எலீசா..எலீசா..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 3,402 
 

உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு சார், கீழே உட்கார வச்சிருக்கேன். கணிணியில் அலுவலக வேலையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த அசோக் தலை நிமிர்ந்து யாருன்னு விசாரிச்சீங்களா?

விசாரிச்சேன், மோகனா அப்படீன்னு சொல்லுங்க, அவருக்கு தெரியும்னு சொல்லுச்சு.

அப்படி யாரும் எனக்கு தெரியாதே, ஆமா பொண்ணு எப்படி இருந்துச்சு?

ஏன் இத்தனை கேள்வி நீ என்னைய கேக்கறதுக்கு பேசாம எந்திரிச்சி போய் அந்த பொண்ணுகிட்டயே நீ யாரும்மா? உனக்கு என்ன வேணும்னு கேட்டுடலாம். ஆனா…

ஆனா..என்ன ஆனா?

அந்த பொண்ணை பார்த்துட்டீன்னா, அந்த கேள்வி எல்லாம் கேட்கமாட்டே, அப்படியே அந்த பொண்ணு அழகுல மெய் மறந்து போயிருவே..

நீங்க பண்ணற பில்டப்ப பார்த்தா அந்த பொண்ணு அழகானவளாத்தான் தெரியுது, பார்க்கலாம்

“ஹலோ” இவனின் குரல் வந்தும் அந்த பெண் திரும்பி பார்க்கவில்லை. அப்படியே ஜன்னல் வழியாக எதையோ பார்த்து கொண்டிருந்தாள்.

ஹலோ..ஹலோ..உங்களைத்தான், என்னைய பார்க்க வந்துட்டு இப்படி ஜன்னலை பார்த்து நின்னுட்டா என்ன அர்த்தம்?

சட்டென்று அந்த பெண் திரும்பினாள்.

அசோக் அயர்ந்து விட்டான், நல்ல களையான முகம், மாநிறத்துக்கும் சற்று கூடுதலாய் இருக்கலாம், சிரித்தால் கண்டிப்பாய் குழி விழும்.

ஐ ஆம்.சாரி, ஜன்னல் வழியா அந்த குழந்தை போற அழகை பார்த்து அப்படியே நின்னுட்டேன்.

அதெல்லாம் சரிங்க, இவ்வளவு அழகா இருக்கறீங்க எதுக்காக என்னை தேடி வந்திருக்கீங்க, சாரி தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க அழகா இருக்கறதா சொன்னதுக்கு.

நான் அழகா இருக்கறனா இல்லையாங்கறது இப்ப பிரச்சினை இல்லை. நீங்கதான் அசோக்கா.

ஆமாங்க என்னை தெரியும்னு சொன்னீங்கலாம், ஆனா எனக்கு உங்களை தெரியாதே.

சாரி நான் சொன்னது பொய்தான், இருந்தாலும் எப்படி உங்களை பார்க்கறதுன்னு தான் அப்படி சொன்னேன்.

எதுக்காக என்னை பார்க்கணும்? தெரிஞ்சவன்னு பொய் சொல்லணும்.

இல்லை என் பேரு ‘மோகனா’ என்னை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கறதுக்கு எங்க அப்பா அம்மா உங்க வீட்டுல பேசிகிட்டிருக்காங்கலாம், அந்த மாதிரி எந்த ஏற்பாடு செஞ்சுட கூடாதுன்னு முதல்லயே உங்க கிட்ட சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன்.

அப்படியா, எனக்கு இதுவெல்லாம் தெரியாது, எங்க அப்பா அம்மா பொள்ளாச்சியில் இருக்காங்க, நான் சென்னையில இருக்கறதுனால அவங்க என்ன செஞ்சுகிட்டிருக்காங்கான்னு தெரியலை. சரி நான் சொல்லிடறேன், மோகனா அப்படீங்கற பொண்ணு பார்க்க வேண்டாமுன்னு, சரியா. அவ்வளவுதானே.

அவ்வளவுதான்..அந்த பெண் மீண்டும் தயங்கினாள்.

ஓ,கே சொல்லிடறேங்க, அவளின் தயக்கத்தை பார்த்து சாரி இவ்வளவு தூரம் என்னை பார்க்க வந்துட்டு உங்களை சும்மா அனுப்ப முடியாது, வாங்க எங்க காண்டீன் வடையை ருசி பார்க்கலாம்.

பரவாயில்லைங்க, நான் கிளம்பறேன்.

ஸ் இங்க பாருங்க, நீங்க எனக்கு மனைவியாக போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டீங்க, எனக்கும் இதை பத்தி எதுவும் தெரியாததுனால எந்த கவலையும் படலை. அப்புறம் என்னங்க நமக்குள்ள பார்மாலிட்டி, வீ ஹேவ் ஜஸ்ட் பிரண்ட்ஸ், அதுவும் என்னை நீங்க பார்க்க வந்த கெஸ்ட்டா ஆனதுனால. ஓகேயா !

ஓ.கே சார்,

என் பேரு அசோக்குன்னு உங்களுக்கு தெரியும், நான் உங்களை மோகனான்னு கூப்பிடறப்ப நீங்க என்னை தாராளமா அசோக்குன்னு கூப்பிடலாம். நாமதான் பிரண்ட்ஸ் அப்படீன்னு சொல்லிட்டேனே.

ரொம்ப தேங்க்ஸ் அசோக்,

வாங்க போலாம். காண்டீன் பணியாளரிடம் அண்ணே இரண்டு வடை சூடா இருக்கணும், அப்படியே இரண்டு காப்பி நல்ல ஸ்ட்ராங்கா, உங்களுக்கு லைட்டா ஸ்ட்ராங்கா,

எனக்கும் ஸ்ட்ராங்கே போதும்

வடையை சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை, அவள் வடையை மெல்ல மெல்ல பிரித்து சாப்பிடுவதை மெளனமாய் பார்த்து கொண்டிருந்தான்.

நீங்க வடையை “பிச்சு” “பிச்சு” சாப்பிடறதை பார்த்தா ஏதோ யோசனையில இருக்கறீங்கன்னு நினைக்கறேன், வடையை சாப்பிட்டு, அப்புறம் சூடா காப்பியை சாப்பிட்டுட்டு உங்க யோசனையை அப்புறம் வச்சுக்கலாமே.

சாரி, சார் ..சாரி அசோக், கொஞ்சம் யோசனைதான், வடையை வேகமாக சாப்பிட்டு முடிக்க காப்பி வருகிறது.

ரொம்ப தேங்க்ஸ் அண்ணே, இவர் பேரு கோபாலன் எங்க காண்ட்டீன்ல செய்யற எல்லாமே ரொம்ப மணமும் சுவையும் இருக்குதுன்னா அதுக்கு காரணம் இவருதான்.

தம்பி சும்மா இருக்க மாட்டீங்களா, பாவம் அந்த பொண்ணு ஏதாவது நினைச்சுக்க போகுது.

காப்பி ஏ” ஒன், உண்மையாத்தான் சொல்றேன் மோகனா அவரை பார்த்து சொன்னாள்.

அப்ப வடை நல்ல இல்லையா? இருக்காது ஏன்னா நீங்க ஏதோ யோசனையிலயே சாப்பிட்டுட்டு இருந்திருப்பீங்க.

இல்லைங்க, இல்லைங்க, வடையும் ரொம்ப நல்லா இருந்துச்சு,

அப்பாடா ஒரு பாராட்ட வாங்கறதுக்கு இவ்வளவு கெஞ்ச வேண்டியதா போச்சு.

சரிங்க, எப்படியோ நீங்க சொல்ல வேண்டியதை சொன்னதுனால கொஞ்சம் நிம்மதியாயிருப்பீங்க. எப்படி வந்தீங்க? எங்க தங்கியிருக்கீங்க, உங்க டீடெயில்சை உங்களுக்கு விருப்பமுன்னா எங்கிட்டே சொல்லலாம், இல்லையின்னா வேண்டாம்.

எங்க அப்பா பேங்ல வேலை செய்யறாரு, எனக்கு ஒரு அக்கா கல்பனா அவங்க பேரு அவங்களும் பேங்க்லதான் வேலை செய்யறாங்க, அவங்க வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம்தான் ஆகுது.

நான் பி.காம், ஸ்டெல்லா மேரீஸ் காலேஜுல முடிச்சுட்டு வேலைக்கு முயற்சி பண்ணிகிட்டிருக்கேன், பாங்க் எக்ஸாமும் கூட எழுதிகிட்டிருக்கேன். நாங்க தாம்பரத்துல இருக்கறோம்.

ரொம்ப நல்லது, எனக்கு ஒரு சந்தேகம், உங்களுக்கு அக்கா இருக்கறப்ப உங்களை எதுக்கு எனக்கு பேசி முடிக்க முயற்சி பண்ணறாங்க.

அது வந்து..வந்து..

பரவாயில்லை, விருப்பமின்னா சொல்லுங்க,

அவங்களுக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க, அதுனால எனக்கு பண்ணனுமின்னு அப்பா அம்மா அவசரப்படறாங்க.

அதெப்படி நீங்க ஒத்து கிட்டீங்க, அக்காளுக்கு எப்ப கல்யாணம் முடிக்கறீங்களோ அதுக்கப்புறம்தான்னு சொல்லி தப்பிச்சிருக்கலாம், பரவாயில்லை, நான் ஒதுங்கிட்டாலும், வேற மாப்பிள்ளை பார்க்கறதுக்கு வற்புறுத்தினா என்ன பண்ணுவீங்க.

அந்த பெண் அழுவது போல் முகத்தை கொண்டு போக ஓகே..ஓகே, நான் உங்க சொந்த விஷ்யத்தை பத்தி பேசலை

சரி மேற்கொண்டு நான் எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி இந்த கல்யான பேச்சை நிறுத்த சொல்லிடறேன், போதுமா.

சரி நீங்க என்னை பார்க்கறதுக்கு எப்படி வந்தீங்க?

ஒரு ஆட்டோவ புடிச்சுத்தான் வந்தேன்.

சரி போகறதுக்கு என் கூடவே வந்துடுங்க, அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க, நான் மேலே போயி ஆபிஸ்ல சொல்லிட்டு வந்திடறேன், அவளின் மறு வார்த்தையை கேட்காமல் வேகமாக மாடி ஏறினான்.

அலுவலகத்தில் நான் சொன்னது சரியா போச்சா? அந்த பொண்ண பார்த்துட்டா திரும்ப வரமாட்டீங்க, அப்படீண்ணேனே.

சரிதான், நீங்க சொன்னது, சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே, இந்த கவரை ராஜேஸ் கிட்ட கொடுத்துடுங்க. இன்னும் அரை மணி நேரத்துல என் டேபிளுக்கு வருவான்.

அவனது வண்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு விரலால் சுழற்றியபடி வேகமாக கீழே இறங்கினான், அலுவலக பின்புறம் சென்றவன், அவனது வண்டியை எடுத்து முன்புறம் வந்து மோகனாவை தேடினான்.

அவளை காணவில்லை. எங்கு போனாள்? சுற்று முற்றும் தேடினான். எங்கும் கண்ணுக்கு தென்படவில்லை. வண்டியை அலுவலக காம்பவுண்டை விட்டு கொண்டு வந்தவன் நான்கு புறமும் பார்த்தான்.

மாலை நேரத்து பரபரப்பும், வாகனங்களின் நெரிசலும்தான் காணப்பட்டன. அந்த பெண்ணின் சாயல் எங்கும் தென்படவில்லை.

மனம் முழுக்க அந்த பெண்ணை பற்றிய கேள்விக்குறியுடன், மெல்ல தன் இருப்பிடத்தை நோக்கி செலுத்தினான்.

எலிசா எங்க போனே? நேத்து உன்னைய பார்க்கறதுக்கு உங்க காலேஜ் வாசல்ல வந்து நின்னேன், ஆனா நீ மதியம் மூணு மணிக்கே எங்கேயோ போயிட்டதா சொல்லிட்டாங்க.

அது வந்து எனக்கு புராஜெக்ட் விஷயமா வெளியே போக வேண்டி இருந்துச்சு.

அப்படி எங்காவது போறதா இருந்தா என் கிட்டே சொல்லிட்டுத்தான் போகணும், இல்லை நானாவது உன்னை கூட்டிட்டு போவேனில்லை.

ம்..சரி அடுத்த முறை எங்காவது போறதா இருந்தா உன்னை கூப்பிடரேன். இப்ப நான் கிளாசுக்கு போகணும், இப்படி காலேஜு நடக்கும்போது இடையில வந்து தொல்லை பண்ணகூடாது.

வர வர உன் போக்கே சரியில்லை, எப்ப உன் கழுத்துல தாலி கட்டினனோ அப்பவே நீ எனக்கு சொந்தமாயிட்டே, புரியுதா, உன்னைய கல்யாணம் பண்ணி மூணு மாசமாச்சு, ஒரு நாள் கூட என் கூட தனியா வரமாட்டேங்கறே.

ப்ளீஸ்..இப்ப இதை பத்தி பேச வேண்டாம். எனக்கு படிப்பு முக்கியம், புரிஞ்சுதா.

அப்ப நான் முக்கியமில்லை, இல்லையா, இங்க பாரு நீ ஏதோ மனசுல வச்சுட்டுத்தான் இப்படி என்னை எடுத்தெறிஞ்சு பேசறே, நான் உனக்கு தாலி கட்டறது, நாம் இரண்டு பேரும் மாலையோட ஒண்ணா நிக்கறது எல்லாம் என் செல்போன்ல பதிவு பண்ணி வச்சிருக்கேன்.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

ம்..உனக்கு தாலிய கட்டிட்டு தினமும் உன்னை பார்த்துட்டு போறதுக்கு வர்றது எனக்கு பிடிக்கலை. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது, இந்த வாரம் இரண்டு நாள் காலேஜுக்கு லீவு போட்டுட்டு ஹாஸ்டல் போயி உங்க வார்டன் கிட்டேயும் இரண்டு நாள் ஊருக்கு போறதா சொல்லிட்டு வர்றே, புரியுதா? நான் உன்னை கூட்டிட்டு ஊட்டிக்கு போலாமுன்னு இருக்கேன்.

இந்த மாதிரி பேசறதை முதல்ல நிறுத்து, இங்க பாரு இந்த மாதிரி ஊட்டி கொடைக்கானல் அது, இதுன்னு சொல்லிட்டு திரியாதே. நான் படிச்சு முடிக்க ஆறு மாசமிருக்கு. அதுக்கப்புறம்தான் இதெல்லாம் புரியுதா?

நீ என் கூட இரண்டு நாள் வெளிய வா, அதுக்கப்புறம் சத்தமில்லாமல் காலேஜுக்கு வந்து ஆறு மாசமென்ன ஒரு வருசம் கூட படிச்சு முடி. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.

அப்படி எல்லாம் என்னால வர முடியாது.

அப்படியா, நாளைக்கே உங்க வார்டன் கிட்ட வந்து நான் உன் கழுத்துல தாலி கட்டிட்டதையும், இனிமே இவ என் பொண்டாட்டி அப்படீன்னு சொல்லி வெளியே கூட்டிட்டு போயிட போறேன்.

ப்ளீஸ் அப்படியெல்லாம் பண்ணிடாதே

இது தெரிஞ்சா சரி இப்ப நான் கிளம்பறேன், இன்னும் இரண்டு நாள்ல இங்க வருவேன், நீ லீவு போடறே, புரியுதா !

தனக்குள் மருகியபடி நின்று கொண்டிருந்தாள். எப்படி எப்படி இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பது. ஊரில் என்னை நம்பி இருக்கும் குடும்பம், நான் செய்து விட்ட இந்த செயலால் அவர்கள் அடையப்போகும் அவமானம்.

பேசாமல் யார்கிட்டயாவது சொல்லிடலாமா? அப்புறம் அவங்க காலேஜு முழுக்க சொல்லி, அவங்க டி.சிய கொடுத்து அனுப்பிச்சுட்டா? அதுக்கப்புறம் எந்த முகத்தை வச்சுகிட்டு ஊருக்கு போறது?

இப்ப இவன் கிட்டயிருந்து தப்பிக்கறது எப்படி?, அவன் சொல்ற மாதிரி கேட்கலையின்னா போட்டோவ காட்டி இங்க வந்து சொல்லிட்டான்னா?

இரண்டு நாட்கள் கழித்து விழித்து எழுந்தவள் ஜன்னலை திறக்க அதிர்ந்தாள், அவள் அறையையே பார்த்தபடி சாலையின் அந்த பக்கம் அவன் நின்று கொண்டிருந்தான்.

அதிர்ந்து நின்று விட்டாள். “ஏசுவே”, அவள் கால்கள் பயத்தில் அப்படியே துவண்டன. எப்படி பாத்ரூமுக்கு சென்று தன்னை தயார் படுத்தி கொண்டு வந்தாள் என்பதே அவளுக்கு தெரியவில்லை.

புத்தகங்களை எடுத்து கிளம்பும்போது கிறிஸ்டியானா அருகில் வந்து அவள் காதில் கிசு கிசுத்தாள், என்னடி உன் ஆள் உனக்காக காத்துகிட்டிருக்கான், எங்காவது கிளம்பறீங்களா?

துரோகி, நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்து கொண்டிருந்தவளை, இவன் பின்னால் சுற்றுகிறான், உனக்காக சிரமப்படுகிறான் இப்படி சொல்லியே என்னை இந்த சிக்கலுக்குள் தள்ளி விட்டவள்.

இவள் சொன்னாள் என்றால் என் புத்தி எங்கே போயிற்று, இவளை இப்பொழுது குறை சொல்லி என்ன பயன், முதலில் இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளி வருவது. இவனின் நோக்கம் என்னவென்று புரிந்து விட்டது, நான் எப்படி தப்பிப்பது?

அவள் நடக்க நடக்க இன்னைக்கு சாயாங்காலம் லீவு சொல்லிட்டு வர்றே, ஹாஸ்டல்ல ஊருக்கு போறதா சொல்லிட்டு நாளைக்கு காலையில கிளம்பறே. நான் உன்னை பிக் அப் பண்ணிட்டு நேரா இரயில்வே ஸ்டேசன் கூட்டிட்டு போறேன். சர்ரென்று அவன் வண்டியை எடுத்து விரித்து பறந்து கொண்டிருந்த தலைமுடியை கோதியபடி பறந்தான்.

அன்று வகுப்பு முழுக்க அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்படி ஒரு சிக்கலில் தன்னால் எப்படி மாட்டிக்கொள்ள முடிந்தது.

யார் இவன்? என்ன பேர் ஊர் இதை கூட தெரிந்து கொள்ளாமல் மூன்று மாதத்திற்குள் இவனிடம் எப்படி சிக்கிக்கொண்டேன். அதுவும் மாலையும் கழுத்துமாய் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, “ஏசுவே” என்னை காப்பாற்று,

மாலை நடைப்பிணமாய் இவள் ஹாஸ்டலுக்கு நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்ன செய்வது? எப்படி தப்பிக்க முடியும், ஹாஸ்டல் வார்டனிடம் என்ன சொல்வது? ஒன்றும் புரியாமல் தன் அறைக்குள் நுழைந்தாள்.

காலை அறையை விட்டு வெளியே போகவே விரும்பவில்லை. காலேஜுக்கு விடுமுறை சொல்லாவிட்டாலும் வெளியே போக பயந்து அறைக்குள்ளேயே முடங்கியிருந்தாள். ஜன்னலை திறக்கவும் பயம்,

அறைக்கதவு தட்டும் சத்தம், பயந்து பயந்து வெளியே வர ஹாஸ்டலில் வேலை செய்யும் பெண் நின்று கொண்டிருந்தாள். உங்களுக்கு போன், என்ன சொல்வது பயத்துடன் போன் இருக்குமிடம் வந்து அதை கையில் எடுத்தவள்

ஹலோ என்ன இன்னும் கிளம்பலையா?

எவ்வளவு நேரம் நான் காத்துகிட்டிருக்கறது.

நீ காலேஜுக்கு போகலைங்கறது எனக்கு தெரியும். இப்ப நீ வர்றியா இல்லை நான் அங்க வர்றதா?

இரு இரு வந்துடாதே, அவசரம் அவசரமாய் வார்டனிடம் சென்றாள், மேடம் ஒரு நாள் மட்டும் லீவு வேணூம்

சந்தேகமாய் அவளை பார்த்தாள் வார்டன். என்ன விஷயம் எதுக்கு ஒரு நாள் லீவு?

இல்லை மேடம் முடிஞ்சா சாயங்காலத்துக்குள்ள வந்துடுவேன், எங்க மாமா ஒருத்தருக்கு இங்க அடையாருல ஆஸ்பிடல்ல சேர்த்திருக்காங்கலாம். ப்ளீஸ் வந்துடறேன். போய் பார்த்துட்டு வந்துடறேன்.

இந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்னும் மனநிலையில் இருந்ததால் அவளிம் முகம் இருந்த நிலையை கண்டு வார்டன் ஒன்றும் பேசாமல் சீக்கிரம் வர பாரு, உன் செல் நம்பரை எழுதி வச்சுட்டு போ.

வெளியே வந்தவள் என்ன ஆனாலும் சரி இவன் திட்டத்துக்கு ஒத்து கொள்ள கூடாது என்ற முடிவுடன் வந்தாலும் அவனை பார்த்தவுடன் அப்படியே பயத்தில் எதுவும் பேசாமல் நின்றாள்.

சீக்கிரம் ஏறு, பதினோறு மணிக்கு ஊட்டிக்கு ட்ரெயின் கிளம்புது, சீக்கிரம், அவள் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். என்ன வரமாட்டியா? சரி விடு நான் உங்க ஹாஸ்டல் வார்டன் கிட்ட போறேன், வண்டியை திருப்ப முயற்சிக்க அவள் சட்டென வண்டியில் ஏறினாள்.

ஊட்டிக்கு வந்து இறங்கிய பொழுது மாலை ஆகியிருந்தது. இவள் தன் நிலை மறந்து இருந்தாள். அவன் தேவையில்லாமல் சிரிப்பதும், அவளை உரசுவதுமாக இருந்தான்.

அவள் அவனை விட்டு விலக முயற்சித்து அந்த கூட்டத்தை சாக்கிட்டு தள்ளி உட்கார முயற்சிப்பதும், அவன் மீண்டும் நெருங்கி வருவதுமாக எப்படியோ இரயில்வே ஸ்டேசன் வந்து இறங்கினார்கள் .

வழியில் இவள் எங்காவது இறங்கி ஓடி விடுவாள் என்னும் எண்ணத்தில் அவன் அவளை அங்கும் இங்கும் நகராமல் கண்கொத்தியாய் பார்த்து கொண்டிருந்தான். அவனை பொருத்தவரை தானாய் வந்த இரை, விட்டு விட தயாராய் இல்லை கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது, இவர்கள் ஊட்டி வந்து சேர்ந்த பொழுது, என்ன ஆனாலும் சரி நான் இவன் எண்ணத்துக்கு பலியாக கூடாது என்னும் முடிவில் இருந்த “எலிசா” இரயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே வர மறுத்தாள்.

இவன் இங்க குளிருது பார், பக்கத்துல ஒரு ஓட்டல் இருக்கும் ரூம் போட்டுக்கலாம், என்னென்னமோ சொல்லி பார்த்தான்.

அவள் பிடிவாதமாய் மறுத்தவள், உன்னோட எண்ணம் எனக்கு புரியுது, என்னால இன்னைக்கு இராத்திரி முழுக்க ஸ்டேசன்லதான் இருக்க போறேன், உன்னால ஆனதை பாரு.

திடீரென்று யாரை இவள் தோளை தொடுவது போல் உணர்வு, திரும்பி பார்த்தாள், பெண் போலீஸ் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

எதுக்கு இங்க நிக்கறீங்க?

அவள் என்ன சொல்வது என்று யோசிக்குமுன் இவன் மேடம் நாங்க சென்னையில இருந்து வந்திருக்கோம், எங்களுக்கு புதுசா இப்பத்தான் கல்யாணம் ஆச்சு, இங்க பாருங்க எங்க கல்யாண போட்டோ, தன் செல்லில் இருந்ததை எடுத்து காட்டினான்.

அப்படியா? பெண் போலீஸ் இவளை மேலும் கீழுமாய் பார்த்து எங்களுக்கு என்னமோ இந்த பொண்ணை பார்த்தா சந்தேகமா இருக்கு, நேத்து தப்பிச்சு போன மாவோயிஸ்ட் பொண்ணு மாதிரி இருக்கு, நீங்க இரண்டு பேரும் ஸ்டேசன் நடங்க, அங்க போய் விசாரிச்சா தெரிஞ்சிடும்.

ஸ்டேசன் விசாரணை என்றவுடன் இவன் தடுமாறினான், மேடம் நாங்க நல்ல பேமிலி, என்னன்னமோ சொல்ல, எலிசாவுக்கோ மனதுக்குள் ஒரு நிம்மதி. கடவுளே ஸ்டேசன் போயிட்டா இவன் கிட்டயிருந்து தப்பிச்சுக்கலாமே.

ஆனா போலீஸ் விசாரிச்சு எல்லா உண்மையும் தெரிஞ்சுகிட்டா இன்னும் பிரச்சினை பெரிசாகுமே, அது வேறு அவளை பயமுறுத்தியது.

ஸ்டேசனில் நுழைந்தவுடன் சடீரென்று அவளை ஓங்கி அறைந்தாள் அந்த பெண் போலீஸ்.

ஒரே அறையில் சப்த நாடிகளும் அடங்க அப்படியே திரு திருவென விழித்தாள் எலிசா. ராஸ்கல் போலீசுகிட்ட இருந்து தப்பிச்சுகிட்டு நாடகமா போடறே. இவன் யாரு? உன்னைய கல்யாணம் பண்ணிட்டதா போட்டோ காட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி வச்சிருக்கயா? மேலும் இரண்டு அறை இவளுக்கு விழுந்தது.

இவளுக்கு விழுந்த இந்த அறைகளை கண்ட அவன் ஐயோ மேடம் இந்த பொண்ணு யாருண்ணே தெரியாது, அவளாத்தான் வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்கோன்ன்னு சொல்லி போட்டோ எடுத்துக்க சொல்லியிருந்தா

யாருகிட்ட கதை விடறே ? ஏண்டா நீ இவ கையாள்தானே, இவ மேல எத்தனை கேசு இருக்கு தெரியுமா? மூணு கொலை கேசு இருக்கு, உன்னையும் இதுல இழுத்து போட்டு துக்குக்கு கொண்டு போனா சரியாயிடும்.

அவன் சட்டென்று அவர்கள் காலில் விழுந்தான். ஐயோ அம்மா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க, இந்த பொண்ணு காலேஜூல படிச்சுகிட்டிருக்கு, வளைச்சு போட்டுடலாமுன்னு நினைச்சு இவ கூட வந்தேன். மத்தபடி சத்தியமா இவ யாருன்னே தெரியாது.

எப்படிடா நம்பறது? இவளை கல்யாணம் பண்ண போட்டோவை கையில வச்சிருக்கே.

நான் இவளை எப்படியாவது ..இப்படி நினைச்சுத்தான் கையில வச்சிருந்தேன், என்னை நம்புங்க,

உன் செல்லை கொடுடா, அதை வாங்கி சிம்மை உடைத்து தூர வீசியவர்கள், அந்த செல்போன் மீது ஓங்கி அவர்கள் வைத்திருந்த தடியால் அடிக்க செல்போன் கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து சுக்கலானது.

இன்னும் உன் மேல நம்பிக்கை வரலையே அவனை மேலும் கீழுமாக பார்க்க அவன் நடுங்கினான். எங்கிட்டே வேற எதுவும் இல்லைங்க.

அப்படியா இந்தா இந்த பேப்பர்ல இந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லைன்னு எழுதி கொடு..

ஐயோ சாமி இதா எழுதி தர்றேங்க,

நீ எதுக்காக இந்த பொண்ணை சுத்தி வந்தேன்னு எழுதி கையெழுத்து போடறா.

சாமி நான் அவ்வளவா படிக்கலைங்க, பரவாயில்லை, கை நாட்டு வச்சு உன் பேரை உன் கையால எழுதி கொடுடா, சள் சளென்று இரண்டு அறை அவனுக்கு விட்டார்கள்.

அவன் சுருண்டு விழுந்து எழுந்தவன் அவர்கள் கொடுத்த பேப்பரில் அவர்கள் சொன்னது போல் எழுதி கை நாட்டையும் வைத்து பேரையும் எழுதி கொடுத்து, கையெடுத்து கும்பிட்டான். என்னை மன்னிச்ச்சிடுங்க சாமி.

ஓடறா, இங்கிருந்து, இல்லைன்னா இந்த பொண்ணோட சேர்த்து உன்னையும் கேசுல இழுத்து விட்டுடுவோம்.

இத்தனை நாடகங்களையும் பார்த்து மயங்கியபடி நின்றாள் ‘எலிசா’. அவர்கள் அவளை அடித்து அறைந்தது கூட அவளுக்கு பெரிய வலியாக தெரியவில்லை. தான் செய்த மிகப்பெரிய தவறுக்கு ஆண்டவனாக பார்த்து கொடுத்திருந்த தண்டனை இது என்று பல்லை கடித்து நின்றாள்.

ஆனால் தன் மீது இருப்பதாக சொன்ன “கொலை கேஸ்”, ஏசுவே என்னை தண்டிப்பதாக முடிவெடுத்து விட்டாய், ஏற்றுக்கொள்கிறேன். அவள் பாவங்கள் கரைந்து கண்ணீராய் வழிந்து சென்று கொண்டிருந்தது.

அவன் இவளை திரும்பி கூட பார்க்கவில்லை, விட்டால் போதும் என்று தலை தெறிக்க அந்த ஸ்டேசனை விட்டு ஓட ஆயத்தமானான்.

ஒரு போலீஸ் அவன் சட்டையை பார்த்து இங்க பாரு இந்த ஊருக்குள்ள உன்னைய இப்ப இருந்து பார்க்க கூடாது. உடனே ஊரை விட்டு ஓடிடணும், புரிஞ்சுதா? நடுங்கியபடி தலையாட்டியவன், அப்படியே வெளியே ஓடிப்போனான்.

போ..போ..அந்த ரூமுல போய் உட்கார்ந்திரு, எலிசாவை அவர்கள் உள் அறைக்கு விரட்டினார்கள்.

கண்ணில் நீர் வழிய அழுது கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தவள் எதிரே நின்றவனை பார்த்தவுடன் அதிர்ந்து நின்றாள்.

அசோக் கைகளை கட்டியபடி அவளையே உற்று பார்த்து கொண்டிருந்தான். அவள் தன்னை மறந்து ஓடிப்போய் அவன் மார்பில் சாய்ந்தவள் அசோக் என்னை மன்னிச்சிடுங்க, நான் செஞ்சது தப்புத்தான், என்னையும் அறியாம செஞ்ச தப்பு என்னை இப்படி இக்கட்டுல மாட்டிவிடும்னு நினைக்கலை. ஐயோ ஐயோ..இதுனால என் குடும்ப மானம் போயி எல்லாமே என்னால சீரழிஞ்சு போயிடுச்சே.

அசோக் அவளை தட்டி கொடுத்தவன், நீ செஞ்ச தப்பு உன்னைய எங்க கொண்டு போய் நிறுத்திருச்சு பார்த்தியா? நல்ல வேளை போலீஸ் ஸ்டேசன்ல வந்து நின்னதுனால உன் வாழ்க்கைய காப்பாத்த முடிஞ்சது.

இவனை மாதிரி ஆளுங்களை பத்தி உனக்கு தெரியுமா ?

இது மாதிரி சிக்குன பொண்ணுங்களை அவன் இப்படியே கர்நாடகா வழியே மும்பைக்கு கொண்டு போறவங்களுக்கு வித்துடுவான்

நீ அறிஞ்சு செஞ்சியோ, அறியாம செஞ்சியோ அதுக்கு தண்டனையாத்தான் போலீஸ் உன்னைய அடிச்சாங்க. மத்தபடி உன் மேல “எந்த கேசும்” இல்லை, இதை சொன்னாத்தான் அவன் உண்மையை சொல்லுவான்னு அப்படி போலீஸ் நடந்துச்சு, நாங்க எதிர்பார்த்த மாதிரி அவன் அவனை காப்பாத்திக்க உன்னைய கைய விட்டு ஓடிட்டான்.

ஹாஸ்டல் வார்டனிடம் எலிசாவின் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தனர், ஐயா எங்க பொண்ணு நாங்களும் இங்க இருந்ததுனால எங்களோடவே தங்கிட்டா, அதனால சொன்னபடி இராத்திரி வர முடியலை மன்னிச்சுக்குங்க

அதுக்காக ஒரு போன் பண்ணியிருக்கலாம், வயசு பொண்ணுங்களை வெளியே அனுப்பிச்சுட்டு நாங்க எப்படிங்க நிம்மதியா இருக்க முடியும்?.எனக்கு தெரியாது உங்க பிரின்ஸ்பால் கிட்டே மன்னிப்பு கடிதம் எழுதி அதுல நீங்க கையெழுத்து போட்டு, பிரின்ஸ்பால் எனக்கு லெட்டர் எழுதி கொடுத்தா தான் ஏத்துக்க முடியும்.

அவர்களின் உத்தரவை ஏற்று பிரின்ஸ்பாலை பார்க்க அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

எந்த சிக்கலும் இல்லாமல் இரண்டு மூன்று நாட்கள் ஓடியிருக்க, எலிசா ஒரு முறை அசோக்கை பார்க்க வந்தாள். எப்படி நான் இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கேன் என்பதை கண்டு பிடித்தீர்கள்?

ரொம்ப சிம்பிள், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல், நீ எதற்காக இந்த அலுவலகத்துக்குள் நுழைந்தாய்.

நான் அன்றைக்கு மூணு மணிக்கு மேல் இந்த பிரச்சினையில் எப்படி தப்பிப்பது என்று யோசித்து யோசித்து போலீஸ் ஸ்டேசனுக்கு போய் விடலாம் என்னும் முடிவில் வந்து கொண்டிருந்தேன்.

எதிரில் இவன் வந்து கொண்டிருந்தான், அவன் என்னை பார்த்து விடுவதற்குள் அருகில் இருந்த இந்த அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டேன்.

“அசோக்” பெயர் சொன்னது? எதிரில் ஒருவர் யாரை பார்க்கணும்? இந்த கேள்விக்கு என்ன சொல்வது என்று புரியாமல் மேலே போர்டை பார்த்தேன். ஏ வில் முதல் எழுத்தாய் அசோக் என்றிருந்தது, உடனே அசோக் என்று சொல்லி விட்டேன்.

அந்த அசோக்குக்கு அடுத்து என்ன எழுதியிருக்கு படித்து பார்த்தாயா?

இல்லை எனக்கு அதற்கெல்லாம் மனசே போகவில்லை. இப்பொழுது பார் என்ன போட்டிருக்கிறது?

அசோக் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் விஜிலென்ஸ் போர்டுக்கு மேல்புறம் என்ன போட்டிருக்கிறது?

“மாநில புலனாய்வு நிறுவனம் கிரைம் மற்றும் விஜிலென்ஸ்”

அப்படியானால் போலீசிடம்தான் வந்திருக்கிறேன்.

அடுத்து பெண் பார்க்க சொன்ன கதை..! ஏதாவது சொல்ல வேண்டுமே, அப்படி ஒரு காரணம் சொன்னேன்.

சொன்னதுதான் சொன்னாய், கல்யாணம் ஆகி இரண்டு மாதமே ஆகியிருந்தவனிடம் சொல்லலாமா?

அச்சோ..சாரி,

பரவாயில்லை, நானும் உன்னுடன் பேசி உன் மனநிலையை தெரிந்து கொள்வதற்காக என் பெற்றோர் பொள்ளாச்சியில் இருப்பதாக சொன்னேன். உண்மையில் நானும் என் மனைவியும் சென்னை மயிலாப்பூர்வாசிகள்.

அடுததது, நீ ஜன்னல் வழியாக பார்த்தது அவனைத்தான் என்பதையும், அவனுக்கு பயந்துதான் உள்ளே வந்து ஒளிந்திருக்கிறாய் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அவன் அங்கிருந்து போகும் வரை உன்னை காண்டீன் பக்கம் நடத்தி கொண்டு போனேன்.

அதற்குள் போலீஸ் ஒருவரை அவனை பின் தொடர சொல்லிவிட்டேன்.

அடுத்து உன்னை பின் தொடர ஒரு போலீஸ் தயாராக இருந்தது. நீ என்னை கழட்டி விட்டு அங்கிருந்து தப்பிக்க நினைத்தாய், ஆனால் உன் பின்னால் ஒரு போலீஸ் தொடர்ந்ததை அறியாமல்.

அதற்கு பின் மளமளவென உன் விஷயங்கள் எல்லாம் எங்கள் வசம் வந்து விட்டது. அவன் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்ததும், அங்கு அவர்களுக்கு தங்குவதற்கு கட்டி கொடுத்திருந்த தகர ஷெட்டிற்குள் தங்கியிருந்ததும் தெரிந்து விட்டது.

அதே போல் நீ காலேஜில் படித்து கொண்டிருக்க, நீ ஏன் அவனை கண்டு மிரள வேண்டும்?

அடுத்த கேள்விக்கு பதிலும் கிடைத்து விட்டது. உன்னை மீட்க அதே நேரத்தில் அவனிடம் உன்னை பற்றிய எந்த தகவலும் இருக்க கூடாது இப்படி நாங்க யோசித்து கொண்டிருக்க நீ அவனுடன் ஊட்டி கிளம்பியது.

ஆரம்பத்தில் உன் மீது கோபபட்டேன், ஆனால் புத்திசாலித்தனமாய் ஸ்டேஸனை விட்டு நகர மறுத்தது உன்னுடைய எண்ணம் எங்களுக்கு புரிந்து விட உன்னை காப்பாறினோம்.

அடுத்து உன் பெற்றோரை வரவழைத்து நீ செய்த தவறுகளை மெல்ல சொல்லி அவனால் உங்க பொண்ணு மாட்டியிருக்குன்னு புரிய வச்சு, எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிச்சுட்டோம்.

நான் நான் செஞ்ச இந்த தப்பு… கர்த்தர் என்னை மன்னிப்பாரா? கண்களில் கண்ணீர் வழிய நின்றவளின் தோள்களை பற்றியவாறு அசோக் தேற்றினான்.

எலிசா ஒன்றை புரிந்து கொள் வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள் கிடையாது, தவறை சரி செய்து தன்னை உடனே உயிருடன் எழுப்பி கொள்கிறவன் அறிவாளி, இதை புரிந்து கொள்.

இந்த நான்கு மாதங்களில் முதன் முதலாய் மனசு விட்டு சிரித்தாள் எலிசா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *