இரவு 9 மணி. கரெண்ட் இல்லை. எங்கும் இருள். ஒரு முக்காடிட்ட உருவம் வருகிறது கையில் ஒரு மூட்டை. ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அங்கிருந்து கோயிலைப் பார்க்கிறது. யாராவது வந்த வண்ணம் இருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருக்கிறது. அப்பாடா, யாரும் வரவில்லை, என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அந்த மூட்டையை கோயில் வாசலில் வைத்து விட்டு வேகமாக நகர்ந்து மறுபடி மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அப்பொழுது அங்கு ஒரு நாய் மூட்டையைப் பார்த்து அதன் அருகில் போனது. ‘ஐயோ நாய் அந்த மூட்டையை கடித்துக் கொதறி விடப் போகிறதே’ என்கிற பயத்தில் அந்த உருவம் நாயை விரட்ட ஒரு மரக்கிளையை ஒடித்து அதன் மேல் தூக்கி எறிகிறது. நாயின் மேல் மரக்கிளை பட்டு அது குரைத்துக் கொண்டே ஓடியது.
நாய் .குரைத்த சத்தம் கேட்டு மூட்டைக்குள் இருந்த குழந்தை விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது. குழந்தை அழும் குரல் கேட்டு உள்ளேயிருந்து அர்ச்சகர் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. அர்ச்சகர் குழந்தையை எடுத்துக் கொண்டவுடன், நிம்மதியாக உருவம் யார் கண்ணிலும் படாமல் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றது. குழந்தை பெரிதாக அழத் தொடங்கியது. கோயிலில் கூட்டம் கூடி விட்டது. “ஐயோ, பாவம்! பச்சைக்குழந்தை. இப்பிடி விட்டுட்டுப் போக மனசு எப்படி வந்திச்சு? பாலுக்கு அழுவுதோ என்னவோ? இவுளுக வளக்க முடியலைன்னா ஏன் பெத்துக்கறாங்கன்னு”, ஆளுக்கொன்று சொன்னார்கள். அர்ச்சகர், ”அதெல்லாம் இருக்கட்டும். இப்ப இந்தக் குழந்தையை என்ன பண்ணறது”ன்னு கேட்க, “வாங்க, போலீஸ்ல ஒப்படைச்சிடுவோம்”னு சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்கள். போலீஸ்காரர் குழந்தை கிடைத்த விவரம் கேட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு போகச் சொன்னார். நகைக்காக குழந்தையைத் தூக்கி வந்து குழந்தையை இங்கு போட்டு விட்டு போயிருக்கலாம் என்று எண்ணியதால் சிறிது நாட்கள் குழந்தையைத் தேடி யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு. அதை ‘பாரடைஸ்’ என்ற அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டார்.
நள்ளிரவு. நடைமேடையில் ஒரு பிச்சைக்காரன் கொசுத் தொல்லையால் உறக்கம் வராமல் புரண்டு படுத்த வண்ணம் இருந்தான். தூரத்தில் ட்ரெய்ன் வரும் சத்தம் கேட்டது. அது நெருங்கி வரும் பொழுது சடாரென்று ஒரு இளம்பெண் தண்டவாளத்தில் குறுக்கே பாய்ந்தாள். அந்த பிச்சைக்காரன் மின்னல் வேகத்தில் ஓடி வந்து அவளைப் பிடித்துத் தள்ளினான். அவளுக்கு லேசான அடி. காலைத் தேய்த்து விட்டு எழுந்தாள். பிச்சைக்காரனிடம், “என்னை ஏன் காப்பாத்தினீங்க? நான் நிம்மதியா என் புருசன் போன இடத்துக்கே போயிருப்பேனில்ல” என்றாள். ”அது சரிம்மா, அப்படிப் போயிட்டா பரவாயில்ல. அதுக்குப் பதிலா ஏதாவது ஊனம் வந்திச்சுன்னா என்னா செய்வே? இப்பவாவது உடம்பு நல்லாருக்கு. ஒழச்சு சாப்பிடலாம்.” ”இல்லண்ணே, நான் எப்பிடி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பேன், எனக்கு புத்து நோய், அதுவும் முத்திப் போச்சு, காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. என் புருஷன் ஆத்துல முழுகிச் செத்துட்டார். நாங்க காதல் கல்யாணம் செஞ்சுகிட்டதால எங்க ரெண்டு வீட்டுக்காரங்களும் எங்கள ஒதுக்கிட்டாங்க. கையில் இருந்த காசெல்லாம் வைத்தியச் செலவுக்கு சரியாப் போச்சு” என்றாள். தான் இறந்து விட்டால் குழந்தை நிலைமை என்னாகுமோ, என்ற பயத்தில் குழந்தையைக் கோயில் வாசலில் விட்டாலும், அதைப் பிரிந்து இருக்க முடியாமல், தான் சாகத் துணிந்ததை அவனிடம் எப்படிச் சொல்வது? இப்பொழுது அர்ச்சகர் கையில் பத்திரமாக உள்ளது, அது அவர் கிட்டேயே வளர்ந்தால் நல்ல விதமாக இருக்கும் என்பதால் தனக்கு குழந்தை இருப்பதை அவள் அவனிடம் சொல்லவில்லை. அவனிடம் தான் இனி தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதி கூறி விடை பெற்றாள். அநாதை இல்லத்தில் குழந்தை வளர்வது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் சிறிது நாட்களில் புற்று முற்றி. உழைக்க முடியாமல். வறுமையில் இறந்து போனாள்.
அனாதை இல்லத்தில் குழந்தைக்கு ஆகர்ஷ் என்று பெயரிடப் பட்டது. அவன் வளர்ந்து பெரியவனானதும் தன் வேலைகளைச் சுயமாக செய்வது, மற்றவர்களோடு நட்புடன் பழகுவது போன்றவற்றில் சிறந்து விளங்கினான். படிப்பிலும் படுசுட்டி. தீபாவளி, பிறந்த நாள் முதலியவற்றில் இல்லத்திற்கு வருவோர் குழந்தைகளுக்கு இனிப்பு, புத்தாடைகள், பட்டாசு ஆகியவை தன் குடும்பத்தோருடன் வந்து கொடுப்பர். அவர்களின் குழந்தைகள் அம்மா, அப்பா, என்று கூப்பிடும் பொழுது அவனுக்கு தன் அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம் மனதில் எழும். அதை அவனுடன் இருக்கும் அவனுக்கு மிகவும் பிடித்த ஆஷாவுடன் பரிமாறிக் கொள்வான். அவளும் ரொம்ப விஷயம் தெரிந்தவள் போல, ”நம்ம அம்மா, அப்பா ரெண்டு பேரும் செத்துட்டாங்க, நம்மளால எப்பிடி அவங்கள பார்க்க முடியும்?” என்பாள். அப்போது அவன், ”தாத்தா, பாட்டி, மாமா, மாமின்னு கூட யாரும் வர்றது இல்லயே?” என்றால், ”அது தாத்தா, பாட்டிக்கு வயசாயிடுச்சு, மாமா, மாமிக்கு வேல இருக்கு, அதான் வரலை” என்பாள். ”போடி, நமக்கு யாரும் இல்ல, அது தான் நெஜம்” என்று கூறியவனிடம், தான் வைத்திருக்கும் பொம்மைகளைக் காட்டி, ”இவங்க தான் நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டின்னு நெனச்சுக்க.” என்றால், ”ஆனா இவங்க பேச மாட்டாங்களே” என்பான். ”அவங்க ஊமைன்னு நெனச்சுக்க” என்பாள்.
அவர்கள் சம்பாஷணையைக் கேட்ட அவர்கள் டீச்சர் மல்லிகா, குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் இருக்கும் சோகத்தை உணர்ந்து இரக்கப்படுவாள். அவர்களிடம், ”இங்க இருக்கிற குழந்தைகள் எல்லாருக்கும் நான் தான் அம்மா, நீங்க என்னை அம்மான்னே கூப்பிடுங்க” என்பாள் ஒவ்வொரு வகுப்பில் தேர்ச்சி பெறும் போதும் அல்லது போட்டிகளில் வென்று வரும் போதும் குழந்தைகளெல்லாரும் மல்லிகா டீச்சரிடம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றாலும் தாய் மாதிரி கவனித்துக் கொள்வாள். புரியாத பாடங்களை பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பாள். ஆகர்ஷும் ஆஷாவும் நகராட்சி பள்ளியில் படித்து ப்ளஸ் டூ முடித்து இல்லத்தில் வேலை பார்த்தார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்கள். இருவரும் பொறியியல் முடித்து நல்ல வேலையில் அமர்ந்தார்கள்.
மல்லிகா டீச்சர், ஆகர்ஷும் ஆஷாவும் ஒருவரை ஒருவர் விரும்புவது கண்டு அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தாள். ஆகர்ஷுக்கு வேலையில் மாற்றல் கிடைத்து, டில்லிக்குச் சென்று விட்டான். ஆஷா அங்கு போய் வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்றிருந்தாள். சென்னையில் இவ்வளவு நாட்கள் இருந்து விட்டுப் புது ஊரில் அட்ஜஸ்ட் பண்ணுவது இருவருக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அங்கு பாஷை வேறு. குளிர் காலத்தில் காலத்தை ஓட்டுவது மிகவும் கஷ்டம். இருவருக்கும் பழகப்பழக எல்லாம் சரியாகி விட்டது. அன்று ஆகர்ஷ் ஆஃபீஸுக்கு கிளம்புகையில் ஆஷா தலை சுற்றி விழுந்து விட்டாள். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து சூடாக காஃபி கலந்து வந்து குடிக்க வைத்தான். அன்று லீவு போட்டு விட்டு, மாலையில் டாக்டரிடம் கூட்டிப் போனான். டாக்டர், ”கங்க்ராஜுலேஷன்ஸ், மிஸ்டர் ஆகர்ஷ், நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்”ன்னு சொல்லிக் கை குலுக்கினார். அவர்களுக்கு வானத்தில் பறப்பது போன்ற ஒரு சந்தோஷம். அதைப் பகிர்ந்து கொள்ள டீச்சர் மல்லிகாவுக்கு ஃபோன் செய்ததும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தங்களுக்குக் கிடைக்காத பெற்றோர் பாசத்தைக் குழந்தைக்குப் பொழிந்து தள்ளும் நாளை எதிபார்த்துக் காத்திருந்தனர். ஆகர்ஷ் ஆஷாவை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டான். உரிய நேரத்தில் அவள் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆன்லைனில் தேடி குழந்தையைக் குளிப்பாட்ட மற்றும் ஆஷாவைக் கவனித்துக் கொள்ள ஒரு வயதான பெண்மணியைக் கண்டு பிடித்தனர். அவளை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியதில், ”என் பெயர் சொர்ணம், எனக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்றதுல ரொம்ப சந்தோஷம். என் கையால நெறைய குழந்தைங்ளை வளர்த்திருக்கேன். அவர்களை என் குழந்தைங்களா நெனச்சுக்குவேன். எல்லாரும் நல்லா இருக்காங்க. எனக்கு அதுல ரொம்ப சந்தோஷம், நான் இதை ஒரு சேவையா நெனச்சு செய்யறேன், காசு வாங்குறதில்ல, ஏன்னா எனக்கு குழந்தைகள் கிடையாது ,தத்து எடுக்க விருப்பம் இல்ல, நமக்கு அவ்வளவு தான் அதிர்ஷ்டம்னு இருந்துட்டேன், ஆனா ஒண்ணு எனக்கு 60 வயசு ஆகிறதால நான் தனியா எங்கும் போறதில்ல, நீங்க தான் என்னைக் கூட்டி கொண்டு போய் கொண்டு விடணும்”னு சொன்னாள். ஆகர்ஷ் அப்படியே செய்வதாகக் கூறினான்.
சொர்ணத்தின் கை வண்ணத்தில் ஆஷாவும் குழந்தையும் நன்றாகத் தேறினர். குழந்தைக்கு ஆகாஷ் என்று பெயரிட்டனர். ஆகாஷின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு ஆனந்தம் கொண்டனர். டீச்சர் மல்லிகாவுக்கு அவனுடைய ஃபோட்டோவை அனுப்பி வைத்தனர். ஆகாஷ் பிறந்த பிறகு நாட்கள் வேகமாக ஓடுவதாக ஆஷாவுக்குத் தோன்றியது. கண் மூடி திறப்பதற்குள் 3 வருடம் கடந்து விட்டது. ஆகாஷ் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டான். அடுத்ததாக பிறந்தாள் புஷ்பா. இரண்டு குழந்தைகளும் வால் தனம் பண்ணுவதால் இருவரையும் சமாளிப்பது ஆஷாவுக்குச் சவாலாக இருந்தது. அவளைச் சீக்கிரமாகவே ஸ்கூலில் சேர்த்து விட்டாள்.
குழந்தைகள் வளர வளர, அவர்களுக்கு விவரம் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. ஆகாஷ் வகுப்பு சிநேகிதர்கள் தங்கள் தாத்தா, பாட்டி சொல்லும் கதைகளை வகுப்பில் சொல்வார்கள். அவர்களை அழைத்துப் போக தாத்தா பாட்டி வருவார்கள் ஆகாஷிடம் ”ஏண்டா உன் தாத்தா பாட்டி வரதில்லே?”ன்னு கேட்பார்கள். வீட்டில் வந்து அவன் ஆஷாவிடம், ”ஏம்மா, என் தாத்தா, பாட்டி நம்ம வீட்டுக்கு வரதில்லே? அவஙக எங்க இருக்காங்க? அவங்கள வரச் சொல்லும்மா” என்பான். அதற்கு ஆஷா, ”அவங்களுக்கு நெறைய வேலை இருக்கு, அதனால வர முடியாது”ன்னு சொல்ன்னால், ”சரி, அப்ப அவங்களப் பாக்க நாம போகலாம்” என்பான். ”சரி, உனக்கு லீவு விடட்டும், போகலாம்” என்று சமாளிப்பாள்.
ஆகாஷ். லீவு விட்ட போதும் எதையோ சொல்லிச் சமாளித்தாள். ஸ்கூல் திறந்த பிறகு மறுபடியும் அதே பிரச்னையைக் கிளப்பினான் ஆகாஷ். ”உனக்குத் தாத்தா, பாட்டியே கிடையாது, சும்மா பொய் சொல்லாதே, ஆண்டு விழாவுக்கு எங்க குடும்பமெல்லாம் வந்திச்சு. உங்க வீட்டில உங்கப்பா மட்டும் தான் வந்தாரு, உனக்கு யாரும் கிடையாதுன்னு கிண்டல் பண்ணறாங்க. அதக் கேட்டு மத்தவங்க, ’புளுகுண்ணி’ன்னு கை தட்டி கேலி பண்றாங்க, நான் இனி மேல் ஸ்கூல் போக மாட்டேன்” என்றான். ”கவலப்படாதே, சீக்கிரமா நாங்க தாத்தா, பாட்டியைக் கூட்டிக்கிட்டு வறோம்”னு சொன்னாள். அன்று இரவு ஆகாஷ் தூங்கிய பிறகு, தன் கணவனிடம் இதைப் பற்றிப் பேசினாள். அவன், “எனக்கு ஒரு யோசனை தோணுது. அந்த சொர்ணம் அம்மாவையும். அவங்க புருசனையும் இவங்க தான் உங்க தாத்தா, பாட்டின்னு சொல்லிடலாம். அவங்களுக்கும் யாரும் இல்லே. அவங்க நம்மோடயே இருக்கட்டும்,”என்றான். ஆஷாவிற்கு இது ரொம்ப நல்ல ஐடியாவாகப் பட்டது.
ஆகர்ஷ், சொர்ணத்தையையும் அவளுடைய புருசனையும் கூட்டிக் கொண்டு வரப் புறப்பட்டான். விஷயத்தைச் சொன்னவுடன், அவள், ”நாங்க குழந்தைங்க சந்தோஷத்துக்காக கொஞ்ச நாள் தங்கறோம், உங்களுடனே நெரந்தரமா தங்க முடியாதுன்னு நெனக்கிறேன்” என்று சொல்ல, ஆகர்ஷ், ’இதப் பாருங்கம்மா. நானும் என் மனைவியும் அநாதை இல்லத்தில் பாசத்துக்கு ஏங்கி வளந்தவங்க, எங்களூக்கு பாசத்தைக் காட்டின ஒரே ஜீவன் எங்க மல்லிகா டீச்சர் தான். ஆனா அவங்க தன் குழந்தைங்கள விட்டுட்டு எங்களோடு தங்க முடியாது. இப்ப உங்க ரெண்டு பேர் ரூபத்தில எங்க அம்மா, அப்பாவைப் பாக்கறோம். உங்களுக்கும் எங்களோடு இருந்தா வயசு காலத்துல பாதுகாப்பா இருக்கும். எங்க ஏக்கமும் தீரும். அதைத் தவிற எங்க குழந்தைங்களுக்கு எந்த மனக்குறையும் இருக்கக் கூடாதுன்னு நெனக்கறதால, மாட்டேன்னு சொல்லிப்புடாதீங்க’’ என்றான்.
”சரிப்பா, உங்களோட ஏக்கம் புரியுது, நாங்க வறோம்” என்றாள். வீட்டிற்கு வந்ததும் ”ஆகாஷ்’, ’புஷ்பா’ யார் வந்திருக்காங்கன்னு வந்து பாருங்க”ன்னு கூப்பிட்டான். அவர்கள் வந்ததும், ”இவங்க தான் உங்க தாத்தா, பாட்டி” என்றான். குழந்தைகள் இருவரும் தாத்தா, பாட்டியை இறுகக் கட்டிக் கொண்டார்கள். தாத்தா பக்கத்தில் ’நான் தான் தூங்குவேன்’ என்று ஆகாஷும் ’சீ, போடா, நான் தான் தூங்குவேன்’ என்று புஷ்பாவும் சண்டையிட்டுக் கொள்வதைக் காண ஆஷா ஆகர்ஷுக்கு மட்டுமல்ல, சொர்ணத்துக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது சொர்ணம் குறுக்கிட்டு, ”சண்டை போடாதீங்க, நீங்க ரெண்டு பேரும் தாத்தா பாட்டிக்கு நடுவில படுப்பீங்களாம், பாட்டி கதை சொல்வேனாம், சரியா?” என்றாள். ”அம்மா, நான் நாளைக்கு தாத்தா பாட்டியோடு தான் ஸ்கூலுக்குப் போவேன்” என்று ஆகாஷ் சொன்னதும் உறவு என்னும் பாலம் செய்யும் ஜாலத்தை நினைத்து பூரிப்படைந்தனர் ஆகர்ஷ் தம்பதிகள். சொர்ணம் தம்பதிகளுக்கும் இப்போது நான்கு குழந்தைகள் கண்டு நெடு நாளைய ஏக்கம் தீர்ந்து விட்டதில் பெரும் சந்தோஷம்.