கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 16,728 
 

“ஏங்க….”

அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு…” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?”

“உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள்.

நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு.

அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டாள். ஆறு வயதுக் குழந்தையை அரண்டுப்போக வைப்பதில் விருப்பமில்லை.

“என்னடா செல்லம்?” புன்னகைக்க முயன்றேன்.

“போடா மொக்கை அப்பா…” முகத்தை சுளித்து அம்மாவுக்கு பின்னால் ஒளிந்தாள்.

“அப்படியே ஆத்தாளை உரிச்சி வெச்சிக்கா…’’ பாத்ரூம் கதவை அறைந்தேன்.

திருமணத்துக்கு முன்பு வரை, ‘எதற்கும் அஞ்சமாட்டேன்…’ என நெஞ்சை நிமிர்த்தியபடி நடமாடினேன். முதலிரவில் இளவரசியின் ஹஸ்கி வாய்ஸில் – குரல் என்னவோ ‘வெறும் காத்துதாங்க வருது…’ எஸ்.ஜானகி மாதிரி இனிமைதான்! – “ஏங்க…” ஒலித்தபோது முதுகை சில்லிட வைக்கும் திகில் உணர்வை முதன்முதலாக உணர்ந்தேன்.

அப்போது ஆரம்பித்தது இந்த அமானுஷ்யம். இதுவரை லட்சம் முறையாவது ‘ஏங்க…’ ஒலித்திருக்கும். ஒவ்வொரு முறையும் அதே சில்லிடல். அதே உடல் நடுக்கம்.

மனநல மருத்துவனான நண்பனிடம் இந்தப் பிரச்னையை ஒருமுறை மனசு விட்டுப் பேசினேன். “உனக்குமாடா..?’’ என்றான். வீட்டுக்கு வீடு வாசப்படி. பெட்ரூமுக்கு பெட்ரூம் மண்டகப்படி.

ஈர டவலுடன் வெளியே வந்தவன் டிரெஸ்ஸிங் டேபிளில் வாகாக நின்றபடி தலைவார ஆரம்பித்தேன்.

டைனிங் டேபிளில் இருந்து மீண்டும் ‘‘ஏங்க…’’

பதட்டத்தில் டவல் அவிழ… அவசரமாக பேண்டுக்குள் காலைவிட்டு ஜிப்பை இழுக்க… ம்ஹும். மக்கர் செய்தது. முழு வலுவை பிரயோகித்ததும் ஜிப்பின் முனை கையோடு வந்துவிட்டது.

ஷாலுவை ஸ்கூலில் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல வேண்டும். மணி 8.55. வேறு பேண்டை அயர்ன் செய்ய நேரமில்லை. கைக்கு மாட்டியதை பீரோவில் இருந்து எடுத்து மாட்டினேன். சட்டைக்கும் பேண்டுக்கும் சுத்தமாக மேட்ச் ஆகாமல் சூரிக்கு, சமந்தா ஜோடி மாதிரி இருந்தது. ‘இன்’ செய்ய முற்பட்டபோது மீண்டும் ‘ஏங்க…’.

பெருகிய வியர்வையுடன் ஹாலுக்கு வந்தேன். ‘‘கோயில் கட்டி கும்பிடறேன். பேரை சொல்லி கூப்பிடு. வேணும்னா ‘டா’ கூட போட்டுக்கோ. தயவுசெஞ்சு ‘ஏங்க’ மட்டும் வேணாம். முடியலை…”

டென்ஷன் புரியாமல் சில்லறையாய் சிரித்தாள். நொந்தபடி குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

நல்லவேளையாக ஸ்கூல் வாசலில் ஷாலு அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சமத்துப் பெண்ணாக வகுப்பறை போகும் வரை ‘டாட்டா’ காட்டினாள்.

நிம்மதியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

“ஏங்க…”

திரும்பிப் பார்த்தேன். கிளாஸ் மிஸ்.

“ஷாலுவுக்கு வர வர ஹேண்ட்ரைட்டிங் சரியில்லை. வீட்டுல எழுதச் சொல்லிக் கொடுங்க. கிளாஸ்ல சரியா கவனிக்க மாட்டேங்கிறா…’’ blah.. blah… blah…

மண்டையை மண்டையை ஆட்டி சமாதானம் சொல்லிவிட்டு பறந்தேன். டீச்சரும் என்னை ‘ஏங்க’ என்றழைத்தது நினைவுக்கு வந்தது. அதென்னவோ தெரியவில்லை. மனைவியைத் தவிர வேறு யார் ‘ஏங்க’ என்றாலும் எரிச்சல் வருவதில்லை.

சைதாப்பேட்டையை எட்டும்போது மணி ஒன்பது நாற்பது. நந்தனம் சிக்னலில் நத்தையாய் நகர்ந்துக் கொண்டிருந்த டிராஃபிக்கில் ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள். தேவையில்லாமல் ஹாரன் அலறியது. கார் ஓட்டுபவனும், டூவீலரில் ஆரோகணித்திருப்பவனும் ஒருவருக்கொருவர் ‘பீப்’ மொழியை பரிமாறிக் கொண்டார்கள்.

சுற்றிலும் டி.பி.கஜேந்திரன் மாதிரி பிபி ஏற எகிறிக் கொண்டிருந்தவர்களை வேலை மெனக்கெட்டு சர்வே எடுத்துப் பார்த்ததில் ஓர் உண்மை புரிந்தது. எல்லாருமே க்ளீன் ஷேவ். பெரும்பாலானவங்களின் கன்னத்தில் லேசான கீறல். ‘ஏங்க…’ புயலின் பாதிப்பு!

வாய்விட்டு சிரித்துவிட்டேன். பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் சினேகமாய் புன்னகைத்தார். கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பு. நிச்சயம் பேச்சிலர்தான். தாடி வைத்திருக்கிறாரே…

அலுவலகத்தை அடைந்தபோது மணி பத்தரை. மேனேஜர் ரூமுக்கு அட்டெண்டன்ஸ் சென்றிருக்கும். இன்னும் ஒரு வருஷத்தில் ரிடையர் ஆகப்போகிற அந்த கிழத்துக்கு என்னை மாதிரி ரெகுலர் லேட் எப்போதும் இளக்காரம்தான். கண்ணாடிக்கு வலிக்காத மாதிரி கதவை திறந்தேன்.

காபியை உறிந்துக் கொண்டே கிழம் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தது. ‘பிட்டு’ படமாக இருக்கலாம். முகம் அச்சு அசல் உர்ராங் உடான். சைலண்டாக கையெழுத்து போட்டுவிட்டு எஸ்கேப் ஆக முடியாது. பாம்பு காது. காச்மூச்சென்று கத்தும்.

கையை விறைப்பாக தூக்கி நெற்றியருகே கொண்டுவந்து “குட்மார்னிங் சார்…” என டெஸிபலை கூட்டினேன்.

அதிர்ந்துப் போய் காபியை தன் சட்டையில் கொட்டிக் கொண்டார். சுட்டிருக்கும் போல. விருட்டென்று எழுந்தார்.

‘‘கதவைத் தட்டிட்டு வரத் தெரியாதா? சரி வந்தது வந்த… கையெழுத்து போட்டுட்டு போக வேண்டியதுதானே? நீ குட்மார்னிங் சொல்லலைனா எனக்கு பேட் மார்னிங் ஆகிடுமா..?’’

காதுக்குள் ‘ங்கொய்’ என்றது. பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏறிட்டேன். காதுக்கு கீழே கன்னத்தில் லேசாக ஒரு பிளேடு தீற்றல்! மேனேஜருக்கும் ‘ஏங்க…’ கைங்கரியம்.

கண்ணாடிக்கு வெளியிலும் அவரது அலறல் கேட்டிருக்க வேண்டும். வெளியே வந்தபோது அனைவரும் ஓரக் கண்ணால் பார்த்தார்கள். வாரத்துக்கு நான்கு நாட்களாவது நடப்பதுதானே?

டேபிளுக்கு போய் லன்ச் பேக்கை வைத்துவிட்டு ‘தம்’ அடிக்க கிளம்பினேன்.
மூணு இழுப்புதான் முடிந்திருக்கும். செல்போன் ஒலித்தது. இளவரசிதான்.

‘‘ஏங்க…’’

‘‘ம்…’’ பல்லைக் கடித்தேன்.

“சிலிண்டர் புக் பண்ணச் சொல்லி ஒருவாரமா கரடி மாதிரி கத்திகிட்டிருக்கேன். நீங்க காதுலயே வாங்கலை. இப்ப பாருங்க கேஸ் தீர்ந்துடுச்சுடிச்சு…”

உச்சந்தலைக்கு வேகமாக ரத்தம் பாய்ந்தது. ‘‘ஆபிஸ் நேரத்துல ஏன்டி இப்படி போன் செஞ்சு உசுரை வாங்கறே…”

போனை கட் செய்த வேகத்தில் அவள் ஆடிப்போயிருப்பாள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். அல்ப சந்தோஷம்தான். ஆனால், அதுவும் நிலைக்கவில்லை. அன்று முழுக்கவே நிறைய தப்புகள் செய்தேன். மேனேஜர் நாள் முழுக்க திட்டிக்கொண்டே இருந்தார்.

மாலை வீட்டுக்கு புறப்படும் போது கூட மண்டை முழுக்க ‘ஏங்க…’வின் எக்கோ. இன்றைய பொழுதை நாசமாக்கியதே காலையில் ஒலித்த இந்த ‘ஏங்க…’தான். நினைக்க நினைக்க உச்சி முதல் உள்ளங்கால் வரை அனல் படர்ந்தது.

க்ரின் சிக்னல் விழுந்தது கூட தெரியவில்லை. பின்னாலிருந்த ஆட்டோக்காரர் கொலைவெறியோடு ஹாரன் அடித்த பிறகே சுயநினைவுக்கு வந்து ஆக்சிலேட்டரை முறுக்கினேன். ‘‘காதுலே என்ன ‘பீப்’பா வெச்சிருக்கே?” கடக்கும்போதும் ஆட்டோகாரர் தன் உறுமலை நிறுத்தவில்லை. ‘ஏங்க’வை விடவா வேறு கெட்ட வார்த்தை என்னை கோபப்படுத்திவிடப் போகிறது? இன்றோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஷாலு டியூஷனில் இருந்து திரும்பியிருந்தாள். தணியாத கோபத்துடன் இளவரசி கொடுத்த காபியை பருகினேன். உதடு வெந்தது.

சனியன்… வேணும்னுதான் இப்படி சுடச் சுட கொடுக்கறா. உன்ன…
இப்போது வேண்டாம். ஷாலு மிரள்வாள்.

பெட்ரூமுக்கு சென்று கைலி மாற்றிக் கொண்டேன். வழக்கமாக சிறிது நேரம் டிவி பார்ப்பேன். இன்று அப்படி செய்யவில்லை. மாறாக புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு மாறான என் அமைதி இளவரசிக்கு திகிலை கிளப்பியிருக்க வேண்டும். அருகில் வந்து ஈஷினாள்.

‘‘ஏங்க…’’

உதட்டைக் கடித்தபடி கண்களை மூடினேன்.

‘‘சாப்பிட்டு படுங்க…”

புத்தகத்தை வீசிவிட்டு எழுந்தேன். மவுனமாக சாப்பிட்டேன். கிச்சனில் பாத்திரங்கள் உருண்டன. கோபத்தின் சதவிகிதம் நூறு கடந்து ஆயிரத்தை தொட்டது.

தொப் என்று படுக்கையில் விழுந்த ஷாலுவுக்கு மூன்று பெட் டைம் ஸ்டோரிஸ் சொன்னேன். அசந்து தூங்கிவிட்டாள்.

கதவை தாளிடும் ஓசையும், டிவியை ஆஃப் செய்யும் சப்தமும் கேட்டது. வரட்டும். இன்று முடிவு கட்டியே ஆக வேண்டும். கைகளை தேய்த்தபடி காத்திருந்தேன். வரவில்லை. கிச்சனை துப்புரவு செய்கிறாள் போல.

ஐந்து நிமிடங்களுக்கு பின் வந்தாள். என் பார்வையில் அவள் வாளிப்பு படும்படி சேலையிலிருந்து நைட்டிக்கு மாறினாள். கோபத்தின் அளவு குறையாமல் மனதை ஒருமுகப்படுத்த முயற்சித்தேன்.

நெருங்கினாள். மல்லிகை மணமும், இளவரசிக்கே உரிய பிரத்யேக வியர்வை நெடியும் என்னை சூழ்ந்தது. இரு கைகளால் என் முகத்தை ஏந்தினாள். காலையில் பிளேடு வெட்டு விழுந்த இடத்தில் பஞ்சு மாதிரியான தன் இதழை சில்லென்று வைத்தாள்.

“ஏங்க…’’

– மார்ச் 2017

Print Friendly, PDF & Email

1 thought on “ஏங்க…

  1. ஏங்க பின்னிட்டீங்க – சபாஷ் ரொம்ப நல்லா இருக்கு – ஏங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *