ஒத்தப்பனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 8,778 
 
 

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும்.

சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா.

ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன்.

அதிகாலையில் நான் கண் விழிக்கும் முன்னரே வயல் காட்டில் கண் விழிக்கும் அவர், நான் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய் என்னைக் கட்டியணைத்து, சிவக்கச் சிவக்க வெற்றிலை நிரம்பிய வாயால் என்னை முத்தமிட்டு… “அய்யாடி வாங்க, எங்கப்பென் வாங்க… என்னெப்பெத்தவுக வாங்க…” என்று கொஞ்சிய கையோடு, கட்டி வைத்திருந்த குழி பணியாரங்களை ஒன்று விடாமல் ஊட்டி விடுவார்.

ஒரு வழியாகப் பணியாரங்கள் முடிந்ததும், என் வீட்டு மைலைப்பசுவின் மடியிலிருக்கும் அசல் பால் இறக்குமதி செய்யப்பட்டு, மிச்ச மீதியுள்ள என் வயிற்றின் காலியிடத்தை ‘காப்பி’யாய் கச்சிதம் செய்யும்.

பிறகு, இருபுறமும் கால் போட வைத்து, என்னைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு,

“அந்தப் பனமரத்துல யாகுமுத்து இருக்கானான்னு பாருய்யா” என்பார் என் தாத்தா.

“ஆமா தாத்தா, இப்பத்தான் மரத்துல ஏறிகிட்டு இருக்காரு”… இது நான்.

இருவரும்…. இல்லை, இல்லை அவர்மட்டும் அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்.

நான் பாதை பார்த்து முள், மேடு, பள்ளம் என வழி சொல்லுவேன் அவர் தோளில் இருந்தபடி. அவருக்குச் சற்று தூரப்பார்வை குறைவாதலால் என்னை தினந்தோறும் அந்த மரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

ஒரு வழியாக மரத்தடி வந்து சேரவும், யாகுமுத்து என்ற அந்த ‘கள்’ இறக்கும் கணவான் மரத்திலிருந்து இறங்கவும் சரியாக இருக்கும். பொங்கும் நுரையோடு ததும்பத் ததும்ப பனங்கள்ளை சுரைக்குடுக்கையில் (முற்றி, காயவைத்து, காம்பு வெட்டப்பட்ட சுரைக்காய் குடுக்கை) நிரப்பி, இடுப்பிற்குப் பின்புறம் அது தொங்கும் அழகு, அப்பப்பா… நானும், என் தாத்தாவும் இன்னும் சில என் தாத்தாவின் சிநேகிதர்களும் மரத்தடியில் காத்திருப்போம்.

உடனே, பக்கத்தில் உள்ள பனங்குட்டிகளில் உள்ள பனை ஓலைகளை வெட்டி, சிறு சிறு பட்டைகள் செய்து, கள்ளில் தற்கொலை செய்துகொண்ட தேனீக்களை அகற்றிவிட்டு, அந்த சோமபானமானத்தை பட்டைகளில் ஊற்றி ஒவ்வொருவரும் உரிந்து குடிக்கும் சத்தமும், அந்த வாசமும், பாசமும், பறிமாறலும் என் எண்ணம் விட்டு நீங்காது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

‘யாரிடமும் சொல்லக்கூடாது’ என்ற என் தாத்தாவின் சத்தியப் பிரமாணத்தோடு, நானும் பலமுறை பனங்கள்ளைச் சுவைத்திருக்கிறேன். ஆனாலும், குடிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கும்.

திடீரென்று ஒரு வாசனை… சுட்ட உப்புக்கண்டமும், கருவாடும் கட்டி வைத்திருந்த இடுப்பை விட்டு விடுதலை செய்யப்பட்டு கள் பட்டைக்கருகே காத்திருக்கும். பனங்கள், சுட்ட கருவாடு, உப்புக்கண்டம்….. சொர்க்கம்… சுரைக்குடுக்கை சுத்தமாகும்….. இவை இனி எப்போதாவது கிடைக்குமா?

நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா, அவரின் சினேகிதங்கள், அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், இன்றும், கம்பீரமாய்க் காட்சியளிக்கும் அந்த ‘ஒத்தப்பனை’யையும், பட்டை பிடிக்க ஓலைகள் வெட்டிய அந்தப் பனங்குட்டிகள், இன்று ஓங்கி வளர்ந்து கிட்டத்தட்ட அந்த ஒத்தப்பனைக்கு இணையாக நிற்பதையும் தவறாமல் பார்த்துவிட்டு, பெருமூச்சோடு வீடு திரும்புவேன்.

அந்தப் பனைமரத்தை பலமுறை நான் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருக்கிறேன்.

ஓங்கி வீசும் காற்றில் அந்தப் பனைமரம் என்னை கட்டியணைத்துக்கொண்டு, அசைந்து அசைந்து எனக்குள் ஏதோ சொல்லும்.

என் தாத்தா இன்று என்னோடு இல்லாவிட்டாலும், இன்னும் கம்பீரமாய் அங்கு நின்று பள்ளியிலிருந்து வரும் என்னைக் கட்டியணைத்துத் தழுவுவதாய்த்தான் இன்றும் உணர்கிறேன்.

– அக்டோபர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *