கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 18,278 
 

காலில் சலங்கை கட்டிக் கொண்டு,ஆடும் பிரமையில் சுபா தன்னை மறந்து நிறையவே கற்றுத் தேறியிருப்பது போல்,இயல்பாகச் சுழன்று சுழன்று நர்த்தனம் புரிவதை, ஒரு வேடிக்கை போலப் பார்வதி தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தாள்..நடன வகுப்புக்குப் போயோ,ஒரு கை தேர்ந்த குருவிடம் முறையாகப் பாடம் கற்றோ, அவளுக்கு இப்படி ஆட வரவில்லை. எல்லாம் கேள்வி ஞானம் மூலம் கற்றுக் கொண்ட வித்தை தான். பள்ளி விட்டதும் முதல் வேலையாக அவள் வீட்டிற்கு வந்ததும் செய்கிற காரியம் இது தான், நடனம் என்றால் அப்படியொரு ஆசை அவளுக்கு. ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அந்த இலக்கை அடைவதற்குப் பணம் வேண்டுமே.

அப்படிக் காசு கொடுத்துக் கலை வாங்கும் அளவுக்கு,அவள் அப்படியொன்றும் பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவளல்ல.கேவலம், அன்றாடம் ஒரு பிடி சோற்றுக்கே அல்லாடும் ஒரு பாமரச் சிறுமி தானே அவள். அவளுக்கு இப்படியொரு விபரீத ஆசை வரலாமா? கையில் காசு இருப்பவர்களுக்கே கலையும் சாத்தியமாகும் என்ற போலி நடைமுறை வாழ்க்கைச் சித்தாந்த உண்மைகள் ஒரு புறமிருக்க,இதை அறியாத நிலையில் தான் ,அவளின் இந்தக் கலைப்பிரவேசம் எந்த உந்து சக்தியுமின்றித் தானாகவே நிகழலாயிற்று ஒரு நடன வகுப்பில், காலில் சலங்கை கட்டி ஆடும் இளம் பெண்களைக் கண்டபோது தான், தன் தகுதிக்கு, மீறி அவள் இப்படியொரு விபரீத ஆசையை மனதில் வளர்த்துக் கொண்டாள். உண்மையில் இந்தக் கலை ஞானமென்பது இப்படியெல்லாம் கறை பட்டுப் போகவல்ல புனிதமான மனமே, உண்மைக் கலைஞனை அடையாளப்படுத்துகிறது அவளைப் பால் வாங்க அனுப்பியதால் நேர்ந்த தவறுதான் இது என்று பார்வதி தன்னையே நொந்து கொண்டாள். அவள் வாழ்ந்த காலம் போலில்லாமல்
அவளுடைய சின்னஞ்சிறு கிராமத்திற்கே கொம்பு முளைத்து விட்டதாய் இப்போது அவளுக்குத் தோன்றியது.. கொம்பு என்றதும் தான் ஞாபகம் வருகிறது. முன்னொரு காலத்தில் அப்பா அம்மாவோடு செல்லப் பிள்ளையாய் வாழ்ந்து மகிழ்ச்சி கொண்டாடிய நாட்களில். மாட்டுத் தொழுவத்தில் பால் வெள்ளையாய், ஒரு பென்னம் பெரிய கேப்பை மாடு நிற்குமே. அதன் நீண்டு வளைந்த கொம்புகளை இன்னும் அவள் மறந்து விடவில்லை.

அது மட்டும் தானா? வாளி நிறையப் பால் வேறு தருமே அது அந்தப் பாலைக் குடித்து வளர்ந்த அப்படியொரு சீமான் வீட்டுப் பிள்ளைதான் அவளும். இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறி, தினமும் தீக்குளித்துக் குளித்தே செத்துப் பிழைக்கிற் போராட்ட வாழ்க்கை அவளுக்கு.

இந்நிலையில்,மேடையேறி டான்ஸ் ஆடவில்லையென்று யார் அழுதார்கள். அவளால் அப்படி இருக்க முடிந்தாலும், சுபா விபரமறியாத சின்னஞ்சிறு சிறுமி தானே. அவள் ஆசைப்பட்டது தவறா? அதோ இருக்கிறது அவளின் வீட்டிற்கு முன்னால் அந்தக் கிராமத்துக் குச்சொழுங்கை பால் வாங்கத் தினமும் அவள் அவ்வழியால் தான் பால் போத்தலும் கையுமாகப் பொடி நடையாகப்போய் வருவாள். அப்படி ஒரு சமயம் போன போது தான் ஒரு வீட்டு வாசலில் அந்த நடன வகுப்பை அவள் காண நேர்ந்தது ஏராளமான இளம் பெண்கள், அங்கு நடனம் பயின்று கொண்டிருப்பதைக் கேட்டருகே நின்று அவள் கண் குளிர ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அதை நிர்வகிக்கும் நடன ஆசிரியையான சரோவை , அவளுக்கு ஏற்கனவே தெரியும் . இந்தியா சென்று நடனக் கலையை முழுமையாகக் கற்றுத் தேறிய ஒரு பிரபலமான நடன ஆசிரியை அவள் .மகளிர் கல்லூரியொன்றில் நடன ஆசிரியையாகப் பணி புரிவதோடு, தனிப்பட்ட முறையில் வீட்டிலும் வைத்து வசதி படைத்த பணக்கார இளம் பெண்களுக்கெல்லாம் நாட்டியம் சொல்லிக் கொடுத்து வருகிற அவளின் அபிநய அசைவுகளைத் தூர நின்றே கண் குளிரத் தரிசனம் காண்பதற்கு, மட்டுமல்ல ,இந்தத் தெய்வீகமான கலையைத் தானும் கற்றுத் தேறவேண்டுமென்ற, உலகமறியாத தனது, அப்பாவித்தனமான தீராத ஆசையின் விளைவாகவுமே, தினமும் அவள் சரோ வீட்டுக் கேட்டருகே தன்னை மறந்து தவம் கிடக்கிறாள்.

அப்படி அவள் நிற்க நேர்ந்ததையே, ஒரு குற்றச் செயலாகக் கருதி ,மனம் பொறுக்காமல் சரோவே ஒரு நாள் இதைப் பார்த்து விட்டு கேட் வாசலை நோக்கி அவசரமாக ஓடி வந்தாள்.

“என்ன சுபா? எப்ப பார்த்தாலும் நாங்கள் வகுப்பு நடத்தேக்கை இஞ்சையே நிற்கிறாய். என்ன வேணும் உனக்கு?”

“சரோவக்கா, எனக்கும் டான்ஸ் பழக வேணுமென்று ஆசையாக இருக்கு. எனக்கும் சொல்லித் தாறியளே?”

“இப்ப நீ சின்னப் பிள்ளைதானே. அது மட்டுமல்ல,இதுக்கெல்லாம் நிறையக் காசு வேணுமே .அரங்கேற்றம் முடிக்கிற வரைக்கும் பத்து லட்சத்திற்கு மேல் போகும். இவ்வளவு காசு உங்களிட்டை இருக்கே? சொல்லு சுபா”
காசு தான் கலையென்றால்,பிறகு கலை எதற்கு?சுபாவுக்குச் சொல்லத் தெரியாமல் இதுக்கெல்லாம் ஓவென்று அழ வேண்டும் போல் தோன்றியது, காசில்லாமல் கலையை நினைப்பதே இப்போது பெரும் குற்றமாய் ,மனதை எரித்தது அதிலிருந்து சுலபமாக அவளால் விடுபடவும் முடியவில்லை .எப்படியாவது டான்ஸ் பழகியே தீர,வேண்டுமென்பதில் அவள் மிகவும் உறுதியாக இருந்தாள் அதன் பிறகு அங்கு அவள் நிற்கவில்லை. சலங்கைச் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கும் , அந்தக் குச்சொழுங்கை வழியே தினமும் பால் வாங்க அவள் போய் வந்திருக்காவிட்டால்,தன் தகுதிக்கு மீறிய இப்படியொரு விபரீத ஆசை,அவளுக்கு ஏன் வரப் போகிறது? எல்லாம் அம்மாவால் வந்த வினை தான். நாள் முழுக்கப் பட்டினி கிடந்தாலும் ,ஒரு வேளை பால் விட்டுத் தேனீர் குடிக்காவிட்டால் அவளது இயக்கமே முழுவதுமாக நின்று போகும் அதற்காகவே இந்தப் பால் வாங்கும் வேலையெல்லாம், அதனால் வந்த வினை தான் இவ்வளவும்.

இவ்வளவு அவமானமும் பட்ட பிறகு டான்ஸ் எனக்கு வேணுமே? என்று முதலில் நினைக்கத் தோன்றினாலும், மனதில் ஆழமாகப் பதிந்து போன சலங்கயொலியின் இனிய நாதமாகவே, உயிரைச் சிலிர்க்க வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிற, பரதமென்ற தெய்வீகக் கலை பற்றிய நினைவை, அவளால் அடியோடு மறந்து விட முடியவில்லை அதற்காகவே தன் இருப்பெல்லாம் என்று தோன்றியது அம்மா கூறுவது போல் அதை மறந்து விட்டுப் படிப்பில் கவனதைச் செலுத்தலாமென்றால் அதுவும் முடியவில்லை பேருக்குத் தான் அவள் படிப்பென்று புத்தகம் தூக்குவதெல்லாம் மற்றப்படி திரும்பிய இடமெல்லாம் அவள் கண் குளிரக் காணும் காட்சியெல்லாம் பரத நாட்டிய அபிநயக் கோலங்களே. அதை மனதில் நிறுத்தி என்றோ தான் பார்த்ததையல்லாம். ஜதி பிசகாது நினைவு கூர்ந்து அப்படியே தத்ரூபமாக, அவள் ஆடி மகிழ்வதை மட்டும் பார்வதியால் தடுக்க முடியவில்லை இப்போது பால் வாங்கப் போவதும் அடியோடு நின்று விட்டது அதற்குப் பதிலாக அம்மாவே போய் வருகிறாள். .வீட்டில் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்த போதிலும், அம்மாவே போகிறாள். அவர்களுக்கு வயது வந்து விட்டதாம் படிப்பதற்கு மட்டும் தான், அவர்கள் வீட்டை விட்டு வெளியே போய் வர முடிகிறது. எந்நேரம் பார்த்தாலும் புத்தகமும் கையும்தான் அப்படிப் படித்தால் தான் நாளைக்கு உலகம் விடியுமென்று, அவர்கள் நம்புகிறார்கள். இப்போது அவர்களின் கண்களை உறுத்துவதெல்லாம் வறுமையிலே காய்கிற , தங்களின் வரட்டு வாழ்க்கையின், குரூர இருட்டு ஒன்று மட்டும் தான், தலைவனில்லாமல், அம்மாவுக்கே வண்டி இழுக்கிற பாரம் முழுவதும் அப்பா மிகவும் இளமையிலேயே காலமாகிப் போனார். வருகிற பென்ஷனும் போதவில்லை சண்டை வேறு .இதில் கரைகிற உயிரைக் குடிக்க.

இந்த லட்சணதில் டான்ஸ் வேறு ஆடிக் களைக்க வேண்டுமா கால்கள்? இதிலே யோகம் பயின்று எத்தனை காலத்துக்குத்தான் வித்தை காட்டுவது?சுபாவை அவள் வழியில் சமாளிப்பதே பெரும் பாடாகி விட்டது அவள் தான் நடனத்தை விடுகிறாளில்லையே. சலங்கை கட்டி ஆடாத குறை தான். அதற்கு மேடை போட்டுக் கொடுக்க, எவருமே முன் வராத நிலையில், அவளின் பாதங்களில் சலங்கை எப்படித்தான் ஏறும்.? அது ஏறாவிட்டாலும் பரவாயில்லை நான் ஆடியே தீருவேன் என்ற அப்பாவித்தனமான வெறி அவளுக்கு. பாவம்! அம்மாதான் என்ன செய்வாள்? இதற்காகச் சரோவிடம் போய் யாசகம் கேட்கத்தான் முடியுமா? இது பணத்தால் மட்டுமே , சாதிக்கிற காரியமாக இருக்கையில், கலையென்பதெல்லாம் வெறும் கண் துடைப்பாகவே முடியும். அதுவும் ஆடற் கலை பயின்று அரங்கேற்றம் செய்வதென்றால் சும்மாவா? பணம் கறக்கிற மாடு இருந்தால் தான் அதுவும் வரும். அந்த மாட்டிற்கு எங்கே போவது? போகலாமே வெளி நாடு போனால் இந்த வித்தை தானாகவே வரும். கையில் காசு புரண்டால் கலையை என்ன,? உலகையே விலைக்கு வாங்கி விடலாம். உண்மைக் கலை எப்படிப் போனாலென்ன? சரோவுக்கோ இரண்டும் கெட்டான் நிலைமை. அவள் ஆடிக் கறப்பவள். விபரீத வாழ்க்கையின் ஒரு சூழ்நிலைச் சாபம் போல அவளின் நிலைமை இந்த கறைக்குள் சிக்கிய பின் கலையென்று கூறுவது கூட வெறும் வேஷம் தான்.

இந்த வேடதாரிகளின் நடுவே, கலை யாசகம் பெறப் போன சுபாவின் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும். இந்த உண்மை மயக்கமற்ற வேதத்தை அவளுக்கு யார் தான் எடுத்துக் கூறுவர். அப்படிக் கூற முடிந்தாலும், அவளுக்கு இதெல்லாம் புரிகிற வயதா? அப்ப என்னதான் வழி? கேவலம் ஒரு ஏழைப் பரதேசிச் சிறுமியான அவளுக்கு இந்தக் கலை தான் எதற்கு?

இதை அவள் புரிந்து கொள்ள வேண்டுமே! அவளுக்கு அந்த ஞானம் இன்னும் வரவில்லை அவள் ஆடுகிற பாதத்தை நிறுத்தவுமில்லை என்னவொரு பம்பரம் போன்ற சுழற்சி ஆட்டம் அவளிடம் ஏன் ஆடுகிறாள்? யாருக்காக ஆடுகிறாள்? எப்படி வந்தது இந்த ஆடற் கலையும் அபிநய கோலங்களும்? எப்படி? எப்படி? எல்லாம் கேள்வி ஞானம் மூலம் கிடைத்த ஒப்பற்ற வரம் தான்.

அம்மாவால் கூட நடை முறை வாழ்வுண்மைகளுக்கு முரணாக, மாறுபட்ட ஒரு துருவத்தில் அவள் பூண்டிருக்கிற கலை வழிபாட்டுடன் கூடிய . தெய்வீக நிலையை ஜீரணித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது ஏன்? உணர்வு பூர்வமாக அதை ஏற்றுக் கொள்கிற மனோ நிலையிலும்.அவள் இருக்கவில்லை இப்போது சுபாவுக்கு வேண்டியதெல்லாம் படிப்பு ஒன்று மட்டும் தான் .அதற்காகவே அவளோடு தினமும் அவள் போராட வேண்டியிருந்தது. வாய் ஓயாமல் சொல்லிச் சொல்லியே அவள் ஓய்ந்து போனாள். இனி என்ன செய்வது? நடப்பது நடக்கட்டுமென்று, வாய் திறவாமல் இருந்து விட வேண்டியது தான், அதெப்படி முடியும்? இந்தக் குறுகிய வட்டத்தினுள், நின்று ஆடி அவள் , எதைப் பெரிதாகச் சாதித்து விடப் போகின்றாள்? ஆசானில்லாமல் கற்றுக் கொடுக்க ஒரு குரு இல்லாமல், அவள் இந்த நடனக் கலையில் முன்னுக்கு வரத்தான் முடியுமா? ஒரு சமயம் எரிச்சல் தாங்காமல் அவள் இதைக் கேட்டும் விட்டாள்.

“போதும். நிறுத்து சுபா. எத்தனை நாளைக்கு இப்படி ஆடப் போகிறாய்? அது தான் சரோ வெளிப்படையாகச் சொல்லி விட்டாளே.. நீ சும்மா ஆசைப்பட்டால் முடியுமே? இதுக்கெல்லாம் காசு வேணுமடி. சொல்லுறதைக் கேள் சுபா. இன்றோடு இதை மறந்து விடு”

“ஏன் மறக்க வேணும்? ஆரும் எனக்குச் சொல்லித் தர வேண்டாம். எனக்குள் ஆட வேணுமெறு வெறி இருக்கு.. நான் எப்படி ஆடாமல் இருக்கிறது? என்னாலை முடியாதம்மா என்ரை மனசுக்குள்ளை ஒரு குருவை நான் வைச்சிருக்கிறன் கண்ணாலை கண்டதை நினைச்சுப் பார்த்து ஆடுறன் .சரோ இல்லாவிட்டாலென்னபக்கத்து வீட்டிலை தான் ஒவ்வொரு நாளும் டி வியிலை படம் போட்டுப் பார்க்கினமே. நானும் அதைப் பார்த்து வாறன் அதிலை வாற டான்ஸைப் பார்த்துக் கூட நான் பழகக் கூடாதே? சொல்லுங்கோவம்மா”

பார்வதிக்குத் தெரியும். மின்சாரம் அடியோடு நின்று போன இந்தக் காலகட்டத்திலும், ஊமை இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு,படு ஜோராய் என்னவொரு ஆரவாரக் கூத்து, பக்கத்து வீட்டில், எல்லாம் திரையில் படம் பார்க்கிற குஷி தான். ஜெனரேட்டர் வைத்துத்தான் இந்தக் கேளிக்கையெல்லாம் அதுவும் ஐயர் வீட்டில், ஜன்னலுக்கு வெளியே வேலி தாண்டிப் போனால் ,அந்த வீடு தான் கண்ணில் படும் இரவில் கூடக் குப்பி விளக்கும் கையுமாக,ஐயரம்மா நடமாடித் திரிவது நன்றாகத் தெரியும். ஜன்னலைத் திறந்தாலே காட்சிக்கு முன் வந்து நிற்பது அவள் முகம் தான் பத்து மணி வரை காட்டுக் கத்தலாய் உச்சக் கட்டத் தொனியில் கேட்கும் அவளின் குரல் ஓயாது, அவளின் கடும் போக்குக்குக்கேற்ப, கணீரென்ற கனத்த குரல் தான் அவளுக்கு. அவளுக்குப் பிரச்சனைகள் ஏதுமற்ற சுகமான வாழ்க்கையென்பதால், இந்தப் பிரச்சனை சமயத்திலும் ஜெனரேட்டர் வைத்து டிவியில் படம் பார்க்க அவள் தவறுவதில்லை.

சுபாவுக்குச் சின்ன வயதிலிருந்தே அவளோடு நல்ல ஒட்டுதல், அவளை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சாத குறைதான் டிவி போடும் சமயங்களிலெல்லாம் சுபா அங்கு போகத் தவறுவதில்லை இரவு நேரங்களில் கண் மூடாமல் விழித்திருந்து விடியும் வரை படம் பார்ப்பாள் அவள் அப்படிப் பார்ப்பது கூட நடனக் கலை மீது கொண்ட தீவிர ஆசையின் பொருட்டே டிவி திரை விழுத்துகிற படங்களிலும் அதையே குறியாக வைத்து, அவள் பார்த்து வருவதால் ,மேலும் தத்ரூபமாக ஆடி உயிர்த்துவமான அபிநய பாவங்களை, அப்படியே அச்சுப் பிசகாமல் அவள் ஆடி மகிழ்வதற்கு,அதுவே சிறந்த காரணமாயிற்று.

இப்படி அவள் ஆடத் தொடங்கி, தன்னிச்சையாய் நடனக் கலையில் முதிர்ச்சி பெற்றுப் பிரகாசிக்கத் தொடங்கி ஒரு யுகத்திற்கு மேலாகிறது. தென்னங்கீற்றுச் சாரல் படர்ந்திருக்கும், அவள் வீட்டு முற்றத்தில் தான், எவ்வித இடையூறுமின்றி, அவளது இந்த அரங்கேற்ற விழா சுகமாக நடந்தேறி நிறைவு பெறும். சரோ கூறி விட்டது போல், இதற்கான செலவு லட்சக் கணக்கான ஒன்றல்ல, செலவு ஏதுமற்ற,இந்த நடனப் புனித அரங்கேற்ற விழாவில், ஆசானின்றியே வில் வித்தையில் கை தேர்ந்த ஒரு வித்தகனாகி விட்ட ஏகலைவனைப் போலவே, இன்று அவளும்.சொன்னால் நம்பவா போகிறீர்கள்? சொல்ல வேண்டியது உயிர் மேன்மை தொடர்பான ஒரு தார்மீகக் கடமை என்றே படுகிறது. சொல்லி விட்டேன். காசுக்கே விலை போகிற இந்த உலகத்தில், கலையின் பொருட்டு உண்மையில் கலைக்காகவே, இப்படியொரு ஆச்சரிய காரியம் நடந்தேறினால், இது ஒரு நம்ப முடியாத அதிசயம் தானே! கலையார்வம் கொண்ட கண் மூடாத விழிப்பு நிலையில், வெற்றியின் பக்கமே அவர்களின் வாழ்வு. இதற்குச் சுபாவின் பணத்தின் போலியான வெற்றி வாகை சூடாத, இந்தக் கலையின் உயிர் இருப்புக் கொண்ட நிஜமான வெற்றி கூட ஒரு சான்று முகம் தான்.

– மல்லிகை (ஏப்ரல்,2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *