்ஸா ஆர்டர் செய்தேன். ஒரு படம் பார்த்துவிட்டுத் தூங்கிவிட்டேன்.

இப்படியே நாலு நாள் ஓடியது.

ஐந்தாம் நாள் காலை. திஷாரி இன்று வந்துவிடுவாள். ஆறு மணிக்கு மனோவிடம் இருந்து ஒரு மெசேஜ்.

“மச்சா நான் உன்னப் பாக்கணும். அர்ஜன்ட். நான் சென்னைக்கு வந்துட்டேன். இன்னைக்கு மதியம் டைம் இருக்குமா?”

மனோ கேட்டு இல்லையென்று சொல்ல முடியுமா? மேலும் மதியம் என்றால் ஓகே தான். மனைவி இதோ வந்துவிடுவாள். ஈவ்னிங் அவனைச் சந்திக்கச் சென்றால் அவள் வருந்தக்கூடும்.

ஏழு மணிக்கு திஷாரி வந்தாள். அவள் முகம் சற்று கலவரமாயிருந்தது. சரியாகப் பேசவில்லை. எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ் கிளம்பிப் போய்விட்டாள். எனக்கு என்னமோ மாதிரியிருந்தது.

லஞ்ச் டைமில் மனோ கால் செய்தான். என் ஆபீஸ் வாசலில் இருப்பதாகச் சொன்னான். நான் என் மொபைல் எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன்.

மனோ இந்த நாலு நாளில் இளைத்திருந்தான். ஒரு வித சோகம் அவன் முகத்தைக் கவ்வியிருந்தது. ஒரு வேளை அவன் அப்பாவுக்கு எதுவும்…..

“என்னடா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“வாடா சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என்றான். ஆனால் சாப்பாடு வந்ததும் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான். சரி அவனாகச் சொல்வான் என்று நானும் சாப்பிட ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து என்னை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர்!

“டேய்! என்ன மன்னிச்சுடுடா! இந்த விஷயம் கேட்டா நீ ரொம்பவுமே அதிர்ச்சி ஆகிடுவ. உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் பார்த்தேன். அப்புறம் என் மனசாட்சி என்ன ரொம்பவே கம்பெல் பண்ணதினால சொல்றேன்.”

“டேய் சொல்ல வந்த விஷயத்த சொல்லுடா. இந்தப் பீடிகை எல்லாம் வேண்டாம்.”

“திஷாரி….” என்று இழுத்தான்.

“ஆமாம் திஷாரி என் மனைவி. அவளுக்கு என்ன?”

“ அவ நாலு நாளா எங்க இருந்தா” என்றான் திடுமென்று.

“தில்லி போயிருந்தா. ஆபீஸ் வேலையா…”

“இல்லைடா ஆதி! ஷி இஸ் சீட்டிங் யூ. ஷி வாஸ் அட் பெங்களுர். ஐ ஸா ஹர். ஒரு ஹோட்டல்ல. நான் விசாரிச்சேன். ஷி வாஸ் வித் அ கை. யாரோ முரளி. ஹோட்டல் ரிஜிஸ்டர்ல ஹஸ்பண்ட் வொய்ப் என்று கொடுத்திருக்காங்க” என்றான் கண்ணீருடன்.

என் உலகம் வேகமாக சுழன்றது. என் திஷாரியா? என் அழகான மனைவியா? கடவுளே என்ன சோதனை!

“நான் இன்னொரு விஷயமும் கேள்விப் பட்டேன். அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு மதியம் இந்த ஊர விட்டேப் போகப் போறாங்களாம். இதுக்கு மேலயும் உன்கிட்ட சொல்லலேனா அப்புறம் நான் என்ன பிரெண்ட்? ஒடனே போயி ஏதாவது செய்ய முடிஞ்சா செய்” என்றான்

என் உடம்பின் எல்லா செல்களும் உயிர்த்தன. எனக்குள் ஒரு புயல் போன்ற உத்வேகம். திஷாரி! கடன்காரி! நாயே! துரோகி! இதோ வருகிறேன்.

இரண்டு சிக்னல் ஜம்ப் செய்து நான் இருவது நிமிடங்களில் வீடு போயி சேர்ந்தேன். நினைத்த மாதிரியே திஷாரி வீட்டில் இருந்தாள்.

தன் துணிகளை மற்ற பொருள்களை ஒரு பெரிய பேகில் அடைத்துக் கொண்டிருந்தாள். என்னை எதிர் பார்க்கவில்லை. அவள் முகம் திகிலானது.

“நீங்க நீங்க … எப்படி இப்ப…” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.

“துரோகி! மனோ எல்லாம் சொல்லிட்டான். முரளியும் நீயும் சேர்ந்து செஞ்ச துரோகம் எல்லாத்தையும் சொல்லிட்டான்.”

“ஐயோ”

“என்னப் பிடிக்கலேனா ஏண்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீயே கதின்னு தான் இருந்தேன். என்ன கொற எங்கிட்ட? பணமில்லையா அழகில்லையா? சொல்லுடி!”

“எல்லாம் இருக்குதான். ஆனால் எனக்கு முரளியப் பிடிச்சிடுச்சி. என்ன செய்யச் சொல்றீங்க” என்றாள் ஆங்காரமாக. அந்த நிமிடத்தில் திஷாரியின் எல்லாம் அழகும் எங்கோ காணாமல் போயிற்று. முகம் விகாரமாகத் தெரிந்தது.

“எனது திஷாரி செத்து விட்டாள். மிச்சம் இருப்பது அவளது சாயல். அது இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதை அழிக்க வேண்டியது முக்கியம்” என்று என்னுள்ளில் இருந்து சாத்தான் ஓதியது.

“துரோகி!” என்று கத்தியவாறே நான் அவளை நோக்கிப் பாய்ந்தேன். என்ன செய்வதென்று தெரியாத அந்தக் கணத்தில் என் அன்பு மனைவி தன் கைக்கருகில் இருந்த டேபிள் லாம்ப் எடுத்து என்னைத் தாக்கினாள். சரியாக என் தலையின் வலப்பக்கத்தில் பட்டது. வலி ஒரு மின்சார கயிறு போல உடலெல்லாம் பாய்ந்தது. திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. ஒரு ஸிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது. இப்படி ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பல இச்சைகள் ஒன்று சேர்ந்து என்னை ஆக்ரமித்த அந்த நொடியில் எங்கள் பெட்ரூமுக்குள் மனோ நுழைந்தான்.

தலையில் அடிபட்டு ரத்தம் வழிய மயங்கிக் கொண்டிருந்த என்னை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தான்.

“யாரோ மனோவாம். இவர் பிரெண்ட். நம்மளப் பத்திச் சொல்லிட்டானாம். என்னைத் தாக்க வந்தார். தற்காப்புக்காகத் தள்ளி விட்டேன். மனுஷன் செத்துட்டான் போல இருக்கு. டூ சம்திங் முரளி” என்று அவனைப் பார்த்து இரைந்தாள்.

சரியென்று தலையாட்டிவிட்டு என்னருகே வந்து என்னை ஒரு முறை பார்த்தான். நான் மரணத்துக்குள் சென்று கொண்டிருந்தேன். தன் செல்லை எடுத்துப் போலீசுக்குப் போன் செய்தான்.

“ஹல்லோ போலீஸ் கண்ட்ரோல்? என் பிரெண்ட் வீட்டிலேர்ந்து பேசுறேன். இங்க ஒரு ஆக்சிடண்ட். என் பிரெண்ட் ஹஸ்பண்ட் டேபிள் மொனையில அடிபட்டு மயக்கமாயிட்டாரு. செத்துட்டாரோன்னு ஒரு சந்தேகம். எஸ். என்னது? என் பேரா? என் பேரு முரளிமனோகர்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *