எப்போ பூ பூக்கும்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 5,906 
 
 

அலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. மஞ்சள் ரோஜா என்று சொல்லி விற்பான். பூக்கும்போது சிகப்பாய் பூக்கும். குறைந்தபட்சம் பூக்கவாவது செய்கிறதே என்று மகிழ்ந்தாலும், நாம் எதிர்ப்பார்த்த வண்ணத்தில் பூக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

தொட்டியில் பதியன் போடுவது மாதிரி வெறுப்பான வேலை எதுவுமில்லை. ஒரு தொட்டி வாங்கும் காசுக்கு நாலு பூச்செடிகளை நர்சரியில் வாங்கிவிடலாம். ம்ம்.. சொந்தவீடாக இருந்தால் பூந்தோட்டத்தையே உருவாக்கலாம். இருப்பது வாடகை வீடு. தொட்டியில் வளர்த்தால் தான் உண்டு. இதுபோன்ற நேரங்களில் ஊர்நினைவு வந்துவிடுகிறது.

விசாலமான வீடு. வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம். ஜிகினா, சம்பங்கி, சாமந்தி, மைசூர் மல்லி, வாடாமல்லி என்று விருப்பப்பட்ட செடிகளை எல்லாம் வளர்க்க முடிந்தது. அண்ணா, தங்கை, அம்மா, அப்பாவென்று போட்டிப் போட்டு செடிவளர்ப்போம். தாத்தாவுக்கு மட்டும் வீட்டுக்கு முன்பாக இருந்த தென்னைமரத்தின் மீதுதான் பாசம். பாடுபட்டு வளர்க்கும் செடி பெரிய பலனை தரவேண்டுமாம்.

சீமந்தப் புத்திரன் ஸ்யாம் பிஸ்லெரி தண்ணீர் பாட்டிலோடு வந்தான். “அப்பா இந்தச் செடிக்கு மினரல் வாட்டர் ஊத்தலாம் இல்லை?” – எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. மாநகராட்சி தரும் மருந்தடித்த நீரை செடிகளுக்கு ஊற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அமிலத்தை வேரில் ஊற்றுவது மாதிரி உள்ளுக்குள் எரியும். குடிப்பதற்கே தினமும் இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து கேன் தண்ணீர் வாங்குகிறோம். செடிக்கு எங்கிருந்து நல்ல தண்ணீர் ஊற்றுவது? முதல்நாள் மட்டும் பிஸ்லரி வாட்டர் ஊற்றினேன். பையனுக்கு ரொம்ப மகிழ்ச்சி!

இந்தமாதிரியான கான்க்ரீட் காட்டில் மாட்டிக் கொள்வேன் என்று எந்தக் காலத்திலும் நினைத்ததில்லை. சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதத்தை வாடகை உள்ளிட்ட விவகாரங்களுக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. சாப்பாடு, உடை, மருத்துவம், கல்வி, எதிர்பாராத செலவு என்று மாதாமாதம் பட்ஜெட்டில் துண்டு. நகரத்துக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. சொந்தவீடு இன்னமும் கனவுதான்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மாற்றவேண்டியிருக்கிறது, ஆணி அடிக்க முடிவதில்லை, விரும்பிய வண்ணத்தில் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை தாண்டி, நினைத்தமாதிரி செடி வளர்க்க முடிவதில்லை. தாத்தா ஆசைப்பட்டது மாதிரி தென்னங்கன்று வைக்க முடிவதில்லை, பூச்செடிகள் வளர்த்து மகிழமுடிவதில்லை போன்ற விஷயங்கள் தான் உறுத்துகிறது. ஊரில் சொந்த வீடிருக்க, பிழைப்புக்கு வாடகை வீட்டில் வசிப்பது மாதிரியான துன்புறுத்தல் சகிக்க முடியாதது.

எடுத்து வந்த கிளையின் இருப்பக்கத்தையும் மண்ணில் ஊன்றி தொட்டியை தயார் செய்தேன். செம்மண் கூட இங்கே காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. தினமும் நீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பை பையனுக்கு தந்தேன். இதற்கு முன்பாக இருந்த வீட்டில் சாமந்தி வளர்த்தேன். வெள்ளை சாமந்தி.

“எப்போப்பா பூக்கும்” ஸ்யாம் கேட்டான்.

“நீ தினமும் ஒழுங்கா தண்ணி விட்டு வளர்த்தேனா, தினமும் ரெண்டு மணி நேரம் சூரிய ஒளியில் வெச்சேன்னா ஒன்றரை மாசத்துலே பூக்கும்!”

அக்கவுண்ட்ஸ் மேனேஜர் அபூர்வமாக அழைத்தார்.

அனேகமாக வீட்டு லோன் விஷயமாக இருக்கலாம். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறேன். வட்டியில்லாக் கடன் ஆயிற்றே? பத்தாண்டுக்கு முன்பாகவே நகருக்கு வெளியே ஒரு அரைகிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறேன். கால்கிரவுண்டில் வீடுகட்டி, மீதியிருக்கும் இடத்தில் தோட்டம் போடவேண்டும். சிறுவயதில் நான் அனுபவித்த மகிழ்ச்சியை என் பையனுக்கும் உருவாக்கித்தர வேண்டும். எவ்வளவு நாளைக்குதான் தொட்டிச்செடி?

“வாங்க சார். கங்கிராட்ஸ்” முகம் முழுக்க மகிழ்ச்சி இருந்தது மேனேஜருக்கு.

“எதுக்கு சார் கங்கிராட்ஸ்?” யூகித்தமாதிரியே தானிருக்கிறது என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும், சும்மா மேலுக்கு கேட்டேன்.

“நெஜமாவே தெரியாது. எம்.டி. ரொம்ப ஹேப்பியா இருக்கார் உங்க பெர்பாமன்ஸ் பத்தி” – கவரை நீட்டினார்

“மகிழ்ச்சி சார்” – படபடப்போடு பிரித்தேன்.

ஆயிரம் ரூபாய் இன்க்ரிமெண்ட். ஒரு வருடம் கழித்து கிடைக்கவேண்டியது. இடையில் ஆறுமாதத்துக்குள்ளாகவே கிடைத்திருக்கிறது.

“சார் நான் எதிர்பார்த்தது வேற”

“தெரியும் செந்தில். ஹெட் ஆபிஸ்லே லோன் எல்லாம் அவ்வளவு சுளுவா இப்போ அப்ரூவ் பண்ணறதில்லை. இருந்தாலும் நான் உங்களுக்காக பர்சனலா ப்ரெஸ்ஸர் கொடுத்துக்கிட்டு தானிருக்கேன்!”

“நன்றி சார். இன்க்ரிமெண்ட் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா லோன் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்” நன்றிகூறி விடைபெற்றேன்.

மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. அப்படியே பேங்கில் சேமிக்கலாமா?

துள்ளலோடு மல்லிகைப்பூவும், இனிப்புப் பொட்டலமுமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.

சகதர்மிணி முகத்தில் வாட்டம்.

“என்னாச்சுப்பா?”

“ஹவுஸ் ஓனர் வந்துட்டுப் போனாரு. வீடு எப்போ காலி பண்ணப் போறீங்கன்னு கேட்டாரு”

“இங்கே வந்து ஒன்றரை வருஷம் கூட ஆகலியே? அதுக்குள்ளே ஏனாம்?” இன்க்ரிமெண்ட் கிடைத்த சந்தோஷம் புஸ்.

பையன் குதித்துக்கொண்டே ஓடிவந்தான். “அப்பா. ரோஜாச்செடி….”

“சும்மாயிர்ரா. அம்மாவோட பேசிக்கிட்டிருக்கேன் இல்ல… அப்புறமா வ்” பையன் வாட்டமாக கிளம்பினான்.

ச்சே.. இந்த வாடகைக் கலாச்சாரம் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துவிடுகிறது.

“வேற யாரோ அதிக வாடகைக்கு கேட்டிருக்காங்களாம். ரெண்டாயிரம் ரூபா அதிகமா கொடுத்தா நாமளே இருக்கலாமுன்னு சொல்றாரு”

“புறாக்கூண்டு மாதிரி இருக்குற இந்த வீட்டுக்கு ஆறாயிரம் கொடுக்கறதே அநியாயம். எட்டாயிரம் கேட்குறானுங்களா? வேற வீடு பார்த்துக்கலாம்”

சொல்லிவிட்டேனே தவிர, வேறு வீடு பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தெரியும். நகருக்கு மத்தியில் முதன்முதலாக மனைவியோடு குடியேறி, வீடு மாறி, மாறி, நகரத்தின் விளிம்புக்கு வந்துவிட்டேன். ஆபிஸுக்கு போய்வருவது மாதிரியான பிரச்சினை எனக்கும், பையனை பள்ளிக்கு கொண்டுசெல்வது மாதிரியான பிரச்சினை மனைவிக்கும் அலுப்பாக இருக்கிறது.

ஹவுஸ் ஓனர் கொடுத்த ஒருமாத கெடு முடிவதற்குள், குரோம்பேட்டை தாண்டி ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிளாட் கிடைத்தது. தனிவீடு பார்த்தால் வாடகை எக்கச்சக்கம். இங்கிருந்ததை விட வாடகை ஆயிரம் ரூபாய் அதிகம். வாங்கிய இங்க்ரிமெண்ட் எனக்கு வழக்கம்போல செரிக்கப் போவதில்லை.

செடியை வேர்மண்ணோடு எடுத்து வைப்பது போல சுலபமானது அல்ல வீடு மாறுவது. ஒரு டெம்போ பிடித்து வந்தேன். இரண்டு பேரை கூலிக்கு அமர்த்தியிருந்தேன். முன்பு போல வெயிட்டெல்லாம் தூக்க முடிவதில்லை. மாமனார் வீட்டில் சீதனமாக வந்த கட்டிலும், பீரோவும் நல்ல வெயிட்டு.

ஸ்யாமுக்கு புதுவீட்டைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவனுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் பத்திரமாக சேகரித்து ஒரு பையில் அடைத்துக் கொண்டிருந்தான். அம்மாவைப் போலவே பையனும் உஷார்.

பீரோவைத் தூக்கிக் கொண்டுவர வேலையாட்கள் இருவரும் சிரமப்பட்டார்கள். ஹாலைத் தாண்டி வாசற்படிக்கு வருவதற்குள் ஒருவர் காலில் எதையோ இடித்துக் கொண்டார். பீங்கான் உடைந்ததைப் போல சத்தம். காலில் இடித்துக் கொண்டதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் வேகமாக பீரோவை எடுத்துச் செல்ல, “அய்யோ ரோஜா செடி உடைஞ்சிட்டிச்சி” என்று ஸ்யாம் அரற்றத் தொடங்கினான்.

அப்போதுதான் பார்த்தேன். தொட்டி உடைந்து செம்மண் சிதறிக்கிடந்தது. அழகாக மொட்டுவிடத் தொடங்கியிருந்த கிளையும் ஒடிந்திருந்தது. டெம்போவில் கடைசியாக ஏற்ற ஓரமாக தொட்டியை எடுத்து வைத்திருக்கிறான் ஸ்யாம். வெயிட்டை தூக்கிவந்தவர்கள் கீழே பார்க்காமல் காலில் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

ஸ்யாமைப் பார்க்க பாவமாக இருந்தது. அவனுக்கும் என்னைப் போலவே பூச்செடிகள் மீது அதிகப் பிரியம்.

ஒருவாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை புதுவீட்டில்….

அலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை…

(நன்றி : சூரியக்கதிர் – மாதமிருமுறை இதழ் : மே 15 – 31, 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *