கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 3,715 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருதானை புகையிரத நிலையத்தில் கால் வைத்த பொ ழுது, நிலைய அதிபரின் விசில் ஊதி ஓய்ந்தது.

கனகராயர், செக்கிங் பொயின்ஸ் ஐயும் கடந்து, அவ சரம் அவசரமாக யாழ்தேவிக்குரிய நிலைய மண்டபத்தை அடைந்தபோது புகைவண்டி பெரிய ‘இழுபறி’ இரைச்ச லோடு நகர ஆரம்பித்திருந்தது. மூச்சிரைக்க ஓடிவந்தவர், கையிலிருந்த சூட்கேஸ் உடன் இரண்டாம் வகுப்புப் பெட்டி யில் தாவி ஏறினார்.

“அப்பாடா…”

கடவுளேயென்று வெறுமையான ஆசனங்கள் மூன்று , நான்கு கண்களில் பட்டன. ஓரமாகவுள்ள ஒரு ஆசனத்தில் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டவர் சுற்று முற்றும் பார் வையைச் செலுத்தினார். பொட்டு வைத்த முகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எவற்றையோ இரசித்துக் கொண்டிருக்க, அறிமுகமற்ற ஆண் முகங்கள் இடையிடையே தெரிந்தன.

புகைவண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வானத்தில், கிழக்கு மூலையில் சிவப்பாகச் சூரியக் கதிர்கள் சிரிக்க ஆரம்பித்திருந்தன. வேகமாகப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கும் வயல்கள், தோட்டங்கள் தென்னந் தோப்புகள்…..!

காலையில் வேளையோடு எழுந்த அசதியில் கொட்டாவி ஒன்று வந்து உடலை உலுக்கியது. இருந்தாலும் பென்ஷன் அலுவல்கள் யாவற்றையும் பூரணமாக முடித்துக் கொண்டு திரும்புவதில் ஒரு திருப்தி!

இனியென்ன …… வீட்டோடை இருந்து, குமருகளின்ரை அலுவலைப் பார்க்க வேண்டியது தான்; மனுசி செல்லத்துக்கும் உதவியாய்…..

‘ஊருக்குப் போவதில் தான் எத்தனை உற்சாகம் ! ஷெல் விழுந்தாலென்ன பீரங்கி முழங்கினாலென்ன பிறந்த மண்ணின் சுகமே ஒரு தனிசுகம் தான்!’

‘இவ்வளவு காலமும் குடும்பப் பொறுப்பைச் செல்லம் கவனித்து வந்தாள். இனிமேல் நானும் அவளோட சேர்ந்து கவனிக்கலாம்; கடைசிக் காலத்திலை அவளுக்கும் ஆறுதல் வேணும் தானே?’

‘மூத்தகுமரை, புத்திசாலித்தனமாய்ச் செல்லம் கரை சேர்த்திட்டாள்; மூத்தவன் பொடியளோடை போனதும் ஒருவகையிலை திருப்தி தான்; எங்களாலை இயலுமானளவு பங்களிப்பை நாங்களும் செய்யத்தானே வேணும். இளையவன் படிச்சுக்கிடிச்சு உத்தியோகமாயிட்டான் எண்டால், மற்றவளை ஒருமாதிரிக் கரை சேர்த்திடலாம். கடைசி ரெண்டு குமருகளுக்கும் காலங்கிடக்குத் தானே ; கடவுள் ஏதோ வழி விடுவான்’

கனகராயரின் கண்கள் ஜன்னலினூடாக வெளியே இயற் கையை மேய்ந்து கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் எதிர்காலக் குடும்பத்திட்டத்திலேயே லயித்திருந்தது!

சூரியன் முகம் காட்டத் தொடங்கி நீண்ட நேரமாகி விட்டிருந்தது.

“தலகுளி….. தலகுளி” எள்ளு மிட்டாய்க் கூடை யுடன் ஒருவன் சிங்களத்தில் கூவத் தொடங்கியிருந்தான்.

‘எள்ளுச்சாப்பாடு எண்டால் செல்லத்துக்குச் சரியான ஆசை, ஆனால் இதை எப்பிடி வாங்கிப் போறது? வேண்டாம்; ஊருக்குப் போனபிறகு, எல்லாம் ஆறுதலாய் விரும்பினதுகளைச் செய்யலாம்; இனி நான் அவளோடை தானே?’

புகைவண்டி மாகோவில் நின்று, நகர ஆரம்பித்த போது தான், தன்னையுமறியாமல் நித்திரையாகி இருந்தவர் திடுக்குற்று எழுந்து நேரத்தைப் பார்த்தார். காலை 9.30 மணி ஆகிவிட்டிருந்தது! மெதுவாக வயிறு அழ , புஃபேக்குப் போனார். வடை, தேநீரோடு காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் வந்து அமர்ந்தபோது, பத்திரிகைகள் விற்கும் பையன் ஒருவன் பக்கத்தில் நின்று விளம்பரம் செய்வது தெரிந்தது. கனகராயர் திரும்பி , வீரகேசரி ஒன்றை இழுத்து எடுத்தார்.

“யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு” – பெரிய தலைப்புச் செய்தியில் சிலிர்த்துப் போன கனகராயர் இறந்தவர்களின் பெயர் விபரங்களை அவசரமாகத் தேடினார். ஒருவித நிம்மதியின் மத்தியிலான பெருமூச்சு மனதில் இனம்புரியாதவொரு பாரம்!

‘என்ரை குலக்கொழுந்தை கடவுள் தான் காப்பாற்ற வேணும்; எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படிப்பித்து ஆளாக்கி விட்டன். குமருகளைக் கரை சேர்க்க முடியாமல் தத்தளித்து, அவனை ஒரு கையாய் நம்பியிருந்தன்; போனவன் போயிட்டான்; கடைசி வரைக்கும் சலிக்காமல் அவன் போராட வேணும்’

”நீ யோசியாதை ராசா ; உன்ரை அப்பனும் தம்பியும் உயிரோடை தானே இருக்கினம். தங்கச்சிமாருக்குக் கை கொடுக்காமலே போடுவினம்…” – ஆறு மாதங்களிற்கு முன்னர் ஏதோ அலுவலாய் மூத்தவன் வந்து, தனக்குள் கவலைப்பட்டபோது, செல்லம் அழுகையோடு அழுகையாக அவனுக்கு ஆறுதல் கூறியது அவர் ஞாபகத்தில் வந்தது. மனம் இரகசியமாய்க் கரைந்தது.

நீண்ட மனஓட்டங்களின் மத்தியிலே 11.30ற்கு வவுனி யாவிற்கு வந்து சேர்ந்த புகைவண்டியிலிருந்து இறங்கி ஓடிப்போய், பஸ்ஸில் ஆசனம் பிடிப்பதற்கிடையில் போதும் போதுமென்றாகி விட்டது அவருக்கு!

வவுனியா தடைமுகாம், ஓமந்தைத் தடைமுகாம், ஆனையிறவுத் தடைமுகாம் ஆகிய பகுதிகளில் இறங்கி, நடந்து ஊர்வலம் போனதில் மூட்டு மூட்டாக வலியெடுத்திருந்தது! முல்லைத்தீவுப் பாதையின் சிறப்பினால், இடுப்பு ஒடிந்து விடும் போலிருத்தது!

‘வீட்டுக்குப் போன , உடனை, இளையவனை ஒருக்கால் மணியன் கடைக்கு அனுப்பி, ஒரு ‘கால்’ எடுத்து அடித்தால் தான் இந்த அலுப்புப் போகும்’

கனகராயர் ஊர் மண்ணைக் கண்டதும் உசார் நிலைக்கு வந்துவிட்டார். பசியும் களைப்பும் பாறி உடல் தேறி விட்டது போன்ற உணர்வு!

தனக்குரிய பஸ் தரிப்பில் இறங்கியவர் சுற்று முற்றும் பார்த்தார். சந்திக்கடை வாசலில் செல்லம்! தேங்காயோடு நின்றிருந்தாள்!

”செல்லம்….”

திடுக்குற்றவள் “வருவியள் எண்டு நினைச்சனான்; காகம் கத்தினது… ” அலுங்காமல் சிரித்தாள். கன்னம் இடிந்து, கண்கள் குழிவிழுந்திருந்தமை இப்போ அதிகமாகித் தெரிந்தது.

“அது சரி… ஒருநாளும் கடைப்பக்கம் காலடி வைக்காத நீ இண்டைக்கு என்ன புதினமாய்…..?”

“தேங்காய் வாங்க வந்தனான் ….” மூடி மறைக்கும் ஒரு சோர்வு !

“ஏன் … இளையவனுக்கென்ன, இப்ப ஏ. எல். எக்ஸாம் முடிஞ்சு, லீவு தானே? அம்மாவைக் கடையடியிலை காய வைக்கிற அளவுக்கு அவருக்கு வேலையோ?”

செல்லம் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளின் காதருகில் சிவப்பாகக் கன்றிப்போய்….! கனகராயருக்குச் சுருக்கென்றது.

“என்ன இது காதடியில் … காயம்?”

“அது சும்மா விறகு கொத்துற போது….” சட்டென்று வார்த்தையை அரைகுறையில் அடக்கிக் கொண்ட செல்லம் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

“நான் இனிமேல், ஊரோடைதானே, எல்லாரையும் வைச்சிருக்கிற இடத்திலை வைச்சிருந்தால் திருந்துவினம். அப்பன் ஊரிலை இல்லாட்டில், அம்மாவுக்கு வாலாட்டப் பாக்கிறாங்கள்….”

வீடு அண்மித்தது. விசுக்கென்று உள்ளே நுழைந்த செல்லம், வாசலுக்கு வந்ததும், அடக்கி வைத்திருந்ததெல்லாம் வெடித்து விடுவது போல் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

“செல்லம்!…..என்ன இது? இப்ப என்ன நடந்தது?”

“இளையவன்….. இளையவனும் போயிட்டானப்பா; அங்கை போய்க் காலிலை விழுந்து கூட கேட்டுப் பார்த்தன்; அவையள் கூட எங்கடை மூத்தவன் இருக்கிறதை ஞாபகப்படுத்தி, புத்திமதி சொல்லிப் பார்த்தவை; அவன் ‘முடியாது’ எண்டிட்டான்….”

வாய் பேசமுடியாமல் உறைந்து போனவருக்கு வாசலோடு ஒட்டியவாறு, வரிசையாக, வளைந்து நிற்கும் மூன்று குமருகள் மட்டும் தெரிந்தது!

– சிரித்திரன், பெப்ரவரி 1987, முதற் பரிசு

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

சந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். மின்னஞ்சல் முகவரி: chandra363@googlemail.com வாழ்க்கைக் குறிப்பு சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *